Loading

சம்பூர்ணா தன் கைபேசியை எடுத்து மித்ரனுக்கு செய்தி அனுப்பி வைத்தாள்.

“என்ன இன்டர்வியூ நல்லா போகுதா?” என்று கேட்டு விட்டு காத்திருக்க, மித்ரன் பார்த்து மட்டும் வைத்தான் பதில் இல்லை.

சம்பூர்ணா சிரித்து விட்டு, “ஏன் வீணா ட்ரை பண்ணுற? உனக்கு வேற எங்கயுமே வேலை கிடைக்காது.. கிடைக்கவும் விட மாட்டேன்” என்று அடுத்த செய்தி அனுப்பி வைத்தாள்.

அதையும் பார்த்தவன் பதில் சொல்லாமல் போக, “மீறி கிடைச்சாலும் ரெண்டே நாள்ல உன்னை வேலைய விட்டு துரத்த வைப்பேன்” என்று அனுப்பினாள்.

மித்ரனின் பொறுமை எல்லையை கடக்க, “ஏன்டி இப்படி பைத்தியம் மாதிரி நடந்துக்கிற? அதான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லித் தொலைச்சுட்டேனே” என்று காரமாக செய்தி அனுப்பி வைத்தான்.

“அது வேற.. இது வேற மிஸ்டர் யோகமித்ரன்.. அது உன் குடும்பத்த காப்பாத்த.. இது வேற.. நீ என் ஆஃபிஸ்ல தான் வந்து வேலை செய்யனும்”

“உனக்கு கீழ என்னை போட்டு நசுக்கனும் அதான?”

“கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்டியே? அப்புறம் ஏன் இன்னும் அங்க உட்கார்ந்துருக்க? எந்திரிச்சு கிளம்பு”

“முடியாதுடி.. நீ என்ன செஞ்சாலும் நான் உனக்கு கீழ வர மாட்டேன்”

“இப்ப நீ கிளம்பலனு வை.. அந்த கம்பெனி ஹச் ஆர்க்கு ஃபோன் பண்ணி.. யோகமித்ரன்னு ஒருத்தன் இருக்கான்.. அவன மட்டும் எல்லாரு முன்னாடியும் வெளிய அனுப்புனு சொல்லிடுவேன். அசிங்கப்படுவ.. பரவாயில்லையா?” என்று கேட்டு வைத்தாள்.

மித்ரன் அந்த செய்தியை படித்து பல்லைக் கடிக்க, “பல்லைக்கடிச்சுட்டு மெஸேஜ முறைச்சு இருக்கியா என்ன?” என்று அடுத்த செய்தி வந்தது.

சட்டென அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவன், பிறகு மீண்டும் அந்த செய்தியை முறைத்தான்.

“என்னை கொலைகாரனாக்கிடாத சம்பூர்ணா..”

“எனக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் இல்ல.. யார வேணா கொல்லு.. நான் உன்னை பெயில்ல எடுக்குறேன்.. என் வருங்கால புருஷன காப்பாத்தாம போயிடுவனா?” என்று கேட்டு வைத்தாள்.

மித்ரன் அந்த செய்தியை நம்ப முடியாமல் பார்த்து வைத்தான். அவன் என்ன சொல்கிறான்? அவள் என்ன பேசுகிறாள்?

“கொன்னா உன்னை தான் கொல்லுவேன்”

“அது கஷ்டமாச்சே.. இருந்தாலும் ட்ரை பண்ணு.. இப்ப கிளம்பு”

மித்ரன் தலையை தேய்த்தான். வேலை வேண்டும் தான். ஆனால் சம்பூர்ணா அதற்கு விட மாட்டாள்.

இன்னும் இங்கே இருந்து அசிங்கப்படுவதை விட, கிளம்பி விட வேண்டியது தான்.

உடனே எழுந்தவன் வாசலை நோக்கிச் சென்றான்.

“கிளம்புனியா? இல்ல ஹச் ஆர்க்கு ஃபோன் பண்ணவா?”

“உன் சாவு என் கையில தான்டி.. ஞாபகம் வச்சுக்க” என்று பதில் அனுப்பியவன், நேராக சென்று பைக்கில் ஏறிக் கிளம்பி விட்டான்.

அடுத்த பதினைந்து நிமிடங்கள் கழித்து, மித்ரன் அலுவலகத்திற்கு வந்து நிற்பதாக அசிஸ்டண்ட் சொல்ல சம்பூர்ணா ஆச்சரியமானாள்.

“இப்பவே வேலையில சேர வந்துட்டானா? இருக்காதே.. அவன் பெரிய ஈகோ பிடிச்சவனாச்சே” என்று முணுமுணுத்துக் கொண்டு மேலே அழைத்து வரச் சொன்னாள்.

‘சண்டை போட வர்ரானா? இல்ல எதுக்கு வர்ரான்?’ என்று புரியாமல் காத்திருந்தாள்.

மித்ரன், வேலை வேண்டாம் என்று கிளம்பி விட்டாலும் இப்படி எழுந்து வந்தது சுத்தமாக பிடிக்கவில்லை. சம்பூர்ணாவை பார்த்து கத்த வேண்டும் போல் இருந்தது.

அந்த கோபத்தில் வீட்டுக்குச் செல்லாமல் நேராக அவளை தேடி வந்து விட்டான்.

அசிஸ்டண்ட் இந்த முறை உடன் வந்தான். லிஃப்ட்டை விட்டு இறங்கியதும், வேகமாக அவள் அறையை நோக்கி நடந்தான். அவனுக்கு முன்னால் சென்று அசிஸ்டண்ட் கதவை திறந்து நின்றான்.

உள்ளே நுழைந்தவன் பார்வை அவள் மீது விழுந்தது. முகம் முழுவதும் புன்னகையும் மலர்ச்சியுடன் அவனை பார்த்து சிரித்தாள். சற்று முன்பு அவனை மிரட்டியவள் இவள் என்று யாராவது சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது.

இவள் தான் பிடிக்காத ஒருவனை கட்டாயமாக திருமணம் செய்ய நினைக்கிறாள் என்று நம்ப முடியுமா?

“வா வா.. சீக்கிரமே வந்துருக்க?” என்று வரவேற்றவளின் முகம், அவன் கல்லூரியில் பழகிய அதே முகமாகத்தான் தெரிந்தது.

“என்ன விசயம்?” என்று அவள் புருவம் ஏற்ற, ஒரு நொடி இமைக்காமல் பார்த்தவன், அடுத்த நொடி அவளது தோளைப்பிடித்து இழுத்துச் சென்று சுவற்றில் சாய்த்து நிறுத்தி, இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான்.

சம்பூர்ணா இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் அவள் உறைந்து போக அசிஸ்டண்ட் அவசரமாக வெளியே ஓடி கதவை பூட்டி விட்டான்.

சம்பூர்ணா தெளிந்து அவனை பிடித்து தள்ளி உதடுகளை மீட்டுக் கொண்டாள்.

கோபமும் அதிர்ச்சியுமாக அவள் பார்த்திருக்க, மித்ரன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவளோடு ஓட்டிக் கொண்டு நின்றான்.

சுவற்றோடு அழுத்தியவனை பார்த்து அதிர்ந்து, மீண்டும் தள்ளப் பார்த்தாள்.

கையை பிடித்து அதை தடுத்தவன், “நானா விலகிப்போனா விட மாட்டல?” என்று முறைத்தான்.

“முதல்ல தள்ளி நில்லு”

“ஏன்? கசக்குதா? நான் உன் பக்கத்துல வரனும்னு தான இவ்வளவும் பண்ணுற.. இந்த அளவு போதுமா?” என்று கேட்டவனின் உடல் அவளை மேலும் சுவற்றோடு அழுத்தியது.

“மித்ரா.. தள்ளு..” என்று பல்லைக்கடிக்க, “நான் உனக்கு மித்ரனில்ல.. நான் என்னை உன் ஃப்ரண்டா? உன் வருங்கால புருஷன்மா..” என்றான் நக்கலாக.

சம்பூர்ணா சட்டென போராடுவதை நிறுத்தி விட்டு, அவனை பார்த்து புன்னகைத்தாள்.

“ஆமால.. நீயே இத சொல்லி கேட்கும் போது எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா?”

அவளது மாற்றத்தை பற்றிக் கவலைப்படாமல், “இஸ் இட்?” என்று நக்கலாக கேட்டு வைத்தான்.

“ம்ம்.. நான்.. சம்பூர்ணா.. நீ வாழ்க்கையில வெறுக்குற ஒரே பொண்ணு.. உன்னோட பொண்டாட்டியாக போறா.. எப்படி ஃபீல் பண்ணுறீங்க மிஸ்டர் வருங்கால புருஷன்?”

“பரவாயில்லயே.. நான் வெறுக்குறேன்னு தெரிஞ்சு வச்சுருக்க?”

“முன்னாடி வெறுத்த.. இப்ப இல்லையே.. திடீர்னு வந்து கிஸ் பண்ணுற.. ஒரு வேலை என் மேல லவ் வந்துடுச்சா?”

“லவ்? அதுக்கு உ‌னக்கு தகுதியிருக்கா?”

“நிறைய இருக்கு. ஆனா என்னை லவ் பண்ணுற அளவுக்கு உனக்கு மனசும் கிடையாது அறிவும் கிடையாது” என்று நக்கலடித்து விட்டு தன் கையை வெடுக்கென அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள்.

மித்ரன் அவளை முறைத்து விட்டு அவளது உதடுகளை பார்த்தான்.

“இப்ப கிஸ் பண்ணனே.. என்ன தோனுச்சு?” என்று அமைதியாக கேட்டான்.

“உன்னை அடிக்கனும்னு தோணுச்சு”

“இதுக்கு மேல கல்யாணத்துக்கு அப்புறம் பண்ணுவேனே.. தாங்குவியா?” என்று கிண்டலாக கேட்டான்.

ஒரு நொடிக்கு பிறகு சம்பூர்ணா சிரிப்போடு இடவலமாக தலையசைத்தாள்.

“நீ பண்ண மாட்ட..”

மித்ரன் முறைக்க, “உன்னால முடியாது.. இப்ப என்ன நினைச்சு பண்ணனு தெரியல.. ஆனா உன்னால அது முடியாது” என்றாள் சவாலாக.

மித்ரன் பல்லைக்கடித்தான்.

“எனக்கு லைசன்ஸே கிடைச்சுடும் தெரியுமா?” என்றவன் முழுதாய் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை துரத்தி விட்டான். ஒருவர் மற்றவரின் மூச்சுக்காற்றை உணர்ந்து கொள்ளும் நிலையில் நின்றனர். அப்போதும் சம்பூர்ணா அசரவில்லை. வயிறு மட்டும் குறுகுறுத்தது.

ஆனால் ஒன்றுமே இல்லாதது போல் சிரிப்பை இழுத்துப் பிடித்த சம்பூர்ணா, “நீ நல்லவன் மித்ரு.. உனக்கு பிடிக்காத பொண்ணா இருந்தாலும், அவ உன் பொண்டாட்டியாவே ஆனாலும் அத்து மீறுற அளவுக்கு கெட்டவன் இல்ல.. முக்கியமா நீ…” என்று நிறுத்தினாள்.

‘அந்த காட்டு மிராண்டி விஷால் மாதிரி இல்ல’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவள் முடிக்கவில்லை என்பதை உணர்ந்த போதும் அவள் சொன்ன வார்த்தை அவனை பாதித்தது. அவளை தண்டிக்க வேண்டும் என்று அவன் முத்தமிடவில்லை. அவனை இவ்வளவு செய்கிறவளை கொஞ்சமாவது வெறுப்பேற்ற வேண்டும் என்றே நினைத்தான். அதோடு அவள் அவனை பார்த்து புன்னகைத்தது?

எந்த போலித்தனமும் இல்லாமல் எப்படி நடிக்க முடிகிறது? அந்த புன்னகையில் பொய்யே இல்லை. யார் பார்த்தாலும் நம்பி விடுவார்கள். இருவருக்கும் இடையே நடக்கும் யுத்தம் தெரியாவிட்டால் யாரும் நம்பி விடுவார்கள்.

மித்ரன் ஒரு அடி பின்னால் செல்ல, சம்பூர்ணா அவசரமாக அவனது கழுத்தைப் பற்றி இழுத்து இதழ்களில் முத்தமிட்டு வைத்தாள். ஒரு நொடியில் அவனது மொத்த உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.

மித்ரன் அதிர்ந்து பார்க்க, “கொடுத்த திருப்பிக் கொடுத்துட்டேன்..” என்று கண்ணடித்தாள்.

கோபமாக அவளது கையை அவன் தள்ளி விட, அவளது சிரிப்பு குறையவில்லை.

பின்னால் அவன் நகர்ந்ததும் சுவரை விட்டு நிமிர்ந்தவள், “எதுக்கு வந்த?” என்று கேட்டாள்.

மித்ரன் அமைதியாக இருக்க, “வெறும் கிஸ் பண்ண மட்டும் வந்துருக்க மாட்ட தான?” என்று சிரித்தாள்.

“ரொம்ப ஆசைப்படாத.. உன் மேல இருக்க ஆசையில ஒன்னும் வரல” என்று எரிந்து விழுந்தான்.

“வந்தாலும் தப்பில்ல” என்று அவள் நல்ல பிள்ளையாக சொல்ல, மித்ரன் பல்லைக் கடித்தான்.

“சரி ரொம்ப முறைக்காத.. விசயத்தை சொல்லு..”

“என்னால உன் கிட்ட வேலை செய்ய முடியாது”

“ஆம்பளை ஈகோ வா?”

“எப்படி வேணா வச்சுக்க.. என்னால முடியாது”

“ஆனா நான் உன்னை வேற கம்பெனியில வேலை செய்ய விட மாட்டேன். என் புருஷன் எவனுக்கோ கை கட்டி நிக்கிறதா? நோ.. நீ இங்க தான் இருக்கனும்”

“உனக்கு மட்டும் கை கட்டி வேலை செய்யனும் அதான?”

உடனே பல் தெரிய சிரித்தவள் வேகமாக தலையாட்டினாள்.

“எஸ்.. பொண்டாட்டி கிட்ட அடங்கிப்போறதுல தப்பில்ல தெரியுமா?”

“ஆனா உன்னை மாதிரி ஒருத்திய என் வாழ்க்கையில சந்திச்சது தான் நான் பண்ண பெரிய தப்பு”

“இனி வருத்தப்பட்டு பிரயோஜனமே இல்ல.. உனக்கு ஒரு விசயம் தெரியுமா?” என்றவள் அவனருகே வந்து நின்றாள்.

“நேத்து நம்ம ரெண்டு பேரோட ஜாதகத்தையும் கொண்டு போய் முகூர்த்த நாள் குறிக்க போயிருக்காங்க. நம்ம ஜாதகம் அம்சமா பொருந்தியிருக்காம்” என்ற போது அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மித்ரன் இதைக்கேட்டு தலையில் அடித்துக் கொண்டான்.

“ஜாதகம் பொருந்துறது தான் இப்போ குறைச்சல்” என்றவனை பார்த்து சம்பூர்ணா நன்றாக சிரித்தாள்.

“கேட்டதுல இருந்து என்னால சிரிப்ப அடக்கவே முடியல.. ஜாகத்துக்கும் மனசுக்கும் சம்பந்தமே இல்லனு புரியவே மாட்டேங்குது மக்களுக்கு. செம்ம காமெடி”

“என் வாழ்க்கையே காமெடியா தான் போகுது.. சிரி சிரி..” என்று சலித்தான்.

“கூல் டார்லிங்.. இது எல்லாம் விசயமே இல்ல.. இனிமே தான் விசயமே இருக்கு” என்று அவள் தோளில் தட்ட, கையையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்.

“என்ன? தொடக்கூடாதா? நீயா தான் வந்து கிஸ் பண்ண.. இப்ப சின்ன புள்ள மாதிரி முறைக்கிற? சில்லியா இல்ல?”

ஒரு நொடியில் அவனது ஈகோவை தூண்டி விட, அவன் வேகமாக அவளது இடையைப்பற்றி அருகே இழுத்தான்.

சம்பூர்ணாவின் புன்னகை மெல்ல அவள் உதட்டை விட்டு நீங்கி, மித்ரனின் உதடுகளை அலங்கரித்தது.

“உனக்கு தைரியம் ஜாஸ்தினு நினைச்சேன்.. ஆனா இதுக்கே கண்ணுல பயம் தெரியுதே..”

“யாரு பயந்தா?” என்று அவசரமாக சமாளிக்கப் பார்த்தாள்.

மித்ரன் அவளை ஆழமாக பார்த்தான். எதுவோ சரியில்லை. அவளது மற்ற விசயங்களை பற்றித் தெரியாது. ஆனால் செந்திலோடு ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்தாளே.

இப்போது புதிதாய் ஆண்கள் தொடுவது போல் அவள் நடுங்குவதை பார்க்க விசித்திரமாக தான் இருந்தது.

எந்த பொருத்தமும் இல்லாமல் நடக்கும் திருமணம் உடைவதில்லை. அத்தனை பொருத்தமும் பார்த்து நடக்கும் திருமணம் காக்கப்படுவதும் இல்லை. வாழ்வதும் மடிவதுய் அவரவர் விதி அல்லவா?

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
15
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்