Loading

தேடல் – 4

தனது சிந்தனையில் மூழ்கிய படியே மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டு மிளிர் கடையை வந்தடைந்த போது மணி பத்தை தான்டி வெகு நேரமாகி இருந்தது. அவள் வரும் முன்னரே வந்து அவளுக்காக வாசலில் காத்திருந்தான் இனியன்.

“ஏய்… குள்ள கத்திரிக்கா… எங்கடி போன… உனக்கு பின்னாடி கிளம்பின நானே வந்துட்டேன்…” என்றான் கேள்வியாய்.

அவன் கேட்டதை காதில் வாங்காதவள் போல, “எத்தன தடவ சொல்லி இருக்கேன்… வெளிய இருக்கும் போது இப்படி கூப்பிடாதனு… ஒழுங்கு மரியாதையா அக்கானு கூப்பிடு… இல்ல நடக்கறதே வேற…” என்றாள் விரல் நீட்டி மிரட்டலாய்.

“இல்லனா என்னடி பண்ணுவ குள்ள கத்திரிக்கா…” அவனும் மல்லுக்கு நிற்க,

“சார் ஒரு தண்ணீ வண்டினு கடைக்கு வர அத்தனை கஸ்டமர்கிட்டையும் சொல்ல வேண்டி இருக்கும்… குறிப்பா யார் அது… நேத்துக்கூட ஒரு மணி நேரம் சட்டி கருக கருக கடல வறுத்தீயே… ஹான் தீப்ஸ்… அவகிட்டையும் சொல்ல வேண்டி இருக்கும்… எப்படி வசதி…” அவள் பாவம் போல் முகத்தை வைத்துச் சொல்ல,

“அடியே குட்டி பிசாசு… நான் குடிக்கறது வெறும் பச்ச தண்ணீடி…” என்றான் இவன் பதறி.

“நானும் அத தானே சொன்னேன்… நீ என்ன நினைச்ச…”

“ஆனா நீ சொல்லுற மாடுலேஷன் வேற மாதிரி இல்ல இருக்கு…”

“இப்போ மாடுலேஷன் முக்கியமில்ல தம்பி… மரியாத தான் முக்கியம்… எங்க ஒருக்கா மரியாதையா அக்கானு கூப்பிடு பாப்பும்…”

“இப்போ என்ன… யக்கா… யக்கா… யக்கா… இந்த மரியாதை போதுமா…” என்றான் அவன் கடுப்பாய்.

“இப்போதைக்கு போதும்…” என மிடுக்காய் சொன்னவள் உள்ளே செல்ல முயல,

“யக்காங்க… இன்னும் நீங்க ஏன் லேட்டா வந்தீங்கனு சொல்லவே இல்லீங்களே…” என்றான் அவன் பவ்வியமாய்.

“பொடி பய நீ எல்லாம் கேள்வி கேக்கலாமா… போ… போ… போயி வண்டியில வாட்டர் பாட்டில் வச்சு இருக்கேன்… அத எடுத்துட்டு வா…” என்றாள் அவனின் தோளில் தட்டி.

“உள்ள தான் தண்ணீ கேன் இருக்குல… அப்புறம் எதுக்கு பாட்டில்…” அவன் சந்தேகமாய் அவளைப் பார்க்க,

“பாட்டில் என் தண்ணீ வண்டி தம்பிக்கு… எவ்வளவு குடிச்சாலும் அளந்து குடிக்கனும் பாரு… அதுக்கு தான்…” என கண்சிமிட்டி கேலியாக சொன்னவள், வேகமாக உள்ளே சென்று மறைய, “அடியே சொர்னாக்கா… இருக்குடி இன்னைக்கு உனக்கு…” என்று அவளை முறைத்தபடி நின்றான் இனியன்.

உள்ளே நுழைய சந்தன மணமும் ஜவ்வாது மணமும் போட்டி போட்டுக் கொண்டு அவள் நாசியை நிறைத்தது. அதற்கும் முன்னே அக்னிக் குண்டத்தின் புகை அவள் கண்களை நிறைத்து எரிச்சலை தொடங்கியிருந்தது. அருகில் இருப்பவர் கூட தெரியாத அளவிற்கு புகை மண்டிக்கிடக்க, யாரும் அறியாத வண்ணம் தனது தாயின் அருகே சென்று அமர்ந்துக் கொண்டாள் அவள்.

நன்கு புறமும் செங்கற்கள் அடுக்கபட்டு உருவாக்கப்பட்ட அக்னிகுண்டத்தின் நடுவே அரையடி உயரத்திற்கு நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது. அதன் ஒருபுறம் ஐயரும் மறுபுறம் நாதரும் வசுவும் அமர்ந்திருக்க, சூரியா உட்பட கடையில் வேலை செய்பவர்கள் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவருமே வியர்வையில் குளித்திருக்க, அன்றலர்ந்த மலராக வந்தமர்ந்த மிளிரை தான் முறைத்துக் கொண்டிருந்தாள் சூரி. என்னவென்று அவளிடம் கண்களாலேயே வினவ, அவள் பதிலுக்கு முறைத்தாலே அன்றி வாய் திறந்து எதுவும் கூறவில்லை.

அதற்குள் இனியன் தாயுக்கும் தமக்கைக்கும் இடையே இருந்த சிறு இடைவெளியில் இருவரையும் இடித்துக் கொண்டு அமர, “அதான் இவ்வளவு இடம் இருக்குல… அங்க உக்கார வேண்டி தான தடிமாடு… வந்துட்டான் தாயையும் புள்ளையையும் பிரிக்க…” என்றாள் மிளிர் இனியனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“மிளிர்ம்மா… என்னடா இது கணபதி ஹோமம் முடிஞ்சு குபேர பூஜையே ஆரம்பிச்சாச்சு… இப்பதான் வரதா… உன்ன அழைச்சுட்டு வர சொல்லி தான இனியன விட்டுட்டு வந்தேன்… அப்பறம் ஏன்டா தனியா கிளம்பின… அவன் வந்த பிறகும் உன்ன காணும்னதும் பதறிடிச்சு… இப்ப பாக்கவும் தான் நிம்மதியாச்சு…” எங்கே சற்றே அதட்டிப் பேசினாலும் வார்த்தைகளுக்கும் மகளுக்கும் வலித்து விடுமோ என்னும் விதமாக மென்மையாக இருந்தது வசுவின் விசாரிக்கும் தோரனை. அருகிலிருக்கும் இனியனையும் மிளிரையும் தவிர வேறு எவருக்கும் அது கேட்டிருக்காது. குரலில் அத்தனை மென்மை இருந்தாலும் இனியனை விட்டு நீ தனியே வந்திருக்க கூடாது என்ற சிறு கண்டிப்பும் இருந்தது.

“அதுங்கம்மா… நானு கிளம்பி வர வரைக்குமே தம்பி ரெடியாகலைங்க ம்மா… அதான் பூஜைக்கு லேட்டாகுதேனு நானா வந்தேன்… வர வழியில பாத தெரியாம வழி மாறிட்டேனுங்கம்மா…” என எந்தவித பதற்றமும் இன்றி திருவிழா கூட்டத்தில் தொலைந்த சிறு குழந்தைப்போல் அலுங்காமல் குலுங்காமல் பொய்யை உண்மை போலவே உரைத்தவளை, ‘எது நீ வழி தவறிட்ட… இத நான் நம்பனும்…’ என்ற ரீதியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு பார்த்து வைத்தான் இனியன்.

“ஏன்டா… உனக்கு கொஞ்சமாச்சு அறிவு இருக்கா… உன்ன எழுப்பி சொல்லிட்டு தானே வந்தேன்… அக்கா எழுந்ததும் கிளப்பி கூட்டிட்டு வானு… திரும்ப போய் தூங்கிட்டீயா நீனு…”

“அம்மா… அவ தான் சொல்லறானா… நீயும் நம்பற பாரு…”

“அவ… இவன வாயிலேயே போடுவேன் பாத்துக்க… நாளை பின்ன கல்யாணமாகி இன்னொரு வீட்டுக்கு போற புள்ள… மரியாதையா பேசி பழகு…” என மகனை கண்டிக்கும் குரலில் சொன்னவர், “நீ சாப்பிட்டியா கண்ணு…” என்றார் வஞ்சையாக மகளிடம்.

“சாப்பாடு செஞ்சு வச்சுருந்தீங்களாம்மா… நான் பாக்கவே இல்லையே…” என மிளிர் சொல்லிய அடுத்த நொடி வசு மகனை தீயாய் முறைக்க, அவனோ இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்.

“உன்ன புள்ளய சாப்பிட வச்சு கூட்டிட்டு வானு தானே சொன்னேன்…” என வசு அவனை திட்ட ஆரம்பிக்க,

“பூஜை முடியற வரைக்கும் அம்மாவும் புள்ளையும் சும்மா இருக்க மாட்டீங்களா…” என்ற நாதரின் கண்டிப்புக் குரலில் மூவருமே வாயை மூடிக் கொண்டனர்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த பூஜையும் முடிய, ஐயருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து அனுப்பிவிட்டு வந்தார் நாதன். அதற்குள்ளாகவே வசு இனியனுக்கு காதில் புகை வரும் அளவிற்கு ‘ஏன் மிளிரை சாப்பிட வைக்காமல் தனியே அனுப்பினாய்..?’ என திட்டி தீர்க்க, அவளோ அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு ஏதுமறியா பிள்ளைப்போல் தன் தாயையே பார்த்திருந்தாள். மறந்தும் தமையனின் பக்கம் திரும்ப வேண்டுமே அவள் தலை.

நாதர் அங்கே வரவும் தான் அமைதியானர் வசு. நாதருக்கு சொந்தமாய் ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. ஆரம்பத்தில் பெட்டி கடை அளவில் ஆரம்பித்தது தான். நாதரின் கடின உழைப்பால் இன்று இந்த அளவிற்கு வளந்திருக்கிறது. கஷ்டபட்டு வளர்த்த தொழிலை வேறு ஒருவருக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் எண்ணம் அவருக்கில்லை. இனியனே அதனை எடுத்து நடத்த வேண்டும் என்பது அவரின் பெரும் அவா. ஆனால் அவனோ வேலை செய்வதே மாபாதகம் என்ற ரீதியில் பொறியியல் படித்துவிட்டு அதற்கேற்ற வேலை தேடி சுற்றிக் கொண்டிருக்கிறான் இரண்டு அரியர்ஸோடு. மிளிருக்கு விபத்து ஏற்படும் சமயம் தான் அவன் பொறியியல் இறுதி ஆண்டு இறுதி தேர்வு எழுத வேண்டிய சமயம். அதில் அவன் கவனம் சிதறிப்போக, இந்த ஒன்றரை ஆண்டுகளாக அவனும் இரண்டு அரியர்ஸ்களை கிளியர் செய்ய தலைகீழாக தான் நின்றுப் பார்கிறான். ம்கூம்… அத்தனை சுலபமாக கிளியர் ஆவேனா என்றது அது.

“சரி வசு… நாம கிளம்புவோம்… கடைய பாக்கனும்…” என மனைவியிடம் கூறியவர், “இனியா… இருந்து அக்காவுக்கு ஏதாவது உதவி வேணுமுனா செஞ்சு குடுத்துட்டு மதியம் போல கடைக்கு வந்துடு… எனக்கு மதியத்துக்கு மேல ஒரு வேலை இருக்கு…” என்றார் மகனிடம்.

“நான் இங்க என்னப்பா பண்ண போறேன்… அதுவும் லேடீஸ் பார்லர்ல…” என அவன் இழுத்து நிறுத்த,

“ஏன் துரைக்கு கலெக்டர் ஆபிஸ்ல சைன் பண்ண வேண்டிய பைல் நிறைய பெண்டிங் இருக்கோ…” என கேட்டு அவனை முறைத்தவர், “மதியமா வீட்டுக்கு வந்து அக்காவுக்கு சாப்பாடு குடுத்துட்டு சூப்பர் மார்கேட்ட பாத்துக்க… எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு… என்ன புரியுதா..?” என கட்டளை போல சொல்லியவரிடம் மறுக்க முடியாமல் தலையாட்டி வைத்தான் இனியன்.

இவர்கள் இருவரும் கிளம்ப, ‘ஹப்பாடா…’ என ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான் அவன். இத்தனை நேரம் அவர்கள் செல்லவே காத்திருந்தவள் போல, “ஒன்னு இங்க உங்க தம்பி இருக்கனும்… இல்ல நான் இருக்கனும்…” என அவனை முறைத்தபடி பல்லைக் கடித்துக்கொண்டு சொன்ன சூர்யாவை காண சிரிப்புதான் வந்தது மிளிருக்கு.

ஏற்கனவே அவளுக்கு சின்ன கண்கள். அதை இன்னும் சுருக்கி, மூக்கு நுனி சிவக்க, பல்லை கடித்துக் கொண்டு, புசு புசுவென மூச்சு விட்டபடி, மூக்கு விடைக்க, சொல்லியவளை கண்டால் நிச்சயம் யாராய் இருந்தாலும் சிரிப்பு தானாய் வரும்.

மிளிர் முயன்று அதை அடக்கிக் கொள்ள, இனியனோ வயிற்றை பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தான். “இனியா…” என மிளிர் அதட்டவும் தான் அடங்கினான். ஆனால் இன்னும் சிரிப்பில் அவன் உடல் குலுங்குவது நின்றபாடில்லை.

“என்ன..? என்ன பிரச்சனை உங்க இரண்டு பேருக்கும்..?” என மிளிர் கேட்க, “அத உங்க தம்பிட்ட கேளுங்க…” என்றபடி அவள் முறுக்கிக் கொண்டு நிற்க, “அதெல்லாம் ஒன்னுமில்ல… நீ போக்கா… நான் பாத்துக்கறேன்…” என்றான் இனியன்.

“நீ அக்கா… அக்கானு காக்கா புடிக்கறத பாத்தாலே தெரியுது… ஏதோ பெருசா பண்ணி வச்சுருக்கனு… என்ன பண்ண சொல்லு…” என்றாள் மிளிர் அவனை அளவிடும் பார்வையோடு.

“நான் ஒன்னுமில்லனு சொல்லிட்டேன்… அப்படி என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையானா தாராளமா நீ உன் அசிஸ்டன்ட் கிட்டையே கேட்டு தெரிஞ்சுக்கலாம்… சரிதானே சூரி..” என்றவனை, முறைத்தபடி “சூர்யா…” என தனது பெயரை திருத்தினாள் அவள்.

“நீ தான் என்னனு சொல்லேன் சூரி…” என மிளிர் சொல்ல, மீண்டும் பல்லை கடித்துக் கொண்டு “சூர்யா…” என்றாள் இப்போது மிளிரை முறைத்துக் கொண்டே.

“இப்ப அதான் முக்கியம்…” என்றவளை, வெளியே வாடிக்கையாளர் ஒருவர் அழைக்க “இருங்க… வந்து உங்க பஞ்சயத்த வச்சுக்கலாம்…” என அங்கிருந்து சென்றுவிட்டாள் மிளிர்.

அந்த கடை இரண்டு பகுதிகளாக பிரிக்கபட்டிருந்தது. அதிலும் முன் பகுதி மேலும் இரண்டாக பிரிக்கபட்டு ஒன்று வரவேற்பறையாகவும் இன்னொன்று வாடிக்கையாளர்கள் காத்திருப்பு அறையாகவும் ஏற்பாடு செய்யபட்டிருக்க, இரண்டாம் பகுதி நான்கு சுழற்நாற்காலிகள் போடப்பட்டு அவர்கள் வேலையை செய்வதற்கு ஏதுவாக வடிவமைக்கபட்டிருந்தது. மிளிரையும் சூர்யைவையும் தவிர்த்து இன்னும் இருவர் அந்த கடையில் வேலைக்கு என சேர்ந்திருந்தனர். சமிபத்தில் தான் அவர்கள் இருவரையும் வேலைக்கு சேர்த்திருந்தாள் மிளிர்.

காலை நடந்த பூஜை வரவேற்பறையில் நடக்க, அனைவருமே அங்கே தான் நின்றிருந்தனர். சூர்யாவுக்கு மட்டும் புகை ஒவ்வாது என்ற காரணத்தால், தனியே உள்ளே அமர்ந்து தனது கைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அதிலேயே ஒன்றிவிட, அந்த சமயம் தான் மிளிரை தேடி அங்கே வந்தான் இனியன். மிளிர் வந்துவிட்டதாக தான் எண்ணி இருந்தான். வந்த அவசரத்தில் வாயிலில் அவளின் வாகனம் நிற்கிறதா என கவனிக்கவும் தவறி இருந்தான். போதக்குறைக்கு இன்று கடையின் முதல் நாள் என்பதால் சூர்யாவோடு சேர்த்து மற்ற இருவருக்குமே ஒன்றுப் போல அவள் அணிந்திருந்த அதே சுடிதாரை எடுத்து தந்திருந்தாள் மிளிர். அதை இன்று அணிந்து வரவும் பணித்திருந்தாள்.

தலைகுனிந்து அமர்ந்திருத்தவளை பின்புறமாக பார்த்தவன் தனது தமக்கை என்றே எண்ணிவிட்டான். காலையில் மிளிர் செய்ததற்கு பழி வாங்குவதாக எண்ணிக் கொண்டு, கழிப்பறையில் இருந்த சிறு வாளி நிறைய நீரை பிடித்துக் கொண்டு வந்தவன், அதை அப்படியே சூர்யாவின் மேல் கொட்டி கவிழ்க்க, எதிர்பாராமல் நடந்த நிகழ்வால் என்ன நடந்ததென்று புரியவே சில நொடிகள் பிடித்தது அவளுக்கு.

அவள் அதிர்ந்து, பயந்து, பின் தெளிந்து அவனை தீப்பார்வை பார்த்துக் கொண்டே படபடவென பொறிய, அவளை விட அதிகம் அதிர்ந்து போனது அவன் தான். வெளியே இருக்கும் பெற்றோரை எண்ணி பயம் கொண்டவன், “ஸ்ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்…” என அமைதி படுத்த முயல, அவள் வாயை முடினால் தானே.

எங்கே தனது பெற்றோர்கள் கேட்கப் போகிறார்கள் என்ற பதற்றத்தில் வேகமாக அவள் கைப்பற்றி இழுத்தவன், தம் கரம் கொண்டு அவள் வாயடைக்க, அத்தனை நெருக்கத்தில் அவனை கண்டவள் தடுமாறி தான் போனாள். அதிர்ச்சியில் அவள் சிறு விழிகள் கொஞ்சம் பெரிதாய் விரிய, முகம் முழுவதும் நீர் வழிய நின்றவளின் முக பாவத்தை கண்ட அவனும் சில நொடிகள் தடுமாறிதான் போனான். அவை எல்லாம் சில நொடிகளே.

“பூரி… உன்னதான் சத்தம் போடதானு சொல்லறேன் இல்ல…” என அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கரத்தை அவள் வலுவாய் கடித்திருந்தாள்.

அவன் கத்தியபடியே கையை வேகமாக உதற, அந்த சிறு இடைவெளியில் வேகமாக வெளியே வந்து மற்றவர்களுடன் நின்றுக் கொண்டாள். அவள் பின்னே அவனும் வேகமாக வாசலுக்கு வர, அப்போது தான் மிளிர் அங்கே வந்தது.

அந்த நிகழ்வின் நினைவில் லேசாக கையை உதறிக் கொண்டவன், “ஸ்… அப்பா… என்ன கடி…” என சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தவள் பதிலேதும் சொல்லாமல் உள்ளே செல்ல, மீண்டும் அவள் கைப்பற்றி தடுத்திருந்தான் அவன்.

“பதில் சொல்லிட்டு போ பூரி… ஏன் என்ன கடிச்ச…”

“பூரி… கீரினா பல்ல தட்டி கையில குடுத்துடுவேன்… கைய விடுடா முதல…”

“ஏன் கடிச்ச சொல்லு… விடறேன்…”

“நீ என்னை…” என வேகமாக சொல்ல வந்தவளின் பேச்சை வெட்டும் விதமாக… “நான்… உன்னை…” என்றான் மயக்கும் குரலில் குறும்பு புன்னகையுடன்.

குரலில் இருந்த வேறுபாட்டில் அவள் அவனை ஆச்சரியமாக பார்க்க, அவளை இன்னுமாய் நெருங்கி நின்றிருந்தான் அவன். அவன் நெருக்கம் கூட உரைக்காத அளவுக்கு கண்களில் மின்னிய குறும்பையும் இதழ்கள் சிந்திய குறுநகையையும் தான் வெறித்துக் கொண்டிருந்தாள் அவள்.

“ம்ம்ம்ம்… சொல்லு… நான் உன்னை…” என்றான் அவள் கண்களை இன்னும் ஆழமாக பார்த்தபடி. அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருத்து விழிக்க, “நான் உன்ன கட்டி புடிச்சுட்டேனு தானே கடிச்ச… இப்பவும் அவ்வளவு நெருக்கமா தான் இருக்கேன்… ஆனா ஏன் நீ ஒன்னுமே பண்ணல பூரி… அப்போ இது அதுதானே…” என்றவனின் கூற்றில் தான் உணர்ந்தாள் அவனின் நெருக்கத்தை. சட்டென்று அவனை விலக்கி தள்ளிவிட்டு, விடுவிடுவென எங்காவது செல்லலாம் என நினைக்க அவனோ வழியை மறைத்தபடி நின்றிருந்தான்.

“பச்… இப்போ நகர போறீயா… இல்லை…”

“பதில் சொல்லு விடறேன்…”

“தெரியலனா பதில் சொல்லலாம்… ஆனா…” என்றவள் அங்கிருந்து செல்வதிலேயே முனைப்பாக இருக்க,

“அப்போ ஏன் கடிச்சனு தெரியும்… ஆனா இப்போ ஏன் கடிக்கலைனு தெரியலையே… அதான்…” என்றான் அவன் அவளை ஆராயும் பார்வையுடன்.

‘இம்சைடா உன்கூட… கடிச்சாலும் குத்தம்… கடிக்காட்டியும் குத்தம்…’ என்று எண்ணியவள், “அப்போ தோனுச்சு… இப்போ தோனல…” என்றுவிட்டு, அவனை தான்டிக் கொண்டு வேறு வழியாக காத்திருப்பவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் வேகமாக சென்று மறைந்து விட்டாள்.

அவள் படபடப்பும் அந்த அதிர்ந்த பார்வையும் அந்த கோப முகமும் அவளை இன்னுமாய் சீண்ட சொல்லியே அவனை தூண்டியது. அதில் தோன்றிய மந்தகாச புன்னகையோடு அவன் திரும்ப, அவனின் பின்புறம் கைகளை கட்டிக் கொண்டு அவனை முறைத்தபடி நின்றிருந்தாள் மிளிர், “உன் போக்கே சரியில்லை…” என்ற வசனத்தோடு.

 

     – தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்