Loading

திமிர் 26

 

“பொய் சொல்லாதடி! மீட்டிங் நடக்குது, உள்ள போகாதன்னு சொல்லியும் கேட்காமl போயிட்டு, அகம்பன்கிட்ட நடிக்கறியா…”

 

அனுசியா பக்கம் பார்வையைத் திருப்பியவள் முறைக்க, “என்னடி முறைக்கிற? நீ பண்ண வேலைக்கு அகம்பன் உன்னை என்ன பண்ணப் போறாருன்னு பாரு. அங்கிளுக்கு எவ்ளோ பெரிய பிரச்சினை போயிட்டு இருக்கு தெரியுமா? அதை எப்படி சால்வ் பண்றதுன்னு தெரியாமல் நாங்க எல்லாரும் அவ்ளோ டென்ஷனா இருக்கோம். கொஞ்சம் கூட அறிவு இல்லாம, டோர் ஓபன் பண்ற. ஏற்கெனவே உன்னால நிறைய அசிங்கம். இப்ப அகம்பனை மதிக்காம உள்ள இருக்கவங்க முன்னாடி அசிங்கப்படுத்திட்ட. வெளில அவ்ளோ மீடியா இருக்கு. இப்படிப் பாதியிலயே மீட்டிங்கை விட்டுட்டு வந்தது தெரிஞ்சா அவ்ளோதான்.” சூடு பிடிக்க வார்த்தையை விட்டுக் கொண்டிருந்தாள்.

 

“எனக்கு என்ன பிரச்சினைன்னு தெரியாது அகா…” முனைக் கண்ணில் தேங்கி நிற்கும் அழுகையோடு சொன்னவள், “சாரி அங்கிள்!” என்றாள் நவரத்தினத்தைப் பார்த்து.

 

“சாரி சொன்னா முடிஞ்சுதா? நீ வராத வரைக்கும், எப்படி இருந்த வீடு தெரியுமா இது? எப்ப நீ கால் எடுத்து வச்சியோ, அதுல இருந்து பிரச்சினைக்கு மேலப் பிரச்சினை. உன்னைப் பத்தித் தெரிஞ்சதால தான், நாங்க எல்லாரும் அகம்பனுக்கு எதிரா நிக்கிறோம். நல்லவேளையா, நீ எப்படின்னு அந்தக் கடவுள் காட்டிட்டான்.”

 

“சார்…” எனப் பேச வந்த கமலை, “அவ போற வரைக்கும் என்னடா பண்ணிட்டு இருந்த நீ? அவகூடச் சேர்ந்து நீயும் அசிங்கப்படுத்துறியா? உன்னை எல்லாம் வேலைக்கு வச்சிருக்கவே கூடாது.” அவனிடம் எகிறிக் கொண்டு வந்தாள் அனுசியா.

 

நடப்பதை எல்லாம் கேட்டுக்கொண்டு, அமைதியாக அமர்ந்திருந்தவனைப் பார்க்க அச்சமாக இருந்தது. அனுசுயா சொன்னதை நம்பி விட்டானோ! எனப் பயந்தவள் தேங்கி இருந்த கண்ணீரை வெளியேற்றினாள். இன்று ஒரு கலவரமே நடக்கும் என்ற குஷியில், தனக்கு ஆதரவு கொடுத்த மூவரையும் பார்த்துக் கண் சிமிட்டினாள். அவர்களோ, தங்கள் வீட்டுப்பிள்ளை என்ன செய்யப் போகிறதோ என்ற திகைப்பில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அவள் விழிகளை விட்டு வெளியேறிய கண்ணீரின் மீது பார்வையை மாற்றினான். கன்னத்தைத் தாண்டி, ஆடையில் தெறித்தது வரை அவசரம் இல்லாது பார்த்துவிட்டுத் தன் கைபேசியில் இருந்து யாருக்கோ தொடர்பு கொண்டான். அடுத்த நொடி சமையல் அறையில் இருந்து ஒரு நபர் எட்டிப் பார்க்க, தலையை மட்டும் லேசாக அசைத்துக் கண்ணைக் காட்டினான்.

 

புரிந்து கொண்டவர் உணவுத் தட்டோடு வர, புருவங்கள் நெளிந்தது திட்டம் போட்டவளுக்கு. பெற்றோர்களும், உடன் பிறந்தவனும் தலைச் சுற்றலோடு நின்று இருக்க, ஒன்றுமே புரியவில்லை அப்பாவியாக நின்றிருந்த கமலுக்கு. உணவை மேஜை மீது வைத்தவர் அமைதியாகச் செல்ல, கை பட்டனை அவிழ்த்து விட்டு முட்டிவரை சட்டையை ஏற்றி விட்டவன், அதைக் கையில் எடுத்தான்.

 

இரு கன்னத்தையும் கைகளால் தாங்கிப் பிடித்துக் கொண்டு, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் உதட்டறுகே உணவைக் கொண்டு செல்ல, பேய் முழி முழித்தாள் மதுணிகா. அதுவரை, துடைத்து வைத்த பாத்திரம் போல் இருந்த அவன் முகத்தில் லேசான சிரிப்பு உதயமாகியது. அவன் மீது இருந்த பயத்தில், அதைக் கவனிக்காதவள் உதட்டின் மீது உணவைத் திணிக்க, கவ்விக்கொள்ள வாய் திறந்தது.

 

அடுத்தடுத்த உணவு, தொடர்ந்து அவளிடம் சென்ற பின்பு தான் அவன் எண்ணம் புரிந்தது. கன்னத்தில் இருந்த இரு கைகளை எடுத்துவிட்டுப் புன்னகைத்தவளைக் கண்டு, கண் சிமிட்டினான். வார்த்தை எதுவும் இன்றி அவன் செயலால் உள்ளத்தைப் புரிய வைக்க, முழு உணவும் உடலுக்குள் இறங்காமலே புதுத் தெம்பு வந்தது.

 

சிரிக்கும் காதலியிடம், கண்ணீரைத் துடைக்கச் சொல்லி விழியால் சைகை செய்ய, தலையாட்டிப் பொம்மை போல் தலையாட்டி வேகமாகக் கண் துடைத்தாள். தலையை ஆட்டாதே என்று மீண்டும் சைகை செய்ய, சமத்துப் பிள்ளையாக இருப்பேன் என்று மெதுவாக ஆட்டினாள்.

 

‘இப்பத் தானடி ஆட்டாதன்னு சொன்னேன்…’

 

‘நான் அதுக்குத்தான் சரின்னு சொன்னேன்.’

 

‘பச்சப்பிள்ளை மாதிரி நடிக்காதடி!’

 

‘ரொம்பப் பயந்துட்டேன்.’

 

‘நம்பிட்டேன்!’

 

‘சத்தியமா…’

 

‘கன்னம் வீங்கிடப் போகுதுன்னு பயம்!’

 

‘ம்ம்…’

 

‘என் மேல பயம் இல்லல்ல.’

 

‘ஈஈஈ…’

 

‘சுத்தி நிற்கிறவங்க மூஞ்சப் பாரு. நீ மட்டும் தான் என் மேல பயம் இல்லாம இருக்க.’

 

‘ஐயோ, எனக்குத்தான் ரொம்பப் பயம்.’

 

‘அதை அங்க ஒரு பைத்தியக்காரன் நிக்கிறான் பாரு. அவன்கிட்டச் சொல்லு, நம்புவான்.’ எனக் கமலைக் கண்ணைக் காட்ட, ‘அழகா இருக்கடா’ கண்களைச் சுருக்கினாள்.

 

‘பேச்சை மாத்துறா பாரு.’

 

‘சார் பேச மாட்டீங்களா?’

 

‘உன்கிட்டப் பேசினா, மண்டைல ஏத்தி வச்ச எல்லாமே மறந்து போயிடும். உன் முன்னாடி கெத்தை இழுத்துப் பிடிச்சு வைக்கிறதுக்குப் படாத பாடு படுறேன்டி. சுத்தியும் வேற வச்ச கண்ணு வாங்காமல் பார்க்குதுங்க. கொஞ்சம் லூசு விட்டாலும் அகம்பன் கதையை முடிச்சிடுவாங்க.’

 

‘கிஸ் குடு டா’

 

‘ஷூவ எடுத்து விளாசிடுவேன். மூடிட்டுத் தின்னுடி!’

 

‘வேணும்.’

 

‘உதட்டச் சுழிக்காத.’

 

‘இப்பவே வேணும்.’

 

‘அடி வெளுக்கப் போறேன்!’

 

‘உதட்டுலயா?’

 

அதற்கு மேல் அடக்கி வைக்காமல் அவளுக்கு மட்டும் தெரியும்படி கீழ் உதட்டை வளைக்க, ‘கொல்லுறானே! சிரிக்காதடா, யார் இருக்காங்க என்னன்னு பார்க்காமல் கடிச்சு வச்சுருவேன்.’ எனப் பரபரத்த கைகளைப் பெரும் பாடுபட்டு அடக்கினாள்.

 

சுற்றி இருந்த அனைவருக்கும் உலகையே நிறுத்தி வைத்த உணர்வு. கரடுமுரடான அவன் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கோபம் துள்ளிக் கொண்டு இருந்தது அவர்கள் பார்வைக்கு. அவர்களுக்கு ஒரு முகமும், காதலிக்கு ஒரு முகமும், காட்டிக் கொண்டிருப்பதை அறியாது குழம்பிப் போய் நிற்கிறார்கள்.

 

முழு உணவையும் ஊட்டி முடித்துவிட்டுக் கை கழுவிய அவனை அணு அணுவாக ரசித்தாள். அவன் பெற்றோர்கள் இருப்பதால், ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு இருக்கிறாள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் தாவி, கணக்கில் சேர்க்க முடியாத முத்தங்களை முகம் எங்கும் இட்டு இருப்பாள்.

 

தன்னைப் பார்ப்பவளைப் பார்த்துக்கொண்டு கை கடிகாரத்தைப் பார்த்தான். புரிந்து கொண்டவள் சிரித்த முகமாக, ‘ஒன்னே ஒன்னு…’ என்றாள்.

 

பார்வையை அவள் உடலில் மேய விட்டவன், ‘அங்கங்க கொழுப்பு ரொம்ப அதிகமா இருக்கு. மேல போ, முடிச்சுட்டு வந்து குறைச்சிடுறேன்.’ என்றதும் ‘கப்சிப்’ என்று வாயை மூடிக் கொண்டாள்.

 

எழுந்து நின்று அனைவரையும் நாசூக்காக நோட்டமிட்டவன், கை பட்டன்களைப் போட்டுக்கொண்டு அவளுக்குக் கண் காட்டினான். புரிந்துகொண்டு, சம்மதமாகத் தலையாட்டியவள் அசரும் நேரத்தில் உச்சந்தலையில் முத்தமிட்டுச் சுற்றி இருந்த அனைவரையும் அதிரவிட்டவன், ஒன்றுமே நடக்காதது போல் நடையைக் கட்ட, உறைந்து போனாள் மதுணிகா.

 

அவன் இட்ட முத்தம், உச்சந்தலையிலிருந்து உடலில் பாய்ந்து பாதத்தில் தேங்கி அவளைத் தள்ளாட வைக்க, தந்தவன் இதழ்கள் தன்னை உரசியதா! என்ற பெரும் ஆச்சரியத்தில் முகம் சிவந்தாள். ஆதியும், நவரத்தினமும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு கற்பகத்தைப் பார்க்க, அவர் பார்வை மகன் முதுகைத் துளைத்தது.

 

எரிந்து சாம்பலான தன் திட்டத்தை எண்ணிப் புகைந்தாள். மீட்டிங் நடக்கும் அறை வரை வேக நடையிட்டுச் சென்றவன், கதவின் கைப்பிடியைப் பிடித்து ஒரு நொடி நிற்க, அவனுக்குப் பின்னால் வந்த இருவரும் நின்றார்கள். அவர்களைத் தாண்டித் தூரமாக நிற்கும் அனுமீது பார்வையைத் திருப்பியவன்,

 

“இனி ஒரு தடவை அவனை மரியாதை இல்லாமல் பேசுறதைக் கேட்டேன், எதுக்குமே வாயைத் திறக்க முடியாது.” என்று விட்டுக் கதவைத் திறந்து கொண்டு மறைய, அமைதியாக இருக்கையில் அமர்ந்தார் கற்பகம்.

 

***

 

ஆதிகேஷின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாள்கள் இருக்கிறது. அன்று நடந்த பிரச்சினை, பூதாகரமாக வெடித்து அகம்பன் திட்டத்தால் தவிடு பொடியானது. ஊடகத்தின் வாயை அடைத்தவன், தனிப்பட்ட முறையில் தானே இறங்கி அந்த மருத்துவமனைக்குத் தேவையான அனைத்தையும் செய்து முடித்தான். அந்த வேலையை முடித்த கையோடு, அண்ணன் திருமண வேலைகளைக் கவனிக்கச் சென்றவன் காதலியைத் தவிக்க விட்டான்.

 

அவன் இல்லாது, அடிக்கடித் தொந்தரவு செய்யும் அனுவைச் சமாளித்து நேரத்தைக் கடத்துகிறாள். திருமண வேலைகளில், குடும்பமே பிஸியாகி விடத் தனிமை எனும் நோய் தாக்கியது அவளை. அகம்பன் இல்லாது அறையை விட்டு அதிகம் வெளிவராதவள், தனிமையைத் தாங்க முடியாது வெளியே வந்தாள்.

 

பிரியாவின் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். அகம்பனைத் தவிர அனைவரும் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். எதற்குத் தொந்தரவு என்று அறை நோக்கிச் சென்றவளை, “என்னம்மா, எங்களைப் பார்த்துட்டு அப்படியே போற…” குரல் கொடுத்தார் கற்பகத்தின் மூத்த சம்மந்தி.

 

“இல்ல அங்கிள், சும்மாதான் வந்தேன்.”

 

“அப்பானே கூப்பிடுமா…”

 

“பிரியா எப்படி இருக்காங்க?”

 

“கல்யாணப் பொண்ணு ரொம்ப பிசி…”

 

“என்ஜாய் பண்ணட்டும்!”

 

“வந்து இப்படி உட்காருமா” என்றதும், அவளது பார்வை புகுந்த வீட்டின் மீது பாய, “அவளை எதுக்குக் கூப்பிடுறீங்க?” அனு கேட்டாள்.

 

“நாங்க வந்ததே மதுவைப் பார்க்கத்தான்!”

 

“என்ன?” என்றவள் போல் தான் அனைவரும் குழம்பினார்கள்.

 

“கல்யாணத்துக்கு வீட்ல இருக்க எல்லாருக்கும் டிரஸ் எடுத்தோம். என் பொண்ணு, கொழுந்தன் பொண்டாட்டிக்கும் எடுக்கணும்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டுட்டா. பொண்ணு பேச்சை மீற முடியுமா?” எனக் கலகலவெனச் சிரித்தவர்,

 

“என்னதான் நல்ல குடும்பமா இருந்தாலும், என் பொண்ணு எப்படி இங்க தனியா சர்வே பண்ணப் போறான்னு ரொம்பப் பயந்தேன். அவளுக்கு ஃப்ரெண்ட் மாதிரி ஒரு தங்கச்சி இருக்கான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான், ரொம்ப நிம்மதியா இருக்கு.” நவரத்தினத்தைப் பார்த்துக் கூறினார்.

 

மொத்தக் குடும்பத்திற்கும் துணி எடுத்த ஞாபகம் வந்தது. அவளை அழைத்துச் செல்லுமாறு அகம்பன் கூறியும் கேட்காது சென்றவர்கள், அவளைத் தவிர வீட்டில் வேலை பார்க்கும் அனைவருக்கும் துணி எடுத்தனர். விஷயம் அறிந்தவன் தையத்தக்காவென்று குதிக்க, மது தான் அடக்கினாள்.

 

“கமல்!”

 

“சார்…”

 

“டெக்ஸ்டைல்ஸ் ஷாப் ஒன்னு ஓபன் பண்ணனும்.” அதிரடியாகச் சொன்னவன், தன் வீட்டு ஆள்களை முறைத்துக் கொண்டு, “எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் அதுக்கான வேலையை ஸ்டார்ட் பண்ணு.” என்றான்.

 

“எதுக்கு அகா…”

 

“ஒரு துணி எடுத்துக் கொடுக்கக் கூட மனசு வராத இவங்க முன்னாடி, ஒரு துணிக் கடையவே உனக்கு நான் தருவேன்டி. ஒரு டிரஸ் என்ன…” என்று கை உயர்த்திச் சொடக்குப் போட்டவன், “செகண்டுக்கு செகண்ட் எடுத்துக் கொடுக்க என்னால முடியும். அதைப் பார்க்குறதுக்கான தெம்பு இங்க இருக்கற யாருக்கும் இருக்காது.” என மொத்தக் குடும்பத்தையும் பகைத்துக் கொண்டு சென்றவன், அதே கடையை அவளை விட்டுப் பிரிந்த பின்னர் அமோகமாகத் திறக்கப் போகிறோம் என்பதை அறியவில்லை.

 

***

 

எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. மாப்பிள்ளை ஆதிகேஷ் முழு அலங்காரத்தில் நிற்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் இங்கிருந்துக் கிளம்பித் தன்னவளின் கரம் பிடிக்கப் போகிறான். அவனது பெற்றோர்கள், காலில் சக்கரம் கட்டாத குறையாகக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்தையும் கனகச்சிதமாகச் செய்தவன், அண்ணனை வரவேற்க மண்டபத்திற்குச் சென்று விட்டான்.

 

கடைசி நலங்கை வைத்து மகனுக்கு ஆரத்தி எடுத்த கற்பகம், கண் கலங்கக் கட்டியணைத்து முத்தமிட்டார். ராஜ தோரணையில் திருச்சியே திரும்பிப் பார்க்க, பாதுகாவலர்கள் படைசூழக் கிளம்பினான் ஆதிகேஷ் திவஜ். வந்த சொந்த பந்தங்கள் அனைவரையும் அனுப்பிவிட்டுக் கடைசியாக அவனது பெற்றோர்கள் வண்டியில் ஏற, கமலின் பார்வை அண்ணியைத் தேடியது.

 

வீடு முழுவதும் தேடிப் பார்த்தவன் காரில் ஏறாமல் நிற்க, “ஏறுப்பா” என்றார் கற்பகம்.

 

“மேடம்!”

 

அப்போதுதான் வெகு நேரமாகியும் அவளைக் காணாததை உணர்ந்தார் கற்பகம். ஒரு நொடி அவள் மீதான சிந்தனையை உலாவ விட்டவர், “நேரத்துக்குள்ள மண்டபத்துக்குப் போகணும், ஏறு!” என்றார்.

 

“சார், மேடமைக் கூட்டிட்டு வரச் சொன்னாரு.”

 

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை, முதல்ல வண்டியில ஏறுடா.”

 

நவரத்தினத்தின் அதட்டலுக்கு அடிபணிந்து காரில் ஏறியவனுக்கு, எதுவோ நெருடல். வண்டி கிளம்பியதும் நிறுத்தச் சொல்லி இறங்கியவன், அவர்கள் முறைப்பை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். மதுணியின் அறை முன்பு நின்று கதவைத் தட்டியவன், திறக்காததால் அகம்பனைத் தொடர்பு கொண்டான்.

 

அவசரமாக அவன் அழைப்பைத் துண்டித்தவன் அம்முவிற்கு அழைத்தான். பலமுறை அழைத்தும் அவளுக்கான பதில் கிடைக்கவில்லை. கவனித்துக் கொண்டிருந்த அனைத்து வேலைகளையும் விட்டவன், “டோரை ஓப்பன் பண்ணுடா.” கத்தினான்.

 

பலம் மொத்தத்தையும், ஒன்று திரட்டிக் கதவைத் திறந்தவன் அதிர்ந்தான். அழைப்பிலிருந்தவன் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க, “சா…சார்” மெதுவாகக் குரல் கொடுத்தான்.

 

“என்னடா, அவ எங்க? அம்முக்கு என்னாச்சு. அவ அங்க இருக்காளா இல்லையா”

 

“வீடியோ கால்ல அட்டென்ட் பண்ணுங்க சார்”

 

தலைகால் புரியவில்லை அகம்பனுக்கு. மொத்த உடலும் ஆட்டம் கண்டது. பயமே என்னவென்று தெரியாதவன் விரல்கள் பயந்து நடுங்கியது அட்டென்ட் செய்ய. வேர்த்துக் கொட்டும் முகத்தைத் துடைக்காது, “திக்! திக்!” துடிக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அழைப்பை ஏற்றான்.

 

அவன் காதலி நலமாகத்தான் காட்சி கொடுத்தாள். அவளைக் கண்ட பின் சுவரில் சாய்ந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டவன், “அம்மு…” எனக் கசிந்துருகி அழைத்தான்.

 

 

கமல் வந்ததையும், அவன் அழைப்பையும் அறியாதவள் சிலை போல் அமர்ந்திருந்தாள். அவள் நிலை உணர்ந்து, கமலை உசுப்பச் சொல்லி நிகழ்வுக்குக் கொண்டு வர வைத்தவன், “என்னம்மா” அன்பொழுகக் கேட்டான்.

 

தாரை தரையாகக் கொட்டும் நீரைத் துடைக்காது மௌனமாகத் தலையசைத்தாள். அவள் தோரணையும், கண்ணீரும் பதட்டத்தைக் கொடுத்தது. உடனே அவளை அழைத்துக்கொண்டு அங்கு வர உத்தரவிட்டான். அவன் இழுத்த இழுப்பிற்குப் பொம்மை போல் வந்தவளை, யோசனை பொங்கப் பார்த்தவன் விரைவாக அவளுக்காகத் துடித்தவனிடம் சேர்த்தான்.

 

கமல் வரும்வரை நடையாக நடந்து அந்த மண்டப வாசலைத் தேய்த்தவனைப் பலரும் வேடிக்கையாகப் பார்த்தனர்.‌ யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, கார் வந்ததும் ஓட்டமாக ஓடியவன் கார் கதவைத் திறந்து, “என்னடி?” எனத் தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான்.

 

அவனிடம் வந்ததும் அந்தப் பொம்மைக்கு உயிர் வந்தது. எவ்வளவு இறுக்கமாக அணைக்க முடியுமோ, அவ்வளவு இறுக்கமாக அணைத்து அவன் நெஞ்சுக்குள் மூச்சுக்காற்றைச் சேர்த்தாள். அவளது அணைப்பு இன்னும் பயத்தைக் கூட்ட,

 

“பயமுறுத்தாம என்னன்னு சொல்லு!” என்றான்.

 

“கொஞ்ச நேரம் நான் உன் மடியில படுத்துக்கவா?”

 

கேட்க ஆயிரம் இருந்தும் அவள் கேட்டதை உடனே நிறைவேற்றினான். அவர்கள் இருவரும் காரில் இருக்க, அவர்களுக்குக் காவலாக நின்றான் கமல். தன்னவளை மடியில் சாய்த்துக் கொண்டு தாயாகத் தலை வருடினான். யோசனைகள் அனைத்தையும் துறந்து கண் மூடினாள்.

 

விடாமல் அழைப்பு வந்து கொண்டிருந்தது அவனுக்கு. முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கட்சி ஆள்கள் என அனைவரும் படையெடுத்தனர். அவர்களை எல்லாம் வரவேற்காத மகனைத் தேடி ஓய்ந்து போன நவரத்தினம், கமலை அழைத்து விவரத்தைக் கேட்க, “தலை வலிக்குதுன்னு ரெஸ்ட் எடுக்குறாரு சார்.” என்றான்.

 

“தலைவலியா?”

 

“ஆமா சார்.”

 

“இங்க எல்லா விஐபிஸும் வந்துட்டு இருக்காங்க, வர எல்லாரும் அகம்பனைத் தான் கேக்குறாங்க.”

 

“சார் கிட்ட இன்பார்ம் பண்றேன் சார்.”

 

“முடிஞ்ச வரைக்கும் கொஞ்சம் சீக்கிரம் வரச் சொல்லு!”

 

அழைப்பைத் துண்டித்தவன் கார் கண்ணாடியைத் தட்டினான். கதவைத் திறந்தவன் அவள் மீது பார்வையை வைத்திருக்க, “நீங்க இப்போ அங்க இருக்கணும் சார். சார் மட்டும் தனியா வெல்கம் பண்ணிட்டு இருக்காங்க. நான் மேடத்தைப் பார்த்துக்கிறேன்.” அனுசரனையாகக் கேட்க, அவளை விட்டுச் செல்லச் சிறு துளி மனம் வரவில்லை.

 

இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டவன், “உன்னை நம்பித் தான்டா விட்டுட்டுப் போறேன்.” எனக் காரை விட்டு இறங்கியவன் கவலையாக அவளைத் திரும்பிப் பார்த்தான்.

 

அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தாள். கண்மூடித் தன்னை நிலைப்படுத்தியவன், பிடித்திருந்த கைகளை எடுத்துவிட்டு, “அவளா எந்திரிக்கிற வரை டிஸ்டர்ப் பண்ணாத.” எனத் தூங்கும் காதலியின் நெற்றியில் முத்தமிட்டுச் சென்றான்.

 

நிற்கக் கூட நேரமில்லாமல் வேலை அவனைச் சுற்றி வளைத்தது. என்ன செய்தாலும் கவனம் எல்லாம் மதுணி மீது தான். ஒரு போன் செய்யக்கூட இடைவெளி கிடைக்கவில்லை. கமல் இருக்கிறான் என்ற ஒரே ஒரு நம்பிக்கையில், வந்த அனைவரையும் வரவேற்றான். ஆதிகேஷ் பிரியா வரவேற்பு நிகழ்ச்சி ஜோராக நடந்தது.

 

நள்ளிரவு மூன்று மணி வரை வரவேற்பு ஆட்டம் ஓயவில்லை. உடலைவிட மனம் சோர்ந்தது அகம்பனுக்கு. ஒரு வழியாக அனைத்தையும் முடித்துவிட்டு அவள் தங்கியிருக்கும் அறைக்குள் நுழைந்தான். அவள் எழுந்து விட்டதை ஏற்கெனவே கமல் உரைத்ததால், எதிர்பார்ப்போடு கதவைத் திறக்க, அவன் காதலி பொய்யாக்கவில்லை.

 

சிரித்த முகமாக வரவேற்றாள். தொலைந்த உயிர் அவனிடமே வந்தது போன்று இருந்தது அவள் சிரிப்பில். கமல் இருப்பதை மறந்து வேகமாகக் கட்டி அணைத்து, “ராட்சசி!” என நெற்றியில் முத்தமிட்டான்.

 

“என்னாச்சு?” ஒன்றுமே தெரியாதது போல் கேட்கும் காதலியிடமிருந்து விலகி முறைத்தவன், “அதை நான் கேட்கணும்.” என்றான்.

 

“கேளு!”

 

“என்னடி?”

 

“என்ன என்னடி!”

 

“ப்ச்! விளையாடாத மதுணி”

 

“ரொம்பப் பயந்துட்டியோ?”

 

“ஒண்ணுமே புரியல. ஒரு மாதிரி தலையெல்லாம் வலிக்குது. ரிசப்ஷனுக்கு வந்த எல்லாரும் விஐபி. அவங்களை இக்னோர் பண்ணவே முடியல. இந்த நிலைமையில நீ வேற மனுசனைப் படாதபாடு படுத்திட்ட.”

 

அவன்‌ கன்னம் பிடித்து, “சாரி” என்றவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

 

“அதெல்லாம் வேண்டாம். என்னாச்சுன்னு மட்டும் சொன்னால் போதும்.” என்றவனை விட்டு விலகியவள்,

 

“படம் பார்த்தது போதுமா?” குறும்போடு கேட்டாள்.

 

“கிளைமேக்ஸ் வரலையே அண்ணி மேடம்.”

 

“பார்த்த வரைக்கும் போதும்!”

 

“இன்டைரக்டா என்ன சொல்ல வரீங்க?”

 

“லூசு! டைரக்டா உன்னைக் கிளம்புன்னு சொல்றேன்.” என்றதும் அகம்பன் சிரிக்க, “கிரேட் இன்சல்ட்! இந்தக் கமல் உதவி உங்களுக்குத் தேவைப்படும். அப்போ கவனிச்சுக்கிறேன்.” என முறுக்கிக் கொண்டு சென்றாலும் அவன் முகத்திலும் பரம நிம்மதி.

 

“இப்பவாது சொல்லுவீங்களா மேடம்”

 

“உன்ன ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். எல்லாரும் ஒண்ணா இருக்க மாதிரியும் நான் மட்டும் தனியா இருக்க மாதிரியும் ஃபீல் ஆச்சு.”

 

நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கட்டிலில் அமர்ந்தவன், அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு, “அவ்ளோதானா? என்னமோன்னு பயந்துட்டேன்.” என்றவன் நெஞ்சோடு சேர்ந்துக் கொண்டாள்.

 

சாய்ந்தவள் முகத்தில் பல சிந்தனைகள். அவள் சொல்லியதை நம்பியதாக நடித்தவன் முகத்தில் அதைவிட அதிக சிந்தனை. பொய் சொல்கிறாள் என்பதை அவள் விழிகளை வைத்துக் கண்டு பிடித்தவன் காரணத்தைத் தேடி ஓட, ‘உன்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு தெரியல அகா…’ நினைத்தவள் கண்கள் கலங்கியது.

 

“நாளையோட எல்லா வேலையும் முடிஞ்சுது. அதுக்கப்புறம் ஃபுல் டைம் லவ் மூடு தான்.”

 

“ஹான்!”

 

“மிஸ் பண்ணதுக்கும் சேர்த்து வட்டியும் முதலுமா கொடுத்துடுறேன்.”

 

“வட்டியே போதும்!”

 

“அதை நாளைக்கு நைட்டு பார்த்துக்கலாம். இப்ப ரொம்ப டயர்டா இருக்கு.”

 

மெத்தையில் சரிந்தவனின் உடல் அசதிக்கு ஏற்றவாறு கை கால்களைப் பிடித்து விட, கண் மூடியவனுக்குச் சந்தேகம் அதிகரித்தது. தன்னவளுக்கு என்னவோ நடந்திருக்கிறது. அதை நடத்தியது யார் என்று தெரிந்து கொள்ளத் துடித்தான். அவன் நேரம், உடல் ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்தது. அவனையும் அறியாமல் தூங்கிப் போனான். அவன் உறங்கும் வரை சேவை செய்து கொண்டிருந்தவள் கண் கலங்கப் பார்த்தாள்.

 

அவன் தலை முடிகளை ஐவிரலில் கோதி நெற்றியில் முத்தமிட்டவள், “ஐ லவ் யூ!” என்று உடன் படுத்துக் கொண்டவளுக்குக் கண்ணீர் கட்டுப்படவில்லை.

 

***

 

அரை மணி நேரம் தூங்கி இருப்பான் ஆதிகேஷின் தம்பி. விடியற்காலை முகூர்த்தம் என்பதால் வேலைகளைக் கவனிக்க எழுந்தவன், அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் மதுணிகாவின் முகத்தை இரு நொடி உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். தான் உறங்கிய பின்னர் அழுததற்கான தடயம், கண்களைச் சுற்றி நிறைந்திருக்க, “ஐ ப்ராமிஸ்! இனி உன்னத் தனியா விடமாட்டேன். யாரும் உன்னக் கஷ்டப்படுத்த முடியாது. உன்னோட அழுகை எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல முடியப்போகுது.” என நெற்றியில் முத்தமிட்டு அண்ணன் கல்யாண வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.

 

இன்னும் சிறிது நேரத்தில், பிரியா மினிஸ்டர் நவரத்தினத்தின் மூத்த மருமகள் ஆகப் போகிறாள். முழு அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குச் சற்றும் சளைக்காத மாப்பிள்ளைத் தோரணையில் மணவரையில் அமர்ந்திருந்தான் ஆதிகேஷ் திவஜ். அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு மேடை ஏறியவன் அண்ணனைக் கேலி செய்து கொண்டிருந்தான்.

 

“அண்ணி வராங்கடா…” எனப் பிரியா வரும் பக்கம் கை காட்டியவன் வாய் பிளந்து நின்றான்.

 

பிரியாவுடன், மணப்பெண் தோழியாக வந்து கொண்டிருந்தாள் மதுணிகா. பச்சைநிறப் பட்டு உடுத்தி மயில் போல் நடந்து வந்தவள் மீதான பார்வையை எடுக்க முடியவில்லை அவனால். முதல் முறையாகப் பார்க்கிறான் புடைவையில். அதிலும் அவளின் ஒப்பனை ஆளை மிரட்டியது. தோளை உரசிக் கொண்டிருந்த மல்லிகையின் வாசம் தொலைவில் இருக்கும் அவன் நாசியைத் தீண்டியது.

 

தன்னவன் பார்வையில் உடல் கூச நடந்து வந்தவள், ‘அப்படிப் பார்க்காதடா’ எப்போதும் அவன் சொல்லும் வசனத்தைச் சொல்லிக் கண்களால் சிரிக்க,

 

‘முடியலடி!’ என்றவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், கழுத்தில் கை வைத்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினான்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்