Loading

தேடல் – 3

 

விடிந்து வெகுநேரமாகியும் படுக்கையில் தான் உருண்டுக் கொண்டிருந்தாள் மிளிர். எத்தனை  முயன்றும், எத்தனை முயன்றும் இமைகள் கொஞ்சமும் திறவேன் என அடம்பிடிக்க, அவற்றின் மீது பெரும் பாரங்கல்லை  வைத்ததுப் போல பாரமாய் இருந்தது. நேற்று இரவு சாப்பிட்ட தூக்க மாத்திரையின் தாக்கம் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்குமாய் இருக்கும். ‘ஒன்று..? இரண்டா..? எத்தனை உண்டாள்..?’ என இப்போது நினைவுக்கு கொண்டு வர முயன்றால் சட்டென்று பிடிபடவில்லை.

 

நீண்ட நேர முயற்சிக்கு பின், பிரிந்த இமைகளோ மீண்டும் இணை சேர அவளிடம் கெஞ்ச, அதை சமாதானப்படுத்தி எழ முயன்றவளின் எண்ணங்களை, அந்த கனவு வந்து ஆக்கிரமித்துக் கொண்டது. கனவில் என்ன கண்டாள் என்று கேட்டால், நிச்சயமாய் அதிலொரு தெளிவில்லை. தெளிவில்லாத மங்கலான காட்சிகளே நினைவில் நிழலாடுகின்றது. ஆனால், அதில் கண்ட அவனின் கண்கள், அதில் மின்னிய பச்சை நிற பாவைகள், அதில் தெரித்த கொலைவெறி, அது அவளுக்குள் உண்டாக்கிய உயிர் பயம் என அத்தனையும் இம்மி பிசகாமல் இதயத்தில் நிழலாடுகிறது. இப்போது நினைக்கையிலும் உடலில் மீண்டும் ஒரு மெல்லிய அதிர்வு உண்டாகி அடங்கியது. முயன்று அதையும் ஒதுக்கி வைத்தவள், கண்களை கசக்கிக் கொண்டு கடிகாரத்தை காண, அதுவோ காலை ஒன்பது மணி என்றது.

 

அதைக் கண்டதும் அப்போது தான் நினைவு வந்தவளாக, “என்ன மணி ஒம்பதா..? இவ்வளோ நேரமா தூங்குனோம்..? அச்சச்சோ..! பத்து மணிக்கு பூஜை இருக்கே..! யாருக்காவது பொறுப்பிருக்கா..? என்ன எழுப்ப கூடாது…” என புலம்பியபடியே அவசரமாக எழுந்தவள், கையில் கிடைத்த துண்டையும் தனக்கு தேவையானவற்றையும்  எடுத்துக் கொண்டு வேகமாய் வெளியே வந்தாள்.

 

அழகான சிறிய குருவிக்கூடு போல பாந்தமான வீடு அது. கீழ்தளத்தில் மூன்று அறைகள். நடுநாயகமாக ஒரு கூடம்… கொஞ்சம் பெரியதாய் சமையலறை. வலதுபுற ஓரத்தில் ஒரு சிறு பூஜையறை. மேல்தளத்தில் ஒரே ஒரு படுக்கறை என அம்சமாய் அமைந்திருந்தது இல்லம்.

 

கீழ்தளத்தில் அமைந்திருந்த அத்தனை அறைகளுக்குமே பொதுவானதாக ஒரே ஒரு குளியலறை மட்டுமே. மேல் தளத்தில் இருந்த அறையில் இணைந்தது போல குளியலறை இருந்தாலும் அதை விருந்தினருக்கு என ஒதுக்கி இருந்தனர். பெரும்பாலும் வீட்டிலிருக்கும் யாரும் அதை பயன்படுத்துவதில்லை.

 

வெளியே வந்து பார்வையை சுழற்றியவளுக்கு வீட்டில் யாரும் இருப்பது போல தெரியவில்லை. குளியலறையில் இருந்து மட்டும் தண்ணீர் சத்தம் கேட்க, அதற்கு வெளியே நின்று கதவை தட்டினாள்.

 

“ஏய்..! குட்டச்சி..! என்ன அதுக்குள்ள எழுந்துட்ட..? பொழுது விடிஞ்சுடுச்சா உனக்கு… ஆனாலும் கடைய திறக்கற முதல் நாள் ஆச்சேனு நீ இத்தன சீக்கிரம் எழுந்துருக்க வேண்டாம்…” உள்ளிருந்தபடியே அவன் எள்ளல் குரலில் பேச,

 

“டேய்… என்ன நக்கலா… வந்தேன் தூக்கிப் போட்டு மிதிச்சுடுவேன்… இவ்வளவு நேரம் நீ என்னடா பண்ண வெண்ண… முன்னடியே எழுந்து குளிச்சு கிளம்பி போய் தொலைக்க வேண்டியது தான… வந்துட்டான் பெரிய ஒழுங்காட்டம் பேசிட்டு… சீக்கரம் வெளிய வாடா… லேட்டாகுது எனக்கு…” வெளியில் கதவை தட்டியபடியே கத்திக் கொண்டிருந்தாள் அவள்.

 

“யாரு..? நீ… அதுவும் என்ன… தூக்கிப் போட்டு மிதிப்ப… என் இடுப்பு உயரம் இருந்துட்டு பேச்ச பாரு பேச்ச… இன்னும் அரைமணி நேரம் ஆகும் நான் வர… உன்னால முடிஞ்சத பண்ணு போ…” என்றான் அவன் உள்ளிருந்தே நக்கலாய்.

 

“டேய் இப்போ வெளிய வர போறீயா..? இல்லையா..?  லேட்டாகுது எனக்கு… நான் கிளம்பனும்…” என்றாள் மிளிர் அவசர குரலில்.

 

“ஏன்… மேடம் இவ்வளவு நேரம் தூங்கனப்போ லேட் ஆகறது தெரியலையோ..?”

 

“தெரியல… இப்ப உன்னால வெளிய வர முடியுமா..? முடியாதா..?”

 

“முடியாது போடி… மேல இருக்க ரூம்ல போய் குளிக்க வேண்டியது தான… படியேற சோம்பேறி தனம்… அதுக்கு மேடம் குடுக்கற பில்டப்ப பாரு… அவ்வளவு அவசரம்னா அங்க போய் குளிச்சுட்டு கிளம்பு… பே…” என்றவன் பைப்பை திறந்துவிட்டு சத்தமாக பாடியபடி தனது குளியலை தொடர, வேறு வழியில்லாது கதவை ஓங்கி ஒரு முறை உதைத்தவள், அவனை திட்டியபடியே கோபத்துடன் மேலே இருந்த அறைக்கு குளிக்கச் சென்றாள்.

 

அவள் குளித்து தயாராகி வெளியே வந்த சமயம்,  இனியன் தயாராகி உணவு உண்டு கொண்டிருந்தான். அவள் பதுங்கி பதுங்கி வருவதைப் பார்த்தாவது அவன் சுதாரித்திருக்க வேண்டும். அதைக் கண்டாலும் பெரிதாக கவனித்தில் பதிக்காதவன், உண்டுக் கொண்டிருந்த பூரியிலேயே தனது முழு கவனத்தை பதித்திருக்க, அது அவளுக்கு வசதியாகிப் போனது.

 

சிவப்பு மை கலந்த நீரை மறைத்து மறைத்து எடுத்து வந்தவள், அதை அவன் தலையில் கொட்டி கவிழ்க்க, தலையோடு சேர்த்து அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையும் சிவந்து போனது.

 

“ஏய்… குள்ள கத்திரிக்கா… என்னடி பண்ணி வச்சுருக்க… இது என்னோட பேவரேட் சர்ட்னு தெரியும் தானே உனக்கு..? உன்னோட கடை திறக்கற நாள்னு இன்னைக்கு ஸ்பெஷலா இத போட்டேன் பாரு… என்ன சொல்லனும்… இன்னைக்கு இருக்குடி உனக்கு…” என்றவன் அவளை தாவிப் பிடிக்க முயல, லாவகமாக அவனிடமிருந்து தப்பித்தவள், “எனக்கா பாத்ரூம விட மாட்டற… இப்ப திரும்ப ஒரு தடவ குளி செல்லம்… அப்போ தான் உனக்கு புத்தி வரும்…” என்றபடியே சிட்டாய் வாசலுக்கு பறந்திருந்தாள்.

 

“ஏய்… இருடி சட்டைய மாத்திட்டு நானும் வரேன்…”

 

“நீ இன்னொருக்கா குளிச்சு சட்ட போட்டு… சீவி சிங்காரிச்சு பொறுமையா கிளம்பி வா தங்கம்… அக்காவுக்கு லேட் ஆகுதுல… நான் இப்பவே கிளம்புறேன்…” என்றபடியே அவள் தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட, “ஏய் கொஞ்சம் இருடீ… அம்மா… உன்ன சாப்பிட்டு தான் வர சொன்னாங்க… சாப்பிடாம போன அடி வாங்குவ…” என்ற வசனத்தை அவன் தனியே காற்றோடு தான் பேச வேண்டி இருந்தது.

 

தாமதமாகி இருந்தாலும் மித வேகத்தில்தான் சென்றாள் அவள். உயிரை விட எதுவும் முக்கியமில்லை என்ற ஞானோதயம் சாலையோர புளிய மரத்தடியில் தான் பல ஞானிகளுக்கு கிடைக்கிறது. என்ன செய்ய! அப்படிதான், அந்த விபத்தும் அவளை பெரிதும் மாற்றி இருந்தது.

 

அவள் வளைவு ஒன்றில் திரும்ப, ஒன்றன் பின் ஒன்றாக அதிவேகமாக சென்ற நான்கு பைக்களில் ஒன்று அவள் வாகனத்தை உரசி சென்றது. நல்ல வேளையாக அவள் மெதுவாகவே சென்றதால் தடுமாறினாலும் கிழே விழாமல் சமாளித்துக் கொண்டாள். காற்றை கிழித்து சீறிப் பாய்ந்த அந்த வாகன ஓட்டிகளின் மீது அதீத கோபம் வர, அவர்களை திட்டியபடியே நிமிர்ந்தவளுக்கு பார்வை வட்டத்திற்குள் முதலில் விழுந்தது இருபதடி தூரத்தில் தனது ரேஸ் பைக்கை நிறுத்திவிட்டு, அதில் அமர்ந்த படியே, தலையை மட்டும் திருப்பி ஹெல்மெட்டின் கண்ணாடியை இறக்கி இவளையே பார்த்துக் கொண்டிருந்த அவன் தான். அவனின் ஆழ்ந்த நில நிற ஜெர்கினே உறுதிபடுத்தியது, இவளை இடித்துச் சென்றது அவன் தானென.

 

ஹெல்மெட்டை கழட்டியவன் அங்கிருந்தபடியே அவள் விழுந்து விட்டாளா, அல்லது எங்கேனும் காயம் பட்டிருக்கிறதா, காயம் பட்ட வலிதனை அவள் முகம் பிரதிபலிக்கறதா என அவளையே ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சுதாரித்து நின்று விடுவே நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் கண்களை இடுக்கி ஆழ்ந்து அவளை ஒருமுறை பார்த்துவிட்டு விறுட்டென கிளம்பிவிட்டான்.

 

ஆனால் திட்டிக்கொண்டே நிமிர்ந்து பார்த்த மிளிர்தான் அப்படியே உறைந்து போனாள். அந்தக் கண்கள்..! பச்சை மரகத கண்கள்..! அவள் கனவில் பார்த்த அதே கண்கள். எத்தனை தொலைவில் இருந்தால் தான் என்ன? அதை அவளால் அடையாளம் காண முடியாதா… என்ன..? அவள் அதிர்ந்து நின்றதென்னவோ சில நொடிகளே. அடுத்த நொடி அவனை வேகமாக பின்தொடர தொடங்கியிருந்தாள். ‘நேற்று கனவில் வந்த கண்கள் அது தானென்றாலும் அந்த அவன் இவன் தானா..? அப்படியே இருந்தாலும் தனக்கு யார் அவன்..?  தான் ஏன் அவனை பின்தொடர வேண்டும்..?’ என எதைப் பற்றியும் சிந்தனையின்றி, அவனின் வாகனம் சென்ற திசையில் விரைந்தது இவளின் வாகனம். ஏதோ ஒன்று அவனை பின் தொடர சொல்லி அவளை ஊக்கியது.

 

அவளின் சதாரண ஸ்கூட்டியால், அவனின் விலையுயர்ந்த பிரத்தியேகமாக ரேஸ்க்கு என்றே வடிவமைக்கபட்ட வாகனத்தை விரட்டி பிடிக்க முடியுமா என்ன..? அதி விரைவாக வந்தவள் ஒரு திருப்பத்தில் எந்த திசையில் செல்வது என தெரியாமல் திருதிருத்து நடுவீதியில் நின்று விட, அவளை உரசியபடி வந்து நின்றது காவல்துறை வாகனம் ஒன்று.

 

காவல் துறை வாகனத்தில் இருந்து ஸ்டைலாக குதித்து இறங்கியவன், “ஹாலோ மேடம்… என்ன பிளைட் ஓட்டறதா நினைப்பா… அப்படியே பறக்கறீங்க…” என்றபடியே அவள் முன் வந்து நின்றான்.

 

‘ரோஸ் ஓட்டுறவன எல்லாம் விட்டுடுங்க… சாதாரண ஸ்கூட்டிய கொஞ்சம் ஸ்பீடா ஓட்டுன என்ன வந்து புடிங்க…’ என எண்ணியவள் அவனை பரிதாபமாக பார்த்து வைத்தாள்.

 

“ஹலோ… ஹெல்மெட்ட கழட்டுங்கனு தனியா வேற சொல்லனுமா..?” என அவன் சிடுசிடுக்க, எத்தனை மெல்லமாய் முடியுமோ அத்தனை மெல்லமாய் அதை கழட்டினாள் அவள்.

 

“சாரி சார்… தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது… அதான் ஸ்பீடா போய் புடிச்சுடலானு…” என்றவளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 

பிறை நெற்றி… அதில் தவழ்ந்தாடும் கற்றை கூந்தல்… நிமிடத்திற்கு ஒரு முறை அதை ஒதுக்கி காதுக்குள் நுழைக்க முயலும் நகப்பூச்சு பூசிய அவளின் வெண்டை பிஞ்சு விரல்கள்… நெற்றியின் மத்தியில் ஒட்டிய மிளகளவு பொட்டு… திருத்திய புருவம்… மை தீட்டிய மான் விழிகள்… கூர் நாசிதான் என்றாலும் அதன் குறைவான நீளம் அதை குட்டை  மூக்காகவே காட்டியது… சிவந்த அதரங்களில் லிப்கிளாஸ் போட்டிருப்பாள் போல… தகதகவென்று இளங்காலை சூரியனுக்கு போட்டியாக மிளிர்ந்ததுக் கொண்டிருந்தது அது… கொழுத்த கன்னங்கள்… மாநிறத்திற்கும் சற்றே குறைவான நிறம்… அவள் போட்டிருந்த பவுன்டேஷன் அந்த நிறத்தை இன்னும் எடுத்துக் காட்டியது… இறுதியாக வலது தாடையையும் காது மடலையும் இணைக்கும் இடத்தில் இருந்த மச்சம்… பக்கவாட்டு தோற்றத்தில் அவளை இன்னும் அழகாய் காட்டியது… தோள் வரை புரண்ட அடர்ந்த கூந்தல்… மத்தியில் ஒரு சிறு கிளிப்பால் அதை அடக்க முயன்று தோற்ற அவள் மடத்தனம்… அதையும் மீறி அது காற்றோடு கதை பேசிய விதம்… இன்னும் இன்னும் அவளை அணு அணுவாய் ரசித்து அளவெடுத்துக் கொண்டிருந்தான் அவன்.

 

ஆரஞ்சு வண்ண சுடிதார் பாட்டமும் துப்பட்டாவும், ரோஸ் நிற டாப்பும் அவளின் நிறத்தை இன்னும் அழகாக்கி காட்டியது. பனை ஓலைப் போல அடுக்கடுக்காய் போட்டிருந்த ஸ்டெப் துப்பட்டா கனகச்சிதமாய் அவள் மார்பை தழுவி நின்றது. அத்தனை நேர்த்தியாக அவள் அணிந்திருந்த பாங்கு இன்னொரு முறை பார்க்க தூண்டியது எனவும் சொல்லலாம்.

 

அவன் பார்வை அவளை அளவெடுப்பதை உணர்ந்தவள் எரிச்சலாக, “ஹலோ சார்… பாத்து முடிச்சாச்சுனா சொல்லுங்க… எனக்கு நிறைய வேலை இருக்கு… நான் கிளம்பனும்…” என்றாள்.

 

அதில் சுயம் திரும்பியவன், “பரவாயில்லை… இப்ப எல்லாம் ஹெல்மெட் போடறீங்க போல…” என்றான்.

 

அவன் மீது எரிச்சலில் இருந்தவள் அவனின் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க தவறிப்போனாள், “ஏன் ஹெல்மெட் போடக் கூடாதுனு புதுசா எதுவும் சட்டம் போட்டு இருக்கீங்களா என்ன..?” என்றாள் எரிச்சல் சற்றும் குறையாத குரலில்.

 

“இனிமே அத பத்தி யோசிக்கறோம்… இப்போ நீங்க ஸ்பீடா வந்ததுக்கு…”

 

“அதான் சொல்லறேனே சார்… தெரிஞ்சவங்க வந்தாங்க… அதான் கொஞ்சம் வேகமாக வந்து அவங்கள பிடிக்க ட்ரை பண்ணுனேனு…”

 

“இவ்வளவு ஸ்பீடா போனா முன்னால போறவங்கள புடிக்க முடியாது… எமனோட எருமைய வேணா புடிக்கலாம்…” அவன் எள்ளல் குரலில் மொழிய,

 

“இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை… இதானே… இதுக்கு தானே இவ்வளவு பேசறீங்க…” என்றவள் அவன் எதிர்பார்க்க சமயத்தில் அவன் கரத்தை பற்றி இருநூறு ரூபாய் நாள் ஒன்றினை அவன் கரத்தில் திணித்துவிட்டு, அவன் சுதாரிப்பதற்குள் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

 

‘அடிப்பாவி…’ என்ற எண்ணத்துடன் அதிர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தன்னையும் அறியாமல் சிறு புன்னகை வந்து இதழ் கடையோரம் அமர்ந்துக் கொண்டது.

 

‘முன்ன விட கொஞ்சம் குண்டாகிட்டா… மத்தபடி அப்படியே தான் இருக்கா… பழசெல்லாம் நியாபகம் வந்திருக்குமா..? அப்போ என்னையும் நியாபகம் வந்து இருக்கும் தானே… ஆனா அவ பேசனத பாத்தா என்ன தெரிஞ்ச மாதிரியே இல்லையே..? ஒரு வேளா இருட்டுல என்ன பாத்ததால அடையாளம் தெரியலையோ..?’ அவனுள் ஆயிரம் கேள்விகள் நகர்வலம் சென்றுக் கொண்டிருக்க, இமைக்காது அவள் சென்ற திசையையேப் பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.

 

பணத்தை திணிப்பதற்காக அவனின் கையை அவள் பற்றிய அந்த நொடி, முதல் முறை உயிர் போராட்டத்தில் அவனின் கையைப் பற்றிய போது உணர்ந்த அதே உணர்வு அவனை தாக்கி உள்ளுக்குள் உறைய வைத்திருந்தது.  அதனாலேயே அவனால் சட்டென்று எதிர்வினையாற்ற முடியவில்லை.

 

கிட்டதட்ட இரண்டு வருடங்கள் இருக்குமா? அன்றைய இரவிற்கு பிறகு அவளை அவன் எங்கும் பார்க்கவுமில்லை! தொடர்புக் கொள்ளவுமில்லை! அவள் பிழைத்துவிட்டதோடு தன் கடமை முடிந்துவிட்டதென தான் நினைத்திருந்தான் அவன். ஏன் ஆரம்ப சில நாட்களில் அவளின் பெயரும் முகமும் அந்த தீண்டலும் அவனின் நினைவை பெரிதாய் ஆக்கிரமித்திருந்தால் கொஞ்சமாய் கொஞ்சமாய் மொத்தமாய் அவளை மறந்தல்லவா போய் இருந்தான். இல்லை, அப்படி தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், இத்தனை வேகமாக தலைகவசம் அணிந்து தூரத்தில் அவள் செல்லும் போதே அவளை அடையாளம் கண்டுக் கொண்டது எது? மறந்து விட்டானென்றால் இது எப்படி சாத்தியம். அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பதறிக் கொண்டு அவனை பின்தொடர வலியுறுத்தியது எது..? எல்லாவற்றிற்கும் மேலாக அவளின் ஒரு நொடி தீண்டல் அவனின் உயிர் வரை தீண்டி சிலிர்க்க வைக்கிறதென்றால், ஏன்..?

 

அவனை இதுவரை இப்படி பார்த்திராத வாகன ஓட்டுனரோ அதிசயமாக பார்த்து வைத்தார். எத்தனை வற்புறுத்தினாலும் லஞ்சம் வாங்கதவன், அதே சமயம் அடுத்தவர் விசயத்திலும் மூக்கை நுழைக்காதவன். நியாயமாக பார்த்தால், அந்த பெண் இருநூறு ரூபாய் கொடுத்ததற்கு கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவனோ புன்சிரிப்போடும் யோசனையோடும் அவள் சென்று மறைந்த திசையையே பார்த்தபடி நின்றிருந்தை கண்டால் வியப்பாக தானே இருக்கும்.

 

“சார் லேட்டாகுது… கமிஷ்னர் ஆபிஸ் போகனும்… போகலாமா சார்…” என ஓட்டுனர் கேட்டதும் தான் தனது சிந்தனையில் இருந்து வெளிவந்தான் அக்னி.

 

“ஹான்… போகலாம்…” என்று அவன் ஜீப்பில் ஏறி அமர, அவரும் வாகனத்தை எடுத்தார்.

 

என்ன தான் மனதுக்கு கடிவாளம் போட்டு அவனை பற்றிய சிந்தனைகளை ஒதுக்கி வைக்க முயன்றாளும் முடியவில்லை மிளிரால். அவனின் பளபளக்கும் அந்த பச்சை நிற கண்களே அவள் சிந்தனையில் தோன்றி இம்சையை கூட்டியது. எல்லாவற்றிற்கும் மேலாக நின்று இவளுக்கு எதுவும் ஆகிவிட்டதா என ஆராய்ந்த அந்த விழிகள், எதுவும் ஆகவில்லை என்றதும் அந்த விழிகளில் பரவிய நிம்மதி என மொத்தமாய் அந்த விழிகளை சுற்றி தான் அவளின் எண்ணங்கள் வளைய வந்துக் கொண்டிருந்தது. அத்தனை தூரத்திலிருந்தும் எப்படி ஒருவனால் விழிகளின் வழியே உணர்வுகளை இன்னொருவருக்கு கடத்த முடியும். ஆனால் அவனால் முடிந்திருந்தது. வாய்மொழியே தேவையின்றி விழி வழியை தனது உணர்வுகளை அவளுள் துல்லியமாய் கடத்தி இருந்தான். அவனின் பார்வையின் பொருளை அவளாலும் எப்படி உணர முடிந்தது.

 

‘சே… மிஸ் பண்ணிட்டேன்… கொஞ்சம் ட்ரை பண்ணி இருந்தா அவன புடிச்சு இருக்கலாம்…’ என நினைத்தவளுக்கு அது சாத்தியமில்லை என்பதும் புரிந்தது.

 

‘அவனை பிடித்து இருந்தால் மட்டும் அவனை உனக்கு யாரென்று தெரியுமா..?’ என மனசாட்சி கேள்வி எழுப்ப,

 

‘அவனுக்கு என்ன தெரிஞ்சு இருக்கலாம் இல்ல… ஒரு வேள அவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவனா கூட இருக்கலாம்… அதான் அவன் கண்ணு எனக்கு அடிக்கடி கனவுல வருதோ என்னவோ… ஒரு வேள நாங்க லவ்வர இருந்து இருந்தா…’ என்றது அவளின் மற்றொரு மனம்.

 

‘லவ்வரா இருந்து இருந்தா இரண்டு வருஷமா அவன் ஏன் உன்ன பாக்க வராம இருக்க போறான்…’ என்ற மனசாட்சிக்கு,

 

‘ஒரு வேளை அந்த ஆக்சிடெண்ட்ல நான் இறந்துட்டதா அவன் நினைச்சு இருக்கலாம்…’ என்றது அவளின் மற்றொரு மனம்.

 

அவள் மனம் முழுவதும் அந்த பச்சை நிற கண் கொண்டவனை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க, அந்த கண்களின் சொந்தக்காரனோ ரேசில் தான் வென்றதை, அந்த காலை வேளையிலேயே மது புட்டிகளோடு கொண்டாடிக் கொண்டிருந்தான்.

 

 – தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்