
அத்தியாயம் 34
[Ebike என்பது சேவை உள்ள நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். நாம் அவர்களின் பயன்பாட்டைத் தரவிறக்கம் செய்து, அதில் தேவையான நம் தகவல்களை பதிந்து, வாடகைப் பணம் செலுத்தி(rental pack), அருகே இருக்கும் வாகனத்தைக் கண்டறிந்துக் கொள்ளலாம். பின் விரைவான பதில் குறியீடு (QR code scan)மூலம் வாகனத்தைத் திறந்து நம் இருப்பிடம் சென்றதும், இனி நீ யாரோ நான் யாரோ என்று இறங்கிவிட்டால் நம் வாடகையிலிருந்து கழித்துக் கொள்வார்கள். பதினாறு வயது நிரம்பிய பயனர் எவரும் இவ்வாகன பயன்பாட்டை உபயோகிக்கலாம். இப்போதே (2023-24 இது நான் இந்தக் கதையை எழுதின வருடம்.) பெங்களூரில் இந்த சேவைகள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன. E-bike பற்றி மேலும் அறிய கூகுள் செய்க!]
அக்னிஸ்வரூபன் நினைத்த அனைத்தும் சுமூகமாக நடந்தேற, சந்தனாவுடனான அவன் உறவு மட்டும் மழையில் நனைந்த நாய்க்குட்டியைப் போல் நடுங்கிக் கொண்டிருந்தது.
நேற்றிரவு அம்மா, அப்பா, பாட்டியின் மனநிலை நாளை எப்படியிருக்குமோ என்றெண்ணியபடி மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவன், அவனுக்கென ஒதுக்கியிருந்த அறைக்குச் செல்லும்போது ஒரு அறையில் மட்டும் விளக்கெரிவதைக் கண்டு ஏதேச்சையாக ஜன்னலில் விழி திருப்ப, சந்தனா தூங்காமல் ஒரு கையால் மடியில் தலையணையைக் கட்டிக்கொண்டு, மறு கையால் விரித்து விட்டிருந்த கூந்தலைக் கோதியபடி நிச்சலனமான பார்வையுடன் அமர்ந்திருப்பது தெரிந்தது.
பார்த்தவன் அனைவரையும் விட இவளைச் சமாளிப்பதுதான் கடினம் என்று அப்போதே அனுமானித்தான். இதோ காலையிலிருந்து அவளும் அப்படித்தான் அவனை ஏறிட்டும் பாராமல் இருக்கிறாள்.
உண்மையில் சந்தனா அக்னியை எதிர்க்கொள்ள நிரம்பவே தயங்கினாள். உண்மைத் தெரிந்ததிலிருந்தே அவள் தூக்கம் பறிபோயிற்று. இன்று காலையிலும் அவனை எதிர்க்கொள்ளத் தயங்கியே வெளியில் வராமல் இருந்தவள், பின் தாமதமானாலும் அவளின் அத்தைக்காக வரவே செய்தாள்.
முன்மாலையில் அனைத்தும், அனைவரின் மனங்களும் சமாதானமான பின்னர், முன்பு போலவே நிரஞ்சனா ஆன்ட்டி தன் அத்தையிடம் நட்பு பாராட்டுவதை ஆச்சரியமாகப் பார்த்தாள். நிம்மதியாக இருந்தது.
ஆனால் முன் போலல்லாது மயிலிறகு வருடலுடன், உரிமையாக தன் உடலெங்கும் வருடும் அக்னியின் ரகசிய காதல் பார்வைகள், விடாது தொடரும் பூ வாசனையாக ஒருவித சித்ரவதையைத் தந்தது. விளைவு மீண்டும் அனுவை நிரஞ்சனா, அபிராமியிடம் விட்டுவிட்டு அறைக்குள் அடைந்துகொண்டாள்.
தனிமை கிடைத்த போதெல்லாம் தன் உள்ளத்தினை, அது தரும் சலசலப்புகளை அலசிக்கொண்டே இருந்தாள். அக்னியைப் பிடிக்காமல் இல்லை. ஆனால் அவனை அனுவைப் போல் சட்டென சஞ்சுவாக, தன் சஞ்சுத்தானாக ஏற்க முடியவில்லை.
நாம் நியாயமாக ஆசைப்படும் ஓர் விடயத்தை இந்த பிரபஞ்சம் என்றேனும் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுமாமே! உருவமில்லா ஒருவனை இவள் உள்ளத்தில் உருப்போட்டு வைத்திருக்க, அந்த ஒருவனை முழு உருவத்துடன் இன்று இவள் முன் நிற்க வைத்திருப்பதும் இப்பிரபஞ்சத்தின் மகிமைதானோ!
ஆனால் அவளுக்கு அண்ணன், தம்பி இருவரின் மீதும் அளவில்லா கோபம். அன்று அக்னிஸ்வரூப் எப்படி ஒன்றுமே தெரியாதவன் போல் தன்னை வைத்து, ‘உங்கத்தை’, ‘உங்க தாத்தா’ என்று கதைக் கேட்டான்! தன்னைக் கிறுக்கச்சி என்று நினைத்து சிரித்திருப்பானல்லவா?
இந்த அர்ஜூன் நீர்யானை… அவனுக்கு முன்பே விடயம் தெரிந்திருந்தும் கூட தன்னிடம் ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே! பார்ட்னர் ஆஃப் தி க்ரைம், பெஸ்ட்டீ என்று சொல்லித் திரிந்ததெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா?
உண்மையில் அவன் தன்னை, தன்னுணர்வுகளை மதிக்கவே இல்லை. அதனால்தான் உண்மையைச் சொல்லாமலேயே ஜோஜூவைக் காணும் சாக்கில் தன்னை அக்னியுடன் அனுப்பியிருக்கிறான். அவனின் நோக்கம் தெரிந்த பின்னர் இந்த விடயத்தில் அவளால் அர்ஜூனை மன்னிக்கவே முடியவில்லை. அவனின் அண்ணனாகவே இருக்கட்டுமே! அவனும்தான் நல்லவனாக, வல்லவனாகவே இருக்கட்டுமே! அதற்காக தன்னை அவனுடன் அனுப்புவது தகுமா?
தம்பி சொல்லித் தந்ததைப் போல் அண்ணன்காரனும் நன்றாக தன் வாயைப் பிடுங்கியிருக்கிறான். தானும் அம்மாஞ்சி அசடு போல் தன் காதல் முதற்கொண்டு எல்லாவற்றையும் உளறி கொட்டியாயிற்று! அண்ணனும் தம்பியும் சேர்ந்து இவளை நன்றாக ஏமாற்றிவிட்டதாகவே நினைத்தாள். இனி ஜென்மத்துக்கும் அர்ஜூனுடன் பேச போவதில்லை என்றும் முடிவெடுத்துக்கொண்டாள்.
அக்னியைப் பற்றி குறை படித்த அதே நேரத்தில் அவனின் நல்ல குணங்களையும் அவனின் தற்போதைய நிலைப்பாட்டையும் அலசியது அவளுள்ளம்.
தாத்தா, குழந்தைப் பருவத்தில் அவனைக் காயப்படுத்தியுள்ளார் என்பது அன்று அவனிடம் அவர் பேசியதிலிருந்து புரிந்தது. அதற்காக அவன் தாத்தாவின் தற்போதைய நிலையைக் கண்டு மகிழவோ, விட்டேற்றியாகவோ இருக்கவில்லை. அதேநேரம் அவரைக் கண்டு வருத்தம் கொள்ளாததிலிருந்து அவன் அவரை நிச்சயம் மன்னிக்கவுமில்லை என மிகச் சரியாக கணித்தாள். அவரின் நிம்மதிக்காக வெறும் வாய் வார்த்தையாக தான் கோபமில்லை என்று சொன்னான். அதனால்தானே இவளும் ஏமாந்துபோனாள்! அவர் இவனின் காலில் விழ எத்தனித்த போது கூட அசையாமல் நின்றானே!
ஆனால் இன்று அத்தை மன்னிப்பை வேண்டும்போது, அந்த வார்த்தையைக் கூட சொல்லவிடாமல், ‘என்னைப் பாவி ஆக்காதே!’ என எத்துணைக் கோபம் கொண்டான்! அதன்மூலம் அத்தை மீது அவனுக்கிருக்கும் ஆழமான பந்தத்தையும் பாசத்தையும் உணர முடிந்தது.
மேலும் அன்று சரகஸி என்றதும் சிகரெட்டைத் தேடியது, மாமா அத்தையை அடித்துவிட்டார் என்றதும் கோபம் கொண்டது எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவிற்கு வந்தது.
அதேபோல் ஐபாகோவில் அவன் இவளிடம் கோபம் கொண்டதும் நினைவு வந்தது. அன்று அவன் காதலை இவள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தன்னை அத்தனைக்கு திட்டியதாக நினைத்தாள். ஆனால் அப்படியில்லை. அவன்தான் சஞ்சு என்று தெரிந்தும், சஞ்சுவைத் தான் இவள் கணவனாக நினைக்கிறேன் என்ற பின்னரும், அவன் தனக்காக, தன்மேல் உள்ள அக்கறையினால் பேசியிருக்கிறான் என்று புரிந்தது.
நியாயவானாக இருக்கிறான். அத்துடன் இப்போது தன் அத்தை, மாமாவை மறக்காமலும் மறுக்காமலும், தன்னுடனே வைத்துக்கொள்ள உத்தேசித்திருப்பதிலும், ஏற்கனவே அவன் மேலிருந்த மதிப்பும் மரியாதையும் இப்போது பன்மடங்காக அதிகரித்திருக்கிறது.
ஆனால் காதல்?
தன் உள்ளம் கேட்கும் கேள்விக்கு சரியா தவறா எழுத தெரியாமல் விழித்தாள் சந்தனமாரி. உண்மையில் அக்னியின் மேல் தனக்கு தோன்றிய உணர்வினைக் ‘க்ரஷ்’ என்றுதான் நினைத்திருந்தாள். இப்போதும் அப்படியே!
எப்படி சிந்தித்தாலும் மனதளவில் காதல் என்ற ஆழமான உணர்விற்கான இடத்தினை, அவள் மனம் அவளின் சஞ்சுத்தானிற்கு மட்டுமே கொடுக்கிறது! அதே மனம் அக்னியை சஞ்சுத்தானாக ஏற்க முற்றிலும் மறுக்கிறது. இவ்வித சிக்கலான உணர்வு இழைகளால், அவள் அக்னியை எதிர்க்கொள்ளத் தயங்குகிறாள்.
காதல் நிர்பந்தத்திற்கு எதிரியல்லவா?
ஆக அவள் அவளின் மனதினை அக்னியை ஏற்கச் சொல்லி நிர்பந்திக்க விரும்பவில்லை. மேலும் எந்தத் திருப்பமும் உடனடியாக நடந்துவிடாதே! அதிலும் பெண்மனம் எப்போது, எங்கே, எந்த கணத்தில் திருப்பத்தை ஏற்படுத்துமென்பதைக் கணிக்கும் மதியூகி இன்னும் இப்புவியில் அவதரிக்கவில்லை!
மறுநாள் காலையில் எழுந்தவுடனேயே குளித்து, அவள் வீட்டிற்கு புறப்பட ஆயத்தமாகிவிட்டாள். அனுவின் அறைக் கதவைத் தட்டிவிட்டு பாஸ்கரனின் குரல் கேட்டு உள்ளே நுழைந்தாள்.
இரவு உடையை விடுத்து லாங் ஸ்கர்ட், டீ-ஷர்ட், குதிரை வால் என இருந்தவளைப் பார்த்த பாஸ்கரன் கேட்டான். “வெளியே கிளம்பிட்டியாடா?”
“இன்னிக்கு அம்மா கூட இருந்துட்டு அப்டியே நைட் பேங்களூர் கிளம்பறேன் மாமா.” எனத் துண்டில் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்த அத்தையைப் பார்த்தவாறு பதிலளிக்க, அவர்கள் இருவரும் அரைநிமிடம் அமைதி காத்தனர்.
நேற்றே மருமகளின் ஒதுக்கம் புரிந்திருந்ததால், பாஸ்கரன் அனுவிடம் சொல்லியிருந்தான். “சனாவை எப்பவும் எதுக்காகவும் வற்புறுத்தக் கூடாது அனு. நம்மளைப் போல அவளும் சடனா எல்லாத்தையும் ஏத்துக்கணும்னு அவசியமில்லை.”
அவளுக்கும் மருமகளின் மனநிலை புரிந்ததால் சரியென்றிருந்தாள். ஆனால் இப்போது சந்தனா ஒரேயடியாக தங்களை வெட்டிவிட்டு போவதைப் போன்ற மாயத் தோற்றம் ஏற்பட, அவள் மனம் முரண்டு பிடித்தது. “உங்க மாமா இங்கே எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வர எப்டியும் பத்து நாளுக்கு மேல ஆகும்ன்னு சொல்றார். அங்கேயும் வீடு ரெடியாக டென் டேஸ் எடுக்கும்ன்னு சஞ்சு சொல்றான். நீ அவ்ளோ நாள் இருக்க வேணாம். ஆனா இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு லீவை எக்ஸ்டென்ட் பண்ணிட்டு இங்கேயே இரேன்டீ!”
அருகிருந்த மேசையை மும்முரமாக நகத்தால் கீறியபடி சின்னக் குரலில் சொன்னாள் இவள். “அம்மா கிட்ட இன்னிக்கு வர்றேன்னு சொல்லிருந்தேன் அத்தை. ஃபர்தர்மோர், என் ஃப்ரெண்டு ஆலிஸ் இல்ல… அவ நாளைக்கு பேங்களூர்ல புது கம்பெனில ஜாய்ன் பண்றா! இன்னிக்கு நைட் தனியா கிளம்பறதால துணைக்கு வர முடியுமான்னு கேட்டா! நானும் சரி சொல்லி டிக்கெட் புக் பண்ண சொல்லிட்டேன்.”
சின்னவள் சுற்றும் பூச்சரத்தின் வாசனைப் பெரியவர்களுக்கு புலப்படாமல் போகுமா என்ன? பாஸ்கரன் மனைவியிடம் அனுமதி கொடுக்குமாறு கண்ணசைக்க, அனு, “சரி பத்திரமா போயிட்டு வா! ஆனா இனி நீ அங்கே தனியா தங்க வேணாம். அத்தை அங்கே வந்ததும் என் கூட தான் இருக்கணும் என்ன?” என்று சொல்ல,
திக்கென்று அதிர்ந்து போய் நிமிர்ந்தவள் படபடத்தாள். “நான்… நான்… எதுக்கு அத்தை? ஆஃபீஸ் போறதுக்கு இப்போ இருக்கற வீடுதான் பக்கம்.”
மருமகளின் பதற்றத்தில் மனைவியை முறைத்தான் பாஸ்கரன். “சரிடா! எல்லாம் அங்கே வந்ததும் பார்த்துக்கலாம். இப்போ எப்டி போற? அஜூ வர்றானா?”
“இல்… இல்லை மாமா! நானே தான்…”
“ஏன் நீயே போகணும்? அவன் எங்கே?” எனக் கேட்டபடி அனு வெளியேற போக,
“இல்லை அத்தை. நான் கிளம்பறது அவனுக்கு தெரியாது.” என முகம் பார்க்காமல் சொல்லும் மருமகளை இருவரும் திகைப்புடனே பார்த்தனர்.
இன்று எத்தனை மூச்சுக்கள் எடுத்தேனென அர்ஜூனிடம் சொல்பவள், இப்போது அவனிடம் சொல்லாமலேயே கிளம்புகிறாளாம்! இருவருக்குமிடையே சண்டை வருவது அரிது. இதுவரை அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தாலும் நீடித்ததில்லை; இப்படி முறுக்கி நின்றதுமில்லை. ஆனால் இப்போது மருமகளின் முகத் திருப்பலில் கவலை கொண்டாள் அனு.
“ஏண்டீ?” என்ற கூவலில் தன் வியப்பை வெளிப்படுத்த,
“நான் ஈ-பைக்ல (e-bike) போறேன் அத்தை. சொன்னா விடமாட்டான். அதான்…” என்று இழுத்தாள் அவள்.
“ஈ-பைக்ல போக வேண்டிய அவசியம் என்ன? என்ன சண்டை ரெண்டு பேருக்கும்?” பெரியவள் விசாரணை மேற்கொள்ள,
“அனு!” என மனைவியைக் கண்டிப்புடன் அழைத்தவன், மருமகளிடம், “நீ வா, மாமா கூட்டிட்டு போறேன்.” என்று கார்ச் சாவியை எடுக்க,
“ரெண்டு பேரும் இருங்க. காஃபி குடிச்சிட்டு கிளம்பலாம்.” என்ற அனு, தலைமுடியை வாரிக் கொண்டையிட்டவாறு வெளியேற, இவள் விடைபெறும் பொருட்டு சித்திப்பாட்டியின் அறைக்குள் நுழைந்தாள்.
“வாடி சந்தனம்!” என்றழைத்த பாட்டியைக் கட்டிலிலிருந்து எழுப்பி அவரின் இயந்திர நாற்காலியில் அமர வைத்து, குளியலறைக்குள் போக உதவினாள்.
அவர் வெளியே வந்ததும், “ஊருக்கு கிளம்பறேன் பாட்டி. ப்ளெஸ் பண்ணு!” எனக் காலைத் தொட, இது வழக்கம்தான் என்பது போல் கட்டிலின் முகப்பிலிருந்தத் தன் பையிலிருந்து நூறு ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தார். அவருக்கு அது பெரிய தொகை!
“அர்ஜூன் வேண்டாம் சரி. நீ ஆசைப்பட்டவனாவது சீக்கிரம் கிடைச்சு அவனோட நீ குடும்பம், குழந்தைன்னு வாழறதைக் கண்ணார பார்க்கணும்டீ சந்தனமாரி.” அவளை வம்பிழுக்கவே அந்தப் பெயரைச் சொல்லி வாழ்த்த,
தற்போது பாட்டியுடன் சண்டை பிடிக்கும் எண்ணமில்லாதவளுக்கு அவரின் ஆசி வார்த்தைகள் மனதை மேலும் அலைக்கழித்தன. சித்திப்பாட்டிக்கு இன்னும் சஞ்சு வந்துவிட்டானெனத் தெரியாது. அத்தை, மாமா சொல்லிக் கொள்வார்களென நினைத்தவள், அமைதியாக அவருக்கு ஒரு அணைப்பைத் தந்துவிட்டு வந்தாள்.
தன் அறைக்குப் போய்ப் பையைத் தூக்கி வர, ஹாலில் சஞ்சய் உட்பட அனைவரும் அமர்ந்து காலைப் பானங்களை அருந்திக் கொண்டிருந்தனர்.
காமாட்சிக்கு தர வேண்டிய காலை நேர கஞ்சியை அவர் அறைக்கு எடுத்துச் செல்லுமாறு பணித்து கொண்டிருந்த அனு, இவள் கையிலும் ஒரு குளம்பி கோப்பையைத் தர, “தாங்க்ஸ் அத்தை.” என்றவாறு வாங்கிக்கொண்டாள்.
தடதடவென படிகளில் இறங்கி வந்த அர்ஜூன், “ஹாய் அங்கிள்! மார்னிங் ஆன்ட்டி! நைட் நல்லா தூங்கினீங்களா பாட்டி?” என அனைவருக்கும் முகமன் செய்தபடி, சந்தனா எடுத்திருந்த கோப்பையைத் தன் கைக்கு மாற்றிக்கொண்டு குளம்பியைச் சுவைக்க, அவனை முறைத்துவிட்டு அவள் வேறொன்றை எடுத்துக்கொண்டாள்.
அவள் நல்ல மனநிலையில் இருந்தால் இந்நேரம் அர்ஜூனின் மண்டை வீங்கியிருக்கும். அவன் எதிர்ப்பார்ப்பதும் அதைத்தான்! ஆனால் நேற்றிலிருந்து அவள் வாயிலிருந்து இவன் பெயர் கூட வரவில்லையே! முதலிலேயே அவளிடம் உண்மையைச் சொல்லாததால் உண்டான கோபம் என்று நினைத்திருந்தான்.
ஆனால் ஜோஜூ இவனை அழைத்து, உன் அத்தை மகள் என்னை வண்ணம் வண்ணமாக பேசி, தோரணமாக தொங்க விட்டுவிட்டாளென புலம்பிய போதுதான் இவனுக்குமே உண்மைக் காரணம் உரைத்தது. அன்று அண்ணனின் மனநிலையை மட்டுமே யோசித்தபோது தவறாக தெரியாதது, இன்று அவளின் மனநிலையை கணிக்கும்போது மாபாதகச் செயலாகத் தெரிகிறது.
இதுவரையில் சண்டைப் பிடித்தாலும் பெயரைக் கூட சொல்லாத அளவிற்கு அவள் இவனிடம் கோபம் கொண்டதில்லை. அதனால் தற்போது அவளின் இந்த பாராமுகம் மனதினை அலைகழிக்க, ஜோஜூவைப் திட்டியதைப் போல் தன்னையும் திட்டிவிட்டால் கூட நிம்மதியாக இருக்கும் போலிருந்தது.
அடி வாங்குவதற்காக வேண்டுமென்றே அவள் வைத்திருந்த கோப்பையைப் பிடுங்குவதைப் போல் எட்டிப் பார்த்தான். முறைப்பதற்கு கூட இவனைப் பார்க்காமல் நகர்ந்தமர்ந்து கொண்டாள் அவள்.
இருவரின் செய்கைகளை மென்னகையுடன் பார்த்திருந்த நிரஞ்சனா சட்டென்று, “என்னையும் அம்மான்னு கூப்பிடலாமே அர்ஜூன்?” எனக் கேட்டுவிட புரையேறிக்கொண்டது இவனுக்கு.
சந்தனா அவன் தலையைத் தட்ட, அதைக் கூட உணராமல் திகைப்புடன் விழித்தான்.
அனு வந்து அவன் முதுகில் ஒரு அடியைப் போட்டாள். “கூப்பிடறேன்மான்னு சொல்லேண்டா!”
அப்போதும் அவனின் திகைப்பு மாறவில்லை. அர்ஜூனைப் பொறுத்தவரையில் தன் அம்மாவிற்கு மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியாது. அவரை யாரும் சுலபமாக ஏமாற்றமுடியும். அப்படியிருக்க தங்கள் சஞ்சுவை நிரஞ்சனா அனுவிற்கு கொடுப்பது போல் கொடுத்தாலும், அவன் மீதான முழு உரிமையும் ஆளுமையும் அவர்களுக்கே உரியதாக நினைக்கக்கூடும். அப்படி நினைத்தால் அதைக் கூட தன் அம்மாவிற்கு பிரித்தறிய தெரியாது. அனைவரையும் நல்லவர்கள் என்று நம்புவார். அப்படிப்பட்ட தன் வெகுளி அம்மாவை அங்கே அவர்களுடன் அனுப்பிவிட்டு இங்கே தன்னால் நிம்மதியாக இருக்கமுடியுமா?
இப்படியாக நேற்றிரவு முழுவதும் சிந்தித்திருந்தான். ஆனால் இவன் அவரைப் பற்றி நினைத்ததற்கு நேர்மாறாக அவர் தன்னிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டதில் வியந்து நின்றான்.
“கூப்பிடுவான்மா!” என்ற அக்னி அர்ஜூனை உறுத்து விழிக்க,
சுதாரித்துக்கொண்டான் இவன். “ஹான்… ம்மா!”
அவனின் தயங்கிய அழைப்பில் பிரபஞ்சனுக்கு சிரிப்பு வந்தது. “நானும் இங்கே இருக்கேன் அர்ஜூன்.”
“ஹிஹி… ஹாய்ப்பா!”
“யூ ஆர் அ குட் ஸோல் பிரபு!” என பாஸ்கரன் அவன் கரம்பிடித்துச் சொல்ல,
“அட சும்மா இருங்க பாஸ்!” என்றவன், அவன் கையில் கார்ச் சாவியைப் பார்த்துவிட்டு, “வேலை இருக்குதா என்ன?” எனக் கேட்க,
“இல்லை, சனாவை அவ வீட்ல டிராப் பண்ண போறேன். அவளுக்கு நாளைக்கு ஆஃபீஸ் போகணுமாம்.” எனவும்,
அத்தனைக் கண்களும் தன் மீது படிந்ததில் குளம்பி கோப்பையினுள் எதையோ தொலைத்தாற் போல் குனிந்து கொண்டாள் சந்தனா.
“என்ன அவசரம்? இன்னும் ரெண்டு நாள் இருந்தா எங்களோடயே வரலாம்ல?” என அபிராமி கேட்க, தன் அத்தை, மாமாவிடம் சொன்ன கதையை அப்படியே இங்கேயும் ஒப்பித்தாள் அவள்.
“நேத்தெல்லாம் என்கிட்ட இதை சொல்லல?” என அர்ஜூனின் குரல் உயர,
“அர்ஜூன்!” என சஞ்சு அவனை அடக்க, இருவரையும் தீப்பார்வைப் பார்த்துவிட்டு காலிக் கோப்பையை எடுத்துக்கொண்டு போய்விட்டாள் அவள்.
அனைவரிடமும் விடைபெற்று பாஸ்கரனுடன் போர்டிகோ வர, “டாட், நான் கூட்டிட்டு போறேன்!” என கார்ச் சாவிக்கு கை நீட்டினான் அர்ஜூன்.
“அவனோட நான் போக மாட்டேன் மாமா!”
“ஓவரா பண்ணாம வா அண்ணி!”
“……..”
“இப்டித்தான் நேத்துல இருந்து என்கிட்ட பேசலப்பா இவ!” அப்பாவிடம் கோள் மூட்டினான் அர்ஜூன்.
“ஏண்டா?” எனத் தன்னைக் கேட்ட மாமனுக்கு பதிலளிக்கும் உத்தேசம் இல்லை அவளிடம்.
தன் விடயத்தில் சஞ்சு என்றதும் அத்தையையே அடித்த அவளின் பாஸ் மாமா, இப்போது அர்ஜூன் செய்ததைச் சொன்னால், இருவருமே அவருடைய மகன்கள்தான் என்பதை மறந்துவிட்டு அவனின் முதுகுத் தோலைக் கிழித்துவிடுவார்.
‘சொல்லவாடா?’ என்பதாக இவள் அர்ஜூனிடம் விழிகளை உருட்ட, ‘பேஸ்மெண்ட் வீக்’கானது அவனுக்கு!
இருப்பினும் ‘பில்டிங் ஸ்ட்ராங்’ எனக் காட்டிக்கொண்டு, “அவ கிடக்கறா! நீங்க கீயைக் கொடுங்கப்பா!” என அப்பாவின் கைப்பிடிக்க,
“நாம போகலாம் மாமா!” என்றாள் அவள் நாசி விடைக்க!
அவளின் கோபத்தில் பாஸ்கரன் கவலையாக, அதற்கெல்லாம் விடுவானா அர்ஜூன்?
“எங்கே நீ போறதை நானும் பார்க்கறேன்.” என அவள் தோள் மீது மாட்டியிருந்த பையைப் பறித்தெடுக்கப் பார்க்க,
“விடு விடுடா! புதுசா உன் அண்ணன் வந்ததும் எல்லார் முன்னாடியும் என்னைக் கத்தற! அவர் அர்ஜூன்னு ஒரு வார்த்தை சொன்னதும் என்னமா பம்மிட்டு நிற்கற! போடா அங்குட்டு! வாங்க மாமா.” என பாஸ்கரனின் இடக்கரத்தைப் பிடித்திழுக்க,
“நீங்க விடுங்க டாட், அவளை நான் டீல் பண்ணிக்கறேன்.” என இவன் வலக்கரம் பிடித்து இழுக்க, இருவருக்குமிடையே இழுபட்ட பாஸ்கரன் எப்போதும் போல் இப்போதும் கவலை மறந்து குழந்தைகளின்(?) அக்கப்போரில் சுகமாய் நனைந்தான்.
“விடுடா!” என இவள் அவன் கையைத் தட்டிவிட,
“நீ ஏண்டி இப்போ ஓவர் ரியாக்ட் பண்ற?” என அவன் இவளின் குதிரை வாலைப் பிடித்து ஆட்ட,
ஹால் ஜன்னல் வழி உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மலைத்துப் போனார்கள். காலையிலிருந்து சந்தனாவின் முகம் வேறு சரியில்லையே! சண்டை(?) நடந்து கொண்டிருந்தது போர்டிகோவில் என்பதால் உள்ளே இருப்பவர்களுக்கு அங்கே என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
நிரஞ்சனா கேட்டாள். “அச்சோ! ரெண்டு பேருக்கும் எதுவும் பெரிய சண்டையா அனு?”
“இல்லை. இப்போ தான் ரெண்டு பேரும் நார்மலா இருக்காங்க.” என அர்ஜூனின் சிகையில் மாவாட்டிக் கொண்டிருந்த சந்தனாவைக் கண்ணெடுக்காமல் பார்த்தவாறு ரசனையுடன் சொன்னாள் அனு.
ஆனால் இருவரின் செயல்களையும் பிடித்தமில்லாமல் நோக்கிய அபிராமி, அக்னியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஏதோ முடிவெடுத்தவராய் தன் தேநீர் கோப்பையைக் காலி செய்ய ஆரம்பித்தார்.
இசைக்கும்🌈🫧…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
12
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அபிராமி என்ன முடிவு எடுக்க போறாங்க. நீயும் போய் அவங்க கூட சண்டை போடு அக்னினு சொல்ல போறாங்களோ. எல்லா உணர்வுகளையும் பார்த்துட்டோம். அடுத்து அக்னி சனாவோட காதல் உணர்வுகளை பார்க்கலாம். ஏற்கனவே அவன் ஏங்கி தவிச்சு இப்போதான் சரியாகிருக்கான். இப்போ சனா மறுபடியும் ஆரம்பிச்சா எப்படி.
Yes, Next love modeதான்! பார்றா! ஹீரோவுக்கு மட்டும்தான் ப்பீலிங்கா? ஹீரோயினுக்கு வந்தா ரீலிங்கா?😔😔
மழையில் நனைந்த நாய்க்குட்டி 🙃
அண்ணனது எண்ணத்தினை மட்டும் யோசித்து அவள் அனுமதி இல்லாமலேயே அவள் மனதை அறிய விழைந்த கோவம் அவளுக்கு.
அக்னியாக பேசி இருந்தாலும் பரவாயில்லை இங்கே அர்ஜுன் அல்லவா எல்லாம் தெரிந்தும் அனைத்தையும் நடத்தி முடித்தது.
யாரையும் எதற்கும் வற்புறுத்த விரும்பாத பாஸ்கரனிற்கு அர்ஜுனது செயல் தெரிந்தால் அவ்வளவுதான்.
“சின்னவள் சுற்றும் பூச்சரத்தின் வாசனை பெரியவர்களுக்கு தெரியாதா?” 💫💫
சஞ்சுத்தான் மீது அன்பு மற்றும் உரிமையுணர்வு, அக்னி மீது நன்மதிப்பு மற்றும் ஈர்ப்பு.
இரண்டு உணர்வுகளையும் இருவேறு நபர்களுக்கானதாக அல்லாமல் இனி ஒரே நபருக்கானதாய் பாவிக்க வேண்டும்.
சிக்கலான உணர்வு இழைகள் தான். காலம் கனியும். 💛🌻
எஸ், காலம் கனியும்🍭🍬 விரிவான கருத்திற்கு மிகுந்த அன்பும் நன்றியும் சிஸ் 🦋🌷