
அத்தியாயம் -33
தன் தோழி மீனலோசனி போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைத்து ஷோபனா செய்த செயல் அவளுக்கே எதிராகத் திரும்பியது.
தனக்கே அவள் அந்தப் போதையை புகுத்துவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை பெண்ணவள்.
சகித்துக் கொள்ள முடியாமல் துவண்டு கிடந்தவளை, அடுத்து அவள் செய்த செயல் இன்னமும் அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவளுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக விலக்க ஆரம்பித்தாள்.
அதிர்ச்சியும் பயமும் கண்களில் பரவ, அசைக்கக்கூட முடியாத தன்னுடைய கைகளை அரும்பாடு பட்டு அசைத்துத் தன் இரு கைகளாலும் அவளைக் கும்பிட்டாள்.
“ப்ளீஸ்.. என்னை விட்ருடி பாவி!” நாக்கு பிறழ, பேச முடியாது திக்கித் திணறிப் பேசினாள்.
“பயப்படாதேடி.. நான் என்ன ஆம்பளையா, உன்னை எதுவும் பண்றதுக்கு? சும்மா ஒரு நாலஞ்சு ஃபோட்டோ மட்டும் எடுத்துக்குறேன். சரியா?” கூறியவாறு அனைத்தையும் அகற்றினாள்.
‘ஃபோட்டோவா?’ திடுக்கிட்டாள் பெண்ணவள். கண்களை விரித்துக் கண்ணீருடன் பார்த்தாள் அவளை.
“ப்ளீஸ்.. வே..வேண்டாண்டி. என்னை விட்ரு. நான் உனக்கு என்ன து..துரோகம்டி பண்ணேன்? ந..நல்லது தானே நினைச்சேன்? நீ இப்படி கெடுதல் பண்ணலாமாடி எனக்கு? உன்னைக் கெஞ்சிக் கே.. கேக்குறேன் மீனா. ஃபோட்டோ எ..எடுக்காதே ப்ளீஸ்” கண்ணீருடன் கெஞ்சினாள்.
“உடனே எல்லாம் அந்த ஃபோட்டோவ யாருக்கும் காட்ட மாட்டேண்டி போதுமா? நான் என்ன அவ்வளவு கெட்டவளா? சும்மா ஒரு சேஃப்டிக்குத் தான். எப்பவாச்சும் நீ இந்த விஷயத்த யாரு கிட்டேயாச்சும் சொன்னேன்னு வையி, அடுத்த நிமிஷம் இது ஸ்பிரெட் ஆக ஆரம்பிச்சுரும். புரிஞ்சுதாடி?”
ஷோபனா கெஞ்சியது எதுவும் அவள் காதில் ஏறவில்லை. பேசியவாறு தன் கைப்பேசியை எடுத்துத் தன் வேலையை முடித்துக் கொண்டாள்.
“இனிமே ஹாஸ்டல்ல சொல்லுவேன், காலேஜ்ல சொல்லுவேன், அப்படி இப்படின்னு மிரட்டுவே என்னை? மவளே ஜாக்கிரதை!”
“வேணாம்டி, அதை அழிச்சிடு மீனா. நான் யாரு கிட்டேயும் மூச்சு விட மாட்டேன்டி ப்ளீஸ்!”
“ம்ம்.. அந்தப் பயம் இருக்கட்டும் உனக்கு! இது என் கிட்ட இருந்தா தான் எனக்கு நல்லது. இனிமே என் விஷயத்தில மூக்கை நுழைச்சேஏஏ பாத்துக்கோ!”
ஷோபனாவின் உடைகளை எடுத்து அவள் மேல் எறிந்தாள். பிறகு, மற்றொரு கட்டிலில் சென்று சாய்ந்து கொண்டாள் ஒய்யாரமாக.
ஷோபனா தான், கண்களில் கண்ணீர் வற்றும் வரை அழுதாள். பிறகு அப்படியே மயக்கத்திற்குச் சென்று விட்டாள்.
மறுநாள் காலையில் கண் விழித்ததும், மீண்டும் மீனலோசனியிடம் கெஞ்சிப் பார்த்தாள் ஷோபனா. ஆனால் அவளோ, ஷோபனாவின் கெஞ்சலைக் காதில் கூட வாங்காமல் அலட்சியத்துடன் புறப்பட்டுச் சென்றாள்.
அப்போதிருந்தே எப்போதும் பீதியும் கலவரமும் மனதைக் கவ்வ, எப்போதும் ஒருவித பயத்துடனேயே இருக்க ஆரம்பித்தாள் ஷோபனா.
படித்துக் கொண்டிருந்த மீனாவுக்கு (கதையின் நாயகி) அழுகை முட்டிக் கொண்டு வந்தது. எழுத்துக்களை கண்ணீர் மறைத்தது. துடைத்துக் கொண்டு தொடர்ந்தாள்.
ஒவ்வொரு நாளும் நகர நகர, பயத்திலே எனக்கு உயிர் போயி உயிர் வந்தது போல இருந்தது. கடைசியில இதே பயத்தோட என்னால உயிரோட இருக்க முடியாதுன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு.
அந்த மீனலோசனி, ஃபோட்டோவ எல்லாம் இப்ப யாருக்கும் எங்கேயும் அனுப்பலேன்னாலும், எப்பவாச்சும் ஏதாவது சந்தர்ப்பத்தில அப்படிச் செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்?
இன்னும் கொஞ்ச நாள்ல லீவு ஆரம்பிச்சிடும். அவ ஊருக்குப் போனப்புறமும், அவ கிட்ட அந்த ஃபோட்டோஸ் இருக்கிற வரைக்கும் நான் பயந்துட்டே தானே இருக்கணும். அவ கிட்ட இருந்து அதை எடுக்குறதுக்கும் வழியில்ல.
இதுவரை அவளோட ஃபோன அவ கையில வச்சிருந்து நான் பாத்ததே இல்ல. ஹாஸ்டல்ல ஃபோன் வச்சிருக்கிறதுக்கு பெர்மிஷனே இல்ல. ஆனா, அந்த ஃபோன எப்ப இவ கொண்டு வந்தா, எங்கே வச்சிருந்தா எதுவுமே தெரியல.
இதெல்லாம் நடந்ததுக்கு அப்புறமும் நான் பாத்ததில்ல. அவ கூட இருக்கிறதுக்கே பயமா இருக்குன்னு சொல்லி ரூம்ல இருக்கிறதையே அவாய்ட் பண்றேன் நான்.
இல்லே, இனிமேலும் இப்படி தினம் தினம் பயந்து பயந்து என்னால இருக்க முடியாது. அந்த ஃபோட்டோ மட்டும் வெளியே வந்துச்சு அவ்வளவு தான், அப்புறம் அப்பாவும் அம்மாவும் என்ன ஆவாங்கன்னே தெரியல.
என்னால அவங்களுக்கும் அவமானம். இதுக்கு ஒரே வழி, நான் சாகணும். ஆமா. அது தான் சரி.
என்னை மன்னிச்சிடுங்க அத்தான். எனக்கு வேற வழி தெரியல. நான் போறேன்.
இத்துடன் கடிதம் முடிவடைந்து இருந்தது. கடிதத்தில் ஷோபனாவின் கண்ணீர் பட்டு சில இடங்களில் எழுத்துக்கள் மங்கலாக இருந்தன.
படித்து முடித்து விட்டு, திக்பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்து இருந்தாள் மீனா, நம் கதையின் நாயகி.
சிறிது நேரம் அப்படியே இருந்தவள், பிறகு பெருங் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
“ஷோபி, டீ ஷோபி, அநியாயமா இப்படிப் போயிட்டியேடி!”
அவளுடைய அழுகை, சபரிக்கும் கண்ணீரை வரவழைத்தது. அவனுக்கு, தான் செய்த தவறு புரிந்தது. இடிந்து போய் உட்கார்ந்து விட்டிருந்தான்.
வெகுநேரம் அதே நிலையில் இருந்தான். பிறகு எழுந்து மனைவியின் அருகே சென்று நின்றான். குற்ற உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தது அவனுடைய மனம்.
‘சரியா என்ன ஏதுன்னு கூட புரிஞ்சுக்காம, இப்படி அநியாயமா ஒன்னும் தெரியாத ஒரு அப்பாவிப் பொண்ணக் கொடுமைப் படுத்திட்டேனே! எனக்கு இதுக்கு மன்னிப்பு இருக்கா? இந்த துரோகத்துக்கு பிராயச்சித்தமா நான் என்ன செய்யப் போறேன்?’
ஒருவித சங்கடத்துடன் மீனாவின் தோளைப் பிடித்தான்.
“மீ.. மீனா, சாரி! எதையும் சரியா புரிஞ்சுக்காம உனக்கு நான் துரோகம் பணாணிட்டேன். என்னை மன்னிச்சிடு மீனா ப்ளீஸ்!”
எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு பதில் கூறாது அமைதியாக உட்கார்ந்து இருந்தாள் மீனா.
“இனியாச்சும் நாம ரெண்டு பேரும் கணவன் மனைவியா சந்தோஷமா வாழலாம் மீனா. இனிமே உன்னை நான் நல்லா பாத்துப்பேன்!”
விசுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் மீனா. அனல் கக்கும் விழிகளால் பொசுக்கி விடுவது போன்ற ஒரு பார்வையை வீசினாள் அவன் மீது.
“ஓ! நடந்தது எல்லாம் மறக்கணுமா? உங்கள மன்னிப்பு, உங்களோட இனிமே சேந்து ஒன்னா சந்தோஷமா வாழணுமா? ஒரு நாளும் நடக்காது அது. அன்னைக்கே எல்லா விவரமும் என் கிட்ட நீங்க சொல்லி இருந்தா உண்மை என்னன்னு அப்பவே தெரிஞ்சிருக்கும் இல்ல?
ஆனா, சார் எதுவும் சொல்ல மாட்டாராம். என்னைப் பழி மட்டும் தான் வாங்குவாராம். என்ன, எதுக்கு அப்படின்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ஞ்சு பைத்தியமாகணுமாம் நான். அப்படித்தானே? வாய மூடிட்டு, நீங்க செய்ற நக்கல், கிண்டல், திமுர்த்தனம் எல்லாத்தையும் நான் பொறுத்துகிட்டு வாழணும்.
இவருக்கு எப்ப போதும்னு தோணுதோ, அப்ப உண்மையச் சொல்லிட்டு, என்னை வீட்டை விட்டு அனுப்பிடுவாராம் சாரு!
ஆனா, தப்பெல்லாம் உங்க மேலேன்னு தெரிஞ்சப்புறம், உடனே நான் எல்லாத்தையும் மறந்து மன்னிச்சு, உங்கள என் புருஷனா ஏத்துகிட்டு சந்தோஷமா வாழ ஆரம்பிக்கணும். அப்படித்தானே?
நல்லா இருக்கு சார் கதை! ரொம்ப நல்லா இருக்கு! உங்களுக்கு வேணாம்னா நான் அங்கே ஒரு மூலையில போயி சுருண்டு படுத்துக்கணும்.
அதுவே உங்களுக்கு வேணும்னா, நான் உங்க பக்கத்தில வந்து உங்க மனைவியா கட்டில்ல படுத்துக்கணுமோ? எந்த ஊர் நியாயம் சார் இது?
இங்கே பாருங்க மிஸ்டர், இவ்வளவு நாள் நடந்தது உங்க டர்ன். இனிமே நடக்கப் போறது என் டர்ன். உங்கள நான் அவ்வளவு சீக்கிரமா விட்டுட மாட்டேன்.
உண்மைய எல்லார் கிட்டேயும் சொல்லிட்டு என்னை வீட்டை விட்டே அனுப்புறதா சொன்னீங்கல்ல?
இப்ப நான் சொல்றேன்.. நீங்க என்ன என்னை வீட்ட விட்டு அனுப்புறது? எல்லார் கிட்டேயும் உண்மையச் சொல்லிட்டு நானே வீட்டை விட்டு போகத் தான் போறேன். ஆனா இப்ப இல்ல. ஒரு நாலு நாளைக்கு உங்கள கொஞ்சம்.. இல்லேல்ல நல்லாவே வச்சு செஞ்சிட்டுப் போகப் போறேன். புரிஞ்சுதா மேன்? நீங்க எனக்கு கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு டபுளா குடுக்க வேணாம்? வெயிட் அண்ட் சீ!”
சொல்லி விட்டு அவனருகே சென்றாள். நேராக நின்று அவனுடைய கண்களைப் பார்த்தாள்.
“இனிமே தான் இந்த மீனா குமாரியோட இன்னொரு முகத்தைப் பாக்கப் போறீங்க நீங்க! மைண்ட் இட் மேன்! வரட்டா?”
பேசி விட்டு விருட்டென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
இதுவரைக் காணாத மனைவியின் இன்னொரு முகத்தைப் பார்த்த அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டான் சபரி.
ஷோபனாவை நினைத்து இன்னமுமே மனம் பதறியது மீனாவுக்கு.
‘காலேஜ்ல இப்படி ஒரு பிரச்சினை நடந்திருக்கும்னு கொஞ்சமும் நான் எதிர்பார்க்கவே இல்லையே! ஏண்டி இப்படி ஒரு மாதிரியா இருக்கேன்னு எத்தனை தடவை கேட்ருப்பேன். வாயே தொறக்காம இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்டாளே!’
ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்த மீனாவின் நினைப்பிற்குள் ஷோபனா தான் ஆக்கிரமித்து இருந்தாள்.
சோகம் மனத்தைக் கவ்வ, கண்களில் கண்ணீர் படர, தலையில் கை வைத்தவாறு அங்கிருந்த மேடையில் அப்படியே அமர்ந்து விட்டாள்.
யோசனைகள் சுழல, கடைசியில் அது சபரியின் மீது வந்து நின்றது.
‘இவருக்குக் கொஞ்சமாவது புத்தி இருந்தா யோசிக்காம இப்படி என் வாழ்க்கையில விளையாடி இருப்பாரா? என்ன தான் ஷோபனா மேலே அன்பும் காதலும் இருந்தாலும், இவர் செஞ்சது மன்னிக்கவே முடியாத காரியம்!’
‘ஆனா, நான் பாட்டுக்கு இவர் கிட்ட, இனிமே தான் என்னோட இன்னொரு முகத்தைப் பாக்கப் போறீங்கன்னு சொல்லிட்டேனே! என்ன செய்யப் போறேன்? இப்படி எல்லாம் வில்லியா எல்லாம் மாறி எனக்குப் பழக்கமே இல்லையே!’
நினைக்க நினைக்க மலைப்பு தான் வந்தது அவளுக்குள். சிறிது நேரம் கழித்துச் சுயநினைவுக்கு வந்தவள், அப்போது தான், தான் குளியலறையின் உள்ளே இருக்கிறோம் என்பதையே நினைவு கூர்ந்தாள்.
அவசர அவசரமாக முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.
அங்கு சபரியோ, இன்னமும் அதே நிலையில், இறுகிப் போன முகத்துடன் கல்லாக உட்கார்ந்து இருந்தான்.
அவனருகே வந்து நின்றாள் மீனா. அதைக்கூட கவனிக்கவில்லை சபரி. அவன் கண்ணெதிரே தன் கையைக் கொண்டு சென்று சொடுக்கு போட்டு அழைத்தாள் அவனை.
“எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர்!”
சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தான் சபரி.
“என்ன, இப்படி இடிச்ச புளியாட்டாம் அப்படியே சிலை மாதிரி உக்காந்து இருக்கீங்க? அப்படி என்ன பலத்த யோசனை?”
அவனையே முறைத்துப் பார்த்தாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


படங்களை வைத்து மிரட்டியதற்கெல்லாம் தற்கொலையா?
அந்த அளவு பலவீனமான பெண்களை தான் இந்த சமூகம் உருவாக்குகிறது. முக்கியமாக பெற்றோர்கள்.
மானம், மரியாதை, உறவினர் முன் தலை குனிவு என உயிரில்லாத விடயங்களுக்காக உயிருள்ள உறவின் மனதை இன்னும் வேதனையிில் ஆழ்த்தி அவர்களும் வேதனையில் ஆழ்ந்து, அதன் குற்ற உணர்வையும் அந்த உயிரினுள்ளே கடத்துவர்.
“இதெல்லாம் ஒன்றுமே இல்லை. எல்லோருக்கும் இருப்பது தான்”, “ஒன்றும் ஆகிவிடவில்லை நாங்கள் துணை இருக்கிறோம்”, “வருத்தப்பட நீ எந்த தவறும் செய்யவில்லை” என்று எத்தனையோ ஆறுதல் மொழிகள் இருப்பினும் “இப்படி ஆகிவிட்டதே இனி மற்றவர் முகத்தினில் எப்படி முழிக்க” என்ற வார்த்தைகளின் வழி வருத்த அளவை கூட்டுவர்.
தவறே செய்யாமல் தவறில் மாட்டிக்கொண்டு வெளிவர போராடும் நபரின் பதற்றத்தை கூட்டாமல் இருத்தலே நலம்.
காலம் செல்ல மனம் நிலையாக தெளிவடைந்து அமைதியாகிவிடும்.
மீனாவின் நிலைப்பாடு சரியே.
சபரி வேண்டும் என்றால் இருக்க வேண்டும், வேண்டாம் என்றால் சென்று விட வேண்டுமா?
அவளுக்கென்று உணர்வுகள் இல்லையா.
மிக்க நன்றி சிஸ் ❤️