
துஷ்யந்த்தும் பரத்தும் சென்று சரியாக அரை மணி நேரத்தில் வாசல் கதவு தட்டப்படும் சத்தத்தில், ‘சென்றவர்கள் இவ்வளவு விரைவாக வந்து விட்டார்களா?’ என்ற குழப்பத்துடன் சென்று கதவைத் திறந்த சகுந்தலா வெளியே சுவரில் சாய்ந்து ஸ்டைலாக நின்றிருந்த ரிஷிகேஷை அங்கு சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை.
சகுந்தலாவின் முகம் அப்பட்டமான அதிர்ச்சியைக் காட்ட, “ஹாய் மை டியர் வைஃபீ…” என்றான் ரிஷிகேஷ் நக்கலாக.
அவனின் குரலில் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த சகுந்தலா, “நீ… நீ… நீ இங்க என்ன பண்ணுற?” எனப் பதட்டமாகக் கேட்டவள் அவசரமாக உள்ளே திரும்பி கதவை சாத்த முயல, அவளைத் தள்ளிக் கொண்டு வலுக்கட்டாயமாக வீட்டினுள் நுழைந்தான் ரிஷிகேஷ்.
சகுந்தலா அவனை அதிர்ந்து நோக்க, சோஃபாவில் வாகாக அமர்ந்த ரிஷிகேஷ் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவாறு, “என் பையன் எங்க?” எனக் கேட்டான் அதிகாரமாக.
பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கிய சகுந்தலா, “யா…யா…யார் பையன்?” எனக் கேட்டாள் தன் பயத்தை மறைத்துக் கொண்டு.
சகுந்தலா அவ்வாறு கேட்கவும் ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் அவ் இடமே அதிர சத்தமாகச் சிரித்தான் ரிஷிகேஷ்.
இரு மடங்கு வேகத்தில் துடித்த இதயத்துடன் அவனை சகுந்தலா அச்சத்துடன் நோக்க, தன் சிரிப்பை நிறுத்தி விட்டு இருக்கையை விட்டு எழுந்த ரிஷிகேஷ் முகத்தில் விஷமப் புன்னகையுடன் அடி மேல் அடி எடுத்து வைத்து சகுந்தலாவை நெருங்கினான்.
ரிஷிகேஷ் ஒவ்வொரு அடியாக சகுந்தலாவை நோக்கி எடுத்து வைக்கவும் சகுந்தலாவின் கால்கள் தன்னால் பின்னோக்கி நகர்ந்தன.
ஒரு கட்டத்துக்கு மேல் சகுந்தலாவால் அதற்கு மேல் நகர முடியாதவாறு சுவர் தடையாக இருக்க, வெற்றிக் களிப்புடன் அவளை நெருங்கினான் ரிஷிகேஷ்.
பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட நின்ற சகுந்தலாவிற்கு ரிஷிகேஷால் அவள் அனுபவித்த பாலியல் வன்முறைகள் ஒவ்வொன்றாக நினைவு வர, கண்கள் கண்ணீரால் குளம் கட்டின.
சகுந்தலாவை நன்றாக நெருங்கி நின்ற ரிஷிகேஷ் அவளின் இரு பக்கமும் சுவற்றில் கரங்களை ஊன்றி அவளை சிறை செய்ய, “இ…இங்க இருந்து போயிடு.” என்றாள் சகுந்தலா முயன்று வரவழைத்த குரலில்.
அதனைக் காதில் வாங்காத ரிஷிகேஷோ, “என்ன? பயம் விட்டுப் போச்சா?” எனக் கேட்டான் சகுந்தலாவின் காதருகே குனிந்து.
ரிஷிகேஷின் நெருக்கத்தினால் சகுந்தலா உடல் முழுவதும் புழுக்கள் ஊர்வது போல் அவ்வளவு அருவருப்பாக உணர்ந்தாள்.
போதாக்குறைக்கு அவனிடமிருந்து வந்த மது வாடை அவளுக்கு ஏதேதோ கசப்பான நினைவுகளை வரவழைத்து பயத்தில் குளிர் பரப்பியது.
ஆழ்ந்த மூச்சை இழுத்து தன்னை சமன் செய்து கொண்ட சகுந்தலா தன் மொத்த பலத்தையும் திரட்டி பட்டென ரிஷிகேஷைத் தள்ளி விட்டாள்.
இதனை எதிர்ப்பாராத ரிஷிகேஷ் ஒரு நொடி தடுமாறி அவசரமாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.
ரிஷிகேஷ் சகுந்தலாவை வெறியுடன் நோக்க, “மரியாதையா இங்க இருந்து போயிடு. இல்லன்னா இப்பவே போலீஸை கூப்பிடுவேன்.” என விரல் நீட்டி எச்சரித்தாள் சகுந்தலா.
சகுந்தலாவின் திடீர் தைரியம் ரிஷிகேஷிற்கே ஆச்சர்யமாக இருந்தது.
சகுந்தலாவின் பயத்தை அறிந்திருந்தால் அதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இருப்பானோ என்னவோ?
ஆனால் தான் வந்த வேலையே ரிஷிகேஷிற்கு முக்கியமாகப்பட, “என் பையன் எங்கன்னு சொல்லு.” எனக் கேட்டான் முகம் இறுக.
“யாருக்கு யார் பையன்? ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போயிடு. இல்ல போலீஸ கூப்பிடுவேன்.” என விரல் நீட்டி எச்சரித்தாள் சகுந்தலா.
அவளை உதடு சுழித்து மேலிருந்து கீழாக இளக்காரமாக நோக்கிய ரிஷிகேஷ், “போலீஸ்னு சொன்னா பயந்துடுவேனா? லண்டன் போலீஸ் கிட்ட இருந்தே தப்பிச்சு வந்துட்டேன். நம்ம நாட்டு போலீஸ் எல்லாம் எம் மாத்திரம்? பணத்த தூக்கிப் போட்டா நாய் மாதிரி என் ஷூவ நக்குவானுங்க.” என்றான் நக்கலாக.
ரிஷிகேஷை முறைத்த சகுந்தலா மேசை மீதிருந்த தன் கைப்பேசியை எடுத்து அவசரமாக யாருக்கோ அழைப்பு விடுக்க, நொடியில் சுதாகரித்த ரிஷிகேஷ் சகுந்தலாவின் கரத்தில் இருந்த கைப்பேசியை வேகமாகத் தட்டி விடவும் அது அங்கேயே உயிரை விட்டிருந்தது.
சகுந்தலா அவனை அதிர்ச்சியாக நோக்க, விஷமச் சிரிப்புடன் அவளை நெருங்கிய ரிஷிகேஷ் சகுந்தலா எதிர்ப்பாராத நேரம் அவளின் தலை முடியைக் கொத்தாகப் பற்றி கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
இதழ்கள் கிழிந்து இரத்தம் கசிய, அவனின் பிடியில் இருந்து விடுபடப் போராடினாள் சகுந்தலா.
“உனக்கு அவ்வளவு ஆகிப் போச்சா? என் மேல இருந்த பயம் விட்டுப் போச்சுல்ல. என்ன டி? எல்லாம் மறந்துடுச்சா? டிவோர்ஸ் வாங்கிட்டா என் கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு நினைச்சியா? நான் பட்ட அவமானத்துக்கு எல்லாம் பழி தீர்க்க வேணாமா?” என வன்மமாகக் கேட்ட ரிஷிகேஷ் தன் பிடியை மேலும் இறுக்கியவாறு சகுந்தலாவை நன்றாக உரசியவாறு நின்று அவளின் கூந்தலில் முகம் புதைத்தான்.
ரிஷிகேஷின் நெருக்கம் சகுந்தலாவிற்கு தீயினால் சுடுவது போல் இருக்க, தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ளி விட முயன்றாள்.
ஆனால் ரிஷிகேஷிற்கு அவளை விட மனமில்லாமல், “சும்மா சொல்லக் கூடாது டி… அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி எப்படி கிக்கு ஏத்துனியோ இப்போவும் அதே போலவே இருக்க…” என்றவன் இன்னும் வாய் கூசாமல் ஏதேதோ கூறவும் சகுந்தலா தான் கண்ணீருடன் காதை மூடிக் கொண்டாள்.
“ப்ளீஸ் ரிஷி… விட்டுரு என்னை…” என சகுந்தலா அதற்கு மேல் போராட சக்தியின்றி கையெடுத்து மன்றாடிக் கெஞ்ச, அவளின் நல்ல நேரம் ரிஷிகேஷின் கைப்பேசி ஒலி எழுப்பியது.
ஒரு கரத்தால் சகுந்தலாவின் முடியைப் பற்றியவாறே மறு கரத்தால் கைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறு முனையில் என்ன கூறப்பட்டதோ, “ம்ம்ம்… நான் வரேன்.” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
சகுந்தலா கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட, அவளின் தாடையை அழுத்தமாகப் பற்றிய ரிஷிகேஷ், “இப்போ உன்ன விடுறேன். ஆனா இனி அடிக்கடி வருவேன். திரும்பவும் மாமாவ சந்தோஷப்படுத்த தயார் ஆகு. பாய் பேபி.” என்றவன் சகுந்தலாவைக் கீழே தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான்.
கீழே விழுந்த சகுந்தலாவோ ரிஷிகேஷின் நெருக்கத்தால் கூசிய உடலை வெறுத்தவாறு பயத்தில் தன்னையே கட்டிக் கொண்டு தன் கையாலாகாத நிலையை எண்ணிக் குமுறி அழுதாள்.
ரிஷிகேஷ் சகுந்தலாவின் வீட்டை விட்டு வெளியேறி தன் காரில் ஏறிக் கிளம்பும் சமயம் அவ் இடத்தை அடைந்த துஷ்யந்த் அங்கிருந்து கிளம்பிய ரிஷிகேஷின் காரைக் குழப்பத்துடன் நோக்கினான்.
அவனுக்குப் பக்கத்து இருக்கையில் பரத் உறங்கிப் போய் இருக்க, காரை விட்டு இறங்கியவன் மறு பக்கம் சுற்றி வந்து பரத்தின் உறக்கம் கலையாதவாறு அவனைத் தூக்கிக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடந்தான்.
கதவு திறந்தே இருக்க, சகுந்தலாவின் வீட்டினுள் நுழைந்த துஷ்யந்த் வீடு இருந்த கோலத்தைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான்.
வீடே அலங்கோலப்பட்டுக் கிடக்க, அவசரமாக பார்வையை சுழற்றி சகுந்தலாவைத் தேடினான் துஷ்யந்த்.
அவளோ ஒரு மூலையில் சுவரோடு ஒட்டியவாறு கால்களைக் கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்துப் படுத்திருப்பதைக் கண்டு துஷ்யந்தின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.
ஏதோ தவறாகப்பட, விரைவாக செயற்பட்ட துஷ்யந்த் பரத்தின் உறக்கம் கலையாதவாறு அவனை அறையில் படுக்க வைத்து விட்டு வேகமாக சகுந்தலாவிடம் வந்தான்.
“சகுந்தலா…” என துஷ்யந்த் அழைத்த மறு நொடியே தலையை நிமிர்த்தி துஷ்ய்ந்தை நோக்கிய சகுந்தலாவோ கண்கள் கண்ணீரால் குளம் கட்ட, அவனை வேதனையுடன் நோக்கினாள்.
இதழ்களில் இரத்தம் கசிய, தலைவிரி கோலமாக இருந்தவளைக் கண்டு பதட்டமடைந்த துஷ்யந்த், “என்னாச்சு சகுந்தலா? ஏன் இப்படி இருக்க? யார் அது வந்துட்டு போனது?” என சகுந்தலாவின் தோளைப் பற்றி உலுக்கினான்.
துஷ்யந்த்தின் கேள்வியில் ரிஷிகேஷ் அவளிடம் நடந்து கொண்ட முறை மீண்டும் ஞாபகம் வரப் பெற்ற சகுந்தலாவோ சட்டென தன்னை இரு கரங்களாலும் மறைத்துக் கொண்டு முகம் வெளிறிப் போய் சுவரோடு ஒட்டிக் கொள்ளவும் அதிர்ந்தான் துஷ்யந்த்.
ஒரு மருத்துவனாக அவளின் நிலையைக் கணித்த துஷ்யந்த், “ச…சகுந்தலா… ஐம் துஷ்யந்த்…” என சகுந்தாவிற்கு தன் இருப்பை உணர்த்த முயன்றான்.
சகுந்தலாவோ வாயில் கதவையும் துஷ்யந்தையும் மாறி மாறி பயத்துடன் ஏறிட, “யாரும் இல்ல சகுந்தலா. நான் மட்டும் தான் இருக்கேன். டோன்ட் வொரி. என்னாச்சும்மா?” என துஷ்யந்த் கேட்ட மறு நொடியே பாய்ந்து அவன் மார்பில் முகத்தைப் புதைத்த சகுந்தலா கதறி அழுதாள்.
ஒரு நொடி அதிர்ந்த துஷ்யந்த் அவசரமாக பரத் உறங்கிக் கொண்டிருந்த அறையை நோட்டமிட, அதுவோ மூடப்பட்டு இருக்கவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் குனிந்து தன்னை அணைத்து இருந்தவளை நோக்கினான்.
அவளோ தோள் சாயவும் தோள் கொடுக்கவும் ஒரு தோழன் கிடைக்கவும் அடக்கி வைத்திருந்த மொத்த கண்ணீரையும் வாய் விட்டு அழுது வெளியேற்றினாள்.
சகுந்தலாவின் தலையைப் பரிவாக வருடி விட்ட துஷ்யந்த், “என்னாச்சும்மா?” எனக் கேட்டான் மென்மையான குரலில்.
“அ…அ… அவன் வ…வந்துட்டான்… வந்துட்டான். எனக்…குப் பயமா இ…ருக்கு.” என சகுந்தலா திக்கித் திணறிக் கூறவும் புரியாமல் முழித்த துஷ்யந்த், “யாரு சகுந்தலா? யார் வந்தான்?” எனக் கேட்டான்.
“அந்த ரிஷிகேஷ்…” என்ற சகுந்தலா கஷ்டப்பட்டு நடந்ததைக் கூற, துஷ்யந்தின் கழுத்து நரம்புகள் புடைத்தன கோபத்தில்.
சகுந்தலாவிற்காக வேண்டி பல்லைக் கடித்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
திடீரென ஏதோ நினைவு வந்தவளாக துஷ்யந்திடமிருந்து விலகிய சகுந்தலா, “இ…இல்ல… இல்ல… விட மாட்டேன். நான் விட மாட்டேன். என் பையன என் கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது.” என வெறி வந்தது போல் உளறியவள் அவசரமாக தன் அறைக்குள் நுழைந்து உடைகளைப் பேக் செய்ய ஆரம்பித்தாள்.
அவளைத் தொடர்ந்து சென்ற துஷ்யந்த், “என்ன பண்ணிட்டு இருக்க சகுந்தலா?” எனக் கேட்டான் கோபமாக.
“அந்த ரிஷிகேஷ் ரொம்ப மோசமானவன். என்ன வேணாலும் பண்ணத் தயங்க மாட்டான். அவன் என் பையன என் கிட்ட இருந்து பிரிச்சிடுவான். நான் விட மாட்டேன். விட மாட்டேன். நானும் என் பையனும் எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போயிடுறோம்.” என துஷ்யந்தின் முகத்தைக் கூடப் பார்க்காது தன் வேலையைத் தொடர்ந்தாள் சகுந்தலா.
“எவ்வளவு தூரம் உன்னால ஓடி ஒளிய முடியும்? ஹைதராபாத் வரை உன்னைத் தேடிக் கண்டு பிடிச்சு வந்தவனுக்கு நீ இன்னொரு இடத்துக்கு போனா கண்டு பிடிக்கிறது அவ்வளவு கஷ்டமான வேலையா என்ன?” என துஷ்யந்த் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டிக் கொண்டு அழுத்தமாகக் கேட்கவும் அவன் பக்கம் திரும்பிய சகுந்தலா, “நான் அப்போ என்ன தான் பண்ணுறது?” எனக் கத்திக் கேட்டாள் ஆதங்கமாக.
நீண்ட பெருமூச்சை வெளி விட்ட துஷ்யந்த் சகுந்தலாவை நெருங்கி, “முதல்ல இங்க வந்து உட்கார்.” என்றவாறு சகுந்தலாவின் தோள்களைப் பற்றி அவளைக் கட்டிலில் அமர வைத்தான்.
சகுந்தலா மௌனமாக துஷ்யந்தை நோக்க, முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்த துஷ்யந்த் பஞ்சை எடுத்து சகுந்தலாவின் இதழ்களில் இருந்து கசிந்த இரத்தத்தை துடைக்க கரத்தை நீட்ட, அவன் கரத்தைப் பிடித்த சகுந்தலா, “நான் பண்ணிக்குறேன்.” என்றாள் தயக்கமாக.
ஓரளவு நிதானத்திற்கு வந்த பின் தான் சகுந்தலாவிற்கு தான் துஷ்யந்திடம் அளவுக்கதிகமான உரிமையை எடுத்து விட்டோம் என்று புரிய, அவளுக்கு தன் மீதே எரிச்சலாக வந்தது.
சகுந்தலா அவ்வாறு கூறவும் துஷ்யந்த் அவளை அழுத்தமாக நோக்க, சட்டென கரத்தை விலக்கிக் கொண்டாள் சகுந்தலா.
“ஐம் அ டாக்டர்…” எனக் கோபமாகக் கூறிய துஷ்யந்த் சகுந்தலாவின் காயங்களுக்கு முதலுதவி அளித்து விட்டே நின்றான்.
“ஏன் அவசரமா ரெண்டு பேரும் போய்ட்டு கொஞ்சம் நேரத்துலயே திரும்பி வந்தீங்க?” எனக் கேட்ட சகுந்தலாவிடம், “நானும் பரத்தும் அவன் சில்ட்ரன் பார்க்க போக ஆசைப்படவும் அங்க போனோம் முதல்ல. கொஞ்சம் நேரம் விளையாடும் போதே அவன் டயர்ட் ஆகிட்டான். அது அவன் ஹெல்த்துக்கு நல்லதில்லன்னு வேற எங்கயாவது போகலாம்னு நினைச்ச நேரம் தான் உன் கிட்டால கால் வந்தது. நீ கால் பண்ணிட்டு நான் ஆன்சர் பண்ண முன்னாடியே கட் பண்ணிட்ட. அப்புறம் நான் நிறைய தடவை உனக்கு ட்ரை பண்ணியும் கால் ரீச் ஆகல. மனசுக்கு ஏதோ தப்பா பட்டது. அதான் எதுவும் யோசிக்காம திரும்ப வந்துட்டேன். பரத்தும் வர வழில தூங்கிட்டான். நான் வந்ததும் நல்லதாப் போச்சு.” என்றான் துஷ்யந்த் பெருமூச்சுடன்.
“ம்ம்ம்…” என்று மட்டும் கூறிய சகுந்தலா எங்கோ வெறித்த வண்ணமே அமர்ந்திருக்க, அவள் அருகே சற்று இடைவெளி விட்டு அமர்ந்த துஷ்யந்த், “உன் லைஃப்ல அப்படி என்ன தான் ஆச்சு சகுந்தலா?” எனக் கேட்டான் அமைதியாக.

