
சபதம் – 11
குருதி பாய்ந்த கழல் மண்
களிறு வீழ்ந்த தளம் போல,
உடைந்த வேல் நெருங்கிக் கிடப்ப,
உயிர் போனார் பலராயினும்
புகழ் போனார் இலர்.
புறநானூறு – பாடல் 299
வீர மரணம் என்பது தோல்வி அல்ல,
அது நிலையான புகழின் தொடக்கம்.
அம்ஜத், தான் அவசரமாக வந்ததன் காரணத்தை ஆசாத் கானிடம் சொல்லி முடித்தான். அரசருக்கும் அதிர்ச்சி தான். ஆசாத் கானின் வயது முதிர்ச்சியும், நடக்கும் சம்பவங்களின் சுமையும் சேர்ந்து அவரைத் தள்ளாட வைத்தது.
தடுமாறிய அவரை தாங்கி பிடித்த அம்ஜத், அரசர் காட்டிய இருக்கையில் அமர்த்தினான். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்ட ஆசாத் கான்,” கடிதம்…” என்றது அவர் கையில் இருந்து கீழே விழுந்திருந்த உரையை எடுத்து அவரிடம் கொடுத்தான் அம்ஜத்.
கடிதத்தை படிக்க தொடங்கிய ஆசாத்தின் விழிகள் விரிந்து கொண்டே சென்றது. அதோடு மீனாட்சி சொல்லி இருந்த தீர்க்கதரிசனம், நிழல் அவளை அணுகும் முன் தான் மகளிடம் செல்ல வேண்டுமே என்ற பரிதவிப்பு அவர் விழிகளில் தெரிந்தது.
இத்தனையும் மனதில் போட்டு குழம்பிக் கொண்டிருந்த ஆசாத்திடம் ஒரு குவளை நீரை கொடுத்து, “ஆசாத் சற்று அமைதி கொள்ளுங்கள், குழப்பத்தில் இருக்கும் போது எந்த முடிவும் நம்பிக்கை அளிக்காது.. என்னவாயிற்று சொல்லுங்கள். அப்படி உங்கள் மகள் கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறாள்” என்றதும் கடிதத்தை அரசரிடம் கொடுத்தார் ஆசாத்.
அந்த கடிதத்தில்,
அன்புள்ள வாப்பாவிற்கு,
இந்தக் கடிதம் உங்களைச் சரியான நேரத்தில் அடையுமா என எனக்குத் தெரியவில்லை.
நான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுவது சரியா என்பதும் தெரியவில்லை.
ஆனால் என்னுள் ஏதோ நடக்கிறது… என்னால் விளக்க முடியாத ஒன்று.
சிறிது நாட்களாக என்னுள் எதுவோ ஒரு மாற்றம். சில காட்சிகள் என் முன் நடப்பதுபோல் பிரம்மை ஏற்படுகிறது. நான் கண்டவை கனவுகளும் இல்லை, மாயைகளும் இல்லை, நினைவுகள். ஆனால் அவை… எனது நினைவுகள் அல்ல.
ஒரு அரண்மனை எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒரு மனிதன், மார்பில் குத்தப்பட்டு கத்தியுடன் விழுவதைக் கண்டேன். இந்த வாழ்க்கையில் நான் ஒருபோதும் உச்சரிக்காத ஒரு பெயரை நான் கத்திக் கொண்டிருந்தேன். என்னுடைய வேதனை அல்லாத ஒன்று… ஆனால் அது என்னை இரண்டாகப் பிளந்தது போல உணர்ந்தேன்.
வாப்பா… நான் எனக்குச் சொந்தமில்லாத ஒரு வாழ்க்கையை நினைவுகூரத் தொடங்கியிருக்கிறேன்.
நான் உங்களை அழைக்க முயன்றேன். உங்கள் தொலைபேசி அணைந்திருந்தது.
வேறு யாரை நம்புவது என்று எனக்குத் தெரியவில்லை.
என்னுள் ஏதோ ஒன்று— ஒரு குரல், ஒரு உயிர். என்னை ஒரு பழமையான உலகத்திற்குத் தள்ளுகிறது. அது புனிதமானதாகவும் அதே சமயம் அது பயங்கரமானதாகவும் தோன்றுகிறது.
மேலும் யாரோ என்னைக் கவனிப்பது போல் உணர்கிறேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏன் என்று தெரியவில்லை…ஆனால் உங்களிடம் இதற்கான பதில்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். நான் யாராக இருந்தேன்… நான் யாராக மாறப் போகிறேன்…என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று தோன்றுகிறது.
இந்தக் கடிதத்தைப் படிக்கும் போது, தயவுசெய்து என்னிடம் வாருங்கள். அல்லது நான் எங்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள். என்னால் இதை தனியாகச் சமாளிக்க முடியாது.
கலீல்.. கலீல் ஆபத்தில் இருக்கிறான்.
அதை என்னால் உணர முடிகிறது. அவனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவனையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவனுக்காக மட்டுமல்ல… எனக்காகவும் நான் பயப்படுகிறேன்.
தயவுசெய்து, வாப்பா. என்னுள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு உதவுங்கள்.
—அதிரா
அரசர் அதிராவின் கடிதத்தை படித்து முடிக்கும் போது, ஆசாத் கான் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.
“அம்ஜத் நான் லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகளை கவனி. அடுத்த விமானத்தில் நான் புறப்பட்டாக வேண்டும்” என்ற ஆசாத் அரசரிடம், “மகாராஜா, எனக்கு தங்கள் உதவி தேவைப் படும்” என்றவர் அரசரிடம் சில விஷயங்களை பேசி முடித்தார்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட அரசர், “இது உதவி இல்லை ஆசாத், தாங்கள் இந்த உதய்பூர் அரசின் ராஜ குரு. நீங்கள் எனக்கு ஆணை பிறப்பிக்க உரிமை கொண்டவர். நீங்கள் பத்திரமாக உங்கள் மகளிடம் சேருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் என்னுடையது. கவலை கொள்ளாதீர்கள்” என்றவர் தன் உதவியாளன் ராஜேந்திரனை அழைத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் தனியார் விமான நிறுவனத்தில் இருந்து, தனி விமானத்தை தயார் செய்து, ஆசாத்தின் உதவிக்கு இரண்டு ராஜ்புத் வீரர்களையும் உடன் அனுப்பி வைத்திருந்தார் மகாராஜா சமர் சிங்.
கிளம்பும் முன் ஆசாத் கான், “அம்ஜத் உடனே காஷ்மீர் செல். மீனாட்சியை பத்திரமாக பார்த்து கொள்வது உன் கடமை. அதிரா என் மகள் என்றால், மீனாட்சி என் அன்னை” என்றவரின் ஆணையை தலைமேற் கொண்டு ஏற்றான் அம்ஜத்.
ஆசாத்தின் கட்டளையை ஏற்று கிளம்ப முற்பட்ட அம்ஜத்தை தடுத்த அரசர்,”ஆசாத் மறந்து விட்டீர்களா? மீனாட்சியை உதய்ப்பூர் அரண்மனையில் பாதுகாப்பாகப் பார்த்து கொள்ளலாம் என்றேனே. கர்னி மாத நடத்தும் இந்த கலியுக யுத்தத்தில் ராமனுக்கு அணிலை போல் என்னால் முடிந்த செயலை செய்கிறேன்” என்றவரின் வேண்டுதலுக்கு தலை சாய்த்த ஆசாத்துக்கும் அதுவே சரி என்று பட்டது.
“ஆனால் மகாராஜா, மீனாட்சி மற்றும் அவளது பெற்றோரின் பொறுப்பு என் மேல் உள்ளது. நான் வரும்வரை மீனாட்சியின் காவலுக்கு அம்ஜத் தான் இருந்தாக வேண்டும்” என்பதை வேண்டுதலும் உறுதியும் கலந்து மஹாராஜாவிடம் கேட்டுக் கொண்டார்.
அம்ஜத் மீனாட்சியை உதய்ப்பூர் அழைத்து வர புறப்பட, அதேநேரம் அதிராவை நோக்கி பறக்க தயாரானார் ஆசாத் கான்.
ப்ரித்திவேந்திர சௌகான் அலுவலகம் – அதே இரவு
மஹாவீர் தனது மேசையின் பின்னால் அமர்ந்து, கையில் இருக்கும் விஸ்கி குவளையை மெதுவாகச் சுழற்றி கொண்டிருந்தான். அந்த இருட்டு அறையில் யாருக்கோ காத்துக் கொண்டிருந்த ப்ரித்வி முன் நின்று நடுங்கிக் கொண்டிருந்தது ஒரு உருவம்.
அந்த உருவம்,”சார்… ஒரு செய்தி. ஆசாத் கான் ராஜ்புத் கவுன்சிலைக் சந்தித்திருக்கிறார்.
மேலும்… மன்னரும் அவரும் தனித்து ரகசிய சந்திப்பு நடத்தி இருக்கின்றனர்”.
அதைக்கேட்ட சௌகான் கண்கள் சுருக்கியபடி,”மன்னரும் ஆசாத் கானுமா?”
அதற்கு அந்த உருவம் தயங்குகியபடி,” ராஜபுத்ரர்களின் கூட்டதில் கரஹ் அதிவர் அரண்மனைக்காக உங்களை எதிர்க்க தயாராக இருக்கின்றனர். ஆனால் தனித்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை” என்றவனின் கன்னத்தில் சுளிர் என்று அடித்த சௌகான்,”இதை சொல்லவா உன்னை அந்த அரண்மனையில் அமர்த்தினேன்” என்றவன் கண்கள் தீயாய் எரிந்தது.
சௌகான் முன் வலியை காட்டிக்கொள்ள முடியாத அந்த உருவம், “ஆனால் பின் இரவுக்கு மேல் அவர்கள் சந்திப்பை கலைத்தது ஒருவனின் அவசர வருகை” என்றதில் மீண்டும் ஆர்வம் பொங்க திரும்பிய சௌகான், “யார் அது?”.
அந்த உருவம்,”ஆசாத்தின் ஆள் அம்ஜத்”.
“அவன் ஆசாத் போகும் இடம் எல்லாம் வருவான் தானே. இதில் என்ன அதிர்ச்சி” என்று சலித்துக் கொண்டான் சௌகான்.
அதற்கு அந்த உருவம்,”உண்மை தான்.. ஆனால் அதிசயமாக இந்த முறை ஆசாத்துடன் அம்ஜத் வரவில்லை. அது மட்டும் இல்லை, அம்ஜத்தின் வருகை பெரியவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என்றும் இல்லாமல் அம்ஜத்திடம் இன்று கடுமையாக நடந்து கொண்டார்” என்ற வாக்கியம் சௌகானின் கவனத்தை ஈர்த்தது.
“ம்ம் மேலே சொல்” என்று அந்த உருவத்தை ஊக்கியவன், மனது ‘எதையோ ஆசாத் மறைப்பதாக உணர்ந்தான்’.
“அம்ஜத் கையில் ஒரு கடிதம் இருந்தது. அதுவும் ஆசாத்தின் மகளிடம் இருந்து வந்த அவசர கடிதம்” என்றவனின் அருகில் சென்று,” கடிதமா?” என்றவன் மூளை பல கணக்குகளை போட தொடங்கியது. பிறகு மெல்ல சிரித்தபடி அவனது கையில் இருக்கும் இருண்ட சின்னத்தை பார்த்தான்.
அந்த இருட்டில் அவன் கைகளில் ஒளிர்ந்த அந்த சின்னத்தை பார்த்தபடி,” மகளை பிடித்தால்…ஆசாத் நம் பக்கம் வருவான். மன்னன் வேறு வழி இல்லாமல் வீழ்வான் . மன்னன் வீழ்ந்தால்
இராச்சியம் எரிந்து சாம்பலாகும். கரஹ்அதிவர் நம் வசம் வரும்” என்றவனின் வார்த்தைகள் எதிரில் இருந்தவனின் நெஞ்சை உலுக்கியது.
சௌகான் அவன் அருகே வந்து, நஞ்சு சொட்டும் குரலில்,”அதிராவை கடத்துங்கள்…. ஆசாத் இல்லாமல் ராஜபுத்திரர்களால் ஒன்றும் செய்ய இயலாது” என்றவனின் வார்த்தையில் அதிர்ச்சியடைந்தது அந்த உருவம்.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்
அதிகாலை குளிரில், பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் விமான நிலைய அண்டர் கிரௌண்ட் பார்க்கிங் லாட்டில் அவ்வப்போது கார்கள் வருவதும் போவதுமாய் இருக்க. விடியல் என்றாலும் கார் நிறுத்தம் முழுதும் இருள் பரவி இருந்தது. அதிரா தன் காரை விட்டு இறங்கி பின் இருக்கையில் இருந்து பயணப் பெட்டியை எடுத்து கொண்டு மின்தூக்கியை நோக்கி விரைவாக நடந்தாள்.
கரண் அரண்மனையில் இருந்து வீடு திரும்பியவளின் எண்ணம் சீராக இல்லை.அவள் மனம் ஒரு புயலை போல் அலைக்கழிந்து (அலைக்கழிக்கப்பட்டு) கொண்டிருந்தது.
இதோ இப்போது கூட அந்த புயல் மீண்டும் பிளந்து,’எரியும் கோட்டை…அழுகையில் கரையும் பெண்கள்…வாள்கள் மோதும் சத்தம்…ஒரு பெண்ணின் கட்டளையிடும் குரல்…இரத்தம் மணலில் பரவுவது போல் தோன்ற’ தலைப்பிடித்து கொண்டு நடக்க தடுமாறியவள்,”இல்லை… மீண்டும் வேண்டாம்…” என்று தனக்குள் பேசிக்கொண்டு வந்தவளின் பின்னால் ஒரு நிழல் நகர்ந்தது போல் தோன்றியது அதிராவிற்கு.
அவளின் உள்ளுணர்வு விழித்து கொள்ள மெல்ல திரும்பியவள் முன் அந்த இருளை கிழித்து கொண்டு சவுஹானின் ஆட்கள் வெளியே வந்தனர்.
அதிரா மெதுவாகத் தலை உயர்த்தினாள். அவள் கண்கள் கூர்மையடைந்தன. நிற்கும் விதம் மாறியது. என்றுமே தைரியமானவள் தான். கரண் மற்றும் கலிலின் முன் மட்டுமே தன் சுயத்தை இழந்து நிற்பாள்.
அவளை சுற்றி வளைப்பது போல் மூவர் நிற்க, அதை கண்டு கிஞ்சித்தும் கலங்காமல்,” என்னைத் தொட்டுப் பாருங்க, உங்கள் எலும்பை தனித்தனியாக நொறுக்குகிறேன் .” என்றவளின் வார்த்தையில் சுற்றி நின்ற மூவரும் சிரித்தனர்.
அவள் யார் என்பதையோ, அவள் யாராக இருந்தாள் என்பதையோ அவர்கள் அறிய வாய்ப்பில்லை. அதனால் பெண் தானே என்ற இலக்காரத்துடன் அவளை தாக்க முற்பட்டனர்.
அதிரா மின்னல் வேகத்தில் அவர்களில் அடியை எதிர்த்து நின்றாள். தன் காளை சுழற்றி, கைகளை மடக்கி அவன் இடுப்புக்கு கீழ் விட்ட எத்தில் முதல் மனிதன் தரையில் விழுந்தான்.
இரண்டாமவன் அவள் கையைப் பிடித்ததும், அதிரா அவன் கழுத்தில் முழங்காலால் அடித்தாள்.
மூன்றாமவன் முன்னோக்கி வர அதிரா சுழன்று அவனை தூணில் மோதவிட்டாள்.
அவளை நன்கு தெரிந்த எவருக்கும் அவள் புயல் என்பது நன்கு தெரியும். ஆனால் அந்த நிமிடம் அவள் ஒரு மின்னலைப் போல் சுழன்று அடித்தால். அவள் உடல் இங்கு இருப்பது போல் தோன்றினாலும், அவள் கண்ட காட்சி எல்லாம் ஒரு வாள் அவள் தோளை வெட்டுவதும்,
இரத்தம் சிந்துவதும்,பல உடல் தரையில் விழுவதுமாக இருக்க, அதிராவின் மூச்சு திணறி முழங்காலில் விழுந்தாள். அவள் கண் முன் உலகம் மங்கியது.
அதிரா,“இல்லை… இப்போது வேண்டாம்…” என்றவளால் மேற்கொண்டு கண்கள் சொருகி ஆட்கள் பல கோணத்தில் தோன்றினர்.
கீழே விழுந்த சௌகானின் ஆட்கள் மீண்டும் எழுந்து அவளைச் சுற்றி வளைத்தனர்.
ரணசூரன் வருவான்….

