
“டைமாச்சு இழை. அவ்ளோ முக்கியமா இருந்தா இன்னொரு நாள் வந்து தேடிக்கோ..” என்றான் வசீகரன்.
“ப்ளீஸ் ஒரே நிமிஷங்க.. இங்கதான் வச்சேன் கிடைச்சுடும்..” என்றவள் முந்தானையை இடையில் சொருகிக்கொண்டே மீண்டும் ஸ்டூலில் ஏறி துலாவிட சத்தமின்றி கதவை சாற்றி விட்டு வந்தவன் விரல்கள் அவளிடையில் ஊர்ந்திட அதை எதிர்பாராது தடுமாறிய இழை விழுமுன் இறுக்கமாக கட்டிக்கொண்டவன், “நக்ஷத்ராவோட நீயும்தானே ஏலகிரிக்கு வந்திருந்த?” என்றான்.
விழிகள் விரிய கணவனை பார்த்தவள், “உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?” என்றாள் வியப்போடு.
“சரி சொல்லு அது உன்னோட ஃபோன்தானே!!”
“என்.. என்ன கேட்டீங்க?” என்ற இழைக்கு இருதயம் எகிறி குதித்துவிடும் போலிருந்தது.
“நான் தூக்கி போட்டது உன்னோட ஃபோனான்னு கேட்டேன்”
“அது நா.. ஆ.. இப்போ.. ஆம்” என்றவளுக்கு கையும் களவுமாக பிடிபட்ட நிலை..
“அடுத்து என்ன கேட்பானோ?” என்று இழை பார்த்திருக்க அதற்குள் கைபேசி ஒலித்து அவளை காப்பாற்றியது…
“யாரோ கூப்பிடுறாங்க..” என்று நழுவியவளை விடாமல் தன்னோடு சேர்த்தணைத்தவன் அவள் தழும்பில் அழுத்தமாக முத்தமிட்டு, “ஏன் ரிங்டோன் மாத்திட்ட?” என்றான்.
“அது.. அதுவந்து.. நான் அடிக்கடி மாத்திட்டே இருப்பேன்..”
“வேண்டாம் இனி மாத்தாத.. பழைய ரிங்டோனே இருக்கட்டும்”
“ஹான்.. என்ன?..”
“எஸ் வசீகரா ஸாங்கே இருக்கட்டும்..”
“ஆனா அன்னைக்கு அவ்ளோ கோபபட்டீங்க.. உங்களுக்கு பிடிக்காது தானே?”
“அது அப்போ… இப்போ ரொம்ப பிடிக்கும்..” என்றவன் அவளிதழ்களில் சங்கமிக்கவும் இழை தான் அவன் பேச்சின் சாராம்சம் புரியாமல் பார்த்திருந்தாள்.
“ரொம்ப யோசிக்காத… ஐ ப்ராமிஸ் இனி கோபபடமாட்டேன்டி நேரமாச்சு வா..” என்ற தம்பதியர் பெரியவர்களிடம் ஆசி பெற கைலாசம் வசீகரனை கூட்டி சென்றார். இழைக்கு தான் வீட்டை விட்டு பிரியும் நேரம் நெருங்கியதில் மனம் கனத்து போனது..
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நுழைந்து நினைவுகளை அசை போட்டு வந்தவள் இறுதியாக தன் அறைக்குள் நுழைய அங்கே ஆஷ்மி பொருட்களை ஒதுக்கி வைத்து கொண்டிருந்தாள்.
அப்போதுதான் நினைவுவர கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு, “ஆஷ்மி ஆர் யூ ஹாப்பி? விஜய் மாமா உன்னை நல்லா பார்த்துக்குறாரா?” என்றாள்.
“இதென்ன கேள்வி பிங்கி நான் நினைச்சதைவிட அவர் என்னை ரொம்பவே நல்லா பார்த்துக்குறார்!!”
“அப்படி இல்ல நான் சொன்னதால தானே அவரை ஓகே சொன்ன.. அதனால உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?”
“இல்ல பிங்கி என்னோட படிப்புல இருந்து வேலை வரைக்கும் எனக்கு சரியா முடிவெடுக்க முடியாம இருந்தப்போ எல்லாம் உன்னை தான் கேட்பேன்.. நீயும் கரெக்ட்டா சஜஸ்ட் பண்ணியிருக்க. அப்பா இவரோட சம்பந்தம் கொண்டு வந்தப்போ ரொம்ப யோசிச்சேன்..”
“ஆனா நீ இவரை கல்யாணம் பண்ணு கண்டிப்பா லைஃப் நல்லா இருக்கும்னு சொன்ன.. எனக்கும் இவரை பிடிச்சிருந்தது ஆனா ஏதோ ஒரு தயக்கம். இப்போ சொல்றேன் நானே சூஸ் பண்ணியிருந்தாலும் இவரை மாதிரி ஒருத்தரை கண்டு பிடிச்சிருப்பேனான்னு தெரியாது. அந்தளவு அட்ஜஸ்டபல் டைப் பிங்கி…”
“வேலைக்கு போற என்னோட டிஃபிகல்டீஸ் நல்லா புரிஞ்சு வச்சிருக்கார். அத்தை மாமா அவரை ரொம்ப நல்லா வளர்த்திருக்காங்க.. ஒவ்வொரு விஷயமும் செய்யும் முன்ன என்னை கன்சல்ட் பண்ணுவார் அவர் குடும்பத்துல எப்படி செட் ஆகுவனோன்னு ரொம்ப பயந்திருந்தேன். ஆனா என்னை ரொம்ப கம்ஃபோர்ட்டா வச்சிருக்கார்.. அதேநேரம் வசீ மாமாவோட சேர்ந்த பிறகு அவர் கிட்ட நிறைய சேன்ஜஸ் இருந்ததுன்னு அத்தை சொன்னாங்க… அது நிஜமும் கூட.”
“என்ன சொல்ற?”
“அவர் எப்போவாவது சோஷியல் ட்ரிங் பண்ணுவாராம் ஆனா நான் தப்பா எடுத்துப்பேனோன்னு அதை என்கிட்ட இருந்து மறைச்சவர். இப்போ எனக்காக அதையும் விட்டுட்டேன்னு சொல்லி மன்னிப்பு கேட்டார் பிங்கி.. செய்த தப்பை ஒத்துக்க தைரியம் வேணுமில்லையா? நான் அவரை பத்தி என்ன நினைச்சாலும் பரவால்லன்னு உண்மையை சொல்லிட்டார்.. கல்யாணத்துக்கு பிறகு ஒருமுறைகூட டிரிங் பண்ணினதில்லைன்னு சத்தியம் பண்ணினார். அதுக்கு காரணம் வசீ மாமா..”
“நிஜமாவா?”
“ஆமா இவரை இந்த பழக்கத்தைவிட சொல்லி அவர் தான் ரொம்ப இன்சிஸ்ட் பண்ணினாராம்..”
“அப்படியா!! தேங்க்ஸ் ஆஷ்மி”
“நீ எதுக்கு தேங்க்ஸ் சொல்ற? நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் பிங்கி” என்றவளுக்கு சாரதியிடமிருந்து அழைப்பு வரவும் கிளம்பினாள்.
மற்றொரு அறையில் நாயகியின் தோள் சாய்ந்திருந்த பார்கவியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது..
“கவி என்னடி இது பிங்கி நம்ம வீட்டுக்கு தானே கூட்டிட்டு போறேன்.. சந்தோஷமா அனுப்பி வைக்காம கண்ணை கசக்கற. என்னை பார்த்தா உனக்கு கொடுமைகாரி மாதிரியா தெரியுது?”
“நம்ம காலம் மாதிரி இல்ல அம்மூ. இப்போல்லாம் பொம்பள பிள்ளைங்கள வெளியே அனுப்பவே பயமா இருக்கு. எங்கயுமே பாதுகாப்பு இல்லாம போயிடுச்சு. கல்யாணம் என் பெண்ணுக்கு சந்தோஷத்தைவிட பாதுகாப்பும் நிம்மதியும் கொடுக்கணும்ங்கிறதே என்னோட வேண்டுதலா இருந்தது…”
“கடவுள் புண்ணியத்துல உங்களால எத்தனையோ வருஷமா என் மனசை அழுத்திட்டு இருந்த பாரம் இருந்த இடம் தெரியாம போயிடுச்சு… இது சந்தோஷத்துல வர கண்ணீர்!! என் பொண்ணுக்கு இந்த கல்யாணம் நான் நினைச்சதைவிட அதிகமாவே கொடுத்திருக்கு.
பாதுகாப்பான இடத்துல அவ இருக்க போறாங்கிறதை நினைக்கிறப்போ மனசு நிரம்பி வழியுதுடி..” என்றவரின் கண்ணீரை நாயகி துடைக்கவும்,
“அங்க நம்ம வீட்டு வழக்கம் எதுவும் பெருசா பிங்கிக்கு தெரியாது. அவ ஏதாவது தப்பு பண்ணினா கோபபடாம சொல்லுடி கேட்டுப்பா..”
“உதை வாங்க போற நீ!! என்னமோ நாமெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி கோர்ஸ் முடிச்சுட்டு வந்து எந்த தப்பும் பண்ணாத மாதிரி பேசுற? அவளுக்கு கத்து கொடுக்க நாங்க ரெண்டு பேரும் இருக்கப்போ எதுக்கு உனக்கு கவலை? பிங்கி சமத்துகுட்டி சீக்கிரமே கத்துப்பா.
அப்படி தப்பே பண்ணினாலும் ஒன்னும் பிரச்சனையில்ல…”
“சிலநேரம் நாம சொல்றதைவிட அவங்க செய்யகூடிய தப்புல இருந்து தான் சரியை சரியா செய்ய கத்துப்பாங்க. தயவு செய்து சிரிச்ச முகமா என் மருமகளை அனுப்பிவைடி. நீ அழுதா எனக்கு தாங்கலை” என்ற நாயகியின் குரல் கரகரத்து போக தோழியின் வலியை உணர்ந்தவரின் விழிகளில் மெல்லிய நீர்படலம்.
“அம்மூ..”
“நீ அழுதா எனக்கு நிஜமாவே தாங்காது கவி… இப்போ உன்னோட பயம் எதனாலன்னு எனக்கு புரியுது. அதைவிட பிங்கிதான் உன்னோட உயிர், உலகம்னு தெரியும்.. இப்போ சொல்றேன் கவி என் பொண்ணு கஷ்டம்னு உன்னை தேடி வர நாள் நிச்சயம் இருக்காது. எங்க வீட்டு மகாலக்ஷ்மியை நாங்க பத்திரமா பார்த்துப்போம். நீ பட்ட கஷ்டம் எதுவும் பிங்கிக்கு இருக்காது என்னை நம்பலாம்..” என்றதும் நெஞ்சம் நெகிழ பார்கவி நாயகியை அணைத்துகொண்டார்.
அடுத்த சில நிமிடங்களில் மலர்ந்த முகமாக வெளியில் வந்த பார்கவி கண்ணீரோடு தன்னை கட்டிக்கொண்ட மகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
தம்பதியருக்கு ஆலம் சுற்றி உள்ளே அழைத்துகொண்ட நாயகி, இழையை பூஜையறையில் விளக்கேற்றி வணங்க செய்திட மணமக்களோடு வந்த சீர்வரிசைகளை ஆட்கள் அடுக்கி கொண்டிருந்தனர்.
அபியோடு பேசிக்கொண்டிருந்த இழையை, “நீங்க வாங்கண்ணி நான் உங்களுக்கு வீட்டை சுத்தி காட்டுறேன்” என்று இழையை ப்ரணவ் அழைக்க, அவன் பின்னே வந்த வசீகரன், “அதெல்லாம் அப்புறம் சுத்தி காட்டு.. அபிம்மா அம்மா எங்க?” என்றான்.
“அக்கா பக்கத்துல போயிருக்காங்க தம்பு.. உனக்கு நைட் டிஃபன் என்ன வேணும்?”
“லைட்டா ஏதாவது செய்ங்க போதும்..” என்றவன், “உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் வா..” என்று இழையை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றான்.
“என்னங்க?” என்றவளின் பார்வை அவன் அறையை வட்டமிட்டது. அன்று போல இன்றுமே அவன் அறையை மிக நேர்த்தியாக வைத்திருந்தான். தருமபுரியில் இருந்ததை விடவும் சற்று விஸ்தாரமான அறை.
ஏனோ வசீகரன் அன்று “கெட் அவுட் ஆஃப் மை ரூம்..” என்றது நினைவில் எழ, சட்டென அவளிதழ்களில் புன்னகை மலர்ந்தது.
“எப்படி சொல்றதுன்னு தெரியலைடி..” என்றவனின் கரங்கள் இழையை சுற்றி வளைத்தது.
“ஏன்… என்னாச்சு?”
“அது..” என்றவனுக்கு எப்படி தொடங்குவது என்ற தயக்கம் மேலிட, சட்டென அவளிதழ்களில் தஞ்சம் புகுந்தான்.
மென்மையை கடந்திருந்தவனின் முத்தத்தில் இருந்த நடுக்கத்தை உணர்ந்த இழை, “என்னாச்சுங்க? எதுவா இருந்தாலும் சொல்லுங்க..” என்று கேட்கவும், பதிலின்றி அமைதியாக அமர்ந்து விட்டான்.
வசீகரனின் புதிதான தவிப்பையும் தயக்கத்தையும் கண்ட இழை மெல்ல “என்னங்க..” என்று அவன் முன் நிற்கவும், அவளிடையோடு கட்டிக்கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்திருந்தான்.
“ஏன் தயங்கறீங்க எதுவானாலும் சொல்லுங்க..”
“இழை நான் ஏற்கனவே சொன்னதுபோல இன்னும் கொஞ்ச நாளைக்கு உன்னோட டைம் ஸ்பென்ட் பண்றது கஷ்டம். அதுவும் இன்.. இன்னைக்கு.. ஐ மீன் இப்போ நான் கொடைக்கானல் கிளம்பனும்..” என்றான்.
“இன்னைக்கேவா?” என்றவளுக்கு தொண்டைக்குழியில் ஏதோ சிக்கிக்கொண்டது.
“பட் த்ரீ டேஸ்ல வந்துடுவேன். உனக்கு ஓகேவா? நீ அட்ஜஸ்ட் பண்ணிப்பியா?” என்றவனை பார்த்தவளுக்கு வசீகரன் குறித்து எதுவும் தெரியாததால் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் வளர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்படி உடனடி பிரிவை அவளும் எதிர்பார்க்கவில்லை.
அதுவும் முதல்நாளே..!
“வேலைபளு அதிகமாக இருக்கும் ஆனாலும் அருகில் இருப்பான்” என்று நினைத்திருந்தவளுக்கு இது ஏமாற்றமே. கணவன் தன் பதிலுக்கு காத்திருப்பதை கண்டு முகிழ்த்த ஏமாற்றத்தை மறைத்து, “சரிங்க” என்றாள்.
“ஆர் யூ ஷூர்?” என்றதற்கு “ஹும்” என்றவளின் சுணங்கிய முகத்தை கண்டவன்,
“நீ நினைக்கிற அளவு நான் மோசமில்லடி..” என்றவனின் முகம் இன்னுமே அழுத்தமாக அவளோடு ஒட்டிக்கொண்டது.
“நான் ஒன்னும் நினைக்கலைங்க..” என்று அவசரமாக மறுத்தவளின் கரமோ அவன் சிகையை வருடிக்கொண்டிருந்தது.
“எனக்காக ஓகே சொல்ல வேண்டாம்.. நீ என்ன நினைக்கிறியோ அதை சொல்லு..” என்றிட, இழையோ கலங்க முற்பட்ட விழிகளை அவனிடமிருந்து மறைக்கும் முயற்சியாக குனிந்து கொண்டாள்.
“சொல்லுடி போகட்டா வேண்டாமா?” என்று இழையை தன்மீது அமர்த்தி அவள் நெற்றியை முட்டியவனுக்குமே அவளை பிரிய மனமில்லை. ஆனால் ஏற்கனவே ஒப்புக்கொண்டதை இப்போது ரத்து செய்வதும் கடினம். அது அவன் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும்.
“சொல்லு இழை..” என்று கேட்க பெண்ணிடம் கனத்த அமைதி.
ஆனால் சில வினாடிகளில் தன்னை மீட்டுக்கொண்டவள், “நம்ம வீட்ல எனக்கென்ன பயம்? அத்தை, மாமா, ஜித்து எல்லாம் இருக்காங்க. நான் இருந்துப்பேன். நீங்க பத்திரமா போயிட்டு வாங்க.” என்றவளிடம் பலமுறை உறுதி படுத்திக்கொண்டான்.
“நிஜமா தான் சொல்றேன்.. நீங்க முன்னாடி போங்க. நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்” என்று அனுப்பி வைக்க, பயணப் பொதியுடன் வந்தவனை சமையலறையில் இருந்து வெளியில் வந்த அபிராமி திகைப்புடன் பார்க்க,
“என்ன இதெல்லாம்?” என்பதாக திரு மனைவியைதான் முறைத்தார்.
“தம்பு எங்க கிளம்பற?”
“கொடைக்கானல்..”
“கொடைக்கானலா? பிங்கி எங்க? அவ லக்கேஜ் எடுக்கலையா?”
“ம்மா எனக்கு வேலையிருக்கு. இன்னும் மூணு நாளுல வந்துடுவேன்..”
“ஆனா இப்படி பிங்கி வந்த முதல் நாளே..” என்றவருக்கு திருவின் பார்வையை சந்திக்க முடியவில்லை.
“கல்யாணம் பண்ணி அடுத்தநாளே கிளம்பினா என்ன அர்த்தம்? இதுக்கு தான் தேடி தேடி கட்டினானா?” என்று திரு அடிக்குரலில் கேட்க, “அப்படியில்லைங்க..” என்றார்.
“வேற எப்படி?” என்றவரிடம் நாயகியால் பதில் சொல்ல முடியவில்லை. அவருக்குமே மகன் இன்றே கிளம்புவதில் உடன்பாடு இல்லை.
“தம்பு இப்ப தான் கல்யாணமாகியிருக்கு. இன்னும் ஒரு வாரத்துக்கு எங்கயும் போக கூடாதுபா.
ஆனா நீ இப்படி கொடைக்கானல் வரை கிளம்பறேன் சொல்றது சரியில்ல… பிங்கி எப்படி தனியா இருப்பா?”
“ம்மா அதெல்லாம் அவ மேனேஜ் பண்ணிப்பா. நான் சொல்லிட்டேன். நீங்க கவலையை விடுங்க.” என்றதும் திரு அதற்கு மேல் என்ன பேசுவது என்பது போல தாய் மகனை முறைத்து கொண்டே எழுந்து சென்றார்.
“ஏங்க நீங்களாவது சொல்லுங்க..” என்று கணவனை துணைக்கு அழைத்தார்.
“இப்போ எதுக்கு என்னை கூப்பிடற? எல்லாம் நீ கொடுக்குற இடம்!! கேட்ட பெண்ணை கட்டிவச்சாச்சு. இனி நான் என்ன பண்ணனும்?”
“என்னங்க இப்படி பேசுறீங்க?..”
“இதோபார் அம்மூ, நீ சொல்லியே கேட்காதவன், நான் சொல்லி நிறுத்த போறானா? எல்லாரும் புது பொண்டாட்டியை கூட்டிட்டு ஹனிமூனுக்கு போவாங்க. இங்க என்னடான்னா..?” என்றவர் வார்த்தைகளை கட்டுப்படுத்திக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார்.
வசீகரன் கிளம்பவும் நாயகிக்கு என்ன சொல்வது என்று புரியாத நிலை..!!
எப்போதும் தன் பயண திட்டத்தை முன்னரே தெரிவிக்கும் மகன் இப்போது கிளம்பும் நேரம் சொன்னதில் அவரே அதிர்ந்து போயிருந்தார்.
இதில் இழையின் களையிழந்த முகம் அவரை வாட்டிட, இருவரும் இணக்கமாக வாழ்க்கையை தொடங்கியபின் என்ன சொல்லி இழையை சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. முடிந்த வரை மருமகளை உடன் வைத்துக்கொண்டவர், அவள் உணவை முடித்து அறைக்கு திரும்பும் வேளை ஒன்றும் பேச முடியாமல் நின்றுவிட்டார்.
முதல்நாளே அவனில்லாததில் ஏனோ மனம் சுணங்க, யாரிடமும் காட்டிக்கொள்ளாத இழை அறைக்கு திரும்பி அமைதியாக அமர்ந்துகொண்டாள். பார்கவியின் தொடர் அழைப்புகளை ஏற்றால் எங்கே தன்னை மீறி ‘அழுதுவிடுவோமோ!’ என்ற அச்சத்தில் “குட் நைட்மா நாளைக்கு பேசுறேன்..” என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, வசீகரனின் சட்டையை எடுத்து வைத்தவள் கதவை சாற்ற போக, அவளது இரு மாமியார்களும் அறை வாசலில் நின்றிருந்தனர்.
“அத்தை..” என்ற விழிவிரிய நின்ற இழையோடு உள்ளே வந்தவர்கள், அன்றிரவு மட்டுமல்ல அதை தொடர்ந்த இரவுகளிலும் அவளை தனித்திருக்கவிடவில்லை.
அடுத்தநாள் சமையலறைக்கு வந்த இழை, இருவரையும் வெளியில் அனுப்பி விட்டு தானே சமைக்க தொடங்கியவள், முடிந்தளவு கணவனது பிரிவின் வலியை விரட்ட முயன்றாள்.
எத்தனை நேரம் தான் சமையலில் மூழ்க முடியும்?
உணவை பரிமாறி உண்டு முடித்தவளை மீண்டும் வசீயின் நினைவு வாட்ட, அறைக்கு திரும்பி கணவனுக்கு அழைத்தாள். மறுபுறம் அழைப்பு ஏற்கப்படவில்லை.. பலமுறை முயன்றவள் இறுதியாக மெசேஜ் அனுப்பி விட்டு தோட்டத்தில் தஞ்சம் புகுந்திருந்தாள்.
இதையெல்லாம் கண்ட திரு, மனைவியை கடிய முடியாமல் டீ குடித்து தன் கொதிப்பை போக்கியிருந்தார். ஆனால் ஜித்துவும் ப்ரணவும் அவளுக்கு ஊரை சுற்றிக்காட்டுவது, விளையாட்டு, பாடல்கள் என்று முடிந்தவரை இழையை திசைதிருப்பியிருந்தனர்.
அடுத்தநாள் மாலை ஜீவிகாவிடம் பேசிவிட்டு அறையிலிருந்து வெளியில் வந்த இழையின் காதில் திருவின் சத்தம் கேட்க, மெல்ல கீழே எட்டிப்பார்த்தவள் அருகே இருந்தவனிடம்,
“ஜித்து என்னடா சத்தம்? மாமா கோபமா இருக்காரா?”
“ஆமா அண்ணி..”
“ஏன்?”
“அண்ணி அண்ணா தாத்தா வீட்டை சுத்தப்படுத்தி வைக்க சொன்னார். நாங்களும் செய்தோம்.
ஆனா அது தெரியவும் பெரிப்பாக்கு கோபம்..”
“வீட்டை கிளீன் பண்ணினதுக்கு எதுக்கு கோபப்படறார்?”
“அண்ணா ஃபாரினர்ஸை அங்க தங்கவைக்க போறார்..”
“ஃபாரினர்ஸ்னா யாரு? அவரோட பிரெண்டா?”
“இல்லண்ணி..” என்றவன் இழைக்கு விளக்கமாக எடுத்து கூறவும், “அப்போ இதுவரை மாமாக்கு அவர் இப்படி செய்யறது தெரியாதா?” என்றவளுக்குமே இது புதுசெய்தி..!!
“இல்ல. அவருக்கு அண்ணா ஏர்ஃபோர்ஸ்ல இருந்து வந்ததுலயே கோபம். அதுக்கப்புறம் அண்ணா கம்பெனிலயும் வேலை செய்ய முடியாதுன்னு வந்தது சுத்தமா பிடிக்கலை. ப்ராஜக்ட்ஸ் எடுத்து பண்ணின போதும் நிலையான வருமானமில்லாம இது என்ன இஷ்டத்துக்கு இருக்கிறதுன்னு சொல்லிட்டு இருப்பார். அதான் இதெல்லாம் தெரிஞ்சா இன்னும் கோபப்படுவார்னு சொல்லலை. எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அப்பாக்கும் பெரிப்பாக்கும் தெரியாது..”
“அப்புறம் எப்படி தெரிஞ்சது?”
“அண்ணாவே சொல்ல சொன்னார்..”
“அவரா? எதுக்குடா?”
“ஒருமுறை பெரிப்பா எது செய்யறதா இருந்தாலும் கல்யாணம் பண்ணிட்டு பண்ணட்டும்.
நான் தடுக்க மாட்டேன்னு வாய் விட்டுட்டார். இப்போ அண்ணா அதையே வச்சு பெரிப்பாவை மடக்கவும் அவரால எதுவும் சொல்ல முடியலை. அதான் கோபத்தை ப்ரணவ் மேல காட்டிட்டு இருக்கார்… நல்லவேளை நான் தப்பிச்சேன்..” என்று திருவின் முன் நின்றிருந்த ப்ரணவை பார்த்து சிரித்தான்.
“டேய் அவன் திட்டு வாங்கறது உனக்கு சந்தோஷமா இருக்கா?” என்றவள் அவன் முதுகில் ஒன்று வைத்துவிட்டு கீழே சென்றாள்.
இழையை கண்டதும் பேச்சை நிறுத்திய திருவேங்கடத்திடம், “மாமா உங்ககிட்ட பேசணும்..” என்றதில் சற்று தணிந்தவர், “போடா போய் உருப்புடுற வேலையை பாரு..” என்று திட்டிவிட்டு, “சொல்லுடா பிங்கி..” என்றார்.
“முதல்ல உட்காருங்க மாமா. இந்தாங்க தண்ணி குடிங்க..” என்றதும் அவள் சொன்னது போலவே செய்தவரிடம், “ஏன் மாமா இவ்ளோ டென்ஷனாகறீங்க? அது உடம்புக்கு நல்லதில்லை. அப்பு சின்ன பையன். கோபமா இல்லாம சாதாரணமா எடுத்து சொன்னாலே புரிஞ்சுப்பான்…” என்றவளிடம் கோபம் யார் மீது என்று சொல்ல முடியாத திரு, வேறு வழியில்லாமல் “சரி” என்றார்.
“இன்னைக்கு மேட்ச் இருக்கு. மறந்துட்டீங்களா?”
“உனக்கு இன்னும் ஞாபகமிருக்காடா..” என்றவரின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி..!!
“எப்படி மாமா மறப்பேன்? நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சதே உங்களால தான்..!! அது மட்டுமில்ல, நீங்க வாங்கி கொடுக்குற சிப்ஸ், பாப்கார்ன்ல இருந்து எல்லாமே ஞாபகமிருக்கு.” என்றவள் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, சிற்றுண்டியோடு அவரருகே அமர்ந்து மேட்ச் பார்க்க தொடங்கினாள்.
“தெய்வம் அண்ணி நீங்க..” என்று அவள் காலை தொட்டு கும்பிட்ட ப்ரணவின் தலையை தட்டியவாறு இழையின் அருகே அமர்ந்த ஜித்து, “நீங்க இன்னும் மாறவே இல்ல அண்ணி..” என்று சிரிப்புடன் சிற்றுண்டியில் கைவைத்தான்.
அவன் கரத்தை தட்டிவிட்டவள், “அவனை காப்பாத்தாம சிரிச்சல உனக்கு கிடையாது போடா..”
என்று சிரிக்க, அதை முற்றிலுமாக துடைத்தெறியவே ஒருத்தி வந்து சேர்ந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஐயையோ புது வில்லியா .நல்லா போயிட்டு இருக்க காதல் கதைல கும்மி அடிக்கப் போறது யாரு