
பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெரிதாக எந்த வித்யாசமும் இழைக்கு தெரியவில்லை. ஏற்கனவே பழகிய உறவுகளாக இருந்தாலும், பார்கவி சொன்னது போல அவள் கடமைகளில் இருந்து இழை தவறவே இல்லை. அதேபோல அனைவரும் அவளை மருமகளாக இல்லாமல் மற்றொரு மகளாகவே நடத்தினர்.
காலை எழுந்தது முதல் அனைவருக்கும் பார்த்து பார்த்து செய்பவளை யாராவது ஒருவர் ‘போதும்’ என்று பிடித்து அமர்த்தினால் தான் உண்டு. வசீ அடுத்த நாளே கிளம்பிவிட்டதில், திருவில் தொடங்கி ப்ரணவ் வரையில் அனைவருமே இழையை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள தங்கள் நேரத்தை ஒதுக்கி துணை நின்றனர்.
ஆனாலும் வசீயின் பிரிவிற்கு அவள் முதலிலேயே தயாராக இல்லாததில் மனம் அவ்வப்போது சுணக்கம் கொள்ள தான் செய்தது.
அன்று கொடைக்கானலில் இருந்து வீடு திரும்பியவனை வரவேற்றது என்னவோ ஆரவார கூச்சல் தான்.
‘தன் வீடுதானா?’ என்ற ஆச்சர்யத்தோடு வசீகரன் உள்ளே நுழைய, அங்கே மொத்த குடும்பமும் ஹாலில் குழுமி இருந்தது. இழையும் சர்வாவும் நேரெதிரே அமர்ந்து கேரம் விளையாடி கொண்டிருக்க, மற்றவர்கள் அவர்களை சூழ்ந்திருந்தனர்.
ஸ்ட்ரைக்கர் இழையின் கரத்தில் இருக்க, குறி பார்த்துக்கொண்டிருந்தவள் வசீகரனின் வரவை கண்டு கொண்டு உடனே எழவும், “அண்ணி, இது சீட்டிங். எங்க போறீங்க, உட்காருங்க,” என்று சர்வா அவளை அமர்த்தினான்.
சுற்றி இருந்தவர்களும், “எங்க போற பிங்கி, உட்காந்து ஆடு,” என்றனர்.
“ஜித்து, உங்க அண்ணாடா,” என்றவளின் பார்வை வசீயிடம்.
“அண்ணா பேரை சொல்லி தப்பிக்க முடியாது, ஆடுங்க,” என்று சர்வா ஸ்ட்ரைக்கரை அவள் கையில் திணித்தான்.
“அவர் வர லேட்டாகும். கேம் முடியப் போகுது. சீக்கிரம் ஆடுங்கண்ணி..” என்று ப்ரணவ்.
“ஆமா பிங்கி, கடைசில விட்டுட்டு போகாத. யார் ஜெயிப்பீங்கன்னு தெரியணும்..” என்ற நாயகியின் பார்வையும் கேரம் போர்டில்.
“அத்தை, அவர் நிஜமாவே வந்துட்டார்..” என்று இழை மீண்டும் எழுந்துகொள்ள,
“அண்ணி, இப்படித்தான் பெரிம்மா தோற்கிற மாதிரி இருந்தா ஏதாவது காரணம் சொல்லி தப்பிச்சிடுவாங்க. இப்போ அண்ணனை சாக்கு சொல்றாங்க. இன்னைக்கு அது நடக்காது. உட்காருங்க அண்ணி..” என்று விடாப்பிடியாக வசீக்கு முதுகை காட்டி அமர்ந்திருந்த சர்வஜித், இழையை இழுத்து அமர்த்தினான்.
அதற்குள் வசீயை கண்டுவிட்ட அபிராமி, “நீ உட்காந்து ஆடு பிங்கி. நான் தம்புவை பார்க்கிறேன்,” என்று சமையலறைக்கு சென்றார்.
‘என்ன நடக்கிறது?’ என்று புரியாமல் பார்த்திருந்த வசீகரனுக்கு ஓரளவு நிலை புரிய, தன்னை தவிப்போடு பார்த்திருந்த இழையிடம் விளையாட்டை தொடர சொல்லி கண்ணசைத்தவன், மனைவியை பார்த்தவாறு அவளெதிரே அமர்ந்து விளையாட்டை கவனித்தான்.
வசீகரன் எதிரில் அமரவுமே இழையின் கவனம் சிதறி போக, அடுத்து விளையாட பெரிதும் தடுமாறியவளிடம், “அவனை அடிச்சுக்க ஆளில்லைன்னு ஓவர் சீன் போடுவான் அண்ணி. இன்னைக்கு விடக்கூடாது..” என்று அவளருகே இருந்த ப்ரணவ் சப்தமிட்டான்.
அவனை எழ சொல்லி இழையருகே அமர்ந்த வசீகரன், “உன் ஃபோக்கஸ் எங்க இருக்கு? என்னை பார்க்காம காயினை பார்த்து ஆடுடி,” என்று ஸ்ட்ரைக்கரை ஒழுங்காக பிடிக்க செய்தான்.
“அண்ணா, இது சீட்டிங். நீங்க அண்ணிக்கு ஹெல்ப் பண்ணக்கூடாது..” என்ற சர்வாவை வசீகரன் பார்த்த பார்வையில் அவன் அடங்கிப் போனான்.
“செம டஃப்பா போயிட்டு இருந்ததுண்ணா. அண்ணியும் ப்ரோவும் ஆளுக்கு ஒரு ரவுண்ட் வின் பண்ணியிருந்தாங்க..” என்று ப்ரணவ் பேசிக்கொண்டிருக்க, இங்கு வசீகரனோ அடுத்த சில நிமிடங்களில் மனைவியோடு சேர்ந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தான்.
இழை ஜெயிப்பதை பார்க்கவே காத்திருந்த பசுபதியும் திருவும் வெளியில் கிளம்பிட, அன்னையரும் தங்கள் வேலையை பார்க்க சென்று விட்டனர்.
“டேய் ப்ரோ, நான் தான் சொன்னேன்ல. அண்ணி கண்டிப்பா வின் பண்ணுவாங்கன்னு. எடுடா..” என்று சர்வாவை நிறுத்தி அவன் பாக்கெட்டில் கை விட்டிருந்தவன், “எவ்ளோ?” என்ற வசீயின் சீற்றத்தில் தூக்கிவாரிப் போட திரும்பியிருந்தான்.
“அண்ணா, அது…” என்றவன், வசீ சர்வாவை கோபமாக பேசுவதை கண்டு, “ஸாரிண்ணா, நான் தான் ஆரம்பிச்சேன். அவன் மேல தப்பில்லை. இனி செய்ய மாட்டேன்,” என்றான்.
வசீ ஆரம்பிக்கும் முன் பழச்சாறோடு வந்த இழை, “அப்பு, உன்னை அத்தை கூப்பிடுறாங்க பாரு,” என்றதும், “நன்றி தெய்வமே!!” என்று சத்தமின்றி சொன்னவன் மறுநொடியே அங்கிருந்து நழுவியிருந்தான்.
அவர்களுக்கு தனிமையளித்து சர்வாவும் தன் அறைக்கு திரும்ப, “அம்மா நிஜமாவே கூப்பிட்டாங்களாடி..” என்று இழையை தன்னருகே அமர்த்தினான்.
“அது… அது வந்து…” என்றவள் திணற, “சரி அதை விடு. என்னை மிஸ் பண்றேன்னு அத்தனை மெசேஜ் போட்டிருந்தவ, அழுதுட்டு இருப்பன்னு ஓடி வந்தா நீ என் ஃபோனைகூட அட்டென்ட் பண்ணாம ஜாலியா விளையாடிட்டு இருக்க. டூ யூ ரியலி மிஸ் மீ?” என்றவனின் விரல்கள் அவளோடு கோர்த்துக்கொண்டது.
“ஹும், ரொம்பவே. முதல்ல நீங்க கால் எடுக்கலைன்னதும் பயந்துட்டேன்..” என்றாள் கலங்கிய விழிகளோடு.
“டீப் ஃபாரஸ்ட்ல பெரும்பாலான இடங்களில் சிக்னல் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம்டா. அப்படியே கிடைச்சாலும் எனக்கு டைம் இருக்காது. நான் தான் கிளம்பற அவசரத்துல உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன்..” என்றவனின் அதரங்கள், கோர்த்திருந்த கரத்தில் அழுத்தமாக தன் முத்திரையை பதித்து அவள் இமைகளை தீண்டின.
“என்னங்க ஹால்…” என்று இழை பதறி விலகவும், அபிராமி அங்கே வரவும் சரியாக இருந்தது.
“சீக்கிரம் ரூம்க்கு வா..” என்றவன் அறைக்கு திரும்பிட உடனே நாயகியிடம் சென்றவள்,
“அத்தை, இன்னைக்கு நைட் டின்னர் நானே செய்யறேன் ப்ளீஸ்..” என்றதும் மருமகளை ஆசையோடு நெட்டி முறித்தார்.
பின்னே மகனின் பிரிவை சமாளிக்க சமையலறையிலேயே வாசம் செய்திருந்தவளிடம், காலை உணவு இழையினது, மதியம் அபிராமி, இரவு நாயகி என்ற தீர்மானத்தை கொண்டு வந்திருந்தார் நாயகி.
குளியலறையில் இருந்து தலை துவட்டிக்கொண்டு வந்த வசீகரனிடம், “என்னங்க, ஜூஸ் அங்கேயே வச்சுட்டு வந்துட்டீங்க…” என்றவாறு உள்ளே நுழைந்த இழையை,
“நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணினேன் தெரியுமாடி?” என்று அள்ளிக்கொண்டவனின் வார்த்தைகளோடு கரங்களும், அதரங்களும் போட்டி போட்டு கொண்டு தம் பிரிவை மனைவிக்கு கடத்த, அவனுக்கு குறையாத காதலோடு இழையும் தன் பிரிவை கணவனுக்கு உணர்த்தும் நேரம் பூஜை வேளை கரடியாக ப்ரணவ் கதவை தட்டியிருந்தான்.
முதலில் கண்டுகொள்ளாத வசீயிடம், இழை தொடர்ந்து கதவு தட்டப்படுவதை சொல்லவும்,
“தட்டிட்டு போகட்டும் விடுடி..” என்றான்.
“என்னங்க, ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது,” என்றதும், “சரி இரு, நான் பார்க்கிறேன்..” என்றவன் டிஷர்ட்டை அணிந்து தலையை கோதியவாறே கதவை திறந்தான்.
“என்னடா…”
“ண்ணா, ஸாரி. இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்.”
“சரி போ…” என்றிட ப்ரணவோ அங்கிருந்து அசையாமல், “ண்ணா, இன்னும் அரை மணி நேரத்துல எனக்கு க்ளாஸ் இருக்கு..” என்றான்.
“இருந்துட்டு போகட்டும், அதுக்கென்ன?” என்றவன் கதவை அடைக்க போக,
“அதில்லன்னா உங்களுக்கு மசாஜ் பண்ணிட்டு அட்டென்ட் பண்ணலாம்னு இருந்தேன்…”
“நான் உன்னை கேட்டேனா?” என்று சீறினான்.
“ண்ணா, நீங்க தானே…” என்று ஆரம்பிக்கவும், புருவத்தை கீறிக்கொண்டு தம்பியை பார்த்தவன், “ஆமா. ஆனா இனி உங்க அண்ணி பார்த்துப்பா. நீ போய் படிக்கிற வேலையை பாரு…”
“அண்ணிக்கு எப்படி தெரியும்?”
“ப்ச், அதெல்லாம் நான் சொல்லி கொடுத்திருக்கேன். நீ போடா” என்று வசீ முறைக்கவும் தான் கிளம்பினான்.
****************
கொண்ட அசதியில் தன்னை மீறி உறங்கி விட்ட இழை எழுகையில் நேரம் மாலை ஐந்தரை ஆகிவிட்டிருந்தது. குளித்து முடித்து கீழே வந்தவள், கணவன் வீட்டில் இல்லாததை கண்டு கைபேசியை எடுக்க, வசீகரனின் அழைப்பு.
“என்னங்க, எங்க இருக்கீங்க,” என்றதும், தான் சென்னை வந்திருப்பதாக கூறியவன், மேலும் செய்ய வேண்டியவைகளை அவளிடம் கூறி அழைப்பை துண்டித்திருந்தான்.
இழையும் வசீ சொன்னது போலவே செய்து வைத்தவள், ஆசையோடு இரவு உணவை சமைக்க தொடங்கினாள்.
அத்தனையும் வசீயின் பிடித்தமாக இருப்பதை கண்டு அபியும் நாயகியுமே அதிசயித்தனர்.
“ஜித்து சொன்னானா.”
“இல்லத்தே. எப்பவுமே நீங்க அவரோட ஃபேவரெட் தானே. அதிகமா செய்வீங்க. அதான்,” என்றவள், எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்று அனைவருக்கும் பரிமாறினாள்.
அபி எத்தனை வற்புறுத்தியபோதும், வசீயுடன் சேர்ந்து உண்பதற்காக காத்திருக்க தொடங்கினாள்.
ஆனால் வசீகரன் சொன்னதற்கும் தாமதமாக, இரவு பத்து மணிக்கு மேல்தான் வந்திருந்தான். உடன் அவன் சொன்னது போலவே வெளிநாட்டவர்கள் ஆர்ப்பாட்டமாக வந்திறங்கினர்.
இரவு நேரத்திலும் அவர்களை உரிய விதத்தில் வரவேற்று, அவர்களின் பூர்வீக வீட்டிற்கு அழைத்து சென்றான். சர்வாவும் ப்ரணவும் அவர்களை பொறுப்பெடுத்து கொள்ள,
முதலில் அங்கே செல்வதா வேண்டாமா என்ற தயக்கத்தோடு நின்றிருந்தவளிடம்,
“நான் வர லேட் ஆகும்மா. நீ வைட் பண்ணாம தூங்கு..” என்றவன் மீண்டும் கிளம்பினான்.
“என்னங்க, உங்களுக்கு டின்னர் அங்க எடுத்துட்டு வரவா. இல்ல சாப்ட்டுட்டு…”
“மணி பதினொன்னாக போகுது. இன்னும் சாப்பிடாம இருப்பேனா. நான் எப்பவும் டைம் ஸ்கிப் பண்ண மாட்டேன். வழியிலேயே சாப்ட்டோம். நீ சாப்ட்டியா?” என்றவன், அவள் பதிலுக்குக் கூட காத்திராமல் வெளியேற,
உள்ளே சென்ற இழை உணவை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு அறைக்கு சென்றாள்.
கணவனின் வரவிற்காக நள்ளிரவு வரை காத்திருந்தவள், அவர்கள் அறையின் பால்கனியில் இருந்து வசீகரனின் ஒவ்வொரு அசைவுகளையும் புகைப்படமெடுத்து, ஒரு கட்டத்தில் தன்னையறியாமல் உறங்கிப் போனாள்.
இரண்டு மணியளவில் அறைக்கு திரும்பியவன், அவள் கைபேசியில் இருந்த புகைப்படங்களை பார்த்ததையோ, அவளை கொண்டு வந்து படுக்கையில் கிடத்தியதையோ, அதன் பின் அவனது இறுகிய அணைப்பில் கட்டுண்டு கிடந்ததையோ அவள் அறியவில்லை.
காலை எழுந்தபோது வசீகரன் உடன் இல்லாததை கண்டவள் குளித்து விட்டு கீழே செல்ல,
“பிங்கி, தம்பு அவசரமா கிளம்பியாச்சு. உனக்கு சொல்ல சொன்னான்..” என்று காஃபி கொடுத்தார்.
“சரிங்க அத்தை” என்றவள் கோப்பையோடு மீண்டும் அறைக்கு திரும்பி, பால்கனியில் நின்று காஃபியை ஒரு மிடறு விழுங்க, அதுவோ கசந்து இறங்கியது. அதற்குமேல் குடிக்க முடியாமல் அதை அருகே இருந்த செடியில் ஊற்றிவிட்டாள்.
பின்னே கணவன் குறித்த எந்த எதிர்பார்ப்பும் வளர்த்துக் கொள்ளாமல் இருந்தவளின் ஒரே எதிர்பார்ப்பு, அவனுடனான காலை நேர காஃபி மட்டுமே. இப்போது அதற்கும் வழியில்லாமல் போனதில், நெஞ்சில் சிறுவலி உண்டாக, அதை விழுங்கியவாறு எதிரே பார்த்தவளின் விழிவட்டத்தில் விழுந்தான் வசீகரன்.
வெளிநாட்டினருடன் பேசிக்கொண்டிருந்தவன் அருகே இருந்த ஒரு பெண்ணின் பார்வை கணவன் மீது அடிக்கடி படிந்து மீள்வதை கண்டவளுக்கு முதலில் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் மெல்ல அவன் அருகே நாற்காலியை நகர்த்தி போட்டவள், அடுத்த சில நொடிகளிலேயே தன் கையில் இருந்த கோப்பையை அவனுக்கு ஊட்ட முயல்வதை கண்டு இழைக்கு பதறியது.
அவள் ஆண்ட்ரியா. ஏற்கனவே ஒருமுறை இந்தியா வந்தவளுக்கு அப்போதே வசீகரனுடன் பரிட்சயம் உண்டு. அவனது வலைதள பக்கங்களை தொடர்ந்தவள், முதல் ஆளாக அவன் புகைப்படங்களுக்கு லைக் போடுவதில் தொடங்கியது இப்போது அவனோடு டேட் செய்ய முயல்வது வரை வந்திருந்தது.
அடுத்த நாள் காலையும் பால்கனியில் நின்றிருந்த இழைக்கு, இப்போது வசீகரனின் வேலைகள் குறித்து ஓரளவு புரிபட, அமைதியாக கவனிக்க தொடங்கினாள்.
ஆனால் நேற்று போலவே இன்றும் ஆண்ட்ரியாவின் விழிகள் வசீகரனை வட்டமடித்து கொண்டிருப்பதை கண்டவளுக்கு சாதாரணமாக அதை கடக்க முடியவில்லை.
அன்று மட்டுமல்ல அதை தொடர்ந்த மூன்று நாட்களுமே வசீகரனுடன் பெரிதாக நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு பிடித்ததை சமைத்தவளுக்கு, அதை ஒருவேளையேனும் அவனோடு சேர்ந்து சாப்பிட்டுவிட முயன்றபோதும் முடியவில்லை.
வசீ அவளின் பொறுப்பை அபி, நாயகியிடம் கொடுத்திருக்க, அவர்களின் வற்புறுத்தலின் பேரில் பேருக்கு சாப்பிட்டதாக கொறித்து விட்டு அறைக்கு திரும்பிவிடுவாள். அது கூட பரவாயில்லை. ஆனால் ஆண்ட்ரியா எதையேனும் செய்து கொண்டு வந்து எதார்த்தம் போல வசீக்கு ஊட்டிவிடுவதை தான் அவளால் தாள முடியவில்லை.
திருவால் எதையும் கேட்க முடியாமல் போக, அவ்வப்போது மனைவியை முறைத்து விட்டு சென்று விடுவார்.
அன்று குலதெய்வ கோவிலுக்கு செல்வதால், அதிகாலையே தயாராகி கீழே வந்தவள், கோவிலுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்த அபிராமியிடம்,
“அத்தை, வேற ஏதாவது எடுத்து வைக்கணுமா? இல்ல சாமிக்கு பிரசாதம் ரெடி பண்ணனுமா சொல்லுங்க?”
“இல்லடா பிங்கி. அங்க போயிட்டு உன் கையாள பொங்கல் வச்சு படைச்சுட்டு, அதே பிரசாதம் எல்லாருக்கும் கொடுத்துடலாம். ஜித்துகிட்ட பிரசாத தட்டு வாங்கிட்டு வர சொல்லியிருந்தேன். வந்துட்டான்னு பாரு.”
“சரிங்க அத்தை.”
“அப்புறம் அங்கிருந்து வர வழியில நம்மோட தோப்பு வீட்டுக்கு போய், அங்கேயே மதிய சமையல் முடிச்சுட்டு சாயங்காலம் வரலாம்னு உங்க மாமா சொல்லியிருக்கார். அக்காகிட்ட அதுக்கான மளிகை வந்துடுச்சான்னு கேட்டுட்டு எடுத்து வச்சுடுடா.”
“சரிங்க அத்தை.”
என்று சொல்லி ஜித்து கொண்டு வந்திருந்ததை பத்திரப்படுத்திவிட்டு, மாளிகையையும் சரிபார்க்க இழையை அழைத்த வசீகரன், தாத்தா வீட்டிற்கு வரச் செய்திருந்தான்.
அவன் அருகே வந்து நின்றவள், எதிரில் இருந்தவர்களிடம் சம்பிரதாயமாக புன்னகைக்க,
“This is my better half” என்று அறிமுகப்படுத்தவும், அவர்களும் அவளுக்கு வணக்கம் செய்தனர்.
“கூப்ட்டீங்களா?”
“ஆமா. வந்திருக்க லேடீஸ்க்கும் கோவிலுக்கு புடவை கட்டிட்டு வர ஆசை. ஆனா தெரியல. அவங்களுக்கு ஹெல்ப் பண்றியா. முடியுமா?”
“இதென்னங்க கேள்வி?! கண்டிப்பா,” என்றவள் உள்ளே சென்று அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புடவை கட்டி முடிக்கையில் அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
பின்னே அவள் நுழைந்ததிலிருந்தே ஆண்ட்ரியாவின் பார்வை, ஜன்னல் வழியே கீழே நின்றிருந்த வசீகரனை வட்டமடித்து கொண்டிருப்பதை கண்டவள், அவளிடம் பேச்சு கொடுத்து திசை திருப்ப முயன்றபோதும், கைபேசியில் புகைப்படம் எடுப்பது, அருகே இருந்தவளிடம் அவனை சுட்டிக்காட்டி பேசுவது என்றிருந்தாள்.
அதற்குமேலும் அங்கிருக்க முடியாதவள் கீழே வர, “அம்மா கிட்ட அவங்களுக்கு பூ, வளையல் வாங்கி வைக்க சொல்லியிருந்தேன். வாங்கிட்டு வந்து கொடுத்துடு,” என்றதும் மனமே இல்லாமல் சொன்னதை செய்து விட்டு கீழே இறங்க, அவளோடு மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.
ஆண்கள் அனைவரும் பஸ்ஸில் ஏறியிருக்க, வசீ புல்லட்டில் அமர்ந்திருந்தான்.
“நீ தம்புவோட வந்துடு பிங்கி,” என்ற நாயகி பஸ்ஸில் ஏற,
திருமணத்திற்கு பின் அவனுடனான முதல் பயணம். முகம் கொள்ளா புன்னகையோடு, “சரிங்க அத்தை,” என்றவள் வசீயிடம் சென்றாள்.
“நாம் போக போறது வில்லேஜ். வழி அவ்வளோ நல்லா இருக்காது. புடவையோடு உனக்கு இதுல வரது கஷ்டமா இருக்கும். நீ அம்மாவோட வந்துடு இழை. நானும் ஜித்துவும் வரோம்..” என்றதும், சிறு ஏமாற்றம் முகிழ்த்தாலும், தனக்காக பார்ப்பவனின் அக்கறையில், “சரிங்க” என்றவள் பஸ்ஸில் ஏற அவள் பின்னே மற்ற பெண்களும் ஏறியிருந்தனர்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில், ஆண்ட்ரியா வசீயின் பின்னே புடவையோடு இருபுறமும் காலிட்டு அவன் தோள்களை பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
+1
1

