Loading

ஒரு வாரம் கடந்து போனது.

புவனன், வீட்டு மொட்டை மாடியில் நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தான். நிலவு இல்லா வானம். நட்சத்திரங்களால் நிரம்பி இருந்தது.

அருகே யாரோ வருவது போல் இருக்க, திரும்பிப் பார்த்தான். யோகமித்ரன் வந்து சுவற்றில் சாய்ந்து நின்றான்.

“சொல்லு.. என்ன பிரச்சனை?” என்று அவன் கேட்க, புவனன் பெருமூச்சு விட்டான்.

யோகமித்ரனிடமிருந்து பெரிதாக எதையும் மறைக்க முடியாது. சுலபமாக கண்டு பிடித்து விடுவான்.

“ஆஃபிஸ்ல ஒரு பிரச்சனை” என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

“உன் கூட இருக்க ரெண்டு பேரு மேலயும் உனக்கு நம்பிக்கை இருக்கா?”

“இருக்குடா. நானும் அவங்கள பத்தி எல்லாம் யோசிச்சு பார்த்துட்டேன். எங்கயுமே அவங்க கிட்ட தப்பு கண்டு பிடிக்கிற மாதிரி இல்ல”

“ஓஓ..” என்று சில நொடிகள் அமைதியானவன், “அப்போ கம்பெனில இருக்க மத்தவங்க யார் மேலயாச்சும் டவுட் இருக்கா?” என்று கேட்டான்.

“எல்லாரையுமே இப்ப சந்தேகமா தான் பார்த்துட்டு இருக்கேன். யாரனு தனியா கண்டு பிடிக்க முடியல.. ப்ச்ச்”

மித்ரன் சில நொடிகள் தீவிர ஆலோசனையில் ஆழ்ந்து விட்டு அண்ணனிடம் திரும்பினான்.

“உங்க மூணு பேர்ல யாரு ஓட்ட வாய்?”

“ஓட்ட வாயா?”

“யாரு சட்டுனு உளறுவா?”

“ஏன் கேட்குற?”

“யாரு ஓட்ட வாயோ, அவன் மூலமா தான் விசயம் வெளிய போயிருக்கனும். இப்ப பணம் காணாம போன விசயம் வெளிய தெரியக்கூடாதுனு ஆர்டர் போட்டுருக்காங்க உன் சி.இ.ஓ. அப்படினா மூணு பேருமே இப்ப வர சொல்லிருக்க மாட்டீங்க. ஆனா அந்த விசயத்த தெரிஞ்சுக்க அந்த ஓட்ட வாய் கிட்ட அடிக்கடி ஒருத்தன் வருவான். அவனுக்கு பணத்த பத்தி என்ன முடிவு பண்ணாங்கனு தெரிஞ்சுக்க வேண்டியிருக்கும். அவன பிடி. பிரச்சனை முடிஞ்சுடும்”

மித்ரன் கூறியதும் புவனன் முகத்தில் ஒரு வெளிச்சம் வந்தது.

“தாங்க்ஸ்டா. என்ன செய்யுறதுனு தெரியாம.. வேலை போனா இன்னொன்னு தேடிக்கலாம். ஆனா அவங்க போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுப்பேன்னு சொல்லிட்டாங்க. இவ்வளவு பணம் போனப்புறமும் இவ்வளவு நாள் எங்கள விட்டு வச்சதே பெருசு தான். இதுக்கு மேல கருணையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனா அம்மா, சாது, நீ எல்லாம் எப்படி எடுத்துப்பீங்கனு ரொம்ப பயந்துட்டு இருந்தேன்”

“சில் ப்ரோ. நான் சொன்னத செய். எடுத்தவன் சிக்குனா நன்மை. இல்லனா நம்ம மேல தப்பில்லனு நிரூபிச்சுக்கலாம்” என்று அவன் தோளில் தட்டி விட்டு இறங்கிச் சென்றான்.

அடுத்த நாளும் கடந்து போக, மூவரும் சம்பூர்ணாவின் முன்பு நின்றனர்.

“எதாச்சும் சொல்லனுமா?” என்று அவள் கேட்க புவனன், “சாரி மேடம். யாரு பணத்த எடுத்துருந்தாலும் அது எங்க மூணு பேரோட கவனக்குறைவு தான். அதுக்கான பொறுப்ப நாங்க மூணு பேரும் ஏத்துக்கிறோம்.” என்றான்.

சம்பூர்ணா தலையசைக்கும் போதே, “நோ மேடம். நான் எந்த தப்பும் பண்ணல” என்றான் ஒருவன்.

“நான் எதுவுமே செய்யாம என்னால இந்த பொறுப்ப ஏற்க முடியாது. திருடுனுவனுக்கு தான் தண்டனை கிடைக்கனும்” என்றான் மற்றொருவன்.

புவனன் மற்ற இருவரையும் திரும்பி பார்க்க, “நீங்க என்ன சொல்லுறீங்க புவனன்?” என்று கேட்டாள்.

“நான்..” என்று ஆரம்பித்தவன் உடனே நிறுத்தி விட்டு, “அப்ப நாம மொத்தமா பொறுப்பெடுத்துக்க போறதில்ல? தப்பு செஞ்சவங்க தான் தண்டனை அனுபவிக்கனும் அப்படித்தான?” என்று இருவரையும் பார்த்து கேட்டான்.

ஆமாம் என்று தலையாட்டினார்கள். வெளியே அவ்வளவு பயந்து பேசியவர்கள், உள்ளே வந்ததும் புவனனை கழட்டி விட பார்த்தனர். புவனனை மட்டுமல்ல ஒருவருக்கொருவர் கூட தள்ளி நிறுத்தி தான் மட்டும் சரி என்று விட்டனர்.

“ஓகே. மேடம் அவங்க அவங்க பண்ண தப்புக்கு ஏத்த மாதிரியே தண்டனையையும் பொறுப்பையும் ஏத்துக்கிறோம்” என்று புவனன் கூற, சம்பூர்ணா, “ஓகே” என்றாள்.

“யாரு எடுத்ததுனு உங்களால கண்டு பிடிக்க முடியலயா?”

“கண்டு பிடிச்சுட்டேன் மேடம்” என்றதும் மற்ற இருவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

சம்பூர்ணா புருவம் உயர்த்தி கேள்வியாக பார்க்க, ஒரு பென்டிரைவை எடுத்து நீட்டினான்.

“இதுல வீடியோ ஆடியோ ஃபைல் இருக்கு மேடம்.” என்று நீட்டியவன், “பணத்த எடுத்தது டி.எல் சுபாஷ் மேடம்” என்றான்.

“சுபாஷா?” என்று மற்ற இருவரும் ஒரே குரலில் கேட்க, “ம்ம்.. அதுக்கு காரணம் இந்த ரெண்டு பேரும் தான்” என்று அருகே இருந்தவர்களை கை காட்டி விட்டான்.

“என்ன சொன்ன? நாங்களா?” என்று இருவரும் எகிற, புவனன் முறைத்துப் பார்த்தான்.

“அவங்கள ஏன் கை காட்டுறீங்க புவனன்?” என்று சம்பூர்ணா பென்டிரைவ்வை பிஏ விடம் கொடுத்து விட்டு, புவனனை பார்த்து கேட்டாள்.

“இவரு ஒரு உளறு வாய்னு எனக்கு தெரியும். ஆனா இவ்வளவு பெரிய விசயத்த கூட சாதாரணமா உளறி வச்சுருப்பார்னு எதிர் பார்க்கல. இவர் தான் பணத்த எடுத்துட்டு வர்ரதுல இருந்து எல்லா டீடைலும் அவனுக்கு கொடுத்தது” என்று ஒருவனை காட்ட, அவனுக்கு பயத்தில் வியர்த்து விட்டது.

“ஆபிஸ்ல யாருக்கும் விசயம் தெரிய கூடாதுனு சொல்லியும், இங்க உட்கார்ந்துட்டு அவரோட ஃப்ரண்ட்ஸ்க்கு பணம் காணாம போன விசயத்த சொல்லிட்டு இருக்கார். அதோட ஆடியோ ஃபைல் இருக்கு. இவர் பேசுறத சுபாஷ் மறைஞ்சு நின்னு கேட்டுட்டு இருந்தான்.”

“அதுனால மட்டும் சுபாஷ் தான் திருடுனதுனு சொல்ல முடியாதே?”

“ஆமா மேடம். அந்த ஆடியோ வீடியோ எல்லாம் பாருங்க. தெரியும்” என்று கூற பிஏவை பார்த்தாள்.

அவனும் மடிக்கணினியில் இணைத்து ஆடியோவை ஓட விட்டான். அதில் நண்பனிடம் தான் உளறியது பதிவாகி இருக்க கேட்டு பயந்து போனான் அவன்.

அடுத்ததாக சுபாஷ் ஜெனரேட்டர் அறைக்குள் கைபேசியில் பேசிக் கொண்டே நுழைந்தான். அரை மணி நேரம் கழித்து வெளியே வரும் காட்சி அடுத்த காணொளியில் இருந்தது.

“முதல் தப்பு இவர் உளறுனதுனா.. ரொண்டாவது தப்பு.. லாக்கர்ல வச்ச பணத்தோட சாவிய ஜாக்கிரதையா வைக்காத அடுத்தவரோட தப்பு.” என்று மிச்சமிருந்தவனை கை காட்டினான்.

“நானா?”

“நீங்க தான் சார். பணம் தொலைஞ்சது நமக்கு எப்ப தெரியும்? ஈவ்னிங் அஞ்சு மணிக்கு. அது வரை பணம் பத்திரமா இருக்குனு தான் நினைச்சுட்டு இருந்தோம். ஆனா பணம் காலையில பதினோரு மணிக்கே தொலைஞ்சு போச்சு. லாக்கர்ல வச்சு சாவி உங்க கிட்ட தான கொடுத்தோம்? அந்த லாக்கர உடைச்சு பணத்த எடுக்கல. சாவிய போட்டு திறந்து எடுத்துருக்கான். அப்ப சாவி அவன் கைக்கு போயிட்டு திரும்ப உங்க டேபிள்க்கு வர்ர வரை சார் என்ன பண்ணீங்க?”

“அவன் இந்த சாவி வச்சு தான் திறந்தான்னு எப்படி சொல்லுறீங்க? டூப்ளிகேட் வச்சு கூட திறந்துருக்கலாம்”

“அதுசரி. டூப்ளிகேட் செய்யனும்னா அந்த பூட்ட பார்க்கனும். பார்த்துட்டு போய் சாவிய செஞ்சுட்டு வர்ரதுக்கு ஒரு நாள் ஆகும். இங்க ஒரு மணி நேரத்துல திருட்டு முடிஞ்சு போச்சு”

“எப்படி எடுத்துருப்பான்னு சொல்லுறீங்க?” என்று சம்பூர்ணா அமைதியாகவே கேட்டாள்.

“இப்ப சுபாஷ் ஜெனரேட்டர் ரூமுக்குள்ள போறத பார்த்தீங்கள்ள மேடம். அங்க போய் ஜெனரேட்டர் ரிப்பேர் பண்ணி விட்டுட்டான். அன்னைக்கு ஊர் முழுக்க மன்த்லி பவர் கட். உடனே ஜெனரேட்டர் ஆன் பண்ண போனா அது ரிப்பேராகி இருக்கு. அத சரி பண்ணுறதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகும். ஏசி இல்லாம இருக்க முடியலனு இவர் ரூம விட்டு வெளிய வந்துட்டார். அந்த ரெண்டு மணி நேரமும் எந்த சிசிடிவியும் வொர்க் ஆகல. வேலையும் நடக்கல. எல்லாரும் அரட்டை அடிச்சுட்டு வேலை நடக்குற இடத்த விட்டுட்டு வெளிய போயிட்டாங்க. அப்ப தான் சுபாஷ் இவர் ரூம்ல போய் சாவிய எடுத்து பணத்தையும் எடுத்துட்டு உடனே அத எடுத்துக்கிட்டு வீட்டுக்கும் கிளம்பிருக்கான். ரெண்டு மணி நேரம் கழிச்சு ஜெனரேட்டர் ஆன் ஆனதும் திரும்பி வந்துட்டான்.”

“வீட்டுக்கு கொண்டு போனானா?”

“ஆமா மேடம். வேற எங்கயும் கொண்டு போயிருக்க முடியாது. காலையில இருந்து ஒரு சட்டையில இருந்தவன் அந்த ரெண்டு மணி நேர கேப் கழிச்சு பார்த்தா வேற சட்டையில இருக்கான். வீட்டுல பணத்த வைக்கும் போது சட்டைய மாத்தியிருக்கலாம். எல்லா பக்கமும் பார்க்கும் போது அவன் மேல மட்டும் தான் சந்தேகம் வருது. அவன் தான் எடுத்துருக்கனும்.”

“அவன் எடுத்துருக்கான்னு தெரிஞ்சும்.. பொறுப்ப ஏத்துக்கிறேன்னு ஏன் சொன்னீங்க?”

“என் தப்பும் இதுல இருக்கு மேடம். இவங்க ரெண்டு பேரையும் போய் நம்பினேன்ல? அது என்னோட தப்பு மேடம். ஒரு உளறு வாய். ஒரு கேர்லஸ் பர்ஷன். ரெண்டு பேரையும் நம்பிட்டு லாக்கர ஒப்படைச்சது என்னோட தப்பு. இவங்க ஆசை பட்ட மாதிரி அவங்க அவங்க தப்புக்கு ஏத்த தண்டனைய நீங்களே கொடுங்க” என்று முடித்தான்.

சம்பூர்ணா எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு கையை திருப்பி மணி பார்த்தாள்.

“மீட்டிங் முடிச்சுட்டு வந்து பேசிக்கலாம். இங்கயே இருங்க” என்று மூவரிடமும் சொல்லி விட்டு பிஏவோடு வெளியேறி விட்டாள்.

புவனன் அங்கிருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து விட, மற்ற இருவரும் அவனை முறைத்தனர்.

“ஆள கண்டு பிடிச்சுட்டனு ஏன் சொல்லல?” என்று அவனிடம் பாய்ந்தனர்.

“எதுக்கு? அதையும் உளறி வைக்கிறதுக்கா?”

“அப்ப என் கிட்ட சொல்லிருக்க வேண்டியது தான? சிசிடிவி ஃபுட்டேஜ் எல்லாம் எடுத்துட்டு ஒரு வார்த்தை கூட சொல்லல?”

“ஒரு சாவிய ஒழுங்கா வைக்க தெரியல உனக்கு. உன்னை நம்பி இந்த ஃபுட்டேஜ் விசயத்த சொல்லனுமா?” என்று நக்கலாக கேட்டான்.

“நீ வேணும்னே எங்கள மாட்டி விடுற”

“யாரு நானா? நான் என்ன சொன்னேன்? என்ன நடந்தாலும் அது எங்க தப்பு தான்னு எல்லாரும் பொறுப்பேத்துக்கலாம்னு சொன்னேன். கேட்டு தலைய தலைய ஆட்டிட்டு இங்க வந்து அப்படியே பல்டி அடிக்கிறீங்க? அப்ப நான் மட்டும் உங்க தப்ப தலையில போட்டுக்கனுமா? அவங்க அவங்க தப்ப தனித்தனியா விளக்கியாச்சு. அதுக்கான தண்டனை எது வந்தாலும் வாங்கிக்க வேண்டியது தான். சும்மா என் மேல கோபப்பட்டு நோ யூஸ்”

“நீ முன்னாடியே இதெல்லாம் சொல்லியிருந்தா நாங்க ஏன் மாத்தி பேசப்போறோம்?”

“ஓஹோ.. என் மேல தப்பு கம்மி. உங்க மேல தப்பு ஜாஸ்தினு தெரிஞ்சா தான் என்னை கூட்டு சேர்த்துப்பீங்க? இல்லனா நான் நல்லா இருந்தா போதும்னு கழட்டி விடுவீங்க? போய் உட்காருங்க. மேடம் வந்தப்புறம் என்ன நடக்குதோ பார்ப்போம்.” என்று கடுப்பாக சொல்லி விட்டு, கண்ணை மூடி நாற்காலியில் சாய்ந்து சுழல ஆரம்பித்தான்.

மற்ற இருவரும் எதுவும் பேச முடியால் நிற்க, புவனன் முகத்தில் எரிச்சல்.

‘எல்லாமே எங்களது தவறு. நாங்கள் விசயத்தை ரகசியம் காக்கவில்லை. நாங்கள் பொறுப்பாக சாவியை வைக்கவில்லை’ என்று அத்தனையும் பொதுவாக சொல்ல தான் நினைத்து இருந்தான்.

இந்த இருவரும் செய்த வேலையில் கடுப்பாகி, தனி தனியே பழியை பிரித்து விட்டான்.

ஒரு மணி நேரம் அந்த அறைக்குள் பேரமைதி நிலவியது. ஒருமணி நேரம் கழித்து சம்பூர்ணா வர, அவளோடு காவலதிகாரி இருவர் வந்து சேர்ந்தனர்.

சுபாஷ் அப்போதே கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டான். அலுவலகம் மொத்தமும் இந்த விசயத்தில் ஸ்தம்பித்து நிற்க, விசயத்தை எல்லோர் முன்பும் சொல்லி விட்டாள் சம்பூர்ணா.

“அண்ட்.. பணத்த சரியா ஹேண்டில் பண்ணாததால, இங்க ரெண்டு பேரையும் டெர்மினேட் பண்ணுறேன். புவனன் கூட இருக்கவங்களோட தப்ப தாமதமா கண்டு பிடிச்சதால.. டீ-ப்ரமோஷன். இனி அவர் சுபாஷ் இருந்த இடத்துக்கு வருவார்.” என்று முடித்து விட்டாள்.

அவளது ஆணையில் இருவரும் வேலை விட்டு நீக்கப்பட, புவனனுக்கு மின்னஞ்சலில் வேலை மாறிய விபரம் வந்து சேர்ந்தது.

அதை படித்து பார்த்தவன் பெருமூச்சு விட்டான். அதோடு தப்பித்தது பெரிய விசயமாகத்தான் இருந்தது. காவல்துறையில் அவர்கள் மீது சாம்பூர்ணா புகாரளித்தால் மொத்தமும் கெட்டு விடுமே? அதனால் அந்த பதவி குறைப்பை ஏற்றுக் கொண்டு வேறு இடத்துக்கு மாறிக் கொண்டான்.

அன்று முழுவதும் அலுவலகம் சலசலவென இருந்தது.

தவறுகள் தண்டிக்கப்படுவதும் மன்னிக்கப்படுவதும் இயற்கையே!

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்