
தேவா, “சண்டை போடப் போறேன்னு யாரு சொன்னா? உன்னை ‘சரண்டர்’ ஆக்கப் போறேன்.” எனக்கூறி அவளை இழுத்து அவர்கள் முன் நிறுத்தியதில், அவள் தான் திகைத்து விட்டாள்.
கட்டிலில் அமர்ந்து, கண்கள் சிவந்து எங்கோ வெறித்துக் கொண்டிருந்த வைஷூவை கண்ட நிஷாந்த், “வைஷு” என்றழைக்க, அவள் தேம்பிக் கொண்டே, “நான் வேணும்னு பண்ணல மாமா. இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. வெறும் ரிசர்ச் பண்ணனும்ற ஆர்வத்தில மட்டும் நான் உன்ன தேடல… உன்னை எப்படியாவது குடும்பத்தோட சேர்த்து வைக்கணும்னு தான் தேடினேன்… நீ கிடைச்சதுக்கு அப்பறம், என்னை அறியாமல் நான் உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்.
வீட்ல சொல்லி, ஒருவேளை எங்க அப்பா உன்ன ஏத்துக்கலைன்னா! நீ என்னை விட்டுப் போயிடுவியோ, இல்ல உன்னைப் பார்க்க முடியாதோன்ற பயத்துல தான், நான் அப்பா கிட்ட பேசாம நாளைத் தள்ளிப் போட்டேன்.
“நான் ரொம்ப சுயநலமா இருந்துட்டேன்ல மாமா… உன்னை! உன்னை ரொம்ப அவமானப்பட வச்சுட்டேன்ல?” எனக் கேட்டு முகத்தை மூடி அழுதவளைக் கண்டு அவனுக்கு மனம் வலித்தது.
உடனே, அவள் முன் சென்று முட்டி போட்டுத் தரையில் அமர்ந்தவன், “இல்லடா! உன் மேல எந்தத் தப்பும் இல்ல.
அப்படி பார்த்தா நான் கூடக் கொஞ்சம் சுதாரிச்சுருக்கலாம்… காதல்ல சுயநலம் இருக்கலாம் தப்பில்லை, வைஷு… உன் அப்பா பேசுனதுக்கு, நீ என்ன பண்ணுவ? என் ஃப்ரெண்ட்ஸ் என் மேல இருக்குற பாசத்துல அப்படி பேசிட்டாங்க. சாரிடா…! நானும் தான் எதைப் பத்தியும் யோசிக்காம உன்னை லவ் பண்ணேன்…” என்றவன், அவள் அழுகை நிற்காமல் இருப்பதை கண்டு செய்வதறியாமல் பெருமூச்சு விட்டு, வெளியில் செல்லப் போக, வைஷு அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
“லவ் பண்ணேன்னு ‘பாஸ்ட் டென்ஸ்ல’ சொல்ற? அப்போ இப்போ லவ் பண்ணலையா, மாமா?” என்றாள் ஏக்கமாக. அவனோ அதில் இறுகி, “ஒரு தடவை தப்பு பண்ணி, அதால அடி வாங்கிட்டு, மறுபடியும் அதே தப்பை பண்ணி, நானும் முட்டாளாகி என் பிரெண்ட்ஸையும் முட்டாளாக்க விரும்பல வைஷு…” என்றதும், அவள் அதிர்ந்து விட்டாள்.
மேலும், “தயவு செஞ்சு இன்னொரு தடவை சூசைட் அது இதுன்னு முடிவெடுக்காத! உன் லைஃப் வேற! என் லைஃப் வேற…! உன் மனசுல தேவையில்லாம ஆசையை வளர்த்து விட்டதுக்கு சாரி…” என்றவனை, ‘அவன் தான் பேசுகிறானா?’ என நம்ப இயலாமல், அவனையே திகைத்துப் பார்த்து “மாமா” என்றழைத்தாள்.
“வேணாம் வைஷு. என்னை இன்னொரு தடவை அப்படி கூப்பிடாத! நமக்குள்ள அந்த உறவு என்னைக்கோ அறுந்து போச்சு!” என்று மனதை கல்லாக்கி கொண்டு வார்த்தையால் அவளைக் காயப்படுத்தியவன் வெளியில் சென்றிட, அவள் தான் பிரம்மை பிடித்ததை போல் அமர்ந்திருந்தாள்.
“இந்தப் பொண்ணு யாருடா? ஏண்டா இவளைக் கடத்தி வச்சிருக்கீங்க? தடிமாடுங்களா! எத்தனை தடவை கேட்குறோம், வாயைத் திறந்து பேசுறீங்களா” என்று தமி விஷ்வாவையும், அருணையும் திட்ட, அவர்களோ அதனைக் கண்டுகொள்ளாமல், அந்த நிஷிதாவை தூக்கி காரில் அமர வைக்க ஆயத்தமாகினர்.
தமி, “ப்ச்! டேய் டி வி நீயாவது சொல்லுடா? சஸ்பென்ஸ் தாங்க முடியல. நாங்கல்லாம் எப்படி ஃபிளாஷ் பேக் சொன்னோம்… அதே மாதிரி நீங்களும் சொல்லணும்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உங்களுக்கு?” என்றவளை, மேலும் கீழும் பார்த்து முறைத்த அருண், “எது அந்த மினிஸ்டர் உங்களை மொக்கை பண்ணதுலாம் ஒரு ஃபிளாஷ் பேக்கா?” என நக்கலடித்தான்.
அதில், “ஏற்கனவே கடுப்புல இருக்கேன்… நீ வேற ஏண்டா அதையே ஞாபகப்படுத்துற? போஸ்டிங் வரட்டும், சிலை கடத்துறன்னு சொல்லி, உன்னை உள்ள தூக்கி போடுறேன் இரு…” என்று சபதம் கொடுத்தவளை பார்த்துக் கலகலவெனச் சிரித்தவன், “எங்க கூட சேர்ந்துமா நீ போஸ்டிங் கிடைக்கும்னு நம்பிகிட்டு இருக்க? உங்க ஜட்ஜமென்ட் ரொம்ப தப்புமா…” என்றான்.
தமியோ மிரண்டு, “போய் வாயை வாட்டர் வாஷ் பண்ணுடா! எருமை மாடு! போஸ்டிங் இல்லாம வீட்டுக்குப் போனா, என் வீட்டு நாய் கூட என்னை மதிக்காது…!” என்று தலையை மேலே சாய்த்து ஃபீல் பண்ண, விஷ்வா அமைதியின் சிகரமாக இருந்தான்.
எங்கே பேச? அம்மு தான் அவனைக் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தாளே! அதில் அவனுக்குத் தான் வார்த்தையே வரவில்லை. ‘எதுக்கு இவள் நம்மளை இப்படி பார்க்குறா?’ எனக் குழம்பியவன், குனிந்த தலை நிமிராமல் இருக்க, தமி, “என்ன டிவி, இந்நேரம் நீ நாலு பன்ச் டயலாக் எடுத்து விட்ருக்கணுமே…? இம்பூட்டு அமைதியா இருக்க?” என்று வியப்பாகக் கேட்க, அம்மு தமியின் தோளில் கை வைத்து, அவனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள். “டீ ல போடுவோம் இஞ்சி! இன்னைக்கு காணோம் டி வி யோட பன்ச்சி!” என தமி விஷ்வாவை நக்கலடிக்க, அருண் தலையில் அடித்து, “அவனே இன்னைக்கு தான் அதிசயமா அமைதியா இருக்கான். உனக்கு அது பொறுக்கலையா?” என அம்முவை பார்க்க,
அவள் விஷ்வாவை பார்ப்பதையும், அவன் அவளைப் பாராமல் குனிந்து இருப்பதையும் கண்டு தலையைச் சொரிந்து, ‘என்னாச்சு உன் பிரெண்டுக்கு?’ என்று கண்ணைக் காட்டினான் தமியிடம்.
அவளும் இருவரையும் கண்டு, ‘என்னடா நடக்குது இங்க? இவன் பார்த்து அவள் தலையைக் குனிஞ்சா, அதுல ஒரு நியாயம் இருக்கு. இங்க என்ன எல்லாம் தலைகீழா இருக்கு?” என விழித்தவள், அம்முவை உலுக்கினாள்.
அதில் நிகழ்வுக்கு வந்த அம்மு, “என்னடி உனக்கு?” என்று கடுப்பாகிட, அவள், “அதைத் தான்டி நானும் கேட்குறேன். என்னடி ஆச்சு உனக்கு? அவனை ஏன் இப்படி பார்க்கிற?
பாரு. பாவம் புள்ளை வெட்கப்பட்டு தலையெல்லாம் குனிஞ்சு நிக்குது.” எனக் கேலி செய்ய, அப்போது தான் தன்னை பத்தி பேசுகிறார்கள் என்று உணர்ந்த விஷ்வா சட்டென நிமிர்ந்து, தமியை முறைத்தான்.
அருண், “நீ ஏன்டா இப்படி நிக்கிற?” எனக் கேட்டதும், விஷ்வாவோ, “பின்ன வச்ச கண்ணு வாங்காம அவள் எதுக்கு என்னைப் பார்க்குறா…? எனக்கு ஒரு மாதிரி ஷையா இருக்குல.” என்று அவனிடம் புகார் செய்யவும், அம்மு அவனின் பாவனையை ரசித்துப் பார்க்க, தமியோ வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள்.
‘ச்சை இப்படி மானத்தை வாங்குறானே!’ என்று நொந்த அருண், அம்முவிடம், “நீ ஏன்மா அவனை அப்படி பார்க்குற?” எனக் கேட்க, அம்மு, “அடடடடா! ஒருத்தியை நிம்மதியா சைட் அடிக்க விடுறீங்களா? தொண தொணன்னு கேள்வி கேட்டுகிட்டு…” என்றதில் மூவருமே திகைத்து விட்டனர்.
தமியும் அவனைக் கேலி செய்கிறாள் என நினைத்திருக்க, அவள் இப்படி சொன்னது வியப்பையே கொடுத்தது.
விஷ்வா சிலையாகி நின்றிருக்க, அருண் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். பின், அம்முவே விஷ்வா திணறுவதை கண்டு, “சரி சரி! இந்தப் பொண்ணை மர வீட்டுல நல்லா கட்டிப்போட்டுட்டு, அப்படியே ஹோட்டலுக்கு போய் சிக்கன் பிரியாணி, மட்டன் சாப்ஸ், ஒரு எக் ஃபிரைட் ரைஸ் எல்லாம் வாங்கிட்டு வாங்க! உங்க சாப்பாடை சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு…!” என்று விட்டு,
தமியை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றிட, விஷ்வா தான் உச்சபட்ச குழப்பத்தில் நின்றிருந்தான்.
“அடேய் கிராதகா! நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட! என்னை இப்படி மாட்டிவிட்டுடீல…” என்ற ஆரு தேவாவை கோபத்தில் கண்ட மேனிக்கு திட்ட, அவனோ அந்த மினிஸ்டரின் ஆட்களிடம், “இந்தப் பொண்ணை தான் மினிஸ்டர் தேடிகிட்டு இருந்தாரு. இப்போ நான் அவளை இங்க ஒப்படைச்சுட்டேன்னு உங்க மினிஸ்டர் கிட்ட சொல்லிடுங்க…” என்க,
அங்கிருந்தவர்கள், “ஹே யாரு நீ? போலீஸா? என்ன போட்டு வாங்குறியா?” என்று அவனை நோக்கித் துப்பாக்கியை நீட்ட, தேவா, “கூல்! நான் போலீஸ்லாம் இல்ல… மினிஸ்டர் பிஏ சிவமணி தான், இவளைத் தேடச் சொல்லி, என்னை அப்பாய்ண்ட் பண்ணாரு. உங்களுக்கு சந்தேகமா இருந்தா, நீங்களே சிவமணிகிட்ட போன் பண்ணி கேளுங்களேன்” என்றிட, அமைச்சருக்குக் கீழ் வேலை பார்க்கும் கான்ஸ்டபிள் ஒருவர், வேகமாக சிவமணிக்கு போன் செய்தார்.
அங்கு ராஜாங்கன், “அந்தப் பொண்ணுங்க எங்க போனாங்கன்னு தெரியலைன்னு அசால்ட்டா சொல்றீங்க… அந்தக் காட்டுல தான் எப்படியும் சுத்திகிட்டு இருப்பாளுங்க. அங்க வச்சே அவளுங்க கதையை முடிக்கச் சொல்லு…” என்றதும், சிவமணி “சார், நான் அந்தப் பொண்ணுங்களை கண்டுபிடிச்சு நம்மகிட்ட ஒப்படைக்க தான் ஆள் போட்டுருக்கேன். எப்படியும் அவன் கண்டுபிடிச்சுடுவான்…” என்னும் போதே,
அவருக்கு போன் வர எதிர்முனையில் கான்ஸ்டபில் அங்கு நடந்ததை சொன்னார்.
சிவமணி வியந்து, ‘நம்ம ஆள் செட் பண்ணி அரை மணி நேரம் கூட ஆகலை, அதுக்குள்ள கண்டுபிடிச்சுட்டானே! ரொம்ப ஸ்மார்ட் தான்!’ என்று மனதில் புகழ்ந்தவர், “சார் அந்தப் பொண்ணை காட்டுல இருக்குற நம்ம ஆளுங்க கிட்ட நான் சொன்ன பையன் பிடிச்சு குடுத்துருக்கானாம் சார்…” என்றதும்,
ராஜாங்கன் விழி உயர்த்தி, “பரவாயில்லையே! இன்னைக்கு தான் நீ உருப்படியா ஒரு விஷயம் பண்ணிருக்க. அந்தப் பையனை விட்டே அவளை இங்க கூட்டிட்டு வரச் சொல்லு. அப்படியே மத்த பொண்ணுங்களும் வந்துருக்கணும்…” என்றதும், சிவமணி கான்ஸ்டபிளிடம், அந்தப் பையனிடம் போனை கொடுக்கச் சொல்ல, அவனும் தேவாவிடம் கொடுத்தான். தேவா, அமைதியாய் அதனை வாங்கி காதில் வைத்ததும், சிவமணி அவளை அழைத்துக் கொண்டு மினிஸ்டரின் இடத்திற்கு வரும் படி உத்தரவிட, தேவா, “ம்ம்” என்று மட்டும் சொல்ல, எதிர்முனையில் போன் கட் ஆகியது.
ஆனால் தேவா, போனை வைக்காமல் “ஓ! எதுக்கு சார் மண் வேணும்…?” எனக் கேட்டு விட்டு “ஓ! ஓகே ஓகே சார்! நான் அதையும் எடுத்துட்டு வரேன்” என்று அவனாகப் பேசி விட்டு போனை கான்ஸ்டபிளிடம் கொடுத்து, “இவளைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. அதோட இவள் ஆராய்ச்சி பண்ணுன மண்ணையும் எடுத்துட்டு வரச் சொன்னாங்க.” என்றதும், அங்கிருந்த ஒரு ரௌடி, அவனைச் சந்தேகமாகப் பார்த்தான்.
“மண் எதுக்கு?” எனக் கேட்டவனிடம், “என்னைக் கேட்டா? வேணும்னா மினிஸ்டருக்கு போன் பண்ணி கேளு!” என்று அசட்டையாகக் கூறியவன், தோளைக் குலுக்க, ஆரு, ‘கடவுளே இவனை என்ன டிசைனிங்ல மேனுஃபாக்ச்சரிங் பண்ணி அனுப்பி வச்சுருக்க…’ என நொந்தவள், ‘எங்கே அந்த ரௌடி, மினிஸ்டரிடம் கேட்டு விடுவானோ?’ என்று பதறி விட்டாள்.
தேவாவிடம், “டேய்! நீயே ஏண்டா அவனுக்கு ஐடியா குடுக்குற?” என முணுமுணுத்தவளிடம், “தப்பிச்சு போடி” என்றான். அவள் புரியாமல் பார்த்ததும், “ப்ச் தப்பிச்சு ஓடு” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறியதில், அவள் சட்டென்று ஓட முயன்றாள்.
ஆனால், தேவாவே அவளைத் தாவிப் பிடித்து, “எங்க ஓடப் பார்க்குற?” என்று அவள் இரு கையையும் பிடித்துப் பின்னால் கட்டி,
“இவள் எப்போ பாரு தப்பிச்சு போகவே ட்ரை பண்றாள். சீக்கிரம் மண்ணை எடுத்துட்டு, நான் இவளைக் கூட்டி கிட்டு போகணும். இல்லைன்னா மினிஸ்டர் உங்களைத் தான் திட்டுவாரு… வழி விடுறீங்களா?” என்று அசட்டையாகக் கேட்க, ஆருவுக்கோ அவனின் நடவடிக்கையையும், அவர்களைக் குழப்பும் விதத்தையும் கண்டு மயக்கமே வந்து விட்டது.
‘யப்பா டேய் உலக மகா நடிப்புடா சாமி’ என வியக்கும் போதே, அந்த ரௌடி ஆருவை ஒரு மாதிரியாகப் பார்த்து,
“பட்சி பறக்க முயற்சி பண்ணா, பறக்க முடியாத மாதிரி…” எனச் சொல்லிக்கொண்டே அவளை நெருங்க, அவள் தேவாவிடம் ஒன்றினாள். தேவா, அவனைத் தடுத்து நிறுத்தி, கோபத்தை அடக்கிக் கொண்டு, “வழி விடு” என்க, கான்ஸ்டபிளும் இருவரையும் விலக்கி, அவனை அனுப்பி விட்டார்.
அவசரமாக, அந்த மண் இருக்கும் இடத்திற்கு சென்று, அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தனர். தேவா, “சீக்கிரம்” என்க, அவள் “ம்ம்ம் ஒரு டூ மினிட்ஸ், இன்னும் அடியில இருக்குற மண் தான் வேணும்.” என்றதும், தேவாவும் வேகமாகத் தோண்டினான்.
இரண்டு நிமிட முயற்சிக்குப் பிறகு, அந்தப் பளபளப்பான மண் கண்ணில் தெரிய, “தட்ஸ் இட்! இந்த மண் தான் வேணும்….” என்று அவள் கொண்டு வந்த கேரிபேகில் அதனை நிரப்பினாள். தேவா, “இது போதும்ல? வா சீக்கிரம்…!” என்று அந்த மண்ணை அவன் கையில் வாங்கி கொண்டு, அவள் கையைப் பின்னால் வைத்துப் பிடித்து, கடத்தி கூட்டிப் போவது போல் நடந்தான்.
அந்த ரௌடியை தாண்டிப் போகையில், தேவா சட்டென அவள் பிடியை தளர்த்தினான். ஆரு “எதுக்குடா விட்ட?” என்று ரகசியமாகக் கேட்டதும், அந்த ரௌடியை கண் காட்டினான். அவளுக்கு அவனைக் கண்டு கடும் கோபம் தான். வந்ததில் இருந்தே அவன் பார்வை, அவள் மேனியை தான் மேய்ந்துக் கொண்டிருந்தது.
இப்போது தேவா, “தப்பிச்சு ஓடு” என்று அவள் காதில் சொன்னதும், படாரெனத் தேவாவை தள்ளியவள், அந்த ரௌடியின் அருகில் சென்று, அவனின் அடிவயிற்றிற்கு கீழேயே நங்கென்று அவள் முட்டியை வைத்து ஓங்கி ஒரு எத்து எத்த அவனோ அப்படியே சுருண்டு விட்டான்.
“நாயே, பொண்ணுனா எங்க வேணா பார்க்கலாமா?” என மீண்டும் அங்கேயே ஓங்கி மிதித்து விட்டு அங்கிருந்து ஓட, அவளை மற்றவர்கள் துரத்தப் போக, தேவா அவர்களைத் தடுத்து, “நான் அவளைப் பிடிக்கிறேன். நீங்கப் போய் அவன் உயிரோட இருக்கானான்னு பாருங்க!” என்று அவர்களைத் திசை திருப்பி, ஆருவின் பின்னால் ஓடினான்.
ஆரு வெகுதூரம் சென்று, ஓரிடத்தில் மூச்சு வாங்கி நிற்க, தேவாவும் மேலும் கீழும் மூச்சு வாங்கிக் கொண்டு, அவளருகில் வந்து நின்று, “எதுக்குடி இவ்ளோ தூரம் ஓடி வந்த, மெதுவா ஓட வேண்டியது தான?” என முறைக்க, ஆருவோ, ” ஹா! ஹா! ஹைய்யோ ஹா!ஹா! முடியல…” என்று கண்ணில் நீர் வர, வாய் விட்டுச் சிரித்தாள்.
“சரியான கிறுக்கனுங்களா இருப்பானுங்க போல! நீ சொன்னதை அப்படியே நம்புறானுங்க. இவனுங்க இவ்ளோ அரை லூசுன்னு தெரிஞ்சுருந்தா எப்பவோ உள்ள தள்ளிருக்கலாம்… ஹையோ” என மேலும் சிரிக்க, தேவா அவள் சிரிப்பைக் கண்டு, அவனும் மென்னகை புரிந்தான். அதோடு அவளைக் கேலி பார்வை பார்த்துப் புன்னகைக்க, “என்ன?” என்றாள் புருவத்தை உயர்த்தி.
அதற்கு அவன், “இல்ல… இந்த அரை லூசுங்களையும் நம்பி நீங்க ஏமாந்தீங்களே… அப்போ நீங்க நாலு பேரும் எவ்ளோ பெரிய லூசா இருப்பீங்க?” என்று உதட்டைக் கடித்து தலையைச் சாய்த்து குறும்பாக அவளைப் பார்த்தவனை, இடுப்பில் கை வைத்து முறைத்திட, அதில் அவன் புன்னகை மேலும் பெரிதாகியது.
அவனுக்கு அழகு காட்டியவள், “இவரு பெரிய அறிவுக் கொழுந்து! இன்னைக்கு பண்ணதை, நாங்க ரிசர்ச் பண்ணனும்னு சொல்லும் போதே பண்ணிருக்கலாம்ல? எதுக்குடா முள்ளுக்குள்ள எல்லாம் எங்களை அலைய விட்ட?” என்றிட,
அவன், “ஹான்!ஹான்! உனக்கு ஹெல்ப் பண்ண, இங்க என்ன ஃபிரீ சர்வீஸ்னு போர்டு போட்டுருக்கோமா? உனக்காக நான் ஏன் ரிஸ்க் எடுக்கணும்? அதோட உன் வேலை முடிஞ்சா நீ இங்க இருந்து எஸ் ஆகிடுவ. அப்போ உன்னை வச்சு, நான் பண்ண பிளான, எப்போ பண்றது…? அதான் இதை முதல்லயே பண்ண.ல” என்று சாதாரணமாகக் கூறிவிட்டு, முன்னே நடந்தவனின் முன் வந்து நின்றவள்,
“என்ன நீ, எப்போ பாரு பொடி வச்சே பேசுற…? எதையும் நேரா பேசமாட்டியா? என்னை வச்சு, நீ என்ன பிளான் வச்சுருக்க? சரி, இப்போ மட்டும், எதுக்கு ரிஸ்க் எடுத்த? இப்போ மட்டும், ரிசர்ச் முடிச்சுட்டு நான் இங்க இருந்து எஸ்கேப் ஆக மாட்டேனா?” என்றாள் திமிராக.
“என்னை மீறி, நீ இங்க இருந்து நகரக் கூட முடியாது சில்லி கேர்ள்…!” என நக்கலாகக் கூறியவனிடம், அவள் “ஏன் அப்படியாம்?” எனக் கையை கட்டிக்கொண்டு கேட்டாள்.
“உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும்னு, அந்த மினிஸ்டர்க்கு எதிரா உனக்கு ஹெல்ப் பண்ற நான்…! மினிஸ்டரால காரியம் ஆகணும்னு உனக்கு எதிரா அவனுக்கு ஹெல்ப் பண்ணா?” என்று எதிர் கேள்வி கேட்டான் கூர்பார்வையுடன்.
அவள் சற்று நேரம், அவனையே புருவத்தைச் சுருக்கி பார்த்து விட்டு, “உன்னால அப்படி பண்ண முடியாது…” என்றாள் மிருதுவாக. தேவா குழப்பமாக, மறுத்து ஏதோ பேசவர, அவள் கூலாக “லெட்ஸ் கோ” என்று குடிலை நோக்கி நடந்தாள்.
ஏனோ எப்போதும், அவன் இப்படி பேசும்போது, மெலிதாக மனதில் தோன்றும் பயமும், கோபமும், இப்போது சுத்தமாகவே வரவில்லை. அதற்குப் பதிலாக, அவன் மிரட்டிப் பேசும் போது, மனம் அவனை ரசிக்கச் சொல்லி, தொல்லை செய்தது. மனம் சொல்லும் பேச்சைத் தட்டாமல், அவளுக்குப் பக்கவாட்டில் நடந்து வந்த, தேவாவையே அவ்வப்பொழுது ரசித்துக் கொண்டு வந்தாள்.
அவன் சட்டென நின்று அவளிடம் திரும்பி, “என்ன?” என்க, அவள், “என்ன என்ன?” என்று குறும்பாகக் கேட்டதில், அவனோ தலையை மறுப்பாக ஆட்டி விட்டு, அவளிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் விறுவிறுவென நடந்தான்.
அவன் நடக்கிறேன் பேர்வழியென அவளிடமிருந்து தப்பித்து ஓடுவதை கண்டவள், “திருட்டுப்பயலே…!” என முணுமுணுத்து மெலிதாக நகைத்தாள்.

