Loading

திமிர் 21

 

கையில் இருந்த பைலை ஆராய்ந்தவன், அதைக் கமலிடம் நீட்டிவிட்டு முன்னே நடந்தான். பவ்வியமாகப் பின்னால் வந்தவன், “மீட்டிங் முடிச்சிட்டுக் கட்சி ஆபீஸ் போகணும் சார்.” என்றான்.

 

“ஏன்?”

 

“சாருக்கு எக்ஸ்ட்ரா போஸ்ட்டிங் கேட்டுப் பேசி இருந்தீங்க இல்லையா, அதுக்கு ஆப்போசிட்டா கட்சி ஆளுங்க இருக்காங்க. சிஎம் சார் நீங்களே பேசிட்டு ஒரு முடிவுக்கு வாங்கன்னு சொல்லிட்டாரு.”

 

“நான் இல்லாத அப்போவே பேசச் சொன்னனே, பேசலயா?”

 

“மூணு தடவைக்கு மேல பேசியாச்சு சார். ஒத்து வர மாதிரித் தெரியல.”

 

நடையில் சீற்றத்தைக் காட்டிக் கொண்டிருந்தவன், அதைச் சற்றும் குறைக்காது, “சிஎம் கூட ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணு.” என்றிட, “சார்…” இழுத்தான் கமல்.

 

“மூணு தடவை பேசுனதே ரொம்ப அதிகம். இதுக்கு மேலயெல்லாம் சீன் கிடையாது அவங்களுக்கு. நேரா சிஎம் கிட்டப் பேசிக்கிறேன்.”

 

“மீட்டிங்க்கு ஏற்பாடு பண்றேன் சார்.”

 

“இந்தத் தடவை என் கூட ஆதியும் வரணும்.”

 

“ஆதி சார், கட்சி ரிலேட்டடா எதுலயும் தலையிட மாட்டாரே சார்.”

 

“இனித் தலையிடட்டும். அதான், எனக்கு எதிரா நின்னு சரிக்குச் சரி பேசுறானே.” என்ற நேரம் ஆதிகேஷ் அங்கு வந்திருந்தான்.

 

தம்பியின் வார்த்தைக்கு முறைப்பைப் பதிலாகக் கொடுக்க, கண்டுகொள்ளாத உடன்பிறப்பு, “மீட்டிங் முடியற வரைக்கும் எந்த காலும் கனெக்ட் ஆகக் கூடாது.” என்ற கட்டளையோடு நடந்தவனின் கால்கள்,

 

“மேடம் கால் வந்தா சார்?” என்றதில் நின்றது.

 

அவசரம் இல்லாமல் திரும்பியவன், தூரமாக நிற்கும் தன்னவளையும், அவளைச் சுற்றி நிற்கும் தன் வீட்டு ஆள்களையும் பகுசாக நோட்டமிட்டு, “என் பொண்டாட்டி போன் பண்ண அடுத்த செகண்ட் கால் கனெக்ட் ஆகல, உன் காலை உடைச்சிடுவேன்.” என்றவனை ஆவென்று பார்த்தது அங்கிருந்த கூட்டம்.

 

வேலை விஷயத்தில், அதுவும் கட்சி விஷயத்தில், கறார் பார்ட்டி நம் நாயகன். எவ்விதச் சூழ்நிலை வந்தாலும், அவை முடியும் வரை சின்னச் சத்தம் கூட அவன் காதில் விழக்கூடாது. அப்படிப்பட்டவன் கூறிய வார்த்தையில்,

 

“காட்டுமிராண்டியக் காதல் மன்னனா மாத்திட்டீங்களே மேடம்.” சத்தமாகவே மதுணியைப் பார்த்துக் கூறினான் கமல்.

 

அவன் வார்த்தைக்கு வெட்கம் கலந்து அவள் சிரிக்க, முன்னால் சென்று கொண்டிருந்தவன் இதழ்கள் இறுக்கத்தைக் குறைத்து இலகுத்தன்மைக்கு மாறி விரிந்தது. அவன் வீட்டு ஆள்களை விட, அங்கிருந்த அனுசியாவின் முகத்தில் கோபத்தீ தாண்டவம் ஆடியது.

 

காரில் ஏறியவன் பின் இருக்கையில் ஏறிய கமலிடம், “இங்க என்னமோ நடக்கப்போகுது. மதுணிக்கு ஆபத்துன்னு தெரிஞ்சா, யார் என்னன்னு பார்க்காத. என்னோட கால் கனெக்ட்லயே இருக்கட்டும்.” எனக் காரை விட்டு இறங்க வைத்தான்.

 

மற்றொரு காரில் ஆதியும், நவரத்தினமும் கோபத்தோடு கிளம்பினார்கள். வண்டிச் சத்தம் அடங்கும் வரை அமைதியாக இருந்த அனு, “அனாதைக்கு வந்த வாழ்வைப் பார்த்தீங்களா ஆன்ட்டி.” சண்டைக்கு ஆரம்பப் புள்ளி வைத்தாள்.

 

மதுணிகா அங்கிருந்து அமைதியாகப் படியேற, “நில்லுடி!” அதிகாரக் கூக்குரல் இட்டாள் அனு.

 

உள்ளே வந்த கமலைப் பார்த்துக் கொண்டே ஏறிய இரண்டு படியை விட்டு இறங்கியவள், மாமியாரின் முகத்தைப் பார்த்தாள். அவரோ இவளைப் பார்க்கப் பிடிக்காது முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

 

“மரியாதையா இங்க இருந்து கிளம்பிடு. என் அப்பாவோட செல்வாக்கைப் பத்தி உனக்குத் தெரியாது. உயிர்மேல ஆசை இருந்தா இங்க இருந்து ஓடிடு.”

 

“அகா இல்லாத நேரம், பேசுறது சரியா இருக்காது. எதுவா இருந்தாலும் அவர் வந்ததுக்கு அப்புறம் பேசிக்கோங்க.”

 

அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்தவள் அதைத் தட்டிவிட்டு, “அவரு இவருன்னு பேசின, வாயைக் கிழிச்சிடுவேன். அகம்பன் யாருடி உனக்கு? கல்யாணம் பண்ணிக்கப் போறவ நான்… என்னைத் தவிர வேறு யாரும் உரிமையா பேசக்கூடாது.” எகிறிக்கொண்டு வந்தாள் மதுவிடம்.

 

“உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனா, உன் மேல செம கோவத்துல இருக்கேன். தேவை இல்லாமல் பிரச்சினை பண்ணாத.”

 

“உனக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கலாம். ஆனால், அனு இந்த வீட்டு மருமகள். என் புள்ள வாழ்க்கைக்காகத் தான் அவ பேசிட்டு இருக்கா. ஒரு குடும்பத்தைக் கெடுக்க உட்கார்ந்து இருக்கியே, உனக்கெல்லாம் மனசாட்சி இல்ல. ஊர் உலகத்துல வேற ஆம்பளையே கிடைக்கலையா உனக்கு? எதுக்குடி என் மகன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க. கல்யாணமே ஆகாம அவன் வீட்ல வந்து தங்கி இருக்கியே அசிங்கமா இல்ல.”

 

“இவளுக்கு எப்படி அசிங்கம் இருக்கும்?” என்றபடி உள்ளே நுழைந்தார் சங்கரன்.

 

“சார்…”

 

“வெயிட் பண்ணு கமல்.”

 

முதலாளியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அமைதியாக நின்றிருந்தான். தந்தை வந்த தைரியத்தில், “ஆமா ஆன்ட்டி. இவளுக்கு இது முதல் தடவை மாதிரித் தெரியல. இவ்ளோ தைரியமா இருக்கான்னா நல்லா பழக்கப்பட்டவள் போல.” என்றவள் பேச்சுக்குச் சங்கரனின் சிரிப்புச் சத்தம் எகிறியது.

 

“வண்டியத் திருப்பு!” என்ற அகம்பன் திவஜ் சத்தத்தில் அதிர்ந்த ஓட்டுநர் வந்த வழியே வண்டியைத் திருப்ப, “வாய மூடுடி!” காதலியின் குரல் கேட்டுத் திரும்பிய வண்டியை நிறுத்தச் சைகை செய்தான்.

 

“அடிச்சுப் பல்ல உடைச்சிடுவேன். இவங்க என்னோட மாமியார். என்னைத் திட்டவும், அடிக்கவும் உரிமை இருக்கு. அதே மாதிரி தான் இவங்க புருஷனுக்கும், பிள்ளைக்கும். அதைத்தாண்டி வேற யார் என்ன பேசுனாலும் சும்மா இருக்க மாட்டேன்.”

 

“எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ண எதிர்த்துப் பேசுவ.”

 

அடிக்கப் பாய்ந்து வந்தார் சங்கரன். அவரைத் துச்சமென எண்ணி, “உன் பொண்ணு மாதிரி ஒருத்திய எதிர்த்துப் பேசுறதுக்கு நிறையவே தைரியம் இருக்கு என்கிட்ட. பொண்ணா வளர்த்து வச்சிருக்க. உன் பொண்ணு பேசுன பேச்சை மட்டும் அங்க உட்கார்ந்து இருக்காங்களே அவங்ககிட்டச் சொன்னா, செருப்பால அடிச்சு அனுப்பிடுவாங்க. அவங்க மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு அமைதியா இருக்கேன். உன் பொண்ணும் நீயும் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும், என்னையும் அகாவையும் பிரிக்க முடியாது.” வார்த்தையால் தடுத்து நிறுத்தினாள்.

 

“அகம்பன் உன் கூட இருக்கற தைரியத்துல பேசுறியா? எப்படி உன்கிட்ட இருந்து பிரிச்சு உன்ன ஓட விடணும்னு எனக்குத் தெரியும்.”

 

“அவர் முன்னாடி பேசக் கூடத் தைரியம் இல்லை உனக்கு. நீ, என்னைப் பிரிச்சு அனுப்பப் போறியா? என் ஒழுக்கத்தைப் பத்திப் பேச இங்க யாருக்கும் எந்தத் தகுதியும் இல்லை.” என்றவள் பார்வை மாமியார் மீது ஊர்ந்தது.

 

வந்த நொடி முதல் அமைதியாக இருந்தவள், திடீரென்று எடுத்த விஸ்வரூபத்தில் அதிர்ந்தவரைத் திடமாகப் பார்த்து, “என் பிள்ளைக்குப் பொம்பளைங்க சகவாசமே இல்லன்னு நெஞ்சைத் தட்டிக்காத குறையா சொல்றீங்களே… அப்படியாப்பட்ட ஒருத்தன் என்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றாருன்னா, என் ஒழுக்கம் எப்படிப் பட்டதுன்னு யோசிச்சுப் பாருங்க.” என்றாள்‌.

 

ஆத்திரத்தை அடக்க முடியாத அனு, “உன்கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்கக் கூடாது. இவளை அடிச்சு வெளிய துரத்துங்கப்பா. அகம்பன் வந்து கேட்டா இந்த நாயே போயிடுச்சுன்னு சொல்லிக்கலாம்.” என்ற நேரம் ‘பளீர்’ என்று சத்தம் அந்த வீட்டை ஆட்டம் காண வைத்தது.

 

அங்கிருந்த கமல் வாய் பிளக்க, அவளை விட்டுத் தூரமாகச் சென்றிருந்தவன் முகத்தில் அப்படி ஒரு பொலிவு. காரை நிறுத்தச் சொன்னவன் கம்பீரமான குரலில், “மீட்டிங்க்குப் போங்கண்ணா…” என்றான்.

 

“சார்… மேடம் பின்றாங்க போங்க.”

 

“அகம்பன் திவஜ் பொண்டாட்டிக்கு, இவ்ளோ தைரியம் கூட இல்லனா எப்படிடா…”

 

“இனி ஒரு வார்த்தை பேசுனா, மொத்தப் பல்லும் கொட்டிடும். உன்ன மாதிரிப் பணத்துக்கு அலையுற அல்ப ஜென்மம் நான் இல்ல. நல்லவேளையா உன் வாயாலயே நீ யாருன்னு காட்டிட்ட. இல்லனா ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சிட்டோமேன்னு வருத்தப்பட்டு இருப்பேன்.” என்றவள் சங்கரன் பக்கம் திரும்பி,

 

“எனக்கும், அவங்களோட பையனுக்கும் ஏற்கெனவே கல்யாணம் முடிஞ்சுருச்சு. என் புருஷன் வீட்ல நான் இருக்கேன். உன் பொண்ணு தான் சம்பந்தமே இல்லாத இடத்துல உட்கார்ந்துட்டு வெட்டியா பேசிக்கிட்டு இருக்கா… முதல்ல கூட்டிட்டுக் கிளம்பு.” இந்த முறை வீட்டை மட்டும் அல்ல, கற்பகத்தையும் சேர்த்து அதிரவிட்டாள்.

 

கன்னம் சிவந்து கண்ணில் நீர் கோர்க்கத் தன்னை அடித்தவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அனு. மது சொன்ன வார்த்தையில் உறைந்த கற்பகம், அவள் மீதான பார்வையை அகலமாக்க, மூக்குடைந்த சங்கரன் வெறியாகி நின்றார்.

 

“என்னை முறைச்சி ஒரு பிரயோஜனமும் இல்லை. தைரியமான ஆம்பளையா இருந்தா அகா முன்னாடி பேசுங்க.”

 

“அவன் இருக்கற ஆணவத்துல தான இவ்ளோ பண்ற. அவன் கையாலயே உன் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ள வைக்கிறேன்டி.”

 

“ஆல் தி பெஸ்ட் அனு.”

 

“அங்கிளுக்கு இன்டைரக்ட்டா நீங்க குடுக்குற எல்லா சப்போர்ட்டையும் கட் பண்ணுங்கப்பா. உங்க சப்போர்ட் இல்லாம அவர் இத்தனை வருஷம் ஆட்சில இருந்திருக்க முடியாது. அங்கிளுக்குப் பிரச்சினை வந்தா அகம்பன் யோசிப்பான். இவளால தான் பிரச்சினைன்னு கோபப்படுவான். அங்கிளோட பதவிக்காகவாவது இவளை வீட்டை விட்டு அனுப்புவான்.”

 

“அடப் பைத்தியக்காரி! இதைப் பத்தி யோசிக்காமலா இருந்திருப்பாரு. இந்நேரம் எல்லா ஏற்பாட்டையும் பண்ணி இருப்பாரு. உங்க சேவை இனி இந்த வீட்டுக்குத் தேவையில்லை. அப்பாவும், பொண்ணும் இடத்தைக் காலி பண்ணுங்க.”

 

ரத்தக் கொதிப்போடு தந்தையும் மகளும் அமர்ந்திருக்க, மகன் திருமணம் செய்து விட்டானா! என்ற அதிர்ச்சியில் பசை போல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார் கற்பகம். சம்பவம் முடிந்தபின் மதுவிடம் சென்றான். கோபத்தில் அமர்ந்திருந்தவள் இவனைக் கண்டு சிரிக்க,

 

“இப்பதான் சாருக்கு நீங்க பக்காவான ஜோடி மேடம்!” கைதட்டினான்.

 

இதமாகப் புன்னகைத்து, “இது எதுவும் அகாக்குத் தெரிய வேண்டாம்.” என்றதும் ஆண்கள் இருவரும் ரகசியமாகச் சிரித்துக் கொண்டார்கள்.

 

“ஒய் மேடம்?”

 

“ஏற்கெனவே நிறைய பிராப்ளம் போய்கிட்டு இருக்கு. இதையும் சொல்லிப் பெருசுபடுத்த வேண்டாம்.”

 

“பேஷ் பேஷ் மேடம்.”

 

“ப்ச்! நீ கூடப் போகல?”

 

“உங்களுக்குக் காவல்!”

 

“பார்த்தேன். நீ காவல் காக்குற லட்சணத்தை.”

 

“எனக்கு இடம் கொடுக்காம நீங்களே பெர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டீங்க மேடம். வாட் கேன் ஐ டூ…”

 

“இதே என் இடத்துல உங்க சார் இருந்திருந்தா இந்நேரம் சட்டையப் பிடிச்சிருப்பல்ல.” என்றதற்கும் ஆண்கள் இருவரும் அவள் அறியாது சிரித்துக் கொண்டனர்.

 

“அகா உன் விஷயத்துல ரொம்ப லக்கி.”

 

“நான் தான் மேடம் லக்கி!”

 

“அது என்ன எப்பப் பாரு மேடம்னு.”

 

“வேற எப்படிக் கூப்பிடுறது?”

 

சிறிதும் யோசிக்காமல், “அண்ணின்னு கூப்பிடு!” என அவனை உறைய வைக்க, எதிர்ப்புற இணைப்பில் இருந்தவன் மகிழ்வோடு அழைப்பைத் துண்டித்தான்.

 

***

மீட்டிங் முடித்த கையோடு காதலியைப் பார்க்க வந்துவிட்டான். சக்கரம் கட்டாத குறையாக ஓடும் தம்பியைக் கண்டு ஆதிகேஷ் மிரள, “அந்தப் பொண்ணைப் பிரிக்க முடியும்னு நம்பிக்கை இல்ல ஆதி.” கூறினார் நவரத்தினம்.

 

“யாருப்பா அந்தப் பொண்ணு? இவன வேற ஆளாய் பார்க்குற மாதிரி இருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மீட்டிங் ஹால்ல பேசிட்டு இருந்தான் பாருங்க, அவன்தான் என் தம்பி. இவனோட மாற்றம் பெரிய பயத்தைத் தருதுப்பா.”

 

“உன்னை விடப் பெரிய அதிர்ச்சியில இருக்கேன். நான் பெத்த பிள்ளையா இதுன்னு யோசிக்க வச்சுட்டான். எப்போ மீட்டிங் முடிஞ்சாலும், இருக்கற எல்லாரும் கிளம்பினதுக்கு அப்புறம் அன்னைக்கு என்னென்ன பேசுனோம்னு நம்ம கிட்டப் பேசிட்டு, நம்மளை அனுப்பிட்டுத் தான் அவன் கிளம்புவான். இன்னைக்கு விட்டால் போதும்னு ஓடுறான். இது எங்க போய் முடியப் போகுதுன்னு தெரியல.”

 

“என்னோட பயமே இதுதான் ப்பா. அவள் எந்த அளவுக்கு இவன் மண்டையக் கழுவி வச்சிருந்தா, நம்ம எல்லாரையும் மறந்து ஓடுவான். இது என் தம்பியை அழிச்சிடும்னு பயமா இருக்கு.”

 

“உன் அம்மா ராத்திரியெல்லாம் புலம்பித் தீர்த்துட்டாள். அவளை என்ன சொல்லிச் சமாதானப்படுத்துறதுன்னே தெரியல.”

 

“ஒன்னு மட்டும் புரியுதுப்பா. அந்த மது அகம்பன் வாழ்க்கையில மட்டும் இல்ல, நம்ம எல்லாரோட வாழ்க்கையிலயும் விளையாடிட்டாள்.”

 

***

 

நடந்ததை எல்லாம் அனுவால் ஜீரணிக்க முடியவில்லை. புலம்பித் தீர்த்து விட்டாள் கற்பகத்திடம். அவரே கவலைக்கிடமான நிலையில் இருக்க, இவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவார்? சங்கரன் தான் மகளுக்கு இருந்த ஒரே ஆதரவு. எப்படியாவது அகம்பனுடன் சேர்ப்பேன் என்ற உறுதிமொழியோடு வெளியேறினார்.

 

அவர் கிளம்பி வாசலுக்கு வர, நம் நாயகனின் கார் உள்ளே நுழைந்தது. காதலியின் நினைவில் தேன் சிந்திய முகத்தோடு இறங்கியவன், கொள்ளிக் கட்டையைப் பிடித்தது போல் எரிந்தான். தன்னவளைப் பேசிய வார்த்தை காதில் ரீங்காரமிட்டது. பல்லைக் கடித்துக் கொண்டு அவர் முன்பு நிற்க,

 

“வாப்பா…” என்றார் வரும் பயத்தை மறைத்துக் கொண்டு.

 

“எப்ப வந்தீங்க?”

 

“இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.”

 

“ஓஹோ!”

 

“மீட்டிங் நல்லபடியா முடிஞ்சுதாப்பா.”

 

“அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. முடிய வேண்டியது தான் முடியல.”

 

“அ..அது… எல்லாம் சரியா முடிஞ்சிரும்.”

 

“முடிக்கலனாலும் முடிச்சிடுவேன்!”

 

வார்த்தைக்கு எதிராகக் கண்கள் மிரட்டியதால் பம்மிக் கொண்டு நடையைக் கட்டினார். அதிகாரத் தோரணையோடு உள்ளே நுழைந்தவன், அன்னையோடு இருக்கும் அனுவைச் சீற்றத்தோடு நோக்க,

 

“அகம்பா…” விசும்பலோடு ஓடி வந்தாள்.

 

தன்னை நெருங்குவதற்கு ஐந்து அடி இருக்கும் பொழுதே விரல் நீட்டி எச்சரிக்க, வந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு, “அந்த மது என்னை அடிச்சிட்டா…” புகார் வாசித்தாள்.

 

“அவளுக்கு என்ன அடிச்சு விளையாடுற நோயா? உன்னை எதுக்குத் தேவை இல்லாமல் அடிக்கப் போறா…”

 

“ஆன்ட்டிய மரியாதை இல்லாமல் பேசுனா. ஏண்டி இப்படிப் பேசுறன்னு கேட்டதுக்கு என்னை அடிச்சுட்டா.”

 

அகம்பன் திவஜ் பார்வை வலப்புறமாக அமர்ந்திருக்கும் கற்பகத்தைத் தீண்ட, அனுவின் கூற்றில் முழித்தவர் மகனின் பார்வையில் வேறு பக்கம் தலை திருப்பிக் கொண்டார்.

 

“அப்படி என்ன பேசுனா?”

 

“இது என்னோட வீடு. நான் இங்கதான் இருப்பேன். என்னைத் திட்டுற யாரும் இங்க இருக்கக் கூடாதுன்னு ரொம்பக் கேவலமாய் பேசுனா. அவ பேசுறதைத் தாங்கிக்க முடியாம ஆன்ட்டி அழவே ஆரம்பிச்சுட்டாங்க.”

 

“இவ சொல்றது உண்மையா அம்மா?”

 

பதில் தெரியாது முழித்துக் கொண்டிருந்தவரைப் பார்த்துக் கொண்டே அவரது கணவரும், மூத்த மகனும் வந்து நிற்க, “இவ்ளோ நேரம் அழுதுட்டு இப்பத்தான் சமாதானம் ஆனாங்க. நீ கோபப்படப் போறேன்னு சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க. நான்தான் மனசு கேட்காமல் சொல்லிட்டேன்.” அவருடைய பதிலை இவளே கொடுத்தாள்.

 

“மதுணிகா…”

 

அவளுக்குக் கேட்காது என்றறிந்தும், நடுக்கூடத்தில் நின்று கத்தியவனைக் கண்டு இரு அடி பின்னால் நகர்ந்து நின்றாள் அனுசியா. நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கமல் அண்ணிக்குத் தகவல் சொல்ல, அமைதியாக வந்து நின்றாள்.

 

“இவளை அடிச்சியா?”

 

“ஆமா அகா…”

 

சிறிதும் யோசிக்காது கூறியவளை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட அகம்பன், “அடுத்த முறை சான்ஸ் கிடைச்சா, எனக்கும் சேர்த்து ரெண்டு குடு. ரொம்ப நாள் ஆசை! பொண்ணாப் போனதால தீர்த்துக்க முடியல.” என்றதும், “களுக்!” என்று சிரித்தான் கமல்.

 

சாணியை முகத்தில் அப்பிய நிலையில் முகம் கருத்து நின்றிருந்தவள், ஒரு வேலைக்காரன் தன்னைப் பார்த்துச் சிரிப்பதில் வெட்கிப் பல்லைக் கடித்தாள். கற்பகத்திற்குக் காலையிலிருந்து இடி மீது இடி. என்னதான் அனுசியா பொய் சொல்லியிருந்தாலும், இவரை மையமாக வைத்துத்தான் கூறி இருக்கிறாள்.

 

அன்போடு சுமந்து பெற்ற மகன் தனக்காக ஒரு வார்த்தை கூடப் பேசாமல், என்ன உறவு என்றே தெரியாத ஒருத்திக்கு ஆதரவாகப் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனம் நோக மகனிடம் சென்றவர்,

 

“உனக்கும், அவளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சா?” குன்றிய குரலில் கேட்டார்.

 

“ஆமாம்மா. உங்களை மீறிப் பண்ணனும்னு இல்ல. சூழ்நிலை அந்த மாதிரி இருந்துச்சு, பண்ணிட்டேன்.”

 

“உன்னை எவ்ளோ நம்பினேன் தெரியுமா? யாருமே இல்லாமல் கல்யாணம் பண்ற அளவுக்கு அப்படி என்னடா அவ உனக்குப் பண்ணிட்டா… இந்த விஷயத்தைக்கூட அவ சொல்லித்தான் கேட்கிற நிலைமை எங்களுக்கு. உன்னப் பெத்தவளுக்கு நல்ல சன்மானம் கொடுத்துட்ட.”

 

கண்ணீர் சிந்தும் அன்னையைத் தொட நெருங்க, “வேண்டாம்பா. போலியான சமாதானம் எனக்கு வேண்டாம். உன் வாழ்க்கையை நீயே முடிவு பண்ணிட்ட. சந்தோஷமா வாழு! உன்ன நினைச்சு நெஞ்ச பிடிச்சுப் படுத்ததெல்லாம் போதும். இருக்க ஒரு பிள்ளையாவது இனிப் பார்த்துக்கிறேன்.” அங்கிருந்து சென்று விட்டார்.

 

அன்னையின் அழுகையில் மனம் கலங்கியது. அதைத் துடைக்கக் கூட முடியாத நிலையில் நிற்பதை வெறுத்தவன், தன் மீதான நம்பிக்கையை இழந்து பார்க்கும் உடன்பிறப்பையும், தகப்பனையும் கண்டும் காணாமலும் கடந்தான்.

 

குற்ற உணர்வில் கூனிக்குறுகி நின்றவளைக் கொன்று தீர்க்கும் வெறியில் நெருங்கிய ஆதிகேஷ், “ஒழுங்கா உண்மையச் சொல்லிடு. உனக்கும் என் தம்பிக்கும் கல்யாணம் ஆயிடுச்சா.” மிரட்டினான்.

 

அனுவிடம் பேசியது போல் பேச முடியாமல் தடுமாறியவளைப் பார்க்கப் பற்றிக் கொண்டு வந்தது. பல்லைக் கடித்துத் தன்னைப் பொறுமையாக்கிக் கொண்டவன், “அன்னைக்கு நீ அகம்பனை விட்டு ஓடி வரும்போதே கொன்னு புதைச்சி இருக்கணும். மிரட்டலோட விட்டது தப்பாப் போச்சு. எத்தனைத் தடவை நீ ஆமான்னு சொன்னாலும் எனக்கு நம்பிக்கை வராது. என் தம்பி எங்களை மீறிக் கல்யாணம் வரைக்கும் கண்டிப்பா போக மாட்டான். எத்தனை நாளைக்குப் பொய் ஜெயிக்குதுன்னு பார்க்கிறேன்.” என்று விட்டுத் தன் அறை நோக்கி நகர்ந்தான்.

 

செல்லும் அவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அன்றைய நினைவு. அகம்பன் இல்லாத நேரம், அவன் எண்ணிலிருந்து தந்தைக்கு அழைத்திருந்தாள். அன்றைய இரவே கிளம்பி வர உத்தரவு இட்டிருந்தார். அவனை விட்டு வர முடியாதவளை வர வைக்கத்தான், கிஷோர் மூலம் கற்பகத்திற்குப் பொய்யை உண்மை போல் தெரிவித்து இருந்தார்.

 

தம்பியைப் பற்றிய தகவல்களைச் சேகரித்த ஆதிகேஷிக்கு, அவன் இருக்கும் இடம் தெரிய வந்தது. மதுவைப் பற்றி எதையும் அறியாதவன், அவனைப் பார்க்க அங்கு வந்திருந்தான். அகம்பனைப் போல் அடிக்கடி வந்து செல்லாதவனுக்குப் பாதை ஒன்றும் புரியவில்லை. லேசான விடியற்காலை இருட்டு வேறு அவனைச் சூழ்ந்தது. எப்படிச் செல்வது என்று தெரியாமல் பெருத்த யோசனையில் நின்றிருந்தவன் கண்ணில் மதுணிகா தென்பட்டாள்.

 

“யார் நீ?”

 

தன்னவனை விட்டு வந்த தருணத்தை ஏற்க முடியாது, அழுகையோடு வந்து கொண்டிருந்தவள் ஆதியின் குரலில் திகைக்க, காரை விட்டு இறங்கினான். அகம்பனைப் பற்றிய முழு விவரம் தெரியும் என்பதால், இவன் முகத்தைப் பார்த்ததுமே யார் என்று தெரிந்து கொண்டாள். அவனிடம் இருந்து தப்பிக்க முயன்று ஓடினாள்.

 

விரட்டிப் பிடிக்கப் பின்னால் ஓடினான் ஆதிகேஷ் திவஜ். மனம் பதைபதைக்க ஒரே ஓட்டமாக ஓடி வந்தவள், ஒரு மரத்திற்குப் பின்னால் ஒளிய, மூச்சு வாங்க ஓடி வந்தவன் அவளைக் காணாது ஓரிடத்தில் நின்று பெருத்த மூச்சை இழுத்து விட்டான். தன் மூச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தவள் கிடைக்காததால் நடையைக் கட்டினான்.

 

மரத்தில் தலை சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவளுக்குக் கண்ணீர் அருவியாக ஓடியது. இன்னும் சில மணி நேரங்களில் தன்னைப் பற்றிய உண்மை தெரிந்து விடும், தன்னுடைய காதல் புதைக்குழியில் புதையப் போகிறது என்றெண்ணி உயிர் நோக அழுது தீர்த்தவள் அங்கிருந்து வெளியேறினாள்.

 

அவளைத் தவற விட்டவனுக்கு எதுவோ தவறென்று பட்டது. வந்த தடம் தெரியாமல் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான். அகம்பனை விட்டுக் கிளம்பும்பொழுது அவன் எண்ணில் இருந்துத் தந்தைக்குத் தகவல் சொல்லிக் கார் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தாள். அதில் அவள் ஏறி அமரவும், அகம்பனின் அண்ணன் கண்ணில் படவும் சரியாக இருந்தது.

 

பலத்த சந்தேகங்களுக்கு ஆளானவன், அவளைப் பற்றி விசாரித்தான். ஜிஎன் ஸ்பெஷலிஸ்ட் சிஇஓ, எதற்காகத் தன் தம்பி இருக்கும் இடத்திலிருந்து வந்தாள் என்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கினான். தெளிவான பதில் கிடைக்காததால் அவளைச் சந்திக்கச் சென்றிருந்தான். ஆதிகேஷை எதிர்பார்க்காதவள் கைகளைப் பிசைய,

 

“உனக்கும் என் தம்பிக்கும் என்ன உறவு?” கணீர் குரலில் கேட்டான்.

 

“அன்னைக்கு மாதிரி என்கிட்ட இருந்து தப்ப முடியாது. நீயா உண்மையச் சொல்லிட்டா உனக்கு நல்லது.”

 

“நா..நானும் உங்க தம்பியும் லவ் பண்றோம்.”

 

“வாட்!”

 

‌ஏற்க முடியாத திகைப்பிற்கு ஆளானவனுக்கு, அவள் சொன்ன விஷயங்களை ஜீரணிக்கப் பல மணி நேரங்கள் தேவைப்பட்டது. ஒரு வழியாகத் தன்னைச் சமாளித்து,

 

“என் தம்பிக்கு உண்மையாவே கேன்சரா?” கேட்டான்.

 

மௌனமாகத் தலையாட்டினாள். சம்பந்தப்பட்டவள் மருத்துவமனையால் தான் எல்லாம் நடந்ததென்று அறியாமல், பரிசோதனைக்காக வந்த இடத்தில் காதல் முளைத்திருக்கிறது என்று தவறாக எண்ணியவன்,

 

“என் தம்பிக்கு வேற ஒரு பொண்ணு கூடக் கல்யாண ஏற்பாடு நடக்குது. அந்தப் பொண்ணு தான் என் தம்பியோட மனைவி. முதலும் கடைசியுமா சொல்றேன். என் தம்பி கூட இனி உன்னப் பார்க்கக் கூடாது. ஒருவேளை அவனே உன்னைத் தேடி வந்தாலும் எந்த கான்டாக்ட்டும் வச்சிக்கக் கூடாது. என் பேச்சை மீறி லவ்வு அது இதுன்னு திரிஞ்சுகிட்டு இருக்கிறதைப் பார்த்தேன், உன் குடும்பத்துல ஒரு உயிர் கூட மிஞ்சாது.” என மிரட்டி விட்டுச் சென்றதால் தான் அகம்பன் வந்த பொழுது விலகிப் போனாள்.

 

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
16
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்