
மெல்லினத்தில் ஒரு காதல் 1
வார வாரம் வெள்ளிக்கிழமைகளில் ஊதுபத்தி,விபூதி,சாம்புராணி, மல்லி பூ, சந்தனம் என எப்போதும் அனைத்து பொருட்களின் வாசமும் நிறைந்து மினி கோவிலாக மாறியிருக்கும் மங்கையர்க்கரசியின் பூஜையறை இந்த வாரம் வெறுமையாக காட்சியளித்தது.
வாடிய பூக்களை கூட அகற்றாது பூஜையறையை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தார் மங்கை. உள்ளுக்குள் எரிமலை வெடித்து கொண்டிருந்தது.
இத்தனை நாட்களில் பூஜை செய்து கடவுளையே சரணகராதி அடைந்து என்ன பயன்? அவர் எது நடக்க கூடாது என்று இரவும் பகலும் பூஜையறையில் கிடந்தாரோ அது நடந்து விட்டது.
இன்றுடன் அவரின் மகள் தேன் முல்லையில் திருமண வாழ்வு முற்றுப் பெற்று முறிவுப் பெற போகிறது. இத்தனை நாட்களாக ஹியரிங் என இழுத்தடித்து கொண்டிருந்ததில் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை கொண்டிருந்தவருக்கு இன்று அந்த நம்பிக்கையையும் முழுதாக உடைத்து விட்டார் கடவுள்.
ஆம் தேன் முல்லைக்கு இன்று விவாகரத்து கிடைக்க போகிறது. இத்தனை நாட்கள் கவுன்சிலிங் கொடுத்து கால அவகாசமும் கொடுத்த நீதிமன்றம் கணவன் மனைவி இருவரிடமும் எந்த வித மாற்றமும் இல்லாததால் இறுதியில் இன்று விவாகரத்து கொடுப்பதாக முடிவெடுத்து விட்டது.
அதற்கு தான் மங்கையின் மனம் உலைக்களமாக கொதித்து கொண்டிருந்தது. இது ஒன்றும் அவர்கள் பார்த்த வரன் இல்லைய கட்டினால் தேன்முல்லையை தான் கட்டுவேன் என அழைந்து திரிந்து இவர்களை விடாது பின் தொடர்ந்து வந்து அவளையும் விடாது என பின்னால் சுற்றி தானே அவன் திருமணம் செய்து கொண்டது.
திருமணத்திற்கு முன் எப்படி இனிக்க இனிக்க பேசினான்? எவ்வளவு நல்லவனாட்டம் வேடமிட்டான். அவன் பேச்சில் அவன் நடவடிக்கையில் நம்பி தானே இவர்களும் பெண்ணை கொடுத்தனர்.
திருமணம் ஆகி மூன்று வருடங்களும் எல்லாம் நல்லவிதமாக தானே போய் கொண்டிருந்தது.
என சிந்தனையில் இருந்தவரை கலைத்தது தேன்முல்லையின் கொலுசொலி.
நேரே பூஜையறையில் சென்று விளக்கேற்றி வைத்து விட்டு கடவுளை வணங்கியவளின் முகம் நிர்மூலமாக இருந்தது.
இந்த திருமண பந்தத்தில் இருந்து விடுதலை அடைய போவதற்கு கடவுளுக்கு நன்றி சொன்னாலோ இல்லை இத் திருமணம் பந்தம் முடிவடைந்திட கூடாது என வேண்டினாலோ அவளிற்கே வெளிச்சம். வேண்டுதலை முடித்தவளின் இமையோரம் இரு துளி கண்ணீர்.
பூஜையறையை விட்டு வெளியே வந்தவள் மணி பார்க்க ஒன்பது. பத்து மணிக்கு கோர்ட்டில் இருந்தால் போதும் என அட்வகேட் சொல்லியிருக்க பொறுமையாகவே கிளம்பினாள்.
“ம்மா டிபன் எடுத்து வைங்க” என்றவாறு சாப்பிட அவள் அமர சுரத்தே இல்லாமல் “ம்ம்ம்” என்றவர் சமையலறையினுள் சென்றார்.
மங்கையின் கலங்கிய முகத்தை கண்டாலும் தேன் முல்லை எதுவும் பேசவில்லை. அவள் பேசினால் அடுத்த வார்த்தை “குழந்தை வேற இருக்கு மாப்பிள்ளை கிட்ட பேசி சமரசம் பண்ணிக்க கூடாதா?” என்ற வார்த்தைகள் தான் வரும். அதற்கு எதற்கு பேசி கொண்டு.
முடிந்த உறவு ஒன்றை குழந்தையை காட்டி இழுத்து வைக்க சொல்லுகிறார். தாய் உள்ளம் அல்லவா மகளின் வாழ்க்கை காப்பாற்ற துடித்தது.
ஆனால் இந்த பந்தத்தில் இருந்து பிய்த்து கொண்டு போக நினைப்பவனை எதை வைத்து தடுப்பது? குழந்தையை காட்டினாலும் எவ்வளவு காலத்திற்கு அவனை இழுத்து வைக்க முடியும். அவளும் ஆரம்பத்தில் அவனை இழுத்து பிடிக்க தானே முயற்சித்தாள். நாளடைவில் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவனின் நடவடிக்கையில் தோன்றி போனது
அவனாக தேடி வந்தான், அவனாகவே விட்டு செல்கிறான். இடையில் அவள் வெறும் தலையாட்டும் பொம்மை மட்டுமே!
மணி ஒன்பதரையை நெருங்க இப்போது கிளம்பினால் டிராபிக்கில் சரியாக இருக்கும் என நினைத்தவள் கிளம்ப,
குழந்தையுடன் உள் நுழைந்தார் அவளின் தந்தை சத்யமூர்த்தி. மிகவும் அமைதியான மனிதர் கோபத்தில் கூட அவரின் குரல் உயர்ந்து இல்லை. கோபத்தை கூட தன்மையாக வெளிப்படுத்தி தான் அவருக்கு பழக்கம். யாரிடமும் வம்புக்கு போகாமல் தானுண்டு தன் வேலை உண்டு இருக்கும் மனிதர்.
எந்த பிரச்சனைகளிலும் தலையிடாமல் ஒதுங்கியே இருப்பவர். அதனால் தான் என்னவோ மகளின் வாழ்க்கையை வீணாக்கியவனிடம் எதிர்த்து பேசி சண்டையிட கூட அவருக்கு தெரியவில்லை.
மீறி கேட்டால் “உன் பொண்ணோட வாழ பிடிக்கலையா?” என்பவனிடம் என்ன கேட்பது “நீங்க தானே தம்பி தேடி வந்தீங்க அப்போ பிடிச்சிருந்தது இப்போ மட்டும் பிடிக்கலையா?” என கேட்டாலும் “ஆமா பிடிக்கலை சலிச்சுட்டா அதுக்கு இப்போ என்னாங்கிற ஒழுங்கா டைவர்ஸ்க்கு ஒத்துக்க சொல்லுய்யா” என மிரட்டுவது போல் மரியாதை துளியும் இன்றி பேசுபவனிடம் அவர் எதை எதிர்பார்க்க முடியும்.
அவரால் அவனை எதிர்த்து சண்டையிட முடியாது அப்படி யாரிடமும் இதுவரை நடந்ததுமில்லை. விவாகரத்திற்காக அவன் எதுவும் செய்ய துணிந்தவனாக இருந்தான்.
திருமணத்திற்கு முன் அவனை பற்றி அறியாது பல விஷயங்கள் அவரின் காதிற்கு இப்போது எட்ட மனிதர் முற்றிலும் ஓய்ந்து போனார். அதன் பிரதிபலிப்பே மகளை விவாகரத்து கொடுக்க ஒப்பு கொள்ள சொன்னது.
முடிந்த வரை அவனிடம் இருந்து மகளை காப்பாற்றவே முயற்சித்தார்.
ஆக அவரின் இறுதி முடிவு அவன் கேட்ட விவாகரத்தை கொடுத்து விடுமாறு மகளிடம் வேண்ட மட்டும் தான் முடிந்தது.
“கிளம்பிட்டியா டா முல்லை”
“ஆமாப்பா”
“மங்கை இந்தா பிள்ளையை பிடி, பசிச்சிருச்சு போல சாதம் ஊட்டு, இருடாம்மா அப்பாவும் வரேன்” என்றவர் நொடியில் கிளம்பி வர தந்தையும் மகளும் மங்கையிடம் ஒற்றை தலையசைப்புடன் கிளம்பினர்.
வழி எங்கும் தேன் முல்லையின் மனம் கடந்து போன நினைவுகளில் தான் சிக்கி தவித்தது.
அவன் முதன் முதலில் அவளிடம் வந்து பேசிய வார்த்தையே “உன்னோடது ஒரிஜினல் முடியா?” என்று தான்.
தேன்முல்லைக்கு நல்ல அடர்த்தியான நீளமான முடி மங்கையர்க்கரசி வார விடுமுறை நாட்களில் அதனை அப்படி பராமரிப்பார்.
அன்று அவனிற்கு பிடித்த தன்னுடைய கூந்தல் பிற்காலத்தில் “ச்சே நீ இன்னும் நாட்டுபுறமாவே இரு இவ்வளவு முடிய வச்சுகிட்டு பாக்கவே சகிக்கல இப்போ இருக்குற பொண்ணுங்க எல்லாம் எப்புடி மாடர்ன்னா முடிய வெட்டுறாங்க நீ இன்னும் பழைய பஞ்சங்கமாவே இரு” என அவனிற்கு பிடிக்காமல் போன அதிசயம் தான் இதுவரை அவளிற்கு பிடிபடவில்லை.
அதனை தொட்டு ஒன்று இரண்டு என அத்தனையும் அவளிடம் அவனிற்கு பிடிக்காமல் போயி மொத்தமாக அவளையே வெறுத்து பிடிக்காமல் போய் விட்டது.
கல்லூரி காலங்களில் எதுவெல்லாம் அவளிடம் அவனை இழுத்து பிடித்து ஈர்த்தது என சொன்னவனிற்கு பின்பு அதுவே பிடிக்காமல் போயிற்று.
யாரை நொந்து என்ன பயன். எவ்வளவு தான் அவனை இழுத்து பிடிக்க அவள் முயன்றாலும் அவளிற்கு தோல்வியே கிட்டியது.
“உன்னுடன் வாழ்க்கை சலிப்பு தட்டி விட்டது” என முகத்திற்கு நேரே கூறுபவனை கண்டு மனம் வெறுத்து போயிற்று அவளிற்கு. இனியும் அவனிடம் வாழ்க்கை பிச்சை கேட்க அவள் விரும்பாத நிலையில் தான் சத்யமூர்த்தி விவாகரத்து கொடுத்து விடுமாறு கூறி விட யோசிக்காமல் சரி என்றிருந்தாள்.
தந்தையின் வண்டி ஹாரன் சத்தத்தில் நிலை கொண்டவள் முன்னால் பார்க்க குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்து விட்டிருந்தனர்.
******************
படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த மகனையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தார் ஞானம்மாள்.
நல்ல உயரம் அவனின் அப்பாவை போலவே தமிழர்களின் திராவிடம் நிறம். சிரிக்கும் போது கன்னத்தில் விழும் கன்னக்குழி அவனுக்கு தனி அழகே, அதுவும் அந்த முறுக்கு மீசை! பேண்ட் சர்ட்டில் இருந்தாலும் அவனுக்கு அந்த மீசை அழகு சேர்த்தது.
ம்ஹீம் என்ன இருந்து என்ன பயன். ஒரு ஆண்மகனை திருமணத்திற்கு முன் அவனின் வேலை குணத்தை வைத்து தான் கணிப்பர்.
ஆனால் அதுவே திருமணம் ஆகி விட்டால் அவனின் குடும்பத்தை கொண்டு தானே கணிப்பர். அந்த வகையில் இவன் துரத்திஷ்டசாலியே
இன்றுடன் அவனின் திருமண வாழ்க்கை முறிவு பெறுகிறது. அதுவும் இவனே கேட்டு வாங்கும் விவாகரத்து. அவனின் மனைவிக்கு என்ன குறை அழகில்லையா?
அறிவில்லையா??? என கேட்டால் “குணமில்லை” என்ற அடுத்த வார்த்தை தான் அவனிடம் இருந்து பாயும்…
மருமகள் என்று வந்தால் கொஞ்சம் வீட்டினுள் மாமியாரிடம் முட்டிக் கொள்ளும் தான் ஆனால் ஞானமே அதனை பெரிதாக எடுத்து கொள்ளாத நிலையில் இந்த விவாகரத்து எல்லாம் பெரிய விஷயமே….
எதுவும் பேசாது அமர்ந்திருந்த மகனிற்கு பொறுமையாக உணவினை எடுத்து வைத்த ஞானம் முடிந்த வரை அவனை நீதிமன்றத்திற்கு நேரத்திற்கு செல்ல விடாமல் நேரம் கடத்தவே முயற்சித்தார்.
அவரின் முயற்சியை கண்டு கொண்டவனிற்கு சிரிப்பு தான் வந்தது…’இவர் நேரம் எடுத்தால் இன்று நான் கோர்ட்டுக்கு செல்லாமலா இருக்க போகிறேன்’ என நினைத்தவன் அதனை கேட்கவும் செய்தான்.
“சின்ன புள்ளை மாதிரி செய்யாதீங்க அம்மா நீங்க நேரத்தை கடத்துனா என்னால கோர்ட்டுக்கு போக முடியாதா??” என்க,
“அதான் தெரியுதுல கண்ணு எனக்கு இதுல விருப்பம் இல்லையின்னு நீ இன்னொரு தடவை யோசிக்க கூடாதா விவாகரத்து எல்லாம் பெரிய விஷயம்டா அவசரப்பட்டு முடிவு எடுக்காத”
“ம்மா…இது இப்ப எடுத்த முடிவு இல்லம்மா ரொம்ப யோசிச்சு எனக்கும் அவளுக்கும் ஒத்து வராதுன்னு தான் எடுத்தது…எங்க ரெண்டு பேராலயும் இனியும் தொடர்ந்து அட்ஜஸ்ட் பண்ணி வாழ முடியும்ன்னு தோணல….அப்படி வாழ்ந்தாலும் இன்னும் எத்தனை வருஷத்துக்கு நீடிக்கும்னு தெரியல…என்னைக்கோ ஒரு நாள் சண்டை போட்டு அவமானப்பட்டு பிரியிறத விடு இப்ப பிரிச்சிடுறது எனக்கும் நல்லது அவளுக்கும் நல்லது..ப்ளீஷ் மா இனியும் இதுல என்னை காம்ப்ரமைஸ் பண்ண முயற்சிக்காதீங்க…நான் தெளிவாக யோசிச்சு எடுத்த முடிவு தான் இது” என்றிட…
அதற்கு மேல் அவனிடம் என்ன பேச அமைதியாகி போனார் ஞானம்.
அவன் சாப்பிட்டு கிளம்பும் நேரம் ராகேஷும் அவனின் மனைவி சீதாவும் வந்தனர்.
“சாப்பிட்டியா” என்ற ராகேஷின் கேள்விக்கு “ம்ம்ம் ஆச்சு டைம் ஆச்சு கிளம்புறேன்” என்க,
“நானும் வரேன் டா இரு”
“நான் என்ன சின்ன குழந்தையாண்ணா வேண்டாம்”
“ம்ப்ச் நீ இரு அங்க அவுங்க குடும்ப எல்லாம் வரும் அவுங்க ஏதாச்சும் பேச செய்வாங்க நீயும் அமைதியா போக மாட்டா அப்பறம் அதை அவுங்களுக்கு சாதகமா மாத்திக்குவாங்க
வேண்டாம் எதுக்கு வம்பு நானும் வரேன் சீதா நீ அம்மாவை பாத்துக்கோ நாங்க வரோம்” என்று விட்டு கிளம்பியிருந்தனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
16
+1
3
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தேன்முல்லை பெயர் நன்று. 🥰
நாயகன் நாயகியின் முதல் திருமண பந்த முறிவுடன் ஆரம்பிக்கின்றது கதை.
காதலில் உருகிய காலங்களில் எவையெல்லாம் பிடித்ததோ இன்று அவையே பிடிக்காமல் போனதன் காரணம் தெரியாமல் தவிக்கிறாள்.
சலித்து விட்டது விட்டு விலகி விடு என்று முகத்துக்கு நேராக கூறுபவனிடம் என்ன தான் செய்து விட முடியும் விலகி செல்வதை தவிர.
ஏதோ அந்த வகையில் நேர்மையாக இருக்கின்றானே என எண்ணிக்கொள்ள வேண்டியது தான்.
இரு தாய்மார்களும் உறவை இருத்திக்கொள்ளவே பிரிய படுகின்றனர்.
சண்டையிட்டு அவமானப்பட்டு பிரிவதை விட ஒத்துவரவில்லை என்று தெரிந்தபின் சச்சரவில்லாமல் மரியாதையுடன் பிரிவது நன்று என்று நினைக்கின்றான்.
நல்லதொரு தொடக்கம். ♥️
வாழ்த்துகள் 👏🏼👏🏼
Thanks for ur cmnts sis❤️
ரெண்டு பேரும் ஒரே ஜோடியா … வேற வேற ஜோடியா
Next epiyum padichinganna ungaluku therichutum sis 😀😀😀