Loading

“ஏய், இன்னும் என்ன பார்த்துட்டு நிக்கிற?” என்று கேட்டவாறே, கையில் இருந்த பந்தை ஓங்கி தரையில் அடித்தவனை கண்டு திடுக்கிட்ட இழை, அச்சத்தோடு இரண்டடி பின்னே நகர்ந்தாள்.

“இருக்கிற கோபத்துக்கு ஒருநிமிஷம் இங்க நின்னாலும் உன் மூஞ்சியை பேத்துடுவேன். முதல்ல இங்கிருந்து போ!” என்று கர்ஜித்தவனின் ஆவேச முகமும் குரலும் இப்போதும் இழையின் நெஞ்சில் குளிர் பரப்ப, சட்டென நீரை எடுத்து அவசரவசரமாக பருகியவளுக்கு புரைக்கேறிட இரும தொடங்கினாள்.

“ஹே, இழை… மெதுவாடி,” என்று ஜீவி அவள் தலையில தட்ட, அதை கண்ட மிருதுளா,

“ஏன் மச்சி, அவ நல்லா இருக்கிறது பிடிக்கலையா? பாரு, லவ்ங்கிற வார்த்தைய கேட்டாலே இழைக்கு புரைக்கேறுது. பாவம், அவளை விட்டுட்டு,” என்று சிரித்தாள்.

“லவ் மேரேஜ் பண்ணின நீயே இப்படி சொல்லலாமாடி?” ரூபி.

“நீ வேற ஏன் மச்சான் வயத்தெரிச்சலை கிளப்பற?” என்றாள் எரிச்சலோடு.

“ஹே, நீங்க ரெண்டு பேரும் ஐடியல் கப்பில்னு நினைச்சுட்டு இருந்தோம். கல்யாணமாகி வருஷமாகல. அதுக்குள்ள இப்படி சலிச்சுக்குற… என்னாச்சு?”

“அடிபோடி! இப்போல்லாம் கல்யாணத்துக்கு கம்பாட்டபிளிட்டி டெஸ்ட் எடுக்குறதைவிட, முதல்ல பசங்களுக்கு ஐகியூ டெஸ்ட் எடுக்கணும்…” என்றாள் மற்றொருத்தி.

“என்ன மச்சி சொல்ற? நீயுமா? உனக்கென்ன?”

“ஆமாடி, அவ சொல்றது சரிதான்! காதலுக்கு கண் இல்லைன்னு பொதுவா சொல்லுவாங்க. மூளையும் இருக்காதுன்னு கல்யாணம் பண்ணின பிறகுதான் தெரியுது.”

“ஏய், என்னடி சொல்றீங்க?” என்ற ரஞ்சி, இருவருடங்களாக காதலித்து பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்யவிருப்பவள்.

“ஆமா ரஞ்சி! இவனுங்களுக்கு எல்லாம் மூளைன்னு ஒரு வஸ்துவை ஆண்டவன் படைச்சானா இல்லையான்னே தெரியலை. கொஞ்சம்கூட அதை யூஸ் பண்ணவே மாட்டேங்கிறாங்க. அவனுக்கும் யோசிச்சு நானே எல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு.”

“ஏய், உனக்கு தான் கல்யாணமாகலையே?” என்று வினி சந்தேகமாக ப்ரியாவை பார்க்க…

“மூணு வருஷமா ஒருத்தனை லவ் பண்றேன்… நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் சாயம் வெளுத்து போச்சு. ப்ச்… ஏன்டா லவ் பண்ணோம்னு இருக்கு. சுத்த ரசனை கெட்டவன் மச்சி!”

“ஏன்டி?”

“எப்பவுமே நான் ஒன்னு சொன்னா, அவன் என்னையே அசரடிக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லுவான்டி. அதான் கடுப்பாகும்.”

“அப்படி என்னடி சொன்னான்…?” என்றவர்களிடம் அத்தனை சுவாரசியம்.

“போன வாரம் பீச்சுக்கு போனப்போ, அலை கரையை தழுவுற இடத்துல அவன் கை கோர்த்துட்டு ரஹ்மான் மியூசிக் கேட்டுட்டு, ஒரு ஐஸ்க்ரீமை ரெண்டு பேரும் ஷேர் பண்ணினா எப்படி இருக்கும்னு நான் கேட்டேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”

“என்னடி சொன்னான்?”

“அலை கரையை தழுவுற மாதிரி என்னை தழுவி, அதே கடல்ல குளிச்சா எப்படி இருக்கும்னு கேட்கிறான். எப்பபாரு இதே நெனப்பாவே சுத்துறான்டி. செம கடுப்பாகுது, அதான் இப்போ ப்ரேக்-அப் பண்ணிட்டேன்.” என்றதும் சிரிப்பு அடங்க பல நிமிடம் பிடித்தது.

“மச்சி, இதுக்கே ப்ரேக்-அப் பண்ணிட்டியா? மென் ஆர்ஆல்வேஸ் மென்! இவங்களை திருத்தவே முடியாது. எங்கயாவது ஒருசில ரேர் ஸ்பீஷீஸ் இருக்கும். அதை தேடி பிடிச்சு நாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணுறதுக்குள்ள நரைச்சு போயிடும்…” என்றதும் மீண்டும் சிரிப்பலை.

“ஏய், அவன் வீட்ல கல்யாணத்துக்கு பேச சொன்னா அதை செய்யாம, லிவிங்-ல இருக்கலாம் வரியான்னு கேட்கிறான். அதான் போடான்னுட்டேன்.”

“எனக்கு இப்படியெல்லாம் இல்லப்பா… என்னோட பக்கெட் லிஸ்ட் வேற…” என்ற மலர் தன் எதிர்பார்ப்புகளை சொல்லத் தொடங்க,

“என்ன, இழை அமைதியா இருக்க? உனக்கு இந்த மாதிரி எந்த கற்பனையும் இல்லையா?” என்றாள் வினி.

“இல்லை…”

“ஹே, உனக்கும் வரன் பார்த்துட்டு இருக்காங்கன்னு ஜீவி சொன்னா. அப்போ கண்டிப்பா எக்ஸ்பெக்டேஷன் இருக்கும். சொல்லுடி, தெரிஞ்சுக்குறோம்…”

“நிஜமாவே இல்லடி… அம்மா அப்பா விருப்பம் தான் என்னோடதும்.”

“ஏய், அவ சரியான அம்மா கோண்டுன்னு தெரியாதா?”

“சரி, உனக்கு வரப்போறவர் எப்படி இருக்கணும்?”

“அப்படி எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்ல. என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையை அதன் போக்குல வாழ்ந்தா இன்னுமே நாம சந்தோஷமா இருக்கலாம்.”

“லவ் பண்ணல, எக்ஸ்பெக்டேஷன் இல்ல… என்னடி இது? உன்னை மாதிரி நீ மட்டும் தான் இருக்க முடியும்,” என்று வினி கேலி பேச…

“யாரையும் லவ் பண்ணலையே தவிர, கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட மொத்த காதலையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என்னோட ஹஸ்பன்ட்க்கு கொடுக்கணும்..” என்ற இழையிடம்,

“நம்மோட எதிர்பார்ப்பையே புரிஞ்சுக்க மாட்டாங்க. இதுல நீ எதிர்பார்ப்பு இல்லாம இருந்தா, உன்னை கண்டுக்க கூட மாட்டாங்க இழை. நம்மோட உரிமையை எப்பவும் விட்டுக்கொடுக்க கூடாது.”

“இருக்கலாம். ஆனா எனக்கு எப்பவும் வாங்கறதை விட கொடுக்க தான் அதிகம் பிடிக்கும். நமக்கு பிடிச்சவங்களுக்கு, அவங்களுக்கு பிடிச்சதை செய்யறப்போ அவங்க முகத்துல ஒரு சந்தோஷம் வரும் பாரு… அது நாம வாங்குறதுல கிடைச்சுடாது, வினி. காதல் எப்பவும் கொடுக்கும் போது இரட்டிப்பாகும். அதனால என் அப்பா அம்மா மட்டுமில்ல, என்னோட ஹஸ்பன்ட் முகத்துலையும் அந்த சந்தோஷத்தை பார்க்க விரும்புறேன்.”

“இழை, நிஜமாவே உனக்கு ஹஸ்பன்ட்கூட ஊர் சுத்தணும், ஷாப்பிங் பண்ணணும்… இப்படி எந்த கற்பனையும் இல்லையா?”

“அப்படி இல்ல,” என்று நெற்றியைத் தட்டி சில நொடி யோசித்தவள், “விடிந்தும் விடியாத காலையில், இருள் பிரியக்கூடிய நேரத்துல மெல்லிய மழை சாரலோட, சுற்றிலும் இருக்கக்கூடிய மரங்களின் குளுமை…” என்று தன் கற்பனையை விவரித்தவள்,

“அப்படி ஒரு ரம்மியமான விடியலில் ஒரு கப் ஆஃப் காஃபி குடிக்கணும். அதிகமா இல்ல, ‘ஜஸ்ட் எ சிப் வித் எ மேன் பிசைட் மீ’ அதுவும் அவர் தோள் சாய்ந்துட்டு, ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு காஃபி குடிக்கணும். இதைவிட பெருசா எனக்கு எந்த கற்பனையும் தோணலை,” என்று  அவள் பேச ஆரம்பித்ததுமே அமைதியாகிவிட்ட தோழியர் பட்டாளம், இழை முடித்ததும் தான் தாமதம், “ஓஓஓஓ…” என கூச்சலிட்டனர்.

“செம மச்சி! நீ சொல்றதை கேட்கும்போதே கல்யாணம் பண்ணிக்க ஆசை வருதே. உன் ரசனை எப்பவுமே வேற லெவல். ஆனா என் ஹஸ்பன்ட் பாதிநேரம் லேப்டாப்போட தான் குடித்தனம் பண்ணுவார். இதுல எங்கிருந்து ஒரு சிப்? வாய்ப்பே இல்ல,” என்று ஒருத்தி புலம்ப…

“இவ்ளோ ரொமாண்டிக்கா இருக்க, உனக்கு வரப்போறவரைப் பற்றின சின்ன எதிர்பார்ப்புக்கூட இல்லையா?”

“இல்லடி… சொன்னா நம்புங்க.”

“பிசிக்கல் அப்பியரன்ஸ்னு இல்ல, வேற ஏதாவது இருக்கும். நல்லா யோசிச்சு பாரு, இழை…”

“அப்படியா சொல்ற..? சரி, இரு,” என்று கண்களை மூடி யோசித்த இழை இமைகளை ஊடுருவியவனை கண்டு திடுக்கிட்டு சட்டென கண்களைத் திறந்து,

“எனக்கு வரப்போறவர் கண்டிப்பா கோபக்காரனா இருக்கக்கூடாது..” என்றாள் பதட்டத்தோடு..

“ஏன்டி?”

“என்னமோ தெரியல. சின்ன வயசுல இருந்தே யாராவது என்மேல கோபப்பட்டா, பதட்டத்துல எனக்கு அடுத்து எதுவுமே யோசிக்க முடியாது. சட்டுன்னு அழுகை வந்துடும்… ஒருமாதிரி எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல. அதனாலேயே ஸ்கூல், காலேஜ்ல என்னோட வேலை சரியா செய்திடுவேன். அடுத்தவங்க கோபப்படறதுக்கு வாய்ப்பே கொடுக்க மாட்டேன்.”

“என்னடி சொல்ற?”

“ஆமா. முன்கோபம் இருக்கிறவங்களை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம். நாம சொல்றதை லிசன் பண்ணவே மாட்டாங்க…”

“ஓகே, ஓகே… ரிலாக்ஸ். ஏன்டி இவ்ளோ டிஸ்டர்ப் ஆகுற?”

“ஒண்ணுமில்ல. நீங்க கண்டினியூ பண்ணுங்க..” என்றவள் முயன்று மனதை அவனிடமிருந்து மீட்டிருந்தாள்.

“ப்ரியா சொன்ன மாதிரி தான் டி, என் ஹப்பியும்! லவ் பண்ணினப்போ பேசுனது ஒன்னு, இப்போ செய்யறது ஒன்னு. வீடு, ஆபிஸ்னு எல்லா பொறுப்பும் என்னோடது தான். அவர் வீட்டுக்கு வரதே லேட். அதுக்கப்புறம் நான் எந்த கேள்வியும் கேட்க முடியாதபடி ஏதாவது பேசி என் வாயை அடைச்சிட்டு போயிடுவார். வாழ்க்கை எதோ ஓடுது,” என்றாள் மிருதுளா.

“அப்புறம் எப்படிடி இங்க வந்த? ஒண்ணும் சொல்லலையா?”

“அதை ஏன் கேட்கிற… ரொம்ப போராடி வந்திருக்கேன். ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை அவருக்கு அப்டேட் பண்ணிட்டே இருக்கணும்.”

“இதுக்குத்தான் என்னை மாதிரி கல்யாணமே பண்ணிக்காம லைப்பை என்ஜாய் பண்ணனும்னு சொல்றது..” என்று ஜீவிகா இல்லாத காலரை தூக்கிவிட்டு சொல்ல…

“ஆமா மச்சி! என்னை கேட்டா கல்யாணமே பண்ணிக்காதன்னு சொல்லுவேன்” என்றாள் கல்லூரி இரண்டாம் ஆண்டிலேயே திருமணம் செய்திருந்த லதா.

“ஏன்டி?”

“ப்ச்… என்னமோ கல்யாணத்துக்கு அப்புறம் இருபத்தி நாலு மணி நேரமும் கிட்சன்லயே இருக்கிற ஃபீல். என் மாமியார் எல்லாம் மூணு வேலையும் ஃப்ரெஷ்ஷா சமைச்சு சாப்பிடணும்னு சொல்ற ஆளு. அதுவும் அடுப்புல சமைக்கணும்னு சொல்லுவாங்க…” என்று ஆரம்பித்து தன் சோகத்தை பகிர்ந்தவள்,

“என் புருஷுக்கு அவர் அப்பா, அம்மா தான் தெய்வம். அவங்களை எதிர்த்து பேசக்கூடாது… அது, இதுன்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன்…”

“என்னடி சொல்ற… நம்பவே முடியலையே?” என்று ஒருத்தி அதிசயிக்க…

“கேர்ள்ஸ்! ஒட்டுமொத்தமா அப்படி சொல்லாதீங்க,” என்று முன்னே வந்த ராதிகா.

“என் மாமியாரும் ஹஸ்பன்ட்டும் ரொம்ப அட்ஜஸ்டபிள். நான் குழந்தைக்காக என் வேலையை விட்டுக்கொடுத்து பிரேக் எடுத்தேன். இப்போ திரும்ப ஜாயின் பண்ணிட்டேன். நான் இந்த ட்ரிப் வரனுமான்னு யோசனையில் இருந்தேன். என்னை அனுப்பினதே அவங்க தான்.”

“உன் மாமியார் எல்லாம் மியூசியம்ல வைக்க வேண்டிய பீஸ், ராதி. ஒருமுறை எங்களுக்கு இன்ட்ரோ கொடு. அந்த தெய்வத்தை நாங்களும் தரிசிக்கிறோம்..” என மீண்டும் சிரிப்பலை…

“நீங்க நினைக்கிற மாதிரி எல்லா மாமியாரும் கெட்டவங்க இல்லை. ராதியோடது மாதிரியும் இருப்பாங்க. ஜெனரலைஸ் பண்ணாதீங்க.”

“இழை, இன்னும் நீ உன் மாமியாரைப் பார்க்கல. அதான் சர்டிஃபிகேட் கொடுக்குற. கல்யாணத்துக்கு பிறகு இதே வார்த்தையை சொல்லு. ஏத்துக்குறோம்.”

“அச்சோ… ஏன் எல்லாரும் தப்புன்னே முடிவுக்கு வந்துடுறீங்க? நல்லவங்களா இருக்கக்கூடாதா? என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை ஒவ்வொரு காலகட்டத்துலையும் நமக்கு புது சூழலை, புது மனுஷங்களை அறிமுகப்படுத்தும். அப்படி வரப்போ, முன்கூட்டியே அவங்களைப் பற்றின அபிப்பிராயம் இல்லாம, அவங்களோட பழகிப் பார்த்து முடிவு பண்ணினா பிரச்சனை பெருசா இருக்காதுன்னு தோணுது…”

“எனக்கு என் லைப் நான் நினைச்ச மாதிரி தான் இருக்கணும். யாருக்காகவும் என்னை நான் மாத்திக்க மாட்டேன். எப்பவும் போலதான் இருப்பேன்,” என்று நக்ஷத்ரா உறுதியான குரலில் கூறவும்…

“அப்படியில்ல நக்ஷி. இந்த பாட்ஷா படத்துல ‘எட்டுஎட்டா மனுஷன் வாழ்க்கையை பிரிக்க சொல்லுவாங்களே’—அதுபோல நம்மோட ஒரு எட்டு மாதிரி இன்னொரு எட்டு இருக்காது. அதை ஏத்துக்குற பக்குவம் இருந்தா போதும், வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமா வாழலாம். சூழலுக்கு பொருந்திட்டா இங்க பிரச்சனையே இல்ல… பொருந்தாம போறதுதான் பலரோட ப்ராப்ளம்னு தோணுது…” என்றாள் இழையாள்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அதகளமான ஃப்ளாஷ்பேக் இருக்கும் போலயே.

    வசியின் எண்ணங்களுடன் ஒத்துப்போகின்றாள் நாயகி.

    வாழ்க்கையை அதன் போக்கில் வாழ வேண்டும், எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் ஏமாற்றங்களும் இல்லை.

    ஒருவரை பற்றிய முன் அபிப்ராயம் வைக்காமல் பழகி பார்த்து அரிய வேண்டும். 👏🏼

    சூழலுக்கு பொருந்திவிட்டாலே போதும்.