
“ப்ரொஃபி” பெண்ணவளின் குரல் செவியைத் தீண்டும் போதே, சில்லென்ற உணர்வு அவனை ஆட்டுவிக்கும்.
அவளும் தன் மீது ஆர்வம் காட்டுவாளென்று தெரிந்திருந்தால், இந்த வேலையில் சேராமலேயே அவள் முன் நின்று தனது ஆர்வத்தையும் கொட்டியிருப்பானே!
தனது பணிக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம், அவளது குறும்புதனை மனத்தினுள்ளேயே நிரப்பிக்கொண்டான்.
அவளும் இவனை இங்கு பேராசிரியராக எதிர்பார்க்கவில்லையே. மருத்துவமனையில் அவனது ஐடிகார்டில் கல்லூரி பெயரையும், வகுப்பையும் மட்டுமாக பார்த்திருந்தவள், வருடத்தைக் கவனிக்க தவறி விட்டாள்.
பிறகு யாராய் இருந்தால் என்னவென்று அவனது மன அதிர்வுகளை உணராமலேயே தன் மனதை வெளிப்படுத்தத்தொடங்கி விட்டாள்.
ஒருமுறை அவனிடம் கூறிய பொய்யை உண்மையாக்க, வண்டியில் இருந்து விழுந்து தன்னையே காயப்படுத்திக்கொண்ட பிறகு தான் அவளது அன்பின் தீவிரம் அவனைத் திகைக்க வைத்தது.
சுற்றுலாவிற்கு செல்வதற்கு திடீரென கல்லூரி முதல்வர் சத்யாவை அனுப்பி விட, முதலில் மறுத்தவன் மாணவ மாணவிகளின் பெயர் வரிசையைப் பார்த்ததும் உடனே ஒப்புக்கொண்டான்.
அவனது விழிகள் இதயாம்ரிதாவின் பெயரை அதில் கண்டதும் தானாய் மலர்ந்து போனது.
தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வந்து நின்று தன்னிடம் அளவளாவிக்கொண்டிருந்த நொடிகளை மனதில் பொக்கிஷமாய் சேமித்துக் கொண்டான்.
தொழிலதிபர் ராம்குமாரின் மகளென்று அறிந்தபின்னர், அவளிடம் ஆர்வம் காட்ட சிறு தயக்கம் அவனுக்கு.
அவளது எளிமையிலும் குறும்பிலும் கவரப்பட்டாலும், அவளைச் சுற்றியுள்ள நண்பர்களின் மீது நல்ல அபிப்ராயம் அவனுக்கு இருந்ததே இல்லை.
பொதுவாக அப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து அவன் முற்றிலுமாக ஒதுங்கி விடுவான். ஆனால், இவளிடம் இருந்து ஒதுங்க முடிவதில்லையே.
செல்வந்தரின் மகளென்ற தலைக்கணத்தை வகுப்பிலிருக்கும் மற்றவர்களிடமும் அவள் காட்டியதே இல்லை.
அவனுக்கு ஒரே ஒரு வருத்தம் தான். முன்னரே, அவளது குடும்பப் பின்னணி தெரிந்திருந்தால், இது சரியாக வராது என்று அவள் கண்ணில் படாமல் இருந்திருப்பான். அதே நேரம், அவளும் தன்னை விரும்புவது தெரிந்திருந்தால் இந்த வேலைக்கே வந்திருக்க மாட்டான். இரண்டும் நடந்து முடிந்த பிறகு அதனப்[ பற்றி சிந்திப்பதில் நியாயமில்லை.
அவளைத் தன்பின்னால் அலைய வைப்பது அவனது நோக்கமில்லை. தன்னிடம் அவள் இறைஞ்சுவது அவனுக்குப் பிடிக்கவும் இல்லை. மனதில் மகாராணியாய் வீற்றிருப்பவள் முகம் வாடுவதிலும் பிடித்தமில்லை.
அதனாலேயே வேலையை விட்டு விடுவதென்று முடிவெடுத்தான். அதற்கும் அவள் விடாமல், தன்னிடம் முடிவு கேட்டு அடம்பிடிக்க, வேறு வழியற்று அவளிடம் மெதுவாக தனது மனதை பகிர்ந்து விட்டு, இருவருக்குள்ளும் வீற்றிருக்கும் பொருளாதார இடைவெளியை விளக்கி, தனக்கான அவகாசத்தைக் கேட்டு அவளுக்குப் புரிய வைக்க எண்ணியே கடற்கரைக்கு வர சம்மதித்தான்.
அவளைத் தனியே சந்திக்கப்போகும் தருணத்திற்காக, சிறுவன் போல ஒவ்வொரு வினாடியையும் யுகமாய் கழித்தான். பேரிடியாக அப்பேர்பட்ட பழி அவன் மீது விழுகாமல் இருந்திருந்தால்!?
சத்யாவின் இறுதி வேலை நாள்!
தனக்கான இறுதி வகுப்பை முடித்து விட்டு, ஸ்டாஃப் ரூமிற்கு வந்தவனுக்கு “ப்ரொஃபி” எனக் குறும்பாய் அழைக்கும் பாவையின் நினைவு அதிகமாய் தாக்கியது.
இதயத்தின் ஆழத்தில் அழியா வடுவாய் பதிந்து விட்டாள் அவள்.
அவளை எண்ணி தானாய் அவனது முகம் புன்னகையில் விசுகிசுக்க, தனது மடிக்கணினியை திறந்தவனின் வதனம் அதிர்ந்து போனது.
அந்நேரம், கல்லூரி முதல்வரிலிருந்து துணை காவல் ஆய்வாளர் வரை அனைவரும் அங்கு வந்து விட்டனர்.
வந்தவர்கள் என்ன ஏதென்று கேள்வி கேளாமல் சத்ய யுகாத்ரனின் மடிக்கணினியைக் கைப்பற்றினர்.
“சார்…” அவன் பேசும் முன்னே, துணை ஆய்வாளர் அவன் கன்னத்தில் பளாரென அறைந்தார்.
“பொறுப்பான வேலைல இருந்துட்டு, உங்கிட்ட படிக்கிற பொண்ணுங்களை வித விதமா வீடியோ எடுத்துட்டு இருந்துருக்க. பொறுக்கி நாயே!” என அவன் சட்டைக் காலரைப் பிடிக்க, சத்யாவிற்கு நடப்பது ஒன்றும் புரியவே இல்லை.
“சார் சத்தியமா எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. நான் அப்படிப்பட்ட பையனும் இல்ல” சத்யா வலியுடன் கூறினான்.
“இது உன் லாப்டாப் தான? உன் போனை எடு!” என்று அவனது போனை வாங்கிப் பார்க்க, அதிலும் அவனது கேலரி முழுக்க நிறைந்திருந்தது மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள்.
அதனைக் கண்டு கலங்கிப்போன சத்யா, “நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க சார்…” எனப் பரிதவிக்க, “நீ சொல்றதை நான் என்னடா கேக்குறது? வாடா” என்று அவனைத் தரதரவென இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றினார்.
“சார் என்னை பத்தி காலேஜ்ல கேட்டுப்பாருங்க. இதுவரை நான் எந்த தப்பும் செஞ்சது இல்ல” என்றதும், அவனது கல்லூரி முதல்வரே “தப்பு வெளில தெரியாத மாதிரி இருந்திருக்க. உன் லாப்டாப்ல இருக்குற வீடியோ எல்லாம் நீ இந்த காலேஜ்ல சேர்ந்ததுல எடுத்திருக்க வீடியோன்னு சொல்லுதே. பாஸ்டர்ட்” என முகத்தைச் சுளிக்க, அவனுக்கோ பூமிக்குள் புதைந்து விடு மாட்டோமா என்றிருந்தது.
தான் தவறே செய்யவில்லை என்று அவன் சாதிக்க, காவல் நிலையத்தில் குருதி வழிய அவனை அடித்து துவைத்தனர்.
அப்படியும் அவன் ஒப்புக்கொள்ளவில்லை. வாயிலிருந்து குருதி வழிய கண்ணைத் திறக்க இயலாமல் திறந்தவன் மூச்சிரைக்க,
“சார் ப்ளீஸ்… நான் சொல்றதை கேளுங்க. என் க்ளாஸ் ஸ்டூடண்ட்ஸ நான் எப்பவும் தப்பா நடத்துனது இல்ல சார். அங்க அங்க… எனக்குப் பிடிச்ச பொண்ணும் படிக்கிறா சார். அவகிட்ட கேட்டுப் பாருங்க. அவளுக்கு என்னைப் பத்தி நல்லா தெரியும் சார்… ப்ளீஸ்…” என்றவனின் முகத்தில் மீண்டும் நங்கென குத்திய குத்திய காவல் ஆய்வாளர்
“க்ளாஸ் பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு காதல் லீலை பண்ணிட்டு இருக்கியா” என்று மீண்டும் அடிக்கத் தொடங்கினார்.
சில அடிகளுக்குப் பிறகு, வலி தாளாமல் துவண்டவன், “நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சார்… அவள் அவளுக்கு ஒரே ஒரு போன் பண்ணுங்க ப்ளீஸ்ஸ்ஸ்” என இதயாம்ரிதாவை அழைக்கச் சொல்ல, “உன் மேல முதல் கம்பளைண்ட் கொடுத்ததே அவள் தான்டா” என்று காலால் அவன் நெஞ்சிலேயே மிதிக்க, உடலை விட நெஞ்சம் துடியாய் துடித்தது.
முதன்முறை அவரைத் தடுத்த சத்ய யுகாத்ரனின் கண்ணில் அளவுக்கதிகமான வலி ஊடுருவ, “நிஜமாவே இதயா கம்பளைண்ட் குடுத்தாளா?” குரல் நடுங்க கேட்டவனின் உடம்பில் பாதி உயிர் மட்டுமே மீதமிருந்தது.
அந்தக் கேள்விக்கு பதில் கொடுக்கும் முன்னே மயங்கி விட்டான்.
மீடியா முழுக்க, பேராசிரியரின் வெறிச்செயல் என்ற ஹேஷ்டேகுடன் பரவியது சத்யாவின் விஷயம்.
அதனைக் கண்டு சத்யாவின் குடும்பமே அதிர்ந்து போனது. சீனிவாசன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.
“இதெல்லாம் பொய்யா இருக்கும்ங்க. சத்யா எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டான்…” மாலதி கணவனைத் தேற்றினாலும், மகன் மீது விழுந்த பழியில் மனம் புழுவாய் துடித்தது.
கீர்த்தனாவும் நீலாவும் உடைந்தனர். விசாரணை என்ற பெயரில் சத்யாவின் குடும்பத்தையே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அல்லோலப்படுத்தினர்.
ஜாமீன் எடுக்கவும் வழியில்லாமல் சத்யாவைக் கண்ணிலும் காட்டாமல் அவர்களை திண்டாட வைக்க, சமூகத்தின் பார்வையில் பெண் பித்தனின் பெற்றோர் என முத்திரை குத்தப்பட்டனர்.
அந்த பழிச்சொல்லை விட, சத்யாவை கண்ணால் ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்பது மட்டுமே அவர்களது வேண்டுதலாக இருந்தது.
ஒரே நாளில் ஒட்டு மொத்த குடும்பத்தின் நிம்மதியும் குலைக்கப்பட்டு நடைபிணமாக்கப்பட்டனர்.
மூன்று நாள்கள் கடும் விசாரணையின் பேரில் உயிர்வலி கொடுத்தனர்.
அவனது அத்தைப்பெண்ணான ஸ்வேதாவும் அவன் மீது புகார் கொடுத்தது அவனுக்கு அடுத்த அடி. வெகுவாய் இறுகிப்போனான், இத்தனை அடிக்கும் உயிர் போகாதது ஒன்று தான் அவனுக்கு வருத்தம். ஆகினும், தனது குடும்பத்தார் தன்னை காணாமல் துடித்திருப்பர் என்ற பரிதவிப்பில் உயிரைப் பிடித்து வைத்திருந்தான்.
அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்போகும் நாளில் தான், அவனை காவல் நிலையத்தில் வந்து சந்தித்தனர் விஷால், ஷ்யாம், யாமினி மற்றும் நிலோபர்.
அவர்களைக் கண்டதும் சிறு ஒளி தெரிய, அவர்கள் பின்னால் தனது வீங்கிய விழிகளால் தன்னவளைத் தேடினான். அவள் இல்லையென்றதும் சுருக்கென வலித்தது.
“விஷால் நீயாவது சொல்லு… இதயா அப்படி கம்பளைண்ட் கொடுக்கல தான?” என இறுதி நம்பிக்கையைக் கையில் பிடித்துக்கொண்டு துவண்டு வினவினான்.
“அச்சோச்சோ பிரபஸர்க்கு இன்னும் மயக்கம் தீரலையா?” விஷாலின் வன்மக்குரலில் அவனிடம் அதிர்வலைகள்.
ஷ்யாமோ, “பின்ன பணக்காரி கிடைச்சா தானா மயக்கம் வர்றது நேச்சர் தான மச்சி…” என இளிவாய் புன்னகைத்தான்.
யாமினி, “உன்னை மாதிரி ஒரு தர்ட் ரேட் பெர்சனை என் ப்ரெண்ட் சைட் அடிக்கிறதே டைஜிஸ்ட் ஆகல. இதுல அவள் உன்னை லவ் பண்ணிட்டா அவ்ளோ தான்…” என நக்கலாய் புன்னகைத்தாள்.
சத்யாவின் குழப்ப முகத்தைக் கண்ட விஷால், “புரியலையா பிரபஸர் சார்… அவ ஒன்னும் உங்களை லவ் பண்ணி சுத்தல. ஏதோ டைம் பாஸ்க்கு உன் பின்னாடி வந்தா. நீ ஓவர் திமிரு காட்டுனதுல அவளுக்கு ஒரு ஈகோ. அதான் உன்னை சுத்த விட்டு, உன் வாயாலேயே அவளுக்கு ஓகே சொல்ல வர்றப்ப, இத்தனை நாள் சுத்த விட்டதுக்கு உனக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும்னு நினைச்சா… அந்த பனிஷ்மென்ட் ஹெவியா இருக்கணும்ல. அதான், எங்களோட கை வண்ணத்தில் உன் கன்னத்தில் கலர்படங்கள்…” என்றான் வெகு கேலியாய்.
“வாவ் வர வர கவிதையெல்லாம் சொல்ற மச்சி” நிலோபர் திமிராய் விஷால் மீது கை போட்டு பாராட்ட, “இந்த லோக்கல் பீச இனி பாக்கப்போறது இல்லன்னு தெரிஞ்சதும் ஆட்டோமேட்டிக்கா வருதுடி!” என புன்னகைத்தான்.
அவர்களை வெறித்த சத்ய யுகாத்ரன், கம்பியை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
சில நொடிகளுக்குப் பிறகு, “என்னை அவகிட்ட இருந்து பிரிக்கிற முயற்சி!!! அதுக்காக என் குடும்பத்தையே தலைகுனிய வச்சுருக்க வேணாம். அவளோட பேக்ரவுண்ட் தெரிஞ்சதும் நான் விலகிப் போயிருக்கணும். போகல. அது என் தப்பு!” எனும்போதே விஷாலின் இதழ்களில் ஏளன புன்னகை.
“பட், அவள் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சுருக்கா. அந்த நம்பிக்கையை இப்படி அவள் மேல சேறை பூசி உடைக்காதீங்க. போய்டுங்க. கொன்னுட போறேன்” என்றவனின் குரலில் அத்தனை கர்ஜனை.
நிலோபரோ, “ஹே நாங்க சொல்றது பொய்யின்னு நினைச்சு உன் மனச தேத்திக்கிறியா? எங்க ப்ரெண்ட் உன்னை லவ் பண்றதுக்கு அவள் பாழுங்கிணத்துல விழுந்துடலாம்… உன்னை ஒரு மனுஷனாவே மதிக்காததுனால தான் அவள் உன்னைப் பார்க்க கூட வரல! சரி யார் வந்தா என்ன வரலைன்னா என்ன, ஹேப்பி ஜெயில் ஜர்னி…” என்று விஷமத்துடன் கூறி விட்டுச் செல்ல, முற்றிலுமாய் துவண்டு போனான்.
ஆனாலும், நிச்சயம் இதயாம்ரிதா தன்னைப் பற்றி புகார் கொடுத்திருக்க மாட்டாளென்ற நம்பிக்கை அவனுள் மரமாய் விரிந்திருந்தது.
தனது கழுத்தைச் சுற்றிய ஆலமரத்தின் வேரை, உயிர் பிரிந்தால் மட்டுமே எடுக்க இயலும் என்ற நிதர்சனம் புரிந்தவனாய் கண்ணில் நீர் கோர்த்தான்.
நீதி மன்றத்திற்கு செல்லும் முன், உண்மையை ஒப்புக்கொள்ளச் சொல்லி பல முறை அடித்தார்கள். கல்லென இருந்தான். வாயைத் திறக்கவே இல்லை.
“உன்னை அடிக்கிற மாதிரி உன் குடும்பத்தை கூட்டிட்டு வந்து நாயடிக்கிற மாதிரி அடிக்கிறேன்…” என்று காவலர் குதறியதில், அவரை அமைதியாய் ஏறிட்டவன் நீதிமன்றத்தில் தான் வீடியோ எடுத்ததாக ஒப்புக்கொண்டான்.
ஆகினும், அவன் வைத்திருந்த வீடியோக்கள் பற்றிய தெளிவும், அவன் மீது புகார் கொடுத்தவர்கள் நீதிமன்றத்திற்கு வராமல் இருந்ததாலும் அவனுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதில் மனமுடைந்த சீனிவாசனுக்கு உடல் நிலை சீர்கெட, அதன்பிறகு கீர்த்தனாவும் மாலதியும் அவனைப் பார்க்க பலமுறை சிறைச்சாலைக்கு வந்த போதும் அவன் அவர்களைக் காண விழையவில்லை. பித்துப் பிடித்தவன் போல விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருப்பான்.
பல நாள்கள் உண்ணாமல் உறங்காமல் சிலையென இருந்த நாள்களும் உண்டு.
அவனைப் பார்க்க ஆள் வந்திருக்கிறார்கள் என அறிந்ததும் ஒரே ஒரு நொடி அது இதயாம்ரிதாவாக இருப்பாளோ என்ற ஆர்வம் அவன் கண்ணில் தென்படும். ஆனால், அவளின்றி பிற பெயர்களைக் கூறியதும் அப்படியே தொய்ந்து விடுவான்.
இத்தனை வலிகளுக்கும் காரணம் அவளைச் சுற்றியுள்ளவர்கள் தானென அவர்கள் மீது வெறுப்பு வளர்த்தவனுக்கு சின்னதாய் கூட அவள் மீது வெறுப்பு தோன்றவில்லை. அவனது காதலின் ஆழம் அவனை வெறுக்க வைக்கவுமில்லை.
ஒரு வருட சிறைத்தண்டனை யுகமாய் கழிய, வீட்டிற்கு தயக்கத்துடன் வந்தவனை வரவேற்றது சீனிவாசனின் உயிரற்ற உடல் தான்.
மாலதி உயிரிப்பின்றி இடிந்திருக்க, அத்தனை மாதங்களாக உள்ளுக்குள்ளேயே அழுத்திய வேதனையை அப்போதே கேவலாய் வெளிப்படுத்தினான் சத்ய யுகாத்ரன்.
“அப்பா…. அப்பா… அப்பா” என ஐஸ்பெட்டிக்குள் இத்தனை மாதங்களாய் தூற்றிய சமூகத்திற்கு பயந்து நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தவரிடம் தொண்டை கிழிய கத்தி அழைத்தான்.
“அப்பா என்ன பாருங்கப்பா… அப்பா…” என தேம்பி அழுதவனைப் பளாரென அறைந்தார் தியாகு.
“யாருடா அப்பா? எப்ப நீ தான் தப்பு செஞ்சேன்னு எல்லார் முன்னாடியும் ஒத்துக்கிட்டியோ அன்னைக்கே உன்னை தலைமுழுகியாச்சு. போதும்டா யப்பா… உன்ன நம்பி எல்லாத்தையும் இழந்து இப்ப என் அண்ணனையும் இழந்தாச்சு…” என்று அவன் முன்னே கையெடுத்துக் கும்பிட்ட தியாகு, “போடா வெளில” என்று கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினார்.
இனியும் இழக்க எதுவும் இல்லாதவனாய் அவரது தள்ளலில் வாசலில் விழுந்தான்.
“அப்பா அண்ணாவ விடுங்கப்பா” என்ற விதுரனின் கதறல் அவர் காதில் விழுகவே இல்லை.
தனது தமையன் கண்ட அவமானமும் அவரது வலியும் மட்டுமே கண்ணிற்கு தெரிய, அவன் மீது இத்தனை நாள்களும் மறைத்து வைத்திருந்த கோபத்தைக் கனலாக காட்டியிருந்தார்.
“போயிடுறேன் சித்தப்பா… அப்பாவுக்கு… செய்ய வேண்டியதை…” உயிரற்று அவன் கூற,
“உன் கையால கொள்ளி வச்சா என் அண்ணன் கட்ட வேகுமாடா! இந்தக் குடும்பத்துல எந்த எழவு விழுந்தாலும் நீ தயவு செஞ்சு வந்துடாத. நீ செத்தாலும் எங்களுக்கு சொல்லி அனுப்பாத” என்று வார்த்தைகளை ஊசியை தைத்து விட்டார் அந்த முன்கோபக்காரர்.
தியாகுவின் கைரேகை அவன் கன்னத்தில் பதிந்திருக்க, ‘நீங்க கூட என்னை நம்பலைல’ என்ற ஏக்கத்துடன் அவரை ஒரு பார்வை பார்த்தவன், வீட்டினுள் நடப்பது எதுவும் அறியாமல் கணவனின் முகத்தையே வெறித்துக்கொண்டிருந்த தாயை ஒரு முறை நெஞ்சில் நிரப்பி விட்டு, தனக்காக கண்ணீர் சிந்திய கீர்த்தனாவையும் நீலாவையும் திருப்தியாய் பார்த்து விட்டு அங்கிருந்து சென்றே விட்டான்.
அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கு செல்வது, என்ன செய்வதென்று தெரியாது கிடைத்த பேருந்துகளில் ஏறி, பயணம் செய்தான்.
பிளாட்பார்மில் உறங்கினான். சிறைச்சாலையில் ஒரு வருடமாக தோட்ட வேலை செய்ததற்கு ஊதியமாக சில ஆயிரங்கள் கையில் இருந்தது. அதை எடுத்து செலவு செய்ய மனமில்லை.
அந்த நடுஜாம நேரத்தில், ஆற்றுப்பாலத்தின் ஓரத்தில் சில பிச்சைக்காரர்கள் உறங்கி கொண்டிருந்தனர்.
அங்கேயே செத்து விட்டால், தனது பிணத்தை தூக்கி ஆற்றிலாவது போட்டு விடுவர். வேலை மிச்சம்… பட்டினி கிடந்து செத்து விடலாம் என்ற எண்ணத்தில் மூச்சைப் பிடித்து காந்திய வயிறையும் மனதையும் சமாதானம் செய்து சுருண்டு படுத்திருந்தான்.
அப்போது தான், தீ வேகத்தில் பிளாட்பார்ம் மீது மோதியது அந்தக் கார்.
அந்த சத்தம் கூட கேட்காமல் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க, சத்ய யுகாத்ரன் மெல்ல எழுந்து கொண்டான்.
காரிலிருந்து கடுங்கோபத்துடன் இறங்கிய ஸ்ரீராம், சிகரெட்டைப் பற்ற வைத்தபடி ஆற்றுப்பாலத்தின் மீது வெறுப்பு பார்வையை உமிழ்ந்தபடி நின்றான்.
அவனது கோர்ட்டும் சூட்டும் சொல்லியது அவனது பணச்செழுமையை!
ஸ்ரீராம் சத்யாவைக் கவனிக்கவில்லை. ஆனால் சத்யா கவனித்தான்.
சில நொடிகளில் ஸ்ரீராமிற்கு தனது உதவியாளரிடம் இருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றதும் கத்த தொடங்கினான்.
“யோவ்… என்னையா எனக்கு பிசினஸ் பண்ண தெரியலைன்னு என் அப்பா சொன்னா உடனே தலையை ஆட்டிட்டு என் பதவியைப் பிடுங்கிடுவியா?”
——–
“கிளையண்ட்கிட்ட எப்படி பேசணும்னு நீ எனக்கு சொல்லி தர தேவையில்லை…”
—-
கோடிக்கணக்குல நம்மகூட டீலிங் வச்சுருக்குறவன்னா அவன் கால்ல விழுக முடியுமா நானு? அவன் கேக்குற ஆஃபர்க்கு டீல க்ளோஸ் பண்ண முடியாதுன்னு சொல்றது என் உரிமை!”
“சார் புரியுது சார்… அந்த டீலர் நீங்க பேசுறது பிடிக்கலைன்னு சொல்லிட்டு…”
“அவன் என்ன எனக்கு பொண்ணா தர போறான் பேசுறது பிடிக்கலைன்னு போறதுக்கு… அவனுக்காக என் அப்பா என்னை ஆபிஸை விட்டு தூக்குறதுல நியாயமே இல்ல. இதுல எனக்கு பிசினஸ் பண்ணவே தெரியலைன்னு முத்திரை குத்துறதுக்கு நான் என்ன ஈனா வானாவா?” என்று கோபத்தில் பொரிந்தான்.
அலைபேசியை தூக்கி எறிந்து விட்டு மூச்சிரைக்க ஆறை வெறித்தான். சீறல் அடங்க மறுத்தது.
சில நொடிகளில் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த சத்யா, “உங்க போன்” என்று அவன் உடைத்து எறிந்த அலைபேசியை ஸ்ரீராமிடம் கொடுத்தான், அழகாய் ஒட்ட வைத்து.
அவனை மேலும் கீழும் அசட்டையாக ஏறிட்ட ஸ்ரீராம், முகத்தை திருப்பிக்கொள்ள, அவனும் பதில் பேசாமல் அமைதியாய் தனது இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.
விழிகள் இலக்கின்றி விண்மீன்களை வெறித்திருந்தது.
சில நிமிடங்கள் அங்கேயே நின்ற ஸ்ரீராம், காரினுள் ஏற போனான். பின் என்ன நினைத்தானோ, மீண்டும் சத்யாவிடம் வந்து ஒரு கற்றை நோட்டை நீட்டினான்.
அதனைப் புருவம் சுருக்கிப் பார்த்த சத்யா, “நான் இன்னும் பிச்சை எடுக்கற அளவு போகல…” என்றான்.
அதில் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்த ஸ்ரீராம், “சோ பிளாட்பார்ம்ல உக்காந்து பைலட் வேலையா பாக்க போற…” என தோளைக் குலுக்கியவன் பணத்தை அவன் முன்னே வைத்து விட்டு நகர எத்தனிக்க, “காசு வாங்கிக்கிறேன். ஆனா சும்மா வாங்க மாட்டேன்” என்றான் சத்ய யுகாத்ரன்.
“வாட் டூ யூ மீன்?”
“உங்க கிளையண்ட்கிட்ட நான் பேசி டீலிங்கை மறுபடியும் கன்டின்யூ பண்ண வைக்கிறேன்… இந்தக் காசை வாங்கணும்னா எனக்கு ஒரு சான்ஸ் குடுங்க” என்றான்.
“வாட் நீ பேச போறியா? எதுக்கு என் அப்பன் என்னை மொத்தமா தலை முழுகவா?” ஸ்ரீராம் சீறிட,
“ஆல்ரெடி முடிஞ்சு போன டீலர்ஷிப் தான? நான் புதுசா இதுல கெடுக்க என்ன இருக்கு” என்றவனின் கூற்றில் பலமாய் முறைத்தான்.
“ஒரு ட்ரை!” என்று அவனது அலைபேசியை கேட்டு கையை நீட்டினான்.
“உனக்குப் பொழுது போகாததுக்கு நான் தான் கிடைச்சேனா… சரி எனக்கும் டைம் பாஸ் ஆகட்டும்” என்று அவனருகிலேயே திணக்கமாய் அமர்ந்த ஸ்ரீராமிடம், அவனது தொழில் பற்றி கேட்டு தெரிந்து கொண்டான்.
இம்போர்ட் எக்ஸ்போர்ட் தொழில் என்றதுமே, தனக்குள் சில நொடிகள் ஏதேதோ கணக்கிட்டு விட்டு, அந்த முறிந்து போன டீலருக்கு அழைத்தான்.
எடுத்ததும் அந்த கஸ்டமர் காச் மூச்சென்று கத்தினார்.
சத்யா பதற்றப்படவில்லை. நிதானமாய் பேசினான்.
“முதல்ல ஒரு பெரிய சாரி சார். ஏதோ ஒரு மிஸ் கமியூனிகேஷன். எங்க பாஸ் கொஞ்சம் ஷார்ட் டெம்பர்ட். அதுக்காக அவர் ரொம்ப வருத்தம் தெரிவிச்சாரு. ஒரு லாயல் டீலரை இழந்தது எங்க கம்பெனிக்கு பெரிய லாஸ் சார். உங்களுக்கே தெரியும் இந்த தொழில்ல இருக்குற கஷ்டம். நீங்களே அதிக ஆஃபர் கேட்டா, அது எங்களுக்கு பெரிய ஏமாற்றமா இருக்குமென்ற கோபம் தான் எங்க பாஸ்க்கு.
மத்தபடி உங்களை சீப்பா நடத்தணும்னு எந்த இன்டென்ஷனும் இல்ல… உங்களுக்கு எங்களை மாதிரி ஏகப்பட்ட கான்டராக்ட்ஸ் கிடைக்கலாம். பட் எங்களுக்கு உங்களை மாதிரி லாயல் டீலர்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் சார்…” என்று ஆரம்பித்தவன் அடுத்த சில நிமிடங்களில் அவரின் மனத்தைக் கரைத்து, இருவருக்கும் இடைப்பட்ட அதிக இலாமிக்க ஆஃபரை கொடுத்து டீலை முடித்து வைத்தான்.
அவனை வாயைப்பிளந்து பார்த்திருந்த ஸ்ரீராமிற்கு சில நொடிகளில் அவனது தந்தை அழைத்து புகழ்ந்து தள்ளி விட்டார்.
“யாரு மேன் நீ?” ஸ்ரீராம் கன்னத்தில் கை வைத்துக் கேட்டதும்,
“அவ்ளோ பெரிய ஆள் இல்ல சார்… கிளம்புங்க குட் நைட்” என்று மீண்டும் ஒரு ஓரமாக சுருண்டு படுத்துக்கொள்ள,
“ஹே நீ என்ன படிச்சுருக்க?”
“எம். பி. ஏ” படுத்தபடியே பதில் சொன்னான்.
“வாட்?” அதிர்ந்து போன ஸ்ரீராம், “எம்பிஏ படிச்சுட்டு பிளாட்பார்ம்ல என்ன பண்ணிட்டு இருக்க?” என்றதும்,
“எம். பி. ஏ படிச்சாலும் பிளாட்பார்ம்க்கு கொண்டு வரணும்னு விதி முடிவு பண்ணிட்டா யாரால மாத்த முடியும்” விரக்தி முறுவல் அவனிடம்.
அது ஸ்ரீராமிற்கும் வருத்தம் கொடுத்ததோ என்னவோ, “உன் பேர் என்ன?” எனக் கேட்டான்.
“சத்ய யுகாத்ரன்…”
“ம்ம்… நான் ஸ்ரீராம். என்கூட வர்றியா?” ஸ்ரீராம் கேட்டதும் அவனை தலையை உயர்த்திப் பார்த்தான்.
“டேய் நீ என்ன பிகரா உன்னை கூப்பிட்டதும் முறைக்கிற?” ஸ்ரீராம் அலறி விட, சத்யாவை மீறியும் அவனிதழ்களில் சின்னதொரு புன்னகை.
“எந்திரிச்சு வாடா…”
“வேணாம். என்னை பத்தி தெரிஞ்சா நீயே என்னை அனுப்பிடுவ…” அவனும் தானாய் ஒருமைக்கு தாவியிருந்தான்.
“ஓஹோ சார் அவ்ளோ பெரிய ஆளா?”
“ம்ம் ஜெயில்ல இருந்து வந்துருக்கேன்…” ஆடவனின் கூற்றில் ஸ்ரீராம் துணுக்குற்றாலும், “அமுல் பேபி மாதிரி மூஞ்ச வச்சுருக்குற உன்னை யாருடா க்ரைம் லிஸ்ட்ல சேர்த்தது… இப்பலாம் ஜெயிலுக்குப் போறதுல பாதி பேர் நல்லவங்களா தான் இருக்காங்க” என்றதில் சத்யாவின் முகம் கனிந்தது.
“சரி ஜெயிலுக்கு எதுக்கு?” எனக் கேட்டதும்,
ஏற்கனவே மன அழுத்தத்தில் தொய்ந்திருந்த சத்யா, தனது மொத்த அழுத்தத்தையும் அவனிடம் கொட்டி விட்டான்.
ஸ்ரீராமிற்கு கடுங்கோபம் எழுந்தது.
“டேய் நீ என்ன லூசா? அவனுங்களை அப்படியேவா விட்ட… அந்த அம்ரி எல்லாம் ஒரு ஆளே கிடையாது. அதுவும் அந்த விஷால் இருக்கானே சரியான விஷம். அந்தக் கூட்டமே அப்படி தாண்டா” என்று பொங்கியதில் சத்யா எழுந்து புரியாது பார்த்தான்.
“உனக்கு அவங்களை தெரியுமா?”
“நல்லா தெரியும். என் ஸ்கூல் ஜூனியர்ஸ்டா அதுங்க. என் அப்பாவோட பிசினஸ் எனிமி அம்ரியோட அப்பா தான். அவ அப்பா என்கூட பேச விட மாட்டாரு. என் அப்பா அவ கூட பேச விட மாட்டாரு. சோ ஒரே ஸ்கூல்ல குப்பை கொட்டிருந்தாலும் எங்களுக்குள்ள எப்பவுமே முட்டிக்கும்.
எனக்கு அந்த கேங்கை சுத்தமா பிடிக்காது… ஒருத்தியை தவிர… ஹ்ம்ம்” என பெருமூச்சு விட்டவன், அந்தப் பேச்சை தவிர்த்து விட்டு, “ஆனா உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்களை சும்மா விடகூடாது சத்யா” என்றான் சினத்துடன்.
“விடக்கூடாது தான். ஆனா, எனக்கு வாழவே பிடிக்கல. என் குடும்பம், என் கனவு, என் பியூச்சர், என் காதல் எல்லாமே போச்சே ராம்” கசப்பாய் அவனது கண்ணீரும் வெளிப்பட்டது.
“புரியதுடா. அதுக்காக செத்துட்டா நீ தப்பானவன்னு முத்திரையே குத்திடுவாங்க… நீ உன்னை நிரூபிக்க வேணாமா?”
“யாருக்குடா நிரூபிக்க? என்னை தான் யாருமே நம்பலையே” கன்னம் தாண்டி வழிந்த கண்ணீரை சட்டையில் துடைத்துக்கொண்டவன், “உயிரோட இருந்தும் என் அப்பாவுக்கு கொள்ளி வைக்க முடியல ராம். அவ்ளோ வலிக்குது. இந்த உயிர் இன்னும் ஏன் எனக்குள்ள இருக்குன்னு ஆத்திரமா வருது” எனத் தளர்ந்து உடைந்தவனை பரிவாய் ஏறிட்டான் ஸ்ரீராம்.
அவனது வலியை உணர முடிந்தது. அது அவனுக்கும் வேதனை கொடுக்க, சத்யாவோ “என்னை ஒரு தடவையாவது அவ வந்து பாத்துருக்கலாம்ல… அவகூட என்னை தப்பா தான் நினைச்சுருப்பாள்ல…” என்று சொல்லும்போதே வார்த்தைகள் சிதறி குமுறி அழுதவனை என்ன சொல்லி தேற்றுவதென்று தெரியவில்லை.
“இன்னுமாடா அவளை நம்பிட்டு இருக்க. அவ தான்டா இந்த பிரச்சினைக்கு எல்லாம் காரணம்!”
“ப்ச் இருக்காது ராம். அந்த விஷால் தான் ஏதோ பண்ணிருக்கான். அவளுக்கு கண்டிப்பா இதுல சம்பந்தம் இருக்காது…” என்று முடிவாய் கூறினான்.
“ஓஹோ! அப்படியா… சரி இதை பாரு…” என்று தனது அலைபேசியை எடுத்து ஒரு போட்டோவைக் காட்டினான்.
அதில் விஷாலும் இதயாம்ரிதாவும் மணக்கோலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி நின்றிருந்தனர்.
அதைக் கண்டு மனதிலிருந்த சின்னதொரு காதலையும் மொத்தமாக சிதைத்துக்கொண்டான்.
“இது நிஜமாவா?” நடுக்கத்துடன் கேட்ட சத்யாவை பரிதாபமாய் பார்த்தவன்,
“இன்னைக்கு தான்டா ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சு. அவள் மூஞ்ச பாருடா… உன்னை லவ் பண்ணவ மாதிரியா இருக்கு. நீ ஜெயிலுக்கு போயிருக்கன்ற சோகம் தான் இருக்கா அவளுக்கு. ஒன்றை வண்டி மேக்கப்பை அள்ளி பூசிட்டு அவன் கூட ரொமான்டிக் போஸ் குடுத்து இருக்கா பாரு… இனியாவது அவளை நம்புறதை விட்டுட்டு உருப்புடுற வழியை பாரு” எனும்போதே அவனது உயிரணுக்கள் ஒவ்வொன்றும் தானாய் செத்து மடிந்தது.
அவளது மணக்கோலத்தின் மீதிருந்த கண்ணைப் பிரிக்காமல் வெகு நேரமாய் வெறித்திருந்தவன், நெஞ்சம் வெடித்த வேதனையுடன் “ஆஆஆஆ” எனக் கத்தினான். அவளது காதல் நினைவுகள் கூட பொய்த்துப்போனதில் துடியாய் துடித்து மடிந்து போனது அவனது காதலுள்ளம்.
பொட்டுவச்ச என் ரத்தினமே
வரைஞ்சு வச்ச என் சித்திரமே
பூ முடிச்சு நீ போகயில
தீ பிடிச்சு நான் சாவுறன்னே
தீ பிடிச்சு நான் சாவுறன்னே
தீ பிடிச்சு நான் சாவுறன்னே
நீ மலையேறி போற
நான் மண்ணோடு போறேன்
நீ கரையேறி போற
நான் கடலோடு போறேன்
நீ காத்தோடு காத்தாக
கனவோடு கனவாக
ஒலியோடு ஒலியாக
வலியோடு வலியாக
எங்கேய்யோ போற
எங்கேய்யோ போற
எங்கேய்யோ போற….
ராசத்தி உன் நினைப்பு
கருவக்காட்டு முள்ளாச்சுடி
அடி ஆத்தி உன் சிரிப்பு
புளியங்காட்டு பூவாச்சுடி
போற நீ வாக்கப்பட்டு
ஒடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீதான்டி
மனசெல்லாம் உன் நிறம்தான்டி
அடியே போடி!
புது காதல் மலரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
95
+1
3
+1
3
⬅ Prev Episode
23 – புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
Next Episode ➡
25 – புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சத்யா கல்யாணம் ஆன பிறகு நம்பியிருக்கிறான். ராம் பத்மாவை விரும்புகிறானோ?.
Adutha ud ku waiting sis