
“ நத்திங் சார், பட் திடீர்னு எதுக்கு இந்த வெளியூர் பிளான்? கல்யாண தொந்தரவு காரணமாவா?”
வாய்விட்டு சிரித்தான் ஈஸ்வர்,
“ எக்ஸாக்ட்லி, என் வீட்ல ரொம்பவே நெருக்கடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
கல்யாணத்தை இப்போ வெளியே சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தேன் இல்லையா, சோ த்ரீ மன்த் கழிச்சு நடக்கப் போற ரிசப்ஷனை, ரொம்ப கிராண்டா பண்ணனும்னு, இப்பவே எல்லாரும் பிளான் பண்ண தொடங்கிட்டாங்க.
என்னால என்னோட நெருங்கிய உறவுகள் கிட்டயே எந்த ஹெல்ப்பும் கேட்க முடியல, அவங்ககிட்ட இருந்து எனக்கு தொல்லைகள் மட்டும் தான் கிடைச்சிட்டு இருக்கு. இதை பத்தி வெளியேவும் என்னால பேச முடியாது.
பிகாஸ் என்னோட கம்பெனி ஷேர்ஸ்ல சிலது, சொந்தக்காரங்களோட பேர்ல தான் இருக்கு.
இதுல எங்க வீட்ல கல்யாண சடங்கு சாங்கியமுன்னு ஆரம்பிச்சிட்டாங்க, எனக்கு வீட்ல இருக்கவே முள்ளு மேல நிக்கிற மாதிரி இருக்கு, இவங்களால தான் நான் மெயினா இங்கிருந்து கிளம்புறேன்.
அப்புறம் கேட்க மறந்துட்டேன் சுகந்தன்கிட்ட பேசுனீங்களா? ஏதாவது பிளான் பண்ணி இருக்கீங்களா? இந்த ப்ராஜெக்ட் நீங்க எடுத்துக்குறீங்க தானே?
என்ன நிலா உங்களை நான் ரொம்ப அவசரப் படுத்துறேனோ? ”
எவ்வளவு பெரிய கோடீஸ்வரன், அதோட வெளிவட்டாரத்தில் பல நல உதவிகள் செய்து, மக்களிடம் நன்மதிப்பை பெற்றவன். இருந்தும் மன நிம்மதி இன்றி இப்படி பேசுவதை கண்டு, மனம் உருகியவள் வாயிலிருந்து தானாக வார்த்தை வந்திருந்தது.
“கவலைப்படாதீங்க சார் இன்னும் ஏழு நாள் தான், அதுக்கு அப்புறம் நீங்க ஃப்ரீ பேர்ட். உங்க இஷ்டப்படி கல்யாண டார்ச்சர்ல இருந்து விடுதலையாகி, சந்தோஷமா இருக்கலாம்.
உங்களோட ப்ராஜெக்ட்டை நல்லபடியா முடிச்சு கொடுக்க வேண்டியது, என்னோட பொறுப்பு.
இப்போதைக்கு பிளான் எதுவும் இல்ல, பட் நீங்க வீட்ல சொல்றபடி நல்லவிதமா நடந்துக்குங்க, எதுவும் எதிர்த்து பேச வேண்டாம். இல்லாட்டி திருமணத்தை நிறுத்தும் போது, மத்தவங்களுக்கு உங்க மேல தான் முதல் டௌட் வரும்.”
காலையிலிருந்து ஈஸ்வரின் ப்ராஜெக்டை எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்று இரு முடிவிலேயே இருந்தவள், ஒரு மனதாக ப்ராஜெக்ட்டை நல்லபடியாக முடித்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்திருந்தாள்.
சுகந்தன் எப்படியும் இரண்டு நாட்களில் திரும்பி வந்து விடுவான் என்று நம்பினாள் நிலா.
ஆனால் அவன் வர ஒரு வாரத்திற்கு மேலாகும் என்று தெரிந்திருந்தால்…
இதனால் தன் வாழ்க்கையே மாறப் போகிறது என்று தெரிந்திருந்தால்…சம்மதித்திருக்க மாட்டாளோ என்னவோ?
ஜவுளிக்கடையில் காஞ்சனாவிற்கு அருகே, முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நிலா.
காஞ்சனாவின் கைப்பைக்குள் இருந்த நிலாவின் போன், தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது.
ஏற்கனவே சுகந்தன் இல்லாத காரணத்தால், மாலினியும் நிலாவும் தான் ஆபீஸை கவனிக்க வேண்டி இருந்தது.
இப்போது நிலாவும் இங்கு வந்து விட, வரும் கிளைன்ட்சை சமாளிக்க முடியாமல் தான், அவளுக்கு தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தாள் மாலினி.
அவளது நம்பரை பார்த்ததுமே நிலாவின் போனை பிடுங்கி, தனது ஹேண்ட் பேக்கினுள் போட்டுக் கொண்டார் காஞ்சனா. அடித்துக் கொண்டிருக்கும் மொபைலையும், தனது அப்பாவையும் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தால் நிலா.
அவளது நிலைமையே கண்டு உதட்டினுள் சிரிப்பை மறைந்தபடியே, சுகுமாரின் அருகே நின்று கொண்டு, சேலை செலக்ட் செய்ய காஞ்சனாவிற்கு உதவிக் கொண்டிருந்தான் ஆதிரன்.
இது அவர்கள் இருவருக்குமே முக்கியமான நிகழ்வல்லவா, அதனால் நிலாவின் சூழ்நிலை அறிந்தும், தற்போது அவளுக்கு உதவ முடியாமல், நிலாவின் செய்கையை ரசித்தபடியே நின்றிருந்தான்.
நேற்று இரவு நிலாவின் அறைக்குச் சென்ற ஆதிரன், இந்த திருமணத்தில் உனக்கு சம்மதமா? இல்லை நீ வேறு யாரையாவது காதலிக்கிறாயா? என்று நேரடியாகவே அவளிடம் கேட்டிருந்தான்.
“இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வந்து, மணமேடைல எனக்கு தாலி கட்டும் போது இதை கேட்டிருக்கலாமே அத்தான், இப்ப என்ன அவசரம்?”
“ஐயோ நிலா…சாரிடா நிஜமாவே நீ யாரையாவது லவ் பண்றியா? நான் இப்பவே மாமாகிட்ட ஏதாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடறேன். உன் சந்தோஷத்தை விட எனக்கு வேற எதுவுமே பெருசில்லடா.”
“ ஐயோ அத்தான் பொறுங்க பொறுங்க அப்படியெல்லாம் எதுவுமில்ல.
எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகறீங்க, நீங்க பதட்டப்படற அளவுக்கு ஒண்ணுமே இல்லை.
எனக்கு இந்த லவ் எல்லாம் செட்டே ஆகாது, அதை விட என்னோட எவனும் செட் ஆக மாட்டாங்கறது தான் உண்மை.
இந்த ஜென்மத்துல என்னோட தொல்லையை நீங்க தான் தாங்கி ஆகணும். அதனால கண்டதை யோசிக்காம கல்யாணத்துக்கு ரெடியாகுற வழியை பாருங்க.”
கல்யாண விஷயத்தில் நிலாவின் மனநிலை தெளிவாக தெரிந்த பிறகு தான், ஆதிரன் அமைதியானன்.
இதோ இப்போது கூட அவர்களது முக்கியமான நாளுக்கான துணிகளை தனது அத்தையோடு சேர்ந்து ஆர்வமாக எடுத்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் நிலாவை பார்க்கவும், அவனுக்கு சற்று பாவமாகத் தான் இருந்தது. ஒரு வழியாக முகூர்த்த சேலை, நிச்சிய சேலையோடு சேர்த்து முக்கிய சடங்குகளுக்கு தேவையான சேலைகளையும் எடுத்த பிறகு, அவனுக்கு எடுப்பதற்காக அவர்கள் தயாராக, நிலாவின் பதட்டத்தை காண முடியாது காஞ்சனாவிடம் அவனே நிலாவிற்காக பரிந்து பேச தொடங்கினான்.
“அத்தை இப்ப நீங்க என்ன பண்றீங்க, உங்களுக்கும் மாமாவுக்கும் துணி எடுத்துட்டு இருக்கீங்க.
அங்க சுகந்தன் வேற இல்ல, இவ போனாத் தானே சமாளிக்க முடியும். பாவம் மாலினி சின்ன பொண்ணு எப்படி எல்லாரையும் சமாளிப்பா.
அது தான் நிலாவுக்கு முகூர்த்தப் புடவையும், நிச்சயப் புடவையும் எடுத்துட்டோமே, இனி நாம பாத்துக்கலாம்.
நீங்க போய் உங்களுக்கு புடவையும், மாமாவுக்கு டிரஸ்சும் வாங்குங்க அதுக்குள்ள நான் வந்துடறேன்.
அதுக்கப்புறம் எனக்கான பர்சேஸ் பண்ணிக்கலாம் சரியா, நான் போய் நிலாவை ஆபீஸ்ல விட்டுட்டு வரேன்.”
ஆதிரன் கூறிய பிறகு மறுப்பு கூற முடியுமா என்ன? வருங்கால மாப்பிள்ளை ஆயிற்றே முறைத்துக் கொண்டே போனை எடுத்து, நிலாவிடம் கொடுத்தவர்,
“வேலைய முடிச்சுட்டு வெளிய ஊரு சுத்திட்டு இருக்காம, நேரத்துக்கு வீடு வந்து சேரு. இனி நிச்சயமாயிட்டா ஆறு மணிக்கு மேல வெளியவே போக கூடாது புரிஞ்சுதா?”
அவசரமாக தலையை ஆட்டி விட்டு, ஆதிரனோடு அங்கிருந்து கிளம்பினாள் நிலா.
காஞ்சனாவிற்கு முதலில் புடவை பார்த்து விட்டு, அடுத்து தனக்கு பார்க்க செல்லாம் என்று சுகுமாரன் கூற, காஞ்சனாவும் சரி என்று புடவைகளை பார்க்கத் தொடங்கினார்.
அவருக்கு சற்று தள்ளி சேல்ஸ் மேன் ஒருவர், புடவையை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்ததுமே நிலாவிற்கு இந்த புடவை அழகாக இருக்கும் என்று நினைத்த காஞ்சனா அவரிடம் சென்று புடவையை வாங்கிப் பார்க்க,
“சாரி மேடம் இந்த புடவையை ஆல்ரெடி இவர் எடுத்துட்டாரு. அதோட இது ஒரே ஒரு பீஸ் தான் இருக்கு, உங்களுக்கு வேணும்னா வேற டிசைன் புடவை காட்டட்டுமா?”
சேல்ஸ்மேன் கைக்கட்டிய இடத்தில் விஷ்வா புன்னகையோடு நின்று கொண்டிருந்தான்.
“அக்கா எப்படி இருக்கீங்க? உங்களை இங்க நான் எதிர்பார்க்கவே இல்ல?”
“நாங்க நல்லா இருக்கோம் தம்பி அம்மா எப்படி இருக்காங்க? அவங்களுக்கு தான் வாங்க வந்திருக்கியா?”
சற்று தயங்கியவன் பின்பு,
“இல்லக்கா என்னோட வருங்கால மனைவிக்காக, முகூர்த்தப்பட்டு எடுக்க வந்திருக்கேன்.”
“அடடே ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசும் போது கூட, இதை பத்தி நீ எதுவுமே சொல்லலையேப்பா?
பரவாயில்லை வாழ்த்துக்கள் தம்பி, பொண்ணு என்ன பண்றாங்க அப்புறம் எப்ப கல்யாணம்? கல்யாணத்துக்கு எங்களை எல்லாம் கூப்பிடறதா ஐடியா இருக்கா? என்னப்பா நான் பேசிட்டே இருக்கேன் நீ அமைதியாவே இருக்க?”
“ஊரை கூட்டி முறைப்படி பண்ணறதா இருந்தா, கல்யாண பத்திரிக்கையோட உங்களை வந்து பார்த்திருப்பேன். ஆனா இது யாருக்கும் தெரியாம நடக்க போற ரகசிய கல்யாணமாச்சே.”
“என்னப்பா சொல்ற? “
“ஆமாக்கா நான் தான் சொன்னேனே அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு.
அம்மா இப்படி இருக்கிறதால அவங்க காலம் முடியறதுக்குள்ள, எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசைப்படுறாங்கலாம்.
அதனால என்னோட உறவுக்காரங்க எனக்கே தெரியாம சொந்தத்துலயே ஒரு பொண்ணைப் பார்த்து முடிவு பண்ணிட்டாங்க.
ஆனா நான் ஏற்கனவே ஒரு பொண்ணை மனசார விரும்பறேன். அவளைத் தவிர வேற யாரையும் என்னால, என்னோட வாழ்க்கை துணையா நினைச்சு கூட பார்க்க முடியாது.
அதனால அவங்க கூட சண்டை போட்டு தான் அதை நிறுத்தினேன். அந்த பிரச்சனையே இப்ப தான் சரியாச்சு, அதுக்குள்ள அடுத்த பிரச்சனை ஆரம்பிச்சிடுச்சு. ”
காஞ்சனாவும் சுகுமாரும் அவன் கூறுவதை கவனித்து கொண்டிருக்க, மீண்டும் அவனே தொடர்ந்தான்.
“என் அம்மாவுக்கு சரி ஆனதும் அவங்களோட போய் என் லவ்வரோட வீட்ல பேசலான்னு இருந்தேன்.
ஆனா அதுக்குள்ள அவளோட வீட்ல, அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க.
என் லவ்வரோட வீட்ல என் சார்பாக போய் பேசக் கூட, இப்ப எனக்கு ஆள் இல்ல. நானே நேர்ல வந்து அவங்க வீட்ல பேசறேன்னு சொன்னாலும், அவ குடும்பத்தை நினைச்சு பயப்படறா.
இந்த கல்யாணம் நடக்கலைன்னா நான் செத்துருவேன் சொல்லி அழ ஆரம்பிச்சிட்டா, அவ இல்லாட்டி எனக்கு வாழ்க்கையே இல்லை.
அம்மாவுக்கு அப்புறம் அவ தான் என்னோட உலகம், அதனால் தான் சரி இப்ப அவளுக்காக, யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.
எனக்கு அதுக்கு, என்ன பண்ணனும் ஏதுன்னு கூட தெரியாது, அதோட எனக்கு இப்ப உறவுன்னு சொல்லிக்கவும் யாரும் இல்ல.
அதான் நானே முகூர்த்தப் புடவை எடுக்கலாமுன்னு வந்தேன்.”
அவன் பேசியதைக் கேட்டு மனம் கனிந்த காஞ்சனா, தானே முன் நின்று அவனுக்கும், அவனது காதலிக்கும் உடைகளை எடுத்துக் கொடுத்தார்.
“ரொம்ப நன்றி க்கா இக்கட்டான சூழ்நிலையில எனக்கு நீங்க பெரிய உதவி செஞ்சிருக்கீங்க. கண்டிப்பா நீங்க இரண்டு பேரும் எங்க கல்யாணத்துக்கு வந்து, என் அம்மா இல்லாத குறையை தீர்த்து வைக்கணும்.”
“கண்டிப்பா ப்பா, எப்ப கல்யாணம்? எங்க கல்யாணம்?”
“அடுத்த வாரம் சுப்பிரமணியர் கோவில்ல க்கா.”
ஈஸ்வரின் திருமண நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சுகந்தனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வர இயலவில்லை.
சந்தேக கேசில் பிடித்து சென்ற அவனது உறவினர்களை, பெயிலில் எடுக்க முடியாமல், அவன் அங்கு அல்லாடி கொண்டிருக்க, ஒப்புக் கொண்ட ப்ராஜெக்ட்டை எப்படி சரியாக முடிப்பது என்று தெரியாமல், இங்கு நிலா தவித்துக் கொண்டிருந்தாள்.
மாலினியிடம் இதைப் பற்றி கூறலாம் என்று தான் நிலா நினைத்தால், ஆனால் சுகந்தன் இல்லாத காரணத்தால் ஏற்கனவே தொழிலில் ஏற்படும் வேலைச் சுமைகளை, அவள் பகிர்ந்து கொண்டிருக்க, தான் புதிதாக ஒத்துக் கொண்ட ப்ராஜெக்ட்டைப் பற்றி கூறி, அவளை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று விட்டு விட்டாள்.
இருந்தும் தனது இந்த இக்கட்டான சூழ்நிலையை பற்றி ரிதன்யாவிடம் மனம் பொறுக்காது நிலா புலம்ப, பொறுமையாக அவள் கூறியதை கேட்ட ரிதன்யாவோ,
“நிலா…நீயே ஏன் அந்த பொண்ணு வேஷத்துல நடிக்கக் கூடாது.”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ரிதன்யா பிளான் ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சிடுச்சு … ஆமா இந்த விஷ்வா யாரு … ஹீரோயின் வந்தாச்சு … ஹீரோ தான் யாருன்னு தெரியலையே … ஏதோ பெரிய சம்பவம் இருக்கு போல
பெருசாவே இருக்கு சிஸ் 🙂 நன்றி