
அழகியே 7
வேதாவிடம் அட்ரஸ் கேட்டு அங்கு வந்து சேரவே இரவாகி இருந்தது. காரை வீட்டு வாசலின் முன் நிறுத்த வீட்டின் முன்புற செழுமையே கூறியது அவர்களின் வசதியை.செழியன் வீட்டை விட இரண்டு மடங்கு பெரிய பங்களா அது.
வேதா காரை விட்டு இறங்கியவள் வீட்டை நோக்கி நடக்க, செழியனும் தேவும் அவளுடன் சென்றனர். வேதா ஆவலாக கேட்டை திறந்து கொண்டு உள்ளே செல்ல, கதவில் தொங்கிகொண்டிருந்த பூட்டே அவளை வரவேற்றது.
வேதாவோ, “இந்த நேரத்துல யாரும் எங்கையும் போக மாட்டாங்களே. எங்க போனாங்கன்னு தெரியல. நான் பக்கத்து வீட்டு அங்கிள்கிட்ட கேட்டுட்டு வரேன்” என்று கூறியவளுக்கு அதற்கு அவசியமே இல்லை என்பதாய் கேட்டை திறந்து கொண்டு அவரே வந்தார்.
வெளியே வந்தவர் வேதாவை கண்டு அதிர்ந்து போய் நின்றார்.
அவளோ, “அங்கிள் எல்லாரும் எங்க போனாங்க. வீடும் பூட்டியிருக்கு. இந்த நேரத்துல யாரும் வெளியே போக மாட்டாங்களே. அம்மா எங்க? அவங்களையும் காணோம். உங்க கிட்ட ஏதாச்சும் சொல்லிட்டு போனாங்களா அங்கிள்” என்று அவள் கேட்ட பின்னே சுயம் வந்தார் அவர்.
“ஏம்மா வேதா நீ ஆக்சிடென்ட்ல இறந்துட்டதா சொன்னாங்களேமா.. நீ நல்லாருக்கியா? உனக்கு ஒன்னும் ஆகலையே!” என்று கேட்டவர், “அப்புறம் இவங்க யாரு” என்று கேள்வி கேட்க,
அவளோ, “இல்லை அங்கிள் அங்க அந்த நிலசரிவு நடக்க முன்னாடியே நான் ஒரு ஆக்சிடெண்ட்ல மாட்டிகிட்டேன். நாலு நாளா கண் விழிக்காம இருந்தேன். என்னை ஹாஸ்பிடல் சேர்த்து பாத்துகிட்டு, என்னை இப்போ பத்திரமா இங்க கூட்டிட்டு வந்து சேர்த்தது இவங்க தான். எனக்கு எதுவும் ஆகாம என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தாங்க. இப்போ சொல்லுங்க எல்லாரும் எங்க போனாங்க? இந்த நேரத்துல யாரும் வெளியே போக மாட்டாங்களே, ஏதாச்சும் பிரச்சனையா? அப்பா அப்பாக்கு ஏதும் உடம்பு முடியலையா அங்கிள்” என்று தவிப்புடன் கேட்க,
அவரோ, “அவங்க இங்க இருந்தா தானே மா சொல்ல முடியும்.என்ன சொல்றது எனக்கே தெரியல.நீ அந்த நிலசரிவுல சிக்கி இறந்துட்டேனு தகவல் வந்ததும் அவங்க கதறுன கதறல்ல எங்களுக்கே தாங்க முடியல.குடும்பமே உடைஞ்சு போய்ட்டாங்க.உங்கம்மா என்மக போன இடத்துக்கே போறேன்னு சாக போறேன்னு சொல்லி போக, அப்புறம் அன்பண்ணன் நெஞ்சை பிடிச்சுட்டு கீழ விழுந்துட்டாரு. முதல்ல சிவியர் ஹார்ட் அட்டாக்ன்னு சொன்னாங்க. அப்புறம் பக்கவாதம் வந்து கால் நடக்க முடியாம போயிருச்சு. இங்க இருந்தா உன் நியாபகமா இருக்குனு ரெண்டே நாளுல சொத்தையெல்லாம் வந்த விலைக்கு வித்துட்டு அண்ணனுங்க ரெண்டு பேரும் அம்மா அப்பாவோட ஊர விட்டே போய்ட்டாங்க. இந்த ஊரோட எந்த சம்பந்தமுgம் வேணாம் இனிமேல் இங்க வரவே மாட்டேன்னு போய்ட்டாங்க. போன் நம்பர் மொதக்கொண்டு எல்லாத்தையும் மாத்திட்டாங்க மா. இந்த வீட்டையும் கூட வித்துட்டாங்க. என் தம்பி தான் வாங்கியிருக்கான்.அவங்க எங்க போனாங்க என்ன ஆனாங்க யாருக்கும் தெரியல. இந்த நேரத்துல நீ வந்துருக்க, ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்திருன்னா கூட எந்த அசம்பாவிதமும் நடந்துருக்காது.நீ பாத்து இருமா,” என்றவர் மொத்தத்தையும் ஒன்று விடாமல் கூறிவிட்டு வேலை முடிந்தது என்று சென்றுவிட்டார்.
அவர் கூறியதை எல்லாம் கண்களில் நீர் வடிய கேட்டவளோ பொத்தேன அமர, அதுவரை அமைதியாய் இருந்த செழியனும் தேவும் வந்து அவளை தாங்கி கொண்டனர்.
தலையில் அடித்துக்கொண்டவளோ, “ஐயோ அப்பா உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? எல்லாம் என்னாலதான், நான்தான் தப்பு பண்ணிட்டேன், நான் நியாபகம் வந்ததுமே உங்களை தேடி வந்துருக்கனும். என் சுயநலத்துக்காக உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டேனே. மன்னிச்சிருங்க பா.. நீங்கல்லாம் இப்படி ஒரு முடிவு எடுக்க நானே காரணமாயிட்டேனே” என்று அழ, இப்போது அதிர்ந்து நிற்பது செழியனின் முறையானது.
“நான் நல்ல பொண்ணே இல்லை. உங்களை பத்தி நான் யோசிக்கவே இல்லை. எனக்காக யோசிச்சு உங்களை இழந்துட்டேனே. நான் உயிரோடவே இருக்க கூடாது. இருக்க கூடாது” என்று கத்தியவள் அப்படியே செழியனின் கரங்களில் மயங்கி விழுந்திருந்தாள்.
தேவ், “செழியா அவளை தூக்கிட்டு வா காருக்கு. ஹாஸ்பிடல் போகலாம்” என்று கூற, செழியன் அவளை கையில் ஏந்தி சென்று காரில் விட்டான்.
தேவ் வண்டியை ஓட்டிக்கொண்டே, “ரொம்ப பாவம்ல எவ்ளோ சந்தோசமா வந்தா அப்பாவை பாக்கறேன்னு. இப்படி ஆகிடுச்சே. அவங்களையும் தப்பு சொல்ல முடியாது. இத்தனை வருஷம் வளர்த்த பொண்ணு நம்மள விட்டு போய்ட்டான்னு தாங்கிக்க முடியாம போய்ட்டாங்க. இப்போ எப்படி அவங்களை கண்டுபிடிக்கறது. பாவம்டா அவளை சீக்கிரம் அவங்க கூட சேர்த்துருணும்” என்று கூற,
செழியனோ, “என்னாலதான் இதெல்லாம். நான் ஆரம்பிச்சு வச்சதுதான். ஆக்சிடென்ட் ஆனதும் போலீஸ்க்கிட்ட சொல்லி இவளை பத்தி விசாரிச்சுருக்கணும். நானும் அப்டிதான் நெனச்சேன். ஹாஸ்பிடல இவளுக்கு பிட்ஸ் வந்ததும் என்னையறியாம எனக்குள்ள ஒரு பதட்டம். இவளை என் வைப்ன்னு சொல்லி சைன் பண்ணி, அதுக்கப்புறமாச்சும் நான் ஏதாச்சும் செஞ்சுருக்கணும். இவ என்கூடயே இருக்கணும்னு ஒரு உணர்வு. அவளுக்கு நியாபகம் வரட்டும் பார்த்துக்கலாம்னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அப்பறம் என்னென்னமோ நடந்துருச்சு. காலைல அவ அப்பாகிட்ட போறேன்னு சொன்னதும் எனக்குள்ள அப்டி ஒரு வலி. ஒரே வாரத்துல யாருன்னே தெரியாத ஒருத்திய நான் இவ்ளோ காதலிப்பேன்னு நினைக்கவே இல்லை. அதுக்காக நான் நிறைய இழந்துட்டேன். இப்போ இவளும், இவ நிலைமைக்கு நானும் காரணமாயிட்டேன்ல” என்று கண்கலங்கியவனை அதிர்ச்சியாக பார்த்தான் தேவ்.
“செழியா நீ அழறடா, இவளுக்காக. இந்த பதினஞ்சு வருசத்துல முதல் முறையா நான் உன் கண்ணுல கண்ணீரை பாக்குறேன். இதுலருந்தே நீ இவளை எவ்ளோ லவ் பண்றன்னு எனக்கு புரியுது. நம்ம லைப்ல ஒன்னு கிடைக்கணும்னா ஒண்ணா இழந்தாதான் ஆகணும். இப்போவும் ஒன்னும் கெட்டுப்போகல. அவங்க எங்கயோ இருக்காங்க. கண்டு பிடிச்சுறலாம். நீ அதுக்காக பீல் பண்ணாத” என்று கூறவும் மருத்துவமனை வரவும் சரியாக இருந்தது.
அவளை பரிசோதித்த மருத்துவரோ, “ரொம்ப ஸ்ட்ரஸ்ல இருக்காங்க, பிபி ரைஸ் ஆகிருக்கு, கேர்புல்லா பாத்துக்கோங்க” என்று மேலும் பல அறிவுரைகளை கூறி விட்டு, அவளுக்கு உறக்கம் வர ஊசியை போட்டவர், “இன்னிக்கு நைட் மட்டும் இருங்க. ட்ரிப்ஸ் போட்ருக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். மார்னிங் அழைச்சுட்டு போகலாம்” என்று கூறிவிட்டு சென்றுவிட, செழியன் அங்கிருந்த கதிரையில் அமர, தேவும் அவனை ஆதரவாக அணைத்து கொண்டான்.
இரவு ஒருவர் மட்டுமே உடன் இருக்குமாறு செவிலியர் கூறிவிட்டு செல்ல, “செழியா பாத்துக்கோ, நான் வெளியே கார்லதான் இருக்கேன். ஏதாச்சும் தேவை பட்டுச்சுன்னா கால் பண்ணு” என்று கூறிவிட்டு சென்றான்.
செழியன் கதவை திறந்துகொண்டு வந்தவனோ, உறங்கிகொண்டிருந்தவளின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்.
அவளோ மருந்தின் பிடியில் உறக்கத்தில். காலை வேதாதான் முதலில் கண் விழிக்க, செழியன் கட்டிலின் அருகிலேயே இருந்த ஸ்டூலில் அமர்ந்து அவள் படுத்திருந்த கட்டிலில் தலை கவிழ்ந்து படுத்து உறங்கியிருந்தான்.
தேவ் கதவை தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தவனின் கைகளில் பிளாஸ்க். அவளருகில் வந்தவனோ, “இப்போ ஓகேவா, நல்லாருக்க தானே” என்று கேட்க அவளோ வாயில் விரல் வைத்து “ஸ்ஸ்..” என்று சைகை செய்ய, தேவ் அப்போதுதான் உறங்கும் செழியனை பார்த்தான்.
“அவன் ரொம்ப குற்றவுணர்ச்சில இருக்கான் வேதா, நடந்த எல்லாத்துக்கும் காரணம் அவன்தான்னு ரொம்ப பீல் பண்ணான், நைட் சரியா தூங்கிருக்கமாட்டான்” என்று கூற, வேதாவோ செழியனையே பார்த்திருந்தாள்.
சில நிமிடங்கள் சென்றதும் செழியன் கண் விழித்தான். தேவை கண்டதும் என்னடா என்று கேட்க, “இந்தா பிரஷ் பண்ணிட்டு வா, காபி வாங்கிட்டு வந்துருக்கேன். வேதாவும் குடிக்கலாமாம் நர்ஸ் கிட்ட கேட்டுட்டேன்” என்று கூறியவனுக்கு தலையாட்டிவிட்டு சென்று முகம் கழுவி பல் துலக்கி வந்தவன் வேதாவை பார்க்க அவளோ, “அது நான் அப்போவே பிரஷ் பண்ணிட்டேன்” என்று கூறியவளுக்கு தலையாட்டிவன் தேவ் கொடுத்த காபியை வாங்கி பருகியவாரே, “டாக்டர்கிட்ட பேசிட்டு பில் பே பண்ணிட்டு வரேன்” என்றான்.
அதற்கு தேவ்வோ, “அதெல்லாம் நான் பேசிட்டேன், பில் பே பண்ணிட்டேன், உன்னோட பணம்தான் ஓகேவா, டாக்டர் ரௌண்ட்ஸ் வருவார் அவர் சொன்னதும் கிளம்பிடலாம்” என்று கூறிவிட்டு பிளாஸ்க்கை கழுவ சென்று விட்டான்.
தேவ் வெளியே வர, செழியன் தேவ்வை இறுக்கமாக அணைத்துக் கொண்டவனோ, “என்னால உனக்கும் ரொம்ப கஷ்டம்ல, சாரிடா” என்று கூற, அவனோ, “அப்படியே இழுத்து ஒண்ணுவிட்டேன்னு வை, பக்கத்து பெட்ல போய் அவளுக்கு துணையா படுத்துக்குவ பாத்துக்கோ, சாரியாம் எவன் கேட்டான் உன் கிட்ட சாரி, சுடிதார்லாம்” என்று திட்ட, செழியனோ அதில் சிரித்தவன், “தேங்க்ஸ் மச்சான்” என்று உணர்ந்து கூறினான்.
அவனோ “டேய் மரியாதையா வாய மூடிக்கோ. நான் உன் பிரண்டுடா அடுத்தவன் இல்லை. புரியுதா நீ சாரி சொல்றதுக்கும் தேங்க்ஸ் சொல்றதுக்கும். உனக்கு ஒண்ணுன்னா நான் நிப்பேன் எப்போவும் உனக்காக மட்டும். நீ என் நண்பன்டா” என்று கூற, செழியனோ தாவி அவனை அணைத்துக்கொள்ள, வேதாவுமே தேவ்வை உணர்ச்சிப்பெருக்குடன்தான் பார்த்து கொண்டிருந்தாள். கடந்த நான்கு நாட்களாக அவன் அவர்களுக்காக செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றாள்.அவளுக்கு தன்னை நினைத்தே வெட்கமாக இருந்தது தான் செய்த காரியத்தால் தன் குடும்பத்தையே தொலைத்து விட்டதை எண்ணியவளுக்கு குற்ற உணர்வு மட்டுமே பதிலாக கிடைத்தது.
செழியனோ, “பிரண்டுதான், என் கூட வந்தவங்களையும் நான் அப்படிதான் நினைச்சேன், ஒரு பிரச்னை அப்படியே ஓடி போய்ட்டானுங்க. இதுவரைக்கும் ஒரு போன் கூட இல்லை. ஆனா நீ நான் கேக்காமலே எல்லாம் செஞ்சுருக்க, நான்..” என்று அவன் கூற வர, அதற்குள் மருத்துவரும் வந்து விட்டார்.
வேதாவை டிஸ்சார்ஜ் செய்து வெளியே வர, இருவரும் அவளை பார்க்க, அவளோ செழியனிடம், “நம்ம வீட்டுக்கு போகலாம்”என்றவள் அவர்களுடன் கிளம்பி விட்டாள்.
அவள் மனதுக்குள் ஒரு போராட்டம் “யாரோ செத்துட்டதா சொன்னா அப்டியே நம்பிடுவாங்களா? என்னை தேட மாட்டாங்களா அவ்ளோ தானா நான்”என்று அவர்களின் மேலும் கோபம் வளர்த்து கொண்டாள் அவளின் வயதிற்கும் மனபக்குவத்திற்க்கும் இவ்வளவு தன் எட்டியது என்றே தான் கூற வேண்டும்.
கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு தேவுடனும் செழியனுடனும் பயணமானாள்.அவளின் கண்ணீர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று பாவையவளும் அறியவில்லை.

