
யான் நீயே 5
வயல்களை கடந்து தொழுவம் வரை நாச்சியுடன் வந்த பிரேம், அங்கு கரியனுடன் பேசிக்கொண்டிருந்த வீரனை பின்னிருந்து அணைத்திருந்தான்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மாமா.” பிரேமின் குரலில் கூட அவனின் மகிழ்வில் சாயலை காண முடிந்தது.
“தேன்க்ஸ்’ண்ணே.” நாச்சியும் வீரனின் கரம் பற்றியவளாக உரைத்தாள்.
“பெரிய மனுஷி ஆகிட்டிங்களோ? போத்தா உறங்கு” என்று நாச்சியின் நெற்றி முட்டி அனுப்பி வைத்த வீரன்,
“விடுடா… ஆவூன்னா கட்டிக்கிட்டு. தள்ளி நில்லு நீயி” என்று பிரேமை விலக்கி நிறுத்தினான்.
“ஆசைப்பட்டது கைக்கு வரப்போவுது அப்புறம் என்னடே. வூட்டுக்கு போ. உன் மாமா குடும்பம் வருதாம்ல நாளைக்கு. நிறைய சோலி கிடக்கு” என்று வீரன் சொல்லிய குறும்பு பார்வையிலேயே பிரேம் சிரித்துவிட்டான்.
“ஓட வுட்டுடாத மாமா. ஐயா காலியாகிப்போவாரு.” சிரித்துக்கொண்டேக் கூறினான்.
“நல்லான் நல்லாயிருந்தாக்கா நான் ஏன் ஒரண்ட இழுக்கப்போறேன். என் மாமனை மதிக்காம ஏவுன்னா, நான் என்னவும் செய்வேந்தான். யாருன்னுலாம் பார்க்கமாட்டேனாக்கும்” என்றான்.
“இம்புட்டு பாசமிருக்கே! பொறவு ஏன் மாமா இன்னும் தள்ளியே வச்சிருக்க. அவருக்கு நீதான் உசுரு மாமா!”
கலங்கிவிட்ட கண்ணீரை பிரேமுக்கு காட்டாது சட்டென்று திரும்பி நின்றுகொண்டான் வீரன்.
“அன்னைக்கு பிரச்சனையே என்னாலதேன். அதுக்கு காரணமான எங்களையே சேர்த்து வைக்க முடிவாகிப்போச்சு. பொறவு இன்னமும் என்னமாட்டிக்கு ஐயா மேல உங்களுக்கு கோவம்?”
வீரன் இடையில் கைகளை குற்றி இருளில் தலையை உயர்த்தி தென்னை மரத்தின் உச்சியை பார்த்து, கண்ணீர் கீழே வழிந்திடாது முயன்று தேக்கினான்.
“இன்னுமாட்டிக்கு என்ன கண்ணு… மாமா நீயி ஒத்த வார்த்தை பேசிடமாட்டியான்னு நெதம் நெக்குறுகி வெதும்புராறு கண்ணா.” நாச்சி தோட்டத்து கதவு திறந்து உள் செல்லும் ஓசையில் என்னவென்று பார்க்க வந்த பாண்டியன், கட்டுத்தறி அருகில் இவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்டபடி நெருங்கினார்.
மகனின் வருத்தம் புரிந்தபோதும், பிரேமின் கேள்விக்கு எவ்வித பதிலும் சொல்லாது மௌனமாக நிற்பவனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள தானும் கேட்டார்.
“அன்னைக்கு ஒரு அப்பாவா பிரேம் பக்கம் நின்னது நியாயம் தான். அதே அளவுக்கு நாச்சியையும் அவர் மகளா நினைச்சிருக்கணுமே! எப்பவும் எங்களில் வேற்றுமை காட்டதவர்தேன். அன்னைக்கு மட்டும் என்னவாம்?” என்ற வீரன், “இங்க அவர் என்னை அடிச்சாரு, வஞ்சிட்டாருங்கிறது விசயமில்லை” என்று நிறுத்தி… “அவருக்கு என்னை புரியும்” என்று வேகமாக சென்றுவிட்டான்.
“அவிங்களா ஒன்னு கூடுனாத்தான் ஆச்சு மாமா” என்ற பிரேம், “உங்களுக்கு எம்மேல வருத்தமில்லையா மாமா?” எனக் கேட்டிருந்தான்.
மௌனமாக சிரித்த பாண்டியன்,
“அன்னைக்கு உம்மேல அம்புட்டு கோபமா இருந்த அமிழ்தன்… அடுத்தநா(ள்)வே, உன்னை காலேசுக்கு பஸ் ஏத்திவிட மதுரைக்கை கூட்டிட்டு போனான். அம்புட்டு கோவமிருந்தும் உன்னோட ஒட்டுதலா இருக்காங்கிற போது, நான் மட்டும் விலக்கி வச்சு என்னாவப்போவுது. ஏதோ அறியாத வயசு புரியாம பண்ணிப்போட்ட, எங்களுக்கு நீங்க ஆறு பேரும் ஒண்ணுதேன்” என்றவர் பிரேமின் தோளில் தட்டிச் சென்றார்.
வீரன் படுக்கையில் விழுந்த கணம் அவனது அலைப்பேசி அசைந்தது.
தங்கப்பொண்ணு என்று ஒளிர்வதை நம்ப முடியாது பார்த்தவன், அழைப்பை ஏற்றான்.
“போன போட்டு பேசாம இருந்தாக்க என்ன அர்த்தம்?”
இவன் இரண்டு முறை அழைத்தும் மீனாள் பிரதிபலிப்பின்றி இருக்க வழக்கம்போல் அதட்டி கேட்டிருந்தான்.
வீரனின் இயல்பே அதுதான். அதட்டலும், அன்பும்.
“மா…ம… மாத்திரை போட மறந்துடாதீங்க. களிம்பு தடவிட்டு படுங்க” என்றவள் உடனே அலைப்பேசியை வைத்தும் இருந்தாள். வீரனிடம் இதமான மெல்லிய புன்னகை.
அன்றைய தினம் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஆரம்பித்துவிட்டது மீனாட்சியின் குடும்பத்தாருக்கு.
அபிராமி பம்பரமாக சுழன்று பொங்கல் வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்.
“நாச்சி… ஏத்தா நாச்சி.” மீனாட்சி அழைத்திட குளித்து முடித்து புத்தாடை அணிந்து வந்த பேத்தியின் கன்னம் வழித்த அப்பத்தா,
“ஆத்தாவுக்கு கூடமாட ஒத்தாசை செய்யுத்தா” என்றார்.
“அம்மா நான் எப்படியிருக்கேன்?”
தாயிடம் புடவை அணிந்து வந்ததை தன்னை ஒரு சுற்று சுற்றி துள்ளளோடு வினவினாள் அங்கை.
“என் ராசாத்தி… அம்புட்டு அழகா இருக்கத்தா” என்றவர், “மதினிக்கு போனை போட்டு கெளம்பிட்டாய்ங்களா கேளு” என்றார்.
நேற்று சாமி கும்பிட்ட இடத்தில் தான் இன்றும் இரு குடும்பமும் ஒரு குடும்பமாக இணைந்து பொங்கல் வைப்பர். சூரியன் உதிக்கும் தருணம் படையல் வைத்திருப்பர்.
“ம்மா அத்தை வர சொன்னாய்ங்க” என்ற நாச்சி, அனைத்து பொருட்களையும் கூடையில் எடுத்து வைக்க அபிராமிக்கு உதவினாள்.
“இந்தாம்மா பொங்க வைக்க புது பாலு. இப்போதேன் கரந்தது” என்று பெரும் பித்தளை சொம்பு நிறைய பாலினை கொண்டு வந்து கொடுத்தான் லிங்கம்.
“பெரிய மாட்டு பாலு தான?” அப்பத்தா கேட்டபடி வர,
“ஆமாம் அப்பத்தா அம்சா பால் தான்” என்று லிங்கம் நகர்ந்திட்டான்.
கட்டுத்தறியில் கட்டியிருக்கும் இருபது மாடுகளுக்கு மூத்தது அந்த அம்சா பசு தான். சொல்லப்போனால் அங்கிருக்கும் அனைத்து மாடுகளுக்கும் அந்த பசு தான் அன்னை. பல மாடுகள் விற்கப்பட்டாலும், அந்த பசுவை மட்டும் விற்காது அக்கூட்டத்திற்கு தாயாக வைத்திருக்கின்றனர். கரியன் கூட அம்மாட்டின் கன்று தான்.
மேய்ச்சலுக்கு செல்லும்போது கூட அம்சாவை பின்பற்றி தான் மற்றவை செல்லும்.
மீனாட்சி குடும்பத்தில் அவைகளும் ஒரு அங்கத்தினர் தான். சொல்லப்போனால் அவை யாவும் அவர்களுக்கு தெய்வம் போல். விவசாயிகளுக்கு மட்டுமே கால்நடைகளின் மகத்துவம் தெரியும்.
“எங்கடே அமிழ்தனை காண்கல?”
“அண்ணா காப்பு வளைக்க போயிட்டாங்க அப்பத்தா. நம்ம பண்ணைக்கே காப்பு வளைக்கணுமின்னா ரெண்டு மணி நேரமாவுமே. நாம செண்டு பொங்க வச்சி முடிய அண்ணே வேலையை முடிச்சிப்புடும்” என்ற நாச்சி, அபிராமி கூடையை தூக்கிட கை கொடுத்தாள்.
காப்பு வளைத்தல்… ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, பிரண்டை, மாவிலை வைத்து சிறு சிறு கொத்தாக கட்டி வயல்களின் வரப்புகளில் நான்கு மூலைக்கும் வைப்பர். வீடுகளிலும் வாயிலில் முன் தோரணமாகக் கட்டுவர்.
“என்னத்தா போவமாட்டிக்கு!”
“போவலாம் பாண்டியா” என்ற அப்பத்தா முன் செல்ல மற்றவர்கள் அவர்களை பின் தொடர்ந்தனர்.
“இருட்டுல கண்ணு தெரியுதா அப்பத்தா. வரப்புல பாம்பு மேயப்போவுது. மிதிச்சிப்புடாதா” என்ற நாச்சியின் தோளில் இடித்த மீனாட்சி, “நான் சுத்தி திரிஞ்ச இடமட்டி. எங்க என்னயிருக்கும் தெரியாதாக்கும்” என்றார்.
“இவளை மின்ன மகா வூட்டுக்கு பத்தி விடணும் பாண்டியா. என்னாப்பேச்சு பேசுதா” என்ற மீனாட்சிக்கு தன்னுடைய பேரன், பேத்திகள் ஆறு பேரின் திருமணத்தையும் கண்ணாரா பார்த்துவிட வேண்டுமென்கிற ஆசை.
“அதான் நடக்கப்போவுதே ஆத்தா. நாச்சிக்கும் பிரேமுக்கு முடிஞ்சுதுன்னா… அடுத்தடுத்து ஒன்னொன்னா நடக்குமாட்டிக்கு” என்றார் பாண்டியன்.
பேச்சினூடே நிலா வெளிச்சத்தில் கிணற்றுக்கு அருகிலிருக்கும், அவர்களின் பண்ணை வீடான ஓட்டு வீட்டிற்கு முன்னிருக்கும் களத்திற்கு வந்து சேர்ந்தனர்.
சில நிமிடங்களில் மருதனின் குடும்பமும் வந்து சேர்ந்தது.
வந்தவர்களில் இளையவர்கள் தத்தம் ஜோடியை தேடிட… பிரேம் தன்னவளின் எழிலில் கட்டுண்டு பார்வையால் விழுங்கியபடி வீட்டின் திண்ணையில் அமர்ந்துவிட்டான்.
“எங்க மதினி மாமாக்கள் ரெண்டேரையும் காண்கல?” நாச்சியிடம் கேள்வி கேட்டாலும் அங்கையின் விழிகள் லிங்கம் தென்படுகிறானா என்று தான் அலைபாய்ந்தது.
“அதோ வாராங்களே!” நாச்சி கை காட்டிட, துள்ளிக்கொண்டு லிங்கத்தின் முன் சென்று நின்றாள் அங்கை.
“ஹேய் சின்னகுட்டி என்னாதிது. தாவணிலாம் கட்டி பெரியப்பொண்ணு மாதிரி இருக்க?” என்று வியப்பாய் கேட்டான் லிங்கம்.
“எப்பவும் தாவணி கட்டமாட்டேன்னு அழிச்சாட்டியம் செய்றவ… இந்த முறை எடுத்த பட்டு பாவாடை சட்டை வேணாமின்னுக்கு, மீனாளுக்கு எடுத்து தைச்ச தாவணியை வம்படியா நின்னு கட்டிக்கிட்டாள்” என்றார் மகா. காலையில் அதற்கு ஒரு ஆர்பாட்டமே நடத்தியிருந்தாளே அங்கை. அந்த நினைப்பில் மலைப்பாக சொல்லியிருந்தார் மகா.
“உன் கண்ணுக்கு நான் பெரியப்பொண்ணா தெரியறேனா மாமா?” என்றவள், அவன் பதில் சொல்லும் முன்பே… “அதுதான் வேணுமாட்டிக்கு” என்றதோடு அவனின் சட்டை பையிலிருந்து அலைப்பேசியை எடுத்து அவனருகில் இணைந்து நின்று சுயமி எடுத்து, “நல்லாயிருக்கு மாமா” என்று மீண்டும் அவனது பையில் வைத்து நகர்ந்தாள்.
லிங்கத்துக்குத்தான் அவளது பேச்சு, நடவடிக்கை ஒன்றும் புரியவில்லை.
மற்றவர்களும் எப்போதும்போல் அவனிடம் உரிமையாய் விளையாடுகிறாள் என்று நினைத்தனர்.
“எப்பவும் மாமா மாமான்னு பெரிய அண்ணே கூடவே திரிவ… ரெண்டு மூணு நா(ள்)வேவா சின்ன அண்ணேவை ரொம்பத்தேன் ஒரசுர. என்னவாம் சங்கதி?” நாச்சி அங்கையின் கன்னம் இடித்து வினவ, அங்கை சிரித்து மழுப்பினாள்.
மீனாள் லிங்கத்தின் அருகில் அவனமர்ந்திருந்த கயிற்று கட்டிலில் சென்று அமர,
“என்ன மீனாகுட்டி சோர்ந்து தெரியுற?” என்ற லிங்கம் அவளின் நெற்றியில் கை வைத்து பார்க்க, “தூக்கமா வருது மாமா” என்று அவனின் தோளில் மீனாள் சாய்ந்த நொடி, வேகமாக ஓடி வந்து இருவருக்கும் நடுவில் பொத்தென்று அமர்ந்தாள் அங்கை.
“நீ எம்மடியில தலை வச்சிக்கோக்கா” என்ற அங்கை, லிங்கத்தை பார்த்து பற்கள் தெரிய சிரிக்க…
“உன் செயல் ஒன்னும் பிடிபடமாட்டேங்குது” என்ற லிங்கம்,
“பிரேம் வாடா… அப்படி நடந்துட்டு வரலாம். பொங்க வச்சப்பொறவுதானே இங்கிட்டு நமக்கு சோலி” என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றான்.
“ஏண்டா சும்மா சுத்துறதுக்கு பெரியவனுக்கு ஒத்தாசையா நாலு காட்டுக்கு காப்பு வைக்கலாமில்ல!”
“போ அம்மத்தா அதெல்லாம் எந்தெந்த மூலைக்கு வைக்கணுமின்னு மாமாக்குத்தேன் தெரியுமாட்டிக்கு” என்று சிணுங்கினான் பிரேம்.
“காட்டுல காலு வைக்காமலே திரிங்க. மொத்தத்தையும் அமிழ்தனுக்கே கொடுத்திடப்போறேன்” என்றார் மீனாட்சி.
“கொடுத்துக்கோ அப்பத்தா. அண்ணேனவிட வேறென்ன வேணுமாட்டிக்கு எங்களுக்கு” என்று லிங்கம் சொல்ல, “மாமா ஒத்த ஆளுக்கு ஈடாவுமா அம்மத்தா உன் சொத்துபத்து” என்றிருந்தான் பிரேம்.
பிள்ளைகளின் இந்த ஒற்றுமை தானே அந்த குடும்பத்தின் ஆணிவேர். மீனாட்சிக்கு மட்டுமல்ல அங்கிருந்த பெரியவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்துவிட்டது.
வேற்றுமையில்லா இவர்களின் அன்பு தானே அடுத்த தலைமுறையின் ஒற்றுமைக்கு வேர். அது என்றென்றும் நிலைத்திருக்கவே அனைவரும் விரும்பினர்.
இருள் பிரியத் தொடங்கியது.
“பானையை வைக்கலாமா அத்தை. பொங்குறதுக்கும் சூரியன் கதிரு வீசவும் நேரம் சரியா இருக்கும்” என்ற அபிராமியின் பேச்சை மீனாட்சி ஆமோதித்தார்.
“இந்த பொங்கலை நாச்சி கையால வைக்கட்டும் அபிராமி” என்று மீனாட்சி சொல்ல அபியும், மகாவும் நாச்சிக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு அப்பாத்தவின் அருகில் அமர்ந்துவிட்டனர்.
“ஒண்ணுல சக்கரை பொங்கலு, இன்னொண்ணுல வெம்பொங்கலு வைக்கணும்த்தா” என்க, அங்கு பொங்கல் செய்ய செங்கலால் வைக்கப்பட்டு அரிசி மாவில் கோலமிடப்பட்டு தயார் செய்து வைத்திருந்த அடுப்புகளில் இரு பானைகளை வைத்து கற்பூரத்தால் தீ மூட்டி பொங்கல் வைக்க ஆரம்பித்தாள் அழகு நாச்சி.
அங்கிருக்கும் கிணற்றில் இரைக்கப்பட்ட நீரினை ஊற்றி கொதிப்பதற்காக காத்திருக்கும் வேளையில்…
“போனவனுவனை ஆளை காண்கல… கரும்பும், மஞ்சளும் வேணுமே!” என்று மகா சொல்ல…
“இந்நேரத்துக்கு அமிழ்தன் அங்கிட்டு தான் இருப்பான். நீயி போ கொண்டுவாத்தா. உறக்கமும் ஓடிப்போவும்” என்று மீனாளை அனுப்பி வைத்தார் அபிராமி.
********************
மீனாள் உடன் செல்ல முயன்ற அங்கையை தடுத்த மகா,
“இந்த வெல்லத்தை இடிச்சு கொடு” என்று இரண்டு கிலோ மண்டை வெல்லத்தை அவளின் கையில் திணித்தார்.
“வூட்டுல ஒரு வேலையும் செய்யுறது இல்லை. எப்போபாரு ஆம்பள பையன் கணக்கா, தோப்பு தொறவுன்னு சுத்தி வர வேண்டியது. திண்கிறது, தூங்கிறது” என்று அவளின் தலையில் கொட்டும் வைத்தார்.
“இப்படியே இருந்தாக்கா எவனுக்கு கட்டிக்கொடுக்க? போற இடத்துல எங்களைதேன் வைவாய்ங்க” என்றார் மீனாட்சி.
“ம்க்கும்… நான் ஏன் வெளியில போறேன்…” என்று தோள் பட்டையில் முகவாயினை இடித்த அங்கை, “பொங்க வைக்கிற வேலையை பாப்போம்” என்று தன் மொத்த கோபத்தையும் வெல்லத்திடம் காண்பித்தாள்.
“நாங்க செத்த வாழை தோப்பு வரை போயிட்டு வர்றோம். இலை கிழிக்க ஆள் வந்துட்டா தெரியல” என்று பாண்டியனும், மருதனும் வாழை தோப்பு பக்கம் சென்றனர்.
“கால் மணி நேரத்துல வந்திடுங்க. வரும்போது படையலுக்கு இலை கொண்டாங்க” என்று அபிராமி சொல்லிட தலையசைத்து சென்றனர்.
கரும்பு காட்டு பக்கம் வந்துவிட்ட மீனாள்… வீரன் எங்கிருக்கிறானென்று சுற்றி ஆராய்ந்தாள்.
கரும்பின் சோலைகள் நீண்டு வளர்ந்து அடர்ந்திருக்க…
‘உள்ளுக்க இருந்தாக்கா ஆளே தெரியமாட்டாரே! எங்கிட்டு இதுல தேடுறது?’ நான்கு பக்கமும் கரும்புகள் சூழ்ந்திருக்க, மையத்திலிருந்த வரப்பின் மீது நகத்தை கடித்தபடி பார்வையால் சுழன்றவள்,
‘கூப்பிட்டு பாப்போம்’ என்று…
“மாமா” என அழைக்க உதடு பிரிந்த நொடி கண்கள் இரண்டும் அகண்டு விரிந்திட, மூச்சு விடவும் அஞ்சியவளாக உறைந்து சிலையானாள்.
அவளின் முன்பு கரு நாகம் ஒன்று தலையை உயர்த்தி சீறியபடி அவளை உற்று நோக்கியது.
பயத்தில் நா வறண்டு தொண்டைக்குழி ஏறி இறங்கிட, அணிந்திருந்த பாவாடையை அழுத்தி பிடித்தாள்.
ஒரு அடி… அவள் முன் வைத்தாலும், பாம்பு முன் ஊர்ந்தாலும் சேதாரம் அவளுக்குத்தான்.
பின்னால் அடி வைத்திட முடியாது, அவளிடம் கொஞ்சம் அசைவு தெரிந்தாலும் என் பிளவு பட்ட நாக்கின் விஷத்துக்கு சொந்தக்காரி ஆகிவிடுவாய் நீயென்பதைப்போல் நாகம் சீறிக்கொண்டு இருந்தது.
‘அய்யோ மாமா…’ அந்நொடி கூட அவளுக்கு வீரனின் நினைப்புத்தான் வந்தது.
‘எங்க மாமா இருக்க? நான் பாம்புகிட்ட கடிபட்டு செத்திடுவேன் போலவே!’ என்று உள்ளுக்குள் அரற்றியவள்,
“ஷ்ஷ்…” நாகத்தின் சத்தத்தில் மூச்சினை இறுக்கி பிடித்தாள்.
‘வீரா மாமா நானில்லாம வாழ்ந்திடுவியா? உன் தங்கப்பொண்ணு சாவப்போறேன்.’ மீனாளின் கண்கள் கண்ணீரை சுரந்திட்டது.
நாகம் தன் தலையை மேலும் சில அடி உயர்த்தி அவளின் பாதத்தை தீண்டிட, பின்னோக்கி கொண்டு சென்று முன்னோக்கி குனிய இருந்த நொடி…
‘இன்னைக்கு எல்லாரையும் பார்த்துபுட்டேன். உன்னை மட்டும் பார்க்காமலே போவப்போறேனே! மொத்தமா உன்னைவிட்டு போறேன்’ என்று மீனாளும் தன் மனதை திடப்படுத்திட,
திடீரென தோளில் பதிந்த கரத்தின் தொடு உணர்விலேயே யாரென்று அறிந்து உயிர் மீட்டவள்…
“மாமா பாம்பு” என்று வேகமாக திரும்பி அவனது மார்பு சட்டையை இரு கையாலும் அழுத்தமாக இறுகப்பற்றி கண்கள் மூடி தலை முட்டினாள்.
அவளின் செயலை எதிர்பாராத வீரன் நிலை தடுமாறி பின்னோக்கி வரப்பில் நெடுஞ்சாணாக விழுந்திட, அவனோடு சேர்ந்து அவன்மீதே சரிந்திருந்தாள் அவனவள்.
“பாம்பு… பாம்பு… பாம்பு மாமா…” விடாது அரற்றினாள்.
தங்கள் இருக்கும் நிலையை அவ்வேளையிலும் ரசித்த வீரன், மெல்ல தன் தலை உயர்த்தி பார்க்க…
இவர்கள் விழுந்த சத்தத்தில் நாகம் பின்வாங்கி கரும்பு சருகிற்குள் மறைந்தது. அதனது நீண்ட வால் மட்டுமே வீரனால் காண முடிந்தது.
பயத்தில் மீனாள் பாம்பென்ற முனகளோடு இருக்க… திறந்திருந்த பொத்தான் வழியாக அவளின் இதழ்கள் அவனின் மார்பில் சூட்டினை கூட்டிக்கொண்டிருந்தது.
தன்மீது மொத்தமாக விழுந்திருப்பவளின் தேக உரசலில் இதம் அனுபவித்த அதே கணம் அவஸ்தையையும் உணர்ந்தான்.
அவளை அணைத்திட துடித்த கைகளை முயன்று அடக்கி, வரப்பில் அழுந்த பதித்தவன்…
மெல்ல அவளின் முகத்தில் தன் அதரங்கள் குவித்து ஊதினான்.
தேகம் சிலிர்க்க விழிகள் திறந்தவள், நூலிழை நெருக்கத்தில் தன் முகத்தருகே தென்பட்ட தன்னுடைய மாமனின் முகத்தில் இமைக்க மறந்து, சுற்றம் மறந்து உறைந்து போனாள்.
மை பூசிய கரு விழிகள் இரண்டும் அவனின் முகம் விட்டு அகலாது அவனின் மனதை சதிராட வைத்தது.
“தங்கப்பொண்ணு…”
“மாமா!” அக்கணம் மீனாள் தங்களுக்கு இடையேயான தடையாகிய காரணங்கள் யாவற்றையும் மறந்தாள்.
மீனாள் இடை தாண்டிய கூந்தலை இரு பக்கமும் சிறு முடி கற்றையால் கட்டி படர விட்டிருக்க… இருவரையும் கார்குழல் போர்வையாய் போர்த்தியிருந்தது.
அவளின் கருவிழிகள் அவனது முகத்தில் நிலைக்குத்தி இருக்க… அவனது கருமணிகளோ அவஸ்தையாய் அலைபாய்ந்தது.
நெற்றியில் சின்னதாய் குங்கும நிறத்தில் சிறு புள்ளி. அதற்கும் மேல் கீற்றாய் மஞ்சள் கோடு. அம்முகத்தை வாழ்நாள் முழுக்க உள்ளங்கையில் வைத்து தெவிட்டாது பார்த்திருக்க பேராசை அவனுள் கிளர்ந்தது.
மூச்சு முட்டிட தவியாய் தவித்தான்.
தன் மேல் கிடப்பவளின் கனமெல்லாம் அவனுக்கு பொருட்டாகவே தெரியவில்லை. சாகும்வரை இந்நிலை நீடித்தாலும் சொர்க்கமே எனும் நினைவில் கட்டுண்டு கிடந்தான்.
“தங்கம்…”
“மாமா!”
“மொத்தமா அள்ளிக்கணும் போல இருக்குடி. உசுரை கொலையா கொல்லுற!” என்றான்.
வீரனின் வார்த்தைகளில் தான் சுயம் மீண்டவள், பதறி வேகமாக அவனிலிருந்து பிரிந்து எழ முயல, பதற்றத்தில் தடுமாறி மீண்டும் அவன் மீதே விழுந்தாள்.
“சாரி… சாரி… பாம்… ப்பா… பாம்பு வந்துச்சு. அதான் பயந்து” என்று திணறியவள் எழ முடியாது மீண்டும் மீண்டும் தடுமாற்றம் கொள்ள,
“ஹேய்… ரிலாக்ஸ்டாம்மா” என்று அவளின் இருபக்க புஜத்தையும் அழுந்த பற்றினான்.
வீரனின் இறுக்கமான பிடியில்,
அவனின் கண்களை அவள் நேர்கொண்டு சந்திக்க…
“பாம்பு போயிடுச்சு” என்றான்.
…..
“பாம்பைவிட என்னை பார்த்தால் பயமா இருக்கா?”
இல்லையென ஆடியது அவளது தலை.
“அப்போ கொஞ்ச நேரம் இப்படியே இரு. எனக்கு பிடிச்சிருக்கு. நீ என் பொண்டாட்டியா என் கைக்குள்ள வந்திட்ட கணக்கா இருக்காட்டிக்கு” என்றான். அத்தனை காதலை அவனது முகம் அவளிடம் பிரதிபலித்தது. அவனது குரலில் அத்தனை ரசிப்பு.
குரலிலும், முகத்திலுமே இத்தனை காதலை காட்டிட முடியுமா? மீனாள் ஆச்சரியப்பட்டுப் போனாள்.
“நான்… நான்… உங்க பொண்டாட்டி இல்லை.” பழைய தாக்கம் அவளை பட்டென்று அவ்வாறு சொல்ல வைத்தது.
“உன்பாட்டுக்கு அப்படியே இருக்கட்டும்.” அவனும் ஒப்புக்கொண்டான்.
வீரனின் பதிலில் மீனாளின் முகம் தான் சுருங்கிப்போனது.
அவளின் முகம் வாட்டத்தின் காரணம் புரிந்தவன், அர்த்தமாக புன்னகைத்துக் கொண்டான்.
“எந்திரி!”
“ஹான்…”
இப்படியே இரு என்று பிடித்து வைத்தவன், இப்போது சிறு அதட்டலோடு எழு என்கவும் புரியாது மலங்க விழித்தாள்.
“லிங்கம் குரல் கேட்குது” என்றான். அவளின் குழப்பம் புரிந்து.
மெல்ல அவனே அவளை நிமிர்த்தி எழவும் செய்து, தானும் எழுந்து நின்றான்.
நிலையாக நின்றதும் வேகமாக அவன் பக்கமிருந்து செல்ல அவள் அடி வைக்க…
“அந்த பக்கட்டு தான் பாம்பு போச்சு” என்றான் வீரன்.
“அய்யோ அம்மா” என்றவள் மீண்டும் அவன் பக்கம் வந்து உரசாதவாறு நிற்க,
“என்னை இன்னைக்கு மொத்தமா காலி பண்ணிப்புடலான்னு முடிவு பண்ணி வச்சிருக்கியா?” எனக் கேட்டான்.
மீனாள் புரியாது பார்க்க…
“உனக்கு புரிஞ்சிட்டா என் ஆசை நிறைவேறிடுமே!” என்றவன், “என்னத்துக்கு இந்த பக்கட்டு ஒத்தையில வந்த?” எனக் கேட்டான்.
“அது” என்று இழுத்தவள் நினைவு வந்தவளாக, “மஞ்சளும், கரும்பும் பிடுங்கியார சொன்னாய்ங்க” என்றாள்.
“ரெண்டேறும் இங்கிட்டுதேன் இருக்கீய்ங்களா? வெரசா வாங்க. அப்பத்தா கூட்டியார சொன்னுச்சு” என்று அருகில் வந்தான் லிங்கம்.
“ம்ம்ம்” என்ற வீரன் மீனாளின் கரம் பிடித்து வரப்பு மேட்டில் ஏற உதவினான்.
“என்னண்ணே விழுந்துட்டியா?”
வீரனின் சட்டையின் பின்பகுதி முழுக்க ஆங்காங்கே வரப்பு பில்லின் மீதிருந்த சேற்று திட்டு திட்டாகக் கிடக்க, லிங்கம் கேட்டிருந்தான்.
“ம்ம்ம்… வழுக்கிடுச்சு” என்ற வீரன் நொடியில் நாலைந்து கரும்புகளை வேறொடு பிடுங்கி அதன் சோலையாலே கட்டி லிங்கத்தின் கையில் கொடுத்தான்.
விழுந்துவிட்டேனென்று வீரன் சொல்லியதை நம்பாத லிங்கம் மீனாளின் படபடக்கும் விழிகளை கண்டு கொண்டான்.
‘என்னவோ நடந்திருக்கு.’ நினைத்தவன் முன்னே நடக்க,
“நில்லு மாமா மஞ்சளும் வேணுமாட்டி” என்றாள் மீனாள்.
“அண்ணே வூடே வாங்கிட்டு வா! நான் முன்னுக்குப் போறேன்” என்று திரும்பியும் பாராது லிங்கம் சென்றே விட்டான்.
வீரன் எதுவும் சொல்லாது வழிவிட்டு விலகி நிற்க… மீனாள் அவனைத் தாண்டி முன் சென்றாள்.
“பம்புசெட் வயலுக்கு போ. அங்கிட்டு தான் மஞ்சள் இலை விரிஞ்சிருக்கு” என்றான்.
‘ம்’ கொட்டினாள்.
முதுகினை மறைத்து விரிந்திருந்த கூந்தலில் சூடியிருந்த மல்லிகைச்சரம் வீரனை சுண்டி இழுத்தது.
பட்டு பாவாடை சட்டையில் அவனது கண்களுக்கு குட்டி தேவதையாய் காட்சியளித்தாள்.
“ரொம்ப குட்டியா தெரியுற!”
“ஆங்.” அவனைத் திரும்பி பார்த்து முன் அடி வைத்தாள்.
“தாவணி உடுத்தலையா?”
….
“கொலுசு எங்க?”
‘என்கிட்ட இதெல்லாம் கவனிக்கிறாங்களா?’
முன்பெல்லாம் வீரன் இப்படி அவளிடம் பேசியது இல்லை. இரண்டு நாளாகத்தான். தன்னுடைய காதல் அவளுக்கு தெரிந்துவிட்டது என்றதற்கு பின் தான், இந்த சீண்டல் எல்லாம். வெளிப்படையாய்.
முன்பெல்லாம் பேச வேண்டிய தருணம் பேசுவான். அதுவும் அவளின் எட்ட நிற்பதலில் சுருக்கமாக இருக்கும் அவனது பேச்சு.
‘இந்த மாமா முன்ன மாறியே இருக்கலாம். பதில் சொல்லாமலும் இருக்க முடியல. பாதி புரியவு(ம்)மாட்டேங்குது.’ புலம்பியவளாக சென்றவளிடம்,
“கேட்டாக்கா பதில் சொல்லணும் தங்கம்” என்றான் அழுத்தமாக.
“ஹாங்… கொலுசு அறந்துப்போச்சு” என்றவள், காலை அங்கை செய்த கலாட்டாவால் இருவரும் ஆடை மாற்றிக்கொண்டதையும் கூறினாள்.
“அங்கை உன் அளவுக்கு வளந்துட்டாளா? இல்லை நீ அவள் அளவுக்கு குட்டியாவே இருக்கியா?” இப்போது வீரன் கேட்டது மீனாளுக்கு சுத்தமாகவே புரியவில்லை.
அங்கைக்கும், மீனாளுக்கும் நான்கு வருட இடைவெளி தானே! அதனால் இருவரும் அதீத வேற்றுமையின்றி காணப்படுவர். அத்தோடு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் மூத்தவளை காட்டிலும் இளையவள் சட்டென்று அவளுக்கு இணையாக வளர்ந்துவிடுவாள். அது தான் நியதியோ!?
வீரன் தன்னை உயரமில்லை என்று கேலி செய்வதாக நினைத்தவள் சட்டென்று நடையை நிறுத்தி, அவனருகில் பின் வந்து இணைந்து நின்றாள்.
வீரன் என்ன என்பதைப்போல் பார்க்க…
“நான் பொண்ணுங்க சராசரி உயரத்தை விடவும் கூடுதல் உயரம். வேணுன்னா பாருங்க, என் தலை உங்க நெஞ்சை தொடுது. நீங்க பனை மரம் கணக்கா ஆறடிக்கு மேல ஒசரமா வளர்ந்துட்டா, என்னைய மட்டம் சொல்லுவீய்ங்களோ” என்றாள். அவனை பார்த்து அவலம் காட்டி.
“சரியான ஒசரம் தான். இதுக்கமேல வேணாமாட்டி. இப்போதான் பொருத்தம் பக்காவா இருக்கு” என்றவன் அவளின் நெற்றி முட்டி…
“இந்த படபட பேச்சை ரொம்பவே மிஸ் பண்றேண்டி. எப்போ என்கிட்ட பழையமாறி இருப்பியாம்?” என்றான்.
அதில் சுதாரித்தவள் மஞ்சளை மறந்தவளாக வேகமாக முன் சென்றிட, மஞ்சள் காட்டை நெருங்கியவன்… கிழங்கோடு செடிகளை பிடிங்கிக்கொண்டு அவளை எட்டி பிடித்தான்.
“இந்தா பிடி. இதுக்காகத்தான வந்த” என்று மஞ்சளை அவளிடம் நீட்டினான்.
மீனாளும் அவனை முறைத்துக்கொண்டே…
“என்னை நெருங்க முயற்சி பண்ணாதீங்க. ரெண்டேருக்கும் வலியாகிப்போவும்” எனக்கூறி மஞ்சளை வலது கை நீட்டி வாங்கிட…
“நேத்தே கழட்டி போட்டிருப்பேன்னு நினைச்சேன்” என்றான். அவளின் கையில் அவன் கட்டிவிட்ட கயிற்றை சுட்டிக்காட்டி.
“ஏன் மாமா. எதுக்கு பக்கம் வர. முடியல மாமா. எட்டவே நில்லு. அதுதான் எனக்கு நல்லது” என்றவளின் கண்கள் குளமாகின.
மேலும் சிலவற்றை உள்ளம் திறந்து அவள் பேசிட…
அக்கணம் அவளின் கண்ணீரைவிட அவள் சொல்லிய வார்த்தையில் தான், நெஞ்சம் விம்ப கலங்கி நின்றான் வீர அமிழ்திறைவன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
27
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கதை நல்லா போயிட்டு இருந்தது … இந்த மீனா பண்ற வேலை இருக்கே … மனசுக்குள்ள ஒண்ணு வச்சுக்கிட்டு வெளில ஒண்ணு பேசிக்கிட்டு …
காதல் அப்படின்னாலே அதானே 🤣🤣🤣
Story supera pokuthu sis.. Meena and vira , vira and maruthu ivankaluku itaiyi enna problem sis..
எல்லாம் கதையில்…
நன்றி sis ❤️
மாமனுக்காக யாரையும் எதற்கும் எதிர்த்து நிற்கும் வீரன் முன்பு போல் மாமனிடம் இயல்பாக பழக மட்டும் மறுக்கின்றான்.
“அவருக்கு என்ன புரியும்” ❤️
காப்பு வளைத்தல் பற்றிய விளக்கம் அருமை. 👏🏼
மாடுகள், ஆடுகள் எல்லாம் விவசாய குடும்பத்தின் அங்கத்தினரே. அழகான வெளிப்படுத்தல்.
வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையுடன் இருக்கும் பிள்ளைகள். அவர்கள் வாழ்வு செழிக்க எண்ணம் கொண்டுள்ள பெரியவர்கள். எல்லாம் நல்லதாக நடக்கும்.
மீனாவின் பிடித்ததை விட பிடிவாதம் அதிகம் இருக்க காரணம் என்ன?
தன் மனதும் அவன் மனதும் தன் மனதை புரிந்த அவன் மனதும் தெரிந்தும் கூட வீம்பாக உள்ளாளே.
வார்த்தையாடல் அழகு 😍😍
மிக்க மகிழ்ச்சி…
மனமார்ந்த நன்றி sis ❤️
தன்னையே தயார் படுத்திக்க மீனாளுக்கு டைம் வேணுமே…
ரொம்பவுமே பொறுமை காக்க வரும் நீ, வீரனே…
மீனா புதிர்