Loading

தாமதமானதை உணர்ந்து, வேகமாய் அமைச்சரைப் பார்க்கக் கிளம்பினாள் இதயாம்ரிதா.

துரிதமாய் ஒரு எலுமிச்சை சாறைத் தயாரித்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொண்டு காரை நோக்கி வர, அங்கு ஓட்டுநர் இருக்கையில் ஏற்கனவே சத்ய யுகாத்ரன் அமர்ந்திருந்தான்.

அவனைக் கண்டு புருவம் சுருக்கியவள், “நீங்க ஏன் வர்றீங்க? ஆபிஸ்க்கு போகல?” என்றதும், “ஆல்ரெடி நீ ஹேங்கோவர்… மினிஸ்டரை பார்க்கப் போகும்போது, மினிஸ்டர் வந்து மாலை போடுற அளவு எங்கயாவது போய் மோதிட்டா, என்னாகுறது… தேவை இல்லாம பழி எனக்கு வரவா? அதான், நானே உன்னைப் பாதுகாப்பா கூட்டிட்டுப் போறேன்” என்றவனிடம் விவாதிக்க அவளுக்கு நேரமில்லை.

எலுமிச்சை சாறை அருந்தியபடி சாலையில் கவனமாக இருந்தவள், “லெஃப்ட்” என்று வழி கூற அவனோ சாவகாசமாய் நேரே சென்றான்.

“சத்யா லெஃப்ட்ல போகனும்!” இதயா பல்லைக்கடிக்க,

அவனோ காதில் வாங்கவில்லை.

“எதுக்கு மினிஸ்டரைப் பார்க்கணும்?” சத்யா கேட்டதில், “அது உங்களுக்கு தேவையில்ல…” என்றாள் மிடுக்காக.

“ஒருவேளை லேட்டா போனா மினிஸ்டர் என்ன செய்வாரு?” எனத் தாடையைத் தடவியபடி சத்யா கேட்டதில், “சத்யா விளையாடாதீங்க. அந்த மனுஷன் சொன்ன நேரத்துக்கு வரலைன்னா மூஞ்சியை காட்டுவான். அப்பறம் அப்பாயிண்ட்மென்டே தரமாட்டான்…” என்றதும், “எதுக்குனு ரீசன் தெரிஞ்சா போகலாம்” என்றான் அவனும்.

அவனிடம் சொல்லக்கூடாது என்று எண்ணினாலும் அவன் வாயைப் பிடுங்குகிறானே!

“ஷ்யாம்கும், நிலோஃபர்க்கும் நடந்த இன்சிடென்ட்க்கு கேஸ் டீப்பா விசாரிக்க சொல்றதுக்காக…” அவள் மெதுவாய் கூற, அவனிடம் சின்னதாய் ஒரு விரக்தி புன்னகை.

‘ஓஹோ!’ என்றவனுக்கு ஏனோ இதயம் சட்டென பலவீனமடைந்த நிலை.

ஒன்றும் பேசாமல் அமைதியாய் அமைச்சரின் இருப்பிடத்திற்குச் சென்றவனைக் கண்டு லேசாய் அதிசயித்தாள்.

சொன்ன நேரத்தை விட ஐந்து நிமிடங்கள் முன்னதாக அழைத்து வந்திருந்தான்.

“உன்னை ஷார்ட்கட்ல கூட்டிட்டு வர தான் வழியை மாத்தி வந்தேன்” என்று வெகு கனிவாய் கூறியவனை யோசனையுடன் பார்த்து விட்டு உள்ளே சென்றவள், அமைச்சரிடம் விவாதித்து விட்டு வர, அவள் வரும் வரையிலும் காரில் சமத்தாக இருந்தவனைக் கண்டு நெஞ்சம் இன்னும் பீதி அடைந்ததை மறுக்க இயலவில்லை.

அன்று இரவு வீட்டிற்கு சென்றவள், மீண்டும் உறக்க மாத்திரியைத் தேட, அது அவளது டிராயரிலேயே இருந்தது.

சத்யா மீண்டும் வைத்து விட்டது புரிந்து, பெருமூச்சை வெளியிட்டவள் மறக்காமல் மாத்திரியை உண்டு விட்டே உறங்கினாள்.

அடுத்த வந்த நாள்களிலும் அவனிடம் பெரும் மாற்றம். விளம்பரங்களில் அமைதியாக நடித்தான்.

கேட்கும் போஸ்களை அள்ளி வீசினான். அவளும் கவனத்தை அவனிடம் இருந்து முழுக்க வியாபாரத்தில் கொண்டு வந்தாள்.

விளம்பரங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ‘கியூட் கபிள்ஸ்’ என்ற ஹேஷ்டேகுடன் சத்யாவையும் இதயாவையும் இணைத்து மீம்களும் போஸ்டர்களும் வரத் தொடங்க, அவளது தயாரிப்புகள் மெல்ல மெல்ல மார்க்கெட்டை அடைந்தது.

இதனிடையில், பிரான்சில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவளது தயாரிப்புகளை கடைபரப்பிடவும், உலக அளவில் தனது ப்ராண்டைத் தனித்து தெரியவைக்கவும், இரவு பகல் பாராது உழைத்தவள், அலுவலகத்தில் இருந்த அத்தனை பணியாளர்களையும் பிழிந்து எடுத்தாள்.

மேலும், பிரான்சிற்கு சென்று கண்காட்சியில் தங்களது பிராண்டை நிர்வகிக்க, ஒவ்வொரு துறையிலிருந்து உதவியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்ளையும் அழைத்துச் செல்ல திட்டமிட்டாள்.

அதில், விதுரன் அகில் பூமிகா மிதுனா மற்றும் சிலரைத் தெரிந்தெடுத்தாள்.

“பிரான்ஸா?” அகில் தான் வாயைப் பிளந்தான்.

“டோர க்ளோஸ் பண்ணு மேன்…” எனக் கிண்டல் செய்த இதயாம்ரிதா, தீயாய் அடுத்தடுத்த முன்னேற்றத்திற்கு தொழிலை வழிநடத்தினாள்.

இதற்கிடையில், நிலோபரின் கார் விபத்துக்கான காரணத்தை அறியவும் விசாரணை நடந்து கொண்டிருந்தது.

என்ன முயன்றும் நிலோபர் வாயைத் திறக்கவே இல்லை. எதனால் காரை வேகமாக ஓட்டிச் சென்றாலென்ற காரணத்தை கூறாது, பேயறைந்தது போலவே இருந்ததில் அனைவர்க்கும் கவலை எழுந்தது.

“என்ன மச்சி இவ பித்து பிடிச்ச மாதிரி இருக்கா. எனக்குப் பயமா இருக்கு” என்று விஷாலிடம் புலம்பித் தீர்த்தான் ஷ்யாம்.

“சரியாகிடுவாடா. அவள் டிஸ்சார்ஜ் ஆனதும் என்ன ஏதுன்னு விசாரிக்கலாம். இப்போ அவளை ஸ்ட்ரெஸ் பண்ணாத… நான் பிரான்ஸ் போறேன். போயிட்டு வந்ததும், போலீசை நம்பாம நம்ம பெர்சனலா இதுக்கு யார் காரணம்னு கண்டுபிடிக்கலாம்…” என்று விட்டு செல்ல, ஷ்யாமிற்கு மனையாளின் நிலை கலங்க வைத்தது.

அனைவரும் பிரான்சிற்கு கிளம்பிச் செல்ல, அப்போதும் ஆடவனின் அமைதியான இறுக்கம் அவளுக்குப் புரியவில்லை.

லக்சுவரி காஸ்மெட்டிக் கண்காட்சி நடைபெறும் இடமான பாரிஸ் எக்ஸ்போவில் பல தொழிலதிபர்கள் கூடினர். உயரமான கூரையைக் கொண்ட பரந்து விரிந்த ஆடம்பரமான அறை அது. பிரகாசமான எல். இ. டி விளக்குகள், வெள்ளையும் தங்க நிறமும் கலந்த அலங்காரங்கள், ஒளியை பிரதிபலிக்கும் தரையென பணக்காரர்கள் புழங்கும் இடமாய் ஜொலித்தது.

“ஹப்பா எவ்ளோ பெருசு பூமிகா” வியப்பாய் பார்த்திட, அகிலோ “ஈஃபில் டவர் இதை விட பிரம்மாண்டமா இருக்கும். அங்க போய் ஒரு தடவை போட்டோ எடுத்துடனும்” என்றான் ஆர்வமாய்.

விதுரனுக்கு எரிச்சல் மண்டினாலும், மிதுனாவின் குட்டிக்கண்கள் அனைத்தையும் ஆர்வமாய் பார்ப்பதைக் கண்டு, அவனுக்குள்ளும் சிறு குதூகலிப்பு.

மறுநாள் நடக்கவிருக்கும் எக்ஸ்போவிற்கு, முதல் நாளே அந்த அந்த பிராண்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அழகாய் தனித்துவமாய் ஸ்டால்களை கடைபரப்பத் தொடங்கினர்.

இதயாம்ரிதாவின் திட்டப்படி, ஒளிரா நிறுவனத்தின் ஸ்டால் எளிய அலங்காரத்துடன், தமிழ் சார்ந்த நுண்ணிய அலங்காரங்களைக் கொண்டு தரத்திற்கு முக்கியத்துவம் தரும் விதமாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவளுக்கு கிடைத்திருக்கும் முதலும் இறுதியுமான வாய்ப்பு இது. தந்தையை வைத்து தான் இந்த வாய்ப்பு கிடைத்ததென்றாலும், முழுக்க முழுக்க அவளது திறமையை காட்ட வேண்டிய தருணம். அனைத்தையும் ஒரு முறை சோதித்து விட்டே, பாரிஸின் வெகு பிரபலமான ஹோட்டல் அறைக்கு வந்தாள்.

சத்யாவை விமான நிலையத்தில் இருந்து அறைக்கு வரும்போது பார்த்தது தான். அவனுக்குத் தனியறை கொடுத்ததும் அதில் அடைந்து கொண்டான்.

அடுத்த நாள், அவன் மாடலாக நடந்து கொண்டால் போதுமென்றெண்ணியவள் அவனது அறைக்கு அருகிலேயே இருந்த மற்றொரு அறைக்குள் நுழைய, அங்கோ கட்டிலில் அமர்த்தலாக அமர்ந்து காலை நீட்டியபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்தான் சத்ய யுகாத்ரன்.

அவனைக் கண்டு துணுக்குற்றவள், “நீங்க இந்த ரூம்ல என்ன செய்றீங்க?” எனக் கேட்டதும், அவன் கடிகாரத்தைப் பார்த்தான்.

“மணி ஏழு தான ஆகுது. இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு நான் உன் புருஷனாச்சே” என்றான் அர்த்தமாய்.

அவனை முறைத்து வைத்தவள், குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

பிரென்ச் முறைப்படி கட்டப்பட்ட பிரம்மாண்ட ஹோட்டல் அது. ஒரு பக்க சுவர் முழுக்க அமைந்திருந்த மிகப்பெரிய கண்ணாடி சாளரத்தின் வழியே தெரிந்த எதிர்புற சாலையில் மஞ்சள் விளக்குகள் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது.

மென்தென்றல் காற்று முகத்தில் மென்மையாய் தடவிட, ஜன்னலருகில் நின்று சாலையை வெறித்துக் கொண்டிருந்த சத்யாவை கண்டுகொள்ளாதது போல குளியலறையில் இருந்து வந்த இதயாம்ரிதா கண்ணாடி முன் நின்று, லோஷனை முகத்தில் தடவிக்கொண்டிருந்தாள்.

சந்தனத்தை நினைவுபடுத்தும் அவளது வாசம் அவனது நாசி கலந்து, மூச்சுக்காற்றுடன் இதயத்தில் இறங்கி பலவித உணர்ச்சிகளைக் கிளறியது.

ஜன்னல் வழியே வந்த காற்றில் இதயாவிற்கு குளிரத் தொடங்க, “குளுருது…” என்று அவனைத் தாண்டி கையை நீட்டி ஜன்னலை மூட விழைய, அந்த சாளரத்துடன் இணைந்தே அவளுடன் பின்னிக்கொண்டான் ஆடவன்.

அவனது தீண்டல் குளிர்ந்த மேனியதை நெருப்பாய் தகிக்க வைக்க, “சத்யா… என்ன பண்றீங்க?” எனத் தடுமாறினாள்.

“புருஷனா என்ன பண்ணணுமோ அதை தான்!” சொல்லியபடி இதயாவின் செவியோரம் இதழால் வருட, கசப்பிலும் தித்திப்பாய் அடிவயிற்றில் மெல்லிய சலனம்.

“சத்யா… மூவ்!” குரலில் கண்டிப்பை ஏற்றிட, அவனோ ஜன்னலை அடைத்து விட்ட நொடியில் அவளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

“ஏன் மூவ் ஆகணும்? என்கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதுல உனக்கு ஓகே சொல்லி தான மேரேஜ் பண்ணுன…” என்றவனின் விரல்கள் அவளை ஆராயத் தொடங்க, குரலில் வெறுப்பும் கிறக்கமும் ஒன்றாய் ஒலித்து துவள வைத்தது.

இத்தனை நாள்களாக எல்லை மீற முயலாதவனின் நெருக்கம் இன்று அபாய மணியாய்!

அவன் கூறிய ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ உறுத்தினாலும், அந்நெருக்கம் வேண்டுமென அடம்பிடித்தது அவளது நெஞ்சம்.

ஆகினும், “விடுங்க சத்யா… நம்ம என்ன இங்க ஹனிமூன்க்கா வந்துருக்கோம்?” கோபத்தை உருவாக்கி அவள் கேட்க,

“நான் அதுக்கு தான் வந்துருக்கேன்” என்றவன், அவளைக் கையில் அள்ளி கட்டிலில் கிடத்தினான்.

“ஸ்டாப் இட் சத்யா…” அவளது வார்த்தைகள் முழு வடிவம் பெறும் முன், அவன் இதழ்களில் கட்டுண்டு கட்டுப்பாடு இழந்தது.

வேண்டுமட்டும் இதழ் முத்தம் திருடியவன், “நாளைக்கு உன் சக்ஸஸ் முழுசா நடக்க நான் இருக்கணும்ல? உன் டிசையர்க்கு நான் ஹெல்ப் பண்றேன். என் டிசையர்க்கு நீ கோ ஆபரேட் பண்ணு இதயா…” என்றவனின் மோகக்குரல் செவியில் தீண்டிய நொடிக்கு பிறகு, அவள் அவனைத் தடுக்கவில்லை.

அவளது சம்மதம், தாபத்தீயை அதிகரிக்க அழுந்த கொடுத்த முத்தம் கூட, அவள் மேனியில் காயமாய் தடம் பதிந்தது.

ஒரு கட்டத்தில் பொறுக்க இயலாமல், “எரியதுடா!” என முறைத்தாள்.

அவளது கழுத்தை காட்டத்துடன் நெறித்தவன், “என்னை எரிய விட்டல்ல… எரியட்டும்” என உறுமிவிட்டு, மீண்டும் மோகத்தில் மூழ்கினான்.

அவளிடம் சிறு புருவ முடிச்சு. சின்னதொரு குழப்பமும். அதில் முடிவிலியாய் முத்தங்களைத் தொடர்ந்தவனை எதிர்க்காது கண் மூடிப் படுத்திருந்தவளின் கோலம் அவனை இன்னுமாய் வெறிப்பிடிக்க வைத்தது.

அந்நேரம் அவளது அலைபேசி ஒலிக்க, சட்டென அந்த இனிய கனவில் இருந்து மீண்டவள், அலைபேசியை எடுக்க முற்பட்டாள்.

அவனோ அவள் மீது பரவி அவளது முயற்சிக்கு தடை விதிக்க, “சத்யா இம்பார்ட்டண்ட்டா இருக்க போகுது!” என்றதில், அவளது இரு கன்னத்தையும் இறுக்கிப் பிடித்தவன் “எவ்ளோ முக்கியமான போனா இருந்தாலும் இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு தான்…” என இதழ் வளைத்து கட்டளையிட்டவன், அவள் தேகத்தில் உத்தரவுகளை பிறப்பிக்கத் தொடங்கினான்.

அவனது கட்டளைக்கேற்ப அவளது ஆடைகள் கலைந்து களைந்து செல்ல, இம்முறை முத்தத்தால் காயம் கொடுப்பது அவள் முறையாகிற்று.

அவனைக் கீழே தள்ளி அவன் மீது பரவியவள், தனது வாழ்விலிருந்து பாதியில் விட்டுச் சென்றவனின் மீதெழுந்த பெருங்கோபத்தின் பலனாய் ஆங்காங்கே கடித்து வைத்தாள்.

“ஏய்… வலிக்குதுடி!” அவன் கட்டுப்படைய,

அவனது பின்னந்தலை முடியை இறுக்கிப் பிடித்து மேலும் வலி கொடுத்தவள், “என்னை வலிக்க வச்சீல… வலிக்கட்டும்!” அவள் கொண்ட ஒட்டுமொத்த அழுத்தத்தின் பலனாய் கூறியதைக் கேட்டு அவன் நெற்றி மத்தியிலும் சிறு கோடுகள் உதயமானது.

மேலும் சிந்திக்க விடாது, அவனை அவள் ஆட்கொள்ள அவளிடம் தன்னை இழப்பதும் அவளிடமிருந்து அவளையே எடுத்துக்கொள்வதுமாக சத்ய யுகாத்ரன் அவளை முழுதாய் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமானான்.

வெறுப்பும் வஞ்சமும் நேரம் செல்ல செல்லக் கரைந்து சென்று, இருவருக்குள்ளும் மண்டிக் கிடந்த ஆசையை மெல்ல மெல்ல வெளிக்கொணர்ந்திட, மறைக்கப்பட்ட நேசத்தின் வெளிப்பாடாய் நிகழ்ந்து முடிந்தது ஒரு ஆழம் நிறைந்த கூடல்.

இருவரும் அதன்பிறகு முகம் பார்த்துக்கொள்ளாது விட்டத்தில் பார்வையைப் புதைத்துக் கொள்ள, இத்துடன் முடிவடையும் உறவென்று அவனிதழில் ஒரு ஏளனமும் ஏக்கமும் கலந்த புன்னகை.

நிறைவல்ல, நிறையாத நேசமதின் ஆரம்பப்புள்ளி என்று அவனுணரும் காலமும் எப்போதோ!?

புது காதல் மலரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 91

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
92
+1
4
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments