
அத்தியாயம் 9
எதிரே இருப்பவனின் கவனத்தைக் கவராமல் அந்த வாரஇதழை மெதுமெதுவாக எடுத்தவள் மடியில் வைத்து மறைத்துவிட்ட நிம்மதியுடன், “நான் தேவகி” என்றாள் பொறுமையாக.
“தேவகி, பேரு நல்லா இருக்கே. என்ன படிச்சு இருக்கீங்க.” வகுப்பில் மாணவர்களிடம் கேட்பது போல, வருங்கால மனைவியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
“பிஏ தமிழ்”
“ஒரு டிகிரி தான் படிச்சு இருக்கீங்களா? மேற்கொண்டு படிக்க இஷ்டம் இல்லையா, இல்லை எல்லா வீடுகளை மாதிரியும் உங்ககிட்ட கேட்காமலே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்களா.” தர்மாவின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதியாய் இருந்த மருமகளுக்காக தானே முன்வந்தார் வடிவேலு.
“தர்மா, தேவகிக்கு அப்பா அம்மா கிடையாது. இனி நீயும் நம்ம குடும்பமும் தான் எல்லாமே.” மகனின் கேள்விக்கு பதில் சொல்வது போல், இனி உனக்கு அப்பா, அம்மாவாக நானும், என் மகனும் இருப்போம் என்பதை மறைமுகமாக தேவகிக்கு எடுத்துரைத்தார் அவர்.
“ஸ்சாரிங்க” தர்மா குரல் இறங்கிப்போனது, அதைக் கேட்டு பதறினாள் தேவகி.
“எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. அவங்க இரண்டு பேரும் சீக்கிரம் போய் சேர்ந்ததுக்கு நீங்க என்ன பண்ண முடியும்.” சொல்லிவிட்டு அழகாய் புன்னகைத்தாள் தேவகி.
“ரொம்ப அமைதியான டைப் போல. ஒவ்வொரு வார்த்தையும் எண்ணி எண்ணிப் பேசுறீங்க. பட் நான் அப்படி கிடையாது, நல்லா தாராளமா பேசுவேன். நீங்க தப்பா எடுத்துக்கலன்னா அப்படியே ஒரு வாக் போயிட்டு வரலாமா. பக்கத்தில் ஒரு ஐஸ்கீரிம் கடை இருக்கு. அங்க போய்” அவன் முடிக்கும் முன்பாக,
“டேய் டேய் ரொம்ப வழியாத டா. எனக்கே அசிங்கமா இருக்கு. இந்தப் பொண்ணு நீ நினைக்கிற மாதிரி இல்லை. ரொம்ப கண்டிப்பான குடும்பத்தில் வளர்ந்தவ, அதனால அவளை நீ எங்க கூட்டிட்டு போனாலும் கல்யாணத்துக்கு அப்புறம் கூட்டிட்டு போ.” என்றார் ஒரே முடிவாய்.
“ஆனா அப்பா, இவங்களைப் பத்தி ஒன்னுமே தெரியாம எப்படி.” லேசாக இழுத்தான் தர்மா. திருமணம் என்ற ஒன்று வரும் போது பெண்களுக்குப் பல தயக்கங்கள் வரும், அப்படி இருக்க அதில் பாதியாவது ஆண்களுக்கு இருக்காதா என்ன.
“உனக்கு உன் அப்பா மேல நம்பிக்கை இருக்கா, தர்மா” வடிவேலு அழுத்தத்துடன் கேட்கவும், வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், “கல்யாணத்துக்கு தேதியைக் குறிச்சிட்டு மறக்காம எனக்கு போன் பண்ணி சொல்லுங்க. அப்ப தான் நான் காலேஜ் ல லீவ் சொல்ல முடியும்.” சிரித்தபடி தன் சம்மதத்தை சொன்னான்.
மூன்று ஜோடி செட்டாகிவிட்டது என்ற நிம்மதியுடன் மகனை அனுப்பிவைத்துவிட்டு தன் மற்ற மருமகள்களையும் கூட்டிக்கொண்டு காருக்கு வந்து சேர்ந்தார் வடிவேலு.
“லீலாம்மா, ஏதோதோ நினைச்சு பயந்துக்கிட்டு இருந்தியே, பார்த்தியா என் பசங்களை. நான் பெத்து வைச்சிருக்கிற ஒவ்வொன்னும் சொக்கத் தங்கம். இனிமே எந்தக் கவலையும் இல்லாம கல்யாணத்துக்கான வேலையைப் பார்க்கணும். ஒன்னா இரண்டா மொத்தமா நாலு கல்யாணம்.
இனிமே தான் எனக்கு வேலையே. நிச்சயதார்த்ததுக்கு தேதி குறிக்கணும், மண்டபம் பார்க்கணும்,போட்டோஸ் வீடியோ எடுக்கிறதுக்கு பக்காவான ஆள் பிடிக்கணும், சமையல் வேலைக்கு பெஸ்ட் குக் யாருன்னு பார்க்கணும், துணிமணி எடுக்கணும், உங்களுக்கு நகைகள் எடுக்கணும் இன்னும் இன்னும் நிறைய இருக்கு. நினைச்சாலே தலை சுத்துது.” மணமக்களை விட கல்யாணக்கனவுகள் அவருக்கு தான் அதிகமாக வந்தது.
“மாமா அவசரப் படாதீங்க, இன்னும் ஒரு ஜோடி பாக்கி இருக்கு. உங்க மூன்றாவது பையனைப் பார்க்கணும், அவருக்கும் ஊர்மிக்கும் ஒருத்தரை ஒருவர் பிடிக்கணும், அதுக்குள்ள ஒரு முடிவுக்கு வர வேண்டாமே.” வார்த்தைகளில் தான் தயக்கம் இருந்ததே தவிர சொன்னவளின் முகத்தில் உறுதி தெரிந்தது.
“ஒரு ஜோடி தானே, அதுவும் ஊர்மிளா புத்திசாலிப் பொண்ணு. என் பையனை அவளுக்குக் கண்டிப்பா பிடிக்கும். நிச்சயம் கல்யாணத்துக்கு ஒத்துக்குவா.” லீலாவிடம் தொடங்கி, ஊர்மி புறம் வந்தவர், “அப்படித்தானே மருமகளே” என்றார் வாயெல்லாம் பல்லாக. அவர் முகத்தையே பார்த்தவண்ணம் இருந்த ஊர்மி பதில் சொல்லும் முன்னர் லீலா முந்தினாள்.
“அவ புத்திசாலிங்கிறது தான் மாமா இங்க பிரச்சனையே. எங்க நாலு பேரில் ஊர்மிளா கொஞ்சம் கோவக்காரி. துடுக்குத் தனமா மனசில் தோணுறதை எல்லாம் பேசிடுவா.
அதைவிட முக்கியமான விஷயம், அவளைப் பொருத்தவரைக்கும் முதல் பார்வையில் தப்புன்னு ஒரு விஷயம் தோணுச்சுன்னா, அதுக்கு அப்புறம் யாரு என்ன சொன்னாலும் அவளோட எண்ணத்தை மாத்திக்க மாட்டா. நீங்க கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க. ஊர்மிளாவுக்கும் உங்க மூணாவது பையனுக்குமான முதல் சந்திப்பு நல்ல படியா அமையணும்.
அப்படி நல்ல முறையில் சந்திச்சு, எல்லாம் கூடி வந்தா அதுக்கு அப்புறம் எங்க பக்கம் இருந்து எந்த விதமான தயக்கமும் இருக்காது.” உறுதியோடு சொன்னாள் லீலா.
“நான் எதுக்கு இருக்கேன், எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். அவங்க இரண்டு பேரையும் அவங்க சந்தோஷத்தோட சேர்த்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ கவலையை விடும்மா.” தன் மூன்றாம் மகன் செய்து வைக்கப்போகும் வேலை தெரியாமல் நம்பிக்கையளித்தார் வடிவேலு.
“சரி மா, சந்தோஷத்தில் எனக்கு இன்னைக்கு அதிகமா பசிக்கிது. வாங்க ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிடப் போகலாம்.” தந்தையின் கரிசனத்துடன் உணவருந்த அழைத்தார். சாப்பாடு என்ற வார்த்தையைக் கேட்ட பிறகு தான் நால்வரும் காலையிலிருந்து எதுவும் உண்ணவில்லை என்பதை நினைவு வந்தது பெண்களுக்கு.
“மாமா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நாங்க இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்.” தயக்கமாகச் சொன்னாள் லீலா.
“எப்ப என் பசங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நீங்க ஒத்துக்கிட்டீங்களோ, அப்பவே நீங்க என் வீட்டுப் பொண்ணுங்க. அதனால இப்ப இருந்து நீங்க நம்ம வீட்டிலேயே இருந்தா நல்லா இருக்கும்.
அதோட கல்யாணத்தை தள்ளிப் போடுற ஐடியா எனக்கு இல்லை. வர முதல் முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தம், இரண்டாவது முகூர்த்தத்தில் கல்யாணம். கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஜோடியா உங்க வீட்டுக்குப் போய் உங்களுக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்துக்கலாமே. கல்யாணத்துக்கு உங்க அம்மாவோட ஆசீர்வாதமும் கிடைச்ச மாதிரி இருக்கும்.” இனித் தான் பெறாத இந்த நான்கு பெண் பிள்ளைகளையும் சேர்த்து, தனக்கு மொத்தம் எட்டு பிள்ளைகள். இவர்களுக்கு நல்லது கெட்டது பார்க்க நான் ஒருவன் தானே இருக்கிறேன் என்று நினைத்து முழு உரிமை எடுத்துப் பேசினார் வடிவேலு. ஆனால் அதில் லீலாவுக்கு பிடித்தம் இல்லை.
“இல்ல மாமா எல்லாம் ரொம்ப வேகமா நடக்குற மாதிரி இருக்கு. கொஞ்சம் பொறுமையாவே போகலாம். இப்போதைக்கு நாங்க எங்க வீட்டுக்கு போறோம். நீங்க உங்க மூன்றாவது பையன் வந்த அப்புறம் சொல்லுங்க. நாங்களே வந்து பார்த்து சரிவருமான்னு உறுதிப்படுத்திக்கிட்டு அதுக்கு அப்புறம் மத்ததைப் பார்த்துக்கலாம்.” அவள் சத்தம் வழக்கத்தை விட சற்று அதிகமாக வந்த பொழுதே, தன் கூற்றில் அவளுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டார்.
“சரிம்மா எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம். இன்னைக்கு ஒருநாள் என் வீட்டில் தங்கிட்டுப் போங்க. வாழப்போற வீட்டையும் பார்க்கணும், என் பசங்க எப்படிப்பட்டவங்கன்னு அக்கம்பக்கம் விசாரிச்சுப் பார்க்கணும் இல்ல.” அவரே ஐடியா கொடுத்தார். லீலாவுக்கு இது சரியென்று தான் தோன்றியது. ஆனாலும் சம்பந்தம் உறுதிப்படாமல் அவர்கள் வீட்டில் போய் இருப்பது சங்கடமாகத் தான் இருந்தது.
“நான் உங்களை என் வீட்டுப்பிள்ளைகளா பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா நீங்க என்னை உங்க அப்பாவோட நண்பனாக் கூடப் பார்க்கலன்னு நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமா இருக்கு லீலாம்மா.” வடிவேலு குறைபட, மற்ற பெண்களுக்கு ஒருமாதிரி ஆகிப்போனது.
“ஒருநாள் தானேக்கா” என்று ஊர்மி சொல்ல மற்ற தங்கைகளின் முகமும் அதையே ஆமோதிப்பதாகத் தோன்ற அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்டாள் லீலா.
“மாமா நாங்க எப்படி அங்க. உங்க பசங்க எல்லாரும் அங்க தானே இருப்பாங்க.” நிதர்சனம் புரிந்து முதலில் பதறியவள் ருக்கு.
“ஏன் மா அவங்க யாரும் பேயோ, பிசாசோ இல்லை. உன்னை மாதிரி மனுஷங்க தான். இன்னும் கொஞ்ச நாளில் மொத்தமா அவங்களோட உரிமை உங்களுக்குத் தான். இப்ப இருந்தே பழக்கப்படுத்திக்க வேண்டாமா. அப்புறம் எங்க வீடு ராஜா காலத்தில் கட்டப்பட்ட நல்ல பெரிய வீடு. இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் ஆல்ட்டர் பண்ணி வைச்சிருக்கோம்.
மொத்தம் நாலு மாடி இருக்கும் நானும் பசங்களும் கீழே கிரவுண்ட் ப்ளோரில் தான் இருக்கோம். இரண்டாவது மாடியில் நீங்க இருங்க. கல்யாணம் ஆகுற வரைக்கும் மட்டும்.” சிரித்தார் பெரியவர்.
தான் பெற்ற நான்கு வைரங்களுக்கும் முத்துக்களைப் போன்ற மருமகள்களைக் கொண்டு வந்துவிட்டோம் என்ற பூரிப்பு அவருடைய முகத்தில் நன்றாகவே தெரிந்தது.
லீலா சம்மதித்த சந்தோஷத்தில் வடிவேலுவின் பசி இரண்டாம் பட்சமாகிப் போய் விட, இப்போதே தன் வீட்டுப் பிள்ளைகளை தங்கள் வீட்டிற்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றவும், இளைஞனைப் போன்ற உத்வேகத்துடன் வேகமாக அதே நேரத்தில் இலாவகமாக காரை தன்வீட்டை நோக்கிச் செலுத்தினார்.
“என் ஆசை மருமகளுங்களா, இது தான் நானும் என் நாலு பசங்களும் வாழுற வீடு. இனிமே நீங்க வாழப்போற வீடு, அதாவது உங்க வீடு.” இப்போதே தன் மகன்களோடு சேர்த்து அவர்களின் சொத்துக்கள் முழுவதையும் இவர்களின் காலடியில் வைத்துவிடும் அவா அவரிடம் இருந்தது. ஆனால் பெண்கள் மிரண்டுவிடக்கூடாது என்பதற்காக இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்தார்.
வீட்டைப் பார்த்த நொடி பெண்கள் நால்வரும் சற்று அரண்டு போனது உண்மை. “இது ராஜா காலத்து வீடு இல்ல, அரண்மனை.” தன்னையும் அறியாமல் வாய்விட்டுச் சொல்லி இருந்தாள் லீலா.
“இந்தக் கேட்டைப் பார்த்தாலே பயமா இருக்கே.” வடிவேலுவின் காமெடி நினைவு வந்தது ருக்குவிற்கு.
“இந்த வீட்டை சுத்திப் பார்க்கவே ஒரு நாள் போதாது போலையே.” மலைத்தாள் கடைக்குட்டி தேவகி.
“இவ்வளவு பெரிய வீட்டில் அந்த நாலு பேரால ஒன்னா இருக்க முடியாதாமா.” கடுகடுத்தாள் ஊர்மிளா. அவளுக்கு வடிவேலுவை அதிகம் பிடித்துவிட்டது.
இப்படியான தந்தை எத்தனை பேருக்குக் கிடைத்துவிடும். இவரின் நியாயமான ஆசையை நிறைவேற்றுவதை விட அவர்களுக்கு அப்படி என்ன பெரிய வேலை இருக்கிறது என்று நொந்து கொண்டாள்.
“எல்லாரும் ஒரு நிமிஷம் அப்படியே இருங்க நான் வந்துடுறேன்.” என்றுவிட்டு குழந்தையைப் போல் வீட்டிற்குள் ஓடினார் வடிவேலு.
“அக்கா இது எல்லாம் சரியா வருமா எனக்கு பயமா இருக்கு அக்கா.” சற்று நேரம் முன்னர் தெய்வாவின் அன்பில் பனிக்கூழைப் போல் உருகியதை மறந்து கண்முன் நிற்கும் வீட்டின் பிரம்மாண்டத்தில் பயந்து போய் கேட்டாள் ருக்கு.
அதே பயம் தனக்குள்ளும் இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த வீட்டுப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் சந்தோஷமா இருப்பேன்னு யாரோ சொன்னாங்க. அவங்களை எங்கேயாவது பார்த்தியா ஊர்மி.” என்க, மற்ற இருவரிடம் இருந்தும் சின்னதாய் சிரிப்பு சத்தம்.
“இங்க பாரு ருக்கு, வீடு பெருசோ இல்லை சின்னதோ. உயிர் இல்லாத அதைப் பார்க்கிறதை விட, அதுக்குள் இருக்கிற உயிர் உள்ள ஜீவன்களைப் பார்க்கணும்.
நல்லதோ கெட்டதோ நாம நாலு பேரும் ஒன்னா இருக்கோம் அதுதான் நம்மளோட மிகப்பெரிய பலம். அந்த பலம் நம்மளைக் காப்பாத்தும்.” என தங்கைக்குச் சொல்வதைப் போல் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு மனதை திடப்படுத்திக்கொண்டாள் லீலா.
“என் குலத்தை காப்பாத்த வந்த குலசாமி, என் மூத்த மருமகளே நீ முதல்ல இறங்கு மா.” வடிவேலுவின் சத்தம் கேட்க, லீலா முதலாவதாக இறங்கினாள். அவளைத் தொடர்ந்து ஒவ்வொருவராக இறங்க அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து, தன் கையாலே ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்றார் வடிவேலு.
உள்ளே நுழைந்த நால்வரும் பணச்செழிப்பை காட்டும் விதத்தில் அந்த வீட்டை நிறைத்திருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் லேசான பயத்துடன் பார்த்துக் கொண்டே வந்தனர்.
உள்ளிருந்த சில வேலைக்காரர்கள் வடிவேலு அழைத்து வந்திருக்கும் அந்தப் பெண்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காக சுவரோடு சுவராக ஒட்டி நின்றவண்ணம் கண்களை மட்டும் இவர்கள் மேல் வாடகைக்கு விட்டிருந்தனர்.
ஹாலில் சோபாவில் அனைவரையும் அமரச் சொன்னவர், வேலைக்காரர்கள் அனைவரையும் அருகே அழைத்தார். “இவங்க நாலு பேரும் தான் இனி உங்களுக்கு எஜமானியம்மா, என் பசங்களுக்காக நான் தேடிக் கண்டுபிடிச்ச கொற்கை முத்துக்கள்.
இவ லீலாவதி என்னோட மூத்த மருமக, இவ ருக்மணி இரண்டாவது மருமக, ஊர்மிளா மூணாவது மருமக, இவ தேவகி நாலாவது கடைசி செல்ல மருமக.” என்று நால்வரையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். ஒவ்வொருவரையும் என்னோட மருமகள் என்று தனித்தனியாக அழுத்திச் சுட்டிக்காட்டியது லீலாவுக்கு அதிகம் பிடித்தது.
பெண்கள் நால்வரும் எழுந்து நின்று அனைவருக்கும் பொதுவாக ஒரு வணக்கம் வைத்தனர். “ஏன் ஐயா, நாலு பேரும் நம்ம தம்பிகளை மாதிரி அக்கா தங்கச்சீங்களா?” ஆர்வமாய் கேட்டார் வயதான பெண்மணி ஒருவர்.
நால்வரின் முகத்திலும் ஒரு கலவரம் சற்று நேரத்திற்கு வந்து போனது. “சரியாச் சொன்னீங்க. இவங்க நாலு பேரும் அக்கா, தங்கச்சிங்க தான். ஆனா இந்த விஷயம் எந்தக் காரணம் கொண்டும் இந்த வீட்டு இராஜகுமாரனுங்களுக்கு தெரியக் கூடாது சரியா.” வடிவேலு இரகசியம் பேச, அனைவரும் ஒரு சேர “சரிங்க ஐயா” என்று கோரஸ் வாசித்தனர்.
“என் மருமகளுங்க என் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் இன்னைக்கு ஒருநாள் உங்க எல்லாருக்கும் சம்மளத்தோட லீவு. எங்க என்னோட அசிஸ்டண்ட் வீணாப்போன அரசு.” வடிவேலு கேட்க, “உள்ளேன் அங்கிள்” என்று தரையில் இருந்து சத்தம் கேட்டது.
“டேய் அறிவில்லாதவனே என்னடா தரையைத் துடைச்சிக்கிட்டு இருக்கியா.” சிரித்தார் வடிவேலு. அவர் அனைவரிடமும் அன்பாக இருப்பவர் தான் என்றாலும் அரசுவிடம் கூடுதல் கனிவு, அக்கறை இருக்கும்.
“உங்க பசங்களுக்குக் கல்யாணம், அதுவும் நாலு அக்கா, தங்கச்சிங்க கூடன்னு நீங்க சொன்னதும் லைட்டா மயக்கம் வந்திடுச்சு.” சிரிப்புடன் சொன்னவாறு தரையில் இருந்து எழுந்தான் அவன்.
“கொழுப்பைப் பார்த்தீங்களா மா. இவன் என் சிநேகிதன் மகன், சின்ன வயசுல இருந்து இங்க தான் வளர்ந்தான். அட்டை மாதிரி என் கூடவே சுத்திட்டு இருப்பான். அதனால தான் இவனையே எனக்கு பிஏ வா அப்பாயிண்ட் பண்ணிட்டேன்.
ஆனா என் பிள்ளைங்க மாதிரி தான் இவனும். உங்களுக்கு இந்த வீட்டில் இருக்கும் ஒரே சங்கடம் இந்த லொடலோட கேஸைச் சமாளிக்கிறது மட்டும் தான்.” என மானவாரியாக அரசுவின் காலை வாரினார் பெரியவர்.
“சரிதான், ஏற்கனவே இருக்க நாலு பத்தலையோ. என்னை வேற உங்க பையன் லிஸ்ட்டில் சேர்க்கிறீங்க. நான் ஒருத்தனாவது கடைசி வரைக்கும் உங்க கூடவே இருக்கணும்.” என்றான்.
“டேய் டேய் உன் வாயில் வசம்பை வைச்சுத் தேய்க்க. என் பசங்க என்னை விட்டுப் போகக் கூடாதுங்கிறதுக்காகத் தான் இப்படிப்பட்ட பொண்ணுங்களைத் தேடிக்கண்டு பிடிச்சிருக்கேன்.
இனி என்ன ஆனாலும் என் குடும்பம் உடையாது டா. என் நாலுபசங்களும் கடைசி வரைக்கும் ஒன்னா ஒத்துமையா இருப்பாங்க.” அவர் சொல்லி முடித்த அடுத்த நொடி அவர்கள் வீட்டு கடிகாரம் டிங்டங் என்ற ஓசையை எழுப்ப ஆரம்பித்திருந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நல்லா ஜாலியா போகுது கதை… இப்படியே ஜாலியா போகுமா … இல்ல சோகக் காட்சிகள் வருமா … கொஞ்ச நேரத்துல அண்ணன் தம்பிங்க வந்து சண்டை போட்டுட்டு கத்திட்டு இருப்பாங்களோ … மூணாவது ஆள் மிஸ்ஸிங் … நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணனுமா 😔
ஜாலியா தான் மா போகும்…. அவனுங்க போடுற சண்டை கூட ஜாலியா தான் இருக்கும் 😍😍😍😍