
அகம்-2

“எம்மா! என்னைப் பெத்தவளே! தங்க மீனாட்சி..!” தரையில் பாதம் பதிய நடந்து வந்து அன்னையின் அருகில் அமர்ந்தாள் கருவிழி.
“என்னத்துக்குடி ஒட்டு மொத்த ஊருக்கும் கேட்கிற மாதிரி கத்திக்கிட்டே கிடக்க?” சலிப்புடன் கேட்டார் மீனாட்சி.
“உன்னைப் பெத்தவரு என் கல்யாணத்தைப் பத்தி தானே பேசினாரு! என்னை ஒத்தை வார்த்தையாச்சும் கேட்டியா? கல்யாணம் பண்ணி காலம் முழுசும் வாழப் போறவ நான். என் கிட்டே கேட்காமல் எப்படி நீங்களா முடிவு பண்ணலாம்.?” கேள்வியாய் அன்னையின் முகம் பார்த்தாள் அவள்.
“இந்தக் கேள்வியெல்லாம் உன் தாத்தன் கிட்டே நீயே கேட்க வேண்டியது தானே? என்கிட்டே வந்து துள்ளுறவ? என் அண்ணே மவனை விட, இந்த ஊரு உலகத்தில் உனக்கு பொருத்தமானவன் எவன்டி இருக்கான்? கூறுகெட்டத்தனமா பேசாமல் போய் சோலியைப் பாரு!”
“நானெல்லாம் அந்த நெட்டை நெடுமானஞ்சியைக் கட்ட மாட்டேன். தாத்தாகிட்டே சொல்லி இந்தக் கல்யாணத்தை வேணாம்ன்னு சொல்லும்மா!” தாயின் கன்னம் பிடித்து செல்லம் கொஞ்சினாள் கருவிழி.
“பேசாமல் அங்கிட்டு போடி! தாத்தாகிட்டே நீயே சொல்ல வேண்டியது தானே? நீ தான் தைரியமான ஆளாச்சே?!” நக்கலாய் சொன்னார் மீனாட்சி.
“உன்னைப் பெத்தவர்கிட்டே யாரு பேசுறது? பொழுதுக்கும் ஹிட்லர் மாதிரி அட்டேன்ஷனில் தான் நிக்கிறார். எதாவது பேசலாம்ன்னு போனால் எனக்குத் தெரியும் நீ பேசாதேன்னு சொல்லுவார்.!” பேசினால் என்ன நடக்கும் என அறிந்தவளாய் பேசினாள் கருவிழி.
“அதேன் தாத்தா சொல்லிட்டாங்களே, பிறகு என்ன? பேசாமல் சோலியைப் பார்த்துக்கிட்டு போடி!” எனச் சொல்லிவிட்டு மீனாட்சி சென்றுவிட, முகம் சுருக்கியபடி கூடத்தைத் தாண்டி வீட்டின் பின்பக்கம் விரைந்தாள் கருவிழி.
“ச்சேய்! யாருமே நம்மை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க! இப்போ தான் படிச்சுட்டு இருக்கேன். அதுக்குள்ளே கல்யாணம் பண்ணணுமா? இந்த நெடுவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டால், ரோஹனை என்ன பண்ணுறது? நான் ரோஹனைத் தானே லவ் பண்ணுறேன். இதெல்லாம் சரிப்பட்டு வராது முதலில் ரோஹனைப் பார்த்துப் பேசணும்!” முணுமுணுப்பாய் தனக்குத்தானே பேசிக்கொண்டாள் அவள்.
*******
“ஏய்! கரு கரு என்னத்துக்கு இங்கண உட்கார்ந்திருக்கிறே? அப்படி என்ன யோசனை? கோட்டையைப் பிடிக்கப் போறியாக்கும்?” நக்கலாய் கேட்டபடியே முல்லைப் பந்தலின் கீழ் ஊஞ்சலில் சோக சித்திரமாய் அமர்ந்திருந்தவளை ஊஞ்சலில் வைத்து ஆட்டியபடியே பேசினான் துடிவேல் அழகர்.
“அழகரு! கடுப்பேத்தாமல் போயிரு..!” பொறுமை காற்றில் கரைந்திருக்க வார்த்தைகளில் அழுத்தம் தந்து பேசினாள் அவள்.
“என்னடி! என்னத்துக்கு இப்போ கப்பல் கவிழ்ந்த மாதிரி கன்னத்தில் கை வச்சு உட்கார்ந்திருக்கிறே?”
“நான் படிக்கணும்! எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்ன்னு தாத்தா கிட்டே சொல்லேன்.!” வாடிப் போயிருந்த முகத்துடன் மாமன் மகனிடம் முறையிட்டாள் கருவிழி.
“நெடுமாறன் ரொம்ப நல்லவன் தான் டி! உன்னை கல்யாணத்திற்குப் பிறகு படிக்க வைப்பான். நான் அவன்கிட்டே பேசறேன்.!” சொக்கேசன் எடுத்த முடிவில் மாற்றம் என்பதே இருக்கப் போவதில்லை என்பதை அறிந்தே பேசினான் துடிவேல் அழகர்.
“நீ இப்படித்தேன் சொல்லுவேன்னு எனக்கு முன்னவே தெரியும். என்னவா இருந்தாலும் நெட்டை நெடுமானஞ்சி உன் பெரியப்பா மவன்! அவனுக்கு தானே நீ சப்போர்ட் பண்ணுவ.? எங்க அம்மா இன்னொரு வீட்டு மருமகள் தானே? நானும் இன்னொரு வீட்டு பொண்ணு தானே?” என அவள் சொன்னது சுருக்கென அவன் இதயத்தைத் தைத்தது.
“இந்தாரு டி! ஏடாகூடமா பேசினேன்னு வையி, அடிச்சு பல்லு கில்லெல்லாம் கழட்டிடுவேன் பார்த்துக்கோ! என்னைக்குமே நான் உன்னை வேற வீட்டுப் பொண்ணா பார்த்ததில்லை.! ” எனச் சொன்னவன்,
“தாத்தா முடிவை யாராலும் மாத்த முடியாது. அவர் எடுத்த முடிவு எடுத்தது தான். நீ கல்யாணம் பண்ணிட்டு வேற வீட்டுக்கா போகப் போற? இங்கண தானே இருக்கப் போற? இதை விட உனக்கு வேற என்ன வேணும்?” அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்வதற்காய் கேட்டான் அழகர்.
“ஏன் நான் ரோஹனை லவ் பண்ணுறேன்னு உனக்குத் தெரியாதா? நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். ஹிட்லர் அவர் இஷ்டத்துக்கு முடிவெடுத்து என் வாழ்க்கையில் சடுகுடு விளையாடுறாரு! இந்த உரிமையை அவருக்கு யார் கொடுத்தது? இவர் சொன்னால் நான் எல்லாத்தையும் கேட்கணுமா? மாட்டேன்! நான் ரோஹன் கூட ஓடிப் போகப் போறேன். அப்போ அவர் மானம் எங்கே போகுதுன்னு பார்க்கிறேன்!” அதீத கோபத்தோடு சபதம் செய்பவள் போல் பேசினாள் கருவிழி.
சொல்ல சொல்ல கேட்காமல் சிறு பிள்ளை போல் பேசிக்கொண்டே செல்பவளைப் பார்த்து அதீத கோபமும் ஆத்திரமும் மேலோங்கியது.
“இங்கே பாரு டி! நான் சொல்றதைக் கேளு!”
“முடியாது அழகரு! இது என் வாழ்க்கை! நான் தான் முடிவெடுப்பேன். என் வாழ்க்கையில் முடிவெடுக்க உனக்கோ, உன் தாத்தாவுக்கோ எந்த உரிமையும் இல்லை!” மீண்டும் அவள் அதையே பேச, கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ,ஆட்டிக் கொண்டிருந்த ஊஞ்சலை நிறுத்தியவன், அவள் முன் வந்து நின்று, அவளை ஓங்கி அறைந்திருந்தான். கன்னத்தைப் பிடித்த படி அதிர்வுடன் நின்றவள்,
“அழகரு!” என உள்ளே போன குரலில் விளிக்க,
“என்னடி அழகரு! உன் இஷ்டத்துக்குப் பேசிட்டே போற? அத்தை உன்னை வயித்தில் வச்சிக்கிட்டு இங்கே வந்து நின்னப்போ, தாத்தா மட்டும் ஆதரவு தரலைன்னு வையி, நீயெல்லாம் எங்கே தெருவில் திரிஞ்சுட்டு இருப்பியோ தெரியாது. உன்னை இத்தனை வருஷம் சோறு போட்டு வளர்க்குறாங்கல்ல? நீ இதுவும் பேசுவ இன்னுமும் பேசுவ! இந்தக் குடும்பத்தோட ஆணி வேரே தாத்தா தான். அவருக்கு முடிவெடுக்க உரிமை இல்லையா? அவர் பேருக்கு களங்கம் விளைவிக்க மாதிரி ஏதாச்சும் செஞ்சே, நானே உன்னைக் கொன்னு வைகை ஆத்தில் வீசிப்புடுவேன் பார்த்துக்கோ!” விரல் நீட்டி எச்சரித்தவன் விலகி சென்றிருக்க, பித்துப் பிடித்தவள் போல் அமர்ந்திருந்த கருவிழியின் பார்வை அழகனின் திண்ணமான புற முதுகை வெறித்துக் கொண்டிருந்தது.
********
தன் புல்லட்டை ஓட்டிக் கொண்டு தனக்கான பணிகளை மேற்கொள்ள களத்திற்கு வந்திருந்தான் துடிவேல் அழகர். ஆனாலும் தன் அத்தை மகள் சொன்ன வார்த்தை நெருஞ்சி முள்ளாய் அவன் நெஞ்சைத் தைக்கத்தான் செய்தது.
‘அவள் பிறந்ததிலிருந்து எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தவர்களுக்கு முடிவெடுக்க உரிமையில்லை என்றால் வேறு யாருக்கு உரிமை இருக்கிறது? சில மாதங்களே பழகிய ரோஹனுக்கா?’ கண் மண் தெரியாத அளவிற்கு கோபம் வந்தது அவனுக்கு.
கோபம் ஒருபுறமென்றால், இளவரசியாய் வளைர்ந்தவளைக் கை நீட்டி அடித்து விட்டோமே, என்ற ஆற்றாமை ஒருபுறம்.
சோக சித்திரமாய் ஊஞ்சலில் கன்னத்தைத் தாங்கியபடி அவள் அமர்ந்திருந்த தோற்றம் அவன் கண் முன் வந்து போனது.
“ச்சே! தாத்தாவைப் பற்றி பேசின கோபத்தில் கை நீட்டி அடிச்சிட்டேன். சின்னப் புள்ள ஏதோ தெரியாமல் பேசிட்டாள்ன்னு பொறுத்துப் போக என்னால் முடியலை. தப்பு என் மேலத்தான்!” என தன்னையே நொந்துக் கொண்டவன், தன் மனதைத் திருப்ப முயன்று, கூரை வேய்ந்து போடப்பட்டிருந்த சின்ன சின்னக் குடில்களைப் பார்வையிட்டபடி ஒரு குடிலுக்குள் நுழைந்தான்.
வைக்கோல் நிறைந்த நெகிழிப் பைகள் தொங்கிக் கொண்டிருக்க, வெள்ளை வெளேரென சிப்பிக் காளான்கள் முளைத்து வெளி வந்திருந்தன.
“முக்கால்வாசி காளானை நாளைக்கு எடுத்துரலாம் தம்பி! நாளைக்கு பாக்கெட் போட்டு, காய் கறி கடைகளுக்கு அனுப்பிருவோம். இன்னைக்கு கொஞ்சம், காய்கறியும் காளானும் டவுனுக்கு அனுப்பிருக்கு தம்பி! எல்லாம் நோட்டில் பதிஞ்சு வச்சிருக்கேன். நீங்க பிறகு கம்யூட்டரு பொட்டியில் கணக்கு பண்ணி எழுதீருங்க!” என அங்கே பணிபுரிபவர் சொல்ல,
“சரி!” என்பது போல் தலையசைத்தவனுக்கு மனம் எதிலும் செல்ல மறுத்தது. மனம் முழுதும் கருவிழியை அடித்துவிட்டோம் என்பதிலேயே நின்றது. தங்க மீனாட்சியைக் கூட அவளை அடிப்பதற்கு யாரும் விட்டதில்லை.
அப்படியிருக்கையில் தான் அடித்துவிட்டோம் என்பதே அவனுக்கு உறுத்தலாய் இருந்தது.
‘இன்னொரு குடும்பத்திற்குள் திருமணமாகிப் போய் அவள் கஷ்டப்படக் கூடாதென்பதற்காகவே தாத்தா இப்படியொரு முடிவெடுத்திருக்கிறார் என்பதைக் கூடப் புரிந்துக் கொள்ள மறுக்கிறாளே?!’ என்ற எண்ணம் நெஞ்சைப் பிசைய, அலைபேசியை எடுத்து தன் நண்பனுக்கு அழைத்தான் துடிவேல் அழகர்.
“டேய், காக்கா விரட்டி! எங்கே இருக்கே?”
“இந்தா நம்ம இடத்துக்குத்தேன் வந்துக்கிட்டே இருக்கேன் டா! என்ன விஷயம்?” நண்பனின் குரலறிந்தவனாய் கேட்டான் காத்தவராயன் என்கிற காக்கா விரட்டி.
“ஆமா உனக்கு எல்லாத்தையும் ஃபோனிலேயே எழுதுவாய்ங்களாக்கும்? நேரில் வாடா!”
“இந்தா வந்துட்டேன் அழகு! என்னை ஏன் தேடினே? அம்புட்டு பாசமா என் மேல?” என சில நிமிடங்களிலேயே நண்பனின் முன் வந்து நின்றான் காத்தவராயன்.
“பாசமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை! நம்ம கருவிழியை அடிச்சுப்புட்டேன் டா! மனசெல்லாம் ரொம்ப சங்கடமா இருக்கு.!”
“நம்ம கருவிழியவா? அந்தப் புள்ளையை என்னத்துக்குடா அடிச்சே? கேட்க யாரும் இல்லைன்னு நினைச்சியோ? நான் இருக்கேன் டா! என் தங்கச்சிக்கு ஒண்ணுன்னா கேட்க இந்த அண்ணன் காத்தவராயன் இருக்காங்கிறதை மறந்துறாதே! பாவம் அந்தப் புள்ளை பச்சை மண்ணுடா! அதைப் போய் அடிச்சிருக்கே?” கோபம் வந்தவனாய் நண்பனை உலுக்கினான் காத்தவராயன்.
“இந்தாரு டா! என்ன நடந்துச்சுன்னு தெரியாமல், பெரிய இவன் மாதிரி, உன் தொங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணாதே! திமிரெடுத்த கழுதை, இந்த மரமண்டை மது இருக்காளே, அந்தப் பக்கியையும் கூட்டிக்கிட்டு பாண்டிச்சேரி போய் மூக்கு முட்ட குடிச்சுப்புட்டு ரோட்டில் ஒரே ஆட்டம்!” தன்னை உலுக்கியவனை விலக்கி நிறுத்தியபடியே பேசினான் துடிவேல் அழகர்.
“என்ன அழகு சொல்றே? நம்ம கருவிழியா?”
“இல்லை, இல்லை, உன் தங்கச்சி கருவிழி!”
“சரக்கடிச்சுச்சா?”
“ஆமாடா! அதுவும் பிங்க் ஓட்காவாம்!”
“அட லேடீஸ் ஐட்டம்! என்னவா இருந்தாலும் என் தங்கச்சி என்ன குடிக்கணும்ன்னு தெளிவாத்தான் இருக்கா!” பேச்சுவாக்கில் கருவிழியின் செயலை மெச்சிக் கொண்டான் காத்தவராயன்.
“உன் தங்கச்சி உன்னை மாதிரி தானே இருப்பா! ஏன்டி குடிச்சேன்னு கேட்டால், நான் சனிக்கிழமை அவளுக்குக் கொடுக்காமல் சரக்கடிக்கிறேனாம், அதனால் டேஸ்ட் பார்க்க குடிச்சாளம்.! எம்புட்டு திண்ணக்கம் பாரு உன் தொங்கச்சிக்கு!”
“ஏதோ டேஸ்ட் பார்க்கன்னு தெரியாமல் குடிச்சுருச்சு! அதுக்குப் போய் நீ அவளை அடிச்சியாக்கும்?”
“டேய் பரதேசி! அவளை பாண்டிச்சேரி போய் பாதுகாப்பாய் கூட்டிட்டு வந்ததே நான் தான் டா! பத்தாக் குறைக்கு, தாத்தாகிட்டேயும் நான் தான் கூட்டிப் போனேன்னு திட்டு வாங்கியிருக்கேன். இதெல்லாம் பத்தாதுன்னு, உன் தங்கச்சி எவனையோ லவ் பண்ணுறாளாம். பெரிய இடியா தூக்கி தலையில் போடுறா. தாத்தா வேற நெடுமாறனுக்கும் இவளுக்கும் கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கார். இவ என்னடான்னு நான் அவன் கூட ஓடிப் போயிருவேன்னு சொல்றா! என்கிட்டேயே வந்து என் வாழ்க்கையில் முடிவெடுக்க நீங்க யாருன்னு கேட்கிறா! அதான் கோபத்தில் கன்னத்திலேயே ஓங்கி ஒண்ணு வச்சிட்டேன்.!”
“அது ஏதோ சின்னப் புள்ள புரியாமல் சொல்லியிருக்கும். நீ என்ன ஏதுன்னு விசாரிக்காமல் கை நீட்டுனியாக்கும்! போடா! போய் முதலில் அந்தப் புள்ளையைச் சமாதானப்படுத்து.!”
“ஏய்! உன் தொங்கச்சியை சமாதானப் படுத்துறது தான் எங்க வேலையாக்கும். இந்தாரு காக்கா விரட்டி, அவ பண்ணின வேலைக்கு இன்னும் ரெண்டு சேர்த்து கொடுத்துருக்கணும். என்ன செய்ய ஒத்தை அடிக்கே மனசு ரொம்ப சங்கடமா இருக்கு!” மனதின் ஆழத்திலிருந்து பேசினான் துடிவேல் அழகர்.
“என்னத்துக்கு இப்படி சங்கட்டப் பட்டுட்டு கிடக்கணும். ஏதோ கோபத்தில் சட்டுன்னு கை நீட்டிட்ட, நம்ம விழி தானே? ஒண்ணும் நினைச்சுக்க மாட்டா! போகும் போது கோணார் கடையில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து சமாதானப் படுத்திரு.!” என காத்தவராயன் சொல்ல,
“அது எங்களுக்குத் தெரியும்.! இப்போ உன்னை வரச் சொன்னது எதுக்குன்னா, அந்த ரோஹன் எவன்னு விசாரிச்சு வையி! அவனை அக்கு அக்கா பிச்சுப் போடலை என் பேரு அழகரு இல்லை! படிக்கிற வயசில் படிக்காமல், காதல் கருமாதின்னு சின்னப் புள்ள மனசில் ஆசையை விதைச்சுக்கிட்டு! என் கையில் மாட்டுனான் செத்தான் அவன்.!” யாரென்றே தெரியாத ரோஹனின் மேல் கோபமாய் வந்தது துடிவேல் அழகருக்கு.
“சரி! சரி! எமோஷனைக் குறை அழகு! என்கிட்டே சொல்லிப்புட்டல்ல நான் பார்த்துக்கிறேன் விடு! அவன் ஜாதகமே நாளைக்கு உன் கையில் இருக்கும்.!” எனச் சொல்லிவிட்டு காத்தவராயன் விடை பெறவும், நண்பனிடம் மனதில் இருந்ததை இறக்கி வைத்ததன் பயனாய் மனம் லேசாகியிருக்க தன் பணியைப் பார்க்கச் சென்றான் துடிவேல் அழகர்.
******
சொக்கேசனின் குடும்பம் பரம்பரை பரம்பரையாய் விவசாயத்தை மட்டுமே தொழிலாய் கொண்டவர்கள். ஆனால் மகன்கள் மட்டுமே அவர் பேச்சைக் கேட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்க, பேரப்பிள்ளைகளிடம் அவர் பேச்சு எடுபடவே இல்லை. மூத்த பேரன் நெடுமாறன், தகவல் தொழில்நுட்ப படிப்பை தேர்ந்தெடுத்து, ஐ.டி நிறுவத்தில் பணியாற்ற சென்றுவிட்டான்.
கடைக்குட்டி வீரபத்ரனும் கூட இளங்கலை விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துவிட்டு, கேமிராவும் கையுமாய் திரிய, துடிவேல் அழகர் மட்டும் தான் இளங்கலை விவசாயப் படிப்பை முடித்துவிட்டு, கீரைகள், காய்கறிகள், காளான் வளர்ப்பு போன்றவற்றில் ஆர்வம் காட்டி அதை செயல்படுத்தவும் செய்கிறான். மருந்தில்லா உரமில்லா காய்கறிகளை உற்பத்தி செய்து மதுரை முழுதும் பெரிய காய்கறி கடைகளுக்கு அனுப்புகிறான்.
தனக்குப் பின், தன் பிள்ளைகளுக்குப் பின் விவசாயத்தைக் கையிலெடுத்ததாலோ, தன் பேச்சுக்கு மறு பேச்சு பேசாததாலோ எதோவொரு காரணத்தால் சொக்கேசனுக்கு அழகர் மேல் ஒரு தனிப் பிரியம் உண்டு. இந்த நூற்றாண்டின் இளவட்டமாய் இருந்தாலும் கூட, தாத்தனின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத பிள்ளை தான் துடிவேல் அழகர். தாத்தாவின் கைக்குள்ளேயே வளர்ந்ததாலோ என்னவோ, சொக்கேசனின் பிம்பமாகத்தான் துடிவேல் அழகர் இருந்தான்.
தன் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு அவன் வீடு வந்து சேரும் போது, மணி பதினொன்றைக் கடந்திருந்தது. கையில் கருவிழிக்குப் பிடித்த பிரியாணி பொட்டலம் அடைக்கலமாகி இருந்தது.
“பிரியாணியைப் பார்த்ததும், சண்டையெல்லாம் மறந்துட்டு ஓடி வந்துருவா. பட்டுன்னு கையை நீட்டிப்புட்டேன். சாப்பிட்டாளோ என்னவோ தெரியலை.!” என முணுமுணுத்தபடியே வெளிப்பக்கம் மட்டும் விளக்கெரிந்துக் கொண்டிருந்த வீட்டை நோக்கிப் போனான் அவன்.
கூடத்தில் அவன் அன்னை அரசி அமர்ந்திருந்தார். மெல்லிய விடி விளக்கின் வெளிச்சம் மட்டும் கூடத்தில் மசமசப்பாய் தெரிந்தது.
“இன்னும் தூங்கலையாம்மா! என்னத்துக்கு இம்புட்டு நேரம் முழிச்சு கிடக்குறீங்க? நான் தான் சாப்பிட்டு வந்துருவேன்னு சொன்னேன்ல்ல?”
“அதுக்கு இல்லை அழகர், நேரஞ்செண்டு வர்ர, வயித்துக்கு சாப்பிட்டியோ, இல்லையோன்னு மனசு கிடந்து அடிச்சுக்கிது..! ஓயாமல் வெளியே சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்காதய்யா! எல்லாரும் பொழுதோடேயே வேலையை முடிச்சுட்டு வந்து படுத்துடுறாங்க! நீ மட்டுந்தேன் சாமத்தில் வர்ர! உனக்குப் பிறகு பொறந்தவன், பொழுதன்னைக்கும் கேமிராவைத் தூக்கிக்கிட்டே திரியிறான். ஒண்ணும் உருப்படியாய் செஞ்ச பாடில்லை! எல்லாத்துக்கும் சேர்ந்து நீ மட்டும் பார்க்கிறியேய்யா!” தாயாய் வருத்தப்பட்டார் அரசி.
“ம்மா! நான் மட்டுமா வேலை பார்க்கிறேன். அப்பா, பெரியப்பா எல்லாரும் தானே? சாப்பிடறதுக்கு என்னைக்காவது கணக்கு பார்க்கிறோமா? வயிறு நிறையும் வரை சாப்பிடுறோம் தானே? அதே மாதிரி தான். உழைக்கிறதுக்கும் கணக்கு பார்க்கக் கூடாது. என்னைப் பத்தி கவலைப்படாமல் நீங்க போய் தூங்குங்க! கருவிழி பிரியாணி கேட்டா, நான் அவகிட்டே போய் கொடுத்துட்டு தூங்கப் போறேன்!” எனச் சொல்லி அன்னையை அறைக்கு அனுப்பிவிட்டு, மாடியறை நோக்கிப் போனான் அழகர்.
துடிவேல் அழகர், கருவிழியின் அறையை நோக்கிப் போக, அதே நேரம் தன் அறையின் பால்கனியில் நின்று, யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் நொடுமாறன்.
‘இந்த நேரத்தில் யார்க்கிட்டே இவன் பேசிட்டு இருக்கான்?’ என யோசித்தபடியே கருவிழியின் அறையை நோக்கிப் போனான் அவன்.
“விழி! கருவிழி! தூங்கிட்டியா?”
“கோபமா டி?”
“கதவைத் திற! என்ன வாங்கிட்டு வநேதிருக்கேன் பாரேன்!”
“ஏய் கரு கரு! கதவைத் திறக்கிறியா இல்லையா?”
“அப்பறம் நானே சாப்பிட்டுடுவேன் பார்த்துக்கோ! பொய் சொல்றேன்னு மட்டும் நினைக்காதே டி! உன் கூட சேர்ந்து சாப்பிடலாம்ன்னு சாப்பிடாமலே வந்துட்டேன். கொலை பசியில் இருக்கேன். உன்னோட பங்கையும் சேர்த்து சாப்பிட்டுருவேன் பார்த்துக்கோ!”
எத்தனை முறை கதவைத் தட்டியும் அவள் திறப்பதாய் இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பொறுமை காற்றில் கரைய, எப்போதும் போல், அறைக்கதவின் அருகே திறந்திருந்த ஜன்னலின் வழியே கையை விட்டு, கதவின் தாழ்ப்பாளை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
“ஏன்டி எத்தனை தடவை தட்டுறேன், அப்படி என்னடி கோபம் உனக்கு? இப்போ என்ன உன் காலில் விழணுமா?” எனக் கேட்டபடியே அவளைத் துளாவியவன் அங்கே கண்ட காட்சியில் உயிர் நடுங்க அசையாது நின்றான்.
“என்னடி பண்ணி வச்சிருக்கே? பைத்தியக்காரி!” எனக் கத்தியவன் கையிலிருந்த உணவுப் பொட்டலம் நழுவியதைக் கூட அறியாது, ஓடிச் சென்று அவளைத் தாங்கியிருக்க, அவன் கண்ணிலிருந்து வழிந்த ஒற்றைத் துளி கண்ணீர் அவள் உதிரத்தோடு கலந்திருந்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விளையாட்டு பொண்ணா வாழ்க்கையையும் நிதானமா பொறுப்பா யோசிச்சு முடிவு எடுக்காம தான் சொல்றது தான் சரின்னு நிற்கிறாள் நாயகி.
புரிஞ்சுக்காம பேசவும் கோவத்தில் அவசரப்பட்டு அடிச்சிட்டு ஆற்றாமையோட நிற்கிறான் நாயகன்.
காக்கா விரட்டி என்கின்ற காத்தவராயன். 😂
உங்கள் காரண பெயர்கள் ரசிக்கும் வண்ணம் உள்ளது எழுத்தாளரே.
பிங்க் வோட்கா லேடீஸ் ஐட்டம்மா 🤣🤣
சொக்கேசனின் பிம்பமாக துடிவேல் அழகர் 😍 விவசாயத்தை கையில் எடுத்து திறம்பட நடத்துகின்றான்.
என்ன வினையை இழுத்து விட்டாளோ கரு கரு?!
பொருத்திருந்து பார்ப்போம்.
நன்றி! நன்றிகள் டியர் ❤ உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர் ஆதரவிற்கு அன்பும் நன்றிகளும் 😍💜
அய்யய்யோ என்ன ஆச்சோ விழிக்கு … குடும்பத்துக்குள்ள எவ்ளோ ஒத்துமையா இருக்காங்க … அழகர் அடிச்சது கூட தப்பில்ல … கோபமா ரொம்ப பேசியிருக்க கூடாது …