Loading

அத்தியாயம் 1

 

வருடம் 2002

இடம்: திண்டுக்கல் 

 

மாலை ஐந்து மணி என்ற கடிகாரத்தை அலட்சியம் செய்ய விரும்பாது, அந்த கார்ப்பரேட் அலுவலகம் சோம்பல் முறித்தது.

 

அலைபேசியும் கையுமாக ஜன்னலோரம் நின்றிருந்த அனுராதாவின் விழிகள், அளவுகோலில்லாமல் நேர்க்கோடுகளிடும் மழைத்தாரைகளிடம் இருந்தது. விழிகள் பதிந்த இடத்தில் கவனமில்லையென்று அவளின் சிமிட்டாத இமைகள் சொன்னது.

 

“கங்கிராட்ஸ் அனும்மா!”

 

“…..”

 

“ஹேய் அனு? வாட்ஸ் அப் மேன்?” உடன் பணிபுரியும் மான்வி, தோளைத் தட்ட கவனம் கலைந்தாள் அனுராதா.

 

“என்ன?”

 

“தட்’ஸ் வாட் ஐ’ம் ஆஸ்கிங் ட்டூ. என்ன ஆன்ஸைட்க்கு சான்ஸ் கிடைச்ச சந்தோஷமே உன் முகத்துல இல்ல?”

 

“ப்ச்! என் மொத்த சந்தோஷத்தையும் குழி தோண்டி புதைக்கத் தான் நினைக்கறாங்க.” என்றவளின் முகத்தில் சினத்தின் சாயல்!

 

“என்னடி உலகமே உன்னைத் தள்ளி வச்ச மாதிரி பேசற?”

 

உடன் வேலை செய்பவள் என்பதைத் தாண்டி, மான்வி அனுவுக்கு நல்ல தோழியாதலால் தன் மனக்குமுறலைக் கொட்ட அவளை நாடினாள். “ஆர்‌ யூ ஆவெய்லபிள் இன் தி ஈவ்னிங்? டின்னருக்கு டேபிள் புக் பண்ணட்டுமா?”

 

தோழி எதையோ பேச நினைக்கிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டவளாக சரியெனத் தலையாட்டினாள் மான்வி.

 

அனு வீட்டிற்கு போய் அம்மாவின் ஆலாபனையைக் கேட்டு, சலித்து, அவருடன் வாதம் செய்து, குமுறலுடன் மன அமைதி தேடி, மீண்டும் தோழியைப் பார்க்க அந்த உயர்தர உணவு விடுதிக்கு வந்தாள்.

 

ஒவ்வொரு மேசையும் மஞ்சள் விளக்கொளியை வாங்கி உணவுகளின் தலையில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. சுவரோரமாய் இருந்த மேசையில், சின்னச் சின்ன இதயத் தொங்கல்கள் கொண்ட பிரேஸ்லெட் அணிந்த தன் வலது கையைக் கவலையாய் கன்னத்தில் ஊன்றி, மான்வியின் பதிலைச் செவிமடுத்துக் கொண்டிருந்தாள் அனுராதா.

 

“நல்ல சான்ஸ் அனும்மா. அந்த மஞ்சுவுக்கு உன்னை விட எக்ஸ்பீரியன்ஸ் அதிகம். ஆனா உனக்கு தான் கிடைச்சிருக்குது. திஸ் இஸ் ட்யூ ட்டூ யுவர் இம்மன்ஸ் டேலண்ட் அண்ட் பர்ஃபாமென்ஸ்! போயும் போயும் கல்யாணத்துக்காக இதை மிஸ் பண்ணிடாதே!”

 

“நான் அம்மாகிட்ட நிறைய பேசிட்டேன்; சண்டைப் போட்டுட்டேன். நௌ ஐ’ம் ஃபெட் அப் மானு.”

 

“ப்ச்! என்னடி நீ… அம்மா ஆட்டுக்குட்டினுட்டு… ஃபர்ஸ்ட் கேரியர்; நெக்ஸ்ட் மேரேஜ்னு ஸ்ட்ராங்கா பேசு!”

 

“….”

 

“இப்டி பெருமூச்சுவிட்டு அந்த ஆம்லெட்டையே வெறிச்சு பார்த்துட்டு இருந்தா எப்டி அனு? உன் மூஞ்சியைப் பார்த்தா கல்யாணமா கருமாதியான்னு சந்தேகமா இருக்குதுடி.”

 

‘களுக்’ என சிரித்தாள் அனு. “பேசாம அந்த மாப்பிள்ளை பையனுக்கு கருமாதி செஞ்சிடவா?”

 

“ரிடிகுலஸ்! ஆன்ஸைட் பதிலா ஜெயிலுக்கு போவ!”

 

“முடியல மானு. கொலைகாரி ரேஞ்சுக்கு திங்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன் பாரு.”

 

“இப்டி செஞ்சா என்ன?”

 

“என்ன?”

 

“ஒரு பொண்ணுக்கு கல்யாணம் எதுக்கு செய்யறாங்க?”

 

“வேற எதுக்கு? புள்ளைங்களைப் பெத்து காலம் முழுக்க அதுங்களுக்கு சேவகம் செய்றதுக்கு தானே? சச் அ புரூட்டல் திங்.”

 

“கரெக்ட்! வாட் இஃப் யூ அப்ஜெக்ட் ட்டூ தட் புரூட்டல் திங்?”

 

இவளுக்கு புரிந்தும் புரியாத பாவனையில் கண்கள் பளிச்சிட்டது.

 

*******

 

ஏற்கனவே மனித உடலுக்குள் பொருத்தக்கூடிய கட்டண சில்லுகள் (payment chips) வெளிநாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. மனித உடலுக்குள் பொருத்தக்கூடிய கட்டண சில்லுகள் என்பது உலகத்தின் எம்மூலையிலும் பணம், கடன் அட்டை, பேடிஎம் என எந்த வாலெட்டும் தேவைப்படாத ஒரு பயன்பாட்டு முறை! இந்த உள்வைப்பு நடைமுறையில் உள்ள எவ்விடத்திலும் சில்லுப் பொதித்த உங்கள் கரத்தினை நீட்டி பணம் செலுத்திக் கொள்ளலாம். 2031-40களில் இம்முறை நம் இந்தியாவில் வந்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

வருடம் 2034

இடம்: பெங்களூரு.

கடிகாரம் பிற்பகல் மூன்று மணி என்றுரைக்க, அதனை மறுத்த வானம் மாலை ஆறு மணி என ஏமாற்றியது. மேகங்கள் மேவிய வானிலையை விழிகளில் ரசனையேற்றிப் பார்த்திருந்தாள் சந்தனா. பிரபல துணிக்கடையையொட்டி, தமிழிலும் கன்னடத்திலும் ஸ்ருதி நாட்டிய நிருத்தயாலயா என்று எழுதியிருந்த கட்டிடத்தின் வெளிவாசலில் இருந்த மகிழம்பூ மரத்தினடியில் நின்றிருந்தாள்.

 

அவள் தனக்கு வலப்புறத்தில் சற்று தள்ளி காரை நிறுத்திவிட்டு இறங்காமல் ஓட்டுநர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தவனைக் கவனிக்கவில்லை. ஆனால் அவன் பார்த்தான். ஏறக்குறைய ஐந்து நிமிடங்களாக அவளையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

தலைமுடியை இறுக்கமாகப் பின்னியிருந்தாள். அது ‘ஃப்ரென்ச் ப்ளாட்’ என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. காதில் பெரிய ஸ்டட்! கழுத்தில் ஒன்றுமில்லை. மகிழம்பூ மரத்தினடியில் தூய வெண்மையும் இளநீலமுமான உடையில், அடிக்கும் ஈரக்காற்றில் துப்பட்டா பறக்க நின்று, மேகங்களில் லயித்திருந்தவள் அவன் கண்களுக்கு ஓர் அழகிய மேகத்துணுக்காகவே தெரிந்தாள்.

 

அந்த அழகிய மேகத்தினுள் புதைந்துக்கொள்ளும் ஆசை வந்தது. ‘அழகா இருக்க பொண்ணே!’ என்ற மனம் அவளைச் சொந்தமாய்ப் பார்த்தது. அந்நியப் பெண்ணொருத்தியை இத்தனை நிமிடங்கள் நிச்சிந்தையாய் ரசித்ததோடல்லாமல், அவளைச் சொந்தம் கொண்டாடவும் எண்ணும் மனதினை அவன் கண்டிக்கவே இல்லை.

 

மாறாக, ‘யாரா இருக்கும்?’ என்ற கேள்விக்கான பதிலைத் தேடினான்‌. அவளுக்கு பின்புறம் பார்க்க, ‘ஸ்ருதி நாட்டிய நிருத்தயாலயா’ என்று இரு மொழிகளிலும் எழுதியிருந்த பெயர் பலகைத் தெரிய, ‘டான்ஸ் டீச்சரா இருப்பாளோ?’ என்றெண்ணினான்.

 

அப்போது அவள் அலைபேசி அழைக்க, இவன் மெதுவாக காரைவிட்டு கீழிறங்கி நின்றுகொண்டு, தன் அலைப்பேசியை உபயோகிக்கும் சாக்கில் அவளின் உரையாடலைக் கவனிக்கலானான். சர்வ சத்தியமாக ‘ஒட்டுக் கேட்கிறான்’ என்றே சொல்ல வேண்டும்.

 

“ஹான்! வந்துட்டேன்க்கா. அவளைக் கூப்பிடத்தான் வெளியே நிற்கறேன். இன்னும் ஃபைவ் மினிட்ஸா? ஓகே ஓகே! ஐ’ல் பீ வெய்ட்டிங்.”

 

‘அட! தமிழ்ப் பெண்! யாரையோ அழைக்கக் காத்திருக்கிறாள். ஆக, அவள் இங்கே டீச்சரில்லை.’

 

“ஆ ஆ… அதெல்லாம் ஒண்ணும் நனைய மாட்டோம். முதல்ல மழை வரட்டும். அப்புறம் பார்க்கலாம்.” சிறு திருட்டுத்தனமும் அலட்சியமுமாக அவள் குரல்.

 

‘மழைக் காதலி போலும்!’

 

“ஹிஹி… ஆமாவா? சரி அப்போ நிஜமாவே மழைல நனையாம வர்றோம்.” பரவசமும் புன்னகையுமாய் அவள் முகம்.

 

‘மறுமுனையில் இவளுக்கு பிடித்தமான எதையோ சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஒரே நொடியில் நல்ல பிள்ளையாக்கும் வல்லமைப் படைத்ததென்றால், அப்படியென்னப் பிடித்தமாக இருக்கும்?’

 

இவன் சிந்திக்கும் சில நொடிகளுக்குள் அவள் வேறெதோ சொல்கிறாளே! “நோ! எனக்கு அருண் தான் வேணும்.”

 

இவனின் அலைப்பேசி தவறி தரையை முத்தமிட்டது. சுதாரித்து எடுத்து நிமிரும்போது முகத்தில் பெரும் ஏமாற்றம். ‘அருண்?’

 

“அதெல்லாம் தெரியாது. எனக்கு அருண்தான் வேணும்.”

 

இவனுள்ளம் அடித்துக்கொண்டது. ‘ஹூ இஸ் தி ஹெல்?’

 

“மாட்டேன்க்கா. சின்ன வயசுலயே அருணுக்குதான் இந்த சந்தனான்னு எழுதி கொடுத்துட்டேன். ஒருநாளும் அதை மாத்த முடியாது. ஸாரிக்கா.” எனத் தீவிர பாவனையில் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.

 

“சந்தனா.” பலவீனமாய் உச்சரித்தான் இவன்.

 

“ஓகே, திஷி குட்டிக்கு க்ளாஸ் முடிஞ்சிடுச்சு போல… நான் போய் பார்க்கறேன்.” துப்பட்டாவின் நுனியில் இவனிதயத்தையும் சேர்த்து இழுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

 

மற்ற பெண்களைப் பார்ப்பது போல் போகிற போக்கில் பார்த்துவிட்டு கடந்து செல்லாமல், இவன் வாழ்க்கையில் முதல்முறையாக நின்று ஒருத்தியை ரசிக்கத் தோன்றியிருக்கிறது. அவளால் மனதின் ஒரு மூலையில் சிறு சாரல் அடித்திருக்கிறது. முதன்முதலாக இந்த ‘சந்தனத்’ தென்றலுக்கு இவன் மனதின் நாணல்கள் தலையசைத்து வரவேற்பு தந்திருக்கின்றன.

 

ஆனால் என்ன செய்வது? அந்த சந்தனத் தென்றலுக்கு இவன் உள்ளத்து வெக்கையைத் தணிக்கும் எண்ணமில்லையாம்! எவனோ அருணாம்! ஏக்கத்தைச் சுமந்த நெடுமூச்சொன்று வெளிப்பட்டது. “ப்ச்!”

 

அழகையும் தாண்டி ஏதோவொன்று அவளிடம் தன்னை ஈர்ப்பதாக உணர்ந்தான். முணுமுணுவென்று வலியெடுத்த மனத்தைச் சமாதானம் செய்து கொண்டிருக்கையில், வரிசை பிறழ்ந்த பற்களில், ஓரத்தில் தெற்றுப் பல் தெரிய புன்னகைத்தவாறு யாரோ ஒரு சிறுமியை அழைத்து வந்தவள், தன் இரு சக்கர வாகனத்தில் சின்னவளை ஏற்றிக் கொண்டிருந்தாள்.

 

வரிசைப் பிறழ்ந்த பற்களில் சிரிப்பதும் ஒரு முகத்திற்கு இத்துணை சோபையைத் தருமா என்ன?

 

வியந்து நின்றவன், ‘அந்த அருண் ரொம்ப குடுத்து வச்சவன்.’ என்று எண்ணமெழுந்த அடுத்த க்ஷணத்தில் அவள்புறம் அலைந்த பார்வையை அகற்றி நகர்ந்தான்.

 

அவன் அக்னிஸ்வரூப்! பிரபலக் கட்டண சில்லுகளைத் (payment chip) தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளி. இப்பயன்பாட்டு முறை இந்தியாவில், குறிப்பாக தென்மாநிலங்களில் புதியது என்பதால் நிரம்பவே சறுக்கல்களையும் சவால்களையும் சந்தித்து, சமாளித்து, தற்போது வெற்றி கோட்டின் மேல் வந்து நிற்கும் ஓர் இளம் தொழிலதிபர். வயது முப்பது. திருமணமாகவில்லை. தாய், தந்தை மற்றும் தங்கை மேல் உள்ள பாசத்தையும் தாண்டி, பாட்டியின் மேல் அதீத பிரியம்.

 

மௌனமும் கம்பீரமுமே அக்னிஸ்வரூபனின் பிரதான அடையாளங்கள். இளம் பெண்களை வசீகரிக்கும் தோற்றத்தை உடையவனை, முதன்முதலாக வசீகரித்திருக்கிறாள் ‘அருணை’ விரும்பும் சந்தனா!

 

கருத்து அடர்ந்திருந்த சிகையை இடக்கையால் கோதிக்கொண்டவன், அலைப்பேசி அழைக்க, நாட்டிய நிருத்தயாலயாவிற்கு அருகேயிருந்த அந்த பிரமாண்ட துணிக்கடைக்குள் நுழைந்தவாறு அழைப்பை ஏற்றான். “எக்ஸாம் எப்டி பண்ண?” ஆண்மைத் ததும்பும் குரல்.

 

“எடுத்தவுடனே எக்ஸாமைப் பத்தி தான் கேட்கணுமா?” மறுமுனை சிணுங்கியது.

 

“பின்ன? நீ கேட்ட மாதிரி ஷராரா வாங்க நேர்லயே வந்திருக்கேன். எக்ஸாம் நல்லா பண்ணிருந்தா பெஸ்ட்டா வாங்கணும். இல்லைன்னா…”

 

“இல்லைன்னா?”

 

“அப்பாகிட்ட சொல்லிட வேண்டியதுதான்.”

 

“அண்ண்ணா!”

 

“ஏண்டி கத்தற? எப்டி எழுதிருக்கே?”

 

“நல்லாதான் செஞ்சிருக்கேன். அப்புறம் நீ எப்பவும் எனக்கு பெஸ்டா தான் வாங்குவ’ன்னு தெரியும். ஆனா நான் இப்போ கால் பண்ணினது ஷராராவுக்காக இல்ல.”

 

“வாட் எல்ஸ்?” விடைத் தெரிந்தே கேட்டான்.

 

“……..” மறுமுனை தேங்கி நின்றது.

 

“பிரகதி!”

 

“அண்ணா, பிஜி முடிச்சதும் கல்யாணம்னு அப்பா சொன்னார்தானே? இப்போ ஏன் இவ்ளோ சீக்கிரம் பார்க்கணும்? அட்லீஸ்ட் கேம்பஸ்ல செலக்ட் ஆனதுக்காகவாவது கொஞ்ச நாள் வேலைக்கு போறேனே…”

 

இது ஏற்கனவே அவள் கேட்டதுதான். அப்பாவிடம் ஏதேனும் காரியமாக வேண்டுமென்றால் அண்ணன் காலைப் பிடிப்பாள்.

 

“ஹேஹேய்! உன்னை வீடு கடத்தினாதான் என் ரூட்டு க்ளியர் ஆகுமாக்கும்.”

 

“இல்லைன்னா மட்டும் நீ சம்சாரியாவா ஆகப் போற? அம்மா பொண்ணு பார்க்கறேன்னு சொன்னாலே நோ சொல்றவன்தானே? அண்ணா… ப்ளீஸ்… என் விஷயத்தைக் கொஞ்சம் கன்சிடர் பண்ணேன்…”

 

அவளின் கெஞ்சலில் இவனும் விளையாட்டை விடுத்து பதிலளித்தான். “ப்ரூ காஃபி! இதைப் பத்தி நாம ஆல்ரெடி நிறையப் பேசிட்டோம். அப்பா பாட்டி சொல்றதைத்தான் கேட்பார். ஐ’ம் ஹெல்ப்லெஸ்!”

 

“எல்லா அண்ணனும் தங்கச்சி ஆஃபர் பண்றதை நிறைவேத்தி வைக்கறாங்க. ஆனா இங்கே எனக்கு வாய்ச்சது மட்டும் வீட்ல இருக்க அந்தக் கிழவிக்கே சப்போர்ட் பண்ணுது.” என பொரிந்துத் தள்ளினாள் தங்கை.

 

“டோண்ட் ஆக்ட் சைல்டிஷ் பிரகதி! கல்யாணம் பண்ணிக்கிட்டு வேலைக்கு போயேண்டி!”

 

“எல்லாம் எனக்குத் தெரியும். மூடிட்டு வைடா ஃபோனை!”

 

சடுதியில் கெஞ்சலில் இருந்து ஏகவசனத்திற்கு மாறியவளை நினைத்து இவனிதழ்களில் புன்னகை அரும்பியது.

 

பிரகதி, அக்னியின் குட்டித் தங்கை. இருவருக்கும் கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளி. இன்றுதான் பொறியியலில் தன் இளங்கலைப் படிப்பை முடித்திருக்கிறாள். ஒற்றைப் பெண் ஆதலால் அவளுக்கு விரைவில் திருமணத்தை முடித்தால், அடுத்து அக்னிக்கு பார்க்கலாம் என்பது வீட்டு பெரியவர்களின் எண்ணம். அதன்படி பிரகதிக்கு ஏற்கனவே மாப்பிள்ளைத் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டது. அதில் இவர்களுக்கு பிடித்ததாக ஒரு வரன் அமைந்துவிட்டதில், இரண்டு வருடங்களுக்கு பின்னர் என்று சொன்ன திருமணத்தை இப்போதே பேசி முடித்துவிடலாமென முடிவெடுத்துவிட்டனர் வீட்டினர்!

 

படிப்பை எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்! நல்ல மாப்பிள்ளை இப்போது விட்டால் பின்னர் கிடைக்கமாட்டான் என்பது அவர்களின் வாதம்! பிரதி வாதத்திற்கு அண்ணனைக் கைக்குள் போட்டுக்கொள்ள நினைத்தாள். பாவம் அவளின் நினைப்பு பாழ்!

 

அக்னி வியாபார நோக்கில் அடுத்த வாரம் ஸ்வீடன் செல்லவிருப்பதால், அதற்கு தனக்கு தேவையான பொருட்களும் பிரகதிக்கான உடையும் வாங்கிக்கொண்டு வெளியில் வர, இருளைக் கவ்விக் கொண்டிருந்த வானம் கோபமாய் மேக முட்டைகளை உடைத்துவிட்டுக் கொண்டிருந்தது.

 

இவன் கண்கள் தானாக மகிழ மரத்தினடியை நோக்கியது. ‘அவ நனையாமப் போயிருப்பாளா?’

 

‘ச்ச! வேறொருவனுக்கு சொந்தமான பெண்ணின் மேல் எதற்கித்துணை முக்கியத்துவமும் கவலையும்?’ தறிக்கெட்டோடிய மனதினை அடக்கியவன் விடுவிடுவென இறங்கிப் போய், காரில் ஏறி உயிர்ப்பித்தான்.

 

மகிழ மரத்தின் மேலிருந்து அக்னிஸ்வரூபனையே தலைசாய்த்துப் பார்த்திருந்த மழைக் குருவியொன்று சிறகுலுக்கிக் கொண்டது.

 

உடைந்த வார்த்தையில்

உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்…

என் ரத்த குழாயில் புகுந்துகொண்டு…

சத்தம் போடுகிறாய்…

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. Marvellous starting ✨.
    வார்த்தைகள் அருவி போல மனதை நனைத்தன.
    2002 திண்டுக்கல் 2034 பெங்களூர் யூகிக்க இயலாத வண்ணம் உள்ளது.
    அடுத்தடுத்த நிகழ்வுகளை அறிய ஆவலாக உள்ளது.
    வாழ்த்துகள்.

  2. கடைசி பாடல் சூப்பர் … நல்ல கதாபாத்திர பெயர்கள் … ரெண்டு கதை ஓடுது … ப்ரூ காப்பி நல்ல செல்ல பெயர் … அக்னியோட காதலை அழகா சொல்லியிருக்கீங்க ❤️❤️