
தேவா குழம்பிய முகத்துடன் ஆராதனாவை பார்க்க, அவள், “அந்த மண்ணோட அடிப்பரப்புல பாம் செய்யுறதுக்கு தேவையான எல்லா கெமிக்கலும் இருக்கு. அதோட, நார்மலா செய்யுற பாமை விட, இதோட வீரியம் மூணு மடங்கு இருக்கும்.” என்றதும், ஆண்கள் மூவருமே திகைத்து விட்டனர். அம்முவிடம் இருந்து தப்பித்து, வெளியில் சென்ற விஷ்வாவை, “டேய் நில்லுடா…” எனக் கையைப் பிடித்து நிறுத்தியவளிடம், “சே ஒரு ஆம்பளை பையனைக் கையைப் பிடிச்சு இழுக்குறியே உனக்கு வெட்கமா இல்ல…?” என்று சிலுப்பினான். அதில், “அட பன்னாடை நாயே” என்று முறைத்தவள்,
“இன்னொரு தடவை நீ ஏதாவது கடிச்ச, நான் உன்ன கடிச்சு வச்சுடுவேன்.” என அவன் முகத்தருகில் வந்து அவனை மிரட்டி விட்டுப் போக, அவள் அருகாமையில் தனக்குள் என்ன மாற்றம் நிகழ்கிறது எனப் புரியாமல் பேந்த பேந்த முழித்தவன், அவளைத் தொடர்ந்து உள்ளே சென்று அவர்கள் பேசுவதை கவனித்தான்.
தேவா “காட், அந்த மண்ணு இவ்ளோ பவர்ஃபுல் ஆனதா? அப்போ, இதைப் பத்தி கவர்ன்மெண்ட் கிட்ட இன்ஃபார்ம் பண்ணியா?” எனக் கேட்டான்.
ஆரு, “ஊஃப்! நாங்க கண்டுபிடிச்சதை வெளியில சொன்ன தால தான் இவ்ளோ பிரச்சனை. எங்க ஹெட் ஆஃபிசர்கிட்ட இதைப் பத்தி சொன்னோம். அவரு டைரக்ட்டா வருவாய் துறை மினிஸ்டர் ராஜாங்கன் கிட்ட இந்த விஷயத்தை சொல்லச் சொன்னாரு…
நாங்களும் அந்த ஆளைப் பார்த்துச் சொன்னோம். அந்த ஆளு, ‘அந்தப் பேப்பர்ஸை என்கிட்டே குடுத்துட்டு போங்க, நான் சென்ட்ரல்ல மூவ் பன்றேன்’னு சொன்னாரு. எங்களுக்கு பாம் அது இதுன்னு தெரியவும், கொஞ்சம் பயம் வந்து, அவர் சொன்ன மாதிரி குடுத்துட்டு வந்துட்டோம். ஆனால், அதுக்கு அப்பறம் தான், நாங்க பண்ணுனது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு புரிஞ்சுது…” என்றாள் எரிச்சலாக.
அருண், “கடவுளே! உங்களுக்கு நம்புறதுக்கு வேற ஆளே கிடைக்கலையா? போயும் போயும் அந்த ஆளைப் போய் நம்பி இதைச் சொல்லிருக்கீங்க… அவன் இந்நேரம் இதை தீவிரவாதிகளுக்கு வித்துருப்பானே?” என்றான், குரலில் கோபத்தை தேக்கி.
தமி, “உனக்கு எப்படி தெரியும்? அவன் இப்படி தான் பண்ணுவான்னு!” என ஆச்சர்யமாய் கேட்டிட, சில நொடி திணறியவன், “அது அது, அந்த ஆள் மேல ஏற்கனவே நல்ல பேர் கிடையாது. இதுல அவன் கையில பதவி வேற இருக்கு. இது போதாதா? அவன் என்ன பண்ணுவான்னு கெஸ் பண்ண?” என்றான்.
“ம்ம் ஆமா…” என ஒப்புக் கொண்டவள், “அவன் எக்ஸாக்ட்டா இப்படி தான் பண்ணுவான்னு உனக்கு எப்படி தெரிஞ்சுச்சு…?” என்று மீண்டும் கேட்க, அவன் கடுப்பாகி, “ஆமா என்கிட்ட நல்லா அறிவாளித்தனமா பேசு! ஆனால், அந்த லூசு பயல்கிட்ட ஏமாந்துட்டு வா… லூசு” என்றதில், “சீ ப்பே” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
நிஷாந்த், “அப்பறம் என்ன ஆச்சு? உங்களை எதுக்கு சஸ்பெண்ட் பண்ணாங்க?” எனக் கேட்டதும், ஆராதனா பெருமூச்சு விட்டு, “அந்தப் பேப்பர்ஸை மினிஸ்டர்ட்ட குடுத்துட்டு வந்த ஒரே வாரத்துல, அந்த இடத்தையும் அதுக்கு பக்கத்துல இருக்குற குக்கிராமத்தையும் அந்த மினிஸ்டர் விலைக்கு வாங்கியிருந்தான். நாங்க அப்பவும், அவன் ஏதோ நல்லது பண்ணத் தான் அப்படி பண்றான்னு நினைச்சோம்.
ஆனால், அவன் இங்க இருக்குற அந்த மண்ணை தீவிவாதிங்களுக்கு வித்து, நம்ம நாட்டுக்கு எதிராவே ஆயுதம் தயாரிக்க ஹெல்ப் பண்ணான். அது போக, அந்த மண்ணு தப்பானவங்க கையில போனா, நம்ம நாடே சுடுகாடா ஆகிடும். ஒரு சில பச்சை துரோகிங்க, நம்ம நாட்டுக்கு எதிரா இருக்குறதால நம்ம நாடே பாதிக்கப்படும்.” என்றாள் உணர்ச்சிப் பெருக்குடன்.
தேவா, “இதைப் பத்தி சி.எம்க்கு உங்க டிபார்ட்மென்ட்ல இருந்து யாராவது தெரியப்படுத்துனாங்களா?” எனக் கேட்க, அவள், “ப்ச் இல்ல, எங்ககிட்ட இருந்ததே அந்த ஒரு எவிடென்ஸ் தான். அதையும் முட்டாள்தனமா அவன் கிட்ட குடுத்துட்டோம். அது போக, சி.எம்கிட்ட அதைக் கொண்டு போகணும்னா கூட, அந்த ரிசர்ச் பேப்பர் வேணும். அண்ட், சில அரசியல் முதலைங்க, சி.எம் காதுக்குக் கொண்டு போகவும் விடமாட்டாங்க. அதான் ரகசியமா பி.எம்கிட்ட இதை மூவ் பண்ணலாம்னு நினைச்சோம்…” என்றவள் மேலும் தொடர்ந்து,
“மினிஸ்டர் ராஜாங்கன் இப்படி பண்றாருன்னு தெரிஞ்சு, நாங்க அவன்கிட்ட சண்டை போட்டோம். ஆனால், அந்த ஆளு அடுத்த நாளே, நாங்க ஊழல் பண்ணிட்டதா சொல்லி எங்களுக்கு யோசிக்க கூட டைம் குடுக்காம எங்களை ‘சஸ்பெண்ட் ‘பண்ணிட்டான். எங்க ஹெட் ஆஃபிசர் தான், எங்க மேல இருந்த நம்பிக்கையில, மினிஸ்டரோட ப்ரெஷரையும் மீறி, இதை இன்னும் அஃபிஷியலா அனௌன்ஸ் பண்ணாம இருக்காரு.
அதோட, ராஜாங்கன், இன்னும் 15 நாள்ல இங்க இருக்குற மண்ணை எல்லாம், கடத்த போறான்னு எங்களுக்கு நியூஸ் வந்துச்சு… அதுக்குள்ள நாங்க அந்த ரிசர்ச்ச முடிச்சு, ‘பி.எம்’ க்கு சென்ட் பண்ணனும் இல்லைன்னா, தீவிரவாதிங்க பண்ணப்போற தாக்குதல், புல்வாமா தாக்குதலைவிட, இருபது மடங்கு சேதாரத்தை கொடுக்கும்…” என்று, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
அவள் சொன்னதில் அதிர்ந்த விஷ்வா, “நீங்க அப்போவே ரிசர்ச் பேப்பர்ஸ எடுக்க ட்ரை பண்ணலையா?” எனக் கேட்க,
“அந்த ராஜாங்கனோட ஆளுங்க எங்களை ஃபாலோ பண்ணிகிட்டே இருந்தாங்க… அவங்க முன்னாடி நாங்க நார்மலா இருக்குற மாதிரி காட்டிக்க வேண்டியதா இருந்துச்சு. அதான் முதல்ல அமைதியா இருந்தோம். அவங்க எங்களை ஃபாலோ பண்றதை நிறுத்துனதுக்கு அப்பறம் தான், நாங்க இங்க வர ‘பிளான்’ பண்ணோம். அதுக்குள்ள தான் நீங்க எங்களைக் கடத்தி சொதப்பிட்டீங்க, அதுக்கு அப்பறம் உங்களை வச்சு அந்தப் பேப்பரை திருடச் சொன்னேன், ஆனால் அவன் அதை அழிச்சுட்டான்.” என்று கடுப்பானாள்.
அதில் ஆண்கள் மூவரும், “அடப்பாவி, கொஞ்சம் கூட யோசிக்காம பேப்பரை கிழிச்சுட்டியேடா!” என்று தேவாவை பார்க்க, அவனோ, “ஐயோ! இவளுக்கு மட்டும் நம்ம தான் கிழிச்சோம்னு தெரிஞ்சா, சாமி ஆடுவாளே” என்று திருதிருவென விழித்தான்.
முதல் முறை, தவறு செய்து விட்ட குழந்தையாகப் பாவமாக முகத்தை வைத்து, ஆருவை பார்த்துக் கொண்டிருந்த தேவாவை பார்த்து, மூவருக்குமே சற்று ஆச்சர்யத்துடன் சிரிப்பு தான் வந்தது ‘மகனே நீ செத்தடி!’ என நினைத்து.
இதில் விஷ்வா வேறு, “யார் யாரோ செஞ்ச பாவம்! நாட்டுக்கு ‘பாமா’ல வந்துச்சு சோகம்!” என்று தேவாவை பார்த்து நக்கலடிக்க, அவன் “மூடு” என்றான் சைகையில்.
அவன் விடாமல், “நீ நினைச்ச நாட்டுக்கு நல்லது! இப்போ அந்தப் பேப்பர் செல்லாது!” என்று ஆருவிடம் மொக்கை போட்டதில், அவள், “அம்மு இன்னுமா நீ இவன் நாக்கை கட் பண்ணாம இருக்க…?” என்று மென்னகையுடன் கேட்க,
“இவன் நாக்கை கட் பண்ணாலும், சைன் லேங்குவேஜ்ல யாவது மொக்கை போடுவான்…” என்ற அம்மு, ‘பேசுன கடிச்சு வச்சுடுவேன்’ என்று கடிப்பது போல் பாவனை செய்ய, அதில் மிரண்டவன் பேச்சை மாற்றினான்.
“மினிஸ்டர் ஆளுங்க ஃபாலோ பண்ணுனா என்ன… அவனுங்க கண்ணுல மண்ணை தூவிட்டு அப்போவே ரிசர்ச் பண்ணிருக்கலாம்ல” என்று அங்கேயே நிற்க…
வைஷு, “புரியாமல் பேசாத விஷ்வா, நாங்க உடனே ரியாக்ட் பண்ணிருந்தா… அந்த மினிஸ்டர் எங்களைப் போட்டுத் தள்ளிருப்பான். அதோட எங்க சஸ்பென்ஸனும் வெளில பரவி இருக்கும்.
முதல்ல எங்க அப்பா, எங்களைக் கொலை பண்ணிட்டு தான் யோசிக்கவே செய்வாரு. அந்த அளவு நாட்டு மேல அவ்ளோ பற்று. ஆனால், எந்த ஆதாரமும் இல்லாம அவருக்குக் கூடப் புரியவைக்க முடியாது.” என முத்துவேல் பற்றிப் பேசியதும், நிஷாந்த் முகம் சுருங்கினான்.
அருண், “ஆமா உங்க அப்பா தான், எதையும் யோசிக்க மாட்டாரே! யாரு எக்கேடு கெட்டு போனாலும், அவருக்கு அவரோட கௌரவமும், கோபமும் தான முக்கியம்.” என்றதும், வைஷுவுக்கு கண் கலங்கியது.
ஆனாலும், அருணிற்கு வைஷுவின் மேல் கோபம் குறையவே இல்லை. இத்தனை வருடமாக நிஷாந்த் படும் அவஸ்தையை உடன் இருந்து பார்ப்பவன் ஆயிற்றே.
“ஓ அழுகிறீயா? நீ ஏன் மா அழகுற? உனக்கென்ன, தொலைஞ்சு போன அத்தை பையனைக் கண்டு பிடிக்கிறது, உன் படிப்பு சம்பந்தப்பட்ட ஒரு ஆர்வம் அவ்ளோதான். ஆனால் உன் நொத்தை பையனுக்கு, அது தான் வாழ்க்கையா போய்டுச்சு.” என்று கேலியுடன் வார்த்தைகளைக் கொட்ட, நிஷாந்த் “அருண்” என அதட்டினான்.
வைஷு , யாரையும் பார்க்காமல் அழுது கொண்டே சென்றதில், நிஷாந்த், அவள் சென்ற திசையை பாவமாகப் பார்த்து அவள் பின்னே செல்ல எத்தனிக்க, அருணும் விஷ்வாவும், ‘போடா! போய்தான் பாரேன்!’ என்ற ரீதியில் அவனை ஒரு பார்வை பார்த்தனர். அதில், அவன் தான் அவர்களிடம் கண்களாலேயே கெஞ்சி கொண்டிருந்தான்.
தமி, “ப்ச் அருண், அவள் மட்டும் என்ன இத்தனை வருஷமா சந்தோசமாவா இருந்தா? பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேச மாட்டியா?” என்க,
“அதை உன் பிரெண்டு அப்பாவுக்கு சொல்லிக்குடுங்க… அந்த ஆளு எப்படி இவனை அனாதைன்னு சொல்லலாம்? அட்லீஸ்ட் உங்க பிரெண்டாவது அவனுக்குச் சப்போர்ட் பண்ணிருக்கணும்ல?” என்று துள்ள,
அம்மு, “எங்க சப்போர்ட் பண்ண? அதுக்குள்ள தான் அவ அப்பா அவளை ரூம்ல அடைச்சு போட்டு, கையை அறுத்துகிட்டுன்னு என்னன்னவோ ஆகிடுச்சே.” என்றாள் புரிய வைக்கும் நோக்கில்.
விஷ்வா, “கையை அறுத்துகிட்டு நல்லா தான இருந்தா? அப்பறம் ஆச்சு, அவள் அப்பா கிட்ட சொல்லிருக்கணும்ல?” என்று காரமாகச் சொன்னதில்,
அம்மு, “உனக்குத் தெரியுமா? அவள் நிஷாந்தை அதுக்கு அப்பறம் தேடி அலைஞ்சாள். ஆனால் அவனும் கிடைக்கல, அதுக்கு அப்பறம் அவள் அப்பா கிட்ட பேசுறதை மொத்தமா நிறுத்திட்டா… அவள் வீட்டுல அவள் சாப்புடுறது கூடக் கிடையாது… சும்மா புரியாம ரெண்டு பேரும் அவளை ப்ளேம் பண்ணாதீங்க” என்று முறைக்க,
ஆரு, “ஓ காட்! ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்… உங்க காதல் காவியத்தை எல்லாம் அப்பறம் வச்சுக்கோங்க. இப்போ முக்கியம், அந்த மண்ணை டெஸ்ட் பண்ணி, ஆதாரம் ரெடி பண்றது தான்.” என்றாள்.
தேவா, “மண்ணை எடுத்துட்டா டெஸ்ட் ரிசல்ட் வர எவ்ளோ நாள் ஆகும்?” எனக் கேட்க, அவள், “ம்ம் ஒரு மூணு நாள்ல வந்துடும்!” என்றதும், “சரி வா. அந்த மண்ணை எடுத்துட்டு வரலாம்.” என அவளை அழைத்தான். அதில் அவள் “எப்படி போறது? அதான் அந்த இடத்தைச் சுத்தி ஆளுங்க இருக்காங்களே. அதனால தான நம்ம முள்ளு பாதையில போறோம்.” என்றாள் குழப்பமாக.
தேவா, “யாருக்கும் தெரியாம உன்னை மண்ணை எடுக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு… எந்த மண்ணை எடுக்கணும்னு உனக்குத் தான் தெரியும் அதான் உன்னையும் கூப்பிடுறேன்.” என்றவன், அருண் விஷ்வாவிடம், “இந்நேரம் அந்த மினிஸ்டர் இவங்களை தேட ஸ்டார்ட் பண்ணிருப்பான்… நிஷிதாவை இங்க வைக்கிறது சேஃப் இல்ல. ரெண்டு பேரும் காட்டுக்கு மறு பக்கம் ரெடி பண்ணிருக்குற மர வீட்டுல அவளைக் கட்டிப் போட்டுட்டு வாங்க…” என்று உத்தரவிட்டு, நிஷாந்திடம் “அவளைப் பாரு” என்று வைஷுவின் அறையைக் கண்ணைக்காட்ட, அவன் மற்ற இருவரையும் பார்த்தான்.
தேவா, “போ” என்று அழுத்திச் சொல்லியதில், அவன் அடுத்த நொடி வைஷுவின் முன் நின்றிருந்தான்.
ஆருதான், ‘இவன் நல்லது பண்றானா? கெட்டது பண்றானா? ஒருவேளை இவனும் அந்தத் தீவிரவாதில ஒருத்தனா இருப்பானோ? நம்மல அங்க கூட்டிட்டு போய் மினிஸ்டர் ஆளுங்க கிட்ட ஒப்படைக்க போறானோ?’ என வெகுவாகச் சிந்தித்தாள்.
யோசித்து கொண்டிருந்த ஆருவை இழுத்துக்கொண்டு வெளியில் சென்றவனிடம், “டேய்… என்ன பண்ற? இப்போ போனா அவன் ஆளுங்க” என்னும் போதே, “உஷ்ஷ்! உனக்கு ரிசர்ச் பண்ணனுமா வேணாமா?” என்று கேட்டான் அழுத்தமாக. அவள் “பண்ணனும் தான். ஆனால், உன்னை நம்பி, நான் எப்படி வர்றது? நீயும் அவனோட கூட்டாளியா இருந்தா?” என்றாள் கேள்வியாக.
அவன் அவள் கையை அழுத்தமாகப் பிடித்து, “புல் ஷிட்! அவனும் நானும் ஒன்னாடி? தேவை இல்லாம ஏதாவது பேசி என்னை டென்ஷன் ஆக்குன… நேத்து நடு காட்டுல விட்டுட்டு போன மாதிரி, இன்னைக்கு அந்த மினிஸ்டர் கிட்டயே விட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்…” என்று சீறினான்.
ஏற்கனவே முந்தைய நாள் அவன் கையை அழுத்தியதில் அவள் மணிக்கட்டு ரத்தம் கட்டி போய்த் தான் இருந்தது. இதில், இப்போதும் அவன் அழுத்தியதில் அந்த இடம் கன்றி சிவந்து விட, வலியில் அவளுக்குத் தன்னிச்சையாகக் கண்ணில் நீர் கலங்கி நின்றது.
“விடுடா வலிக்குது. நீ ரொம்ப ஓவரா தான் போற… நீ ஒண்ணும் எனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண வேணாம். போ” என உதட்டைப் பிதுக்கிச் சொல்லி விட்டு, அவனைத் தாண்டிச் செல்ல, அவனுக்குத் தான் என்னவோ போல் ஆகிவிட்டது.
சட்டென்று அவள் அருகில் சென்று, “நம்ம இந்தப் பக்கம் போகணும்.” என்று எதிர் திசையைக் கை காட்ட,
“நான் எங்கயோ போறேன். நீ போயிடு!” என்று வம்படியாக நடந்தவளுக்கு தான், தனக்கு என்ன ஆனது என்றே புரியவில்லை.
சாதாரணமாய் அவள் எதற்கும் அழுகும் ரகம் கிடையாது தான். ஆனால், இவன் சிறு பேச்சும் செயலும் தன்னை ஏன் இவ்வளவு பாதிக்கிறது? என்று குழம்பிட, “இசை” என மீண்டும் அவள் கையைப் பிடித்தான், இம்முறை மென்மையாக. அவள் “கையை விடு” என்றதும், “சாரி…” என்றான் தலையைக் குனிந்தபடி,. அவள் அப்போதும் முகத்தைச் சுருக்கி கொண்டு நிற்க, “சாரி இசை… உன்ன ஹர்ட் பண்ணனும்னு நான் நினைக்கல. நீ பேசுறது என்னை ரொம்ப கோபப்படுத்துது… பெட்டர் நீ அமைதியா இருந்தா, உன் வேலையும் முடியும் என் வேலையும் முடியும். வா!” என அவளை அழைத்துக்கொண்டு செல்ல, அவனின் மென்மையான பேச்சு அவளுள் ஒரு சாரலை கொடுத்ததை அவளால் தடுக்க இயலவில்லை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
1
+1
1

