Loading

ஆறிப்போன தேநீரையே ஆராய்ச்சி செய்தபடி அமர்ந்திருந்தான் அகில். அவனது முதுகில் பின்னிருந்து அடித்த மிதுனா, “என்னடா பீல்டு ஒர்க் போகாம இங்க வந்து உக்காந்துருக்க” எனக் கேட்டபடி அவன் எதிரில் அமர்ந்தாள்.

“இப்பலாம் பீல்டுஒர்க் போறதை விட, சத்யா சாருக்கு போட்டோ ஷூட் நடத்தலைன்னா கையெல்லாம் நடுங்க ஆரம்பிடுச்சுது மிது” என தீவிரமாய் உரைக்க,

“டேய் நாயே… வெளில வெயில்ல சுத்துறதுக்கு சோம்பேறித்தனம் பட்டுட்டு, சொகுசா ஏசில உக்காந்து போட்டோஷுட் நடத்த மார்க்கெட்டிங் பண்ணிட்டு இருக்கியா” என முறைத்தாள்.

“ஹி ஹி குறும்ம்பு!” என அசட்டுச் சிரிப்பை பொழிந்தான் அகில்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் நேரம் அவர்களுடன் இணைந்தான் விதுரன்.

“என்ன கைஸ் பண்ணிட்டு இருக்கீங்க” எனக் கேட்கும்போதே அவனது அலைபேசி ஒலிக்க, அதனை எடுத்துப் பேசியவன் “நாட் இன்ட்ரஸ்டட்” என சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

“யாருடா” மிதுனா வினவ,

“கொஞ்ச நாள் முன்னாடி, வேற கம்பெனிலயும் அப்ளை பண்ணிருந்தேன். இப்ப கால் பேக் பண்றாங்க. இப்ப இங்க இருக்கலாம்னு தோணுது” எனத் தோளை குலுக்கிக் கொண்டவனை வியப்பாய் ஏறிட்டவள்,

“பாருடா. இப்பவாவது உனக்கு அம்ரி மேடமோட அருமை புருஞ்சுதே” என்றதில், அவனிடம் கனத்த அமைதி.

அவனது தமையனுடன் மீண்டும் இணைந்திருக்க கிடைத்திருக்கும் வாய்ப்பை விட இயலாமல் அல்லவா இங்கேயே இருக்கிறான். மற்றபடி, இதயாம்ரிதாவின் மீதிருக்கும் பெரும் ஆத்திரம் அத்தனை சீக்கிரம் அணைந்து விடுமா என்ன?

சரியாக அப்போது பூமிகா வேக வேகமாக அவர்களிடம் ஓடி வந்தாள்.

படபடப்பாய் மூச்சு வாங்கியவளுக்கு நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய அகில், “ஆரம்புச்சுட்டா… எதுக்கு இப்படி நெர்வஸ் ஆகுற பூமி” எனக் கேட்க,

“டேய் எவ்ளோ இம்பார்ட்டண்ட் விஷயம் தெரியுமா? இப்ப ஒரு ப்ரொடக்ஷன் முடிஞ்சு டெஸ்டிங்க்கு போச்சு. ஆனா ஏதோ ஒரு பேஸ் பார்முலா சொதப்பிடுச்சு. சோ கன்சிஸ்டன்சி எல்லாம் கொலாப்ஸ் ஆகிடுச்சு. இது எப்படி நடந்துச்சுன்னே தெரியல. மேம்க்கு தெரிஞ்சா என்ன செய்வாங்களோ…” எனப் பயந்து போனாள்.

அகில் அவளை அமைதிப்படுத்தி, “நீ மட்டும் தான் ப்ரொடக்ஷன்ல இருக்கியா. யார் செஞ்ச மிஸ்டேக்ன்னு கண்டுபிடிக்கலாம். நீ ரிலாக்ஸ்ஸா இரு…” என்றதும்,

மிதுனா துரிதமாக “நான் சிசிடிவி செக் பண்ண சொல்றேன். பேஸ் பார்முலா தயாரிக்கும்போதே யாரோ வேலையைப் பார்த்துருக்கணும்…” என்று எழுந்திட, விதுரனும் பூமிகாவிற்கு உதவி செய்யும் பொருட்டு மிதுனாவுடன் சென்றான்.

இருவரும் சிசிடிவி அறைக்குள் நுழைய, மிதுனாவே நேரடியாய் அதன் இன்சார்ஜிடம் விவரம் கூறிட, விதுரன் அவசரமாக தேடினான்.

“விது… ஏதாவது டிஃபரெண்ட்டா தெரிஞ்சா சொல்லு” என்றதும்,

“ம்ம்” எனத் தலையாட்டியவன், “மிது… இந்த ஆளை பாரேன். இவரை பார்த்தா ப்ரொடக்ஷன்ல ஒர்க் பண்ற ஆள் மாதிரி இல்லைல…” என்று ஒருவனைக் காட்ட, அதற்குள் அந்த புட்ஏஜ் நகன்று விட்டதில், அவனது கையைப் பிடித்து மவுசை ஆட்டியவள்,

“இருடா நான் சரியா பார்க்கல…” என்று கணினியின் மீது கண்ணாக, விதுரனின் இதயத்தில் சட்டென ஒரு பனிக்காற்று இதமாய் வீசி சில்லிட செய்தது.

அதனைக் கவனியாதவள் மவுசில் இருந்து கையை எடுத்து விட்டு, ஏதோ பேசத் தொடங்க, அவனோ அமைதியாய் அவள் கையைப் பிடித்து மவுஸின் மீது வைத்து, பின் அவளது கை மீது தனது கையை வைத்திட, இம்முறை சில்லென்ற தீண்டல் உணர்ந்தாள் அவள்.

கன்னங்கள் காரணமின்றி சிவந்து போக, கையை எடுக்க முயற்சிக்காதவளாய் கணினியின் மீது பார்வையைப் படர விட, இருவரின் இதழ்களும் மௌனப்புன்னகையைத் தாங்கி இருந்தது.

—–

அடுக்கடுக்காய் வேலைகள் குமிய, ஒளிரா பிராண்டை உலக அளவில் எடுத்துச் செல்ல பிரம்ம பியத்தனப்பட்டாள் இதயாம்ரிதா.

சில டீலர்கள், தானாய் முன்வந்து அவளது பிராண்டை வாங்க, பலர் நிவோரா பிராண்டைத் தவிர வேறு ஒன்றை வாங்குவதில்லை என்று விட்டனர்.

தந்தை ஓடி ஓடி உருவாக்கியது, யார் கைக்குச் சென்றாலும் அந்த பிராண்டின் மீதிருக்கும் நம்பிக்கையை குலைக்கவில்லை எனப் பெருமை மட்டுமே கொள்ள முடிந்தது. அப்படி எண்ணி தளர்ந்து விடாமல் தனது மனதை தேற்றிக்கொண்டாள்.

இதற்கிடையில் பெரிய தலைவலியாய் அமைந்தது, பெண் மாடல் பாதியில் கழன்று கொண்டது.

ஒரு பக்கம், யாரோ ஒருவர் உடன் இருந்து கொண்டே ப்ரொடக்ஷனில் கலப்படம் செய்ய முயல்வது, ரிஜெக்ஷன் என வியாபார அழுத்தம் அதிகரித்தது.

அனைத்தையும் சீர் செய்து, தன்னைச் சீண்டி சீற வைக்கும் சத்யாவின் பேச்சுக்களையும் தீண்டல்களையும் பொறுத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

சில நேரங்களில் அவனது நெருக்கம் வேண்டுமென்றே அடம்பிடித்தது மனது.

அதற்கு தோதாய், அவனும் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அவள்மீது வார்த்தைப்போர்களையும், முத்தப்போர்களையும் தொடர்ந்து கொண்டே இருந்தான்.

அவளும் அவனுக்கு வேண்டிய சான்றிதழ்களைத் தராமல் சுற்றலில் விட்டாள்.

அன்று, சத்ய யுகாத்ரனின் புகைப்படங்களைத் தனியே பிரித்து, நாளிதழ்களுக்கு விளம்பர படங்களை உருவாக்கி, அதனை அனுப்பும் வேலையில் இருந்தாள்.

அப்போது சத்யா அறைக்குள் நுழைய, அவனைக் கண்டு புருவம் சுருக்கியவள், “நீங்க போட்டோஷுட் பண்ணாம இங்க என்ன செய்றீங்க?” எனக் கேட்டதில், “ஜோடியா பண்ண வேண்டிய ஆட் ஷூட்டிங்கை தனியா பண்ண முடியாதே மிஸஸ் பொண்டாட்டி” என்றான் நக்கலாய்.

“தனியாவா? மாடல் எங்க?”

“அந்தப் பொண்ணுக்கு இங்க ஒர்க் பண்ண பிடிக்கலையாம். சோ…” என உதட்டைப் பிதுக்கி கேலியாய் பாவப்பட்ட, “ஓ! ஷிட்” என்று எரிச்சல் கொண்டாள்.

ட்ரிம் செய்யப்பட கன்னத்தைத் தேய்த்துக்கொண்ட சத்யா, “இப்ப என்ன செய்றது இதயா. நீ வேற ஆட் ரிலீஸ் பண்ணனுமே…” என உச்சுக்கொட்டி கவலை கொள்ள,

“இப்ப நீங்க எனக்காக பீல் பண்றீங்க? இதை நான் நம்பனும்?” என அர்த்தமாய் கேட்டாள்.

“சீரியஸ்லி பொண்டாட்டி…” என்றபடி ஒரு சுழல் நாற்காலியை இழுத்துப்போட்டு அவளருகில் அமர்ந்தவன், ஒரு காலால் அவள் அமர்ந்திருந்த நாற்காலியைப் பிடித்து இழுக்க, சர்ரென அவன் வசம் வந்தாள். அவளைத் தூக்கி மடியில் அமர வைத்துக்கொண்டவன்,

“நீ நல்ல மூட்ல இருந்தா தான டச்சிங் எல்லாம் ஸ்மூத்தா இருக்கும்…” என அவள் கழுத்தினுள் முகம் புதைக்க, கரங்கள் தனது தேடலை தேகமெங்கும் தொடங்கிட, வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து விலகினாள்.

முத்தம் என ஆரம்பித்தவன் மெல்ல மெல்ல அவளுடன் எல்லை மீறிக்கொண்டு இருக்கிறான்.

விலகியவளை சுண்டி தன்னருகில் மீண்டும் இழுத்தவன், “இந்த கேப் விழுகாம இருக்குறதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. அது உனக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும். எனக்கும் சில்லிங்கா இருக்கும்…” என்றதில்,

“வாட்?” என்றாள் கோபத்துடன்.

“நீயும் பார்க்க அழகா, மாடர்னா தான இருக்க… நீயே உன் பிராண்டுக்கு மாடலிங் பண்ணலாமே! ஹ்ம்ம்?” எனக் கேட்டு புருவம் உயர்த்த, “நானா?” என்று திகைத்தாள்.

“நீயே தான். உன் ப்ராண்ட் குவாலிட்டியா இருக்கோ இல்லையோ உனக்காகவே சேல் இருக்கும். உன் அப்பா மத்த பொண்ணுங்ககிட்ட அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக்கிட்ட மாதிரி, நீயும் அதே வழியை பின்பற்றி போனா, காம்பெடிட்டரை எல்லாம் முழுங்கிடலாம். ஆனா, போக போக அதுக்கு பேரே வேற ஆகிடுமே… பரவாயில்லையா இதயா? ப்ச் பரவாயில்ல… நமக்கு எப்படி வாழறோம்ன்றதா முக்கியம். எப்படியோ எவனையோ அடிச்சு வாழனும் அது தான முக்கியம்!”

கையை இறுக்கி மூடிக்கொண்ட இதயாம்ரிதாவிற்கு நரம்பு புடைத்தது.

கல்லூரி நாள்களில் அவன் பேசுவதற்காக ஏங்கியவள், இந்த சில நாள்களுக்குள்ளாகவே அவன் பேசவே வேண்டாமென்று மண்டியிட்டது அவளது உள்மனம்.

“எல்லாரும் அதே பாலிசியை ஃபாலோ பண்ணும்போது, நானும் ஃபாலோ பண்றதுல தப்பில்லையே பாஸ் பேபி. உங்ககிட்ட அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண ஒத்துக்கிட்ட மாதிரி, வெளில ஒத்துக்கிட்டு பிராண்டை வளர்க்குறது புத்திசாலித்தனம் தான… சேத்துல குதிச்சப்புறம், சேறு படுதேன்னு பீல் பண்ற ஆள் நான் இல்ல.”

“அதுசரி தான், குடும்ப வழக்கமாச்சே!” நாக்கில் விஷம் கலந்து கொட்டினான்.

“பை தி வே அதே குடும்பத்துல நீங்களும் இப்ப ஒரு ஆளுன்னு மறந்துடாதீங்க சத்யா! இப்போல்லாம் சாத்தான் வேதம் ஓதுறது பேஷனா போச்சுல்ல!” என்று உதட்டைப் பிதுக்கிட, புயலாய் எழுந்து அவளை சுழற்றி, இரு விரல்களிலும் அவளது இதழ்களை அழுத்தமாய் அடக்கியவன், சுவரில் அவளை இடிக்க வைத்து அவனும் நெருங்கி நின்றான்.

“இதே லிப்ஸ் தான, என்கிட்ட ஃப்ளர்ட் பண்ணுச்சு. அதே லிப்ஸ் சாத்தான்னு சொல்லுதே. ம்ம்?” அவளுக்கு வலிக்கும்படி பிடி இறுகியது.

அதில் தானாய் அவள் விழிகள் கலங்கத் தொடங்க, அந்நேரம் “அம்ரி” என்றபடி உள்ளே நுழைந்தாள் பத்மபிரியா.

இருவரும் நிற்கும் கோலம் கண்டு ஒரு கணம் விழித்திட, இதயா அவனைத் தள்ளிவிட்டதில், அவனும் இரண்டடி பின்னால் நகர்ந்தான்.

அவனிடம் கலங்கி நின்ற முகத்தை எவ்வாறு நொடியில் சீரமைத்தால் என்றே தெரியாத அளவு, மிடுக்கு நிறைந்த தோரணையில் “சொல்லு பத்மா?” எனக் கேட்க, அவளை ஒரு கணம் வியப்பாய் ஏறிட்டது அவனது விழிகள்.

நொடிக்கு நொடி நிறம் மாறுவது இவளுக்கு புதிதா என்ன? என அதற்கும் உள்ளம் கொதிக்கவே செய்தது.

“அம்ரி… வந்து…” என அவள் தடுமாறி விட்டு, “நிலோவுக்கு ஆக்சிடெண்ட்.” என்றாள் குரல் நடுங்க.

அதில் அதிர்ந்து போன இதயாம்ரிதா, “என்னடி சொல்ற? எப்படி? இப்ப எப்படி இருக்கா?” எனப் பதற்றத்துடன் அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினாள்.

“அவளா வேகமா காரை ஓட்டிட்டுப் போய் வேணும்னே ஆக்சிடெண்ட் பண்ணிக்கிட்டதா ஷ்யாம் சொல்றான். ரொம்ப பிரேக் ஆகிருக்கான். ஒன்னும் புரியல அம்ரி. இப்ப தான் ஷ்யாம் ஓரளவு மீண்டு வந்தான். இவளுக்கு என்ன கேடு வந்துச்சுன்னு தெரியல… ஐசியூல சீரியஸா இருக்காளாம். ப்ளட் தேவைப்படுது… உனக்கும் சேம் பிளட் க்ரூப் தான, விஷால் உன்னை வர சொல்றான். போலீஸ் கேஸ் வேற ஆகிட்டு!” எனக் கலக்கத்துடன் கூறினாள்.

“காட்!” என்றவள் துரிதமாய் கிளம்பிட, பத்மபிரியாவும் வெளியில் சென்றதும், கைப்பையை எடுத்த இதயாம்ரிதாவின் கையைப் பிடித்து தன்னருகில் இழுத்தான் சத்யா.

“வாட் சத்யா?” எரிச்சலாய் இதயா கேட்க,

“போட்டோஷூட் இருக்கு. இப்ப நீ எங்கயும் போக முடியாது” என்றவனை விசித்திரமாகப் பார்த்தாள்.

“ஹே நான் பிளட் குடுக்கப் போகணும்…”

“நைட்டு ஒன்பது மணிக்கு மேல் பிளட் குடுத்துக்கோ, கண்ணு காதுன்னு எதை வேணாலும் குடுத்துக்கோ பாஸ். இப்ப என் பொண்டாட்டியா, என் கூட மாடலிங் பண்ணு” என்றான் சூடான மூச்சு அவளது நாசி தீண்ட.

“திஸ் இஸ் த லிமிட் சத்யா. என்னை கண்ட்ரோல் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காநீங்க.”

“உனக்கும் எனக்கும் இடைல லிமிட்டே கிடையாது மிஸஸ் பொண்டாட்டி. இந்த ஒன்பது வரை உன் பேச்சை நான் கேட்டு நடக்குற மாதிரி என் பேச்சை நீ கேட்டு நடக்கணும்னு, நம்ம ரூல் புக்ல செதுக்கி இருக்குன்னு மறந்துட்டியா. ஹ்ம்ம்?” என அவள் கண்ணை மறைக்க வந்த கூந்தலுக்கு தடைவிதித்து காதோரம் சொருகினான்.

“இட்ஸ் எமர்ஜென்சி சத்யா… விளையாடாதீங்க.”

“உன் கூட விளையாட எனக்கும் ஆசை தான் இதயா. பட் நொவ் ஐ ஆம் வெரி சீரியஸ். இன்னைக்கு நைட்டுக்குள்ள மேகஸின்க்கு பிக்சர் கொடுக்கணும்னு சொன்ன தான. போய் அந்த வேலையைப் பாரு” என்றான் அதிகாரமாக.

“உங்க பேச்சை இதுல கேட்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல… ஐ நீட் டூ கோ!”

அவள் விடாப்பிடியாய் பேசியதில் தீப்பிழம்பானான். விறுவிறுவென அவளது மடிக்கணினி, இதுவரை எடுத்த புகைப்படங்கள், பென்ட்ரைவ் என அனைத்தையும் சுக்கு நூறாக உடைக்க,

“ஏய் சத்யா… என்ன பண்றீங்க…” என அவனை நிறுத்த முற்பட்டதில், “என் வைஃபா இருக்குற டைம்ல என் வைஃபா மட்டும் இரு. எவனுக்கும் எக்ஸாவும் இருக்கவேணாம். பிரெண்டாவும் இருக்க வேணாம். மீறி போன, என்கிட்ட இருந்து ஒரு பெர்ஃபக்ட் பிச்சர் கூட நீ வாங்க முடியாது இதயா. மைண்ட் இட்!” என்றான் நெருப்பு ஜுவாலையாய்.

அவனே அவளுக்குப் புதிதாய் தெரிந்தான். அவனுக்கு இத்தனை கோபம் வருமென்றே இன்று தான் பார்க்கிறாள். முன்பென்றால், ரசித்து சுகித்திருப்பாள்.

தனது தோழி ஆபத்து கட்டத்தில் இருக்கும் நேரத்தில், அவனது கோபத்தை சட்டை செய்ய அவளுக்கு விருப்பமில்லை.

“உங்க பிக்சர் எனக்குத் தேவை இல்ல. போறதுன்னா அக்ரிமெண்ட்டை கேன்சல் பண்ணிட்டுப் போய்டுங்க. இப்ப நான் அவளுக்கு பிளட் குடுக்கணும்” என்று சீறியதில், அவன் இதழ்கள் இளிவாய் வளைந்தது.

“ப்பா… அப்போ இருந்து இப்போ வரைக்கும் ப்ரெண்ட்ஸ ஒன்னு சொல்லிட்டா சிலிர்த்துட்டு வர்ற இந்த கோபம் மட்டும் போகவே இல்லையே இதயா. பட் உன் இஷ்ட டேஷுக்கு எல்லாம் என்னால அக்ரிமெண்ட்டை கேன்சல் பண்ண முடியாது. நீயே நினைச்சாலும் ஒரு வருஷம் இந்த செட்டிங்ஸ மாத்த கூடாதுன்னு, நான் லைன் பை லைன் ரூல் புக்ல எழுதுனது மறந்துட்டியா? வெய்ட்…” என்றவன் ஒரு கோப்பை எடுத்து காட்டி,

“இதுல ஒட்டு மொத்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு. நீ ஒரு தடவை படிச்சு பார்த்துக்க. அப்போ அப்போ மறந்துடுற” என அவளது கன்னம் தட்டினான்.

“சீக்கிரமா படிச்சுட்டு போட்டோஷுட் பண்ண வா. உனக்கு கேமரா டெஸ்ட் பண்ணனும். ஐ ஆம் வெயிட்டிங் பாஸ்!” என்று மூக்கோடு மூக்குரசி விட்டுச் செல்ல, ஆத்திரம் தலைக்கேற அந்த கோப்பைத் தூக்கி கதவின் மேலே எறிந்தாள் இதயாம்ரிதா.

புது காதல் மலரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 87

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
83
+1
5
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments