
ரூபிணி தன் கைபேசியை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது அவள் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது. அருகே இருந்த உதயா அவளை புரியாமல் பார்த்தான்.
காதலனோடு பேசுகிறாள் என்று நினைக்க வழியில்லை. இப்போது தான் ஒருவனை பிரிந்தாள். அதோடு அவனோடு நடிக்கவும் ஒப்புக் கொண்டாள்.
பிறகு எதை இப்படி ஆர்வமாக பார்க்கிறாள்? என்ற யோசனையோடு அவளையே பார்க்க, மெலினா வந்து சேர்ந்தார்.
“ரூபிணி கிளம்பலாம்” என்றதும் வேகமாக அவரை பார்த்து விட்டு எழுந்தாள்.
உதயாவை நோக்கி திரும்பியவள், “நம்ம டீல் பர்ஃபெக்ட்டா முடியும்னு நினைக்கிறேன். அதுக்கான அறிகுறி இப்பவே தெரியுது. சீக்கிரம் பார்க்கலாம்” என்றாள்.
“அறிகுறியா?”
“ஆன்லைன்ல பாரேன். நான் கிளம்புறேன். பை” என்று விட்டு மெலினாவோடு வெளியேறி விட்டாள்.
பொது இடத்தில் வைத்து ஒப்பந்தம் கையெழுத்திட்டு, அதே நேரத்தில் பத்திரிக்கையில் செய்தியும் கொடுத்து விடத்தான் வந்திருந்தனர்.
படங்கள் வெளியான சில நிமிடங்கள் கழித்தே ரூபிணி கிளம்பிச் சென்றாள். உதயா எழுந்து தனது காருக்கு வந்தான்.
அசிஸ்டண்ட்டை அழைத்து பேச, அவன் மெடோனா வந்து காத்திருப்பதாக சொன்னான்.
“எனக்கு அவள பார்க்க இஷ்டமில்ல” என்று விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டான்.
அவனது மனதில் காலையிலிருந்து நடந்தது ஓடியது.
இன்று ஒப்பந்தம் கையெழுத்திட முடிவு செய்ததும், முதல் வேலையாக ரூபிணி உதயாவை தான் அழைத்தாள்.
“காண்ட்ராக்ட் சைன் பண்ணும் போது நீயும் வா”
“நான் எதுக்கு? மேனேஜர் வருவார் பண்ணி வை”
“உன்னை நம்பி இந்த ப்ளானுக்கு ஒத்திக்கிட்டேன் பாரு.. என்னை எதால அடிக்கிறதுனு தெரியல”
“எது கிடைக்கிதோ எடுத்து அடிச்சுக்கோ”
“கடுப்ப கிளப்பாத.. உனக்கு டேட்டிங் ரூமர் வேணுமா? வேணாமா?”
“என்ன சொல்ல வர்ர நீ?”
“வேணும்னா காண்ட்ராக்ட் சைன் பண்ணும் போது ஃபுல் ப்ளாக்ல வந்து சேரு. இன்னைக்கே அந்த ரூமர ஆரம்பிச்சடலாம்”
“இஸ் இட்?”
“ஆமா.. வேணாம்னா போ.. நான் சைன் பண்ணிட்டு என் வேலைய பார்க்குறேன்” என்றவள் பட்டென வைத்து விட்டாள்.
இன்று மாலை ஒரு ரெஸ்டாரன்டில் சந்தித்து ஒப்பந்தம் போட்டு விட்டு அப்படியே இரவு உணவையும் சாப்பிட்டு விட்டுத் தான் கிளம்புவதாக திட்டம். அதை மேனேஜர் நேற்று சொல்லியிருந்தார்.
அந்த இடத்திற்கு அவனும் போக வேண்டுமா? இன்று மெடோனாவை வர சொல்லி இருக்கிறானே.
யோசனையில் இருந்தவனுக்கு ரூபிணியின் திட்டம் அவ்வளவாக புரியவில்லை என்றாலும், மெடோனாவை சந்திப்பதை தள்ளிப்போடுவது பெரிய விசயமாக இல்லை.
முக்கியமாக அவளை பார்க்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. கையில் கிடைத்தால் அடித்து விடுவான். அதனால் தான் தவிர்த்துக் கொண்டிருக்கிறான்.
இன்று அவள் வந்தால் திரும்பிப் போகட்டும் என்று நினைத்தவன், ரூபிணி சொன்னபடி கருப்பு ஆடை அணிந்து கிளம்பி விட்டான்.
அவன் வரப்போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த ரூபிணி அவனை பார்த்து ஆச்சரியப்பட்டாள். ஆனால் அதிகமாக காட்டிக் கொள்ளவில்லை.
நான்கு பேர் மட்டுமே இருக்க, ஒப்பந்த பேச்சும் உணவோடும் அந்த நேரம் முடிந்தது. கடைசியாக உதயாவின் மேனேஜர் ஒரு பத்திரிக்கை நிருபரை அழைத்திருக்க, அவர் வந்து பேசி விட்டு உதயாவையும் ரூபிணியையும் நிற்க வைத்து படம் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
அதன் பின் மெலினாவுக்கு அருகே எதோ வேலை என்று செல்ல, ரூபிணி அமைதியாக அமர்ந்து விட்டாள். மெலினா திரும்பி வந்ததும் கிளம்பி விட்டனர்.
ரூபிணி இடையில் கைபேசியில் அப்படி என்ன பார்த்தால் என்று புரியவில்லை. ஆனால் எதற்காக கருப்பு உடை அணியச்சொன்னாள் என்ற கேள்விக்கு அவளை பார்த்ததுமே பதில் கிடைத்து விட்டது.
அவளும் கருப்பில் தான் வந்திருந்தாள். அது மட்டுமல்லாமல் இருவரும் சேர்ந்து படம் எடுத்ததும் தெளிவாக புரிந்தது.
வீட்டுக்கு வந்தவன் உடனே உடல் கழுவச் செல்லாமல், அமர்ந்து கைபேசியை எடுத்தான். மெடோனாவின் நூறு அழைப்புகளை பற்றிக் கவலைப்படாமல் சமூக வலைதளங்களுக்குள் நுழைந்தான்.
இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் வெளியாகியிருந்தது. அதோடு சில துணுக்குகளும் இருந்தது.
நாளை தான் முழு செய்தி வெளியாகும். ஆனால் அதற்குள் அவர்களது படத்தை வைத்து மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.
இருவரும் சேர்ந்து நிற்கும் போது அழகாக இருப்பதாக பலர் சொல்லியிருந்தனர்.
உதயாவிற்கு சிரிப்பு வந்தது.
“இவள ரெண்டு நிமிஷம் பக்கத்துல வச்சுக்கிறதே பெரிய விசயம். இதுல டேட்டிங் பண்ணனும்னு யோசிச்சுருக்கேன். எப்படி தான் ஐடியா வொர்க் அவுட் ஆகுதுனு பார்ப்போம். இவங்க நம்பிட்டாங்க. மெடோனாவ பத்தி தான் தெரியல” என்று விட்டு எழுந்து சென்றான்.
ரூபிணியும் அதை தான் நினைத்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு வந்ததும் குளித்தவள் மனதில் நிறைய விசயங்கள் ஓடியது.
முதல் விசயம் இந்த வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு போக வேண்டும். உதயாவின் நிறுவனம் தூரமாக இருக்கிறது. அடிக்கடி பயணம் செய்ய வேண்டி வரும். அதனால் அங்கே அருகில் வேறு வீடு பார்க்க வேண்டும்.
அடுத்ததாக விஷால்.. அவன் விடாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறான். என்ன செய்வதென்று புரியவில்லை. அவனை விட்டும் அவள் தூரமாக செல்ல வேண்டும்.
இன்று வெளியான செய்தி பலருக்கு பிரச்சனையாக இருக்கும். அவளது பழைய நிறுவனத்திற்கு பிடிக்காது. விஷாலுக்கும் பிடிக்காது.
அவர்கள் அவளது வேலையை கொடுக்கப் பார்க்கலாம். அதனால் வேறு வீடு நிச்சயமாக தேவைப்படும்.
குளித்து முடித்து வெளியே வந்தவள் மெலினாவை அழைத்தாள்.
“சித்தி.. நாம இங்க இருக்க வேணாம்னு தோணுது. அந்த ஊர்லயே ஒரு வீடு பார்த்துக்கலாமா?” என்று கேட்க, “இத தான் நானும் நினைச்சுட்டு இருந்தேன். பழைய கம்பெனில இருந்து கால் பண்ணிட்டே இருக்காங்க. எடுக்கலனா நேரா வீட்டுக்கு வந்து நிப்பாங்க. அங்க ரெண்டு ஃப்ளாட் பார்க்க சொல்லுறேன். போயிடலாம்” என்றதும் ரூபிணிக்கு திருப்தியாக இருந்தது.
“அப்ப நீங்களே அத பாருங்க.”
“விஷால் எதாவது பண்ணானா?”
“அவன் நம்பர ப்ளாக் பண்ணிட்டேன். வீட்டு பக்கம் தான் அடிக்கடி வர்ரான். சலிப்பா இருக்கு”
“சரி நான் சீக்கிரமா வீடு கிடைக்கிதானு பார்க்குறேன். பத்திரமா இரு” என்று விட்டு வைத்து விட்டார்.
ரூபிணி மேலும் மேலும் பல விசயங்களை யோசித்துக் கொண்டே இருந்து விட்டு, தன் கைபேசியை எடுத்து உதயாவுக்கு செய்தி அனுப்பினாள்.
“உன் வீட்டு பக்கத்துல இருக்க ஃப்ளாட் எதாவது காலியா இருக்குதானு கேட்டு சொல்லு” என்று அனுப்பி விட்டு பதிலுக்காக காத்திருந்தாள்.
உதயா மடிக்கணினியில் மூழ்கிக் கிடந்தான். திடீரென கைபேசி ஒலித்த சத்தத்தில் திரும்பிப் பார்த்தான்.
செய்தியை படித்ததும் கோபம் வந்தது.
“நான் என்ன உன் அசிஸ்டண்ட்டா?” என்று நக்கலாக கேட்டு வைத்தான்.
“இல்ல.. உன்னை அசிஸ்டண்ட்டா வச்சா என் வாழ்க்கை என்னாகுறது?” என்று பதில் வந்தது.
உதயா பல்லைக்கடித்துக் கொண்டு அடுத்து பேசப்போக, ரூபிணியிடமிருந்தது செய்தி வந்தது.
“நீயும் நானும் அஃபிசியலா டேட்டிங் பண்ணுறோம்னு சொல்லனும்னா அதுக்கு சில ப்ரூஃப் வேணும். என் பேரு கெட்டுப்போகக்கூடாதுனு தான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். அதுக்கேத்த மாதிரி நடிக்க வேணாமா?”
“அதுக்கும் இப்ப வீடு பார்க்குறதுக்கும் என்ன சம்பந்தம்?”
“உன் வீட்டு பக்கத்துலயே நானும் குடி வந்துட்டா ரூமர் தன்னால வளரும். அத நீயே தேடிக் கொடுத்தா கண்ஃபார்ம் பண்ணிடுவாங்க. அதுக்கு மேல நாம டேட்டிங் போய் தான் ப்ரூஃப் பண்ணனும்னு இல்ல. புரியுதா?”
“இதெல்லாம் ரொம்ப அவசியமா?”
“உனக்கு ரூமர் பத்தி எதுவுமே தெரியாதா? அது சரி.. நீ பாஸ்.. நாங்க தான இந்த குப்பைகளுக்குள்ள வாழுறோம்.. எங்களுக்கு தான் தெரியும்”
“உனக்கு தெரிஞ்சதுக்காக நானும் செய்யனுமா?”
“ஆமா.. நான் டீலுக்கு ஓகே சொன்னப்போ என்ன சொன்னேன்?”
உதயா பல்லைக்கடித்தான்.
“நான் பர்ஃபெக்ட்டா நடிப்பேன். அதுக்கு நீ ஒத்துழைக்கலனா நடிப்ப அப்படியே மறந்துடுனு சொல்லிட்டேன். இப்ப விட்டுருவோமா?”
செய்தியை படித்து விட்டு பல்லைக்கடித்தவன் தலையை தேய்த்துக் கொண்டான். அவசரப்பட்டு இவளது தொல்லையை இழுத்துக் கொண்டோம் என்று தோன்றியது.
“ஃபைன்.. கேட்க சொல்லுறேன்.”
“இத முதல்லயே செஞ்சுருக்கலாம். அரகண்ட் மாதிரி பிகேவ் பண்ணுறதுல என்னதான் இருக்கோ”
“இப்ப மெஸேஜ் பண்ணுறத ஸ்டாப் பண்ணுறியா? இல்ல ப்ளாக் பண்ணி விடவா?”
“நீ என்ன பண்ணுறது? நான் பண்ணுறேன்..”
“இரிட்டேட்டிங் இடியட்.. ப்ளாக் பண்ணா எப்படி விசயத்த பேசுவ?”
“தெரியுதுல? அப்பறம் எதுக்கு மிரட்டி பார்க்குற? அப்படியே பணிஞ்சுடுவேன்னு நினைப்பு? டேட்டிங் எல்லாம் வெளிய தான்.. உள்ள நீ எனக்கு பிடிக்காத அன்னோயிங் அரகன்ட் உதயகுமார் தான். சோ இறங்கி போவேன்னு எதிர்பார்க்காத” என்று அனுப்பியவள் கைபேசியை தூக்கி போட்டு விட்டு படுத்து விட்டாள்.
தொடரும்
