
பூத்தூவலாய் மழைத் தூறல் பூமியைக் குளுமையாக்கிக் கொண்டிருந்தது. சிவப்பு நிறத்தில் சின்னப் பூக்கள் பதித்த பட்டுப்புடவை பாவையின் பொன்னிற அழகை மேலும் மெருகூட்டியது.
மணப்பெண் அலங்காரமாக இல்லாமல், எளிமையாய் தயாராகி பதிவு அலுவலகத்திற்குச் சென்று விட்டாள். அங்கு ஏற்கனவே ஜூனியர்கள் நால்வரும் அவர்களுக்காக காத்திருக்க, மிதுனா மிதமான அலங்காரத்தில் ஜொலித்தாள்.
“என்னடி இன்னைக்கு கலக்குற?” பூமிகா அவளைக் கண்டு விழி விரித்துக் கேட்க,
“நம்ம மேடம் கல்யாணம்… நம்மளும் டஃப் காம்பெடிஷன் குடுக்கணும்ல?” மிதுனா கண் சிமிட்டியதில்,
அகில் “அம்ரி மேடம்கு காம்பெடிஷன் அம்ரி மேம் மட்டும் தான். அவங்க அழகு என்ன? ஸ்டைல் என்ன? கெத்து என்ன” என சிலாகிக்க, “என்ன என்ன?” என்று சண்டைக்கு வந்தாள் மிதுனா.
பூமிகா அவர்கள் சண்டை போடத் தொடங்கியதில், “விது இங்க பாருடா இவங்கள…” என அழைத்தும் விதுரனின் கவனம் நண்பர்களின் மீது இல்லை.
மிதுனா அவனைக் கவனித்து, “டேய் நீ என்னடா இவ்ளோ சீரியஸா யோசிச்சுட்டு இருக்க. என்னமோ இவனுக்கே கல்யாணம் ஆகப்போறது மாதிரி ரொம்பத் தான் ஃபீல் பண்றான்” என வாரினாள்.
“எனக்கு விதுவோட வருத்தம் புரியது மச்சி” என்று அகில் ஆஜராக இரு பெண்களும் என்னவென பார்த்தனர்.
“உலகத்துல இருக்குற அழகான பொண்ணுங்க எல்லாம் கமிட் ஆகுறது நினைச்சு அவன் மனசு வேதனைல தவிக்குது அது தான மச்சான்!” என்று வராத கண்ணீரை பிழிந்து வரவழைக்க விதுரன் முகம் சுளித்தான்.
“அழகும் பணமும் இருந்தா எஸ்கேப் ஆகுறது தான் நமக்கு முக்கியம் மச்சி. அவங்களுக்கு என்ன, காச காட்டி பத்து கல்யாணம் கூட பண்ணுவாங்க. நமக்கு வாழ்க்கைல எல்லாம் ஒரு தடவை தான் நடக்கணும். பல தடவை நடந்தா, அதுக்கு பேர் வேற…” எனக் கோபத்தில் வார்த்தைகளை உதிர்த்திருக்க, மிதுனா பொங்கினாள்.
“எதுக்கு தேவையில்லாம பேசுற விது. ஏற்கனவே சொல்லிருக்கேன் உங்கிட்ட… பணமும் புகழும் இருக்குன்றதுக்காக மத்தவங்க வாழ்க்கையை என்னைக்கும் கேலி கூத்தாக்காதன்னு. எல்லாருக்கும் பெயின் இருக்கும். எல்லாருமே மனுஷங்க தான?”
“எல்லாருக்கும் பெயின் இருக்கும். ஆனா அதை காசையும் புகழையும் காட்டி மறைய வச்சுடுவாங்க மிது. நமக்கு எல்லாம் அது ஆறாத தழும்பா மாறிடும்…” அவனும் எகிறினான்.
“யாரோட வாழ்க்கையையும் நம்ம விமர்சனம் பண்ண கூடாது விதுரா!” இம்முறை மிதுனா கண்டிப்பாய் கூற,
“விமர்சனம் பண்ணனும், ஹெட் லைன்ல பெருசா அவங்க பேர் வரணும்னு தான, இந்த செகண்ட் மேரேஜ் சாகசம், கட்டுன புருஷனை ப்ராண்ட் மாடலா இன்ட்ரோ பண்ணப்போற வித்தையெல்லாம் காட்டுறாங்க. இதுலாம் மார்க்கெட்டிங் மிதுனா. பக்கா மார்க்கெட்டிங். சிம்பதி கிரியேட் பண்ணி, நினைச்சதை சாதிக்கிற கேஸ்!” என்றதில் மிதுனா முகம் சிவந்து விட்டாள்.
“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ். இதுக்கு மேல பேசுன நான் மனுஷியா இருக்க மாட்டேன்…” என எச்சரிக்கும்போதே அங்கு இதயாம்ரிதா வந்து விட்டாள். மற்றொரு காரில் சத்ய யுகாத்ரனும் வந்திறங்கினான்.
இருவரும் கரிசனைக்காக கூட பார்த்துக்கொள்ளவில்லை.
“கைஸ்… ஆல் ரெடி?” அகிலைப் பார்த்து இதயாம்ரிதா கேட்க, “எஸ் மேம். உங்களுக்காக தான் வெயிட்டிங்” என்றதும் அவள் விறுவிறுவென உள்ளே சென்றாள்.
விதுரனை முறைத்திருந்த மிதுனாவை வம்படியாக பூமிகா உள்ளே இழுத்துச் செல்ல, தம்பியின் முகத்தை நிமிர்ந்து பாராது சத்யாவும் உள்ளே சென்று விட்டான்.
அடுத்த சில நிமிடங்களில் புது மணத் தம்பதியர் மாலை மாற்றிக்கொண்டனர். அவளுக்கு மஞ்சள் கயிறை அணிவித்தான் சத்ய யுகாத்ரன். இருவரின் விழிகளும் தானாய் மூடிக்கொண்டது. மூடிய விழிகளின் பின்னே, கல்லூரி காட்சி ஒன்று படமானது.
—-
“ஐடி கார்ட்ட பார்க்கிங்ல தொலைச்சுட்டு, எக்ஸாம் வந்துருக்க. உன்னை நியாயமா உள்ள அலோ பண்ணிருக்கவே கூடாது” தனது ஸ்டாஃப் ரூமில் நாற்காலியில் அமர்ந்தபடி கையைப் பின்னால் கட்டிக்கொண்டு நின்றிருந்த இதயாம்ரிதாவை வெகுவாய் கடிந்தான் சத்யா.
அவளோ சோகமே உருவாய், “எக்ஸாம் வர்ற அவசரத்துல ஐடிகார்டு கீழ விழுந்ததைக் கவனிக்கல ப்ரொஃபி. ஆல்ரெடி டென் மினிட்ஸ் லேட். இப்ப நோ அப்ஜெக்ஷன் பார்ம்ல நீங்க எச். ஓ. டி கிட்ட சைன் வாங்கித் தரலைன்னா இன்னைக்கு எக்ஸாம் ஹோகயா தான். எனக்குப் பிரச்சினை இல்லப்பா… அரியர் வச்சா எனக்கு பெனிஃபிட் தான்” என்றாள் அவனை ஓரக்கண்ணில் வருடியபடி.
ஏனென்ற ரீதியில் ஆடவன் பார்க்க, “அப்படி அரியர் வச்சா, எக்ஸாம் எழுதுற சாக்குல அடிக்கடி உங்களை சைட் அடிச்சுட்டுப் போவேன்” என்று கண்ணடித்ததில், அவன் கடுகடுவென கண்களால் நெருப்பை பொழிந்தான்.
“ஒன்னும் தேவையில்ல. என் பைக்குக்கு கீழ தான் உன் ஐடி கார்ட் இருந்துச்சு. இதை எடுத்துட்டுக் கிளம்பு” என்று டிராயரில் வைத்திருந்த ஐடிகார்டை நீட்ட, அதனை வாங்காமல் இதயாம்ரிதா கிளுக்கிச் சிரித்தாள்.
“வாட்?” விழிகளால் அவளை சாடியவனிடம்,
“பார்த்தீங்களா என் ஐடி கார்டுக்கு கூட எங்க விழுகணும், யார்கிட்ட விழுகணும்னு தெரிஞ்சுருக்கு. என் ஹார்ட் பக்கத்துலயே இருக்கறதுனால என் ஐடி கார்ட்க்கும் என் ஹார்ட் பீட் உங்க பேர சொல்லிக் கூவுறது கேட்டுருக்கு பாருங்க. ஆனா உங்களுக்கு தான் கேட்க மாட்டேங்குது” எனக் குறை போட்டுக்கொள்ள,
“ஒழுங்கு மரியாதையா இதை வாங்கிட்டு கிளம்பு. மத்த நாளா இருந்துருந்தா, தொட்டுக் கூட பார்த்திருக்க மாட்டேன் இதை. எக்ஸாம் டைமா இருக்கறதுனால தான் எடுத்துட்டு வந்தேன். என் சப்ஜெக்ட்ல பெயில் ஆனா எனக்கு தான ப்ரெஷர்…” என அவன் அசட்டையாய் கூறியதில்,
“ஆக, எனக்காக நீங்க இதை எடுத்துட்டு வரலை அப்படி தான?” என உதட்டைக் குவித்துக் கேட்டாள்.
“நெவர்!” தோளைக் குலுக்கிக் கொண்ட சத்யா, “இதை வாங்கிட்டுக் கிளம்பு!” என்றான் கம்பீரத் தோரணையில்.
சட்டென இதயாம்ரிதாவின் கண்களில் ஒருவித குறும்பு தோன்றி மறைந்தது. கையைப் பின்னால் கட்டிக்கொண்டே தனது பையில் இருந்து சிவப்பு நிற நகப்பூச்சை எடுத்தவள் அவசரமாக கையில் அப்பிக்கொண்டு, இரு கைக்குட்டை கொண்டு இரண்டு கையையும் தனி தனியாய் கட்டினாள்.
அவளது மார்பு வரைக்கும் கேபின் அமைந்திருந்ததால், சத்யா அவளைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
வண்ணப்பூச்சின் வாசம் வந்த போதும், ஸ்டாப் ரூம் வாயிலில் இருவர் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்ததில் அவன் சந்தேகிக்கவும் இல்லை.
அவளோ ஐடிகார்டை வாங்காது நின்றதில் எரிச்சலுற்றவன், “இப்படியே நின்னுட்டு இருந்தா நீ எக்ஸாம் எழுதுன மாதிரி தான்” எனக் கடிய,
“எப்ப பார்த்தாலும் இந்த முகத்துல ஒரு டஜன் சிடுசிடுப்ப வழிய விட்டுட்டு தான் இருப்பீங்களா ப்ரொஃபி!” என சிலுப்பிக்கொண்டாலும் தனது இரு கையையும் வலியுடன் தூக்கிக் காண்பித்தவள், “குடுங்க நான் போட்டுக்குறேன்” என்றாள் வெகுவாய் நடித்து.
அவள் கையைக் கண்டு மெல்ல திடுக்கிட்டவன், “வாட் ஹேப்பண்ட்?” எனக் கேட்க,
“வரும்போது ஒரு சின்ன பைக் ஆக்சிடெண்ட். ரெண்டு கையும் சிராய்ச்சுருச்சு. ஹாஸ்பிடல் போக டைம் இல்லாம அவசரமா எக்ஸாம்க்கு வந்தேன்…” என்றவளின் சோகக் கூற்றில் சட்டென எழுந்து விட்டான்.
“அறிவு இருக்கா இதயா! செப்டிக் ஆகிட்டா ரொம்ப கஷ்டம். வெய்ட். ஃபர்ஸ்ட் எய்ட் கிட் எடுத்துட்டு வரேன்…” என்று நொடியில் பதறியவனை ரசித்து தொலைத்தது அவளின் மெல்லிதயம்.
“ஏற்கனவே லேட் ஆச்சே ப்ரொஃபி. இன்னும் ஃபைவ் மினிட்ஸ் லேட்டா போனா என்னை உள்ள விட மாட்டாரு அந்த ஆந்தைக்கண்ணன். எக்ஸாம் முடிச்சுட்டு வந்துடுறேன்…” என்றவளை அதிருப்தியாய் ஏறிட்டான்.
“முதல்ல எப்படி எக்ஸாம் எழுதுவ?”
“அதெல்லாம் எழுதிடுவேனே…” என வேகமாய் தலையாட்டியவள், கையைத் தூக்க முடியாமல் ஐடிகார்டை வாங்க முற்பட, “டோன்ட் ஸ்ட்ரெய்ன்” என்றவன் தானே ஐடிகார்டை போட்டு விட, அவளோ தலையைக் குனிந்து பவ்யமாய் வாங்கி கொண்டாள்.
நினைத்தது நடந்து விட்ட அதீத குறும்பு அவளிடத்தில்.
“அப்பறம் ஐடிகார்டுல தாலி கட்டியாச்சு. அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்கலாமா ப்ராமிஸ்!” எனக் கண்ணடித்து அவள் கேட்ட கேள்வியில் திகைத்தவன் பின் கடுமையாய் முறைத்தான்.
“உன்னை தான் மிதிக்கணும்… ஒழுங்கா ஓடிடு” என விரல் நீட்டி எச்சரித்தவனுக்கு அழகு காட்டி விட்டு ஓடியே விட்டாள் இதயாம்ரிதா.
துள்ளிக்குதித்து தேர்வு நடக்கும் அறைக்குச் சென்றவளை, ‘ஏன் லேட்டு’ என்ற ரீதியில் விஷால் பார்த்திட, அவனுக்குப் பதில் கூறாது தனது இருக்கையில் அமர்ந்தவள் கையில் கட்டி இருந்த கர்சீப்பை அவிழ்க்கும் நேரம் அங்கு சத்யா வந்து விட்டான்.
அவனைக் கண்டதும் திருதிருவென விழித்தவள், எழுதத் தொடங்காமல் அப்படியே அமர்ந்திருக்க, தேர்வறையின் சூப்பர்வைசரிடம் சில நிமிடங்கள் பேசி விட்டு, “இதயா… கம் வித் மீ!” என்றதும் அவளுக்கோ ஆச்சர்யம் தாளவில்லை.
கல்லூரியில் சேர்ந்த இந்த நான்கு மாதத்தில் இன்று தான் அவளது பெயரை இரு முறை அழைத்து இருக்கிறான்.
ஒருவேளை தான் செய்த தில்லாலங்கடி வேலை தெரிந்து விட்டதோ என்ற கலக்கம் இருந்தாலும், ‘அட நம்ம ப்ரொஃபி தான பாத்துக்கலாம்’ என்ற அசட்டுத் துணிச்சலில் அவனுடன் சென்றாள்.
வேறொரு தேர்வறைக்கு அழைத்துச் சென்ற சத்யா அவளை அமரச் சொல்லி சின்னதொரு இடைவெளியில் அவனும் அவளருகில் அமர்ந்தான்.
அவளுக்கோ குத்தாட்டம் போட்டே ஆக வேண்டிய கட்டாயம். உள்ளம் குளிர்ந்தல்லவா இருந்தது!
“என்ன ப்ரொஃபி, ஸ்டாஃப் ரூம்ல தாலி போட்ட மாதிரி இங்க எதுவும் ஃபார்மாலிட்டி இருக்கா? ஒருவேளை அம்மியை எடுத்துட்டு வந்துட்டீங்களோ?” எனக் கடும் யோசனையுடன் கேட்க,
“ம்ம் ஆமா, எடுத்து வந்து உன் தலைல போடுறேன். உன்னால எழுத முடியாதுல. சோ ஸ்பெஷல் பெர்மிஷன்ல உனக்குப் பதிலா நான் எழுதுறேன். நீ சொல்ற ஆன்சர் தான் எழுதுவேன். நோ மோர் சீட்டிங். அண்ட் இங்க கேமரா இருக்கு. சோ உன் உளறலை நிறுத்திக்க…” என்று கண்டிப்பாய் பேசியவனை வியப்பாய் ஏறிட்டது இதயம்ரிதாவின் விழிகள்.
“எனக்காக பிரின்சிட்ட பேசுனீங்களா ப்ரொஃபி?” கன்னத்தில் கை வைத்தாள்.
“என் ஸ்டூடண்ட்ஸ் எக்ஸாம் மிஸ் பண்ண கூடாது. யாருக்கா இருந்தாலும் இதான் செய்வேன்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறியனிடம், “பட் இன்னைக்கு இதை எனக்காக தான செஞ்சீங்க?” என்றாள் கொஞ்சல் தொனியில்.
“ஊஃப்” கடினப்பட்டு பெருமூச்சை வெளியேற்றியவன், “எக்ஸாம் ஸ்டார்ட் பண்ணலாம்” என்று தேர்வில் கவனமானான்.
அவளுக்கோ கண்ணா லட்டு தின்ன ஆசையா மொமெண்ட் தான்.
அதிலும் முழுதாய் மூன்று மணி நேரம் அவனை ஆசை தீரப் பார்த்து ரசித்தாள்.
அவனைப் பார்த்துக் கொண்டே, பாடத்திற்கு தேவையில்லாத பதில்களை எல்லாம் மடமடவென ஒப்பிக்க, முதலில் பதில் தெரியாமல் உளறுகிறாள் என்றெண்ணி அமைதி காத்தவன் பின் புரிந்துகொண்டான்.
சரியான பதில்களுடன் இணைத்து, பல பாடங்களின் பதில்களையும் இணைத்துக் கூறியவளைத் திரும்பி முறைத்தவன், தேர்வெழுதி முடித்ததும் கையை சோம்பல் முறித்தான்.
“என்னை எழுத வச்சு பழிவாங்கணும்னு எத்தனை நாள் ஆசை உனக்கு?” நக்கலாக கேட்டவனிடம்,
“அச்சோ… கை வலிக்குதா ப்ரொஃபி. எத்தனை நாள் என்னை அசைன்மென்ட் எழுத சொல்லி கையை உடைச்சு இருக்கீங்க…” என நாக்கைத் துருக்கினாள்.
“ஆமா ஆமா, கை உடையுற அளவுக்கு நீயும் எழுதி தள்ளிடுவ பாரு!” என வாரியவன், “சரி ஸ்டாப் ரூம்க்கு வா. ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணனும்” என்றதில் அவள் விழித்தாள்.
கைக்குட்டையை எடுத்து விட்டால், அவனுக்கு உண்மை தெரிந்து விடுமே!
ஏதோ விளையாட்டிற்கு அவனை கிண்டல் செய்யத்தானே நாடகமாடினாள்… அவன் உண்மையிலேயே தனக்காக அக்கறை கொள்வது இனித்தது.
“ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடுறேன்!” என்றவளுக்கு தலையசைப்பைக் கொடுத்து விட்டு அவன் நகன்று விட, அவளுக்கு உள்ளம் பரிதவித்தது.
அவன் கொண்ட அக்கறையை வீண் போக வைக்க அவளுக்கு விருப்பமிருக்கவில்லை. அதே நேரம் உண்மையைக் கூறிவிட்டு, அவனைத் தன் மீது கோபம் கொள்ள வைப்பதிலும் மனமில்லை.
ஓய்வறைக்குச் சென்று அங்கும் இங்கும் நடந்தபடி சிந்தித்தவளுக்கு ஒரே வழி தான் புலப்பட்டது.
அவள் எப்போதும் காரில் தான் கல்லூரிக்கு வருவாள். அது சத்யாவிற்கும் தெரியும். ஆனாலும் வண்டியில் வந்ததாக பொய் கூறியதை அவளுக்காகத் தேர்வெழுதும் போது தான் உணர்ந்தான்.
தன்னை அவள் ஏமாற்றியிருக்கிறாள் என்ற கடும்கோபத்தில் அவளைத் தனது அறைக்கு அழைத்தவன், கையில் எரிச்சல் தரக்கூடிய மருந்தை தடவி விட்டு பழிவாங்க வேண்டும் என்றெண்ணிக்கொண்டான்.
சில நிமிடங்களில் இதயாவும் அவன் இருப்பிடத்திற்கு வந்தாள்.
“வாங்க மேடம். உக்காருங்க” என்று அவன் முதலுதவிப்பெட்டியில் மருந்தை எடுத்து விட்டு “உங்க கர்சீப்பை எடுக்குறீங்களா?” என்றான் வெகு கேலியாய்.
உதட்டைச் சுளித்த இதயா, இரு கையிலும் இருந்த கைக்குட்டையை அகற்ற ஆடவன் அதிர்ந்தே விட்டான்.
இரு கையிலும் ஆங்காங்கே கீறலும் சிராய்ப்புகளும் இருந்தது. அவன் அவளது காயத்தைக் கண்டு உள்ளம் வெதும்ப, அவன் கண்கள் கொண்ட வலியதில் இளைப்பாறினாள் பாவையவள்.
—–
கடந்த சிதைந்து போன நினைவுகளுடனே மாங்கல்யம் அணிவித்து முடித்ததும், அதி முக்கியமாக அவனுடனான ஒப்பந்தப் பத்திரத்தில் அவன் கையெழுத்திட்ட பிறகே, பதிவு திருமணத்தில் அவள் கையெழுத்திட்டாள்.
‘உன் தலையெழுத்தை மாத்த போறது இந்தக் கையெழுத்து தான் இதயா!’ ஆணவனின் மனதின் ஓலம் அறியாது, உணர்வற்ற முகத்துடன் திருமணத்தை முடித்தவள், விதுரனைப் புகைப்படம் எடுக்க வைத்திருந்தாள்.
தமையனின் திருமணத்திற்கு எப்படி எல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டுமென கனவு கண்டிருந்தானோ… கண்கள் கலங்கி சிவந்து கோபம் பெருக்கெடுத்து ஓடியது விதுரனுக்கு.
அதற்கும் சத்யாவிடம் எந்த எதிர்வினையும் இல்லை. விதுரன் புகைப்படம் எடுத்ததும், “இதை வைரல் ஆக்குறது உன் பொறுப்பு!” என்று கட்டளையிட்டவள், சத்யாவின் புறம் திரும்பி “லெட்ஸ் கோ பேபி!” என்றாள் ஏளனத்துடன்.
அதே ஏளனம் அவனிடத்தும் எதிரொலித்தது.
இதயாம்ரிதாவின் பிரம்மாண்ட பங்களாவில் நுழைந்தான் சத்ய யுகாத்ரன்.
இங்கிருந்து செல்லும்போது, அவளிடம் தலை நிமிர்ந்து நடக்க மானமும் மரியாதையும் பணமும் இருக்கவே கூடாது எனத் தனக்குள் சூளுரைத்துக் கொண்டான்.
அதற்குள் அவர்களது திருமண செய்தி தீயாய் சமூக ஊடகங்களில் பரவியது.
விஷாலுக்கு செய்தியைக் கேட்ட நொடியில் உலகமே இருண்டு போனது. எது நடக்கக்கூடாதென்று எச்சரிக்கையாய் இருந்தானோ அது நடந்தே விட்டது. தான் செய்த ஒற்றைப்பிழை கைக்கு கிடைத்தவளை இழக்க காரணமாய் இருந்ததை முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை அவனுக்கு. எப்படியும் அவள் தன்னிடம் வந்து விடுவாள் என்ற ஆணவம் மெல்ல மெல்ல அழியத் துவங்க, இழந்தவளை மீட்க ஆயத்தமானான் கோப வழியில்.
புது காதல் மலரும்
மேகா
ஹாய் டியர்ஸ்… நான் regular ud kaaga type panni vachuten. ஆனா என் பையன் என் மண்டல முட்டி அவனுக்கு ஒன்னும் ஆகல. என் மண்ட வீங்கி ரெண்டு நாளா செம்ம தலைவலி😌 இப்ப தான் லேப்டாப் பாக்கவே முடியுது🤧 சாரி பார் தி டிலே
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

ரிதா காதல் அவள் அப்பாவால் இல்லாமல் போனதா?.