Loading

திமிர் 9

அம்முவைச் சந்தித்த தருணம்…

சிங்கத்தின் கர்ஜனையில் பேச்சை இழந்தவள் மிரண்டு தலை உயர்த்த, “என்னடி சிரிப்பு?” ஒருமையில் அதட்டினான்.

“இதைப் போய் உங்க இடம்னு சொல்றீங்களே.”

“ஏன், இது என்னோட இடமா இருக்கக் கூடாதா?”

“உங்களைப் பார்க்க நாலு பேருக்கு டீ வாங்கிக் கொடுக்கக் கூட வழியில்லாத ஆளு மாதிரித் தெரியுது. நீங்க போய் இப்படி நாலு மலைக்குச் சொந்தக்காரன்னு சொன்னா சிரிப்பு வராதா.”

இதுவரை யாரும் அவனிடம் இப்படிப் பேசியதில்லை. தன் தோற்றத்தைக் கண்டு மிரண்டு ஓடியவர்களை மட்டுமே வாழ்நாளில் சந்தித்திருக்கிறான். அப்படியானவனின் உருவத்தை வைத்து இவ்வளவு தரக்குறைவாக விமர்சிப்பவளைக் கொல்லும் வெறி உண்டானது.

“அப்படியே அடிச்சுப் பல்ல உடைச்சிடுவேன்.”

அடிக்கப் பாயும் அவனை, “அனாதைப் பிள்ளையை அடிச்சா சாமி கண்ணக் குத்தும்.” தடுத்திட, “அனாதையா?” என்ற கேள்வி அவனிடம்.

“ம்ம்…”

“அதனாலதான் சாக வந்தியா?”

மறுப்பாகத் தலையசைத்தவள், “வாழப் பிடிக்காம… இந்த உயிர் எனக்கு வேண்டாம். என்னை மாதிரி ஒருத்தி இந்த உலகத்துல வாழக்கூடாது. நான் செத்தா இங்க நிறையப் பேருக்குச் சந்தோஷம்.” என்றாள் கலங்கிய குரலில்.

அதுவரை ஆட்டமாடிக் கொண்டிருந்த அவன் கோபம் தணிந்தது. அவள் பக்கம் இறங்கி வந்தவன், “இங்கப் பாரு, என் அனுபவத்துல சொல்றேன். மரணத்தை நம்ம தீர்மானிக்க முடியாது. அதுதான் நம்மளைத் தீர்மானிக்கும். எப்படி எப்படியோ வாழனும்னு ஆசைப்படுற ஒருத்தனை அம்போன்னு போக வைக்கும். வாழவே கூடாதுன்னு நினைக்கிற உன்னை, என்னை மாதிரி ஒருத்தனை அனுப்பிக் காப்பாத்த வைக்கும். கிடைச்ச உயிரை அனாமத்தா நினைக்காம வாழப் பாரு.” என்றான்.

“என் வாழ்க்கைல என்ன நடந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியாது. என் அளவுக்கு உங்களுக்குக் கஷ்டம் வந்திருக்காது. அதனால என்னை என் போக்குல விட்டிடுங்க. நான் நிச்சயம் நீங்க போனதுக்கு அப்புறம் சாகத் தான் போறேன்.”

“பைத்தியக்காரி! வாழனும்னு நினைக்கிற எத்தனையோ பேர், இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்காங்க.” எனும் பொழுது அவன் கண்கள் கலங்கியது.

அதை ஒரு நொடியில் மாற்றியவன் அவள் அறிந்ததை அறியாமல், “போராடி வாழக் கத்துக்க. உன்கிட்ட எதுவுமே இல்லன்னாலும் உயிர் இருக்கு. இந்தப் பிரபஞ்சம் உன்னை உயிரோட விட்டு வச்சிருக்குன்னா, நிச்சயம் ஒரு பதில் கொடுக்கும்.” பொறுமையாக எடுத்துக் கூறியும் கேட்காதவள்,

“தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்புங்க. நான் நிம்மதியா சாகணும்.” அடம் பிடித்தாள்.

கனிந்த அவன் முகம் சிடுசிடுத்தது. அடிக்கக் கை உயர்த்தியவன் அவள் பயந்து பின்னோக்கிச் சென்றதில் அதை நிறுத்தி, “எந்திரி!” கட்டளையிட, மருண்ட விழிகளோடு பார்த்தாள்.

“என்னடி முழிக்கிற? உன்னை இப்படியே விட்டுட்டுப் போனா என் இடத்தைச் சுடுகாடா ஆக்கிடுவ. ஒழுங்கா உன் வீட்டோட விவரத்தைச் சொல்லிட்டு ஓடப் பாரு.”

“எனக்குத் தான் யாருமே இல்லையே.”

“அப்போ இவ்ளோ நாள் எங்க இருந்த?”

“ஆசிரமத்துல!”

“அப்படி உனக்கு என்னதான் பிரச்சினை?”

“அதை மட்டும் கேட்காதீங்க, சொன்னா தாங்க மாட்டீங்க.”

“காலங்காத்தால வந்து உசுர வாங்குது பாரு. நிம்மதியா இருக்கணும்னு தான் இங்க வந்தேன். பிசாசு மாதிரி வந்து நிம்மதியக் கெடுக்குது. சாகற நாயி வேற எங்கயாவது போய் சாக வேண்டியதுதான. இன்னைக்கோ, நாளைக்கோன்னு இருக்கறவன்கிட்ட வந்து தாங்க மாட்டீங்க, ஏங்க மாட்டீங்கன்னு.”

“என்ன, இன்னைக்கோ, நாளைக்கோவா? அப்ப நீங்களும் சாகத்தான் இங்க வந்தீங்களா?”

“ஆமா. ரெண்டு பேரும் ஜோடியா குதிச்சி செத்துருவோமா?”

“ம்ம்!” என பவ்யமாகத் தலையாட்டியவள், “தனியா நிறையத் தடவை ட்ரை பண்ணி, பயத்துல பெயிலியர் ஆயிடுச்சு. நல்லவேளையா துணைக்கு வந்தீங்க. ஒரே அட்டெம்ப்ட்ல மேல போயிடனும்.” என்றவளைச் சினம் பொங்கப் பார்த்தான் அகம்பன் திவஜ்.

“தலையெழுத்து!”

“நம்ம தலையெழுத்து இப்படித்தான் எழுதி இருக்கு போல. அடுத்த ஜென்மத்துலயாவது சந்தோஷமா வாழலாம்.” என்றவளுக்கு அப்போதுதான் ஞானம் உதித்ததாக,

“ஆமா… உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே.” சந்தேகத்தோடு கேட்டாள்.

அதுவரை, சாதாரணமாக இருந்த அவன் முகம் அசாதாரணமாக மாறியது. நொடிப் பொழுதில் வந்து மறையும் அவன் முகமாற்றத்தைக் கவனித்தவள், “டிவில பார்த்த மாதிரி இருக்கு.” என உசுப்பி விட்டாள்.

“நான் ரொம்ப வருஷமா இங்கதான் இருக்கேன். என்னை எங்கயும் பார்த்திருக்க மாட்ட.”

“இல்ல. நான் பார்த்திருக்கேன் உங்களை.”

“ப்ச்! சும்மா நைநைன்னு பேசிட்டு இருக்காத. சாகத்தான வந்த. வந்த வேலையைப் பார்க்கலாம் வா…”

“இப்பவே வா?”

“ஆங்… இதுக்கு நேரம் காலம் எல்லாம் பார்ப்பியா?”

“அப்படி இல்லைங்க. நேத்து மதியம் சாப்பிட்டது. இப்ப நடந்த சாகசத்துல வயிறு ரொம்பப் பசிக்குது. எப்படியும் சாகத்தான் போறோம், நல்லா வயிறு முட்டச் சாப்பிட்டுட்டு சாகலாமா…”

அருவருப்பான முகபாவனையோடு அவளை ஏற இறங்கப் பார்த்தான். அது புரிந்தாலும் அலட்டிக் கொள்ளாமல், “இந்த லுக்கு தான் உங்களை எங்கயோ பார்த்த மாதிரி ஞாபகப்படுத்துது. கொஞ்சம் டைம் கொடுத்தீங்கன்னா யோசிச்சு எங்க பார்த்தேன்னு சொல்லிடுவேன்.” என அவனைத் திசை திருப்ப,

“ஒரு ஆணியும் வேணாம். எந்திரிச்சுத் தொலை. நல்லா மூக்கு முட்டத் தின்னுட்டு, நல்ல பள்ளமா பார்த்து விழலாம்.” என்றான்.

எழ முயற்சிக்கும் பொழுது தான், உடலில் உண்டான காயத்தின் வலியை உணர்ந்தாள். முக்கி முனங்கலிட்டுத் தள்ளாடி எழுந்து நின்றவள் நின்ற வேகத்தில் விழுந்தாள்.

“என்ன?”

“எந்திரிக்க முடியலங்க.” என அடிபட்ட காலைக் காண்பித்தாள்.

கணுக்காலில் பலத்த காயம். ரத்தம் விடாமல் கசிந்து கொண்டிருந்தது. அதைக் கவனித்தவன், “மெல்ல அந்தப் பாறையப் பிடிச்சிட்டு நில்லு.” என்று விட்டுத் தான் கொண்டு வந்த பெரிய மூட்டையை இடது கையில் தூக்கிப் பிடித்தான்.

என்னவோ செய்யப் போகிறான் என்ற நினைப்பில் எழுந்து நின்றவளின் கண்கள் அகன்றது. வலது கையால் தூக்கியவன், ஒரு குலுக்கு குலுக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் தூக்கியதையே அதிசயமாகப் பார்த்தவள் ஒற்றைக் கையில் தூக்கியதில் மிரண்டு விட்டாள். மீண்டும் அவள் கண்கள் அவனை வட்டமிட்டது. ஒரு பெண்ணைத் தூக்கிச் செல்லும் எந்த அறிகுறியும் அவனிடம் இல்லை. அதே திடம், அதே சினம்! பார்வை நேராக இருந்தது.

அவன் குலுக்கிய பொழுது, கைகள் இரண்டையும் தோளோடு சுற்றிக் கொண்டவள் பாறையைப் பிடிப்பது போன்று உணர்ந்தாள். உண்மையாகவே பாறை போல் இரக்கமில்லாமல் தன்னிடம் நடக்கப் போவதை அறியாதவள், ஒரு கையில் சுகமாக ஊர்வலம் வந்தாள். தூக்கியதில் இருந்து தன் மீதான பார்வையை அகற்றாத அவள் விழிகளை அறிந்தும், கருத்தில் கொள்ளாது தன் போக்கில் நடந்தான் அகம்பன்.

“எப்படி ஒரு கையால தூக்கிட்டு வரீங்க. நான் அவ்ளோ வெயிட்லெஸாவா இருக்கேன்.”

“நாலு பன்னிக்குட்டிய மொத்தமா தூக்குன மாதிரி இருக்கு.”

முகத்தைச் சுருக்கிக் கொண்டு, “ஆமா அது என்ன, அந்தக் கையில.” கேட்க, “தெரிஞ்சு என்ன பண்ணப் போற. நானே தூக்க முடியாம தூக்கிட்டு வரேன், மூடிகிட்டு வாடி.” சிடுசிடுத்தான்.

சுருங்கிய முகத்தை இன்னும் சுருக்கிக் கொண்டு, “தூக்க முடியலன்னா விட்டிடுங்க.” என்றிட, “ஏன் விழுந்து செத்து என் தலையை உருட்டவா?” கேட்டான்.

“பேயா வந்து டார்ச்சர் பண்ணுவேன்னு பயப்படுறீங்களா?”

“பேயா தனியா வேற வரணுமா!”

“அவ்ளோ டார்ச்சரா பண்றேன்?”

“வாய மூடிட்டு வா, பிசாசு!”

“நீங்க ரொம்பப் பேசுறீங்க. நான் உங்க கூடச் சேர்ந்து சாக வரமாட்டேன்.”

“ம்ம்… ஆமா, நம்ம ஒலிம்பிக்ல ஓடித் தங்கப்பதக்கம் வாங்கப் போறோம். நீ வர மாட்டேன்னு அடம் பிடிச்சா தங்கப்பதக்கம் கிடைக்காம போயிடும். வாய மூடிக்கிட்டு வரல, அப்படியே பாறையோட பாறையா உருட்டி விட்டிடுவேன்.”

“ஒலிம்பிக்!” எனக் கண்களை விரித்தவள், “உங்களை அங்க…” என வாய் திறந்தவள் தொடையை இறுக்கித் தன்னோடு சேர்த்துக் கொண்டவன் நேருக்கு நேராக அவள் விழிகளைச் சந்தித்து,

“இனி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சு, நானே சாகடிச்சிடுவேன். மூச்சத் தவிர வேற எந்தச் சத்தமும் உன்கிட்ட இருந்து வரக்கூடாது.” என இறுக்கிய தொடையில் ஐவிரல் ரேகை பதியும் அளவிற்கு இரக்கமில்லாமல் வதைத்து, அடுத்த நொடி பார்வையை அவளிடம் இருந்து விலக்கி விட்டான்.

அவள்தான், அவனோடு நெருங்கிய அந்த நொடியோடு தன்னைத் தொலைத்து விட்டாள். முகமருகே இருக்கும் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவனோடு பயணப்பட்டாள். கரடு முரடான பாதைகளைக் கடந்து வந்தவன் கைகள் சற்றும் தளரவில்லை. ஏற்ற இறக்கப் பாதையில் அவள் உடல் அதிர்ந்ததே தவிர, அவன் உடல் அசையவில்லை. இப்படியான திடமான ஆண்மகனை இப்பொழுதுதான் சந்திக்கிறாள். கனவில் பார்க்கும் மாயாஜால சக்தி படைத்தவன் போல், இரும்பாக நடந்து வந்தவன் ஓரிடத்தில் இறக்கிவிட, இறங்கியவள் தோள்பட்டையில் சுற்றிக் கொண்டிருந்த கைகளை எடுக்கவில்லை.

அவளே எடுப்பாள் என்று நின்றிருந்தவன் நேரமானதால் திரும்பி ஒரு முறை முறைக்க, எதிரே அடித்துக் கொண்டிருந்த சூறாவளிக்காற்று தன்னை மோதுவது போல் உணர்ந்தவள் கைகளைக் கீழ் இறக்கினாள். பார்வையை நேராக்கி நடந்தவன் பின்னே, பார்வையை மேய விட்டவள் வாய் பிளந்தாள். இயற்கைக்கு நடுவில் சிறு குட்டை. அதற்கு மேல் மர வீடு. நிலத்திற்கும், வீட்டிற்கும் இடையே சிறு பாலம் அமைத்துக் கற்பனைக் காட்சியைக் கண் முன்னால் காட்டி இருந்தான்.

“வாவ்! இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு. இங்கதான் நீங்க இருக்கீங்களா?” என அவனுக்கு முன் சென்று கொண்டிருந்தவளின் தலை முடியைப் பற்றி இழுத்தவன்,

“பின்னாடி வரது பிடிக்காது எனக்கு.” என அவளைப் பின்னால் தள்ளி விட்டான்.

விழாமல், தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் அவன் முதுகை வெறித்தாள். அதை அறியாதவன் பாலத்தின் மீது ஏறி, “உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன். அதுக்குள்ள நீ யாரு, என்னன்னு சொல்லிட்டு இங்க இருந்து கிளம்பிடனும். இங்க என்னைப் பார்த்ததையும், இப்படி ஒரு இடம் இருக்கறதையும், யார்கிட்டயும் சொல்லக்கூடாது. மீறிச் சொன்னா கஷ்டப்பட்டுச் சாக வேண்டிய தேவை இருக்காது. நானே கழுத்தறுத்துக் கொன்னுடுவேன்.” என்ற மிரட்டலோடு பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தவன் பின்னே மெதுவாகக் கால் ஊன்றிச் சென்றாள்.

“என்னோட எந்த திங்க்ஸையும் யூஸ் பண்ணக் கூடாது. முக்கியமா என் அனுமதியில்லாம இந்த ரெண்டு நாள்ல எங்கயும் போகக்கூடாது, புரிஞ்சுதா.”

“நீங்க மிலிட்டரில வேலை பார்க்குறீங்களா?”

“ஆஹான்!”

“இப்படி ஸ்ட்ரிக்டா ஆர்டர் மேல ஆர்டர் போடுறீங்களே.”

“யாராயிருந்தா உனக்கு என்ன? இந்த மாதிரி வாய் துடுக்கா என்கிட்ட எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது. ஒரு நேரம் போல ஒரு நேரம் அமைதியா இருக்க மாட்டேன்.”

“எந்த நேரம் அமைதியா இருப்பீங்கன்னு சொன்னா, அப்போ கேட்டுக்குறேன்.” என்றவளை முறைத்தவன்,

“கால் உடைஞ்சதுக்குப் பதிலா வாய் உடைஞ்சு இருக்கலாம்.” என்றான்.

“உங்களுக்கு ரொம்பக் கோபம் வருமா ஆர்மி சார்”

“இப்பதான எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாதுன்னு சொன்னேன்.”

“சாரி ஆர்மி”

ஒரு இருக்கையைக் கைகாட்டியவன், “இங்கயே உட்காரு. என்னோட திங்ஸ் மட்டும் இல்ல, நான் யூஸ் பண்ற பிளேஸைக் கூட யாரும் யூஸ் பண்ணக்கூடாது. எதுவா இருந்தாலும் இங்கயோட முடிச்சுக்க.” என்று விட்டு அகம்பன் நகரச் சிடுசிடுத்தது அவள் முகம்.

***

பொம்மை போல் இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவளை ஒரு பொருட்டாகக் கருத்தில் கொள்ளாது, காலை உணவைச் செய்து கொண்டிருந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்,

“உண்மையாவே இது உங்க இடமா?” பேச்சை ஆரம்பித்தாள்.

“ரெண்டு தோசை போதுமா?”

“ரெண்டு போதுமான்னு கேக்குறீங்களா? இல்ல ரெண்டு தான் தருவேன்னு சொல்றீங்களா?”

பிடித்துக் கொண்டிருந்த கரண்டியோடு திரும்பியவன், “இங்கப் பாரு… தெரிஞ்சவங்க கேள்வி கேட்டாலே பிடிக்காது எனக்கு. நீ யாருன்னே தெரியல, ஓயாம கேள்வி கேட்டுட்டு இருக்க. செத்துடக் கூடாதுன்னு இரக்கம் பார்த்து இங்க உட்கார வச்சிருக்கேன். ரெண்டு நாள்ல இங்க இருந்து ஓடப் போற உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.” என்றவனை முடிந்தவரை மனத்திற்குள் திட்டிக்கொண்டாள்.

எதிரில் இருந்தவள் மன ஓட்டத்தை விழிகளில் படித்து, “என் இடத்துல உட்கார்ந்துட்டு என்னையே திட்டிக்கிட்டு இருக்கியா?” அதிரவிட்டான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காதவள் அகண்ட கண்களோடு அவன் மீதான பார்வையை மாற்றாமல் இருக்க, “தின்னு தொல.” தட்டை ‘தொம்’ என்று தரையில் வைத்தான்.

அவள் தலையில் இடித்தது போல் இருந்தது. பிரம்மையில் இருந்து தெளிந்தவள், “நான் இன்னும் பிரஷ் பண்ணல.” என்றாள்.

“பண்ணலன்னா போய் பண்ணு. இல்லனா ஊத்த வாயோட தின்னு. என்கிட்ட எதுக்குச் சொல்லிட்டு இருக்க.”

“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே.”

எந்தப் பாவனையும் கொடுக்காமல் அகம்பன் நின்றிருக்க, “நீங்க ஏன் இப்படிச் சிடுசிடுன்னு பேசுறீங்க. உங்களுக்கும் என்னை மாதிரி யாரும் இல்லையா?” அவனைப் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொண்டே வார்த்தையைப் பிடுங்கக் கேட்டாள்.

கை இரண்டையும் கட்டிக்கொண்டு அங்கிருக்கும் மரத்தூணில் சாய்ந்தவன், “சாப்பிட்டு முடிச்ச கையோட இங்க இருந்து கிளம்பு.” என்றான் அதிகாரமாக.

விளக்கெண்ணையை மடக்கு மடக்கென்று குடித்தது போல், விழி பிதுங்கிப் பார்ப்பவள் மீது எந்தக் கருணையும் ஏற்படவில்லை அவனுக்கு. இரு நொடி முறைத்துக் கொண்டு நின்றிருந்தவன் தனக்கான தட்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

“ச்சீ! சரியான காட்டுமிராண்டியா இருக்கான். வாயத் தொறந்தாலே கத்தி பாஞ்சு வருது. எதுக்குமே மசிய மாட்டேங்குறான். இவனை எப்படித்தான் கரெக்ட் பண்ணி வந்த வேலையை முடிக்கப் போறேனோ?”

வாய்விட்டுப் புலம்பியவள் தனக்கு முன்னால் இருக்கும் தட்டைக் கண்டு, “வைக்கிறது ரெண்டு தோசை. இதில் ஆயிரத்தெட்டு கண்டிஷன் வேற. தின்னதும் கிளம்பச் சொல்லிட்டானே, இவனை எப்படிச் சமாளிக்கப் போறேன்.” புலம்பலோடு கால் ஊன்றி வாசலில் வந்து நின்றாள்‌.

பாலத்தின் படிக்கட்டில் அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டிருந்தான். இரும்பைப் பற்களுக்கு இடையே வைத்து அசைப்பது போல் ஆங்காரமாக இருந்தது அவன் முகம். சாப்பிடும் பொழுது கூட இலகுத்தன்மை தெரியாத அவனை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் செவியில்,

“என்ன?” குரல் விழுந்தது.

“சாரி!”

“எதுக்கு?”

“உங்களை ரொம்பத் தொல்லை பண்றதுக்கு.”

“தெரிஞ்சா சரி!”

“எப்படியோ கிளம்பப் போறதுன்னு ஆகிடுச்சு. உங்க கூட உட்கார்ந்துச் சாப்பிட்டுட்டு மட்டும் போகவா…”

இதற்காகவாவது, அவனிடம் இருந்து தன்மையான வார்த்தைகள் வரும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு அடி எடுத்து வைக்க, “தனியா உட்கார்ந்து சாப்பிட்டா தொண்டைக்குள்ள இறங்காதா தோசை.” என்ற வாசகம் எடுத்து வைத்த அடியைப் பின்வாங்க வைத்தது.

பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். சில நொடி அமைதிக்குப்பின், அவள் பக்கம் திரும்பியவன் கண்ணை அசைத்தான். என்னவென்று புரியாது முழித்தவளை முறைத்தவன், “இங்க வான்னு கூப்பிட்டேன்.” என்றான்.

‘அதை ஏன்டா ஆடு வெட்டப் போற அய்யனார் கணக்கா விரைப்பா சொல்ற.’

உள்ளுக்குள் இருக்கும் நடுக்கத்தை வெளிக்காட்டாது நொண்டி நடந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள். உடனே இரண்டு அடி தள்ளி அமர்ந்தான் அகம்பன் திவஜ். கொதிக்கும் நெருப்பை அள்ளி மேலே வீசியது போல் உணர்ந்தவளின், உதடு வரை வந்து நின்றது கெட்ட வார்த்தைகள். காரியத்தைக் கெடுத்துக் கொள்ள விரும்பாது அமைதியாக அமர்ந்திருக்க,

“உன் பேரு என்ன?” கணீர் குரலில் கேட்டான்.

“அம்மு!”

“இது ஒரு பேரா?”

“யாருக்குத் தெரியும். நான் வளர்ந்த ஆசிரமத்துல என்னை வளர்த்தவங்க இப்படித்தான் கூப்பிடுவாங்க.”

“ம்ம்!”

“உங்க பேர் என்ன?”

“அதைத் தெரிஞ்சுக்கிற அளவுக்கு முக்கியமான ஆள் இல்ல நீ.”

‘இவனக் குத்திக் கொன்னுட்டு, ஃபைல எடுத்துக்கிட்டுக் கிளம்ப வேண்டியதுதான். பெரிய இவன் மாதிரிப் பேசிக்கிட்டு இருக்கான். அப்படியே ஊர்ல இல்லாத சீமத்துரை பேரு, இவன் பேரு.’

“திரும்பவும் மனசுக்குள்ள திட்டிக்கிட்டு இருக்கியா?”

“ம்ஹூம்!”

“எந்த ஊர் நீ?”

“தஞ்சாவூர்!”

நொடிப் பொழுதில் சந்தேகக் கண்ணை அவள் மீது வீசியவன், “அந்த ஊர் பாஷையே உன்கிட்ட வரலையே. சென்னையில பேசுற மாதிரிப் பேசுற.” என அவளைப் பதறவிட,

“நா…நான் ஒன்னும் குடும்பமா வளரல. என்னை மாதிரி யாருன்னே தெரியாத அனாதைங்க கூட வளர்ந்தவள். அனாதை என்கிற பாஷை மட்டும் தான் எங்களுக்கு.”

“ஆசிரமத்துல ஒருத்தவங்க வளர்த்தாங்கன்னு சொன்னியே, அவங்க இப்ப இல்லையா?”

“இறந்துட்டாங்க!”

“வேற யாருமே இல்லையா உனக்கு?”

“இருக்காங்க!”

“யாரு?”

“நீங்கதான்!” என்றதும் வாயில் அடைத்த தோசையோடு அவள் பக்கம் திரும்பிய அவன் பார்வை, முதல் முறையாகக் கேள்வி ததும்பிய ஆச்சரியத்தோடு நோட்டமிட்டது.

முரட்டுத்தனமான கண்களுக்குள் உலா வரும் ஆச்சரியத்தை, ஆச்சரியத்தோடு கண்டு கொண்டிருந்தவள் விழிகள் சற்றும் அகல மறுத்தது அந்த ஆண்மகனின் கண்களை விட்டு. அதிதீவிரமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவனுக்குள் தொலைவது போல் உணர்ந்தாள். அந்தப் பார்வை வீச்சைத் தாங்க முடியாது சகஜமாகியவன்,

“நானா?” கேட்டான்‌.

“ம்ம்… என்னை வளர்த்தவங்க கிட்டக் கொஞ்சம் பாசத்தைப் பார்த்து இருக்கேன். எனக்காக அப்பப்ப ஏதாச்சும் செய்வாங்க. அவங்ககிட்ட எந்தச் சுயநலத்தையும் பார்த்ததில்லை. அதுக்கப்புறம், அப்படி நான் பார்த்த ஆள் நீங்க மட்டும் தான். எமன்கிட்ட இருந்து காப்பாத்தி, யாரு என்னன்னே தெரியாத எனக்கு உங்க வீட்ல இடம் கொடுத்ததோடு இல்லாம, இப்படிச் சாப்பாடு கொடுத்து இருக்கீங்களே. உங்களை என் உயிர் இருக்கிற வரைக்கும் என் சொந்தமா தான் பார்ப்பேன்.”

கல்லுக்குள் முதல்முறை ஒரு சொட்டு ஈரம் விழுந்தது. அவை அந்தப் பெரிய பாறையை அசைக்கவில்லை என்றாலும், சற்றுத் தடுமாற வைத்தது. பாவத்தின் ஸ்தானத்தில் அவளைத் தூக்கி வைத்தவன் கருணையாக, “சாப்பிடு!” என்றான்.

சாப்பிடாமல், தோசையில் கோலமிட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்தவன் என்னவென்று கேட்க, “இந்தக் கால் வலி உயிர் போகுது.” முகத்தைச் சுருக்கினாள் அம்மு.

அப்போதுதான் அதில் கவனம் திரும்பியது அகம்பனுக்கு. கணுக்காலில், இன்னும் ரத்தம் சிந்திக் கொண்டுதான் இருக்கிறது. அதில் விழுந்த அவன் பார்வை மெல்ல அவளுடலை ஆராயத் துணிந்தது. அங்கங்கே சில உராய்ப்புகளும், ரத்தக் காயங்களும் அரங்கேறி இருந்தது. புருவத்திற்கு மேலும், கீழ் உதட்டிற்குப் பக்கத்திலும், காயம் பளிச்சென்று காட்சி கொடுத்தது. என்ன நினைத்தானோ, சாப்பாட்டுத் தட்டோடு உள்ளே நுழைந்து இரு நொடியில் வெளியில் வந்து,

“காட்டு…” என்றான்.

அம்முவிற்கு ஒன்றும் புரியவில்லை. விடைதேடி அவனை நோக்க, “மருந்து போட்டு விடுறேன்.” என்றான்.

சின்னப் புன்னகையோடு காலை அவன் மடிமீது வைக்க, உக்கிரத்தின் பார்வை அவளை எரித்தது. நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று காட்டிய கோப முகத்தில் பயந்து நடுங்க,

“தரையில வை!” கடுப்போடு கூறினான்.

பௌர்ணமி நிலவு, அமாவாசை ஆகிவிட்டது. ஏமாற்ற முகத்தோடு காலைத் தரையில் வைத்தவள் முகத்தைக் கீழ் இறக்கிக் கொண்டாள். மருந்தைப் போட்டு விடத் தொடங்கினான் அகம்பன். வலியில் சிணுங்கும் பொழுதெல்லாம் முறைத்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல்,

“இப்படியே இழுத்துக்கிட்டு இருந்தா எப்படி மருந்து போடுறது? ஒழுங்கா காட்டு, இல்ல கால உடைச்சிடுவேன்.” என்றான்.

“வலிக்குதுங்க.”

“மருந்து போட்டா வலிக்கத்தான் செய்யும்!”

“உங்களுக்கு வந்தா தெரியும்.”

“நான் என்ன, உன்ன மாதிரிப் பைத்தியமா?”

“என்ன…”

“ப்ச்! காலக் காட்டு!”

அப்போதும் அவள் சிணுங்கிக் கொண்டிருக்க, நிமிர்ந்து முறைத்துக் காலை ஒரே இழுவாக இழுத்தான். அதை எதிர்பார்க்காத அம்மு சற்று நகர்ந்து அமர, இரும்புக் கரத்தால் அவள் கால்களை இறுக்கப் பிடித்து மருந்து போட ஆரம்பித்தான். மருந்தின் தாக்கத்தை விட, அவன் கைவிரலின் தாக்கம் அதிக வலியைக் கொடுத்தது. சொன்னால், அதற்கும் திட்டுவான் என்று அஞ்சி வலியைப் பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

காலில் மருந்து போட்டவன், “மத்த எல்லா இடத்துலயும் போட்டுக்க.” மருந்தைக் கையில் கொடுக்க, “பயமா இருக்குங்க, நீங்களே போட்டு விடுங்க.” குரல் குறைத்துக் கூறினாள் அம்மு.

“நான் என்ன உனக்கு வேலைக்காரனா?”

“உதவிக்குப் பேரு வேலைக்காரன் இல்லைங்க.”

“நான் இதுவரைக்கும் எந்தப் பொண்ணுங்களோட காலையும் தொட்டதில்லை. போனால் போகுதுன்னு உன் காலைப் பிடிச்சு மருந்து போட்டிருக்கேன். இதுக்கு மேல எல்லாம் என்னால பண்ண முடியாது.”

“பொய் சொல்லாதீங்க. இவ்ளோ ஹாண்ட்ஸமா இருக்கீங்க. ஒரு பொண்ணு கூடவா உங்க லைப்ல வரல.”

“நான் யாரையும் சீண்டுனது இல்லை.”

“ஏன், பொண்ணுங்கன்னா பிடிக்காதா?”

“இன்ட்ரெஸ்ட் இல்ல!”

“இன்ட்ரெஸ்ட் இல்லையா, இல்ல உங்களை எந்தப் பொண்ணும் பார்க்கலையா?

“ஓய்!”

“பின்ன என்னங்க. இப்பல்லாம் நாலஞ்சு லவ்வும், கணக்கு இல்லாத பிரேக்கப்பும் இருக்கு. இந்தக் காலத்துல போய் இப்படிச் சொல்றீங்க.”

“எனக்குப் பொண்ணுங்க மேல பெருசா இன்ட்ரெஸ்ட் வரல. என் ஆசையெல்லாம் வேற.”

“ஒருவேளை பசங்க மேல இன்ட்ரஸ்ட் வருமோ?”

சட்டென்று, அவனுக்குள் புதைந்து போன காட்டுமிராண்டியை விழிகளில் உலாவ விட்டு அவளை மிரட்டினான். உள்ளுக்குள் எழும் பயத்தை வெளிக்காட்டாது, “தப்பு இல்ல, இப்ப அதெல்லாம் ரொம்ப சகஜம். எனக்கு அப்பவே கொஞ்சம் டவுட் வந்துருச்சு.” என்றவளை மென்று தின்னும் நோக்கோடு ஏறிட்டான்.

“என்ன டவுட்?”

“என்னை மாதிரி அழகான பொண்ணு பக்கத்துல இருந்தும், இப்படிச் சிடுசிடுன்னு இருக்கீங்களே, உங்களுக்கு…”

எட்டி அவள் கழுத்தைப் பிடித்துப் பாலத்தில் தள்ளி இறுக்கியவன், “யாரை என்னடி சொல்ற? என்னைப் பத்தி என்னடி தெரியும் உனக்கு. நீ இல்ல, மொத்த அழகையும் ஒன்னு கூட்டி எனக்குன்னு ஒரு ரதியை பிரம்மன் படைச்சா கூட, அவள் மேல என் பார்வை திரும்பாது. என்னைக்கும் பொண்ணுங்களைச் சுட்டு எரிக்கிற நெருப்பு நான். எவளும் என்னை முன்றானைல முடிஞ்சுகிட்டான்னு பெருமையா சொல்லிடக் கூடாது. இன்னொரு தடவை என்கிட்ட இந்த மாதிரிப் பேசின… பொதச்சிடுவேன்!” இரக்கம் இல்லாது கழுத்தை நெறித்து விட்டு எழுந்தான் அகம்பன் திவஜ்.

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்