Loading

சத்ய யுகாத்ரனுக்கான போட்டோஷூட் முடிந்தபிறகு, நேர்முகத்தேர்விற்கு வந்திருந்த பலரது புகைப்படங்களையும் ஆராய்ந்து விட்டாள் இதயாம்ரிதா.

எதிலும் மனம் திருப்தி அடையவில்லை. எப்படியும் அவனைத் தவிர்த்து விட வேண்டுமென்று கவனத்தை மற்ற கேண்டிடேட் புறம் திருப்ப முயன்றும் தோல்வியே கண்டாள்.

தனது மாடல் தேடலுக்கு சத்யாவைத் தவிர பொருத்தமான முகமும் தோற்றமும் வேறு யாருக்கும் கிஞ்சித்துக்கும் அமையவில்லை.

இதில் அவன் தேர்ச்சி பெற்றால், அவனைத் திருமணம் செய்தாக வேண்டுமே! அது எவ்வாறு சரிவரும்?

மனதின் தேடல் அவன் என்பதால் இந்த மறுப்பா? மனசாட்சியின் குரலில் சுளீரென இருந்தது அவளுக்கு.

அந்தத் தகுதியை அவன் எப்போதோ இழந்து விட்டான். இது முழுக்க முழுக்க வியாபார நிமித்தம் மட்டுமே.

துரோகங்கள் அவளை அடியாழத்தில் தள்ளி விடக்கூடாதென்றே இந்தப் போராட்டம். மற்றபடி இந்த வியாபாரத்தில் ஜெயித்துக்காட்டி, பண ரீதியாக வர்க்க ரீதியாக வெற்றி பெறலாம். ஆனால், வாழ்க்கை என்னைக்கோ அவளுக்கு பல முறை தோல்விகளை வாரி வழங்கி விட்டது.

இறுதியில் சத்யாவையே தேர்ந்தெடுத்து விட்டாள். ஆனால் அவனிடம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தது.

மாலை அலுவல் முடிந்ததும் அவனைப் பேச அழைத்தாள். அவள் வேலை விஷயமாக அழைப்பதாக எண்ணியவன், “இன்னைக்கு நடந்த இன்டெர்வியூல, யார் யாரை செலக்ட் பண்ணிருக்கீங்க மேம்…” என்றபடி மடிக்கணினியுடன் அவள் முன்னே தயாராக அமர்ந்திருக்க,

“சத்ய யுகாத்ரன்” என்றாள் அழுத்த விழிகளுடன்.

அவனது கரங்கள் தானாய் வேலைநிறுத்தம் செய்ய, இதழ்களில் ஒரு மர்மப்புன்னகை.

மடிக்கணினியை மூடி வைத்தவன், அவள் முன்னே கையைக் கட்டிக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திட, ஒரே ஒரு கணம் எப்போதும் போலவே, கல்லூரி பருவப்பெண்ணாய் அவனது நேர்த்தியில் உள்ளம் சிதறிப் பின் சிதறிய துண்டுகளை சேகரித்து ஒட்ட வைத்துக்கொண்டாள்.

உடைந்த துண்டுகளை என்றும் இணைக்க இயலாதே! அதே போல தான் அவனும்.

தனக்குள்ளேயே ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்ட இதயாம்ரிதா, “சோ யூ ஆர் தி ப்ராண்ட் மாடல்” என்றதும், “பட் இது ஒர்கவுட் ஆகுமா? ஒருவேளை ரீச் கிடைக்கலைன்னா?” சற்றே சந்தேகத்துடன் கேட்டான்.

“கிடைக்கும். அதுல எனக்கு டவுட் இல்ல” என்றவளின் உறுதியில் ஒற்றைப் புருவம் உயர்ந்தது அவனுக்கு.

“ஓகே கமிங் டூ தி பாய்ண்ட். இட்ஸ் அ கான்டராக்ட் மேரேஜ். பட், கான்டராக்ட் எப்ப முடியும்னு என்னால உறுதியா சொல்ல முடியாது. ஆல்ரெடி ரூல்ஸ் நான் சொல்லிருக்கேன். நமக்குள்ள எந்த வித பாண்ட்டும் இருக்க கூடாது” என்றவளின் பேச்சை நிறுத்தியவன், “நான் சொல்ல வேண்டியதை இன்னும் சொல்லலையே!” என்றான் அமர்த்தலாக.

லேசாய் கண்ணைச் சுருக்கியவள், “கோ அஹெட்!” என்று சீட்டின் பின்னால் சாய்ந்து அவனை அளவெடுத்தாள்.

“எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு. அதுக்கு ஓகேன்னா, நீ சொல்றதுல எனக்கு ஓகே” என்றவனின் பன்மை தாற்காலிகமாக கைவிடப்பட்டது.

பார்வையாலேயே அவனை மேலும் பேச உத்தரவிட்டவளின் அதிகார தோரணையில் சின்னதொரு ரசனை அவனிடம்! அதனை அவனே அறியாது போனது தான் விந்தை.

“என்னோட ஸ்கூல், காலேஜ் சர்டிபிகேட் காலேஜ்ல மாட்டிருக்கு. எனக்கு அது வேணும்…” என்றதும் அவளிடம் சிறு யோசனை.

“என்ன… அதை வாங்கிட்டா ரூல்ஸ பிரேக் பண்ணிடுவேன்னு பயமா?” அர்த்தப்பார்வையுடன் அவன் வினவ,

“ரூல்ஸ் பிரேக் பண்ணுனா, நான் உங்க போன்-ன பிரேக் பண்ணிடுவேன் மிஸ்டர் சத்யா…” அவளும் குதர்க்கமாய் குத்தினாள்.

“ஓஹோ! மேரேஜ்னு சொன்னதும் ஆட்டோமேடிக்கா வைஃப் ரோல் எடுத்துட்டியோ?” சத்யா புருவம் உயர்த்தியதில், அவளிடம் சிறிய தடுமாற்றம்.

அந்த உரையாடலைத் தவிர்க்க, “பட் அங்க இருக்குற சர்டிபிகேட்டை எப்படி வாங்குறது. ஆல்ரெடி சார் பிளாக் மார்க் எல்லாம் வாங்கிருக்கீங்க” என்றவளின் நக்கலில் உள்ளுக்குள் அத்தனை வலி அவனுக்கு. துவண்டு போன மனதினை தூக்கி நிறுத்தியவன், “வாங்க முடியுமா முடியாதா?” எனக் கேட்டான் தீர்க்கமாக.

“வில் ட்ரை. இல்லன்னா சர்டிபிகேட் மிஸ் ஆகிடுச்சுன்னு சொல்லி வாங்கிக்கலாம்… பட், இப்ப எதுக்கு அது? என்னை மேரேஜ் பண்ணுனா நீங்களும் செட்டில் தான?” என ஏளனமாக கேட்க,

“அதெப்படி சொல்ல முடியும் மேடம். ஒருவேளை மொத்தமா திவாலாகி நீங்க நடுத்தெருவுக்கு வந்துட்டா, நானும் உங்க கூட வரணும்னு அவசியம் இல்லையே. எனக்கு எப்படி ‘பே’ பண்ணுவீங்க. சோ எனக்கும் வேற வேலை வேணும்ல” என்றதில் அவள் முறைத்தாள்.

“வாங்கித் தரேன்” கடுகடுவென அவள் உரைக்க,

“ம்ம்… மார்னிங் 9 டு நைட் 9 வரை நீயும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரைட்? அதுக்கு மேல ஒரு செகண்ட் கூட என்னால அந்த ரோல் பண்ண முடியாது. அப்படி ஒருவேளை செஞ்சே ஆக வேண்டிய சூழ்நிலை வந்தா, முந்தின நாளே என்கிட்ட பெர்மிஷன் வாங்கணும் எஸ்ட்ரா டைம்க்கு. ஆன் ஸ்பாட்ல புது ரூல்ஸ் எல்லாம் ஆட் பண்ண கூடாது. நான் எங்க தங்குறது?” எனக் கேட்டவனின் திமிர்த்தனத்தில் கோபம் தலைக்கேறியது.

“என் வீட்ல தான் இதென்ன கேள்வி” சற்றே எரிச்சல் அவளிடம்.

“அப்போ எனக்கு ஒரு கீ வேணும். 9 க்கு மேல நான் வீட்டுக்குப் போய்டுவேன்” என்றான் அழுத்தமாக. அவள் சில நேரம் 11 மணி வரை அலுவலில் இருப்பதை பார்த்திருக்கிறான். அதன்பிறகு, காலை 5 மணிக்கு எல்லாம் மீண்டும் அலுவல் வந்து விட்டு, பகல் நேரத்தில் கண் சிவந்து அமர்ந்திருப்பதையும் கவனித்திருக்கிறான். அவனும் அவ்வாறு கண் விழித்து அவளுக்காக உழைக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லையே!

“ஃபைன்! நெக்ஸ்ட்?”

“நீ ஏதோ ஆப்ஷன் சொன்னியே. நைட் 9 க்கு மேல செகண்ட் பேமிலி கூட வச்சுக்கலாம்னு” என இழுத்திட, சற்றே இறுகியவள் “எஸ். யுவர் சாய்ஸ்” என்றாள் இயல்பு தொனியில்.

“ப்ச் ப்ச்! கைல நெய்ய வச்சுட்டு நான் ஏன் வெண்ணெய்க்கு அலையனும்?” தலை சாய்த்து குதர்க்கமாக கூறியவனின் கூற்றில் மெல்ல திடுக்கிட்டவள், “வாட் டூ யூ மீன்?” எனக் கேட்க,

“யூ நோ, வாட் ஐ மீன்!” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

“சத்யா…” அவள் கண்டிப்பாய் அழைக்க,

“நைட் 9 மணிக்கு மேல நமக்குள்ள எந்த பாண்ட்டும் இருக்காது. பட் அதுவரை? என்னால சந்நியாசி வாழ்க்கை வாழ முடியாது” என்று சத்யா நிறுத்தியதில், “அதுக்கு தான் நான் ஆப்ஷன் சொல்லிட்டேனே” என்றவளை இடைமறித்தவன், “ஐ வாண்ட் யூ!” என்றான் திடமாக.

அவளோ அவனை உறுத்து விழிக்க, “வாட் இதயா? உன் மாடல்காக நீ அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண மாட்டியா?” என ஏளனத்துடன் கேட்டதில் வெடுக்கென இருக்கையில் இருந்து எழுந்தவள், “திஸ் இஸ் தி லிமிட் சத்யா” எனப் பொருமினாள்.

“நான் எதுவும் லிமிட் க்ராஸ் பண்ணலையே. நான் கான்டராக்ட் ஹஸ்பண்ட்டா, உன்னைத் தவிர வேற யாருக்கும் மாடலா போக கூடாதுன்னா பணத்தைத் தாண்டி எனக்கு சில ஃபேவர் கிடைக்கணும் தான?” என்றவனின் இதழ்கள் இளக்காரமாக வளைந்தது.

அவனைத் தீப்பார்வை பார்த்தவளிடம், “டோன்ட் வொரி… உன்கூட குழந்தை பெத்துட்டு குடும்ப வாழ்க்கைல குதிக்கணும்னு எனக்குத் துளியும் ஆசை இல்ல. ஆனா உன்மேல இருக்கு. உனக்கும் என்மேல இருக்கு தான? ஆசை!” நக்கல் குரலில் நயமாய் கூறியதில், அவனை உணர்வற்று ஏறிட்டாள்.

“ஓகே! தென்…” என இறுக்கத்துடன் கூறியவளை ஒரு கணம் இகழ்ச்சியாய் ஏறிட்டவன், “ஹஸ்பண்டா இருக்க எனக்கு ‘பே’ வேணாம். என்னை விக்கிற மாதிரி இருக்கும். என் ஓல்ட் ஸ்டூடன்ட்காக இந்த கன்செஷன் கூட பண்ண மாட்டேனா என்ன?” மந்தகாசப்புன்னகை அவனிடம்.

“அவ்ளோ தானா?” அவள் கேட்டதும், “சோ உனக்கு ஓகே தானா?” என்றான் தாடையைத் தடவியபடி.

அவளோ தோளைக்குலுக்கிக் கொண்டு, “எஸ்… எனக்குத் தேவையானதை நான் கேட்டேன். உங்களுக்கு தேவையானதை நீங்க கேட்டீங்க. வெல், ஒருத்தவங்க சூழ்நிலைல புகுந்து விளையாடுறது தான இப்ப ட்ரெண்ட். நீங்க ட்ரெண்ட்ல இருக்குறது தான் இந்த பீல்டுக்கும் தேவை” என மறைமுகமாக அவனைக் குத்திட,

“இருந்து தான ஆகணும் டியர். இல்லனா இருக்குற இடம் தெரியாம போயிடுவோம்” என்றவனின் முகத்தில் அதீத வஞ்சம் ஜொலித்தது.

—-

தன் மகளிடம் இருந்து இப்படி ஒரு தகவலை உமா எதிர்பார்க்கவே இல்லை.

தான் திருமணம் செய்யப்போவதாகவும், இப்போதைக்கு தன்னை சென்னைக்கு வர வேண்டாம் என்றும் கூறியவளின் கூற்று புரியாது விழித்தார்.

“என்னடா சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல…” உமா பதற,

“டோன்ட் வொரி மாம். என் ஹாண்டசம் பி. ஏ’வை தான் மேரேஜ் பண்ணிக்கப் போறேன். நீங்க தான சொன்னீங்க. எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குன்னு” என்றதில், “அது சந்தோசம் தான் அம்ரி. ஆனா என்ன இப்படி திடீர்னு. என்னை வரவேணாம்னு சொல்றியே!” என்றார் தாங்கலாக.

“மாம் ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட். இப்ப எனக்கு நிறைய கமிட்மெண்ட்ஸ். எல்லார்கிட்டயும் சொல்லி மேரேஜ் பண்ண டைம் இல்ல. சோ சிம்பிள்ளா ரெஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணப்போறேன். நான் இங்க சிட்டுவேஷன் கொஞ்சம் நார்மல் ஆனதும் சொல்றேன். நீங்க வாங்க… என் ரிசப்ஷன க்ராண்டா பண்ணலாம்” என சமாளித்தாள்.

“அதெப்படி அம்ரி. என்னால இருக்க முடியும். நீ ஓகே தான. ஒன்னும் பிரச்சினை இல்லையே” தாயின் மனம் பலதை எண்ணி பரிதவித்தது.

“ஒன்னும் ப்ராப்ளம் இல்ல மாம். விஷாலுக்கு தெரிஞ்சா அவன் எதுவும் ப்ராப்ளம் பண்ணுவான். சோ நான் தனியா ஹாண்டில் பண்ணனும்னு நினைக்கிறேன்…” என்றதில் அவருக்கும் புரிந்தது.

விவாகரத்து ஆன பின்னும் விஷால் அதனை ரத்து செய்யக்கோரி மகளின் பின்னே அலைவது தெரிந்ததால், அவனுக்குத் தெரியாமல் திருமணம் செய்ய எண்ணுகிறாள் என்ற நிதர்சனம் அறிந்தவருக்கு மனம் கேட்கவில்லை.

“புரியுது தான்…” என இழுத்த உமாவை எப்படியோ பேசி சரி செய்தாள்.

அடுத்த ஒரு வாரத்தில், சத்ய யுகாத்ரனுக்கும் அவளுக்குமான ஒப்பந்தத்தைத் தயார் செய்தவள், திருமணத்தைப் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்திருந்தாள்.

வெளி உலகத்தைப் பொறுத்தவரையில், சத்யா ஒளிராவின் ப்ராண்ட் மாடல் மட்டுமல்ல. இதயாம்ரிதாவின் கணவனும் கூட. அவனை விலைக்கு வாங்க இயலாது என்பதை புரிய வைக்கவே இந்த சட்டப்படியான திருமணம்.

அவளுக்கும் அவனுக்குமாக உடைகளை அவளே தயார் செய்து, சத்யாவிடம் கொடுத்தாள்.

“இது வெடிங் ட்ரெஸ் சத்யா. மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷன்கு உங்க ஒரிஜினல்ஸ் வேணும். எப்ப கிடைக்கும்?” எனக் கேட்டதும், அவனிடம் சிறு தடுமாற்றம்.

அமைதியாய் நின்றவனிடம் “சத்யா… கவர்மெண்ட் ஐடிஸ் வேணும். எப்ப கிடைக்கும்?” மீண்டும் அவள் வினவியதும் “என் கைல இல்ல எதுவும்…” என்றான் மெதுவாக.

அவளோ புரியாமல் பார்த்து நிற்க, சட்டென தன்னை மீட்டவன் “தர்றதுக்கு ட்ரை பண்றேன்…” என்று விட்டு வெளியில் சென்றான்.

அவனைப் புதிராய் ஏறிட்டவள், தோளைக்குலுக்கிக் கொண்டு வேலையைத் தொடர்ந்தாள்.

விதுரன், அகில், மிதுனா, பூமிகா நால்வரும் விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்தனர்.

“மேம்… நிஜமாவே உங்களுக்கும் சத்யா சார்க்கும் கல்யாணமா?” மிதுனா வாயைப் பிளந்து கேட்க, “எஸ்… ஏன் இவ்ளோ ஷாக்கு?” என்றாள் நக்கலாக.

விதுரனுக்கு தமையனின் எண்ணம் புரியவே இல்லை. இத்தனை நடந்த பிறகும், ஏன் இவன் இப்படி ஒரு முடிவெடுத்தான் என்ற ஆதங்கம் ஆக்கிரமித்தது.

அகில் தான், “அப்போ கல்யாணத்துக்கும் நாங்க தான் காஸ்டியூம் அண்ட் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கேமரா மேனா மேம்…” என அடக்கமாக கேட்க,
“எக்ஸ்சாக்ட்லி” என்றாள் இதயாம்ரிதா.

“நீங்க நாலு பேர் மட்டும் மேரேஜ்க்கு வர போறீங்க. நல்ல நல்ல ஸ்டில்ஸ் எடுத்து தரணும் ஓகேவா விதுரன்” என்றதும் விதுரன் குழப்பத்துடன் தலை அசைத்தான்.

இங்கு அலுவலக கேன்டீனில் காலை ஆட்டியபடி தலையில் கையைப் புதைத்து அமர்ந்திருந்தான் சத்யா.

ஆதார், பேன் ஐடி என எதுவும் அவனிடம் இல்லை. பிறகெப்படி திருமணத்தைப் பதிவு செய்வது? இனி அதையெல்லாம் புதிதாக எடுத்து செய்வதற்கு நாள் ஓடி விடும். இதயாம்ரிதா தான் வந்த நோக்கைக் கண்டறிந்து விட்டால், அனைத்தும் சொதப்பிவிடும் என்ற முன்னெச்சரிகை அதிகமாய் இருந்தது.

“அண்ணா…” விதுரனின் குரலில் நிமிர்ந்த சத்யா, அவனை லேசாய் நிமிர்ந்து பார்க்க, அவனோ “நீங்க அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?” எனக் கேட்டான் ஆதங்கமாக.

அவனுக்கு எப்படி தெரியும் என்ற யோசனையில் சத்யா புருவம் சுருக்க, “அவள் பணத்தை வச்சு மறுபடியும் உங்களை என்கிட்ட இருந்து பிரிக்கப் பாக்குறாளா?” தீ ஜுவாலை எரிந்தது அவனது வார்த்தைகளில்.

“இந்த தடவை என்னை யாரும் ஏமாத்த முடியாது விது… எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்!” என்றான் நிதானமாக.

“சொல்லுங்கண்ணா?” விதுரன் அவன் அருகில் அமர்ந்து கொண்டதும் விருட்டென எழுந்தவனை கண் கலங்க ஏறிட்டான்.

“என்னோட கவர்மெண்ட் ஐடிஸ் எடுத்து தரணும் வீட்ல இருந்து…” எனக் கேட்டதும், “நான் எடுத்து தரேண்ணா. என்கிட்ட பேச மாட்டீங்களா?” என்றான் ஏக்கமாய்.

அதற்குள் மிதுனாவும் பூமிகாவும் அங்கு வந்து “ஹாய் டா” என்றதில், கலங்கிய கண்ணை அவசரமாய் துடைத்துக்கொள்ள, சத்யா அங்கிருந்து விறுவிறுவென சென்றிருந்தான்.

“என்னடா… டல்லா இருக்க?” மிதுனா விதுரனின் முகம் பார்த்துக் கேட்க, “இல்லையே கொஞ்சம் ஒர்க் ப்ரெஷர்!” என சமாளித்தான்.

அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தவள், “சரி சரி மேம் மேரேஜ்க்கு நம்ம எல்லாரும் ஒரே கலர்ல ட்ரெஸ் போடலாமா?” என ஆர்வமாகக் கேட்க, “ம்ம் வேலை இருக்கு அப்பறம் பாக்கலாம்” என்று எழுந்து சென்றதில், அவனை யோசனையாய் ஏறிட்டாள் மிதுனா.

புது காதல் மலரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 75

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
69
+1
6
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ரிதாவுக்கு தெரியாமல் நடந்ததா?. தெரிஞ்சு அவளை கட்டு படுத்தினாங்களா?.