
பிறை -22
அறைக்குள் வந்ததில் இருந்து தன்னுடைய அபிப்ராயத்தை எல்லாம் கொட்டி தீர்த்த மனைவியை இமைக்காமல் பார்த்து வைத்தார் திவாகர்.
” என்னங்க நான் பேசிட்டே இருக்கேன்.. நீங்க பதில் சொல்லவே இல்ல.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த விஷயத்தை ஏன் நம்ம முன்னாடியே யோசிக்காம போயிட்டோம் ”
” எல்லாம் சரி தான். பிறை ரொம்ப நல்ல பொண்ணு. நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு. ஆனால் உன் மகனை நினைச்சு பார்த்தியா மீனு ”
” அவனை நினைக்க என்னங்க இருக்கு. இதான் பொண்ணு .. இவளை நீ கல்யாணம் பண்ணியே ஆகனும்னு சொல்லுவோம் ”
” அடேங்கப்பா அப்படி சொன்னா, உடனே ஓகே சொல்லுற ஆளா உன் பையன் ” மகனை பற்றி அறிந்தவராக பேசினார். ஆனாலும் தற்போது மகனின் மாற்றத்தில் உள்ளே சிறுதுளி நம்பிக்கையும் இருந்தது. ஆனால் தற்போது அதை தன் மனைவியிடம் கூறி அவளுக்கு மேற்கொண்டு நம்பிக்கையை கொடுக்க மனமில்லை. ஒருவேளை அவர் நினைத்தது தவறாக இருந்தால் மனைவி ஏமாற்றம் அடைவாள் என அமைதியாக மனதிற்குள் வைத்துக் கொண்டார். சில விஷயங்கள் ரகசியமாகவே இருக்கட்டுமே..
” நியூஸ் வரைக்கும் வந்திருச்சு.. அந்த பொண்ணை பத்தி ஊர்ல என்ன பேசிட்டாங்க தெரியுமா.. அப்படி இப்படின்னு பேசித்தான் சம்மதிக்க வைக்கனும்” கூலாக கூறினார் மீனாட்சி.
” இந்த அப்படி இப்படி பேச்செல்லாம் என் கிட்ட மட்டும் தான் உனக்கு வரும்.. அவனை பார்த்தா காத்து போன பலூன் மாதிரி ஆகிடுவ.. ” நிதர்சனத்தை கூறி திவாகர் சிரிக்க.. மீனாட்சி அவரை முறைத்தாள்.
” நான் மட்டுமா பேசப்போறேன்.. நீங்களும் தான் உங்க மகன் கிட்ட பேசனும் ”
” இதுல என்னைய ஏன் இழுத்து விடுற மீனு.. அவனுக்கு பிடிச்சிருந்தா அந்த பொண்ணை விட மாட்டான். அப்புறம் இன்னொரு விஷயமும் இதுல இருக்கு ”
” என்ன விஷயங்க ”
” ஏற்கனவே அவன்கூட அந்த பொண்ணு பேர் மீடியா முழுக்க வெளிய வந்துருச்சு.. நம்ம பையன் நார்மல் பெர்சனா இருந்தா வெளிய தெரிய வாய்ப்புகள் கம்மி.. ஆனால் கமிஷனர் பொறுப்புல இருந்துட்டு இப்போ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணா.. அப்போ மீடியா சொன்ன கட்டுக்கதை எல்லாம் உண்மைன்னு ஆகிடும் இல்லையா.. ” என்றதும் மீனாட்சியின் முகம் வாடிப் போனது.
” அப்போ இந்த கல்யாணம் நடக்காதாங்க..”
” அப்படி சொல்ல வரலை மீனு.. ஆனால் நடக்கும்னு மனசுல ஆசையை வளர்த்துக்காத. அப்பறம் அது இல்லன்னா நீதான் கஷ்டப்படனும் ” மனைவியின் மனம் வாடக்கூடாது என்பதற்காக பொறுமையாக எடுத்துக் கூறினார் திவாகர்.
அவர் கூறுவதும் உண்மை தானே.. இதையெல்லாம் மீறி இந்த திருமணம் நடக்க வேண்டுமானால் அதற்கு ஆதி முழு மூச்சாக இறங்கி சம்மதிக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த திருமணம் நடைபெறும். ஆனால் எப்படி இது சாத்தியம் . பல சித்தனைகள் மனதிற்குள் அழுத்த.. முதலில் பிறையின் தாய் தந்தையிடம் இதை பற்றி பேசிப் பார்ப்போம் என நினைத்துக் கொண்டாள்.
ஆனால் அங்கு அதற்கு நேர் மாறாக அறைக்குள் சிவகாமி மிகுந்த கோபத்துடன் இருந்தார். முன்னால் எப்படியோ ஆனால் தற்போது கணவன் பேசுவதை அவரால் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை.
இன்னொரு சிவகாமியாக தன் மகள் இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சற்று நேரத்திற்கு முன் இருவரது உரையாடலும் நினைவிற்கு வந்தது.
மெத்தையில் அமர்ந்திருந்த சிவானந்தனுக்கு உடல் மட்டுமே இங்கிருக்க.. நினைவுகள் வேறெங்கோ இருந்தது. அவரையே பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி.. கணவனை நெருங்கி..
” அப்படி என்னங்க யோசனை.. பலமா இருக்கு ”
” எல்லாம் என் தங்கச்சி நினைச்சு தான்.. என்ன இருந்தாலும் சொந்தம் சொந்தம் தான் சிவகாமி ” அவரால் அவரது தங்கையை மெச்சிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
” இன்னும் அதையே தான் யோசிச்சிட்டு இருக்கீங்களா.. நடக்காத விஷயத்தை ஏன் இவ்வளவு தூரம் யோசிக்கனும்”
” எது நடக்காது ” சிவானந்தம் புருவம் சுருக்கி கேட்டார்.
” அதான் உங்க தங்கச்சி நினைக்கிற கல்யாணம் தான் ”
” ஏன் நடக்காது ”
” புரிஞ்சு தான் பேசுறீங்களா.. அவங்க எப்படி பட்டவங்கன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.. அவங்க கிட்ட நம்ம பொண்ணை கொடுக்குறதுக்கு, நம்ம பொண்ணு வீட்டோட இருக்கட்டும்.. ”
” சிவகாமி…. ” என கோபத்தில் கத்தினார் சிவானந்தம்.
” இப்படி கத்தி கத்தி காரியம் சாதிக்க பார்க்காதீங்க.. என் வாழ்க்கை தான் அவங்களோட கட்டுப்பாட்டுல முடிஞ்சது. ஆனால் என் பொண்ணு நல்லா வாழனும். இப்போவே யார் கண்ணு பட்டுச்சோ.. என் பொண்ணுக்கு இந்த நிலைமை. வேண்டாம் அவங்க சம்மந்தமே நமக்கு வேண்டாம். தினக்கூலி ஆளுக்கு கூட என் மகளை கட்டி கொடுப்பேன். ஆனால் உங்க தங்கச்சி மகனுக்கு கட்டி கொடுக்க மாட்டேன்.. ” உறுதியாக பேசிய மனைவியை முறைத்து பார்த்தவர்..
” உன்னோட சம்மதம் தேவையில்ல.. பிறை சம்மதிச்சா போதும்.. நான் சொல்லுறத தான் அவளும் கேட்பா.. ” என உறுதியாக கூறி இருந்தார்.
” உங்க மக வாழ்க்கையை நீங்களே அழிக்க பார்க்காதீங்க.. கட்டி கொடுத்ததுக்கு அப்பறம் ஐயோ அம்மான்னு புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்ல சொல்லிட்டேன் ” முயன்ற அளவிற்கு அவரிடம் வாதாடி ஓய்ந்து போனார் சிவகாமி.
அந்த எரிச்சலில் தான் அமர்ந்திருந்தார். ” அடுத்தவங்க வீட்ல வந்து இப்படித்தான் சண்டை போட்டுட்டு இருப்பியா சிவகாமி ” மனைவியின் மௌனத்தை கலைக்க.. அவரிடம் தானே வந்து பேசினார் சிவானந்தம்.
” அதான் எல்லாம் உங்க இஷ்டம்னு சொல்லியச்சே.. இனிமே நான் என்ன பேச ”
அதே நேரம் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தார் மீனாட்சி.
” வாங்க .. வாங்க ” என இருவரும் உள்ளே அழைக்க.. சங்கடத்துடன் உள்ளே வந்தார் மீனாட்சி.
” தொந்தரவு பண்ணலயே ”
” அய்யோ அதெல்லாம் இல்லைங்க.. வாங்க ” என சிவகாமி அழைக்க.. அங்குள்ள கதிரையில் அமர்ந்தார் மீனாட்சி.
” உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்தேன். பேசலாமா ” மீனாட்சி கேட்டதும்… இருவரும் தலை அசைத்தனர்.
” அது எப்படி கேட்கிறதுன்னு தெரியல.. சரியான்னு கூட தெரியல.. ஆனால் மனசுல இருக்கிறதை பேசுறது நல்லது இல்லையா.. அதான் ” என்றவரை இருவரும் மாறி மாறி பார்த்தனர்.
” அது பிறைக்கு நீங்க மாப்பிள்ளை பார்த்தது சரி வரலைன்னு பேசிட்டு இருந்தீங்க இல்லையா ”
” ஆமாங்க அந்த சம்மந்தம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. ”
” ஹான் நானும் கொஞ்சம் யோசிச்சேன்.. அது என்ன விஷயம்னா.. நம்ம பிறையை என் மகனுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு நான் நினைக்கிறேன்.. ” என ஒரு வழியாக விஷயத்தை கூறி விட.. எதிரே இருந்த தம்பதிகள் இருவரும் அதிர்ந்து போனார்கள்.
” நீங்க என்ன பேசுறீங்க..”
” தெளிவா தான் சொல்லுறேன்.. என் மகனுக்கு உங்க மகளை கல்யாணம் பண்ணி கொடுக்க உங்களுக்கு சம்மதமா.. நான் சொல்லனும்னு இல்ல.. உங்களுக்கே தெரியும்.. என் மகன் நல்ல வேலையில இருக்கான்.. நல்ல சம்பளம்.. நாங்களும் உங்க மகளை நல்ல படியா பார்த்துப்போம்.. அதை விட என் மகன் நல்லா பார்த்துப்பான்.. அப்பறம் இவ்வளவு தூரம் ரெண்டு பேரோட பேரும் வெளிய வந்ததுக்கு அப்பறம் பிறையை வெளிய கொடுத்தா அது பிரச்சனையா தான் வரும். அதுனால சம்மந்தப்பட்ட ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா அவங்க வாழ்க்கை நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது.. ” என்றவர்.. இருவரது முகத்தையும் பார்க்க.. அவர்கள் பேச்சற்று அமர்ந்திருந்தனர்.
” உங்க எண்ணம் எனக்கு புரியுதுங்க.. உடனே எல்லாம் சொல்ல வேணாம்.. ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. அப்பறம் நம்ம பிள்ளைங்க கிட்ட பேசலாம்.. நான் இப்போவே உங்க பதிலை எதிர்பார்க்கல. பொறுமையா சொல்லுங்க.. ” என்றவர் எழுந்து கொண்டார்.
” அப்பறம் சமையல் பண்ணியாச்சு.. ரெண்டு பேரும் சாப்பிட வந்துடுங்க ” என சிரிப்போடு அழைத்து விட்டு சென்றிருந்தார் மீனாட்சி.
இருவருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. தற்போது இதை பற்றி எந்த விதமாக பேச்சையும் எடுக்கவில்லை. அமைதியாக சாப்பிட சென்றார்கள்.
கதவை தட்டி விட்டு அறைக்குள் நுழைந்திருந்தான் ஆதிதேவ். சோர்வாக படுத்திருந்தவள்.. அவனது வருகையை அறிந்து வேகமாக எழுந்து அமர பார்க்க.. அவளது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
” ப்ச் படு ” என்ற கட்டளையோடு உள்ளே வந்தவன்.. ” உன்ன பார்க்க ஆபீசர்ஸ் எல்லாம் வராங்க.. கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு ” என கூறி விட்டு வெளியேறி இருந்தவன்.. மீண்டும் உள்ளே வந்து.. விலகி இருந்த கால் சட்டையை சரி செய்து, போர்வையை இழுத்து அவளை முழுவதுமாக மூடி விட்டு சென்றிருந்தான்.
நொடிப் பொழுதில் நடந்திருந்த நிகழ்வில் அவளது உடல் சிலிர்த்து கொள்ள.. அவன் அழைத்து வந்த போலீஸ் நான்கு பேர் உள்ளே வந்தனர்.
” வணக்கம் மா..” என்றதும்.. அவளும் வணக்கம் தெரிவித்தாள்.
” உங்க பெயர் ”
” பிறைநிலா சார் ”
” ம்ம் இப்போ உடம்பு ஓகே வா ”
” ம்ம் நல்லா இருக்கேன் சார்.. ”
” உங்களை கடத்திட்டு போன இடத்துல இருந்த ஆட்களை இதுக்கு முன்னாடி நீங்க பார்த்து இருக்கீங்களா ”
” இல்ல சார் ”
” சென்னைக்கு நீங்க புதுசுன்னு கேள்விப்பட்டேன்.. சோ எதுக்காக காபி ஷாப் போனீங்க ” என்றதும்.. அருகில் இருந்த அவளது கமிஷனரை ஒரு பார்வை பார்த்தவள்..
” காபி குடிக்க.. ”
” நீங்க மட்டுமா ”
” இல்ல கமிஷனர் சார் கூட ” அதான் ஊருக்கே தெரிந்து விட்டதே.. இனி இவரிடம் மறைத்து என்னாக போகிறது என்ற எண்ணம்.
” ஓ கமிஷனர் என்ன சொன்னார் ”
” ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தார் ” என்றவள்.. கூறிய பின்பு நாக்கை கடித்து கொண்டவள்.. அவனை ஓர பார்வை பார்க்க.. பல்லை கடித்துக் கொண்டிருந்தான் ஆதி.
‘ போச்சு இன்னைக்கு உன்னைய வச்சு செய்ய போறான் டி பிறை ‘ தனக்குள் முனங்கிக் கொண்டாள் பிறை.
” ஓ.. என்ன பேசுனீங்க ”
” பேசுறதுக்கு முன்னாடியே ஷூட் பண்ணிட்டாங்க சார் ” என்றதும்.. அவர் அமைதியாக ஆதியை பார்த்தவர்.. பின் பிறையிடம்.. ” இந்த கேஸ் முடியுற வரைக்கும் இந்த ஊரை விட்டு போக வேணாம்.. இந்த வீட்ல உங்களால இருக்க முடியலையா சொல்லுங்க.. நாங்க உங்களுக்கு தங்க ஏற்பாடு பண்ணுறேன். பப்ளிக்ல ஷூட் பண்ணுறது சாதாரண விஷயம் இல்ல.. சோ இதுக்கு பின்னாடி என்ன விஷயம்னு கண்டு பிடிக்கனும்” என்றவரை பார்த்து தலை அசைத்தாள் பிறை.
” சரி நீங்க ரெஸ்ட் எடுங்க.. நாங்க தேவைப்பட்டா வருவோம் ” என அவர்கள் சென்று விட.. ஆதி அவர்களை அனுப்பி வைத்து விட்டு, மீண்டும் அவளது அறைக்குள் வந்து கதவை தாழிட.. மிரண்டு போனாள் பிறை.
பூட்ஸ் காலுடன் அவளை நெருங்கி, மெத்தையில் அவளருகில் அமர்ந்தவன்.. அவனது விழிகளை நேர்கொண்டு பார்க்க.. அவளால் அவனது விழிகளை சந்திக்க இயலாது தாழ்த்த பார்த்தவள் நாடியை பிடித்து அழுத்தமாக அவனை பார்க்க செய்தான் ஆதி.
” ஆதி என்ன சொன்னான்… ” என்றவனது குரலில் என்ன இருந்தது என்பது அவளால் கண்டு கொள்ளவே முடியவில்லை.
” ஆ.. அது.. ஆதி… ” என திணறிப் போனவள்..
” நீங்க ஏன் என்னைய காப்பாத்துனீங்க.. ” என கண்ணீர் மல்க கேட்டு வைத்தாள்.
அதில் இறுகியவன்… ” இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல.. உண்மையை சொல்லிட்டு செத்து போ ” அவனது வார்த்தையில் மொத்தமாக உடைந்து போனாள் பிறைநிலா.
சனா💗
