
ரூபிணி வீட்டுக்குள் அடைந்து கிடந்தாள். அவளுக்கு யாரிடமும் பேச பிடிக்கவில்லை. முக்கியமாக விஷாலை பார்க்கப் பிடிக்கவில்லை.
அன்று ஊர் திரும்பியதும் சந்தோசமாக விஷாலை பார்க்கச் சென்றாள். ஆனால் கதவை தட்டியதும் திறந்தவளை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.
உதயாவின் காதலிக்கு விஷாலின் வீட்டில் என்ன வேலை? என்று அதிர்ந்து அவள் வாயைத்திறக்கும் முன்பே அவள் அணிந்திருந்த உடை கண்ணில் பட்டது.
விஷாலின் டீசர்ட்டை அணிந்திருந்தாள். கலைந்து போய் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தவள் போல் காட்சி அளித்தாள்.
“என்ன பார்த்துட்டு இருக்க? கொடு..” என்று மெடோனா கை நீட்ட, ரூபிணி சுருங்கிய புருவத்தோடு ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தாள்.
“ஹலோ?” என்று மெடோனா புரியாமல் பார்த்தாள்.
ரூபிணி முகத்தை மறைத்து மாஸ்க் அணிந்திருந்தாள். விஷால் தங்கியிருக்கும் இடம் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. யாராவது அவளை பார்த்தால் படம் எடுத்து தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் கதை கட்டி விடுவார்கள்.
விஷாலும் அவளும் காதலிப்பதாக அரசல் புரசலாக செய்திகள் பரவிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இருவருமே அதைப்பற்றிக் கவலைப்பட்டது இல்லை. வெளியிடங்களில் இருக்கும் போது யாராவது பார்த்து அவர்களை தொந்தரவு செய்வது தான் அவளுக்கு எப்போதும் பிடிக்காது.
அதனால் வெளியே செல்லும் போது அடிக்கடி முகத்தை மறைத்துக் கொள்வது ரூபிணியின் வழக்கம். இன்றும் அதே போல் கிளம்பி வந்திருக்க மெடோனா அவளை அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் விழித்தாள்.
அதே நேரம் மெடோனாவின் கைபேசி இசைத்தது. மெடோனா உணவுக்கு ஆர்டர் கொடுத்திருக்க அதை கொண்டு வந்தவன் தான் அழைத்தான்.
“மேடம் உங்க வீடு எங்கனு தெரியல.. நான் கீழ இருக்கேன் வாங்க” என்று அவன் பேச, மெடோனா முன்னால் இருந்தவளை பார்த்தாள்.
அவளது உடை அப்போது தான் கண்ணில் பட்டது. ‘ச்சே இவள டெலிவரி கேர்ள்னு நினைச்சுட்டோம்’ என்று தலையில் தட்டிக் கொண்டவள் அவளிடம் பேசப்போக, கைபேசியில் இருந்தவன் விடாமல் நச்சரிக்க ஆரம்பித்தான்.
உடனே வெளியே வந்து கதவை பூட்டியவள் ரூபிணியை கண்டு கொள்ளாமல் லிஃப்ட் பக்கம் ஓடி விட்டாள்.
ரூபிணி நடப்பதை புரியாமல் பார்த்து விட்டு தன்னிடமிருந்த சாவியை எடுத்தாள்.
“இவளுக்கு இங்க என்ன வேலை? அவன் எங்க?” என்று கோபம் வர கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.
வீட்டில் பாதுகாப்புக்கென ஹாலில் கேமரா இருக்கும். இந்த பகுதி பாதுகாப்பானது இல்லை என்பதால் அந்த அப்பார்ட்மெண்டில் பலர் தங்களது வீட்டுக்குள் கேமராவை வைத்திருந்தனர். விஷாலும் கூட வைத்திருந்தான். அந்த கேமராவை பார்த்தால் இவள் யாரென தெரிந்து விடும். இங்கு எதற்காக வந்தாள் என்றும் தெரிந்து போகும்.
பாதுகாப்புக்காக விஷால் வைத்த கேமரா இன்று அவனது எமனாக மாறி விட்டது.
ரூபிணி வவிறுவிறுவென சென்று படுக்கை அறையில் நுழைந்தாள். அங்கே பெண்களின் ஆடை ஒரு பெட்டியில் இருந்தது. அதுவும் திறந்து கலைந்து கிடந்தது.
பார்த்ததுமே இதயம் உடைய ரூபிணி உணவுப்பையை போட்டு விட்டு விஷாலின் மடிக்கணினி இருக்கும் இடத்தை அடைந்து எடுத்துக் கொண்டாள்.
கடவுச் சொல் அவளுக்கு நன்றாகவே தெரியும். உள்ளே நுழைந்தவள் கேமராவில் பதிவான முந்தய நாளின் காட்சிகளை ஓட விட்டாள்.
மெடோனா வீட்டுக்குள் வந்ததிலிருந்து அனைத்தும் ஓடியது. மெடோனாவுக்காக விஷால் சமைத்துக் கொடுத்தது இருவரும் சாப்பிட்டது பிறகு முத்தமிட்டது அனைத்தும் ஓடியது.
இருவரும் அறைக்குள் ஒன்றாக நுழைந்த போது ஹால் இருந்த நிலை, ரூபிணியை மொத்தமாக உடைத்து விட்டது. ஒவ்வொரு காட்சியை கண்டும் கலங்கிய கண்கள் இப்போது கண்ணீரை கொட்டி விட அவசரமாக அதை துடைத்துக் கொண்டவன் தன் கைபேசியை எடுத்தாள்.
அவளை ஏமாற்றி இருக்கிறான். அவள் ஊரில் இல்லாத நேரம் இவளோடு உல்லாசமாக இருந்திருக்கிறான். எவ்வளவு தைரியம்? இது எத்தனை நாட்களாக நடக்கிறதோ? அவள் வீட்டுக்கு வரா விட்டால் இப்போதும் தெரிந்திருக்காதே. அவள் கேட்டு அவன் மறுத்தால்? ஆதாரம் வேண்டுமல்லவா?
அந்த காணொளியை தன் கைபேசிக்கு மாற்றி விட்டு கணினியை அணைத்து விட்டு கொண்டு வந்த உணவை எடுத்துக் கொண்டாள்.
பிறகு அங்கிருந்த கேமராவை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் வெறுப்போடு கிளம்பி விட்டாள்.
அவள் வெளியேறி ஒரு லிஃப்ட்டில் நுழைய மறு லிஃப்டில் மெடோனா திரும்பி வந்து விட்டாள்.
உணவை கொண்டு வந்தவன் வழி தெரியாமல் அவளை அலைய வைத்து ஒரு வழியாக உணவை கொடுத்திருக்க சற்று முன்பு பார்த்த பெண்ணின் நினைவு அவளுக்கு சுத்தமாக இல்லை.
பசியில் உணவை உள்ளே எடுத்துச் சென்று சாப்பிட்டு தூங்கி மொத்தமாக மறந்து விட்டாள் மெடோனா.
அதனால் தான் ரூபிணி வந்து சென்ற விசயம் விஷாலுக்கு தெரியாமல் போனது.
வீட்டுக்கு வந்து கோபத்தில் கத்தி அழுது புலம்பி தனிமையில் இருந்தாள் ரூபிணி.
எப்போதும் அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால் மொத்த உலகத்தையும் ஒதுக்கி வைத்து விடுவாள். தனியாகவே அதை நினைத்து வருந்தி காயத்தை ஆற்றும் வரை யாரிடமும் பேச மாட்டாள்.
இப்போதும் மெலினாவிடம் ஒப்பந்தம் சம்பந்தமாக பேசுவதால் மட்டுமே உண்மையைச் சொன்னாள். தனிமையின் மருந்தில் மனம் ஓரளவு தேறிக் கொண்டிருந்தது.
இனி முக்கியமான விசயங்களை பற்றி யோசிக்க வேண்டும். முதல் விசயம் அவளது ஒப்பந்தம். அதை தொடரப்பிடிக்கவில்லை.
இந்த நிறுவனத்தில் அவளது உழைப்பு சுரண்டப்படுகிறது. பண விசயத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் உண்டு. இனியும் அவளால் அதை பொறுக்க முடியாது.
அதோடு இனியும் அங்கே வேலை செய்தால் விஷாலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அது அவளது மனநிலையை மிகவும் பாதிக்கும்.
பார்ட்டியில் சந்தித்த சிலர் அவளது ஒப்பந்த விசயத்தை பற்றித் தெரிந்து அவர்களது நிறுவனத்தில் வந்து சேருமாறு கேட்டனர். அவர்களில் எதாவது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளது யோசனைக்கு முடிவு கட்டுவது போல் அழைப்பு மணி சத்தம் கேட்டது. எழுந்து சென்று கேமரா வழியாக வெளியே பார்த்தாள். ஒரு நொடி அவளது கண்களையே நம்ப முடியவில்லை.
“உதயா? இவன் இங்க என்ன பண்ணுறான்?” என்று அதிர்ந்தவள் அவன் மீண்டும் அழைப்பு மணியை அழுத்தவும் கதவை திறந்து விட்டாள்.
“நீ இங்க என்ன பண்ணுற?” என்று ஆரம்பிக்க அவன் அவளை முறைத்து வைத்தான்.
“இங்க நின்னு பேசி எல்லாரும் கேட்கனுமா?” என்று உதயா பல்லைக் கடிக்க தோளை குலுக்கிக் கொண்டு வழி விட்டு நின்றாள்.
உடனே உதயா உள்ளே செல்ல கதவை பூட்டி விட்டு அவனை பார்த்தாள்.
“என் வீட்டுக்கு வேண்டாத கெஸ்ட் நீ.. இருந்தாலும் வெல்கம்.. உட்காரு” என்றாள் சலிப்பாக.
உதயாவுக்கு அவளிடம் பேசவே பிடிக்கவில்லை.
ஆனால் விசயத்தை அவளிடம் சொல்லியே ஆக வேண்டுமே. அதனால் தான் அவளது முகவரியை தேடி எடுக்கச் சொல்லி வந்து சேர்ந்தான்.
“நான் உன் கெஸ்ட்டா வரல.. உன் கிட்ட முக்கியமான விசயம் பேசனும்னு வந்தேன்”
“என் கிட்டயா? அதையும் வீட்டுல வச்சு? ரியலி? என் அட்ரஸ் எப்படி கிடைச்சது?”
“பெரிய ராணுவ ரகசியம் பாரு.. உன் ஏஜன்சில கேட்டேன். கொடுத்துட்டாங்க”
“வாட்? நீ கேட்டியா?”
“நான் இல்ல. வேற ஒருத்தன் கேட்டு… ப்ச்ச்.. இப்ப நான் அத பேச வரல..”
“வேற என்ன பேசனும்?” என்று கையை கட்டிக் கொண்டு கேட்க “எங்க உன் பாய் ஃப்ரண்ட்?” என்று கேட்டான்.
ரூபிணி புருவம் சுருக்கினாள்.
‘உண்மைய தெரிஞ்சு வந்துருக்கானா? இல்ல தெரிஞ்சுக்க வந்துருக்கானா?’ என்று புரியாமல் குழம்பியவள் “அவன ஏன் நீ கேட்குற?” என்று பட்டும் படாமல் கேட்டாள்.
உதயா பல்லைக் கடித்துக் கொண்டு தன்னிடமிருந்து ஒரு உரையை எடுத்து அதில் இருந்து படங்களை மேசையில் கொட்டி விட்டான்.
மெடோனாவும் விஷாலும் ஊர் சுற்றிய படங்கள் தான். முதல் நாள் போதாது என்று மறுநாளும் அசிஸ்டண்ட் அவர்களை பின் தொடர்ந்து அனைத்தையும் படம் எடுத்து அனுப்பி வைத்திருந்தான்.
அனைத்தும் சிதறி விழ ரூபிணி எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து விட்டு உதயாவை சாதாரணமாக பார்த்தாள்.
“இவன் யாரு?”
“தெரியாத மாதிரி கேட்குற?”
“உன் பாய் ஃப்ரண்ட் தான? அவனுக்கு மெடோனா கூட என்ன வேலை?”
“என் கிட்ட கேட்டா? நீ அவங்க கிட்ட தான கேட்கனும்?” என்று நக்கலாக சொன்னவள் தலை சாய்த்து உதயாவை கேள்வியாக பார்த்தாள்.
“இவங்க ரெண்டு பேரும் சீட் பண்ணுறது உனக்கு தெரியுமா?”
“தெரியும் தெரியும்.. எப்பவோ தெரியும்.. ஆனா அத நீ ஏன் வந்து என் கிட்ட சொல்லுற?” என்று கேட்டு வைத்தாள்.
தொடரும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

உதயா ரூபிணி இருவருக்கும் தெரிந்தது அவங்களுக்கு தெரியவில்லை போல