Loading

இரவு வீட்டிற்கு சென்ற இதயாம்ரிதா, மெத்தையில் டொம்மென விழுந்தாள். செய்ய வேண்டிய வேலைகள் ஏகப்பட்டது இருந்தாலும், அவளது மூளை ஒரே விஷயத்தில் சிக்கி சிந்தனையிலேயே இருந்தது.

“நீ ஒரு எமோஷனல் இடியட்!”

“ஒரு ஃபேமஸ் மாடல் ப்ராடக்ட் இல்லாம உன்னால அடுத்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.”

விஷாலின் வார்த்தைகள் காதினுள் ரீங்காரமிட்டபடியே இருக்க, மெத்தைக்கு அருகே வீற்றிருந்த பூச்சாடியைத் தூக்கி எறிந்தாள்.

மூச்சு வேகம் எடுத்தது. ட்ராயரைத் திறந்து மாத்திரையை எடுத்து போட்டுக்கொண்டாள். அளவெல்லாம் பார்க்கவில்லை அவள். பின் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்று விட்டாள்.

மறுநாள் காலையில் எழும்போதே உமா அழைத்தார்.

சோம்பல் முறித்துக்கொண்டவள், உடனே அழைப்பை ஏற்று “குட்மார்னிங் மாம்” என்றிருக்க, எதிர்முனையில் உமா சற்றே அமைதி காத்தார்.

“மாம்?” இதயாம்ரிதா அழைத்ததும்,

“எந்திரிச்சுட்டியாடா?” எனக் கேட்டார் இயல்பாக.

“ப்ச்… என்ன விஷயம்?” நேரடியாய் அவள் வினவ,

“விஷால் கால் பண்ணிருந்தான்” என்றார்.

“என்னவாம்?” புருவம் சுருக்கியபடி பிரஷை எடுத்து வாயில் வைக்க, உமா தொடர்ந்தார்.

“மன்னிப்பு கேட்டான். நீ இல்லாம அவனால இருக்க முடியலன்னு சொல்றான். உன்னை உண்மையா லவ் பண்றதா சொல்றான் அம்ரி…” என்றவரின் பேச்சைக் கேட்டபடி முகம் கழுவி விட்டு சமையலறைக்குச் சென்றவள், “பூஸ்ட் எங்க இருக்கு மாம்” என்றாள் அக்கறையாக.

“எப்பவும் காபி தான குடிப்ப?” உமா கேட்டதும்,

“இன்னைக்கு பூஸ்ட் குடிச்சா சாமி கண்ணை குத்திடுமா?” என்றாள் குறும்பாய்.

அதில் மெல்லப் புன்னகைத்தவர், “ஃபர்ஸ்ட் ஷெல்ஃப்ல இருக்கு. வேலைக்காரங்களை வர வேணாம்னு சொல்லிட்டியாமே?” என வினவினார்.

“ம்ம்… நீங்களும் இல்ல. வீட்டை சுத்தம் பண்ண சொல்ல மட்டும் தினமும் வர சொல்லிருக்கேன். குக்கிங் நான் பாத்துக்குறேன் மாம். இல்லன்னா ஆபிஸ்ல பாத்துக்குறேன். முழுநேரம் அங்க தான இருக்கேன்” என்றவளை விட்டுவிட்டு வந்த குற்ற உணர்வு ஆட்டிப் படைத்தது.

“நான் வேணும்னா வந்துடவாடா?”

“அட, நீங்க வந்தா மட்டும் நான் மூணு வேளையும் உங்க கையால சுட சுட சாப்புடுறேனாக்கும். ஓவர் இமேஜினேஷன் வேணாம் மாம். நான் பசிக்கிறப்ப சாப்ட்டுக்குவேன். வயித்தை காயப்போட்டு எல்லாம் வேலை செய்யற அளவு தைரியம் இல்ல…” என்றவளின் கேலிப்பேச்சில் அவரும் நகைத்தார்.

அவள் வேண்டுமென்றே தனது துணையை மறுப்பது உமாவிற்கு புரிந்தது தான். அவளுக்கும் தனிமை அவசியம் என்றே அவரும் இந்தப் பிரிவிற்கு சம்மதித்தார். ஆனால் வலிக்கிறதே.

“வாழ்க்கை இப்படியே போனா ஓகேவா அம்ரி உனக்கு? விஷால் பத்தி எனக்குத் தெரியும். அவன் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிக்கிறவன். அவனுக்கு ஃபேவரா நீ பேசுற வரை உன்னை நிம்மதியா விட மாட்டான்.”

“நீங்க என்ன நினைக்கிறீங்க மாம்? டைவர்ஸ கேன்சல் பண்ணிடணுமா?” பூஸ்ட்டை உறிஞ்சியபடி கேட்டாள்.

“உன் இஷ்டம் அம்ரி. இதுல என் கருத்த விட உன் மனநலம் முக்கியம்” என்ற தாயின் புரிதலில் இளகியவள்,

“அவன் போன் பண்ணுனா நீங்க எடுக்காதீங்க. அந்த நாய்க்கு என்கிட்ட பேச தைரியம் இல்ல. உங்களுக்கு போன் பண்ணி காக்கா பிடிக்கிறானாக்கும். இவ்ளோ நாள் இடைல டாடி இருந்தாரு. இப்ப நீங்களா? லீவ் இட் மாம்” என்ற பின்னே மறந்தும் விஷாலைப்பற்றியும் மறுமணத்தைப் பற்றியும் அவர் பேசவே இல்லை. ஆனால், மகளே மறுமணம் பற்றி பேசுவாள் என்றும் அவர் அறிந்திருக்கவில்லை.

‘இந்த விஷால் அடங்க மாட்டுறானே!’ என எரிச்சலுற்றபடி தனது மகிழுந்தில் அலுவலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாவையின் எண்ணமெங்கிலும் தாயின் வாசகமே புரண்டோடியது.

‘வாழ்க்கை இப்படியே போயிட்டா உனக்கு ஓகே தானா?’ தாயின் குரல் அவளுக்குள்ளே ரீங்காரமிட்டது.

அந்நேரம், அலைபேசியில் ‘ப்ராமிஸ் காலிங்’ என்ற பெயர் ஒலிக்க,

ப்ளூட்டூத்தில் கனெக்ட் செய்தவள் “எஸ் சத்யா!” என்றாள் கம்பீரத்துடன்.

“மேம் உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்துருக்காரு” அவனிடம் சிறு தயக்கம் மேலிட,

“அந்த ஒருத்தருக்கு பேர் அட்ரஸ் எல்லாம் இல்லையாங்க சார்?” இம்முறை கேலியூடே சிறு அழுத்தம் அவளிடம்.

நெற்றியை ஒரு விரலால் தேய்த்த சத்ய யுகாத்ரன், “பேர் அட்ரஸ் எல்லாம் எனக்குத் தெரியும் மேம். பட் அவாய்ட் பண்ண முடியல” அவனது தயக்கத்திலேயே வந்திருப்பது யார் என்பதில் ஒரு கணிப்பு இருந்தது அவளுக்கு.

வாழ்வு தந்த அனுபவம் தான் அவளை உருக்கி உருமாற்றி இருக்கிறதே!

“மை எக்ஸ் ஹஸ்பண்ட் ரைட்?” மின்னலென அவனைப் புரிந்து கொண்டதில்,

“எஸ் மேம். நான் இப்ப என்ன செய்யட்டும்?” என்றான் அவளிடமே.

“வாட் குவெஸ்ட்டின் இஸ் திஸ் சத்யா… ஆபிஸ்ல தேவையில்லாத க்ளையண்ட்ஸ், மார்க்கெட்டிங் டீம் வந்தா என்ன செய்வீங்க? என்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்பீங்களா?”

அவளது கோபம் புரிந்தது தான் என்றாலும், “பிசினஸ் ரிலேட்டடானதுன்னா உங்களுக்கு கால் பண்ணிருக்க மாட்டேன் மேம்… வேலை விஷயத்தைத் தவிர உங்க பெர்சனல ஹேண்டில் பண்ண எனக்கு நீங்க சம்பளம் கொடுக்கல!” அவனிடமும் அதே அழுத்தம் வெளிப்பட்டது.

“ஆன் மை வே” என அழைப்பைத் துண்டித்தவளுக்குள் சினம் கனன்றது.

உடனடியாக அவளது எச். ஆர் பத்மபிரியாவிற்கு அழைத்தாள்.

முதலாளியின் எண்ணைக் கண்டதும் பதறிய பத்மபிரியா “குட் மார்னிங் மேம்…” எனப் பவ்யமாகக் கூறிட,

“வெரி பேட் மார்னிங் பத்மபிரியா” என்றாள் காட்டமாக.

“என்ன ஆச்சு மேம். நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா?” விழித்தபடி கேட்டாள்.

“நீ செலக்ட் பண்ணுன பி. ஏவுக்கு பேசிக் மரியாதை எல்லாம் தெரியாதா? ரெண்டு மாசமா அவனோட ஆக்டிவிட்டீஸ் பாக்குறேன். ரொம்பத் திமிரா இருக்கான்!” எனக் குற்றம் சாட்டியவளிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை பத்மபிரியாவிற்கு.

“பட் இந்த ரெண்டு மாசத்துல சத்யாவோட ஒர்க், நீட்டா இருக்குன்னு நீங்க தான மேம் சொன்னீங்க. எதுக்கும் வளைஞ்சு கொடுக்காத ஆளு…” என அவனுக்கு நற்சான்றிதழ் அளித்ததில், “புல்ஷிட்” என அழைப்பை நிறுத்தி விட்டு அலுவலகம் நோக்கிச் சென்றாள்.

பத்மபிரியா அலைபேசியையே வெகு நேரம் பார்த்திருந்தாள். ‘சொல்லிவிடலாமா? சொல்லிவிட்டால்…’ என்னன்னவோ சிந்தித்தவள் கண்ணை இறுக்கி மூடி தன்னை அடக்கினாள்.

—-

ரிஷப்ஷனிஸ்ட் சத்யாவிடம் விஷாலின் வருகையைத் தெரிவித்து இருக்க, சத்யாவின் முகம் சினத்தில் ஜொலித்தது.

“மேம் வராம யாரையும் அலோ பண்ணாதீங்க” என்று திட்டவட்டமாக உரைத்து விட்டான்.

விஷாலுக்குத் தெரியும் சத்யா அலுவலில் தான் இருக்கிறான் என்று. வம்படியாக உள்ளே செல்லவும் தோன்றியது. ஆனாலும் சின்னதொரு எச்சரிக்கை உணர்வு!

இவன் ஏன் வந்தான்? மீண்டும் அவள் வாழ்வினுள் புகுந்து விடுவானோ? என்ற அலைப்புறுதல் விஷாலை நிம்மதியாக இருக்க விடவில்லை.

யாமினி, ஷ்யாம், நிலோஃபரின் பயமுறுத்தல் வேறு. “சத்யா மட்டும் உனக்கும் அவளுக்கும் இடைல வந்துட்டா, ஜென்மத்துக்கும் நீ அவளை மறந்துட வேண்டியது தான்!”

‘நோ. நெவர்!’ என்றவனுக்கு முதன்முறை அதிகப்பிரசங்கித்தனமாக விவாகரத்து வழங்கி இருக்கக் கூடாதோ என்ற ஞான உதயம் பிறந்தது. வெகு தாமதமான ஞானமென்று புரியும் நாள் வெகு தூரம் இல்லை.

உடனடியாய் டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம் அவனுக்கு. அதற்குள் எப்படியாவது இதயாம்ரிதாவைப் பார்த்து விடலாமென்ற எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டாள். வீட்டிற்கு சென்றால், அவளது வாட்ச்மேன் தன்னை அடித்து துரத்துகிறான். ச்சை! என்ற எரிச்சலில் தாமதமாவதை உணர்ந்து கிளம்பி விட்டான்.

சரியாக அவன் சென்ற பிறகே இதயாம்ரிதாவும் அலுவலகத்திற்கு வந்தாள். அரக்கு நிற காட்டன் சுடிதாரில் தேவதையாய் ஜொலித்தவள் விறுவிறுவென தனதறைக்கு வந்து, சத்யாவை அழைத்து ஒரு வேலை கொடுக்க அவன் ஒரு கணம் ஒன்றும் புரியாமல் நின்றான்.

“வாட் சத்யா?” கால் மேல் கால் போட்டு சுழல் நாற்காலியில் கம்பீரம் குறையாது அமர்ந்திருந்தவள், எதிரில் நின்றவனின் முகத்தை அசட்டையாய் நோக்கினாள்.

“மேம் ஆர் யூ சீரியஸ்?” சத்ய யுகாத்ரனின் கண்கள் சுருங்கிட முகத்தை லேசாய் சுளித்தான்.

“என்னைப் பார்த்தா ஜோக் பண்ற மாதிரி இருக்கா சத்யா? இன்டர்வ்யூ அரேஞ்ச் பண்ணுங்க” அதிகாரமாய் உத்தரவிட, ஆடவன் புரியாது நின்றான்.

பின்னே, தனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை தேர்வு செய்வதற்கு நேர்முகத்தேர்வு நடத்தக் கூறியவளை என்னவென்று ஏறிட இயலும்?

“வாட் மேன்?” இம்முறை அவளது பொறுமை காற்றில் பறக்க, சத்யா திடமாக அவளைப் பார்த்தான்.

“உங்களுக்கு சுயம்வரம் வேணும்னா தாராளமா வச்சுக்கோங்க மேம். ஆனா அதுல நான் ஒர்க் பண்ண முடியாது. ஆபிஸ் ரிலேட்டட் இன்டர்வ்யூன்னா மட்டும் தான் நான் அரேஞ்ச் பண்ணுவேன். இட்ஸ் யுவர் பெர்சனல் மேம்” எனத் திட்டவட்டமாக உரைக்க,

“இந்த ஆபிஸ்ல அஃபிஷியல் அண்ட் அனஃபிஷியலா எனக்கு எல்லா விதத்துலயும் வேலை பாக்குறதுக்கு தான் உங்களை இங்க பி. ஏவா செலக்ட் பண்ணிருக்கேன் மிஸ்டர் சத்யா. நான் சொல்றதை செய்றது தான் உங்க வேலை. மைண்ட் இட்…” எனக் குட்டு வைத்திட, முகம் கன்றியவன் “எஸ் மேம்…” என நெஞ்சை நிமிர்த்திக் கூறி விட்டு வெளியில் செல்ல எத்தனித்ததில்,

“வெய்ட்” என நிறுத்தினாள்.

அவள் முகம் பாராது நின்று விட்ட சத்ய யுகாத்ரனிடம், “இது மாப்பிள்ளை செலக்ஷன்னு யாருக்கும், ஏன் அந்த கேண்டிடேட்க்கே தெரியக்கூடாது. நமக்கு வர்ற அப்ளிகேஷன்ல பார்க்க ஸ்மார்ட்டா, மாடலிங்கு ஏத்தவனா, கண்ணைப் பார்த்து நேருக்கு நேரா பேசுறவனா செலக்ட் பண்ணுங்க” எனும்போதே சத்யாவின் விழிகள் ஒரு நொடி அவளது கருவிழிகளைத் தீண்டிச் சென்றது.

கல்லூரி நாள்களில் குளுமையைக் கொடுத்த தீண்டல் அது. தற்போது வெம்மையை மட்டுமே கொடுத்தது.

“மாடலிங்கு ஆள் பார்க்கவா? இல்ல உங்களுக்கு ஹஸ்பண்ட் பார்க்கவா?” சிறு எரிச்சல் அவனிடம்.

“ரெண்டுமே! பெய்ட் ஹஸ்பண்ட். என் ப்ராண்ட்டுக்கு அவன் மாடலாவும் இருக்கணும். வெளியுலகத்துக்கு அவன் என் ஹஸ்பண்ட்டாவும் இருக்கனும். பட், அந்த ஹஸ்பண்ட் ஜாப்க்கும் நான் தனியா ‘பே’ பண்ணுவேன். 24 மணி நேரமும் எனக்கு ஹஸ்பண்ட்டா இருக்கணும்னு இல்ல. ஒன்லி 9 டூ 9 ஜாப் தான்.

ஒன்பது மணிக்கு அப்பறம், என்ன வேணாலும் பண்ணிக்கலாம். அவன் இஷ்டம். வேணும்னா செகண்ட் டிராக் கூட ஓட்டிக்கலாம். அது அவன் சாமர்த்தியம். லீவ் கிடையாது. என் ப்ராண்ட் மார்க்கெட்ல நம்பர் ஒன் வர்ற வரைக்கும் அவனுக்கு டைவர்ஸ்ஸும் கிடையாது. எனக்குன்னு எனக்கே மட்டும் தான் அவன் மாடலிங் பண்ணனும். எனக்கும் அவனுக்கும் இருக்குற டீலிங் வெளில யாருக்கும் தெரியக் கூடாது. வெளில மட்டும் தான் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். வீட்டுல கடுகளவும் என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது” எனப் பேசி முடித்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான்.

“ஒருவேளை இந்த ரூல்ஸை அவன் மீறிட்டா?” சத்யா புருவம் உயர்த்திக் கேட்க,

“மீறக் கூடாது. மீற முடியாத மாதிரி, பணத்தேவை இருக்குறவனா பாருங்க! முதல்ல நீங்க இன்டெர்வியூ பண்றவன் மாடலிங்கு ஆப்ட்டா இருக்கணும். அதுக்கு அப்பறம் பெர்சனல் எக்ஸ்சாமின் பண்ணி பாக்குறேன். அவன் ரெண்டுத்துக்கும் ஓகேவா இருந்தா மட்டும் இந்த டீடெய்ல்ஸ ஷேர் பண்ணலாம். அதர்வைஸ் இது வெளில வர கூடாது” என்றதில், சத்யா வாய்க்குள் முணுமுணுத்தான்.

“வாட்?” மேஜையில் கையை ஊற்றி அவள் வினவ,

“நத்திங். இவ்ளோ கேவலமான விஷயத்தை எவனாவது வெளில சொல்லுவானா?” என்றான் கேலி தொனியில்.

“இதுல என்ன கேவலம் இருக்கு மேன்? ரிலேஷன்ஷிப்பை அவன் அவன் எப்படி எப்படியோ யூஸ் பண்றான். நான் எனக்குத் தேவையான மாதிரி யூஸ் பண்றேன்” என அவள் தோளைக் குலுக்க,

“ஹா யூஸ் பண்றது தான் உங்களுக்கு ஈஸியா வருமே!” சீறல் கலந்த புன்னகை அவனிடம்.

அதில் ஒரு கணம் முகம் இறுகியவள், “எல்லாருமே யூஸ் பண்ணிக்கிறதுக்கு தான ரிலேஷன்ஷிப்ல இருக்காங்க. ஒரு சிலர் எல்லாம் பார்க்க ரொம்ப விறைப்பா டீசண்ட்டா இருப்பாங்க. ஆனா பொண்ணுங்க வந்து குழஞ்சு பேசுனாலே உருகிடுவாங்க. கேர்ள்ஸ் வீக்னஸ்! பட் பேச்செல்லாம் ஒழுக்கத்துல ஊறிப்போன மாதிரி வரும்…” எனத் தன்னை சாடியவனின் புறம் அம்பை எய்தாள்.

நரம்பு புடைக்க உள்ளங்கையை இறுக்கி மூடி, உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த வஞ்சத்தீயை தற்காலிகமாக அடக்கினான் சத்யா யுகாத்ரன்.

தன்னைத் துரத்தி துரத்திக் காதலித்து விட்டு, தனக்கே எப்படி ஒரு பெயரைச் சூட்டுகிறாள்!? நெஞ்சம் அனலாகத் தகித்தது.

ஆகினும் அவள் அனுபவிக்க வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கிறதென்பதில் அவனுக்கு சின்னதாய் ஒரு திருப்தி. ஏளனப்புன்னகை ஒன்றை பரவ விட்டவன், “ஒழுக்கத்தை பத்தி தி கிரேட் ராம்குமாரோட பொண்ணு க்ளாஸ் எடுக்குறது தான் கேட்கவே பிரமிப்பா இருக்கு மேம். வாவ்!” என்றான் குத்தலாக.

முகம் கன்றிப் போனவள், “ஸ்டாப் இட் சத்யா. எனக்கு இந்த வெஞ்சன்ஸ் வச்சுட்டுப் பேசுறது, கேரக்டரை அனலைஸ் பண்ணிட்டு அவாய்ட் பண்றது எல்லாம் செட் ஆகாது. அதுனால தான், பத்மா உங்களை பி. ஏவா செலக்ட் பண்ணப்ப நான் மறுக்கல. பிகாஸ், எல்லாருமே ஒரே குப்பை தான்” என்று வார்த்தைகளை வழுக்க விட்டவள்,

பின் “தியரியா யூ நோ அபவுட் பிசினஸ். உங்க மூளையை நான் யூஸ் பண்ணிக்க தான் உங்களோட சர்டிபிகேட் எதுவும் இல்லைன்னு தெரிஞ்சும் இங்க அப்பாய்ண்ட் பண்ணுனேன். உங்களோட மத்த பெர்சனல் எனக்குத் தேவை இல்ல. போய் நான் சொன்ன வேலையை டிலே பண்ணாம பாருங்க” என்று பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

‘எல்லாருமே ஒரே குப்பை தான்!’ இந்த ஒற்றை வார்த்தையை சற்றே அலசிப் பார்த்திருந்தால், பின்வரும் விளைவுகளை தடுத்திருப்பானோ என்னவோ, கண்ணை மறைத்த கோபம் அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் திரித்தே நெஞ்சில் அடித்தது.

‘யூஸ் பண்றது தான் உங்களுக்கு ஈஸியா வருமே’ என்ற ஆடவனின் வாசகத்தை சற்றே நிதானமாய் உள்வாங்கி இருந்திருந்தால், அவளும் மென்மேலும் காயப்படாது தப்பித்திருப்பாளோ!

விதியின் நாடகம் அமைதியாய் அரங்கேற, சத்ய யுகாத்ரனோ அவளது மேஜையின் மீது கையை ஊற்றி குனிந்து நின்றான் ஸ்டைலாக.

கண்ணை நிமிர்த்தி இதயாம்ரிதா என்னவென பார்க்க, “இந்த இன்டெர்வியூல நானும் கலந்துக்கலாமா?” ஒற்றைப்புருவம் உயர்த்தி கேட்டவனை அதிர்ந்து நோக்கினாள் அவள்.

புது காதல் மலரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 69

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
58
+1
6
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்