Loading

ரகசியம் – 41

அதனைக் கவனித்த கீர்த்தனா,

“ஹே இவங்க ஏதோ பண்ணிட்டு வந்துருக்காங்க.. கன்ஃபார்ம்” என்று ஸ்டெஃபியிடம் கூறிக்கொண்டிருக்க அடுத்து பாண்டவாஸ் அணியின் பெயர் வாசிக்க பட அவர்களது பென்ட்ரைவை சொருக அதில் காட்சிகள் ஏதும் இல்ல என்று காண்பிக்க வேம்பு அடுத்த அணியின் பெயரை வாசித்து அவர்களது காட்சிகளை ஒளிபரப்பவிட்டு பாண்டவாஸ் அணியைத் தேடி வந்தார்.

“மதுரன்.. என்னாச்சு.. நீங்க கொடுத்த பென்ட்ரைவ் எம்ப்டியா இருக்கு.. எதுமே இல்லையே” என்று கூற பாண்டவஸ் அணியிலிருக்கும் அனைவரது முகத்திலும் அதிர்ச்சி.

“சார் என் சொல்ரீங்க.. நல்லா பார்த்தீங்களா” என்று கேட்க அவரோ,

“ரெண்டு தடவ செக் பண்ணிட்டேன்.. எதுமே இல்ல..” என்று கூற ஐவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

மாதவ் கிருஷ்ணா மற்றும் ரீனா குதூகலமாக பார்த்துக் கொண்டிருக்க கீர்த்தனா மற்றும் ஸ்டெஃபிக்கு அந்த மூவர் செய்த வில்லங்கம் புரிந்தது.

“பாவிங்களா.. இப்படி பண்ணிட்டாங்களே” என்று இருவரும் தங்களுக்குள் புலம்பினர்.

பிறகு பாண்டவாஸ் அணி இருக்கையில் இருந்து எழுந்து வீடியோ ஒளிபரப்பும் அறைக்கு சென்று சோதனை செய்ய வேம்பு கூறியது போல் எதுவும் இல்லை அதில். வேம்புவோ,

“என்னப்பா இப்படி பண்ணிடீங்க.. ரெண்டு மாச உழைப்பை இப்படி கவனமில்லாம வைக்கலாமா.. மத்த விடியோஸ் எல்லாம் ஓடி முடிக்குறதுக்குள்ள எதாச்சும் செய்ங்க சீக்கிரம்” என்று கூற மாறனோ,

“காய்ஸ் டோன்ட் வொர்ரி.. இப்படி ஏதாச்சு ஆக கூடாதுன்னு தான் இன்னொரு பென்ட்ரைவ்ல காப்பி பண்ணி எடுத்துட்டு வந்தேன்.. க்ளாஸ்ல பேக்ல இருக்கு.. வாங்க” என்றபடி சென்று அதனை எடுத்து தங்கள் அலைபேசியில் கேபிள் மூலம் சொருகி பரிசோதித்து பார்க்க அதிலும் எதுவும் இல்லை.

“டேய் என்ன டா இது.. எப்படி ரெண்டு பென்ட்ரைவ்ல இருக்குற விடியோஸும் டெலிட் ஆகும்..ஒன்னும் புரியலையே டா” என்று மாறன் பதற்றமாக கூற மதுரனோ,

“எனக்கு அந்த மாதவ் டீம் மேல தான் சந்தேகமா இருக்க.. ச்ச இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பாக்கல” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூற வகுப்புக்குள் ஓடி வந்தனர் கீர்த்தனாவும் ஸ்டெஃபியும். வந்தவர்கள்,

“உங்க விடியோஸ் பிளே ஆகாம போனதுக்கு மாதவ், கிருஷ்ணா, ரீனா தான் காரணம்.. எங்களுக்கு இப்போ தான் தெரிஞ்சுது.. இப்படி பண்ணுவாங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. முதல்லயே அவங்க பிளான் தெரிஞ்சிருந்தா உங்க கிட்ட சொல்லிருப்போம்.. பட் இப்போ என்ன செஞ்சாங்கன்னு எங்களுக்கு தெரில.. எங்ககிட்ட கூட அவங்க சொல்லல.. டைம் வேஸ்ட் பண்ணாம வேற என்ன ஐடியா பண்ணலாம் யோசிங்க சீக்கிரம்.. இதை சொல்லிட்டு போக தான் வந்தோம்” என்று கூறிவிட்டு சென்றுவிட இனியாவோ,

“ச்சை.. மனுஷங்களா அவங்க மூணு பேரும்.. கஷ்டப்பட்டு உழைச்ச உழைப்பை வீணாக்கிட்டாங்களே” என்று புலம்ப மதுரிகாவோ,

“இப்போ புலம்புறதுக்கு நேரம் இல்ல.. அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்கணும்.. யாராச்சும் மொபைல்ல விடியோஸ் வச்சுருக்கீங்களான்னு பாருங்க” என்று கேட்க அறிவோ,

“இல்ல மது.. எடிட் பண்ணாத வீடியோ தான் மொபைல்ல இருக்கு.. அதைக் கொடுக்க முடியாது” என்று கூற மாறனோ,

“ஆமா அதை எடிட் பண்ண ரெண்டு நாளாச்சு.. இப்போ நாம நெனச்சா கூட எதுவும் செய்ய முடியாது.. ” என்று கூற அனைவர்க்கும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. மதுரனோ நிதானமாக யோசித்தான். வேறேதும் வாய்ப்பிருக்கிறதா என்று. சிறிது நேர யோசனைக்கு பிறகு,

“காய்ஸ் ஒரு ஐடியா இருக்கு.. ஆனா அதுக்கு நாம கெஞ்சி கூத்தாடி தான் பர்மிஷன் வாங்கணும்” என்று கூற மற்ற நால்வரும்,

“என்ன சொல்ற.. என்ன பிளான்” என்று கேட்க மதுரன் தனது யோசனையைக் கூற ஆரம்பித்தான்.

மதுரன் தன் யோசனையைக் கூற அனைவரும் ஆர்வமாக கேட்க ஆரம்பித்தனர்.

“காய்ஸ்.. நமக்கு இப்போ ஒரே ஒரு ஆப்ஷன் தான் இருக்கு.. அது லைவா நடிச்சு காட்டுறது தான்..” என்று கூற மாறனோ,

“லைவாவா.. என்ன டா சொல்ற” என்று கேட்க,

“எஸ்.. நம்ம விடியோஸ தான அவங்களால டெலிட் பண்ண முடிஞ்சுது.. நாம இவ்ளோ நாள் உழைச்ச உழைப்பு இன்னும் நம்மகிட்ட தானே இருக்கு.. எல்லாருக்கும் அவங்க அவங்க சீன்ஸ் அண்ட் டயலாக்ஸ் நியாபகம் இருக்கு தான.. பேக்ரௌண்ட் ம்யூஸிக்க மட்டும் நெட்ல இருந்து டவுன்லோட் பண்ணி பிளே பண்ண வச்சுப்போம்.. அவங்க அவங்க கைல மைக்க பிடிச்சு ஸ்பாட்ல டயலாக் டெலிவரி அண்ட் ரியாக்ஷன் எக்ஸ்பிரஸ் பண்ணி எல்லாரும் முன்னாடியும் லைவ் பர்ஃபாமென்ஸ் பண்ணுவோம்.. நமக்கு இதைவிட்டா வேற வழியில்லை..

ஸ்க்ரிப்ட் ரீட் பண்ணி அவங்கவங்க டயலாக்ஸை ஒருதடவை நல்ல ரீகால் பண்ணிக்கோங்க.. டேய் அறிவு நீ பேக்ரௌண்ட் ம்யூசிக் டவுன்லோட் பண்ணி வை.. நானும் மாறனும் போய் காலேஜ் மேனேஜ்மேண்ட் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு வரோம்” என்றபடி சென்றனர். வேம்புவின் உதவியோடு கல்லூரி தலைமைப் பதவியில் இருப்பவரை சந்திக்க சென்றனர் மதுரனும் மாறனும். தங்கள் யோசனையை அவரிடம் கூறியவன்,

“சார் ப்ளீஸ்.. எங்களுக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க.. ரெண்டு மாசமா ரொம்ப ஹார்டஒர்க் பண்ணிருக்கோம் இதுக்காக.. விடியோஸ் திடிர்னு டெலிட் ஆகும்னு நாங்க எதிர்பார்க்கல.. நீங்க தான் எப்படியாச்சு வந்திருக்குறவங்க கிட்ட கேட்டு இதை அரேஞ்ச் பண்ணி தரனும்.. ப்ளீஸ் சார்” என்று கூற வேம்புவும்,

“ஆமா சார்.. இவங்க ரொம்ப டெடிக்கேட்டடா ப்ராக்டீஸ் பண்ணாங்க சார்.. வாய்ப்பு கொடுத்தா நல்லா இருக்கும்” என்று கூற தலைமை நபரோ,

“சரி ஓகே.. நீங்க இவ்ளோ கெஞ்சி கேட்குறதுனால.. உங்க சார்பா நான் போய்ட்டு சஹா பிலிம் இண்டஸ்ட்ரியோட எம்டி கிட்ட பேசி பார்க்குறேன்” என்றவர் சென்று பேசி பார்க்க வந்திருந்தவர்களுக்கும் ஒருசில காட்சிகளைத் தவிர்த்து மற்ற எதுவும் திருப்திகரமாக இல்லாததால் பாண்டவாஸ் அணிக்கு வாய்ப்பு கொடுக்க சம்மதித்தனர். வேம்பு வந்து மதுரன் மற்றும் மாறனிடம் கூற,

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்.. கொஞ்சம் அர்ரேஞ்சமென்ட்ஸ் பண்ண ஹெல்ப் பண்ணுங்க சார்” என்று கூறிவிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டனர்.

இவ்வாறு பாண்டவாஸ் அணி விடாமுயற்சியுடன் போராடிக்கொண்டிருக்க அங்கு எய்ம்ஸ் அணியின் மூன்று வில்லங்கமும் மிகவும் நிம்மதியாக இருந்தனர். ரீனாவோ,

“ஏன் டா.. இந்நேரம் அந்த க்ரூப் கவலைக்கிடமா உக்காந்துருப்பாங்கல” என்று கேட்க கிருஷ்ணாவோ,

“பின்ன.. நம்மக்கிட்டயே மோதுனா சும்மா விடுவோமா.. அதுவும் மச்சானோட பிளான் வேற லெவல்ல வொர்கவுட் ஆகியிருக்கு” என்று கூறி சிரித்தனர்.

நடந்தவை…

ஒவ்வொரு அணியின் காட்சிகளும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க அப்பொழுது மாதவ், கிருஷ்ணா மற்றும் ரீனா மூவரும் அரங்கத்தில் இருந்து எழுந்து வீடியோ ஒளிபரப்பாகும் அறைக்கு சென்றனர். அங்கு வேம்புவோ,

“என்னாச்சு நீங்க எதுக்கு இங்க வந்துருக்கீங்க.. இங்க எல்லாம் வர கூடாது” என்று கூற மாதவோ தன் கையில் இருந்த ஒரு பென்ட்ரைவைக் காண்பித்து,

“சார் சார் ஒரு சின்ன மிஸ்டேக் நடந்துட்டு.. பென்ட்ரைவ் மாறிடுச்சு இதுல தான் வீடியோ இருக்கு.. இதை மட்டும் மாத்தி வச்சுக்குறோம் சார் ப்ளீஸ்” என்று கூற அந்த நேரம் வேம்புவை யாரோ அழைக்க,

“சரி சரி அந்த பாக்ஸ்ல தான் இருக்கு.. அதுல உங்களோடது மட்டும் மாத்திட்டு அங்கேயே வச்சுருங்க.. நான் இப்போ வந்துடுறேன்” என்று கூறிவிட்டு செல்ல அவர்களுக்கு இன்னும் வசதியாகி போனது. பெட்டியில் இருந்த பாண்டவாஸ் அணியின் பென்ட்ரைவை எடுத்து அதன் உரையை திறந்து உள்ளே இருந்த சிப் போன்ற அமைப்பில் இருக்கும் பொருளை எடுத்து தாங்கள் கொண்டு வந்த பென்ட்ரைவில் இருக்கும் வெற்று சிப்பை அதில் சொருகிவிட்டு மீண்டும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வந்தனர். கிருஷ்ணாவோ,

“சபாஷ்.. வந்த வேலை வெற்றிகரமா முடிஞ்சுது..” என்று கூறி மகிழ மாதவோ,

“இன்னும் முடியல டா” என்றான். புரியாத ரீனாவோ,

“என்ன மாதவ் சொல்ற.. இன்னும் முடியலையா.. வேறென்ன” என்று கேட்க அவனோ,

“அவங்க டீம்ல இருக்குற எல்லாருமே ரொம்ப புத்திசாலி.. இன்னொரு காபி வச்சுருந்தாங்கன்னா என்ன செய்ய” என்று கூற நேறாக வகுப்பிற்கு வந்தவர்கள் பாண்டவாஸ் அணியின் ஐவரது பையையும் சோதனை செய்தனர். தேடியதில் மாறனின் பைக்குள் மற்றொரு பென்ட்ரைவ் இருப்பதைக் கண்டுபிடித்த கிருஷ்ணா அதனை மாதவிடம் கொடுக்க அவனோ அதனைத் தான் கொண்டு வந்த மடிக்கணினியில் பொருத்தி பார்க்க அவன் நினைத்தது போன்று அதில் அவர்களின் காட்சிகளின் நகல் இருந்தது.

“சொன்னேன்ல டா அவனுங்க கேடின்னு” என்று மாதவ் கூற ரீனாவோ,

“நாம அவங்களைவிட கேடின்னு காமிப்போம்.. டெலிட் பண்ணுடா” என்று கூற காட்சிகள் அழிக்கப்பட்டது. பிறகு அதனை மீண்டும் மாறானது பைக்குள் எடுத்த இடத்தில வைத்தவர்கள் மீண்டும் கலையரங்கம் வந்து சேர்ந்தனர்.

இவ்வாறாக மாதவ் தான் செய்துவிட்டு வந்த காரியத்தை எண்ணி சிரித்துக் கொண்டான்.

மற்ற அணிகளின் காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பாகி முடிக்க அப்பொழுது வேம்பு மேடை ஏறி பேச ஆரம்பித்தார்.

“ஹாய் எவ்ரிபடி… பாண்டவாஸ் டீமோட விடியோஸ் திடீர்னு ஏதோ தொழில்நுட்ப கோளாறால டெலிட் ஆகிடுச்சு.. அதனால நம்ம சஹா பிலிம் இண்டஸ்ட்ரி எம்டி சாரோட பர்மிஷனோட இப்போ அந்த டீம் அவங்க காட்சிகளை நேரடியா நமக்கு நடிச்சுக் காட்ட போறாங்க.. எல்லாரும் அவங்கள உற்சாகப்படுத்துவோம்..” என்றுகூற கலையரங்கமே கைத்தட்ட மாதவ், கிருஷ்ணா மற்றும் ரீனா மூவரின் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி.

“டேய் என்ன டா .. இது எப்படி” என்று ரீனா ஆவசத்தில் கத்த கிருஷ்ணாவோ,

“ச்ச என்ன செஞ்சாலும் மறுபடியும் ஏதாச்சும் பிளான போட்டு வந்துராணுங்க” என்று கடுப்புடன் கூற மாதவோ,

“நான் தான் சொன்னேன்ல.. அவனுங்க புத்திசாலின்னு.. நாம தான் இந்த ஆங்கிள்ல யோசிக்காம விட்டுட்டோம்.. எல்லாருக்கும் ஒரு ரூல்ஸ்னா இவங்களுக்கு மட்டும் வேற ரூல்ஸா.. முதல்ல என்னத்த நடிச்சு கிழிக்குறாங்கன்னு பார்ப்போம்..” என்று ஆற்றாமையில் கூற கீர்த்தனாவோ,

“இது தான் நல்லவங்களுக்கும் கெட்டவங்களுக்கும் இருக்குற வித்தியாசம்.. நீங்க இன்னும் எவ்ளோ அசிங்கப்பட போறீங்கன்னு தெரியல..” என்று கூற மாதவோ,

“கீர்த்து ப்ளீஸ்.. ஏற்கனவே கடுப்புல இருக்கோம்” என்று கூற,

“தயவு செஞ்சி என் பெயரைக்கூட சொல்லாத.. நினைக்கவே அசிங்கமா இருக்கு..” என்று கூற மாதவின் முகம் சுருங்கியது. ஸ்டெஃபியோ,

“ஆமா.. இப்படி ஒரு கேடுகெட்ட டீம்ல இருக்கோம்னு ரொம்ப கேவலமா இருக்கு” என்று கூற ரீனாவோ,

“வாய்மூடுங்க டி.. இருக்குற கடுப்புல இவளுங்க வேற” என்று கத்தினாள்.

 

ரகசியம் – 42

அரங்கில் முதலில் மாறன், அறிவு மற்றும் இனியா மூவரின் காட்சிகள் அவர்களால் தத்ரூபமாக நடிக்கப்பட மதுரன் இசையை ஒலிக்கவிட்டு உதவி செய்தான். பதினைந்து நிமிடங்களில் தங்கள் காட்சிகளை உணர்வுபூர்வமாக அவர்கள் நடித்து முடிக்க கலையரங்கம் முழுவதும் கரகோஷத்தால் நிரம்பியது.

அதன்பிறகு மதுரனும் மதுரிகாவும் அவர்களது காட்சியை மிகவும் இயல்பாக அதே சமயம் உணர்வு பூர்வமாக நடித்தனர். இருவரது கதாபாத்திரங்களும் இருவருக்கும் மிகவும் பாந்தமாக பொருந்தியது. கடைசி காட்சியில் அரங்கம் முழுவதும் விசிலடித்தும் கரோகோஷம் கொடுத்தும் ஆரவாரம் செய்தனர் மாணவர்கள்.

ஐவரது நடிப்பும் சஹா பிலிம் இண்டஸ்ட்ரியில் இருந்து வந்திருந்த ஐவரை மட்டுமல்லாமல் மாதவ், கிருஷ்ணா மற்றும் ரீனாவையும் வெகுவாக ஆச்சர்யப்பட வைத்தது. மூவராலும் அதற்குமேல் எதுவும் வாயைக் கூட திறக்க முடியவில்லை.

“ஹெலோ எவ்ரிஒன்.. போட்டியில நடிச்சு அதுக்கு அப்புறம் நாங்க ஜெயிக்கலனா கூட எங்களுக்கு பெருசா தெரியாது.. ஆனா ரெண்டு மாசமா கடுமையா உழைச்சும் போட்டியில கலந்துக்க கூட முடியாம போயிடுமோன்னு ரொம்ப பயந்தோம்.. நல்லவேளை எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு மறு வாய்ப்பை கொடுத்த கல்லூரி நிர்வாகத்துக்கும் சஹா பிலிம் இண்டஸ்ட்ரில வந்திருக்கும் அனைவருக்கும் எங்களுக்கு உற்சாகமளித்து ஊக்குவித்த மாணவர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்..” என்று பாண்டவாஸ் அணி சார்பாக மதுரன் நன்றி கூறி சென்றான்.

பிறகு சிறிது நேரம் சஹா பிலிம் இண்டஸ்ட்ரி குழு ஆலோசனை செய்து யார் வெற்றியாளர் என்று அறிவிக்க தயாராயிருந்தனர்.

மேடை ஏறிய சஹா பிலிம் இண்டஸ்ட்ரி மேனேஜிங் டைரக்டர் தன் உரையை ஆரம்பித்தார்.

“க்ளாட் டூ மீட் யு ஆள்… எல்லாருமே ரொம்ப அருமையா நடிச்சுருந்தீங்க.. அதுவும் பக்காவா பதினஞ்சு நிமிஷத்துக்குள்ள எல்லாருமே செஞ்சிருந்தது பாராட்டப் பட வேண்டிய விஷயம்..

நாங்க பார்த்துல இருந்து ஒரு ஐந்து பேரை தேர்ந்தெடுத்துருக்கோம். நிஜமா அருமையா பண்ணிருந்தாங்க.. இவங்கள நாங்க தேர்ந்தெடுக்க காரணம் போட்டி விதிமுறைகளை சரியா பின்பற்றி ரொம்ப வசனங்கள் மற்றும் உணர்வுகளை சரியா அழகா வெளிப்படுத்திருந்தாங்க..

இப்போ நேரடியா போட்டியோட முடிவை அறிவிச்சுடலாமா.. அண்ட் தி வின்னர் இஸ்.. மாதவ், கீர்த்தனா, ரீனா, கிருஷ்ணா அண்ட் ஸ்டெஃபி ஃப்ரம் ஃபர்ஸ்ட் இயர் டிப்ளமோ இன் ஆக்டிங். ப்ளீஸ் வெல்கம் டு தி ஸ்டேஜ்” என்று கூற எய்ம்ஸ் அணியின் அனைவரின் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி. பாண்டவாஸ் அணியிலும் மதுரனைத் தவிர்த்து மற்ற நால்வரின் முகத்திலும் சோகம். அதனைக் கண்டவன்,

“காய்ஸ்.. இப்போ எதுக்கு சோகம்.. நம்மளோட டேலண்ட்ட நாம வெளிய கட்டணும்.. அதுக்காக நாம இவ்ளோ தூரம் போராடிருக்கோம்.. வெற்றி கிடைக்குறதும் கிடைக்காததும் நம்ம கைல இல்ல.. இது வெறும் ஆரம்பம் தான.. இன்னும் நமக்கு நெறய நேரம் இருக்கு.. இதுக்காக அந்த எய்ம்ஸ் க்ரூப் போராடுச்சு.. வாங்கிட்டு போகட்டும் விடுங்க.. நம்ம உழைப்புக்கான பலன் நமக்கு கண்டிப்பா கிடைக்கும் ஒரு நாள்” என்று ஆறுதல் கூற சற்று மட்டுப்பட்டனர்.

எய்ம்ஸ் அணியின் ஐவரும் குழப்பமாக மேடை ஏறி நின்றனர். அவர்களே பாண்டவாஸ் அணி தான் வெற்றி பெறும் என்று நினைத்திருந்தனர். மாறாக தங்களைக் வெற்றி பெற்றவராக கூறியதில் அவர்களுக்கு ஆச்சரியமே.

ஆனால் அரங்கம் முழுவதும் “பாண்டவாஸ் பாண்டவாஸ்” என்று ஆர்பரிக்க சஹா பிலிம் இண்டஸ்ட்ரி எம்டி,

“லிசென் காய்ஸ்.. உங்க விருப்பம் புரியுது.. என்னோட முதல் முடிவு கூட அவங்களா தான் இருந்துச்சு.. ஆனா மத்த டீம் எல்லாருமே ரூல்ஸ் கடைபிடிச்சு பண்ணிருக்காங்க.. இவங்க சூழ்நிலையால விதிமுறைகள் கடைப்பிடிக்க தவறி இருந்தாலும் பாண்டவாஸ் டீமோட நடிப்பு மிகவும் பாராட்டுக்குரியது.. ஏன் சொல்றேன்னா விடியோஸ் எடுக்கும் போது நீங்க நெறய டேக் எடுத்து பிட் பிட்டா பண்ணிருப்பீங்க..

ஆனா அவங்க மேடை ஏறி இத்தனை பேர் முன்னிலையில சிறு பிசிறு கூட தட்டமா அவ்ளோ நம்பிக்கையா உணர்வுபூர்வமா பண்ணிருந்தங்கன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லன்னு நெனைக்குறேன்

ஆனா இப்போ இவங்கள வெற்றி பெற்றவங்கன்னு அறிவிச்சா எல்லாம் சரியா விதிமுறைகள் கடைபிடிச்சு பண்ணுன மத்த டீம அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்.. அதனால இந்த போட்டி பொறுத்தவரை எய்ம்ஸ் அணிய தான் வெற்றி பெற்றதாக அறிவிக்குறோம்..

ஆனா கூடிய சீக்கிரமே இதை விட பெரிய பட்ஜட்ல நான் ஒரு ப்ராஜெக்ட் பண்ணலாம்னு இருக்கேன்.. அதுக்கு எந்த வித போட்டியும் வைக்காம நேரடியா பாண்டவாஸ் அணிய தான் தேர்ந்தெடுக்க போறேன்னு இப்போ உங்க முன்னாடி அறிவிச்சுக்குறேன்” என்று எய்ம்ஸ் அணி மேடையில் நிற்க வைத்து பாண்டவாஸ் அணியைப் அவர் உயர்வாக பேசியதே மாதவ், கிருஷ்ணா மற்றும் ரீனாவுக்கு மிக பெரிய தண்டனையாக இருக்கும். கீர்த்தனாவுக்கும் ஸ்டெஃபிக்கும் இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.

அவரின் கூற்றைக் கேட்ட பாண்டவாஸ் அணியின் ஐவரது முகத்திலும் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி தாண்டவமாடியது. மதுரன் கூறியபடி அவர்கள் உழைப்பிற்கான பலன் இன்றே கிடைத்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சியே..

பிறகு அனைவரும் கலையரங்கத்திலிருந்து கலைந்து வகுப்பிற்கு சென்றனர். கீர்த்தனா மற்றும் ஸ்டெஃபி நேராக வேம்புவிடம் சென்று மாதவ், கிருஷ்ணா மற்றும் ரீனா செய்த காரியத்தைக் கூறிவிட வேம்புவோ,

“வாட்.. என்னமா சொல்ரீங்க.. அவங்க மூணு பேரும் தான் டெலிட் பண்ணிருக்காங்களா.. ஷிட்.. அவங்களுக்கு ஏன் இப்படி ஒரு வன்மம்” என்றவர் பாண்டவாஸ் அணியை அழைத்தார். மதுரனோடு சேர்ந்து மற்ற நால்வரும் வேம்புவின் முன் வந்து நின்றனர். அவரோ,

“மதுரன்.. உங்க டீமோட விடியோஸ்..” என்று கூறுவர மாறனோ,

“தெரியும் சார்.. இவங்க டீம்ல இருக்க மத்த மூணு பேர் செஞ்ச வேலை தான்னு” என்று கீர்த்தனா மற்றும் ஸ்டெஃபியைக் குறிப்பிட்டு கூற வேம்புவோ,

“அப்போ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா” என்று கேட்க மதுரிகாவோ,

“தெரியும் சார்..” என்றாள்.

“என்ன நீங்க.. அப்போ நாம பர்மிஷன் வாங்க போனப்பவே ப்ரின்ஸிபல் கிட்ட சொல்லிருக்கலாம் தான” என்று கூற அறிவோ,

“சொல்லி மட்டும் என்ன ஆக போது சார்..” என்று விரக்தியாக கேட்க அவரோ,

“என்ன இப்படி சொல்லிட்டீங்க.. கம்பளைண்ட் பண்ணி அவங்களுக்கு பனிஷ்மென்ட் வாங்கி கொடுத்தா தான் அவங்களுக்கு செஞ்சது தப்புன்னு புரியும்” என்று கூற இனியாவோ,

“அவங்க புரிஞ்சுக்குற ஆளுங்க கிடையாது சார்.. ” என்றிட அவரோ,

“சரி இப்பவும் ஒன்னும் கெட்டு போகல.. நான் போயிட்டு சிசிடிவி ஃபுட்டேஜ் எடுத்துட்டு வரேன்.. அவங்கள பத்தி ஒரு கம்பளைண்ட் எழுதி கொடுங்க.. மத்தத நான் பார்த்துக்கறேன்” என்று அவர் கூற மதுரனோ,

“சார் ப்ளீஸ்.. இதை இதோட விட்ரலாம்.. இப்போ நாங்க மாட்டிவிட்டா இன்னும் அவங்களுக்கு எங்கமேல வன்மம் கூடுமே தவிர அவங்க திருந்த மாட்டாங்க.. அதுமட்டுமல்ல அவங்க மூணு பேர் செஞ்ச தப்புக்கு தப்பே செய்யாத இந்த ரெண்டு பேர் பாதிக்கப்படுவாங்க” என்று கூற கீர்த்தனாவோ,

“இல்ல மதுரன்.. அந்த க்ரூப்ல சேர்ந்ததுக்கான பனிஷ்மெண்ட்டா இருந்துட்டு போகட்டும்.. நீங்க எங்கள பத்தி யோசிக்க வேணாம்” என்க ஸ்டெஃபியோ,

“ஆமா எங்களுக்கும் அவங்க செய்ற எதுவும் சரியா படல.. நீங்க கம்பளைண்ட் கொடுங்க பரவாயில்ல” என்று கூற மதுரிகாவோ,

“இல்ல ஸ்டெஃபி.. மதுரன் சொல்றது தான் கரெக்ட்.. இன்னும் மூணு வர்ஷம் நாம ஒண்ணா படிச்சாகனும்.. இப்படி மாத்தி மாத்தி ஏதாச்சும் செஞ்சுட்டே இருந்தா வீணா பிரச்சனை தான் ஆகும்.. அவங்களுக்கு தேவை எங்க டீம் ஜெயிக்க கூடாது.. உங்க டீம் ஜெயிக்கணும் அவ்ளோ தான.. அதுதான் நடந்துருச்சே.. இதோட இதை விட்ரலாம்” என்று கூற வேம்புவோ,

“பரவாயில்ல.. இந்த காலத்துலயும் இப்படி மத்தவங்களுக்காக யோசிக்குறீங்க.. உங்க குணத்துக்காகவே நீங்க எல்லாரும் டாப்புக்கு வருவீங்க..” என்று கூற மாறனோ,

“தேங்க் யூ சார்.. இனிமே இந்த பிரச்சனைய பத்தி யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணிக்க வேணாம்” என்று கூற கூட்டம் அவ்வாறு கலைந்து வகுப்புக்கு சென்றது. கீர்த்தனா மற்றும் ஸ்டெஃபி இருவரும் வகுப்புக்கு சென்று மற்ற மூவரையும் திட்ட ஆரம்பித்தனர்.

“ஏன்டா.. இப்படி செய்ய உங்களுக்கு எப்படி மனசு வருது.. அடுத்தவங்க உழைப்பை திருடனும்னு நெனைக்குறீங்க.. ச்ச நினைக்கவே அசிங்கமா இருக்கு” என்று கீர்த்தனாவும்,

“நீங்க தான் எல்லா செஞ்சீங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சும் கூட அவங்க உங்கமேல கம்பளைண்ட் கொடுக்காம எவ்ளோ பெருந்தன்மையான பேசுனாங்க தெரியுமா.. அவங்களுக்கு போய் இப்படி ஒரு காரியம்.. ச்சே” என்று ஸ்டெஃபியும் திட்ட மூவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். மீண்டும் கீர்த்தனாவோ,

“சரி நீங்க இப்படியே இருந்துக்கோங்க.. உங்க கூட இருந்தா உங்க பாவம் எங்களுக்கும் சேர்ந்து வரும்.. நாங்க வேற டீம் மாற போறோம்” என்று கூற மாதவோ,

“ஹே கீர்த்தி.. இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இவ்ளோ பெரிய முடிவு” என்று கேட்க ஸ்டெஃபியோ,

“எது மாதவ் சின்ன விஷயம்.. உன் உழைப்பை வேற எவனாவது அழிச்சுருந்தா அப்போ தெரிஞ்சுருக்கும்..” என்று கடுப்பாக கூற கீர்த்துவோ,

“சரியா சொன்ன டி.. இவங்க மூணு பேருக்கும் இன்னும் வர அவங்க செஞ்சது தப்புன்னு கூட தோணல.. சொல்லி வேஸ்ட்.. நாம வேற டீம் பார்த்துக்கலாம்” என்று கூற மாதவோ,

“சரி ஒத்துக்குறோம்.. நாங்க செஞ்சது தப்பு தான்.. இப்போ என்ன அந்த பாண்டவாஸ் டீம்கிட்ட போய் மன்னிப்பு கேட்கட்டுமா.. அப்படி செஞ்ச நீங்க சமாதானம் ஆகுவீங்களா” என்று கேட்க கிருஷ்ணாவும் ரீனாவும் அவனை சந்தேகமாக பார்த்தனர். கீர்த்தனாவோ,

“சும்மா எங்களுக்காக கேட்டு ஒரு யூசும் இல்ல.. நீங்க மனசார உணர்ந்து கேட்டா தான் யூஸ்.. அத தான் நீங்க செய்ய மாடீங்களே” என்று கூற,

“இல்ல உணர்ந்து தான் சொல்றேன்.. இனிமே அவங்க டீமுக்கு அகைன்ஸ்ட்டா எதுவுமே நாங்க பண்ண மாட்டோம்” என்று மாதவ் கூற கிருஷ்ணாவோ,

“டேய் மச்சான் என்ன டா இப்படி பல்டி அடிக்கிற” என்று கேட்க மாதவோ,

“இல்ல மச்சான்.. இனிமேயும் அவங்கள நாம எதிர்த்து நின்னோம்னா நாம மனுஷங்களே இல்ல.. அவங்க நெனச்சுருந்தா நம்மள டிஸ்குவாளிஃபை பண்ண வச்சுருக்கலாம்.. ஆனா அவங்க செய்யல.. எதுக்காகன்னு நெனைக்குற.. நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு தான்.. அதனால விட்ரலாம்” என்று கூற ரீனாவோ,

“அடப்பாவி.. இப்படி பண்ணிட்ட உன்ன நம்பி நான் அவனுங்க கிட்ட ரொம்ப விளையாடிட்டேனே” என்று கூற மாதவோ,

“வாங்க எல்லாத்துக்கும் சேர்த்து சாரி கேட்டுட்டு வந்துரலாம்” என்று கூறி இருவரையும் அழைத்துக்கொண்டு பாண்டவாஸ் அணியிடம் சென்றான். அவர்கள் ஐவரும் இவர்கள் மூவரை புரியாமல் பார்த்தனர்.

 

ரகசியம் – 43

அறிவோ, “போச்சு டா.. மறுபடியும் சண்டைக்கா” என்று புலம்ப அதற்குள் மாதவ்,

“சாரி காய்ஸ்.. ஃபார் எவ்ரிதிங் வி டிட்” என்று கூற ஐவரும் ஆச்சர்யமாய் பார்த்தனர். இனியாவோ,

“இன்னைக்கு மழை வந்தாலும் வரும்” என்று கூற கிருஷ்ணனும் ரீனாவும்,

“நாங்களும் சாரி” என்க இப்பொழுது அறிவோ,

“இல்ல அன்பு.. சுனாமியே வரும்” என்று கூற மதுரனோ,

“ரெண்டு பெரும் சும்மா இருங்க காய்ஸ்..” என்றவன் மாதவிடம்,

“என்ன திடிர்னு” என்று கேட்க அவனோ,

“சொல்லணும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்.. பாய்” என்று கூறிவிட்டு செல்ல போக பிறகு மீண்டும் திரும்பியவன்,

“அண்ட் ஆல்சோ தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் தட் யூ டிட் ஃபார் அஸ்” என்று கூறிவிட்டு சென்றான்.

“என்ன டா இவனுங்க.. பொசுக்குன்னு சர்ரண்டர் ஆயிட்டானுங்க” என்று மதுரிகா கேட்க மாறனோ,

“அதுக்காக தானே நாம அவங்க மேல கம்பளைண்ட் கொடுக்காம வந்தோம்.. நம்ம நோக்கம் நிறைவேறிடுச்சு” என்று கூற மதுரனோ,

“ஆமா.. இதுவும் நல்லதுக்கு தான்..” என்றான். பிறகு இனியாவோ,

“அப்போ வாங்க எல்லாரும் ஹோட்டல் போலாம்.. நம்ம வெற்றியை கொண்டாட வேணாமா” என்று கேட்க மதுரிகாவோ,

“சூப்பர் டி இனியா.. நானும் இதை தான் சொல்லலாம்னு இருந்தேன்” என்று கூற மாறனோ,

“என்ன டா நீங்க ரெண்டு பேரும் இன்னும் சோறுன்னு ஆரம்பிக்கலையேன்னு நெனச்சேன்.. ஆரம்பிச்சுட்டீங்க” என்க அறிவோ,

“சரியா சொன்ன மாறா” என்று சிரிக்க பெண்கள் இருவரும் முறைக்க மதுரனோ,

“சரி வாங்க போய்ட்டு வரலாம்.. அவங்க ஆசையா நிறைவேத்துறது நம்ம கடமை தான” என்று கூறியவன் மதுரிகாவைப் பார்த்து கண்ணடிக்க அவளோ,

‘கடவுளே இவன் சும்மா பார்த்தாலே என்னால பார்க்க முடியாது.. இதுல கண்ணடிக்க வேற செய்றான்.. சோதிக்குறான் மை லார்ட்’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டு தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். அவளது செயலில் மதுரனுக்கு புன்னகை அரும்பியது. பிறகு ஐவரும் உணவகத்திற்கு சென்றனர்.

இங்கு மன்னிப்பு கேட்டுவிட்டு வந்ததும் மாதவோ கீர்த்தனாவிடம்,

“இப்போ போதுமா.. சாரியும் கேட்டுட்டு வந்துட்டோம்.. இனிமே அவங்க கூட சண்டைக்கு போக மாட்டோம்.. இப்போ உனக்கு ஹேப்பி தான.. இனிமே ஒழுங்கா பேசு கீர்த்து” என்று கூற கீர்த்துவின் மனதில் மாதவுக்காக புதிய சிறகு ஒன்று முளைக்க சிரித்துக்கொண்டாள் பெண்ணவள். கிருஷ்ணாவும் ரீனாவும்,

“என்ன டா நடக்குது இங்க” என்று கேட்க ஸ்டெஃபியும்,

“அதான.. தனியா ஒரு டிராக் ஓடுது போல” என்று கேட்க மாதவ் மற்றும் கீர்த்தனா புன்னகைத்துக் கொண்டனர்.

அங்கு ஐவரும் உணவகத்திற்கு செல்ல இனியாவோ ஏதோ பேசிக்கொண்டிருக்கும் பொழுது விழியைப் பற்றிய பேச்சு எழுந்தது. அப்பொழுது மதுரனோ,

“இன்னைக்கு சனிக்கிழமை தான.. அவளுக்கும் ஸ்கூல் லீவ் தான.. அப்போ அவளையும் கூப்பிடலாம்ல” என்று கேட்க இனியாவோ,

“கூப்பிடலாம் தான்.. ஆனா மறுபடியும் அவ்ளோ தூரம் போய் கூட்டிட்டு வரணும்.. நான் வண்டி ஓட்டுற ஸ்பீடுக்கு அவளைக் கூட்டிட்டு வரதுக்குள்ள கடையை சாத்திட்டு போய்டுவாங்க” என்று கூற மதுரனோ,

“அப்போ நான் போய் கூட்டிட்டு வரட்டுமா” என்று கேட்க மாறனோ,

‘வர வர மது மதுரன்கிட்ட பேசவே மாட்டேங்குறா.. ஒருவேளை நாம அன்னைக்கு அப்படி சொன்னதால தான் இப்படி பண்றாளா.. இவ அந்த பெயர் தெரியாதவன தேடுறத விடனும்னு தான் அப்படி சொன்னேன்.. இவை வேற மாதிரி நெனச்சுட்டாளா.. மது மதுரனை லவ் பண்றது தான் பெட்டர்.. எப்படியும் இங்க இனியாவும் அறிவும் தான் பேசிட்டு இருப்பாங்க.. நான் இமைய கூப்பிட போய்ட்டா மதுரனும் மதுவும் பேசி தான ஆகணும்’ என்று மனதினுள் கணக்கு போட்டவன்,

“இல்ல டா இரு.. நான் போயிட்டு வரேன்” என்றவன் இனியாவிடம் விழியின் அலைப்பேசி எண்ணை வாங்கி கொண்டு அவளை அழைத்து வர புறப்பட்டான். கிளம்புவதற்கு முன்பு அழைப்பு விடுத்து கிளம்பி தயாராக இருக்க சொல்லலாம் என்று நினைத்தவன் அவளுக்கு அழைப்பு விடுத்தான். அவளோ அங்கே,

‘ச்ச லவ் பண்றோம்னு தான் பேரு.. கேவலம் நம்மாளு நம்பர் கூட நம்ம கிட்ட இல்ல..’ என்று புலம்பியவள் பிறகு,

‘நம்பர் இல்லனா என்ன.. எப்படியும் ஒருநாள் கிடைக்க தான போகுது.. நாம இப்போவே அவங்க நேம் மட்டும் சேவ் பண்ணி வச்சுப்போம்’ என்று நினைத்தவள் அலைபேசி எண்ணே இல்லாமல் “இளா” என்று பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு அதனைப் பார்த்தவள் தன் பைத்தியக்கார தனத்தை எண்ணி சிரித்துக்கொண்டு அதையே

காதலைப் பற்றிய
என் நம்பிக்கை யாதெனில்..

இன்றில்லை என்றாலும்
என்றேனும் ஒருநாள்
உன் அலைபேசி எண்ணை
நான் பதிவு செய்ய நேரும்
என்றெண்ணி..

இன்றே உன் அலைபேசி எண்
இல்லாத போதும் உனக்கான
இடத்தில் உன் பெயரை மட்டும்
காதலுடன் பதிவு செய்வதே ..

என்று கவிதையாக அவனை நினைத்து எழுதிக் கொண்டிருக்க சரியாக அப்பொழுது தான் மாறனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

“யார் இது.. புது நம்பரா இருக்கு.. நமக்கெதுக்கு வம்பு” என்று அதனைத் துண்டித்து விட அவனோ மீண்டும் அழைக்க அதில் கடுப்பானவள் அழைப்பை ஏற்று,

“ஹலோ” என்க அவனோ,

“ஹே பச்சைமிளகா.. எதுக்கு டி கால் கட் பண்ணுன” என்று சிறு கடுப்பில் அவனை மீறி “டி” என்று கூறிவிட அவளோ,

“நிஜமாவே நம்மாளா பேசுறது..” என்று ஒரு ஆச்சர்யத்தில் சத்தமாக புலம்பிவிட அவனது காதில் அவள் கூற்று விழுக அவனோ,

“என்னது.. நம்மாளா” என்று கேட்க விழிக்கு சப்த நாடியும் ஒடுங்கியது.

‘அடக்கடவுளே ஒரு எக்ஸைட்மெண்ட்ல சத்தமா வேற புலம்பிட்டேனே’ என்று நினைத்தபடி என்ன பதில் கூறுவது என்று முழித்தாள்

விழி கூறிய “நிஜமாவே நாம்மாளா பேசுறது” என்ற கூற்று மாறனின் செவியில் விழுந்துவிட அவனோ அதனை அவளிடம் கேட்க என்ன கூறுவது என்று தெரியாமல் முழித்தவள் பிறகு,

“நம்மாளா.. ச்ச ச்ச அப்படி சொல்லல.. நிஜமாவே நம்மள தான் டி போட்டு பேசறாங்களான்னு கேட்டேன்.. அது உங்க காதுல ராங்கா கேட்டிருக்கும்” என்று கூற அப்பொழுது தான்.. தான் அவளை டி என்று அழைத்திருக்கிறோம் என்று மாறனுக்கு புரிய,

“அதுவா.. சாரி ஒரு ஃபுளோல வந்துடுச்சு” என்று கூற அவளோ,

‘டேய் மாக்கான்.. நீ என்னை அப்படி கூப்பிடுறது தான் எனக்கு வேணும்’ என்று நினைத்தவள்,

“பரவாயில்ல.. ஒன்னும் தப்பில்ல” என்று கூற அவனோ,

“இல்ல இல்ல தப்பு தான்..” என்று கூற அவளோ,

“மது அக்காவை, இனியாவை எல்லாம் டி போட்டு பேசுறீங்க தான.. எதனால ஃபிரண்ட்னு உரிமைல தான.. அப்போ என்னை கூப்பிட மட்டும் தப்பா தெரியுதுன்னா அப்போ என்னை ஏதோ ரோட்ல போற ஒருத்தியா தான நெனைக்குறீங்க.. நான் போனை வைக்குறேன்” என்று துண்டிக்க போக அவனோ,

“ஹே ஹே.. இரு டி இரு டி.. அப்படியெல்லாம் நினைக்கல” என்று கூற அவன் சொல்லும் ஒவ்வொரு ‘டி’யிலும் அவளது மனம் குதூகலித்தது. பிறகு,

“சொல்லுங்க” என்று அவள் கூற அவனோ,

“ஒரு மனுஷன் கால் பண்ணிருக்கானே.. எதுக்கு பண்ணிருக்கான்னு இப்போ வர கேட்கல.. அதுக்குள்ள மேடமுக்கு கோவம் மட்டும் வந்துருது.. எப்படி எப்படி யாரோ ரோட்ல போறவன்னு உன்ன நெனச்சனா.. ரோட்ல போர்வாளை பிக்கப் பண்றதுக்கு தான் இப்போ நான் வந்துட்டு இருக்கேனாக்கும்” என்று அவன் கேட்க அவளோ,

“என்ன இளா சொல்ரீங்க.. என்னைப் பிக்கப் வந்துட்டு இருக்கீங்களா.. என்ன திடிர்னு” என்று கேட்க அவனோ,

“மேடம் எதுக்குன்னு சொன்னா தான் வருவீங்களா.. கிளம்பி இரு.. வந்ததும் கால் பண்றேன்.. வெளிய வா” என்று கூறிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்துவிட இவளுக்கோ இருப்பு கொள்ளவில்லை.

‘என்னவா இருக்கும்.. எதுக்காக இளா நம்மள கூப்பிட வாராங்க.. ஒருவேளை நம்மள மாதிரியே அவங்களுக்கு ஏதும் என்னை பத்தி தாட் இருக்குமா.. இல்ல இல்ல.. இது நம்ம கற்பனை.. அவங்க என்னவோ சாதாரணமா தான் பேசுறாங்க.. ஐயோ மண்டை வெடிக்குதே… சரி என்னவோ இப்போ அவங்க கூட எப்படி போறது.. அப்பா வேற வீட்டுல இருக்காங்க.. அவங்க கூட பைக்ல போறத ஏதும் தப்பா நெனச்சுட்டா என்ன செய்ய’ என்று யோசித்தவள் கிளம்பி முடிக்கவும் மாறன் அவளுக்கு அழைப்பு விடுக்கவும் சரியாக இருந்தது. தன் தந்தையிடம் சென்றவள்,

“அப்பா இனியா ஃபிரண்ட்ஸ் எல்லாரும் ஹோட்டல் போயிருக்காங்களாம்.. அவ என்னையும் வர சொன்னா.. நான் சைக்கிள் எடுத்துட்டு போயிட்டு வரேன்” என்று கூற ராமானுஜமோ,

“தனியாவா மா போற.. அப்பா வரட்டுமா கூட” என்று கேட்டபடி அவர் வெளியே வர,

“இல்லப்பா மாறன் வந்துருக்காரு.. அவரை ஃபாலோ பண்ணி போய்டுவேன்” என்று கூறி சைக்கிளை எடுக்க போக அப்பொழுது தான் ராமானுஜம் அவனைக் கவனித்தார்.

“அடடே வாப்பா.. என்ன வெளியவே நின்னுட்ட.. எப்படி இருக்க” என்று கேட்க அவனும்,

“நான் நல்ல இருக்கேன் அங்கிள்.. நீங்க எப்படி இருக்கீங்க” என்று கேட்க அவரும்,

“நல்லா இருக்கேன் பா.. மத்த எல்லாரும் எங்க” என்று கேட்க மாறனோ,

“மத்த எல்லாரும் ஹோட்டல்ல வெயிட் பண்றாங்க அங்கிள்.. இனியா ஸ்கூட்டி ஸ்லோவா தானே ஓட்டுவா அவ இமைய கூட்டிட்டு வந்தா லேட் ஆகிடும்னு என்னைக் கூட்டிட்டு வர சொன்னா” என்று கூற அவரோ,

“விழிமா.. நீ சைக்கிள்ல எப்படி அவ்ளோ தூரம் போவ.. அதான் தம்பி உன்னைக் கூப்பிட தான வந்துருக்கு.. மாறன் கூட போயிட்டு வா” என்று கூற அவளோ,

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி’ என்று குதூகலித்தவள்,

“சரி பா..” என்று பவ்யமாக அவன் பின்னே ஏறிக்கொள்ள இருவரும் ராமானுஜத்திடம் இருந்து விடைபெற்று சென்றனர். அந்த தெருவைத் தாண்டியதும் வண்டியை நிறுத்தியவன்,

“நீ ஆட்டோல வா” என்று கூற அவளோ,

“ஏன்.. வண்டிக்கு என்னாச்சு” என்று கேட்க அவனோ,

“வண்டிக்கு ஒன்னு ஆகல.. உனக்கு தான் என் மேல் நம்பிக்கை இல்ல” என்று கூற அவளோ,

“எனக்கு உங்கமேல நம்பிக்கை இல்லையா.. என்ன உளறுறீங்க”

 

ரகசியம் – 44

“ஹே நீ தான் டி என்மேல நம்பிக்கை இல்லாம சைக்கிள எடுக்க போன.. உங்க அப்பா சொன்னதால தான் என்கூட பைக்ல ஏறுன.. நம்பிக்கை இல்லாதவங்க ஒன்னு என்கூட வர தேவையில்லை” என்று கூற விழியோ வாய்விட்டு சிரித்துவிட்டாள். அவள் சிரிப்பில் கடுப்பானவன்,

“இப்போ எதுக்கு சிரிக்குற” என்று எரிச்சலாக கேட்க அவளோ,

“பின்ன வேற என்ன செய்ய சொல்றீங்க.. நான் எங்க அப்பா எதும் தப்பா நெனச்சுர கூடாதுன்னு சைக்கிளை எடுக்குற மாதிரி சீன போட்டேன்.. எங்க அப்பா உங்ககூட போறதுக்கு ஒன்னும் சொல்ல மாட்டாங்க தான்.. ஆனாலும் ஏதும் நெனச்சுக்க கூடாதுன்னு அவர் வாயால உங்ககூட போன்னு சொல்ல வைக்க நான் பிளா போட்டா.. நீங்க என்னனா நம்பிக்கை இல்ல தும்பிக்கை இல்லனு.. நம்பிக்கை இல்லாம தான் அன்னைக்கு உங்ககூட வண்டில உங்க வீட்டுக்கு வந்தேனா” என்று கேட்டுவிட்டு சிரிக்க அவனோ,

“அடிப்பாவி.. என்னடி இப்படி நடிக்குற.. நான் கூட ஒரு நிமிஷம் கோபப்பட்டுட்டேன்” என்று கூற அவனது கோபமும் அவளுக்கு பிடித்து தான் இருந்தது.

“உரிமை இருக்குற இடத்துல தான் கோபம் வரும்.. வண்டிய எடுங்க” என்று அவள் கூற அவனும் வண்டியைக் கிளப்பினான். ஒரு நிமிடம் தான் எதற்காக அவளிடம் கோபப்படவேண்டும் அவளுக்கு தன் மீது நம்பிக்கை இல்லை என்று நாம் ஏன் வருந்த வேண்டும் என்று சிந்தித்திருந்தால் இனியாவின் மேல் அவனுக்கு தோன்றிய உணர்வுகளுக்கும் இமையின் மேல் அவன் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்குமோ என்னவோ..

செல்லும் வழியில் விழிக்கு தான் நடப்பவை எல்லாம் ஆச்சர்யமாக இருந்தது. நினைத்த உடன் அவனது அலைபேசி எண் கிடைத்தது ஒரு ஆச்சர்யம் என்றால் அவன் தன்னை அழைத்து போக வந்தது அடுத்த ஆச்சர்யம்.. உரிமையாக டி என்று அழைத்தது, உரிமையாக கோபம் கொண்டது இது எல்லாமே அவளது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. என்றோ ஒருநாள் மொத்தமாய் அனைத்தையும் உடைக்க தான் இத்தனை சந்தோஷத்தை விதி தருகிறதோ..?

உணவகத்திற்கு வந்து இறங்கி இருவரும் உள்ளே செல்ல அங்கு நால்வரும் இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தனர். இனியாவோ,

“ஏன் டா.. நான் கூப்பிட போயிருந்தா கூட அரைமணி நேரத்துக்கு முன்னாடியே வந்திருப்பேன்.. ஏன் டா இவ்ளோ நேரம்” என்று கேட்க அவனோ,

“அதை உன் தொங்கச்சி கிட்டயே கேளு” என்றபடி வந்தமர அவனின் பின்னே வந்த விழி,

“ஹாய் மது அக்கா, ஹாய் மதுரன் அண்ணா.. ஹாய் மாம்ஸ்” என்று அழைக்க அவளது மாம்ஸ் என்ற அழைப்பில் அறிவு புரியாமல் முழிக்க,

“என்ன முழிக்குறீங்க.. எங்க அக்காவை கட்டுனா நீங்க எனக்கு மாம்ஸ் தானே.. ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடி கழட்டி விடுற பிளான் ஏதும் இருக்கா” என்று கேட்டபடி வந்து அமர்ந்தாள். அவனோ ஏதோ கூற வர அதற்குள் மீண்டும்,

“அப்படி ஏதும் ஐடியா இருந்தா. யூ மே கன்சிடர் மீ” என்று கூறிவிட்டு கண்ணடிக்க இனியாவோ,

“என்ன டி சொன்ன..” என்றபடி காதைத் திருக அவளோ,

“என் காதை ஏன் திருகுற.. நான் கேட்ட கேள்விக்கு இன்னும் உன் ஆளு பதில் சொல்லல.. எனக்கென்னமோ அப்படி ஒரு ஐடியா வச்சுருப்பாருன்னு தான் தோணுது.. என்ன மாம்ஸ்” என்று கூற இப்பொழுது இனியாவோ அறிவிடம்,

“டேய் திருட்டுப்பயலே.. அவ அவ்ளோ தூரம் சொல்றா.. அமுக்கினி மாதிரி உக்காந்துருக்க.. அப்போ ஆமாவா” என்று கேட்க அவனோ,

“அட போ அன்பு.. தப்பிக்குறதா இருந்தா முதல்லயே தப்பிச்சுருக்கணும்.. அதான் வந்து மாட்டிக்கிட்டனே.. இனிமே என்ன பிளானை போட சொல்ற” என்றவன் விழியிடம்,

“சாரி விழி.. இந்த ஜென்மத்துல உன்னை கன்சிடர் பண்ண முடியாதுன்னு தான் நினைக்குறேன்.. நெக்ஸ்ட் ஜென்மத்துல யோசிக்குறேன்” என்று சிரித்தபடி கூற இலவசமாக இரண்டு அடிகள் வழங்கினாள் இனியா. மதுரிகாவோ,

“ஹே இனியா.. வாயடிக்குற விஷயத்துல விழி உனக்கு சீனியர் போல..” என்று கலாய்க்க மதுரனும்,

“ஆமா விழிமா.. நல்ல பேசுற டா நீ.. உன்கிட்ட பேசி ஜெயிக்கிறது கஷ்டம் தான் போல” என்று கூற விழியோ,

“ஏதாச்சும் என்னோட ஹெல்ப் தேவைப்பட்டா சொல்லுங்க அண்ணா.. தங்கச்சி சிறப்பா செஞ்சிடுறேன்” என்று கூற அவனோ,

“ஒருத்தவங்க கிட்ட இருந்து உண்மைய வரவைக்கணும்.. கூடிய சீக்கிரம் உன்கிட்ட அண்ணா உதவி கேட்குறேன் டா” என்று விழியிடம் கூறினாலும் பார்வையோ மதுவிடம் இருந்தது. அதனைத் தெரிந்தும் தெரியாதது போல் மெனு கார்டில் சுவாரசிய நாவல் எழுதிருப்பது போன்ற பாவனையுடன் படித்துக் கொண்டிருந்தாள் மது. மதுரனின் பார்வையிலும் மதுவின் பாவனையிலும் ஓரளவு விஷயத்தை யூகித்தவளாய்,

“மது அக்கா.. ஹோட்டல்ல எக்ஸாம் ஏதும் வைக்க மாட்டாங்க.. பொறுமையா படிங்க” என்று கூற அசடு வழிந்தபடி பார்த்தாள் மதுரிகா. மாறனோ,

“ஹே பச்சைமிளகா.. வாய் ஓயாம பேசி செத்து கித்து போயிடாதே.. தண்ணிய குடி” என்று கூற அவளோ,

“ரொம்ப கவலை படாதீங்க.. செத்தாலும் ஆவியா வந்தாச்சும் வம்பு இழுப்பேன்.. முக்கியமா உங்கள” என்று கூற அவளது துடுக்குத்தனமும் வெள்ளந்தியான பேச்சும் அனைவர்க்கும் அவளைப் பிடிக்க செய்தது. அனைவரும் உண்டு கொண்டிருக்க மதுரனோ,

‘நானும் இப்போ பேசுவா அப்போ பேசுவான்னு பார்த்துட்டே இருக்கேன்.. அவாய்ட் பண்ணிட்டே இருக்கா’ என்று நினைத்தவன்,

“காய்ஸ்.. ஒரு நிமிஷம்.. எனக்கு மது கிட்ட ஒரு விஷயம் கேட்டே ஆகணும்” என்று கூறியவன் மதுவிடம்,

“இங்க பாரு மது.. என்ன தா உனக்கு பிரச்சனை.. நானும் ரொம்ப நாளா உன்ன கவனிச்சுட்டு தான் இருக்கேன்.. எதுக்கு என்னை அவாய்ட் பண்ற.. எனக்கு காரணம் தெரிஞ்சே ஆகணும்” என்று கேட்க மற்ற நால்வரும் கேள்வியாய் நோக்கினர். அறிவோ,

“டேய் மச்சான்.. என்ன இது” என்று கேட்க அவனைத் தடுத்த மாறனோ,

“அவன் கேட்கட்டும் அறிவு.. அவ அப்படி செய்றதுனால தான அவன் கேக்குறான்” என்று மதுரனுக்கு ஆதரவாய் பேச மதுரிகாவோ மாறனை முறைத்தாள்.

“அவனை முறைக்காத.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.. நான் உனக்கு பிடிக்காததை எதுவும் செஞ்சுட்டேனா” என்று கேட்க அவளோ இடவலமாக தலையசைத்தாள்.

“என்கிட்ட யாரும் பேச கூடாதுன்னு சொன்னாங்களா” என்று கேட்க அதற்கும் இல்லயென்று தலையசைத்தாள். அதில் பொறுமையிழந்தவன்,

“அப்றம் என்ன தான் பிரச்சனை உனக்கு.. ” என்று கேட்க மதுவோ,

“ப்ளீஸ் என்கிட்ட எதுவும் கேட்காத..” என்று கூற அவனோ,

“இல்ல எனக்கு புரியல.. எதுவும் கேட்கதான்னா என்ன அர்த்தம்.. அப்போ முதல்லயே என்கிட்டே பேசாம இருந்துருக்க வேண்டி தான.. ஆரம்பத்துலையே உனக்கு என்னை பிடிக்காது தான.. அப்போல இருந்தே நீ என்கிட்ட ஒழுங்கா பேசலனா நீ செய்றது நியாயம்.. நானும் இப்படி உன்ன கேள்வி கேட்டிருக்க மாட்டேன்..

ஆனா நீ இடைல நல்லாதான் என்கிட்ட பேசுன.. அப்போ நாம பிளான் முடியுற என் உதவி உனக்கு தேவைப்பட்டுருக்கு.. அதுக்கப்புறம் நான் தேவைப்படலன்னு எடுத்துக்கட்டுமா” என்று ஒரு வேகத்தில் இனியாவைக் கணக்கில் கொள்ளாமல் உளறிவிட மாறனோ,

“டேய் மதுரா” என அவனைத் தடுக்க நினைத்தான். ஆனால் அதற்குள் இனியாவோ,

“என்ன பிளான்” என்று கேட்க விழியைத் தவிர்த்து அனைவரும் அதிர்ந்தனர்.

மதுரிகாவிடம் கோபமாய் பேசிய மதுரன் ஒரு வேகத்தில் அவர்கள் அறிவு இனியா காதல் சேருவதற்கு போட்ட பிளானைக் குறிப்பிட்டு, “அப்போ பிளான் முடியுற வரைக்கும் நான் உனக்கு தேவைப்பட்டுருக்கேன்.. முடிஞ்சதும் இப்போ தேவைப்படலன்னு நெனச்சுக்கட்டுமா” என்று கேட்க அது புரியாத இனியாவோ,

“பிளானா.. என்ன பிளான்” என்று கேட்க அப்பொழுது தான் மதுரனுக்கு தான் உளறியது புரிந்தது. நல்லவேளை பிளான் என்று மொட்டையாக கூறினோம் என்று நினைத்து ஆசுவாசமடைந்தவன்,

“வேறென்ன பிளான்.. நம்ம போட்டிக்கான பிளானை தான் சொல்றேன்.. அதுல நான் தான இவளுக்கு ஜோடி.. போட்டி முடியுற வரை இவளுக்கு நான் தேவைப்பட்ருக்கேன்னு சொல்ல வந்தேன்” என்று கூறி சமாளித்துவிட இனியாவும் அதனை நம்பி,

“ஓ அதை சொல்றியா.. ஆமா மதுரா நீ கேட்குறது சரி தான்.. இவ்ளோ நாள் உன்கூட பேசிட்டு இப்போ திடிர்னு உன்ன அவாய்ட் பண்றது சரியில்ல.. அட்லீஸ்ட் ரீசன் சொல்லியாச்சு அவாய்ட் பண்ணனும்” என்று மதுரனுக்கு ஆதரவாய் பேச மதுரிகாவால் யாருடைய கேள்விக்கும் பதில் கூற முடியவில்லை. அவர்களாவது காரணம் தெரியாமல் அவ்வாறு பேசுகிறார்கள். ஆனால் மாறனோ எல்லாம் தெரிந்தும் இவ்வாறு பேசுகிறானே என்று அவளுக்கு ஆத்திரமாக இருந்தது. ஆனால் மாறனோ,

‘சாரி மது.. எல்லாம் தெரிஞ்சு தான் பேசாம இருக்கேன்.. மதுரன் தான் உனக்கு சரின்னு நான் நினைக்குறேன்.. உனக்கு அவனைப் பிடிக்கலைன்னா கூட உனக்கு சப்போர்ட்டா பேசிருப்பேன்.. ஆனா உனக்கு அவனைப் பிடிக்கும்.. கிட்டத்தட்ட காதல்னு கூட சொல்லலாம்.. ஆனா நீ கிடைக்குமா கிடைக்காதான்னு தெரியாத ஒண்ணா நெனச்சு இவனை அவாய்ட் பண்றது எனக்கு சரியா படல.. இந்த விஷயத்துல நான் மதுரன் பக்கம் தான் நிப்பேன்.. அது தான் சரியும் கூட.. உன்மேல அக்கறை இருக்குற யாரா இருந்தாலும் அதை தான் செய்வாங்க..’ என்று மானசீகமாய் மனதினுள் அவனின் மதுவிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தான். அவள் ஏதேனும் பேசுவாள் என்று பொறுமை காத்த மதுரன்,

“மது நான் உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.. பதில் சொல்லு” என்று சற்று கண்டிப்பாக கேட்க அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் எழுந்தவள், “மாறா.. வா கிளம்பலாம்” என்று கூறியபடி எழுந்து வெளியே செல்ல எத்தனிக்க அவளின் கரம் பற்றிய மதுரன், “போறது தான் போற.. நான் சொல்றதைக் கேட்டுட்டு போ” என்க கேள்வியாய் அவன் முகம் நோக்கினாள் பெண்ணவள். அவனோ சற்றும் யோசிக்காமல்,

“நான் உன்னை காதலிக்குறேன் தூரிகா.. உனக்கும் என்மேல காதல் இருக்கு.. அது உனக்கும் நல்ல தெரியும்.. நீ எதனால என்னைவிட்டு விலகி போறன்னு எனக்கு தெரியல.. ஒன்னு அந்த காரணத்தை சொல்லு.. இல்லனா உன்னோட காதலை சொல்லு.. காத்திருப்பேன் உனக்காக கூடிய சீக்கிரம் ஏதாச்சும் ஒண்ணுக்கு பதில் சொல்லுவன்னு எதிர்பார்த்து…” என்று கூற மதுவோ கண்கள் கலங்க எதுவும் கூறாமல் வெளியில் சென்றுவிட மற்ற ஐவரும் மதுரன் காதலைக் கூறியதில் சற்று அதிர்ச்சியாக இருந்தனர். சட்டென கூறுவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

 

ரகசியம் – 45

பிறகு மாறனோ,

“காய்ஸ் எல்லாரும் பீச்சுக்கு வாங்க” என்று கூறிவிட்டு மதுவின் பின்னே ஓடி எதுவும் பேசாமல் வண்டியை இயக்க பின்னே ஏறியவள் சிந்தித்தபடியே வந்தாள். இருபது நிமிட பயணத்திற்கு பிறகு வண்டி ஓரிடத்தில் நிற்க வீட்டிற்கு தான் சென்றுக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்த மது அப்பொழுது தான் சுற்றம் உணர்ந்தாள். மாறனைக் கேள்வியாய் நோக்க அவனோ,

“உனக்கு இப்போதைக்கு அமைதியான மனநிலை வேணும் மது… நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான செய்வேன்.. வா என்கூட” என்று அழைத்து சென்றவன் கடற்கரையை நோக்கியவாறு அமரவைத்து தானும் அவளோடு அமர்ந்தான்.

சில்லென்ற கடற்கரை காற்று பெண்ணவளின் முகத்தை வருட அதன் இதத்தில் அவளை மீறி உள்ளிருக்கும் உணர்வுகள் கண்ணீராய் வழியத் தொடங்கியது. துடைக்க கூட தோன்றாமல் கண்ணீரை வழியவிட்டவள் அவ்வாறே கண்களை மூடி காற்றை சுவாசிக்க தொடங்க விழித்திரையில் அவளின் கடந்த கால நிகழ்வு ஒடத் தொடங்கியது.

பதினோராம் வகுப்பு முழுவாண்டு தேர்வின் வேதியல் நடைமுறைத் (practical) தேர்விற்காக மது மற்றும் மாறன் பயிலும் பள்ளியில் வேதியியல் ஆய்வுக்கூடங்கள் பெரிதாக வசதியில்லாத காரணத்தினால் வேறு பள்ளிக்கு அழைத்து சென்றிருந்தனர் மாணவர்களை. அனைவரும் தங்கள் தேர்வுகளை சிறப்பாக செய்து முடித்து ஒவ்வொருவராக வெளியேற கடைசியாக மதுரிகாவும் மற்றொரு பெண்ணும் மட்டும் இன்னும் தன் நடைமுறைத் தேர்வை செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது வெளியில் இருக்கும் மாணவர்களை அமைதி காக்கும்படி சொல்வதற்கு தேர்வு கண்காணிப்பாளர் வெளியில் வர அதற்குள் திடிரென்று ஆய்வுகூடத்தில் தீ பிடித்தது. தேர்வு செய்துகொண்டிருந்த மற்றொரு பெண்ணின் ஆடையில் தீ பற்றி எரிந்தது. அதனைக் கண்ட மதுரிகா அங்கிருக்கும் தண்ணீரைக் கொண்டு அவளின் ஆடையில் இருந்த தீயை அணைத்தாள். ஆயினும் அதற்குள் அப்பெண்ணின் மேலாடை முழுவதும் நெருப்புக்கு இரையாகி இருக்க அரைநிர்வாணமாய் நின்றிருந்தாள் அவள்.

வெளியே விஷயம் தெரிந்து அனைவரும் ஆய்வுகூடத்தை சூழ்ந்து நிற்க அவர்கள் காப்பாற்ற நினைத்தாலும் உள்ளே கண நேரத்தில் கொடூரமாய் பற்றி எரிந்த நெருப்பு யாரையும் உள்ளே வருவதற்கு அனுமதிக்கவில்லை. ஜன்னல் வழியே அனைவரும் தன்னைப் பார்க்கிறார்கள் என்று உணர்ந்த அப்பெண்ணோ உடலைக் குறுக்கிக் கொண்டு,

“யாரும் என்னை பாக்காதீங்க ப்ளீஸ்” என்று கதற சட்டென தான் அணிந்திருந்த துப்பட்டாவைக் கழட்டி அவளின் மீது போர்த்தி அவளின் மானத்தைக் காப்பாற்றினாள். இருவர் மீதும் நெருப்பு படாதவாறு கவனமாய் மதுரிகா வாசலை நோக்கி அவளைக் கூட்டி சென்று அவளை முதலில் வெளியேற்ற தான் வெளியேற முயற்சிக்கும் சமயம் வாசலின் நிலைக் கட்டை தீப்பிடித்து குறுக்க விழுந்துவிட மதுரிக்காவால் வெளியே செல்ல இயலவில்லை. சிறிது சிறிதாக நெருப்பு அவள் ஆடையில் பற்றிக்கொள்ள அதுவும் தீக்கிரையாக தொடங்கியது. தான் கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாணமாக்க படுகிறோம் என்று உணர்ந்த மது அங்கிருக்கும் திண்டின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்துவிட்டாள்.

‘போச்சு இன்னையோட நம்ம உசுரு போக போகுது.. அதுவும் ஒத்த துணிக்கூட இல்லாம போக போகுது.. பரவாயில்ல சாகும்போது கூட ஒரு உயிரைக் காப்பாத்திட்டு சாகுறோம்னு நெனச்சுப்போம்.. கடவுளே நெருப்பு என்மேல பட்டுட்டா என் உயிரை அப்படியே எடுத்துருங்க.. உயிரோட விட்றாதீங்க.. நெருப்பு காயத்தைத் தாங்குற அளவுக்கு எனக்கு சக்தி கிடையாது’ என்று சாகும் தருவாயில் பயத்தில் அவள் பாட்டிற்கு புலம்பிக் கொண்டிருக்க அந்நேரம் குப்பென்று தீ பரவ அங்கிருந்த இடுக்கில் தன் உடலைக் ஒளித்து கொண்டாள். அப்பொழுது ஒருவன் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டவள் பிறகு அவ்வாறே முதுகு காட்டியபடி மயங்கி சரிந்தாள்.

வந்தவனுக்கு அவளின் நிர்வாண உடல் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. திரும்பி அமர்ந்திருந்த பெண்ணவளின் முதுகில் தீயினால் ஏற்பட்ட காயம் மட்டும் அவன் கண்களில் சிக்கியது. விரைவாக அவளை நோக்கி சென்றவன் தான் கொண்டு வந்த VKM என்று எம்ப்ராய்டரி போடப்பட்டிருந்த டி ஷர்ட்டை அவளுக்கு அணிவித்து அவளின் முகத்தில் தட்டி அவளை எழுப்ப முயற்சிக்க அவள் எழுந்திருக்கவில்லை.

முகம் முழுவதும் புகையினால் உருவான கரி படிந்திருக்க அவளின் முகமும் அவனுக்கு தெளிவாக தெரியவில்லை. நெருப்பு இன்னும் இன்னும் அதிகமாக கண்டவன் பிறகு அங்கு கீழே கிடந்த கோணிப்பையை அவளது காலை சுற்றி அணிவித்து அவ்வாறே தூக்கிக்கொண்டு தன் மீது படும் நெருப்பைக் கூட பொருட்படுத்தாமல் வாசலை நோக்கி நடந்தான். அதற்குள் தீயணைப்பு துறையிலிருந்து ஆட்கள் வந்துவிட இருவரையும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

மதுவைக் கீழே கிடத்த அவளை சுற்றி ஆசிரியைகளும் மாணவிகளும் சூழ்ந்துக் கொள்ள அக்கூட்டத்தின் வழியே மெதுவாக நழுவி மறைந்துவிட்டான் ஆடவன். இது எதுவும் தெரியாத மாறன் தனக்கும் மதுவுக்கும் மதிய உணவு வாங்கி வரலாம் என்று வெளியில் சென்று அப்பொழுது தான் உள்ளே வர நடந்த கலவரம் அறிந்து வேகமாக மதுவைக் காண ஓடினான்.

பிறகு அனைவரும் சேர்ந்து மதுவையும் அவள் காப்பாற்றிய இன்னொரு பெண்ணையும் அருகிலிருக்கும் மருத்துவமனையில் சேர்க்க இரண்டு மணி நேரத்தில் கண் விழித்தாள் மதுரிகா. விழித்தவளின் மனக்கண்ணில் தன்னைக் காப்பாற்றிய முகம் தெரியதவனின் உருவம் மட்டும் நிழலாடியது. கீழே குனிந்து தன்னைப் பார்க்க அவன் அணிவித்த அவனது டீ ஷர்ட் தன் உடலில் இருந்தது.

“இது மட்டும் அவன் செயலன்னா.. இந்நேரம் என் மானம்..” என்று நினைக்கவே அவளுக்கு கதி கலங்க சட்டையோடு சேர்த்து தன்னை இறுக்கிக் கொண்டாள்.

இவ்வாறாக கடற்கரை காற்றோடு சேர்த்து தன் கடந்தகால நிகழ்வுகளை அசை போட்டவளின் மனதில் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இதுவரை இருந்த தாக்கம் இப்பொழுது பன்மடங்காக உயர்ந்தது.

சுற்றி இருந்த மக்கள் அனைவரும் மறைய கண்ணெதிரில் மதுரனும் அவனருகில் தன்னைக் காத்த முகம் தெளிவில்லா அந்த ஒருவனும் நிற்க இருவரும் அவளைப் பார்த்து,

“உனக்கு என் மேல தான் காதல் இருக்கு.. என்கிட்ட வா” என்று மாறி மாறி கூறுவது போன்ற மாயைத் தோன்றியது. கண்களை இன்னும் இறுக்கமாக மூடி காதுகளை தன் இரு கைகளால் பொத்திக்கொண்டு, “எனக்கு தெரியல.. யாரைக் காதலிக்கேன்னு எனக்கு தெரியல” என்று அலற அருகில் இருந்த மாறன்,

“மது என்னாச்சு டி.. ஹே மது” என்று உழுக்க அப்பொழுது தான் தன்னிலை அடைந்தவள் மாறனின் தோளில் முகம் புதைத்துக் கொண்டு தேம்பினாள்.

“மது.. நீ ஏன் உன்னை இவ்ளோ தூரம் குழப்பிக்குற.. நீ இவ்ளோ யோசிக்க அவசியமே இல்ல டி.. உனக்கு நன்றியுணர்வுக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியல மது..” என்று கூற மதுவோ கேள்வியாய் மாறனின் முகத்தை நோக்கினாள். மீண்டும் தொடர்ந்தவன்,

“ஆமா மது.. அந்த முகம் தெரியாதவன் மேல உனக்கு இருக்குறது தன்னோட உயிரையும் மானத்தையும் அவனோட உயிரைக் கூட பொருட்படுத்தாம காப்பாத்திட்டானேன்னு இருக்குற நன்றியுணர்வு. ஆனா மதுரனை ஆரம்பத்துல உனக்கு பிடிக்காம இருந்துச்சு.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவனோட குணம் தெரிஞ்சு உனக்கே தெரியாம அவனை உனக்கு பிடிக்க ஆரம்பிச்சது.. இதுக்கு பேரு தான் காதல்..

நீ என்னை மாதிரி துரதிர்ஷ்டசாலி கிடையாது மது… நீ அதிர்ஷ்டசாலி.. ஏன்னா நீ விரும்புற மதுரனும் உன்னை விரும்புறான்.. அதனால நீ தான் யோசிக்கணும் இதுக்குமேல.. இவ்ளோ நாள் உன்கூட இருக்கேன்.. அந்த உரிமைல சொல்றேன்.. உனக்கு மதுரன் தான் சரியான ஜோடி.. ” என்று கூற அவள் முகத்தில் முன்பிருந்த குழப்பம் சற்று குறைந்திருந்தது. ஆனாலும் அவள் இன்னும் தெளிவடையவில்லை என்று உணர்ந்த மாறன்,

“சரி ஓகே.. நீ சொன்ன மாதிரி உன்னைக் காப்பாத்தினவன் மேல உனக்கு இருக்குறது காதல்னு கூட நெனச்சுக்கோ.. ஆனா நான் கேட்குற ஒரு கேள்விக்கு பதில் சொல்லு.. அன்னைக்கு லேப் எரியும் போது நான் அந்த இடத்துல இல்ல.. இருந்திருந்தா அவனுக்கு முன்னாடியே நான் உள்ள வந்து என் மதுவோட உயிரையும் மானத்தையும் காப்பாத்திருப்பேன்.. ஒருவேளை நான் உன்னை காப்பாத்திருந்தா அப்போ என்மேல உனக்கு காதல் வந்துருக்குமா என்ன” என்று கேட்க மதுரிகாவோ அதிர்ந்து நோக்கினாள் மாறனை.

“சொல்லு மது.. இனியா மேல எனக்கு காதல் இருக்குன்னு சொல்லும் போது இதே தான நீ என்கிட்ட கேட்ட.. இப்போ நீயும் அதே நிலமைல தான் இருக்க.. பதில் சொல்லு.. ஒருவேளை நான் உன்னை காப்பாத்திருந்தா என்மேல உனக்கு காதல் வந்துருக்குமா…. கண்டிப்பா வந்திருக்காது.. நம்ம மாறன் நம்மள காப்பாத்திருக்கான்னு காலமுழுக்க என்மேல நன்றியுணர்வு தான் உனக்கு இருக்கும்.. இப்போ நீ அவன்மேல வச்சுருக்குறதும் அதே தான்.. மதுரன் மேல தான் காதல் இருக்கு.. நீயே யோசி” என்று கூறிக்கொண்டிருக்க,

“அப்போ இது தான் காரணம்னு என்கிட்ட முதல்லயே நீ சொல்லிருக்கலாமே தூரிகா..” என்று மதுரனின் குரல் பின்னே ஒலிக்க மதுரிகா அதிர்ந்து நோக்கினாள் மதுரனை.

“அப்போ இது தான் காரணம்னு என்கிட்ட முதல்லயே நீ சொல்லிருக்கலாமே தூரிகா..” என்று மதுரனின் குரல் பின்னே ஒலிக்க மதுரிகா அதிர்ந்து நோக்கினாள் மதுரனை.

“பதில் சொல்லு..” என்று மீண்டும் கேட்க மதுவோ,

“என்னை என்னன்னு சொல்ல சொல்ற.. நான் என்ன மனநிலைல இருக்கேன்னு எனக்கே தெரியதப்போ நான் எப்படி உனக்கு முடிவு சொல்ல முடியும்” என்று கூறியவள் கடல் அலைகளை வெறித்து அமர்ந்திருக்க அவள் முன் வந்து நின்ற மதுரன்,

“சரி.. இப்போ எனக்கு புரிஞ்சுட்டு.. ஒருவேளை என்கூட பேசி வச்சு சகஜமா நீ இருந்தா எங்க உன்ன காப்பாத்துனவனயும் தாண்டி என்மேல உனக்கு அதிக காதல் வந்துருமோன்னு உனக்கே பயம் அப்படி தான” என்று கேட்டு ஏளனமாக சிரித்தான். அவன் கேள்வியில் அவனைக் கோபப் பார்வைப் பார்த்தாள் பெண்ணவள்.

“என்ன முறைக்குற.. நீ இல்லன்னு சொன்னாலும் அது தான் நிஜம்.. எப்போ நீ அவனை விட நான் ஓவர்டேக் பண்ணிடுவேன்னு பயந்தியோ அப்போவே ப்ரூவ் ஆயிடுச்சு அவன் மேல இருக்குறது காதல் இல்லன்னு..” என்று அவளின் கோபத்தை ஏற்றிவிட சிந்திக்கும் மனநிலையில் இல்லாத மது,

“இல்ல நீ இப்படி சொல்லி என்னை நம்ப வைக்க பாக்குற.. இப்போ சொல்றேன்.. உன்கூட பேசுறேன்.. பழகுறேன்.. முன்னாடி இருந்த மாதிரி சகஜமா இருக்குறேன்.. இது எதுக்குன்னா முன்னாடி மாதிரி உன்கூட பழகுனாலும் உன்னைக் காதலிக்காம என்னைக் காப்பாத்துனவனுக்காக என்னால வெயிட் பண்ண முடியும்னு நிரூபிக்க தான்.. ” என்று திடமாய் கூற அவனோ,

“இது தான் உன் முடிவா.. நல்ல யோசிச்சு சொல்லு” என்றான் தீர்க்கமாக.

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்