
திமிர் 7
மினிஸ்டர் நவரத்தினத்தின் வீடு களை கட்டியது. வெள்ளைச் சட்டையும், கறை படிந்த வேட்டிகளும் விழாவிற்குத் தயாரானது. செல்வச் செழிப்பில் அலங்காரங்கள் பூத்துக் குலுங்கியது. காலில் சக்கரம் கட்டாத குறையாக அலைந்து கொண்டிருந்தான் ஆதி.
மனநிறைவாகப் பார்த்துக் கொண்டிருந்த கற்பகம், “ஆதி” என்றழைத்தார்.
அன்னை என்ன கேட்கப் போகிறார் என்றறிந்து, “பிளைட் ஏறிட்டான். இன்னும் ஒன் ஹவர்ல உங்க முன்னாடி உங்க பையன் நிப்பான்.” என்றதும் அகம் மகிழ்ந்தது கற்பகத்திற்கு.
“என்ன இருந்தாலும் உங்களுக்கு உங்க சின்ன மகனைத் தான் ரொம்பப் பிடிக்கும்.”
இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் ஆகி ஒரு குடும்பஸ்தன் ஆகப்போகும் தன் மூத்த மகன், சிறுபிள்ளை போல் கோபித்துக் கொண்டதில் கலகலவென்று சிரித்து,
“பெத்தவளுக்கு எல்லாமே பிள்ளை தான் ஆதி. நீ அம்மா மனசு புரிஞ்சு எது சொன்னாலும் சரிமான்னு சொல்லுவ. அவன் அப்படி இல்லயே. அந்த முரடனை எப்படி அடக்கி ஒரு குடும்ப வாழ்க்கைக்குள்ள தள்ளப் போறேன்னு பயப்படாத நாள் இல்ல. நல்லவேளையா இன்னைக்கு அதுக்கான முதல் படி நடக்கப் போகுது. எல்லாரை மாதிரியும் அவனுக்கும் ஒரு குடும்பம் இருக்கணும். கோபம், முரட்டுத்தனம் எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு குடும்பஸ்தனா வாழனும்.” என்ற தாயின் கையைத் தன் கைக்குள் புதைத்துக் கொண்டான் மூத்த பிள்ளை ஆதிகேஷ் திவஜ்.
“அவன் கோபக்காரனா இருந்தாலும் ரொம்ப நல்லவன் ம்மா. அவன் மனசைப் புரிஞ்சிக்கிற பொண்ணு வந்துட்டா போதும். அவனும் எல்லார் மாதிரியும் சகஜமாகிடுவான்.”
“அதுக்குத்தான் அனு இருக்காளே!”
“சின்ன மருமகள் பேரைச் சொன்னதுமே முகம் இப்படிச் செவக்குது. என் பொண்டாட்டியும் பாவம்மா… உன்ன நம்பித்தான் வீட்டுக்குக் கூட்டிட்டு வரேன்.”
“போடா! எனக்கு என் ரெண்டு பிள்ளைங்க எப்படியோ, அதே மாதிரித்தான் மருமகள்களும். எனக்கு அவங்க எதுவுமே செய்ய வேண்டாம். என் பிள்ளைங்களை நல்லபடியா பார்த்துகிட்டா போதும்.”
“அம்மாவும், பையனும் தீவிரமா பேசிட்டு இருக்க மாதிரி இருக்கு.”
“இன்னைக்கும் கட்சி வேலைன்னு போறீங்களே நியாயமா?”
“அரசியல்வாதிக்கு நேரம் காலம் ஏதும்மா…”
“பெத்த பிள்ளைக்கு நிச்சயதார்த்தம். ஒரு அப்பா பேசுற பேச்சா இது.”
“உன் பையன் தான் போய் கட்சி வேலையப் பாருங்க, நிச்சயதார்த்தத்தை நான் பார்த்துக்கறேன்னு சொன்னான்.”
“இப்ப என்னம்மா சொல்லப் போற?” என ஆதி குறும்பு செய்ய, “அவனை என்னதான் பண்றதுன்னு தெரியல டா. அந்தத் திமிரு புடிச்சவனைக் கண் பார்வைல ஆட்டி வைக்கிற பொண்ணா இருந்தால் தான் அவ பொழப்பு ஓடும் போல.” என்றவருக்குத் தன் மகனின் மாற்றத்தை வாய் பிளந்து பார்க்கப் போகும் தருணம் வரப்போவது இன்னும் தெரியவில்லை.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆதியின் வருங்கால மனைவி தன் குடும்பத்தோடு வந்திருந்தாள். மூத்த மருமகளைப் பார்த்ததும் அன்பொழுக வரவேற்றார் கற்பகம். பிரியாவைப் பார்த்ததும் ஆதியின் கண்கள் காதலில் சுழல, கேலி செய்து இருவரையும் முகம் சிவக்க வைத்தான் மச்சான் பாலா.
குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் மண்டபத்திற்குச் சென்றார்கள். வைரம் போல் ஜொலிஜொலித்தது அந்த மண்டபம். நவரத்தினத்தைத் தவிர அனைவரும் கூடியிருந்து பொழுதைக் கழித்தார்கள். அகம்பன் திவஜை மணக்கப் போகும் அனுசியா, குடும்பத்தோடு வாசலில் வந்து நிற்க, ஆரத்தி எடுத்து வரவேற்றார் கற்பகம்.
“மாப்பிள்ளை வந்துட்டாரா?”
“ஆன் த வே அங்கிள்.”
“என்னப்பா ஆதி. மாப்பிள்ளையே லேட்டா வந்தா எப்படி? ரெண்டு மாசமா அகம்பனைப் பத்தி எந்த நியூசுமே இல்ல. உங்க அப்பாவும், நீயும் பேசியே சமாளிக்கிறீங்க. உங்க மேல இருக்கிற நம்பிக்கைல என் பொண்ண இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்துட்டேன். அகம்பன் வருவான்ல.”
“பிளைட்ட விட்டு இறங்கிட்டேன்னு இப்பதான் அங்கிள் கால் பண்ணினான். ஒரு ஆப் அன் ஹவர்ல வந்துருவான்.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கச் சம்பந்தப்பட்ட அனு, எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். அதைக் கவனித்த ஆதிகேஷ் திவஜ், “கவலைப்படாத அனு. என் தம்பி கண்டிப்பா வந்துடுவான்.” என்றான்.
போலியாகச் சிரித்தவள் தன் அறைக்குச் சென்று விட, புருவங்கள் நெளிந்தது ஆதிக்கு. அதைக் கவனித்த அனுவின் தாய் நிர்மலா, “அகம்பன் ஒரு வார்த்தை கூடப் பேசலன்னு கோபம் அவளுக்கு.” சமாளித்தார்.
“அவனுக்கு வேலை அந்த மாதிரி. அதுவும் இல்லாம பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தான். இன்னும் ஆறு மாசத்துல ரெடி ஆகணும்.”
அதன்பின் சகஜமான பேச்சுக்கள் உலா வந்தது. மூன்று குடும்பமும் அமர்ந்து நடக்கவிருக்கும் இரு திருமணத்தைப் பற்றிக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆதிக்கு ஒரே மேடையில் உடன்பிறப்புகள் திருமணம் நடக்க ஆசை. அதை மறுத்துவிட்டார் கற்பகம். முதலில் மூத்த மருமகளாகப் பிரியா வந்தபின், இளைய மருமகள் வந்து கொள்ளட்டும் என்று விட்டார். அவரவருக்குக் கொடுக்க வேண்டிய இடம் அவரவருக்குக் கொடுப்பேன் என்று நாசூக்காகச் சொல்லி விட்டார்.
மூன்று குடும்பமும், ஐந்தாயிரத்திற்கு மேல் சூழ்ந்திருந்த கூட்டங்களும் சலசலக்காத சலசலப்புச் சூழ்ந்தது. கூட்டத்திற்குள் நரி புகுந்தது போல் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டுத் திரும்பிய மூன்று குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒன்றும் புரியாமல் விழிக்க,
“நம்ம அகம்பன் கூட ஒரு பொண்ணு வருது.” என்ற செய்தி காதில் விழ, இதுவரை வாழ்வில் பார்க்காத அதிர்வு அவர்கள் உடலில்.
விஷயம் அறிந்த ஆதி, உள்ளெழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றிருக்க, மற்ற யாருக்கும் சிறு துளி நம்பிக்கை இல்லை. அகம்பனின் எத்தனையோ அவதாரத்தை இங்கிருந்த அனைவரும் பார்த்திருக்கிறார்கள். ஒரு பெண்ணோடு மட்டும் பார்த்ததில்லை. ஏன்? பேச்சுக்குக் கூடப் பெண்கள் பெயர் அடிபட்டதில்லை அவன் வாழ்க்கையில். அப்படிப்பட்டவனோடு, ஒரு பெண் சேர்ந்து வருகிறாள் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவியது.
காரை விட்டு இறங்கியவன் கமலுக்குக் கண்ணைக் காட்டினான். மதுணிகாவை அழைத்துக் கொண்டு அவனுக்குப் பின்னால் சென்றான். வாய் பிளந்தது கூட்டம். எவரையும் சீண்டாது சீற்ற நடை போட்டவன் வெகு நாள்களுக்குப் பிறகு காணும் அன்னையைக் கண்டு உருகினான். அதைத் தன் நடையில் காட்டாது நடந்து வந்தவன் பின்னால் வந்தவளுக்கு ஒரே பதற்றம். கண்ணால் தன்னைச் சல்லடை போடும் இத்தனைப் பார்வைகளுக்கு மத்தியில் உடல் கூச நடந்தவள்,
“என்னை எதுக்கு இப்படிப் பார்க்கிறாங்க?” தன் பக்கத்தில் வந்த கமலிடம் ரகசியமாகக் கேட்க,
“பொம்பளைங்க வாடையே ஆகாதுன்னு சொன்ன ஒருத்தனோட ஒரு பொண்ணு வந்தா பார்க்காம என்ன பண்ணுவாங்க.” எனச் சிரித்தான் கமல்.
“அடப்பாவிங்களா! இவனுங்க பார்க்கிற பார்வையே சரியில்லையே. என்னை மொத்தமா முடிச்சு விடக் கூட்டிட்டு வந்திருக்கீங்களா?”
“அதை முன்னாடி ஒய்யாரமா நடந்துட்டு இருக்காரு பாருங்க, அவர்கிட்டத்தான் கேட்கணும்.”
“அவன் கிடக்கிறான், சிடுமூஞ்சி!”
அவனுக்குக் கேட்காது என்ற மிதப்பில் வார்த்தையை விட்டவள், தன் புறம் திரும்பிய அவன் உருவத்தில் மிரண்டு வாயை மூடிக்கொள்ள, “இதுவரைக்கும் நீங்க பார்த்த சார் வேற. இங்க நீங்க பார்க்கப் போற சார் வேற. பார்த்து ஜாக்கிரதையாப் பேசுங்க. நாலா பக்கமும் பார்வையை வச்சிருப்பாரு.” என்றவனை முகம் சுருங்கிப் பாவமாகப் பார்த்தாள்.
“பயப்படாதீங்க.” என அவளுக்கு ஆறுதல் சொல்லி அந்தப் பாவமான முகத்தை மாற்றியவன், “என்ன பயந்தாலும் தப்பிக்க முடியாது.” அகப்பட்ட எலியாய் முழிக்க வைத்தான்.
“என்னடா இப்படிப் பயம் காட்டுற.”
“அகம்பன் திவஜ் தீவுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.”
வம்பு வளர்த்துக் கொண்டு வந்த கமல், தன் புறம் திரும்பும் அகம்பனின் பார்வையில் வாயை மூடிக்கொள்ள, மதுவின் பார்வை தூரத்தில் நிற்கும் ஆதிகேஷ் மீது விழுந்தது. இருவரும் பார்வையால் பேசிக்கொண்டனர். யார் மீதும் கவனத்தைச் செலுத்தாது, கற்பகத்தைப் பார்த்துக் கொண்டு வந்த ஆருயிர் மகன் ஆரத்தழுவி அரவணைத்தான்.
நம்ப முடியாத திகைப்பில் இருந்தாலும், பிள்ளையின் அரவணைப்பில் தாயாக மாறி நின்றவர் கண்கள் கலங்கியது. விலகி மகன் கன்னத்தைப் பற்றியவர், “நல்லா இருக்கியா அகம்பா…” அன்புடன் கேட்டவரின் கண்ணீரைத் துடைத்தவன் நெற்றியில் முத்தமிட்டு,
“கற்பகத்தோட பையனுக்கு என்ன குறை?” என்றான்.
“உன் குரலை இவ்ளோ பக்கத்துல கேட்டு எவ்ளோ நாளாச்சு. இனி என்னை விட்டு எங்கயும் போகாத.”
“எப்பவும் போக மாட்டேன்.”
“இப்படித்தான் சொல்லுவ. திடீர்னு காணாமல் போயிடுவ.”
“அச்சச்சோ, எங்கம்மா முகம் தொங்கிப் போச்சே…” எனக் கொஞ்சி முத்தத்தை வாரி வழங்கி அவன் மனத்தையும், அவர் மனத்தையும் இலகுவாக்கினான்.
“எப்படிடா இருக்க?”
“ஃபார்மாலிட்டியா”
“உன்னப் பத்தித் தெரிஞ்சும் கேட்டேன் பாரு, என்னைச் சொல்லணும்.”
“அப்பா கூடப் போகாம இங்க என்ன பண்ற?”
“டேய்! இன்னைக்கு உன்னோட எங்கேஜ்மென்ட். யாராவது ஒருத்தராவது கூட இருக்கணும்ல.”
“எங்கேஜ்மென்ட்க்கு சம்பந்தப்பட்ட நான் இருந்தால் போதும். நீ கெளம்பு…”
“என்னடா பேசுற. வந்ததும் வராததுமா அவனைத் துரத்தி விடுற. முதல்ல குளிச்சிட்டு ரெடியாகு. உனக்காக அனு வெயிட் பண்ணிட்டு இருக்கா…”
“ஆமா மாப்பிள்ளை…” பல் இளிக்கும் அனுவின் தந்தை சங்கரனைச் சிறிதும் கண்டு கொள்ளாது, “எப்படி இருக்கீங்க அண்ணி?” வருங்கால அண்ணியை நலம் விசாரித்தான்.
அகம்பன் என்றாலே பிரியாவிற்குப் பயம். அவள் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து அவனைக் கண்டாலே அஞ்சுவாள். அதை அவள் பார்வையில் உணர்ந்தாலும், அண்ணனின் மனைவியாகப் போகிறவளுக்கு உரிய மரியாதை கொடுக்க, “ம்ம்” தலையாட்டினாள்.
“எப்படி இருக்கீங்க தம்பி?” என்ற அவள் வீட்டு ஆள்களுக்குத் தலையை மட்டும் ஆட்டியவன் கமலுக்குக் கண்ணைக் காட்டினான்.
“இவங்க மதுணிகா, சாரோட புது பிஏ…”
கமலின் வார்த்தைக்கு அங்குப் பெரும் அமைதி. அதை ஒரு பொருட்டாகச் சீண்டாது, “உள்ள கூட்டிட்டுப் போ…” என்றிட, வேண்டாத விருந்தாளியாக அனைவருக்கும் விருந்தாகி அங்கிருந்து நகர்ந்தாள்.
“இது என்னடா புதுசா…”
“என்ன?”
“என்கேஜ்மென்ட்ட வச்சுக்கிட்டு இப்படி ஒரு பொண்ணோட வந்து நிக்கிற. அனுவோட வீட்ல இருக்கவங்க எப்படிப் பார்க்குறாங்க பாரு.”
“அவங்க பார்த்தா எனக்கென்ன ஆதி… நம்பிக்கை இருந்தா பொண்ணு குடுக்கச் சொல்லு, இல்லனா அப்படியே கிளம்பிப் போகச் சொல்லு.” அனைவரின் காது படவும் பேசிய அகம்பன்,
“அனு ரூம் எங்க இருக்கு?” அதிகாரமாகக் கேட்டான்.
ஒருவரும் அவனுக்குப் பதில் கூறாது நிற்க, “உங்க எல்லாருக்கும் காது கேட்கும் தான. அனு ரூம் எங்க இருக்கு?” சத்தமிட, மருமகளின் அறையைக் கை நீட்டிக் காட்டினார் கற்பகம்.
உடன் பிறந்தவன் சென்றதும் ஆதிகேஷ், மதுணிகா அறை நோக்கிச் சென்றான்.
***
எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அழுது தீர்த்து வெளிவந்தவளை அழைத்தார் கற்பகம். அவர் பார்வையிலேயே தன்னைப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தவள் அமைதியாக நிற்க, “உன்னை எப்படி அகம்பனுக்குத் தெரியும்?” விசாரித்தார்.
எப்படிச் சொல்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தவளை, உச்சி முதல் பாதம் வரை எடை போட்டவருக்கு எதுவோ தவறென்று மட்டும் புரிந்தது. மகனை மீறியும், மகன் மீதுள்ள நம்பிக்கையும், உடைத்துப் பேச மறுத்தது.
“என் மகனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அவன் இத்தனைப் பேர் பார்க்க உன்னைக் கூட்டிட்டு வந்திருக்கான்னா, அதுக்குப் பின்னாடி நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். ஆதி சொன்னான், ஜி என் ஹாஸ்பிடல் உன்னோடதுன்னு. அகம்பன் எதுக்காக அங்க இருக்கான்? உன்னோட ஹாஸ்பிடல்ல நீ எதுக்கு பிஏ வா இருக்க? அகம்பனுக்கும், உனக்கும் என்ன சம்பந்தம்? இது எதுவுமே எனக்கு வேண்டாம். எல்லாத்தையும் என் மகன் பார்த்துப்பான். இன்னைக்கு அவனுக்கு நிச்சயதார்த்தம். உன்னால இங்க எந்தப் பிரச்சினையும் வராதுன்னு நம்புறேன்.” என்று விட்டுச் சென்றவரைப் பயம் கவ்வப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மேடம்…”
“ம்ம்!”
“சார் உங்களைக் கூப்பிட்டாரு.”
“எங்க?”
“அவரோட ரூமுக்கு.”
“விளையாடுறியா கமல். எல்லாரும் என்னைக் கழுகு மாதிரிப் பார்த்துட்டு இருக்காங்க. இப்ப மட்டும் நான் ரூமுக்குள்ள போனேன், அவ்ளோதான்…”
“போலனாலும் அவ்ளோதான்.”
“சைடு கேப்புல நல்லா சந்ததி பாடுற.”
“உங்க மேல பாவப்பட்டுத்தான் மேடம் உண்மையச் சொல்லிடுறேன்.”
“வர முடியாதுன்னு உங்க சார்கிட்ட போய் சொல்லு.”
“நீங்க இப்படித்தான் சொல்லுவீங்க, தரதரன்னு இழுத்துட்டு வான்னு ஆல்ரெடி உத்தரவு வந்துருச்சு.”
“சாவடிக்கிறான்.”
***
“இன்னும் எதுக்குடா நின்னுகிட்டு இருக்க?”
“இல்..இல்ல, மேடமைக் கூட்டிட்டு வரச் சொன்னீங்க.”
“அதான் வந்துட்டாளே, கிளம்பு.”
“வேலை முடிஞ்சதும் கழற்றி விட்டிடுவாரு.” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு கதவைத் திறந்தவன் செவியில்,
“வெட்டி விடாம கழற்றி விடுறேன்னு சந்தோஷப்படு.” என்ற வார்த்தை விழத் தன் கால்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.
“எதுக்கு என்னைக் கூப்பிட்ட?”
“நான் எதிர்பார்த்தது உன் கண்ணுல தெரியலையே.”
“தெரியாது. இங்க வரும்போது எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டுத்தான் வந்தேன். நீ யாரோட நின்னாலும் எனக்கு வலிக்காது. இன்னும் சொல்லப் போனா ரொம்பச் சந்தோஷமா தான் இருக்கேன்.”
“நைஸ்!” என்று விட்டு நகர்ந்தவன் மெத்தையில் இருக்கும் இரு ஆடைகளைக் காட்டி, “இதுல எது அனுவுக்கு நல்லா இருக்கும், செலக்ட் பண்ணு.” என முதல் அம்பை எய்தினான்.
மனத்தை இறுக்கிக் கட்டி வைத்தவள், அவன் முன்பு தன் வலியைக் காட்டாது ஒரு ஆடையைத் தேர்வு செய்ய, “அவளுக்கு ரொம்ப அழகா இருக்கும்.” எடுத்துக் கொடுத்த ஆடையை ரசித்துக் கூறியவன்,
“அனுகிட்டக் குடுத்துட்டு வா…” இரண்டாவது அம்பை எய்தினான்.
அனுவின் அறை நோக்கி நடக்கும் வரை இருந்த தைரியம் உடைப்பட்டது. மணப்பெண்ணாக அவள் இருப்பதைச் சிறிதும் ஏற்க முடியாது ஆடையைக் கொடுத்துவிட்டுக் கிளம்ப, “இதை அகம்பன்கிட்டக் கொடுத்துடு.” என்றாள்.
திறந்து பார்க்காது அவன் அறைக்கு வந்தவள் முகம் கருகி அவனிடம் கொடுக்க, தாடையில் கை வைத்துத் தலை உயர்த்தியவன், “எங்கேஜ்மென்ட் ரிங். நல்லா இருக்கான்னு பார்த்துச் சொல்லு.” திறந்து அவள் உள்ளங்கையில் திணித்தான்.
“ஏ” ஆங்கில எழுத்துப் பொறித்து மின்னிக் கொண்டிருந்தது வைரக் கற்கள்.
“அவளுக்காக நானே செலக்ட் பண்ணது. இந்த ரிங் செய்ய இருபது நாள் ஆச்சு.” எனும் பொழுது கூடக் கலங்காதவள், “அன்னைக்கு ஒரு நாள் நைட் என் கூட வெட்கமே இல்லாம இருந்த பாரு, அன்னைக்குத் தான் ரிசீவ் பண்ணினேன். ஆக்சுவலா அனுகிட்ட இந்த ரிங் குடுத்து என்ன பண்ணனும்னு நினைச்சனோ, அதை உன்கூடப் பண்ணிட்டேன்.” கலங்கித் துடித்தாள்.
மனநிறைவாக அதைப் பார்த்த அகம்பன், “அனு, என் லைஃப்ல வந்த மூணாவது பொண்ணா இருந்தாலும் பெஸ்ட்! எவ்ளோ வசதி வாய்ப்பு இருந்தாலும் ஒழுக்கமா இருப்பா… பணத்துக்காகவும், தன்னோட தேவைக்காகவும் எந்த எல்லைக்கும் இறங்க மாட்டா. இப்படி ஒரு பொண்ணு கிடைக்க நான் ரொம்பக் கொடுத்து வச்சிருக்கணும்.” என்றான்.
“நான் கிளம்பவா…”
“என்ன அவசரம்?”
“ப்ளீஸ் அகா…”
“இதுதான் லாஸ்ட். இனி நீயே ஆசைப்பட்டாலும் என் கூட இருக்க முடியாது. அந்த உரிமை அனுவுக்கு மட்டும் தான் இருக்கு. வேணும்னா… ஷால் ஐ…”
ஆள்காட்டி விரல் கொண்டு கன்னத்தை வருடி இதழை நெருங்கினான். தள்ளிவிட முயற்சிக்கும் அவள் கைகளை உயர்த்திப் பிடித்துக் கண்ணாடியில் சாய்த்தவன், “இப்ப உன்ன நான் அம்முவா நினைச்சு கிஸ் பண்ணவா, இல்ல அனுவா நினைச்சு கிஸ் பண்ணவா…” என்று விட்டு இதழை உரசினான்.
‘வேண்டாம்!’ என்று முகம் திருப்பியவளின் தாடையைப் பிடித்து, “இந்தத் தடவை மதுணிக்குக் கொடுக்கவா… அவதான் என் பின்னாடி நாயா அலையுறா. நான் என்ன பண்ணாலும் தாங்கிக்கிறா. அப்படி ஒருத்திக்கு ஒரே ஒரு தடவை என்னைக் கொடுக்கலாம், தப்பு இல்ல.” என இதழை இழுத்து முத்தமிட்டான்.
இணைந்து செல்லாமல் உடலை அசைத்து எதிர்ப்பைத் தெரிவித்துப் போராடியவளை, மெத்தையில் தள்ளித் தனக்குள் அடக்கியவன் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கடித்தான். அவள் எவ்வளவு கதறியும், காது கொடுக்காது கிடைக்கும் இடத்தில் எல்லாம் முத்தமிட்டான். ஒன்றும் செய்ய முடியாமல் தோற்றுப் படுத்திருந்தவள் ஆடையில் கை வைத்தான். வேண்டாம் என்று கண்களால் இறைஞ்சியும் கேட்காது இழுத்திட, இந்தத் தருணம் போல், வேறு எந்தத் தருணமும் இவ்வளவு மனப்போராட்டத்தைக் கொடுத்திருக்காது அவளுக்கு.
“ஸ்டாப் இட்!” கத்தி அவன் முதுகில் அடிக்க ஆரம்பித்தாள்.
அத்தனையும் தனக்குச் சன்மானமாக வாங்கிக் கொண்டு அவளைப் புரட்டித் தன் மேல் போட்டுக்கொண்டு, “உனக்கு ஒரு சான்ஸ் தரவா?” கேட்க, அவனிடம் இருந்து விடுபடுவதில் குறியாக இருந்தாள் மதுணிகா.
“ஏய் கேளுடி!”
“முதல்ல என்னை விடு.”
“நல்ல சான்ஸ்!”
“ப்ளீஸ்… என்னால நீ பண்ற எதையுமே அக்செப்ட் பண்ணிக்க முடியல அகா. ஒரு மாதிரி உடம்பெல்லாம் கூசுது. உனக்கு அனுதான் வேணும்னா தாராளமா கல்யாணம் பண்ணிக்க. என்னை இப்படிச் சித்திரவதை பண்ணாத. பிடிச்சவனா இருந்தாலும், இப்படிக் கட்டாயப்படுத்திப் பண்றதைத் தாங்கிக்க முடியல.”
“அப்போ என்னைப் பிடிக்குமா?”
“என்னை ஏன்டா இப்படிச் சாவடிக்கிற.”
“அனுவைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன். எனக்காக இவ்ளோ கஷ்டப்படுற உனக்கு ஏதாச்சும் பண்ணனும்ல.” என்றதும் அழுதவள் விழிகள் அவன் விழியை வட்டமிட, “சைடு சிக் இப்ப எல்லாம் ரொம்ப ஃபேமஸ். நீ சென்னையில தாலி கட்டாம அப்பப்போ ஆசைக்கு இருந்துக்க. ஊருக்குப் பொண்டாட்டியா அனு இருந்துக்கட்டும்.” அவளை வதைக்க வார்த்தையை விட்டவன் எதிர்மறையாக இடையை அழுத்தினான்.
“சரி!”
நம்ப முடியாது விழி விரித்தவன், “சரியா?” கேட்க, “ம்ம், உனக்கும் நான் ஒரு சான்ஸ் தரேன்.” என்றவளை விட்டு விலகிப் படுத்தான்.
அத்தனை நேரம் போராடியவள் தன்னை விட்டும் நகராது, “தனியா உனக்கு மட்டும் ஆசைக்கு இருக்கறதுக்குப் பதிலா, கூட நாலு பேர் சேர்த்துக்க. அப்போதான் நீ எனக்குக் கொடுக்கிற பட்டம் சரியா இருக்கும்.” என்றவளின் கன்னம் சிவந்தது அகம்பன் கொடுத்த அடியில்.
தன்னை நோகடித்தவனை நோகடித்த நிம்மதியில், வேதனையைப் பொறுத்துக் கொண்டு படுத்திருந்தாள். துளியும் அஞ்சாது பார்க்கும் அவள் பார்வையில், வெறியாகி மெத்தையில் அழுத்திய அகம்பன், “இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்த… என்ன நடக்கும்னு தெரியாது. எந்திரிச்சுப் போடி.” கத்தினான்.
“வார்த்தை என்னை மட்டும் இல்ல, உன்னையும் குத்திக் கிழிக்கும். ஆல் தி பெஸ்ட்! இந்த உறவாவது நீ ஆசைப்பட்ட மாதிரி இருக்கட்டும்.” என்று விட்டு வெளியேறப் போனாள்.
“நிச்சயதார்த்தம் முடிஞ்ச அடுத்த செகண்ட் நீ இங்க இருக்கக்கூடாது.”
“நீயே சொன்னாலும் இருக்க மாட்டேன். உன்னை வேற ஒரு பொண்ணு கூடச் சேர்ந்து பார்க்கிற தைரியம் எனக்கு இல்ல.”
“இந்த நேரத்துல கூட எப்படிடி இவ்ளோ தத்துரூபமா நடிக்கிற.”
“நான் நடிக்கல அகா அதனாலதான் என் வார்த்தை உன்னைக் காயப்படுத்துது.”
“நிறையக் காயப்பட்டுட்டேன்!”
“அதுக்கெல்லாம் சேர்த்து இப்போ நான் நிறையக் காயப்படுறேன்.”
“நீ பண்ணதுக்கு நீ தான் அனுபவிக்கணும்!”
“அதுக்கு நான் எப்பவும் ரெடி! ஆனா, உன்ன என்னால வேற ஒருத்திக்கு விட்டுக் கொடுக்க முடியாது. ஸ்டில் ஐ லவ் யூ அகா…” எனத் தலைவலியைக் கொடுத்துவிட்டுச் சென்றாள் மதுணி.
****
சொந்த பந்தங்கள் சூழ அழைத்து வரப்பட்டாள் அனு. அவளுக்குப் பின் கம்பீர நடையில் மேடை ஏறினான். மணக்கோலத்தில் நிற்கும் இருவரையும் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கற்பகம். கட்சி வேலையை முடித்துவிட்டுச் சரியான நேரத்திற்கு வந்துவிட்டார் நவரத்தினம். மகிழ்விற்குப் பஞ்சம் இல்லாது அழகாக நடந்தேறியது நிச்சயதார்த்த வேலைகள்.
ஓரமாக ஒதுங்கி நின்றவள் விழிகள் முழுவதும் அவன் மீது. தன் மனம் கவர்ந்தவன், தானாக ஆசை கொண்டவன், வேறொரு பெண்ணின் பக்கத்தில் இருப்பதைக் காணச் சகிக்காது மனத்திற்குள் வெதும்பினாள். சபை பார்வைக்கு நின்றிருந்தாலும், அவன் பார்வை முழுவதும் அவள் மீதே. அதை அறிந்தவளுக்குக் கட்டுப்படவில்லை கண்ணீர். தன் முன்னால் நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்தைத் தடுத்து நிறுத்த முடியாது புழுவாய் துடித்தவள், அதிர்ச்சியில் உறைந்தாள் நிச்சயதார்த்த மோதிரம் அவன் கையில் கொடுக்கப்பட்டதும்.
சொந்த பந்தங்களின் கூக்குரல் சபையை நிறைத்தது. இருவர் பெயரின் ஆங்கில முதல் எழுத்துப் பொறிக்கப்பட்ட இரு மோதிரம் இருவர் கையில். இந்தக் காட்சியைப் பார்க்கக் கூடாது என நகர்ந்தவள் பின்னால் நின்றான் கமல். அடிபட்ட பார்வையில் அவனிடம் கொஞ்ச,
“சாரி மேடம்.” என நகர விடாது அங்கேயே நிற்க வைத்தான்.
அகங்காரச் சிரிப்பில் அவளைப் பார்த்துவிட்டு அனுவின் கைப்பிடித்தான். மீண்டும் சத்தம் எகிறியது. மோதிரத்தை அவள் கையில் அணிவிக்கச் சென்றான்.
‘வேணாம் அகா…’
மதுணியின் விழிக் கெஞ்சலை உதாசீனம் செய்து, அனுவின் கையில் மோதிரத்தை அணிவித்தான். இறுக்கமாகக் கண் மூடிக் கொண்டவளுக்குத் தாரை தாரையாகக் கண்ணீர் ஊற்ற ஆரம்பித்தது. பின்னால் நின்றிருந்த கமலுக்குக் கூட மனம் கனத்தது. முதலாளியின் எண்ணம் புரியாது, தன் முன்னால் நின்று கொண்டிருந்த மதுவிற்குப் பாவம் பார்த்தான்.
அவன் பார்க்கும் பாவம் கூடச் சம்பந்தப்பட்டவன் பார்க்காது, விரலை நீட்டினான். சிரித்த முகமாக அவன் கைப் பிடித்தாள் அனுசியா.
