Loading

அத்தியாயம் – 29

மே 15!

பட்டமளிப்பு விழா!

காலை 6 மணி. 

அலாரம் அடிப்பதற்கு முன்பே அமுதினியின் கண்கள் திறந்தன. இன்று அவளது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என்பதை அவள் உள்மனம் அவளுக்கு நினைவுபடுத்தியது. 

இன்று, அவள் பெயர் பின்னால் இருந்த ‘மாணவி’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, ‘முதுகலைப் பட்டதாரி’ என்ற பெருமை சேர்க்கப்படும் நாள். 

இன்று, அவளது காத்திருப்பு என்ற தவம் முடிவுக்கு வரும் நாள். அவளும் ஆரவும் இந்த உலகத்தின் முன், ‘நாங்கள் காதலர்கள்’ என்று தைரியமாக அறிவிக்கப் போகும் நாள்.

அவள் படுக்கையை விட்டு எழுந்து, ஜன்னலைத் திறந்தாள். அன்றைய காலைப்பொழுது, அவளுக்காகவே விடிந்தது போல ஒரு பிரகாசத்துடன் இருந்தது. மெல்லிய சூரிய ஒளி, பறவைகளின் உற்சாகமான கீச்சொலி, இதமான காற்று என இயற்கையே அவளது வெற்றியை வாழ்த்தி வரவேற்பது போலிருந்தது.

மேசையின் மீது இருந்த தன் பெற்றோரின் புகைப்படத்தை எடுத்தாள். அதைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, அவள் கண்கள் கலங்கின. “அம்மா, அப்பா, நீங்க போன அப்பறம் நானே நினைச்சு பார்க்கல… ஆனா, இன்னைக்கு உங்க பொண்ணு முதுகலைப் பட்டம் வாங்கப் போறா… நீங்க ரெண்டு பேரும் என் கூட இல்லாம இருக்கலாம், பட், என் ஒவ்வொரு வெற்றியையும் நீங்க மேல இருந்து பார்த்துட்டு, பெருமைப்படுவீங்கன்னு எனக்குத் தெரியும். 

இன்னைக்கு நான் இன்னொருத்தருக்காகவும் பட்டம் வாங்க போறேன்… என்னை முழுசா நம்புற, எனக்காக எதையும் செய்யத் துணியுற, என்னை உசுரா நேசிக்கிற ஒருத்தருக்காக…‌அவர் பேரு ஆரவ்! ஆரவ் கிருஷ்ணா! அவர்தான் என் காதல்… என் உயிர்…‌ அவரை ‌பார்த்தா கொஞ்சம் கோபக்காரர் மாதிரி தெரிவார், ஆனா, அவர் ஒரு குழந்தை மாதிரி‌ ப்பா… அவரைச் சுத்தி ஒரு பெரிய சுவர் கட்டி வெச்சிருந்தார்… ஆனா, அந்தச் சுவருக்குள்ள ஒரு காயப்பட்ட இதயம் இருந்துச்சு… இப்போ, அவர் அந்தக் காயங்கள்ல இருந்து வெளியில வந்துட்டார்… அவர் எனக்காக மாறல, முழுமனசோட அவருக்காகவே மாறினார்… ஆனா, அந்த மாற்றத்துக்கு நான் ஒரு காரணமா இருந்தேன்னு நினைக்கும்போது… ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா… நீங்க ரெண்டு பேரும் அவரைப் பார்த்தா, கண்டிப்பா உங்களுக்குப் பிடிக்கும்… உங்க பொண்ணை நல்லா பார்த்துப்பார்னு நம்புவீங்க… உங்க ஆசீர்வாதம் எங்களுக்கு எப்பவும் இருக்கும்னு நான் நம்புறேன் ம்மா, ப்பா…” என்று கண்ணீருடன் சொன்னாள்.

புகைப்படத்திற்கு ஒரு முத்தமிட்டு, அதை மீண்டும் வைத்தாள். இன்று வழிந்த கண்ணீரில், துயரம் இல்லை; முழுக்க முழுக்க ஆனந்தம் மட்டுமே இருந்தது.

********

அமுதினி தயாரானாள். அவள் அணிந்திருந்த இளம் ரோஜா நிறப் பட்டுப்புடவை, அவளது அழகை இன்னும் மெருகூட்டிக் காட்டியது. தலைமுடி தளர்வாய் பின்னி, அதில் நெருக்கி கட்டிய மல்லிகைச் சரம், காதில் குடை ஜிமிக்கி, கைகளில் கண்ணாடி வளையல். அவள் முகத்தில் இருந்த வெட்கமும், புன்னகையும் அவளுக்குச் சிறந்த ஒப்பனையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் கழுத்தில் ஆரவ் பரிசளித்த அந்த முடிவிலி சங்கிலி, அவர்களது காதலின் சின்னமாக மின்னியது.

கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோது, அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் முகம் அத்தனை பிரகாசமாக, மகிழ்ச்சியாக, காதலில் மிதப்பதாகத் தெரிந்தது.

சுருதி அவளை அழைக்க வீட்டிற்கு வந்தாள். வாசலில் நின்ற அமுதினியைப் பார்த்ததும், அவள் வாய் பிளந்து நின்றாள். 

“அடிப்பாவி! நீயா இது! செம அழகா இருக்க போ… இன்னைக்கு ஆரவ் சார் உன்னைப் பார்த்தா, கண்டிப்பா அவருக்கு மயக்கமே வந்திடும்… நான் வேணும்னா, ஒரு ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி, ஆடிட்டோரியம் வாசல்லயே நிக்கச் சொல்லிடவா?” என்று கலாய்த்தாள்.

அமுதினி வெட்கத்தில் சிவந்து, “போடி, சும்மா கிண்டல் பண்ணாத…” என்றாள்.

“பைத்தியம், நான் சீரியஸா சொல்றேன் அமுது… ப்ச், சரி வா, நாம கிளம்பலாம்… உன் ஆருயிர் காதலர்… அங்கே உனக்காகக் காத்திட்டு இருப்பாரு…” என்று பேசி சிரித்தபடி, இருவரும் கல்லூரிக்கு சென்றார்கள்.

கல்லூரியின் பிரம்மாண்டமான அரங்கம், பட்டமளிப்பு விழாவிற்காக பூக்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் என அரங்கம் நிரம்பி வழிந்தது. 

அமுதினி, பட்டமளிப்பு அங்கியுடன், மற்ற மாணவர்களுடன் உள்ளே நுழைந்தாள். அவள் கண்கள், அந்தப் பெரிய கூட்டத்தில், ஒருவரை மட்டுமே தேடின.

அங்கே, பேராசிரியர்களுக்கான வரிசையில், கருப்பு நிற சூட்டில், தேவதூதன் போல அமர்ந்திருந்தான் ஆரவ் கிருஷ்ணா. அவன் பார்வையும் அவளையே தேடிக்கொண்டிருந்தது. 

அமுதினி அரங்கத்திற்குள் நுழைந்ததை கண்டதும், ஒரு நொடி, அவன் சுவாசிக்க மறந்தான். அந்த ரோஜா நிறப் புடவையில், அவள் ஒரு ஓவியம் போலத் தெரிந்தாள். அவன் இதயம், இதுவரை இல்லாத வேகத்தில் துடித்தது.

அமுதினிக்கும் அதே நிலைதான். அந்த சூட்டில், ஆரவ் ஒரு ஹாலிவுட் நடிகன் போல கம்பீரமாகக் காட்சியளித்தான். அவன் கண்கள் அவளைப் பார்த்தபோது, அதில் தெரிந்த காதல், பெருமை, மற்றும் ஏக்கத்தின் கலவை, அவளை ஒரு நிமிடம் நிலைகுலையச் செய்தது.

அவர்களுக்குள் வார்த்தைகள் தேவையில்லை. அந்த அரங்கத்தின் இரைச்சலுக்கு நடுவே, அவர்கள் கண்கள் பேசிக்கொண்டன. அது, அவர்களது காத்திருப்பு முடிந்துவிட்டது என்பதை அறிவிக்கும் மௌன மொழி. 

பின்னர், பட்டமளிப்பு விழா கோலாகலமாகத் தொடங்கியது. வரவேற்புரை, சிறப்பு விருந்தினர் உரை என நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. பின்னர், பட்டங்கள் வழங்கும் நேரம் வந்தது. அகர வரிசைப்படி, பெயர்கள் அழைக்கப்பட்டன.

“மிஸ். அமுதினி குமரன்…”

அந்த பெயரைக் கேட்டதும், அமுதினியின் இதயம் வெளியே வந்து துடிப்பது போலிருந்தது. அவள் மெதுவாக எழுந்து, மேடையை நோக்கி நடந்தாள். அவளது கால்கள் லேசாக நடுங்கின.

பார்வையாளர் வரிசையில் இருந்த ஆரவ், தன் அலைபேசியை எடுத்து, அவளை வீடியோ எடுக்க ஆரம்பித்தான். அவன் முகத்தில், தன் மகள் முதல் பரிசு வாங்குவதைக் காணும் ஒரு தந்தையின் பெருமிதம். அவனது அமுதினி, இன்று உலகத்தின் முன், தன் திறமையை நிரூபிக்கிறாள்.

அமுதினி, துணைவேந்தரிடமிருந்து தன் பட்டத்தை வாங்கிக்கொண்டாள். கேமராக்கள் மின்னின. அவள் அந்தப் பட்டத்தை கையில் ஏந்தியபடி, ஒரு நொடி கூட்டத்தைப் பார்த்தாள். அவள் கண்கள் நேராக ஆரவைத் பார்த்தன.

அவர்கள் கண்கள் மீண்டும் சந்தித்தன. அவள், அவனுக்கு மட்டுமே புரியும் ஒரு ரகசியப் புன்னகையை உதிர்த்தாள். அவன், தன் கட்டை விரலை உயர்த்தி, அவளை வாழ்த்தினான். அந்த நொடி, அவர்களுக்கு மட்டுமேயானது. அது அவர்களது காதலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

அமுதினி மேடையிலிருந்து இறங்கி, தன் இருக்கைக்குத் திரும்பினாள். அவள் கையில் இருந்த பட்டம், அவளது உழைப்பின் சின்னம். அவள் கண்களில் வழிந்த கண்ணீர், அவளது காதலின் வெற்றிச் சின்னம்.

நிகழ்ச்சி முடிந்ததும், அரங்கம் முழுவதும் கொண்டாட்டக் கூச்சல்கள். மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ஆனால், அமுதினியின் மனம், ஆரவை மட்டுமே தேடியது.

சுருதி அவள் காதருகே, “அமுது, உனக்கு அவரைப் பார்க்கணும்னு உன் முகமே சொல்லுது… நீ கிளம்பு… நான் இவங்களைச் சமாளிக்கிறேன்… ஆனா, திரும்பி வர்றப்போ, எனக்கு டபுள் ட்ரீட் வேணும்…” என்று கண்ணடித்தாள்.

அமுதினி நன்றியுடன் புன்னகைத்து, கூட்டத்திலிருந்து மெதுவாக நழுவினாள். நூலகத்தின் பின்புறம் இருந்த அந்த அமைதியான பூங்கா. அவர்கள் ரகசியமாகச் சந்திக்கும் அந்த இடம். அவள் அங்கே சென்றபோது, ஆரவ் அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

அவள் அவனைக் கண்டதும், தன்னை மறந்து ஓடினாள். அவன் அவளைக் கண்டதும், தன் கரங்களை விரித்தான். அவள் ஓடிச்சென்று, அவன் மார்பில் ஒரு புயல் போல மோதினாள். அவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

எத்தனை மாதங்களின் ஏக்கம், வலி, பிரிவு… அனைத்தும் அந்த ஒரு அணைப்பில் கரைந்து போனது.

சிறிது நேரம் கழித்து, அவள் விலகி, அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. 

“சார், நான் என் படிப்பை முடிச்சிட்டேன்… நம்ம காத்திருப்பு முடிஞ்சிடுச்சு…” என்க,

ஆரவ் தன் விரல்களால், அவள் கண்ணீரை மென்மையாகத் துடைத்து, “அமுதினி, மை ஸ்வீட் சாம்பியன்… நீ இன்னைக்கு மேடையில நின்னப்போ, ஒரு தேவதை மாதிரி இருந்த… உன்னைப் பார்த்து எனக்கு அவ்வளவு பெருமையா இருந்துச்சு…”

“இது எல்லாம் உங்களாலதான் சார்… நீங்க மட்டும் என் கூட இல்லைன்னா, நான் இதைச் சாதிச்சிருக்கவே முடியாது… நீங்கதான் என் பலம், என் உத்வேகம், எல்லாமே நீங்க மட்டும்தான்…” என்று அவனுக்குள் முகம் புதைத்துச் சொல்ல,

ஆரவ் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தினான். 

“அமுதினி, உன்ன மீட் பண்ணிய பிறகான இந்த ஒன்றரை வருஷத்துல இருந்து தான் வாழவே ஆரம்பிச்சு இருக்கேன்… அதுவும், நம்ம காதலிக்க தொடங்கின இந்த எட்டு மாசம், என் வாழ்க்கையோட மிகக் கடினமான, அதே சமயம் மிக அழகான காலகட்டம்… நீ என் பக்கத்துல இருந்தும், உன்னைத் தொட முடியாம, பேச முடியாம, நான் தவிச்ச ஒவ்வொரு நொடியும் நரகம்தான்…

ஆனா, அந்த வலிதான், உண்மையான காதலுக்குப் பொறுமை எவ்வளவு முக்கியம்னு எனக்குக் கத்துக்கொடுத்துச்சு… நீ என்னை மாத்திட்ட அமுதினி… என் இருண்ட உலகத்துல, நீதான் வெளிச்சத்தைக் கொண்டு வந்த… என் உடைந்த இதயத்த, உன் அன்பால குணப்படுத்தின… நீ என் ஏஞ்சல் அமுதினி…” என்று சொல்லவும், அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. 

“சார், நான் ஒண்ணுமே பண்ணல… நீங்கதான் தெரபிக்குப் போனீங்க, உங்க கடந்த காலத்தை எதிர்கொண்டீங்க, உங்களை நீங்களே மன்னிச்சீங்க… நான் உங்க பக்கத்துல நின்னு, உங்களுக்குத் தைரியம் சொன்னேன், அவ்வளவுதான்.”

“உன் ப்ரெசன்ஸ் மட்டும் போதும் அமுதினி… நீ என்னை நம்பினது, என்னை அப்படியே ஏத்துக்கிட்டது, அதுதான் எனக்கு உதவி பண்ணுச்சு… உனக்குத் தகுதியான ஒரு ஆணா நான் மாறணும்னு நினைச்சேன்… உன் காதல்தான் என்னை பழையபடி நல்ல மனுஷனா மாத்துச்சு…”

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். கண்ணீரும், புன்னகையும், எல்லையில்லா காதலும் அவர்கள் முகத்தில் ஒரே நேரத்தில் தெரிந்தன.

திடீரென்று, ஆரவ் அவள் முன் மண்டியிட்டான்.

அமுதினி அதிர்ச்சியில் உறைந்து போய், “சார், நீங்க என்ன பண்றீங்க?” என்று பதட்டமாக கேட்க,

ஆரவ் சிரித்துக்கொண்டே அவள் கையைப் பற்றி நெஞ்சின் மீது வைத்து, “இது கல்யாண ப்ரொப்போசல் இல்லை… அதுக்கு இன்னும் டைம் இருக்கு. ஆனா, இது ஒரு சத்தியம்… அமுதினி, நான் உனக்கு சத்தியம் பண்றேன்… என் வாழ்க்கை முழுமைக்கும் நான் உன்னை மட்டுமே நேசிப்பேன், உன்னைப் பாதுகாப்பேன், உனக்கு எப்பவும் ஆதரவா இருப்பேன்… என் கடந்த காலத்தோட நிழல், நம்ம நிகழ்காலத்தின் மீது விழாம நான் பார்த்துப்பேன்… என் காயங்கள், உன்னை ஒருபோதும் காயப்படுத்தாது… நான் உனக்குத் தகுதியான கணவனா இருப்பேன்… என் மனைவியா, எப்பவும் என் கூடவே இருப்பியா அமுதினி?” என்று கண்கலங்கி கேட்டான்.

அமுதினி, கண்ணீருடன் அவன் முன் மண்டியிட்டு, முகத்தினை ஏந்தி, “சார், நீங்க உங்களோட அமுதினி… உங்களுக்கு நான் துணை… எனக்கு நீங்க துணை… இதுக்கு மேல என்ன சத்தியம் வேணும்? இருந்தாலும், நானும் சத்தியம் பண்றேன்.‌. உங்க சந்தோஷம், உங்க துக்கம், உங்க வெற்றி, உங்க தோல்வி எல்லாத்துலயும் நான் பங்கெடுப்பேன்… நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி எப்பவும் சந்தோஷமா இருப்போம்… ப்ராமிஸ்…” என்றாள்.

மெதுவாக, ஆரவ் அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டினான். அவர்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்.

பின், மிக மெதுவாக, ஆரவ் அவள் முகத்தை நெருங்கினான். அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்டது. அவளது கண்கள் தாமாக மூடிக்கொள்ள, மிக மிக மென்மையாக, அவர்களது உதடுகள் சந்தித்தன. 

அவர்களது முதல் முத்தம்!

அது வெறும் முத்தம் அல்ல!

அது ஒரு காவியத்தின் தொடக்கம்!

இத்தனை மாதங்களின் காத்திருப்புக்குக் கிடைத்த பரிசு. அந்த முத்தத்தில், அவர்களது காதல், வலி, ஏக்கம், நம்பிக்கை அனைத்தும் கலந்திருந்தது.

சிறிது நேரம் கழித்து, அவர்கள் விலகியபோது, இருவர் முகத்திலும் வெட்கமும், புன்னகையும், ஆனந்தக் கண்ணீரும் ஒருசேர இருந்தது.

“நம்ம முதல் முத்தம் சார்..” அமுதினி, வெட்கத்துடன் சினுங்கினாள்.

“ஆமா, நம்ம முடிவில்லாத முத்தங்களின் முதல் முத்தம் இது…” என்றான் ஆரவ், அவள் காதருகே.

சிறிது நேரம் கழித்து, அவர்கள் கைகோத்துக்கொண்டு, அந்தத் தோட்டத்தில் நடந்தார்கள்.

“சார், நான் நம்ம காலேஜ்ல பிஎச்.டி பண்றேன்… பட், மீனாட்சி மேம், உங்களை என் மென்டரா அல்லோவ் பண்ணுவாங்களா தெரியல சார்…”

“ரொம்ப நல்ல விஷயம் அமுதினி… காலேஜ்ல நான் உன்னோட மெண்டரா இருந்தாலும், இல்லாம போனாலும் பிரச்சனை இல்ல… நம்ம வீட்ல இருக்கும்போது ஏதாவது டவுட் வந்தா தாராளமா என்கிட்ட கேளு, உன் ஆரவ் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லி தருவேன்… ஓகேவா?” 

“டபுள் ஓகே சார்…”

மதியம், அவர்கள் கைகோத்தபடியே, கூட்டத்தை நோக்கி நடந்தார்கள். முதல்முறையாக, எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், தைரியமாக.

மாணவர்கள் அனைவரும் அவர்களைப் பார்த்திருந்தார்கள். சிலர் கிசுகிசுக்க, சிலர் புன்னகையுடன் பார்க்க, இன்னும் சிலரோ ஆச்சரியமாக பார்த்தார்கள். ஆனால், அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

சுருதி அவர்களைப் பார்த்ததும், “ஃபைனலி! ஒரு வழியா, தலைவனும் தலைவியும் ஒன்னு சேர்ந்துட்டாங்க!” என்று சந்தோஷமாக கத்தினாள்.

பேராசிரியர் சரண்யா தூரத்திலிருந்து பார்த்துப் புன்னகைக்க, துறைத்தலைவர் மீனாட்சியும் தன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையுடன், அங்கீகரிப்பது போலத் தலையசைத்தார்.

இது அவர்களின் அற்புதமான தருணம்! அவர்களின் முதல் வெற்றி! அவர்களது காதல் தொடக்கம் வாழ்க்கையின் அழகான தொடக்கம்!

அன்று மாலை, சூரியன் மெதுவாக மறைந்து கொண்டிருந்தபோது, ஆரவும் அமுதினியும் கடற்கரையில் அமர்ந்திருந்தார்கள்.

“சார், இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில வரும்னு நான் கனவுல கூட நினைக்கல… நான் ஒருத்தரை இந்த அளவுக்கு காதலிப்பேன்னு சத்தியமா எதிர்ப்பார்க்கல… எல்லாமே கனவு போல்தான் இருக்கு…” என்று அமுதினி சொல்ல,

“எனக்கும் தான் அமுதினி… ஆறு வருஷத்துக்கு முன்னாடி, நான் மனசால உடைஞ்சு போயிருந்தேன்… காதல் மேல இருந்த எல்லா நம்பிக்கையும் சுத்தமா போய்டுச்சு… ஆனா, இன்னைக்கு, நான் முழுமையா உணர்றேன்… காதல் மேல அவ்வளவு நம்பிக்கை வந்து, உன்ன சொல்ல முடியாத அளவுக்கு காதலிக்கிறேன்… எல்லாமே உன்னாலதான் அமுதினி… நீ என் வாழ்க்கையில வராம போயிருந்தா என் நிலைமை என்னவாகி இருக்குமோ தெரியல..!!” என்று ஆரவ் பேச,

“எதுக்கு சார் பழசை பத்தி பேசிட்டு, இப்ப, இந்த நிமிஷத்தை நினைச்சு பாருங்க… சந்தோஷம் தானா வரும்…” என்று ஆறுதலாக சிரிக்க, அவனுக்கும் புன்னகை தோன்றியது.

அவர்கள் அமைதியாக, கைகளைக் கோத்துக்கொண்டு, அந்த சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தார்கள்.

“அமுதினி, இது நம்ம கதையோட முடிவு இல்லை. இது ஒரு ஆரம்பம். நம்மளோட காதல் கதை, இனிதான் ஆரம்பமாகப் போகுது…”

“எனக்குத் தெரியும் சார்… நம்ம கதை ஒரு அழகான காவியமா இருக்கும்… அதுல பல சவால்கள் வரலாம், ஆனா, நம்ம காதல் எல்லாத்தையும் ஜெயிக்கும்… நாம எப்பவும் ஒன்னா இருந்து எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணலாம்…”

“கண்டிப்பா அமுதினி… நாம சேர்ந்திருந்து எல்லாத்தையும் பார்த்துக்கலாம்…” என்று அவள் கைகளை இறுக்கினான் ஆரவ் கிருஷ்ணா.

“ம்ம்ம்ம்…” என்று மனம் நிறைந்த காதலுடன் அவன் தோளில் சாய்ந்தாள் அமுதினி.

சூரியன் மறைந்தாலும், அவர்களது காதல் என்ற சூரியன், அன்றுதான் உதயமாகியிருந்தது. அவர்களின் காதல் கதை தொடரும்… என்றென்றைக்கும்.

சூரியன் முழுவதுமாக மறைந்து, வானத்தில் வண்ணங்கள் சிதறின. அந்த அழகான பின்னணியில், அவர்களது நிழல்கள் ஒன்றாக இணைந்திருந்தன. அவர்களது காதல் கதை, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருந்தது. அது முடிவில்லாத, எல்லையில்லாத ஒரு காதல் காவியம்.

********

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்