
அடுத்த பத்து நாட்களில் திருமணம் என்று முடிவு செய்ய பட்டது. இந்த முறை கூட பெரிதாக செய்யும் எண்ணம் கணேசனுக்கு இல்லை. அதை கோபலனை காரணமாக காட்டி, இதிலும் நல்ல பெயரை வாங்கி கொண்டான்.
உண்மையில் வாழ்நாளில் இந்த பத்து நாளை ஆதனி வாழ்க்கையையே வெறுத்து விட்டாள். தந்தையையும் காண முடியவில்லை. தாயும் சுடு சொற்களால் அவளை எப்பொழுதும் ஆராதித்துக் கொண்டே இருக்க, உண்மையில் ஏன் தான் பிறந்தோம் என்று யோசிக்க தொடங்கினாள்.
நாளை கல்யாணம். போன முறை போல எதுவும் யோசிக்கவில்லை. போன முறை ஓடிப்போக காரணம் வாழ வேண்டும் என்ற ஆசை. இந்த முறை தான் வாழவே ஆசை இல்லையே. என்ன வேண்டுமானாலும் நடந்து கொள்ளடும் எனக்கு எதுவும் வேண்டாம் என்ற நினைப்பே.
நடுவில் ஒரு இரவு இப்படி வாழ்வதற்கு சாவதே மேல் என்று தற்கொலை பண்ணிக் கொள்ள நினைத்த நேரம் கிடைத்த பொருள் தான் இப்பொழுது வரை அவளை நடமாட வைக்கிறது.
“மேஜிக் லென்ஸ்” அதற்கு அவள் வைத்த பெயர். அதை அவளுக்கு கொடுத்தது குருபிரசாத் தான்.
ஒரு முறை பரிட்சையில் பெயில் ஆகி, கோபாலன் அடி வெலாசி விட, ஆழுது கொண்டே மாடியில் உட்கார்ந்திருந்தவளை கண்ட குருவோ,
“என்ன ஆச்சு”
“அப்பா அடிச்சிடுச்சு” என்று தேம்பி கொண்டே சொல்ல, பின் நடந்ததை கேட்டவன், தன் கையில் இருந்த சிறிய லென்ஸ் போன்ற பொருளை அவளிடம் கொடுத்து,
“இதை பாரேன்” என
“என்ன இது” என்று அதனை ஆராய்ந்து கொண்டே கேட்க,
“அது வழியா உலகத்தை பாரேன்” என்று அவன் சொன்னதை கேட்டு அவளும் அப்படியே பார்க்க,
அடுத்த நிமிடம் “ஹே இங்க பாரேன். இவ்வளவு கலர்ஸ் இதுல பார்த்த தெரியுது” என்று சந்தோஷமாக செல்லும் போது அவன்,
“லென்ஸ் இல்லாமல் பாரேன். வெறும் ஒரே வெள்ளை கலர் தான் தெரியும். ஆனா அதுவே இந்த லென்ஸ் வழியா பார்க்கும் போது இவ்வளவு கலர்புல்லா இருக்கு. நம்ம வாழ்க்கை கூட இப்படி தான். சில நேரம் என்னடா இது என்று வெறுமையாக கூட இருக்கும். ஆனால் அதை பார்க்கிற உன்னோட பார்வையை மாற்று. இந்த கலர் உன்னோட வெறுமையை போக்குமானு கேட்டா எனக்கு தெரியல. ஆனால் பிரச்சனையை அனுகிற உன்னோட பார்வை கண்டிப்பா மாறும், சரியா. சும்மா அழுதுடு இருக்காத கிரையிங் பேபி” என்ற வார்த்தை சொன்னவன் மறந்து இருக்கலாம் ஆனால் கேட்டவள் அதையே தன் தாரக மந்திரமாக மாற்றி கொண்டாள்.
இதோ கழுத்தில் தாலியோடு மருத்துவமனையில் ஐ சி யூ முன்னே நின்று கொண்டு இருக்கிறாள். அவள் கழுத்தில் தாலி ஏறிய பிறகே தந்தைக்கு ஆபரேஷன் என்பதை அறிந்தவள் பூமியில் இருக்கும் மனிதர்களையே வெறுத்து போனாள். காலத்தையும் நேரத்தையும் எப்படி தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் நயவஞ்சக கூட்டத்தின் நடுவே தான் இருக்கும் என்று அப்பொழுது அவளுக்கு நன்கு புரிந்தது.
தந்தை வாழ்வா சாவா என்று போராடிக் கொண்டு இருக்க, இவளோ அலங்கரித்து கொண்டு நிற்கும் தன் நிலையை எண்ணி அழுவதா, இல்லை எதோ நல்லவன் கையில் தன்னை பிடித்துக்கொடுத்த மாதிரி நிம்மதியாக நிற்கும் அன்னையை எண்ணி சிரிப்பதா என்று தெரியாமல் சிலையாக நின்று இருந்தாள்.
“அதுக்கு அப்பறம் நான் அப்பா கூட இருந்தேன். அந்த கணேசனை போலீஸ் பிடிச்சிட்டு போயிட்டாங்க. கொஞ்சம் மாசம் முன்ன அவனுக்கு ரிலீஸ் என்று கேள்விப்பட்டேன். அதான் இந்த ஊருக்கு வந்தேன். ஆனால் இங்கவும் எப்படியோ என்னை தேடி கண்டுபிடிச்சிட்டான்.
எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு சொல்ல,
அவள் இன்னும் முழுமையாக சொல்லவில்லை என்று குருவிற்கு நன்றாக புரிந்தது. இருந்தும் மேலே கேட்டு அவளை தொல்லை பண்ண வேண்டாம் என்ற எண்ணத்தில்,
“உனக்கு வார்த்தையால் என்ன ஆறுதல் சொல்றத்துனு எனக்கு தெரியல. ஆனால் இனி உனக்கு எதுவும் தப்பா நடக்காது. நான் பார்த்துகிறேன். உன்னை தனியா விட மாட்டேன்” என்றவன் மனதில் ‘அவ அப்பா அம்மா எங்க இருக்காங்க’ என்ற கேள்வி எழ தான் செய்தது.
சரியாக ஒரு வாரம் சென்று இருக்கும். இன்னும் கல்லூரி திறக்காததால் வீட்டிலில் தான் இருக்கிறாள் ஆதனி. அடுத்தது என்ன பிரச்சனை வருமோ என்ற பயம் அவள் மனதில் இருந்தாலும் தனியாக இருந்த போதே அவ்வளவு பிரச்சனையும் தாங்கியவள், இப்பொழுது அவளுக்கு ஒரு தோள் இருக்கிறதே அந்த நம்பிக்கையில் சற்று நிம்மதியாக இருந்தாள்.
அவள் நிம்மதியை கெடுக்க நினைப்பவன் சும்மா இருப்பானா,
“ஹே புள்ள ரொம்ப நேரமா உன் போனு அடிச்சிட்டே இருக்கு போய் பாரு” என்று குரல் வலுவிழந்து வந்தது பேச்சிக்கு.
“இதோ பார்க்கிறேன் ஆத்தா” என்று அவள் உள்ளே சென்று கை பேசியை எடுக்கும் நேரம் அந்த அழைப்பு நின்று விட்டு, மீண்டும் அழைப்பு வந்தது.
‘எதோ புது நம்பர் போல இருக்கே’ என்று எடுக்க,
“ஹலோ நாங்க செங்கம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து பேசுறோம். நீ தானே ஆதனி. உன் புருஷன் உன் மேல கம்பளைண்ட் கொடுத்து இருக்காரு. இன்னும் இரண்டு நாளில் நீங்க இங்க நேராக வந்து பதில் சொல்லுங்க. வரீங்க தானே” என்று ஒரு பெண் அதிகாரி பேச,
மொத்த உலகமும் அவள் காலடியில் இருந்து விலகி தான் மட்டும் அதல பாதாளம் செல்வது போல் தோன்றியது.
அவள் பதிலுக்காக காத்திருப்பது புரிய, “வரேன் மேடம்” என்று போனை வைத்தவள், வேகமாக எதிரே குரு வீட்டுக்கு ஓடினாள்.
அவள் ஓடி வருவதை பார்த்த மாதவி “என்ன ஆரா எதுக்கு இப்படி ஓடி வர” என அவரிடம் என்ன சொல்றது என்றே தெரியவில்லை. போன முறை வரும் பொழுது தான் இவர் இல்லையே. சொந்தத்தில் ஒரு கல்யாணம் என்று சென்று இருந்தார்.
பதில் சொல்லாமல் முழித்துக்கொண்டு இருக்கும் நேரம் “நான் தான் மா வர சொன்னேன். இன்னும் கொஞ்ச நாளில் காலேஜ் திறக்க போறாங்க. அதன் சப்ஜெக்ட் பி;பத்தி கொஞ்சம் கேட்கணும்” என்றான் குரு பிரசாத்.
“அப்படியா… இதை சொல்றதுக்கு என்ன. ஒரு நிமிசத்துக்கு நூறு வார்த்தை பேசுவ இப்ப ஒரு வார்த்தை பேசவே யோசிக்கிற. நல்ல பொண்ணு தான் போ. டேய் ஒரு பத்து நிமிஷம் கழித்து கிட்சேன் வா நான் கீரை வடை போட போறேன். எடுத்து போய் இரண்டு பேரும் சாப்பிடுங்க” என்று அவர் சமையல் அறைக்கு செல்ல,
குருவோ “மேல வா ஆரா” என அவளும் தயங்கி கொண்டே அவன் அறைக்கு வந்தாள். பின் மெதுவாக தனக்கு வந்த போன் கால் பற்றி சொல்ல,
“ஓ… நான் நேத்து என் பிரெண்ட்ஸ் கிட்ட அந்த கணேசன் பற்றி விசாரிக்க சொல்லி இருந்தேன். இன்றைக்கு தான் சொல்றதா சொல்லி இருந்தான். அதுக்குள்ள அந்த கணேசன் ஒரு பிரச்சனையை உருவாக்கிட்டான். சரி இருக்கட்டும் பார்த்துக்கலாம்” என்று அவனுக்கு தெரிந்த ஒருவருக்கு போன் செய்ய,
“ஹலோ சார், நான் குரு பேசறேன். நேத்து ஒரு விஷயம் பேசி இருந்தேனே. அது விஷயமா கொஞ்சம் பேசணும்” என்று இன்று போலீஸ் பேசியதை எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தான். போனில் பேசிக்கொண்டு இருக்கும் அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆதனி.
அவளின் பருவ வயதில் அவளை முதலில் ஈர்த்த ஆண் மகன் இவன் தானே. தந்தை பாசத்தை அறியாதவள் சின்ன விசயத்திற்கு கூட இவனை தானே பெரிதும் எதிர்பார்ப்பாள். அவனின் மேல் சிறுப் பொறி போன்ற ஈர்ப்பு இருந்தது உண்மை. ஆனால் காலம் அவனை அங்கே இருந்து செல்ல வைக்க கால போக்கில் நடந்த விஷயங்களில் பிடித்தம் மட்டும் அல்ல அனைத்துமே மாறி போனதே.
இதோ இப்பொழுது கூட ஏன் நமக்கு உதவி செய்கிறான் என்று அவனை புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். அதை அவனிடம் கேட்டால் அவனுக்கே பதில் தெரியாது என்பது தான் உண்மை.
இவளின் மனம் நாடு கடந்து யோசித்துக் கொண்டு இருக்க, குருவோ போன் பேசிட்டு வந்தான்.
“நான் பேசிட்டேன் ஆரா. இப்ப நான் பேசியது ஓய்வுபெற்ற நீதிபதி தான். இப்ப அவரோட மருமகள் சென்னை ஐகோர்டில் ப்ரசிட்டிஸ் பண்ணிட்டு இருக்காங்க. நம்மை உடனே சென்னை வர சொன்னாங்க. அவங்க கிட்ட பேசிட்டு வரலாம். இன்றை நைட் கிளம்பலாம். உன் பாட்டி கிட்ட சொல்லிட்டு ரெடி ஆகிடு” என்று இவனும் தன் அன்னையிடம் எதோ எதோ காரணம் சொல்லி, இருவரும் திருச்சியை விட்டு கிளம்பினார்.
அதிகாலை சென்னையை அடைந்தவர்கள் ஆதனி “இப்ப எங்க போகணும்” என்று அவனிடம் கேள்வி கேட்க,
“அவர் வீட்டுக்கே வந்திட சொன்னார். நம்ம நேரா அவர் வீட்டுக்கே போயிட்டு அப்பறமா யோசிக்கலாம். போலீஸ் ஸ்டேஷன் வேற போகணும் தானே. எல்லாத்தையும் முடிச்சிட்டு கிளம்பலாம்” என்று கோவிந்தன், ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டுக்கு ஆட்டோகாரனிடம் வழியை சொல்லி விட்டு இருவரும் அமர,
“உங்களுக்கு நான் எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னு தெரியல. இதை எல்லாம் பண்ணனும்னு உங்களுக்கு அவசியமே இல்லை. ஆனால் இதை எல்லா பண்றதை பார்க்கும் போது” என்று கண்கள் கலங்க மேலும் பேச முடியாமல் மூச்சு வாங்க நிறுத்த,
“அட என்ன ஆரா இதுக்கு எல்லாம் இப்படி எமோஷனலா பேசிட்டு இருக்க. உனக்கு தெரியுமா நீ உனக்கே தெரியாமல் எனக்கு நிறைய உதவி பண்ணி இருக்க. இப்ப தான் ப்ரொபஸரா இருக்கேனா அதுக்கு காரணமே நீ தான். எப்பபடியோ போய் இருக்க வேண்டிய என் வாழ்க்கை உன் வார்த்தையால் தான் மாறுச்சு. உனக்கு என்னால முடிஞ்ச எல்லா உதவியையும் நான் இருக்கிற வரை செய்வேன்” என்று மேலும் பேசும் முன்னே அவர்கள் சொன்ன இடம் வந்துவிட ஆட்டோ நின்றது.
கோவிந்தனிற்கு தொலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வெளியே வந்து விட்டதாக சொல்ல, உடனே அவர் வெளியே வந்து இருவரையும் உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார்.
“என் மருமக கிட்ட நேற்றே உங்களை பற்றி எல்லாம் சொல்லிட்டேன். நீங்க இந்த ரூமில் ரேடி ஆகிட்டு வாங்க சாப்பிட்டு பேசலாம்” என்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரையும் அழைத்துக் கொண்டு மேல் தளத்தில் இருக்கும் அவர் மருமகள் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.
“மருமகளே!! இவங்க தான் நான் சொன்னவங்க” என்று அறிமுகம் செய்ய,
“ஹே பிரசாத் வாட் எ சப்ரைஸ். உங்களை நான் இங்க பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை” என்று சந்தோசமாக வரவேற்றாள் காவ்யா மாறன். கோவிந்தனின் மகன் மாறனின் மனைவி. பிரசாத்தின் முன்னாள் காதலி.
சத்தியமாக இவளை இங்கே அவன் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் லாயராக.
“காவ்யா நீ… நீங்க லாயர்” என குரு நிறுத்த, கோவிந்தன் “அட என் மருமகளை தெரியுமா நல்லதா போச்சு அப்ப நீங்க பேசிட்டு வாங்க. நான் கீழே இருக்கேன். காவ்யா பார்த்துக்கோ மா” என்று அவர் கிளம்பியதும்,
“சரி சொல்லுங்க என்ன பிரச்சனை” என்று காவ்யா கேட்டதும், குரு முதலில் சற்று தயங்கினாலும் பின் ஆதனி அவனிடம் சொல்லிய அனைத்தனையும் கூறினான்.
அதை பொறுமையாக கேட்ட காவ்யா பின், ஆதனியை நோக்கி “இதுக்கு மேல என்ன நடந்தது. எனக்கு புரியுது எல்லாமே எல்லார் கிட்டவும் சொல்றது ரொம்ப கஷ்டம். சில விஷயம் எல்லாம் சொல்ல கூட முடியாது. ஆனால் நீ சொல்ல கூடாதுனு நினைக்கிற விஷயம் தான் அங்க அவனுக்கு சாதகமாக மாற நிறைய சான்ஸ் இருக்கு. என் கிட்ட நீ ஓபன்னா பேசலாம். நான் உனக்கு அக்கா மாதிரி தான்” என
ஆதனியோ எதுவும் சொல்லாமல் பக்கத்தில் இருந்த குருவை பார்க்க, அதை கண்ட காவ்யா “நீ வேண்டுமா வெளிய இரு பிரசாத். நான் பேசிட்டு கூப்டுறேன்” என
அவள் சொல்ல தயங்குவதை அறிந்து அவன் எழுந்துக்க கொள்ள நினைக்கும் நேரம், அவன் கையை பற்றிய ஆதனி “இல்ல இவங்க கூடவே இருக்கட்டும். என்னோட தைரியமே இவங்க தான். சொல்ல கூடாது என்று எல்லாம் நான் நினைச்சது இல்ல. சொன்ன இவங்க இன்னும் கஷ்டப் படுவாங்கனு தான் நான் சொல்லல” என
சிறு சிரிப்போடு அதை கேட்டவள் “சரி சொல்லுங்க. என்ன ஆச்சு” என
****
ஆபரேஷன் முடிந்து வெளியே வந்த டாக்டர் “ஆபரேஷன் முடிஞ்சது. ஆனால் இதுக்கு அப்பறமா தான் தெரியும் அவரோட உடம்பு எப்படி இந்த டிரீட்மென்ட்டுக்கு ஒத்துழைக்கிறது என்று. ஹோப் போர் தி பெஸ்ட்” என்று அவர் சென்றதும்,
கணேசன் “சரிங்க அக்கா அப்ப நீங்க இங்க தனியா இருந்துப்பிங்க தானே. நான் வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வரவா” என்று ஆதனியை பார்த்துக் கொண்டே சொல்ல,
“இவளையும் கூட்டிட்டு போங்க மாப்பிள்ளை. நான் பார்த்துகிறேன்” என்ற சங்கரியை எதனால் அடிக்க என்றே பார்த்தால் ஆதனி.
கணேசனோ “அட இருக்கட்டும் அத்தை. நான் பார்த்துகிறேன். இப்ப இவ இங்க இருக்கிறது தான் முக்கியம். மாமா கண்ணை திறந்தா சொல்லுங்க. நான் போய் என் சோளியை பார்க்கிறேன். எதாவது வேண்டும் என்றால் எனக்கு போன் பண்ணுங்க” என்று கிளம்பி விட்டான். அவனுக்கு சில அரசியல் ரீதியாக பிரச்சனை. இல்லை என்றால் இன்றே புது மாப்பிள்ளையாக முதல் இரவை கொண்டாடி இருப்பான். கடைசி நேரத்தில் சிலரின் சொதப்பல், இவனுக்கு தலைவலியாக மாறி விட்டது.
அடுத்த நாள் கோபாலன் கண்களை திறக்க, எதிரே தன் மனைவியை பார்த்தவன் “சாப்பிட்டியா புள்ள” என்று மெலிவான குரலில் கேட்க,
“நீங்க கண்ணை திறந்திட்டீங்க தானே. இனி சாப்டுடுவேன்” என்றவர் மகளிடம் கண்ணை காட்ட, அவளோ சிலையாக தந்தை முன் வந்து நின்றாள்.
கழுத்தில் தாலியோடு நிற்கும் மகளை அதிர்ந்து பார்த்தவர் “கல்யாண….. கல்யாணம் பண்ணிட்டியா.. யாரை” என்று மூச்சு வாங்க கேட்க,
அதை சொல்ல கூட விருப்பம் இல்லாமல் அவரையே வெறுமையாக பார்க்க, அந்த பார்வையில் என்ன உணர்ந்தாரோ “ஹே சங்கரி இவ யாரை கல்யாணம் பண்ணா” என்று கஷ்டப்பட்டே பேசினார்.
“வேற யாருங்க.. நம்ம கணேசனை தான். தம்பி ரொம்ப நல்ல மாதிரிங்க உங்க ஆபரேஷன் செலவு மொத்தமா அவரே பார்த்துக்கிட்டாரு. நம்ம கடனை கூட கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாரு” என்று அவர் சந்தோசமாக சொல்ல,
“உனக்கு அறிவு இருக்க புள்ள. என்ன பண்ணி வெச்சி இருக்க. நான் கடன் வாங்கின அதுக்கு இவளை அவன் கிட்ட விப்பையா. அவன் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா. பொம்பள பொறுக்கி. இவனுக்கு போய் நம்ம குழந்தையை கட்டி கொடுத்து இருக்கியே. ஐயோ நான் என்ன பண்ணுவேன். என்னை ஆபரேஷன் பண்ண கூட காப்பாத்துறது கஷ்டம் தெரியுமா. அதான் உங்க கிட்ட எல்லாம் நான் சொல்லல. இது கண்டிப்பா டாக்டர் அவன் கிட்டவும் சொல்லி இருப்பாங்க. ஐயோ இப்படி ஏமார்ந்து போய்ட்டீங்களே.
கண்ணு என்னை மன்னிச்சிடுமா. நான் நல்ல அப்பாவே கிடையாது. உன் வாழ்க்கை என் கண் முன்னாடியே சீரழிஞ்சு போச்சே” என்று அழுதவரால் மேலே பேச முடியவில்லை. அவரின் உடம்பு மிகவும் கவலைக்கிடமாக மாறியது.
அவரை பரிசோதித்த டாக்டர் “சாரி பண்ண ஆபரேஷன் அவர் உடம்புக்கு செட் ஆகலை. இனி காப்பாற்றுவது கஷ்டம்” என்று சொல்லி விட, சங்கரியோ பேய் அறைந்தது போல் நின்று இருந்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
கணவன் மீண்டுவிடுவான் என்று நினைக்க அதுவும் இல்லை என்றானது. மகள் நன்றாக வாழுவாள் என்று நினைக்க அதிலும் கல் எறிந்த நிலை தான்.
இரண்டு நாட்கள் கடும் வேதனையை அனுபவித்தவர் பின் தன்னால் தான் தன் மகளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை என்று கவலைப்பட்டே இறைவனடி சேர்ந்தார்.
சங்கரி அப்பொழுது தான் ஒரு விடயத்தை கவனித்தார். அவர் மகள் அவரிடம் பேசி ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. கடைசியாக அன்று தான் திட்டிய போது சிலையாக நின்றவள் இன்று வரை அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பெரும் தவறு செய்த பிறகு அழுது மட்டும் அது மாற போகிறதா.
அனைத்து காரியமும் முடிந்து விட்டது. எதோ ஆதனியும் கணேசன் வீட்டுற்கு வந்துவிட்டாள். ஆனால் அவன் தான் வீட்டில் தங்க முடியவில்லை. இவள் வந்து ஒரு வாரம் ஆக போகிறது. தன்னிடம் அத்துமீறுவனோ என்ற பயம் அவள் மனதில் பெரிதும் இருக்க, அவனோ வீட்டிலே இல்லை.
காலை குளித்தவள் எப்பொழுதும் போல் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் கணேசன் வீட்டிற்கு வந்தான்.
“அடே அட இதை பார்க்கவே ஒரு கண்ணு போதலை. என்ன அழகா இருக்க. இந்த அழகை ஆராதிக்க கூட நேரம் இல்ல பாரேன். கவலைப்படாத கண்ணு. கொஞ்ச நாள் தான் என் பிரச்சனையை எல்லாம் முடிச்சிட்டு வாறன். இப்ப இந்த மாமாக்கு நீ தான் சாப்பாடு ஊட்டி விட போற” என்று அவளை வலுக்கட்டாயமாக உணவு மேஜைக்கு அழைத்து வந்தான் கணேசன்.
அவன் வெறுப்பாக இட்லியை பிட்டு அவன் வாய் அருகே எடுத்து செல்லும் நேரம் போலீஸ் வாகனத்தின் ஒலி, வீட்டின் முன் கேட்டது. அடுத்து என்ன நடந்தது என்று உணரும் முன்ன ஆளும்கட்சி பிரமுகரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்ய பட்டான். அதில் அவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
அவன் சென்ற பின்னும் இவள் நிம்மதியாக இல்லை. ஒரு மாதம் அவன் வீட்டில் தான் இருந்தாள். தாயிடம் செல்ல அவள் மனது துளி கூட சம்மதிக்கவில்லை.
ஒரு மாதம் கடந்த பின் ஒருவன் அவளிடம் ஒரு தொலைபேசியை கொடுத்தான். அன்றில் இருந்து தொடங்கியது அவளின் இருண்ட காலம். நாள் தவறாமல் தினமும் இரவு கணேசன் அவளுக்கு அலைபேசியில் அழைத்து விடுவான். பேசுபவன் சாதாரணமாக பேச மாட்டான். எல்லாமே அத்துமீறி தான் இருக்கும். அந்த ஒரு மணி நேரம் இவளுக்கு நரகமாக இருக்கும். இப்படி பேசிக் கொண்டு இருக்கும் நேரம் தான் இவளே படிக்க போவதாக சொல்ல, இவனும் சம்மதித்தான். தினமும் இரவு வருவதை வெறுப்பாள். ஆனால் அழைத்த உடன் எடுத்து விடுவாள், அவளுக்கு படிக்க வேண்டும் அதற்கு இதை விட்டால் வேற வழி அவளுக்கு தெரியவில்லை.
உடலால் தீண்டி காயப்படுத்தி அத்துமீறுவது மட்டும் பாலியல் தொல்லை இல்லையே. இதோ இப்படி மனத்தால் வதைப்பதும் பாலியல் தொல்லை தானே.
முடிந்த வரை போராடி பார்த்தாள், பின் அவளின் நல்ல நேரம் கணேசன் கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் உதவி செய்ய அங்கே இருந்து அவளின் தூரத்து சொந்தமாக பாட்டியிடம் வந்துவிட்டாள்.
****
காவ்யா “சரி நம்ம அவன் மேல கேஸ் போடலாம். உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு என்ற தேதி நியாபகம் இருக்கா” என்று கேட்க,
“தேதி சரியா தெரியல. ஆனால் என்னோட பரீட்சை ரிசல்ட் வந்த ஒரு வாரம் முன்ன தான்” என்று யோசித்து சொல்ல,
குரு “பண்ணிரென்டாவது பரிட்சையா?” என்று கேட்டதும் “இல்ல பதினோராவது” என்றாள் ஆதனி.
“வாட்!!!” என்று மற்ற இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து போயினர்.
