Loading

  மேனி சிவந்து போன பாவையின் இடையைச் சுற்றி வளைத்த யாஷ் பிரஜிதன், “ஆலம்பனா… ஷட் தி விண்டோ” என்று குரல் கொடுக்க, காரைச் சுற்றியும் ஜன்னல்களில் கருப்பு நிற ஸ்க்ரீன் போல ஒன்று கீழே இறங்கியது.

வெளியில் இருந்து பார்க்கும் யாருக்கும் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிய வாய்ப்பில்லை.

“என்னயா மேஜிக் எல்லாம் காட்டுற?” நிதர்ஷனா வியந்திருக்க, “ரியல் மேஜிக் காட்டவா மின்னல்?” எனத் தாபம் பெருக்கெடுக்க அவளது கழுத்தினுள் முகம் புதைத்துக் கொண்டான்.

“யாஷ்… யாஷ்…”

“ம்ம்!”

“மண்டை ஃபுல்லா குழப்பமா இருக்கு. நீ ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க?” சொல்லும்போதே இடைக்கு அழுத்தம் கொடுத்ததில் வந்த பேச்சும் நின்று விட்டது அவளுக்கு.

“நாலு எலும்பை வச்சே என்னை இம்ப்ரெஸ் பண்ணிட்டடி!” ஆடவனின் மூச்சுக்காற்று வெப்பமாய் தீண்டி அவளை உருக்குலைத்தது.

“என் மேல எல்லாம் பீலிங்ஸ் வரவே வராதுன்னு சொன்ன மாதிரி இருந்துச்சே” மெல்லிய குரலில் சீண்டினாள் நிதர்ஷனா.

“உன் மேலன்னு இல்ல… யார் மேலயும் பீலிங்ஸ் வராதுன்னு கர்வமா இருந்தேன்டி. யூ டேமிட் கில்லிங் மீ!” என்று கிறங்கிய கண்களுடன் அவளை சீட்டில் சாய்த்தவன், கணக்கின்றி முத்தமிடத் தொடங்கினான்.

யாஷ் பிரஜிதனின் இதழ் சூட்டில் இனிமையாய் வெந்தவள், அவனது பின்னந்தலை கேசத்தில் விரல்களை நுழைத்து தன்னுள் அடக்கிக் கொண்டாள்.

—-

மேலும் இரு நாள்கள் மருத்துவமனையிலேயே கழிந்தது. கதிரவன் அதன்பிறகு சிந்தாமணியை நிமிர்ந்தும் பார்க்காதிருக்க, நிவேதனுக்கு புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது.

தனது இரு தங்கைக்கும் உடல்நிலை முழுமையாக சரியாக வேண்டும் என்ற பதற்றமே நிறைந்திருந்தது.

யாஷ் பிரஜிதனும் ஆஹில்யனும் காலை சென்றால் இரவு தான் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பினர். மற்றவர்கள் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் மாறி மாறி அலைந்திட, நிவேதன் ரித்திகாவை அன்பாய் பார்த்துக் கொண்டான்.

பகலில் விழித்திருக்கும் நேரமெல்லாம் வலியில் முகம் வாடி இருப்பவளிடம் இளையவர்கள் ஏதாவது பேசி பொழுதைக் கழித்தனர்.

அன்று மூன்றாவது நாளாக ரித்திகாவிற்கு குளூக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க, நிவேதனையும் கதிரவனையும் யாஷ் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தான்.

அப்போது தான் பெண்கள் அனைவருமே வீட்டில் குளித்துக் கிளம்பி இருந்தனர்.

நிவேதன் நிதர்ஷனாவிற்கு அழைத்து “உன் புருசன் என்னைத் தனியா கூட்டிட்டு போறானே. போட்டுத் தள்ளிட மாட்டான்ல?” எனப் பீதியாகக் கேட்க, “டேய்…” எனப் பல்லைக்கடித்தாள்.

“ஹாஸ்பிடல்ல யாரும் இல்லையா?” நிதர்ஷனா கேட்க,

“ஆமா ரித்தி தனியா இருக்கா. நீங்க வந்துடுங்க. நர்ஸ் இருப்பாங்க அதுவரை” என்றதும், “சரி நான் கிளம்பி தான் இருக்கேன். நான் மொதோ போறேன்…” என்றவள் அங்கு தயாராக இருந்த காரில் கிளம்பி விட்டாள்.

திடீர் இடமாற்றம், வெப்ப நிலை மாற்றம் அனைவருக்குமே ஒவ்வொரு உடல் உபாதையைக் கொடுத்திருந்தது. அதில் பெண்களை எல்லாம் வீட்டில் இருக்க சொல்லி விட்டு, நிவேதனும் கதிரவனுமே மருத்துவமனையில் இருந்தனர்.

ஆதிசக்தி மறுத்தும் நிவேதன் கேட்கவில்லை.

“மாமாவுக்கு காய்ச்சலா இருக்குல அத்தை. நீங்க அவரை பாருங்க…” என்று விட்டான்.

கிருஷ்ணவேணியும் வீட்டினருக்கு ஏதுவாக வீட்டிலேயே சமைத்து ரித்திகாவிற்கும் கொடுத்து விடுவார். அழகேசன் தந்தைக்கு துணையாய் இருந்து கொள்ள, மொழி தெரியா நாடு அவர்களை மூச்சடைக்க செய்தது தான். இருப்பினும் தனது பேரனின் வீட்டில் பேரன் பேத்திகளுடன் இருப்பதில் மகேந்திரனுக்கு அலாதி நிம்மதியும் எழுந்தது.

ரித்திகா நல்ல உறக்கத்தில் இருக்க, உள்ளே நுழைந்த நிதர்ஷனா திகைத்தாள்.

க்ளுகோஸ் முடிந்து டியூப் வழியாக ரத்தம் ஏறி இருக்க, நிதர்ஷனா கத்தி விட்டாள். அதில் பதறி அடித்து எழுந்த ரித்திகாவிற்கு அதன்பிறகே வலியும் உறைத்தது.

“நர்ஸ் நர்ஸ்” என்ற நிதர்ஷனாவின் சத்தத்தில் தாதியர் அவசரமாக வந்து விட்டார். உடனடியாக க்ளூகோஸை நிறுத்தி விட்டவரை உடைந்த ஆங்கிலத்தில் சரமாரியாகத் திட்டினாள்.

“உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா. இரத்தம் வர்ற வரைக்கும் என்ன செஞ்சுட்டு இருந்தீங்க? ட்ரிப்ஸ் முடிஞ்சுதா இல்லையான்னு கூட பாக்க மாட்டீங்களா?” என்று மூச்சிரைக்க கத்தி விட்டவள், “எங்க உங்க டாக்டரு வர சொல்லுங்க அவர” எனப் பொரிந்தாள்.

கூடவே அவளது கரம் வீங்கி இருந்த ரித்திகாவின் கையை தேய்த்தபடி இருந்தது.

தாதியர் கூறிய மன்னிப்பை எல்லாம் அவள் காதில் வாங்கவே இல்லை.

“சாரி சொன்னா எப்படிங்க. எப்படி வீங்கி இருக்கு பாருங்க? இதான் நீங்க பேஷண்டை பாத்துக்குற லட்சணமா? லட்சக்கணக்குல பீஸ் வாங்குறீங்கள்ல” எனத் திட்டிக்கொண்டே செல்ல, ரித்திகாவே அவளை சமன்செய்ய வேண்டியதாகப் போயிற்று.

“விடு நிதா. தெரியாம தான நடந்துச்சு…” என்றவளை அடக்கியவள், “நீ சும்மா இரு. அதெப்படி தெரியாம நடக்கும்? பிளட் வர வச்சுருக்காங்க… இவங்களை சும்மா விடக் கூடாது” என்று யாஷிற்கு அழைத்தாள்.

இங்கோ, யாஷ் பிரஜிதனின் சொகுசு காரில் பயணித்த கதிரவனும் நிவேதனும் கிசுகிசுத்தபடி வந்தனர்.

“இது காரா இல்ல… கப்பலாடா?” கதிரவன் கேட்க,

“இந்த டவுட்டை அவனாண்டவே கேளுடா…” என்ற நிவேதன் யாஷைப் பார்த்தான்.

அவனோ ஆலம்பனாவிடம் ஏதோ உத்தரவிட்டுக்கொண்டே வர, “இன்னாடா இவன் தனியா பேசிட்டே வர்றான்?” என முணுமுணுக்கும்போதே, கார் ஓரிடத்தில் நின்றது.

35 மாடி கொண்ட உயரமான கண்ணாடி கட்டடத்தின் அடியில் நின்றிருந்தார்கள்.

“நிவே… எனக்குத் தெரிஞ்சு போச்சு…” கதிரவன் வேகமாக பதறினான்.

“என்னடா தெரிஞ்சுச்சு?”

“என்னைப் போட்டு தள்ள தான் கூட்டிட்டு வர்றான்…”

“அதெப்படி இவ்ளோ உறுதியா சொல்ற கதிறு” நிவேதன் கேட்க,

“அந்த சிந்தா செத்த சும்மா இல்லாம ஆஹில் முன்னாடி என்னைக் கட்டிப்புடுச்சுச்சு. அவன் இவனாண்ட வத்தி வச்சுருப்பான். போச்சு போச்சு…” எனப் புலம்பியதில், “இன்னாது காட்டுப்பிடிச்சுச்சா?” என நிவேதன் அதிர்ந்தான்.

“நாசமா போனவனே, உன்னால வந்ததுடா. நான் பாட்டுக்கு அந்தப் புள்ளையோட டிராமா பார்த்து ஓட்டிட்டு இருந்தேன். தேவை இல்லாம உன் கருமாந்திர கற்பனைல அவளை என்னோட கோர்த்து விட்டு, இப்ப அவ நெசமாவே என்னை விரும்புறாளாம். இந்தக் கிரகத்தை நான் எங்க போய் சொல்ல…” என நொந்தான்.

அதில் கனிந்த நிவேதன், “சிந்தா நல்ல பிள்ளையா தானடா இருக்கு. அப்பறம் என்னவாம்?” எனக் கேட்டதில்,

“அவ நல்ல பொண்ணு தான். யார் இல்லன்னு சொன்னா… நமக்கே ஒரு இங்கிதம் வேணாமாடா. என்ன தான் நம்மள சரிக்கு சமமா நடத்துனாலும் இவங்கள்லாம் வேற தான? நிதாவும் நீயுமாச்சும் உறவுக்காரங்கன்னு பழகிப்பீங்க. எனக்கு ஏற்கனவே சங்கடமா இருக்கு இங்க இருக்க” எனத் தயங்கினான்.

நிவேதனுக்கும் அது ஆழப் பதிந்ததோ என்னவோ… அமைதியாய் கேட்டுக்கொண்டான்.

தனது காதல் வாழ்விற்கு மட்டுமின்றி நண்பனின் காதல் வாழ்விற்கும் நெருப்பிடுகிறோம் எனப் புரியாதவனாய் கதிரவன் பேசிக்கொண்டே சென்றான்.

இறுதியில் யாஷ் பிரஜிதனின் குரலில் தான் இருவரின் உடைந்த மனமும் மீண்டும் மீட்டப்பட்டது.

யாஷ் பிரஜிதன் நிவேதனை அழுத்தமாகப் பார்த்தான்.

“நிவேதன்… இனி நீயும் இந்த எலைட் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்ஸோட முக்கிய பொறுப்புல இருக்க. கெட் ரெடி ஃபார் இட்” என்றதும் அவன் திருதிருவென விழித்தான்.

“ஏபிசிடியே தெரியாத என்னை எலைட் கம்பெனில வச்சு என்ன செய்யப்போறீங்க மச்சான்?” என்றான் பரிதாபமாக.

“ஏபிசிடி கத்துக்குடுக்கப்போறேன்!” அமர்த்தலாகக் கூறியவனை பேயறைந்தது போல ஏறிட்ட நிவேதன், “இதெல்லாம் ஆவுறதுக்கில்ல மச்சான். அதான் வந்த வேல முடிஞ்சுதுல, என்னை கிளப்பி விட்டுட்டீங்கன்னா நான் செவனேன்னு ஊருக்குப் போயிருவேன்” என மிரட்சியாய் உரைத்தான்.

“போய்? மறுபடியும் கடன் வாங்குவியா?” ஒற்றைப்புருவம் உயர்த்தி யாஷ் வினவ, “ஐயோ சாமி சத்தியமா வாங்க மாட்டேன் சாமி” கன்னத்தில் போட்டுக்கொண்டவன், “இந்த விபரீத விளையாட்டை எல்லாம் என்னாண்ட கொண்டு வராதீங்க மச்சான்” என்றான்.

கதிரவனும், “நிவேதனுக்கு அவனோட உரிமையை கொடுக்க நினைக்கிறது சரிதான் யாஷ். ஆனா இதுல முழு உழைப்பும் உன்னோடது. இவனுக்கு என்ன வருமோ அதை தான அவன் செய்ய முடியும்… எடுத்ததும் பொறுப்பெடுத்துக்கிட்டா எப்படி சரியா வரும்?” என்று பொதுவாய் கருத்து கூறிட,

“எடுத்ததும் பொறுப்பெடுக்க சொல்லல கதிர். பட், எப்பவா இருந்தாலும் இவன் பொறுப்பெடுத்து தான் ஆகணும். அதுக்காக இவனை ஒன்னும் உக்காந்து ஏபிசிடி படிக்க சொல்லல. படிப்பு எசன்ஷியல் தான். ஆனா அது மட்டுமே வச்சு தான் பிசினஸ் செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல. இவனுக்கு பிசினஸ் நாலெட்ஜ் இருக்கு. அதை இங்க இம்ப்ளிமென்ட் பண்ணட்டும்” என்றதும் கதிரவன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “இதை உன் ஆளுட்ட மட்டும் சொல்லிடாத” என்றான்.

“ஏன்?” என யாஷ் பார்க்க,

“ம்ம்… காரி துப்புவா” என்றவன் மேலும் பேசும் முன்னே நிதர்ஷனாவிடம் இருந்து அழைப்பு வர, புயல் வேகத்தில் மருத்துவமனையை அடைந்தான்.

அங்கு மருத்துவர்கள் அனைவரையும் கூட்டி வைத்து பெரும் கலவரத்தையே நிகழ்த்திக் கொண்டிருந்தாள் நிதர்ஷனா.

ரித்திகா தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, யாஷ் சுருங்கிய புருவத்துடன் நிதர்ஷனாவின் அருகில் வந்தான்.

“வாட் ஹேப்பண்ட் மின்னல்?”

“இங்க பாரு யாஷ் என்ன செஞ்சு வச்சுருக்காங்கன்னு” என்று நடந்ததைக் கூறியதும் அவன் அந்த தாதியரை முறைக்க, அந்தப் பெண்ணிற்கு அடிவயிறு கலங்கி விட்டது.

ரித்தியோ, “யாஷ் எதிர்பார்க்காம நடந்துடுச்சு. லீவ் திஸ் ப்ளீஸ்!” எனக் கெஞ்ச,

“நீ சும்மா இருன்னு சொன்னேன்ல வாய மூடுடி…” என்ற நிதர்ஷனா, “யாஷ் இவங்களை மிரட்டி வை. ஒழுங்கா ட்ரீட்மெண்ட் பண்ணலைன்னா உன் கண்ணால இந்த ஆஸ்பத்திரியை எரிச்சு விட்டுடு” என்று உத்தரவிட, யாஷ் பிரஜிதனின் அழுத்த இதழ்களில் மென்னகை.

அனைவரையும் அனுப்பி வைத்தவன், “நீ ஓகே தான ரித்தி?” எனக் கேட்டான்.

“நான் ஓகே தான்டா இவள் தான் கொஞ்ச நேரத்துல கலவரம் பண்ணிட்டா” என்று நிதர்ஷனாவை முறைத்தாலும் அவளையும் மீறி சின்னதொரு முறுவல்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த மறுநாளே ரித்திகாவையும் டிஸ்சார்ஜ் செய்தனர்.

வீட்டிற்கு அழைத்து வந்து மொத்தக் குடும்பமும் அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள, மெல்ல மெல்ல அவளுக்கு இருந்த தயக்கமும் விடைபெற்றது.

நிதர்ஷனாவைத் தவிர மற்ற இளையவர்களிடம் அரட்டை அடிப்பாள். ஆஹில்யன் வந்து விட்டால் மட்டும் அவர்களுக்குத் தனிமை கொடுத்து விடுவர். அதுவும் யாஷ் பிரஜிதன் இருக்கும் நேரத்தில் முற்றிலும் கிடைக்காது. ஆஹில்யன் அட்டென்சன் மோடில் தான் இருப்பான்.

“உன்னை பிஏவா சேர ஐடியா கொடுத்ததே நான் தான். ஆனா இப்ப என்னை விட நீ அவனுக்கு தான்டா கூஜா தூக்குற” எனச் செல்லமாகக் கோபித்துக் கொள்வாள் ரித்திகா.

இதற்கிடையில் லேபில் நடந்ததை பற்றியும் மற்ற விஷயங்களைப் பற்றியும் யாஷ் மூச்சே விடவில்லை.

நிதர்ஷனாவும் பல விதமாகக் கேட்டுப் பார்த்து விட்டாள். ஒன்று அதனை தவிர்ப்பான். அல்லது, அவளை பேச விடாதவாறு முத்தத்தில் மூழ்கடித்து விடுவான்.

அன்று குடும்பமே ஒரு முடிவுடன் இருந்தது. டைனிங் டேபிளில் இரவு உணவிற்காக அனைவரும் கூடினர்.

“அத்தை… நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது. உங்க புள்ளைட்ட இருந்து சஸ்பென்ஸ க்ளியர் பண்ணி விடுங்க” நிதர்ஷனா கடுப்படிக்க, “நானும் அதுக்கு தான் ட்ரை பண்றேன் நிதா. அவன் வாயைத் திறந்தா தான!” என்றார் ஆதிசக்தி.

நிவேதனும் “உனக்கு எதுவும் தெரியுமா ரித்தி?” எனக் கேட்க, அவளும் “அந்தத் தீவு இருக்குற லேப்ல ஃபயர் பண்ண போறதா ஆஹி சொன்னான். அதை தவிர எனக்கு வேற எதுவும் தெரியல நிவே. அவன் வரட்டும் இன்னைக்கு எல்லாருமா சேர்ந்து கேட்கலாம்…” எனும்போதே யாஷ் பிரஜிதனும் ஆஹில்யனும் வந்து விட்டனர்.

யாஷ் பொதுவாய் ஒரு புன்னகையை படரவிட்டு, நிதர்ஷனாவிற்கு மட்டும் வந்ததும் ஒரு முத்தம் கொடுத்து விட்டு தனது அலுவல் அறைக்குச் செல்ல, அவள் நெளிந்தாள்.

“இவன் வேற பக்கத்துல யார் இருக்கா என்னன்னு பாக்காம முத்தம் குடுத்து தொலைக்கிறான்” என்று பல்லைக்கடித்தாள்.

நிவேதன் கதிரவனை தவிர மற்றவர்கள் கண்டுகொள்ளாதது போல இருந்து கொண்டனர்.

அவர்களைக் கண்டு அசடு வழிந்தவள், “தட்டைப் பார்த்து சாப்பிடுங்கடா…” என்றாள் முறைப்பாக.

பின்ன அவளையே ‘பே’ வென அடித்துப் போட்டது போல பார்த்தால். அவளும் எத்தனை நேரம் தான் வெட்கத்தை அடக்குவதாம்!

நிவேதன் கமுக்கமாக சிரித்துக்கொண்டான். கதிரவன் வேறு புறம் திரும்பிக்கொள்ள, எதிரில் அமர்ந்திருந்த சிந்தாமணி தான் கதிரவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து வைக்க, “ஆத்தாடி!” எனச் சட்டென தலையைக் குனிந்து கொண்டான்.

‘எவ்ளோ நாள் எஸ்கேப் ஆகுறன்னு பாக்குறேன் நானும்!’ சிந்தாமணி காட்டத்துடன் சப்பாத்தியை பிசைந்தாள்.

கண்மணியோ விழிகளைத் தாழ்த்துவதும் நிவேதன் அவளைப் பார்க்கையில் எதேச்சையாக அவன் கண்களில் மோதிக்கொள்வதுமாக மீண்டும் மீண்டும் காயம் கண்டாள்.

ஆஹில்யனிடம் ஒரு சில கோப்புகளைக் கொடுத்து விட்ட யாஷ் பிரஜிதன், நேராக டைனிங் டேபிளுக்கு வந்தான்.

அன்பு இனிக்கும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 111

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
97
+1
3
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்