
ரகசியம் – 21
‘அய்யயோ நேத்து இவ கூட படிக்குற பையன் மேல லவ் இவளுக்கு இருக்குன்னு நாம சொல்லிட்டு இருந்தது இவன தானா…. ஆனா அவன் பேரு அறிவுன்னு சொன்னாலே.. ஆனா இப்போ இவன் பேரு மாறன்னு சொல்ற மாதிரி இருக்கு.. ஒருவேளை இந்த இனியா பிசாசு கதைகள்ல படிக்குற மாதிரி செல்லமா இன்னொரு பேரு வச்சு கூப்பிடுறாளோ’ என்று மனதில் பல எண்ணங்கள் ஓட அந்த நேரம் மதுவோ மாறனைத் திட்ட எண்ணி,
“டேய் அறிவு.. எனக்கு தலையும் புரியல வாலும் புரியல.. தெளிவா சொல்லித்தொல” என்று கூற விழியின் மனதில் சிறிய பூகம்பம் வந்து சென்றது. அவள் திட்டுவதற்காக கூறிய அறிவு என்ற வார்த்தையை அவனின் பெயர் என்று நினைத்த விழி தன் தமக்கை விரும்புவது இவனைத்தானோ என்று எண்ண அவள் அறியாமல் கண்கள் கலங்கின. கைக்குட்டையைக் கோவிலில் வைத்துவிட்டதாக கூறிக்கொண்டு கோவிலினுள் வந்தவள் யாருமறியாவண்ணம் கண்ணீர் வடித்தாள். வெளியே இனியாவோ,
“ஆமா உங்க ரெண்டு பேருக்குள்ள எப்படி பழக்கம்” என்று கேட்க மாறன் கூற ஆரம்பித்தான்.
ஆறு மாதத்திற்கு முன்பு,
அன்று ஒருநாள் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றிருந்தான் மாறன். இப்பொழுது இவர்கள் நிற்கும் கோவிலுக்கு அருகில் உள்ள மைதானத்தில் தான் அவன் நண்பர்களுடன் விளையாடுவான். அப்பொழுது ஒருவன் அடித்த சிக்சில் பந்து பறந்து எல்லையையும் தாண்டி ரோடு தாண்டி செல்ல அதைப் பிடிக்கிறேன் என்ற பேர்வழி பின்னே பார்க்காமல் பந்தைப் பார்த்துக்கொண்டே சாலை பக்கம் நகர்ந்தான்.
அந்த நேரம் இனியா வீட்டில் இல்லாததால் அவளது ஸ்கூட்டியை அவளறியாமல் எடுத்துக் கொண்டு வந்த விழி ஓட்ட தெரியாமல் ஓட்டி பழகியபடி வந்து கொண்டிருக்க மாறனின் மேல் மோதிவிட்டாள். வண்டியில் மோதியவன் அது வந்த வேகத்திற்கும்.. பந்தைப் பார்த்தபடி அவன் ஓடி வந்த வேகத்திற்கும் நன்கு பலமாக அடிவாங்கி இரண்டடி முன்னே சென்று விழுந்தான் “அம்மா” என்றலறியபடி. கைகளில் ரத்தம் வழிந்தோட அதனைக் கண்ட அவன் நண்பர்கள் அனைவரும் பயந்து ஓடிவிட விழியோ உதிரத்தைப் பார்த்து மயங்கி விழுந்துவிட்டாள்.
அக்கம்பக்கத்தில் இருந்த சிலர் விழியை சூழ்ந்துகொள்ள சிலர் மாறனை சூழ்ந்து கொண்டனர். இருவரையும் ஒரே ஆட்டோவில் ஏற்றி அடுத்த தெருவில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாறனுக்கு கைகளில் பெரிய கட்டு போடப்பட்டது. விழியோ இன்னும் மயக்கம் தெளியாமல் இருக்க அவள் அருகில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தான். மருத்துவமனைக்கு அழைத்து வந்தவர்,
“தம்பி உனக்கு இப்போ ஓகே தான.. அந்த பொண்ணு உனக்கு தெரிஞ்ச பொண்ணா.. நீயே அவ வீட்டுல விட்ருவியா.. எனக்கு வெளில அவசர வேலை இருக்கு.. இல்லன இருந்து அனுப்பிட்டு போய்டுவேன்” என்று கூற மாறனோ,
“எனக்கு இப்போ ஒன்னுமில்ல.. கையில தான கட்டு போட்டிருக்கு.. இவ எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்.. நான் வீட்டுல விட்டுருறேன்.. நீங்க போயிட்டு வாங்க” என்று கூறிவிட அவரும் சென்றார். சிறிது நேரத்தில் கண் விழித்தவள்,
“நான் எங்க இருக்கேன்.. நீங்க யாரு” என்று கேட்டபடி எழுந்து அமர அவனோ,
“ஹே பைத்தியம்.. நீ மயங்கி தான் விழுந்துருக்க.. ஏதோ தலைல அடிபட்டு பழச மறந்த மாதிரி எங்க இருக்கன்னு கேக்குற.. இது ஹாஸ்ப்பிட்டல்னு உனக்கு தெரியலையாக்கும்.. ரொம்ப சினிமா பார்ப்பியோ” என்று கேட்க அவன் கூறியபின் தான் நடந்தது புரிந்தது.
“அய்யயோ உங்க கைல என்ன இவ்ளோ பெரிய கட்டு.. நான் லேசா தான இடிச்சேன்..” என்று கேட்க மாறனோ,
“எதே.. லேசா இடிச்சியா.. நீ இடிச்ச வேகத்துக்கு என் தலைல அடிபட்டுருந்தா இந்நேரம் கொலை கேஸ்ல உள்ள போயிருப்ப நீ.. அடிபட்டது எனக்கு.. ஆனா அம்மையார் மயங்கி விழுந்துட்டீங்க..” என்று கூற அவளுக்கோ அவனை அந்த கட்டோடு பார்க்க பாவமாக இருந்தது. மனம் வருந்தியவள்,
“சாரி கவனிக்காம இடிச்சுட்டேன்” என்று கூற அவனோ,
“அது சரி.. ஆமா எட்டாங்கிளாஸ் படிக்குற உனக்கு இப்போ ஸ்கூட்டி ரொம்ப அவசியமா.. உங்க அப்பா நம்பர் கொடு கேக்குறேன்.. பன்னிரெண்டு படிக்குற நானே பைக் ஓட்டுறது இல்ல” என்று அவள் பார்க்க குட்டியாக சிறுபெண் போல இருப்பதால் அவ்வாறு கேட்க,
“உனக்கு ஓட்ட தெரியலனா அதுக்கு நான் என்ன டா செய்வேன்” என்று முணுமுணுக்க,
“என்ன சொன்ன” என்று கேட்க அவளோ,
“ஒண்ணுமில்லையே.. நான் ஒன்னும் எட்டு படிக்கல.. பதினொன்னு படிக்குறேன்” என்று கூறி சிலிப்பிக்கொள்ள,
“அடேங்கப்பா.. சரி அதை விடு இப்போ உனக்கு ஓகே தான.. கிளம்பலாமா என்று கேட்க அவளும் சரி என்றபடி எழுந்தாள்.
“வீடு எங்க இருக்கு” என்று அவன் கேட்க,
“இங்க பக்கத்துல தான்” என்று கூறியவள் பின்பு,
“அயோ என் ஸ்கூட்டி எங்க” என்று கேட்க அவனோ,
“ஹான்.. அது இனிமே பேரிச்சம்பழம் வாங்க தான் போடணும்” என்று கூறி சிரிக்க,
“அயோ போச்சு.. என் அக்கா என்ன கொன்னே போட்டுடுவா.. ப்ளீஸ் ப்ளஸ்.. அதை எடுத்துட்டு போயிடுவோம்” என்று கூற பிறகு ஸ்கூட்டி இருக்கும் தெருவுக்கு சென்றனர். அவன் கூறியது போல் இல்லாமல் வண்டி நன்றாகவே இருந்தது.
‘பொய் தான சொன்னிங்க’ என்றபடி அவள் முறைத்து பார்க்க அவனோ சிரித்தான். பிறகு வண்டியை இயக்கியவள்,
“சரி ஓகே ஏறிக்கோங்க” என்று கூற அவனோ,
“அடிப்பாவி.. என் மேல அப்படி என்ன உனக்கு கொலவெறி.. ஏற்கனவே ஒரு கையை உடைச்சுது பத்தாதா.. ஒழுங்கு மரியாதையா வண்டியை உருட்டிட்டு நடந்து வா” என்று பொரிய ஆரம்பிக்க,
“சரி சரி.. அதுக்கு எதுக்கு இப்படி ஓட்ட ரேடியோ மாதிரி பொரிஞ்சு தல்லுறிங்க..” என்று கேட்டபடி வண்டியை உருட்ட,
“ஏன் கேட்கமாட்ட.. இப்படி என் கையை நீ உடைச்சும்.. உன்ன போலீஸ்ல பிடிச்சு கொடுக்காம.. உன்ன பத்திரமா விடணும்னு உன்கூட உன் வீட்டுக்கு வறேன்ல.. எனக்கு இது தேவைதான்..” என்று கூற அவளுக்கோ பாவமாக இருந்தது. பிறகு அவனோ,
“நாளைக்கு எனக்கு ரெகார்ட் நோட் சமிட் பண்ணனும்.. இந்த கைய வச்சு எப்படி எழுத போறேனோ” என்று புலம்ப அவளோ,
“என்னால தான உங்களுக்கு இப்படி ஆச்சு.. நான் வேணா உங்களுக்கு எழுதி கொடுக்குறேன்” என்று கூற மாறனோ,
‘மதுவுக்கும் வயித்துவலின்னு படுத்து கிடந்தா.. அவளால கண்டிப்பா எழுத முடியாது’ என்று நினைத்தவன்,
“நிஜமாவா சொல்ற.. கரெக்ட்டா எழுதி கொடுத்துருவியா” என்று கேட்க,
“பக்காவா பண்ணிடலாம்.. டோன்ட் வொரி” என்று கூறிக்கொண்டிருக்க வீடு வந்தது. அந்த நேரம் இனியா வீட்டில் இல்லை. ராமானுஜமோ வாசலில் அமர்ந்து செய்தித்தாள் படித்து கொண்டிருக்க விழி வண்டியை உருட்டிக் கொண்டு ஒரு பையனோடு வருவதைக் கண்டவர் புருவம் சுருங்க பார்த்தபடி எழுந்து வந்தார்.
“என்னமா என்னாச்சு.. இந்த தம்பி யாரு.. கையில கட்டு வேற போட்டுருக்கு..” என்று ராமானுஜம் யோசனையாக கேட்க விழியோ,
“அது வந்து பா” என்று இழுக்க அவளைத் தடுத்த மாறன்,
“அங்கிள் நான் சொல்றேன்” என்றவன் நடந்த அனைத்தையும் கூறிமுடிக்க அவரோ,
“என்ன விழி நீ.. என்னைக் கேட்காம எதுக்கு ஸ்கூட்டி எடுத்துட்டு போன.. நான் நீயும் அன்புவும் சேர்ந்து தான் வெளிய போயிருக்கீங்கன்னு நெனச்சேன்.. உன்னால இந்த தம்பிக்கு இவ்ளோ பெரிய கட்டு போட வேண்டியதா ஆயிடுச்சு..” என்று திட்ட விழியோ,
“சாரி பா.. தெரியும் பண்ணிட்டேன்.. இனிமே பண்ண மாட்டேன்” என்று வருந்தி கூற மாறனோ,
“பரவாயில்ல விடுங்க அங்கிள்.. தெரியாம தான செஞ்சா.. அதுக்கு பதிலா எனக்கு ரெக்கார்ட் எழுதி தரேன்னு சொல்லிருக்கா.. அதனால் மன்னிச்சுட்டேன்” என்று சிரித்தபடி கூற ராமானுஜமும்,
“என்னமோ போ பா.. சரி உள்ள வந்து உக்காரு வா.. உங்க வீடு எங்க இருக்கு” என்று கேட்க அவனோ,
“ஏற்கனவே லேட் ஆயிடுச்சு.. வீட்டுல தேடுவாங்க அதுவும் கட்டோட போனா என்ன ரியாக்ஷன் ஆகும்னு தெரியல.. கடைக்கு போய்ட்டு புது ரெக்கார்ட் நோட் வாங்கிட்டு என் ஃபிரண்ட் வீட்டுக்கு போயிட்டு அவனோட நோட் வாங்கிட்டு வந்து இவகிட்ட கொடுத்துட்டு போகணும்” என்று கூறி செல்ல போக,
“ஒரு நிமிஷம் இரு பா” என்று அவனைத் தடுத்தவர் விழியிடம் வண்டியை வாங்கிவிட்டு,
“நீ உள்ள போ.. நானே தம்பிய கூட்டிட்டு கடைக்கு போயிட்டு நோட்டு வாங்கிட்டு வீட்டுல விட்டுட்டு வரேன்” என்று கூற மாறனோ,
“அயோ அங்கிள்.. உங்களுக்கு எதுக்கு சிரமம்” என்று கேட்க அவரோ,
“என் பொண்ணால உனக்கு தான் பா சிரமம்.. நீ அதைக் கூட பெருசு பண்ணாம என் பொண்ண விட வீடு வரைக்கு வந்துருக்க.. இதுக் கூட உனக்கு செய்யலைன்னா எப்படி” என்றவர் வண்டியை இயக்க அவனும் அதன்பிறகு மறுக்காமல் ஏறிக்கொண்டான்.
அவனோடு கடைக்கும் அவனது நண்பன் வீட்டிற்கும் சென்றவர் நோட்டுகளை வாங்க பிறகு அவனிடம் அவன் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டு அவன் வீட்டிற்கு சென்றார் ராமானுஜம். வீட்டு வாசலில் வண்டி நிற்கவும் அவரும் இறங்கி வர அவரைத் தடுத்தவன்,
“சாரி அங்கிள்.. வரவங்கள வராதிங்கன்னு சொல்றானேன்னு என்னைத் தப்பா நெனைக்காதிங்க.. இப்போ நீங்க வீட்டுக்குள்ள வந்து நடந்ததை சொல்லி விட்டு போனா என் அப்பா அம்மா உங்கள ஏதும் திட்டிருவாங்களோன்னு பயமா இருக்கு.. நான் ஏதாச்சும் சொல்லி சமாளிச்சுப்பேன்.. நீங்கி போய்ட்டு வாங்க..”என்று கூற அவரோ,
‘பரவாயில்ல இந்த சின்ன வயசுல இவ்ளோ பக்குவமா பேசுறான்’ என்று நினைத்தவர்,
“நீ பேசுற விதத்துலயே உங்க அப்பா அம்மா அப்படி அவசரப்பட்டு திட்டுற ரகம் இல்லன்னு நல்லாவே தெரியுது.. ஆனாலும் நீ இவ்ளோ சொல்றனால உன் பேச்சுக்கு மதிப்பு கொடுக்குறேன்.. பத்திரமா போய்ட்டு வா பா” என்று கூற அவனோ,
“ஓகே அங்கிள் என் ஃபிரண்ட் நோட்டுல எப்படி இருக்கோ அது மாதிரியே இந்த புது நோட்டுல எழுத சொல்லுங்க.. நாளைக்கு அந்த கிரௌன்ட் பக்கம் இருக்குற கோவிலுக்கு ஒரு நாலு மணி போல கொண்டு வர சொல்லுங்க.. நான் வாங்கிக்குறேன்” என்று கூற அவரும் சரியென்றபடி சென்றார்.
ரகசியம் – 22
வீட்டிற்கு வந்தவன் ஏதேதோ சொல்லி சமாளித்தவன் மதுரிகாவிடம் மட்டும் நடந்ததைக் கூறினான். பிறகு மறுநாள் அவன் கூறியபடியே நான்கு மணிக்கு கோவிலுக்கு ரெக்கார்ட் நோட் வாங்க கிளம்ப மாதவிடாய் என்பதால் மது மாறனோடு செல்லவில்லை. விழியும் சரியாக நான்கு மணிக்கு முன்னரே கோவிலுக்கு வந்துவிட்டாள். வந்தவள் மாறனைக் காணாது தேட இன்னும் வரவில்லை.. அதுவரை சாமி கும்பிடலாம் என்று நினைத்துவிட்டு சந்நிதி முன் நின்று வேண்டிக் கொண்டிருந்தாள்.
முதலில் பொதுவாக வேண்டிக் கொண்டிருந்தவள் சிந்தையில் திடீரென நேற்று தொலைக்காட்சியில் பார்த்த மாதவன் நடித்த “மாறா” என்ற திரைப்படம் தோன்ற,
‘ச்ச செம படம்ல.. ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலயும் ஒவ்வொரு மேஜிக் நடக்குது போல.. என் வாழ்க்கைல என்ன மேஜிக் நடக்குமோ.. கடவுளே’ என்று நினைத்துவிட்டு கண்களைத் திறக்க அவளின் எதிரே நின்று அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் இளமாறன். வேண்டுதலின் போது அவளது முக பாவனைகள் விதவிதமாக தோன்ற அதனைப் பார்த்தவனுக்கு சிரிக்க தான் தோன்றியது.
கண்களைத் திறந்ததும் அவனை எதிரில் கண்டதும் எதோ வித்தியாசமான உணர்வு தோன்றியது விழிக்கு. இமைகளும் விழிகளும் படபடக்க இமைவிழியின் இதயமும் படபடத்தது. அவனையே பார்த்து கொண்டிருக்க அவள் முன் சொடக்கிட்டு அவளை நிகழுக்கு கொண்டு வந்தான் மாறன்.
“என்ன மேடம்.. பகல் கனவா” என்று கேட்க அவளோ,
“இல்ல திடிர்னு முன்னாடி வந்து நின்னிங்களா.. அதான் ஷாக்கு” என்று கூற அவனோ,
“அது சரி.. ஏதோ பலமான வேண்டுதல் போல.. இன்னைக்கு வண்டியோட்டி யாரை போட்டு தள்ளலாம்னு யோசனையா” என்று கேட்க அவளோ,
“ஹலோ.. தெரியாம செஞ்ச தப்ப எத்தனை தடவ சொல்லிக் காமிப்பீங்க.. நான் இனிமே வண்டியே ஓட்டல போதுமா” என்று சற்று காட்டமாக கூற அவனோ,
“ஹே சாரி சாரி.. நான் சும்மா விளையாட்டுக்காக தான் சொன்னேன். சீரியஸா எடுத்துக்காத” என்று கூற அவளுக்கோ ஆச்சர்யம். இவனது பேச்சில் எப்போதுமே ஒரு நக்கலாக இருப்பதால் அவள் சற்று கண்டிப்பாக அவ்வாறு கூற அவன் மன்னிப்பு கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
“இல்ல நான் சாதாரணமா தான் சொன்னேன்.. கோவம் எல்லாம் படல..” என்று விழி கூற,
“கோவப்படல தான்.. ஆனா வருத்தப்படுறியே.. தப்பு செஞ்சா சாரி கேட்கணும் தான அதான் சாரி கேட்டேன்.. அப்படி தான் மது சொல்லிருக்கா” என்று கூற விழியோ,
“மது யாரு” என்று கேட்க அவனோ,
“அது என் வீட்டுல இருக்க ஒரு பிசாசு” என்று சிரித்தபடி கூற அவளோ,
‘ஒருவேளை தங்கச்சி இல்லனா அக்காவா இருக்கும் போல..’ என்று நினைத்தவள் அதன் பிறகு அவளைப் பற்றி கேட்கவில்லை.
“உங்களுக்கு கை இப்போ எப்படி இருக்கு..வீட்டுல எது திட்டுனாங்களா” என்று கேட்க,
“அது சரியாக ஒருவாரம் ஆகும்னு சொல்லிருக்காங்க.. வீட்டுல விளையாடும் போது கீழ விழுந்து கைல அடிபட்டுட்டுன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.. அது இருக்கட்டும் நீ ரெக்கார்ட் எழுதி முடிச்சுட்டியா..” என்று கேட்க அவளோ,
“ஓ முடிச்சுட்டனே” என்றவள், “உங்க பேரு சொல்லுங்க.. அதையும் நானே எழுதி தரேன்” என்று கேட்க அவனோ,
‘இந்த மது பிசாசு தான் எப்போவும் நேம் எழுதி கொடுக்கும்.. நான் எழுதினாலே சண்டை போடுவா.. இதுல வேற ஒருத்தவங்க எழுதுனா அவ்ளோ தான்.. பத்திரகாளி ஆயிடுவா’ என்று யோசித்து கொண்டிருக்க விழியோ,
“என்னாச்சு மறந்துட்டீங்களா” என்று கேட்க அவனோ,
“எதை” என்றான்.
“உங்க பேரை”
“அதெல்லாம் மறக்கல.. எப்போதும் மது தான் எனக்கு நோட்ல நேம் எழுதி கொடுப்பா.. இல்லனா சண்டை போடுவா.. நான் அவகிட்ட போய் எழுதிக்குறேன்” என்று கூற அவளும் சரியென்று விட்டுவிட்டாள். பிறகு,
“ஓகே எனக்கு ரெக்கார்ட் எழுதி கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. அதுக்காக ஒரு சின்ன கிப்ட்” என்றவன் டைரிமில்க் சாக்லேட்டை அவளிடம் கொடுக்க அவளோ,
“கிப்ட் சரி.. ஆனா எதுக்கு டைரிமில்க்” என்று கேட்க,
“பொதுவா பொண்ணுங்களுக்கு இது தான பிடிக்கும்” என்று கூற அவளோ,
“எனக்கு கிட்கேட் தான் பிடிக்கும்.. இருந்தாலும் பரவாயில்ல கோவில்ல வச்சு கொடுக்குற எதையும் வேணாம்னு சொல்ல கூடாதுன்னு சொல்லுவாங்க.. அதனால வாங்கிக்குறேன்” என்று கூறியவள் அதனை பிரித்து அவனுக்கும் ஒரு துண்டு கொடுத்து அவளும் சாப்பிட அவனும் வாங்கி கொண்டான். பிறகு,
“பொண்ணுங்களுக்கு எது பிடிக்கும்னுலாம் தெரிஞ்சுவச்சுருக்கீங்க நெறய பொண்ணுங்களுக்கு வாங்கி கொடுத்து பழக்கமோ..” என்று நக்கலாக விழி கேட்க,
“ச்ச ச்ச.. இதுவரை உன்னையும் சேர்த்து மூணு பொண்ணுங்களுக்கு தான் நான் இது வாங்கி கொடுத்திருக்கேன்” என்று கூற,
“மூணு பொண்ணுங்களுக்கு தான்னு வேற சொல்றிங்க..” என்று அவள் கூற அதற்கு சிரித்தவன்,
“என் அம்மாக்கு, மதுக்கு, அப்புறம் உனக்கு” என்று கூற அவளோ,
“ஈஈஈ.. சாரி” என்று அசடுவழிந்தாள். பிறகு,
“சரி ஓகே பாய்.. நீயும் பார்த்து வீட்டுக்கு போ” என்றவன் செல்ல போக,
“ஹலோ ஒரு நிமிஷம்.. கோவிலுக்கு வந்துட்டு பிரசாதம் எடுத்துக்காம போறீங்க” என்றபடி அவனிடம் குங்குமத்தை நீட்ட,
“பொதுவா நான் திருநீர் குங்குமம் எல்லாம் வைக்கமாட்டேன்.. இருந்தாலும் பரவாயில்ல கோவில்ல வச்சு கொடுக்குற எதையும் வேணாம்னு சொல்ல கூடாதுன்னு ஒருத்தங்க சொன்னாங்க.. அதனால வாங்கிக்குறேன்” என்று எடுத்துக் கொண்டவன் புன்னகைத்தபடி நடந்து சென்றான்.
‘கடைசி வர பெயரை சொல்லவே இல்ல..’ என்று இவள் நினைத்துக் கொண்டிருக்க அவனும் நடந்து செல்லும்போது,
‘கடைசி வர அவ பெயரைக் கேட்க மறந்துட்டோமே’ என்று நினைத்தவன் பிறகு,
‘நேத்து அவங்க அப்பா அவளை ஏதோ பேரு சொல்லி கூப்பிட்டாங்க.. ஆனா மறந்துட்டேன்.. சரி இனொரு நாள் பார்க்கும் போது கேட்டுப்போம்’ என்று நினைத்துக் கொண்டான்.
ஏனோ அவனின் கலகலப்பான பேச்சு, கண்ணியமான பார்வை, கள்ளங்கபடமில்லா மனம் இவை யாவும் விழிக்கு பிடித்தது.
பொதுவாகவே ஆண்களுக்கு முதல் பார்வையில் ஒரு பெண்ணை எவ்வாறு பிடிக்கிறதோ அது போன்று பெண்களுக்கு ஒரு ஆண் தன்னிடம் எவ்வாறு பேசுகிறான் என்பதை வைத்து அதிகம் பிடிக்கும். அது போன்று தான் விழிக்கும் மாறனைப் பிடிக்க ஆரம்பித்தது, ஏனோ மீண்டும் அவனிடம் பேசிவிட மாட்டோமோ என்ற எண்ணமும் அவ்வப்போது தோன்றியது. ஆனால் நாம் நினைப்பதற்கு நேரெதிராக நடத்துவது தான் விதிக்கு மிகவும் பிடித்த விளையாட்டாயிற்றே..
அந்த ஏக்கம் நாளுக்குநாள் புதுவித உணர்வை விழிக்கு தோன்ற செய்ய அவனைப் பார்க்கவென்றே அடிக்கடி கோவில் அல்லது கோவில் அருகில் இருக்கும் மைதானத்திற்கு செல்லும் வழக்கத்தைக் கொண்டாள். அந்த முயற்சியில் இந்த ஆறு மாதத்தில் இரண்டு மூன்று முறை மதுவுடன் கோவிலிலும் ஓரிரு முறை மைதானத்திலும் பார்த்திருக்கிறாள். ஆனால் பேசும் வாய்ய்பு பெரிதாக கிட்டவில்லை.
ஆனால் விழி அவனைப் பார்த்த நேரங்களில் மாறன் அவளை கவனிக்கவில்லை. சொல்ல போனால் அவளைப் பற்றிய நியாபகங்களே இல்லாமல் இருந்தான்.
இவ்வாறாக மாறன் மது மற்றும் இனியாவிடம் அவன் விழியை சந்தித்ததைப் பற்றி மட்டும் கூற மதுவோ,
“ஓ அப்படியா.. நான் கூட இந்த கோவில்ல ரெண்டு மூணு தடவ இந்த பொண்ண பார்த்துருக்கேன் டா.” என்று கூற இனியாவோ,
“ஓ அப்போ எனக்கு முன்னாடியே என் தங்கச்சிய உங்களுக்கு தெரிஞ்சுருக்கு.. சரி நடக்குற எல்லாமே ஒரு காரணத்தோடு தான் நடக்குதுன்னு சும்மாவா சொன்னாங்க” என்று கூற அவள் கூற்றில் மாறனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டிருக்க அதற்குள் கோவில் நடை சாற்றிவிட மதுவோ,
“அச்சச்சோ.. நடை சாத்திட்டாங்க” என்று கூற இனியாவோ,
“அச்சோ.. சரி விடுங்க.. கோவில் வந்துட்டு பிரசாதம் வாங்காம போக கூடாது” என்றவள் மதுவுக்கு குங்குமத்தை வைத்துவிட்டு அதேபோல் மாறனுக்கும் வைத்துவிட்டாள். அதனை எதிர்பார்க்காத மாறன் மறுக்காமல் வாங்கிக்கொள்ள,
“நான் வச்சுவிட்டா வேணாம்னு சொல்லுவ.. இப்போ என்ன ஒண்ணுமே சொல்லல” என்று மது கேட்க அவனோ,
“லூசு அவ வச்சுவிடுவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணலடி” என்று கூறியவனுக்கு அது பிடித்தும் இருந்தது. அந்த சமயம் கோவில் உள்ளேயிருந்து வெளியே வந்த விழியின் செவிகளில் இனியா கூறிய கூற்றும் கண்களில் அவள் அவனுக்கு குங்குமம் வைத்துவிடும் காட்சியும் பட மீண்டும் மனது வலித்தது.
‘அன்னைக்கு நான் சொன்ன அதே டயலாக்..’ என்று நினைத்தவள் ‘கடவுளே என் அக்கா அவனை விரும்பப்போறான்னு உனக்கு முதல்லயே தெரியும் தான.. அப்புறம் எதுக்கு எனக்கு இந்த மாதிரி எல்லாம் தோண வச்ச..’ என்று விரக்தியாக நினைத்தவள் பிறகு முயன்று தன்னை சகஜமாக்கியவள் அவர்களோடு வந்து நின்றாள். அவளைப் பார்த்த மாறன்,
“என்னாச்சு பச்சைமிளகா.. டல்லா இருக்க” என்று கேட்க விழியோ,
‘ரொம்ப தான் அக்கறை’ என்று மனதில் நினைத்தவள்,
“தலைவலிக்குது..” என்று அவனிடம் கூறியவள் இனியாவிடம்,
“வீட்டுக்கு போலாமா” என்று கேட்க இனியாவும்,
“சரி ஓகே.. பாய்” என்று நால்வரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.
இனியாவும் விழியும் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்க வழக்கத்திற்கு மாறாக விழி அமைதியாக வர இனியாவோ,
“ஹே என்ன டி அதிசயமா அமைதியா வர” என்று கேட்க அதைக் கூட கவனிக்கும் நிலையில் இல்லை விழி. மீண்டும் இனியா அழைக்க சுயநினைவிற்கு வந்தவள்,
“ஒண்ணுமில்ல.. தல வலின்னு சொன்னேன்ல அதான்.. ஆனா நீ ரொம்ப லக்கி டி” என்று கூற இனியாவோ,
“நான் லக்கியா.. ஏன் அப்படி சொல்ற” என்று கேட்க அவளோ,
“பின்ன மனசுக்கு பிடிச்ச பையன காலேஜ்லயும் பார்க்குற வெளியிலையும் பார்க்குற, ஜாலியா பேசுற.. உனக்கென்னப்பா நீ கலக்கு” என்று கூற அவளோ விழியன் கூற்றில் சட்டென பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்தினாள் இனியா.
“என்ன டி சொல்ற.. மனசுக்கு பிடிச்ச பையன அடிக்கடி பார்க்குறேனா.. நீ யாரை சொல்ற புரியல” என்று கூற விழியோ,
“ஹே டோன்ட் ட்ரை டூ ஹைட் ஃப்ரம் மீ இனியா.. நேத்து கேட்கும் போது நீ தப்பிச்சுட்ட இன்னைக்கு நீ உண்மைய சொல்லி தான் ஆகனும்.. நீ அறிவை லவ் பண்ற தான” என்று கூற இனியாவோ சற்று குழப்பமாய்,
“சரி டி ஒத்துக்குறேன்,, நான் அறிவை லவ் தான் பண்றேன்..” என்று கூற விழியின் இதயம் மறுபடியும் காயப்பட்டது. பிறகு மீண்டும் தொடர்ந்தவள்,
“ஆனா அவனை எங்க நான் வெளில பார்த்தேன்.. காலேஜ்ல மட்டும் தான் பார்த்தேன்..” என்று கூற இப்பொழுது குழம்புவது விழியின் முறையாயிற்று.
ரகசியம் – 23
“இப்போ தான டி கோவில்ல பார்த்த.. காதல் மனசு அதுக்குள்ள ரொம்ப நேரம் முன்னாடி பார்த்த மாதிரி ஃபீல் பண்ண வைக்குதோ..” என்று கேட்க இனியாவோ,
“அடியே.. கோவில்ல பார்த்தது மாறன் டி.. ஹி இஸ் இளமாறன்.. என் ஆளு பேரு அறிவமுதன்.. மாறனை அறிவுன்னு நெனச்சுட்டியா” என்று கேட்க காயம் பட்ட இதயத்தில் யாரோ மயிலிறகால் வருடுவது போன்று இருந்தது விழிக்கு.
“என்ன டி சொல்ற.. அப்போ நீ விரும்புற பையன் இவன் இல்லையா.. அப்புறம் எதுக்கு கூட வந்த அவன் தங்கச்சி அவனை அறிவுன்னு கூப்பிட்டாங்க” என்று கேட்க இனியாவோ கலகலவென சிரித்தாள்.
“ஓ அதை வச்சு தான் நீ அவனை என் ஆளுன்னு நெனச்சியா.. அட கடவுளே அவ அவனை டேய் அறிவுன்னு திட்டுனா.. அதுங்க ரெண்டும் அப்படி தான்.. மாறிமாறி கலாய்ச்சுக்குங்க.. அப்புறம் மது மாறனோட தங்கச்சி இல்ல.. அவனோட அத்தை பொண்ணு” என்று கூற,
‘என்னது அத்தைப் பொண்ணா.. இப்போ தான் இவ லவ் பண்றது அவனை இல்லன்னு நெனச்சு சந்தோஷப்பட்டேன்.. அதுக்குள்ள அடுத்த குண்டா.. சரி அவங்களுக்குள்ள எப்படின்னு போக போக பாத்துப்போம்.. இப்போதைக்கு என் அக்கா லவ் பண்றது அவனைக் கிடையாதுன்னு தெரிஞ்சுட்டு அது போதும்.. கடவுளே ரொம்ப நன்றி’ என மனதினுள் நினைத்தவள் அப்பொழுது தான் நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
“சாரி டி.. தப்ப நெனச்சுட்டேன்..” என்று இனியாவிடம் கூற அவளோ,
“சரி அதெல்லாம் இருக்கட்டும்.. தப்பித்தவறி அப்பா முன்னாடி என் மேட்டரை ஓப்பன் பண்ணிடாதடி…” என்று கெஞ்ச விழியோ,
“அதெல்லாம் சொல்ல மாட்டேன்.. சரி நீ எப்போ உன் ஆளுகிட்ட உன் லவ்வ சொல்ல போற” என்று கேட்க அவளோ,
“தெரியல டி.. அமுதுக்கு இன்னும் என் மேல எந்த மாதிரி எண்ணம் இருக்குன்னு தெரியல.. அதனால இப்போதைக்கு அவன்கிட்ட என் காதலை சொல்லமாட்டேன்.. அதுவும் காலேஜ் ஆரம்பிச்சு இன்னும் ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள நான் லவ்வுன்னு சொன்னா நல்லவா இருக்கும்.. சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க” என்று கூற விழியோ,
“ஹே லூசு.. காதலுங்குறது நாம விடுற பட்டம் மாதிரி.. நம்ம ஃபீலிங்ஸ் காத்து மாதிரி.. அது உடனே மேல பறக்கணுமா இல்ல மெது மெதுவா பறக்கணுமான்னு முடிவு பண்றது அடிக்கிற காத்தோட அளவ பொறுத்து தான்.. அது மாதிரி தான் உடனே காதல் வரதும் மெதுவா காதல் வரதும் அவங்கவங்களுக்குள்ள இருக்குற ஃபீலிங்சோட அளவ பொறுத்து தான்.. அதனால ரொம்ப போட்டு குழப்பிக்காத.. ஜாலியா லவ் பண்ணு.. அதுவும் ஒன் சைட் ஃபீலிங்சோட சுகமே வேற.. நல்ல அனுபவி” என்று காதல் தத்துவம் கூற இனியாவோ,
“ஹே எப்புறா.. இந்த அளவுக்கு தத்துவம் பேசுற.. அதுவும் காதலைப் பத்தி.. உனக்கு எப்படி இதெல்லாம் தெரியுது.. ட்வெல்த் தான டி படிக்குற நீயு..” என்று இனியா கேட்க விழியோ,
‘ஆஹா.. ஒரு ஆர்வத்துல மனசுல இருக்க எல்லாத்தையும் கொட்டப் பார்த்துட்டோமே.. பீ கேர்புல் டி விழி’ என்று நினைத்துக்கொண்டவள்,
“இதெல்லாம் எத்தனைக் கதைல படிச்சுருப்பேன்.. அதுக்கெல்லாம் ஒரு ரசனை வேணும் டி” என்று கூற,
“அது சரி.. நல்லா தான் பேசுற” என்றவள் வண்டியைக் கிளப்ப,
‘ஹாப்பாடா நம்பிட்டா’ என்று நினைத்து கொண்டாள் விழி.
————————————————-
வீட்டிற்கு வந்த மது மற்றும் மாறனைக் கண்ட சத்யன்,
“என்ன ரெண்டு பேரும் இன்னைக்கு இவ்ளோ லேட்டா வரீங்க.. எங்க போனீங்க” என்று கேட்க மதுவோ,
“ஐஸ்க்ரீம் சாப்டுட்டு கோவில் போயிட்டு வந்தோம் மாமா” என்று கூற மாறனோ,
“ஆமா பா” என்றவன் பின் விஜயாவிடம்,
“இந்த பிசாசு என் ஐஸையும் கொஞ்சம் சாப்பிட்டுருச்சுமா..” என்று கூறியவன் அவளின் மேல் இருந்த அக்கரையில் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்து,
“ஹே இதை குடி டி.. அப்போ தான் சளி பிடிக்காது.. இல்லனா சளியை சாக்கா வச்சு காலேஜ் வராம டேரா போட்ருவ.. அப்புறம் எனக்கு தான் போர் அடிக்கும்” என்று கூற அதனை வாங்கி குடித்துவிட்டு,
“அப்போ உனக்கு போர் அடிக்குன்னு தான் என்னை உன் கூட கூட்டிட்டு சுத்துற அப்படி தான.. உன்ன என்ன பண்ணுறேன்னு பாரு” என்று அடிக்க துரத்த அவனும் அவள் கைகளில் சிக்காமல் ஓட அவர்களிருவரும் நாளுக்குநாள் மிகவும் நெருக்கமாகிக் கொண்டே போவது போல் விஜயாவிற்கு தோன்றியது. சத்யனும் அதையே நினைக்க இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தமாய் சிரித்துக் கொண்டனர். பிறகு விஜயாவோ,
“சரி பசங்களா வந்து லன்ச் சாப்பிடுங்க” என்று கூற,
“ஃபிரெஷாயிட்டு வந்து சாப்பிடுறோம்” என்று கூறியபடி அவரவர் அறையில் அடைந்தனர். குளிக்கலாம் என்று சென்ற மது சோப்பு தீர்ந்துவிட்டதைப் பார்த்து தன் அலமாரியில் புதிய சோப்பை எடுக்க போக அங்கு இல்ல.
‘இங்க தான வச்சேன்’ என்றபடி அலமாரியைத் துழாவ அப்பொழுது அவள் கைகளில் சிக்கியது VKM என்று எம்ப்ராய்டரி போடப்பட்டிருந்த ஒரு டீ ஷர்ட். அதனை கையில் எடுத்து பார்த்தவளுக்கு.. கடந்தகால நிகழ்வொன்று மனக்கண்ணில் ஓட பிறகு,
‘யாருடா நீ.. எனக்கு இவ்ளோ பெரிய விஷயம் செஞ்ச நீ.. உன் முகத்தைக் காட்டாமலே போயிட்ட.. உன்ன கண்டிப்பா நான் பார்த்தே ஆகணும்.. உன்ன பார்த்த அப்புறம் தான் என் வாழ்க்கைக்கு ஒரு விடை கிடைக்கும்’ என்று மனதில் நினைத்தபடி அதையே பார்த்துக் கொண்டிருக்க அப்பொழுது அவளின் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததாக ஒளிர்ந்தது. தன் கையில் இருந்த டீ ஷர்ட்டை எடுத்த இடத்தில வைத்தவள் அலைபேசியை எடுத்து பார்க்க மதுரனின் புலனத்தில் இருந்து ஏதோ வீடியோ அனுப்பப்பட்டதாக காண்பித்தது.
“இவன் என்ன அனுப்பிருக்கான்” என்றபடி புலனத்தை திறந்து பார்க்க அதில்,
“உன்னோட அந்த லூஸ் ஹேர் அழகா இருக்கு.. அந்த சிரிப்போட இருக்குற அந்த கண்ணு அழகா இருக்கு.. அந்த குளிர்ல நடுங்குற அந்த பல்லுகூட அழகா இருக்கு.. ஸ்..ஸ்.. இந்த ரொம்ப கஷ்டப்பட்டு மறைக்குறியே உன் செல்ல தொப்பை.. அதுகூட நல்லா இருக்கு.. ம்..ம்.. பசங்களுக்கு இதுதான்மா புடிக்குது” என்ற சச்சின் திரைப்பட வசனத்தை அவளுக்கு வீடியோவாக அனுப்பியிருக்க முதலில் புரியாதவள்,
‘ராஸ்கல்.. என்ன தைரியம் இருந்தா இப்படி அனுப்புவான்.. உன்னை…’ என்று நினைத்தவள் அவனுக்கு அழைப்பு விடுக்க அவளது அழைப்பை ஏற்றவன் ஹலோ என்று கூட கூறவில்லை அதற்குள்,
“டேய் என்ன டா நெனச்சுட்டு இருக்குற.. ஏதோ நீ பண்ற கிண்டலுக்கு எல்லாம் எதுவும் சொல்லாம சும்மா இருந்தா அதுக்காக என்ன வேணாலும் பேசுவியா.. இப்போ எதுக்கு இந்த வீடியோ அனுப்புன நீ” என்று பொரிந்து தள்ளியவள் நிஜமாகவே நினைவிலில்லை அந்த படத்திலுள்ள காட்சிகளை தான் அவர்கள் நடிக்க வேண்டுமென்று. அவள் பேசி முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன்,
“முடிச்சுட்டியா.. நான் பேசலாமா.. மஹாராணி உன்ன நெனச்சு அந்த வீடியோ அனுப்புனதா நெனப்போ.. நாம நடிக்க வேண்டியது இந்த மூவிதான்னு மேடம்க்கு நியாபகம் இருக்குதுங்களா.. இல்ல அதுக்குள்ள மறந்தாச்சா” என்று கேட்க அப்பொழுது தான் புரிந்தவள்,
“ஐயோ… மறுபடியும் மிஸ்-அண்டர்ஸ்டாங்டிங் ஆயிடுச்சு.. ஹே சாரி மது சாரி மது” என்று கேட்க அவனுக்கு ரசிக்க தான் தோன்றியது.
“அது எப்படி எப்போ என்ன செஞ்சாலும் அதை தப்பா புரிஞ்சு திட்ட முடியுது உன்னால” என்று கேட்க,
“ஹே சாரி டா.. தெரியாம திட்டிட்டேன்..” என்று மீண்டும் கெஞ்ச அவனோ,
“சரி விடு.. உரிமை இருக்குறவங்க கிட்ட தான சண்டை போட முடியும்.. அப்படி நெனச்சு மனச தேத்திக்குறேன்” என்று மதுரன் கூற அவளோ,
“உரிமையா.. என்ன உரிமை” என்று மீண்டும் கேள்வி கேட்க,
“எம்மா தாயே.. ஃபிரண்ட்ங்குற உரிமையை சொன்னேன்.. நீ மறுபடியும் உன் சந்தேகத்தை ஆரம்பிக்காத.. ஆள விடு” என்று கூற மதுரிகாவோ வாய்விட்டே சிரித்துவிட்டாள்.
“டேய் நிஜமா இப்போ சாதாரணமா தான் கேட்டேன்..” என்று சிரிக்க அவனோ,
“அது சரி.. இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல… சரி ஓகே நான் இன்னும் ரெண்டு விடியோஸ் அனுப்புறேன்.. அந்த டயலாக்ஸ் தான் நாம ப்ரிப்பேர் பண்ண போறோம்.. ஓகே பாய்” என்றவன் அழைப்பைத் துண்டிக்க மதுரிகாவோ மீண்டும் சோப்பைத் தேடி அலமாரியைத் துழாவ,
‘நாம இவன் கிட்ட சண்டையும் போடுறோம்.. அதே சமயம் ஏதோ சொல்ல தெரியாத ஃபீலும் வருது.. அவனும் நாம என்ன திட்டினாலும் அதுக்கு பெருசா ரியாக்ஷன் கொடுக்காமா சிரிச்சிட்டே விட்டுறுறான்.. ஒருவேளை இந்த மாறன் பக்கி இன்னைக்கு சொன்ன மாதிரி எனக்கும் மதுக்கும் இடையில ஏதோ இருக்குதா’ என்று யோசிக்க சற்று முன் அவள் மடித்து வைத்த அந்த டீ ஷர்ட் கீழே விழுந்தது. அதனை எடுத்தவள் அதில் எழுதியிருந்த VKM என்ற எம்ப்ராய்டரியை கைகளால் வருட,
‘ஆனா இவன் யாருன்னு வேற கண்டுபிடின்னு என் மனசு சொல்லுது.. இவனை நெனைக்குறதா இல்ல அவனை நினைக்குறதா.. மானங்கெட்ட மனசு நம்மள குழப்புறதையே வேலையா வச்சுருக்கு’ என்று நினைத்தவள் பிறகு அதை வைத்துவிட்டு சோப்பைத் தேடி எடுத்து குளிக்க சென்றாள்.
அங்கு மதுரனோ,
‘இவ என்னைத் திட்டுன திட்டுக்கெல்லாம் இந்நேரம் ரோஷம் உள்ளவனா இருந்தா முதல்நாள் திட்டுனப்பவே அவ செவுள்ள ரெண்டு விட்டுருப்பான்.. நான் ஏன் இவ செய்ற எல்லாத்தையும் ரசிக்குறேன்.. நிஜமாவே எனக்கு இவளை பிடிச்சிருக்கா.. அறிவு சொன்ன மாதிரி.. ஒரு வாரத்துல எல்லாம் காதல் வருமா.. ஒருவேளை இது வெறும் அட்ராக்க்ஷனா கூட இருக்கலாம் தானே…
ஆனா அட்ராக்க்ஷன்னா அவ அழகு பார்த்து தான வந்துருக்கணும்.. எனக்கு அவளை பிடிக்க அவ அழகு காரணம் இல்லையே.. இதுவரை அவ பேசுற பேச்சை மட்டும் தான் நான் ரசிச்சுருக்கேன்.. பொதுவா சினிமால வரமாதிரி அவ கண்ணு அப்படி.. அவ மூக்கு அப்படி.. அவ ஒரு தேவதை.. இப்படியெல்லாம் நான் யோசிச்சதே இல்லையே.. அப்போ அறிவு சொன்ன மாதிரி இது லவ் தானா..
அப்படி இது லவ்வா இருந்தாலும்.. என் மனசுக்குள்ள இருக்குற குற்ற உணர்ச்சியை சொன்ன இவ புரிஞ்சுக்குவாளா.. ஆனா அவ மனசுல நான் எப்படி இருக்கேன்னு தெரியணும் அதுக்கு.. சரி மூணு வருஷம் அவ கூட தான இருக்க போறோம்.. போக போக பார்ப்போம்’ என்று தனக்கு தானே விவாதம் நிகழ்த்தியவன் பிறகு மீண்டும் தெளிந்தான்.
ரகசியம் – 24
முகம் கழுவலாம் என்று சென்ற மாறன் கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்க்க.. இனியா வைத்துவிட்ட குங்குமம் இன்னும் அவன் நெற்றியில் தான் இருந்தது. அதனைப் பார்த்தவன்,
‘இது கூட நல்லா தான் இருக்கு..’ என்று நினைத்து முகம் கழுவ மனமில்லாமல் அவ்வாறே வந்துவிட்டான். பிறகு மதுவும் மாறனும் சாப்பிட வர தொலைக்காட்சியில் ‘பிரேமம்’ எனும் மலையாள படத்திலிருந்து ‘மலரே’ எனும் பாடல் ஓடிக் கொண்டிருக்க அதில் சாய்பல்லவி நிவின் பாலிக்கு திருநீர் வைத்துவிடும் காட்சி வர ஏனோ மாறன் இனியா வைத்துவிட்ட குங்குமத்தைத் தொட்டுப் பார்த்து சிரித்துக் கொண்டான். அதனை கவனித்த மதுவோ,
‘இந்த பயபுள்ள போற போக்கே சரியில்ல.. காலைல என்னனா இனியா மேல பொஸசிவா இருந்தான்.. இப்போ என்னன்னா அவ வச்சுவிட்ட குங்குமத்தைத் தொட்டு பார்த்து சிரிக்குறான்..’ என்று யோசித்தவள் பிறகு, ‘ஆமா இவன் ஃபிரெஷ் ஆக தான போனான்.. ஆனா முகம் கழுவும் போது குங்குமம் அழியமையா இருக்கும்’ என்று நினைத்தவளுக்கு புரிந்தது இனியாவின் மேல் மாறனுக்கு இருக்கும் உணர்வு.
‘அடப்பாவி.. இந்த மனசு எல்லாரையும் போட்டு பாடா படுத்துது போல.. என்ன நடக்க போகுதோ.. நாம அவன்கிட்ட இப்போதைக்கு இது பத்தி கேட்க வேணாம்.. அப்புறம் பதிலுக்கு யு டர்ன் போட்டு அதே கேள்வியை என் பக்கம் திருப்புவான்.. எதுக்கு வம்பு.. அவனே சொன்னா பார்த்துக்கலாம்..’ என்று நினைத்தவள் சாப்பிட்டு எழுந்து அவளறைக்குள் அடைந்து கொண்டாள்.
—————–
அவ்வாறே அந்நாள் கழிய மறுநாள் இனியாவோ தங்கள் ஐந்து பேருக்கு புலனத்தில் ஒரு குழு ஆரம்பித்தாள். அதில் சிறிது நேரம் அறிவைத் தவிர்த்து மற்ற நால்வரும் பேசி ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மதுரன்,
“காய்ஸ்.. நம்ம எல்லாரும் சூஸ் பண்ணிருக்க சீன மட்டும் நாம ப்ராக்டீஸ் பண்ணா போதாது.. முடிஞ்ச வரைக்கும் ஃபுள் மூவியையும் பாருங்க.. அப்போ தான் அந்த ஒரு ஃபீல் கிடைக்கும்..” என்று கூற அனைவரும் சரியென்றனர். அறிவு மட்டும் குழுவில் ஆஜர் ஆகாமல் இருக்க இனியாவோ,
‘நம்மாளு மட்டும் எங்க போனான்.. ஒருவேளை வேலைக்கு போயிருப்பானோ.. ஆனா இன்னைக்கு சண்டே தான.. இன்னைக்குமா லீவ் கிடையாது.. பேசாம கால் பண்ணி கேட்டுடுவோம்’ என்று நினைத்தவள் அவளின் அமுதுக்கு அழைப்பு விடுக்க அவன் அழைப்பை ஏற்கவில்லை. பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு அவனே அழைக்க அதனை ஏற்றவள்,
“டேய் திருட்டுப்பயலே.. சண்டே அதுவுமா அப்படி என்ன டா உனக்கு வேலை.. க்ரூப் பக்கம் ஆளையே காணும்” என்று கேட்க அவனோ,
“சாரி அன்பு.. அப்பாக்கு இன்னைக்கு திதி.. அதான் காலைல இருந்து வீட்டுல படையல் போட்டு சாமி கும்பிடுறது, கோவில் போறது, திதி கொடுக்குறதுன்னு கொஞ்சம் பிசியா இருந்தேன்” என்று கூற அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“சாரி அமுது.. இது தெரியாம நான் பாட்டுக்கு எப்போதும் போல உன்ன கலாய்ச்சுட்டேன்.. ஏன்டா.. நான் தான் உண்மை தெரியாம உன்ன திட்டிட்டு இருக்கேன்.. நீ என்னை திட்டிருந்தா கூட எனக்கு பெருசா தெரிஞ்சுருக்காது.. நீ தப்பே பண்ணாம ஏன் என்கிட்ட சாரி கேட்குற..” என்று கேட்க,
“எனக்கு திட்ட தோணல அன்பு.. எப்போதுமே நான் இப்படி தான்..” என்று அவன் கூற அவளுக்கோ மேலும் மேலும் அவனின் மேல் காதல் கூடியது. பிறகு மீண்டும் தொடர்ந்தவன்,
“சரி எதுக்கு கால் பண்ண.. ஏதும் அவசரமா” என்று கேட்க அவளோ,
“இல்ல.. நீ வாட்சப் பக்கம் வரவே இல்லயே.. இன்னைக்கும் வேலையும் லீவ் தான.. அதான் என்னாச்சுன்னு கேட்க கூப்பிட்டேன்” என்று அவள் கூற அவனோ,
“நான் உன்ன அன்புன்னு கூப்பிடுறதுல தப்பே இல்லன்னு நினைக்குறேன்.. சரி ஓகே காலைல இருந்து சாப்பிடல.. நான் போய்ட்டு சாப்பிட்டுட்டு அப்புறமா வாட்சப் வரேன்” என்று சாதாரணமாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட அவனின் வார்த்தைகள் இனியாவின் காதில் தேனை ஊற்றியது போல் இனித்தது.
—————————
மறுநாள் கல்லூரியில் அனைவரும் மீண்டும் சந்தித்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் மேல் காதல் என்ற உணர்வில் லயித்திருக்க அவர்களின் அன்றைய சந்திப்பு ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக தோன்றியது. எப்பொழுதும் கலகலப்பாக பேசி சிரிப்பவர்கள் இன்று அமைதியாக அமர்ந்திருக்க அறிவோ,
“ஆமா என்னைக்கும் இல்லாத அதிசயமா எல்லாரும் அமைதியா இருக்குறீங்க.. ” என்று கேட்க இனியாவோ,
“ஹான்.. என்னைக்கும் இல்லாத அதிசயமா நீ வாய தொறந்து பேசுறல அதனால் தான்” என்று அவனைக் கலாய்க்க ஆரம்பிக்க மாறனோ,
“ஹே பஜாரி அவன் வாய தொறந்ததை விட நீ வாய தொறக்காம இருந்தது தான் பெரிய அதிசயமே” என்று மாறன் இனியாவைக் கலாய்க்க அவளோ,
“அப்போ நீ எதுக்கு இவ்ளோ நேரம் உன் வாய தொறக்காம இருந்தியாம்” என்று பதிலுக்கு வாரிவிட அங்கு இரண்டு மதுகளிடையில் மட்டும் பார்வை பரிமாற்றங்கள் நடந்துக் கொண்டிருந்தது. இனியாவோ மாறன் மற்றும் அறிவிடம் அவர்களிருவரையும் கவனிக்கும் படி ஜாடைக் காட்ட மூவரும் மதுரன் மற்றும் மதுரிகாவைப் பார்த்து சிரித்தனர். அவர்கள் சிரிப்பு சத்தம் காதில் கேட்டு இருவரும் தன்னிலை அடைய பிறகு,
“எதுக்கு இப்போ சிறிக்குறீங்க” என்று ஒரே போன்று கேட்க மீண்டும் சிரித்தனர். அறிவோ,
“ஏன் மச்சான்.. இவ்ளோ நேரம் நாங்க எதைப் பத்தி பேசிட்டு இருந்தோம்னு சொல்லு பார்ப்போம்..” என்று கேட்க மாறனோ,
“சரியா கேட்ட டா அறிவு..” என்றவன் மதுவிடம்,
“ஹே பிசாசு நீ சொல்லு டி.. இவ்ளோ நேரம் நாங்க என்ன பேசுனோம்னு” என்று கேட்க மது இருவரும் முழித்தனர். பிறகு,
‘வேறென்ன பேசியிருக்க போறாங்க.. நடிக்க போற காம்பெடிஷன்க்கு தான் பிளான் போட்டுருப்பாங்க’ என்று நினைத்துவிட்டு இருவருமே ஒரே போன்று,
“காம்பெடிஷன் பத்தி தான பேசுனீங்க” என்று கூற மீண்டும் மூவரிடையே பலத்த சிரிப்பு. சிரிக்கும் போது இனியா மாறனின் தோளில் சாய்ந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க அறிவோ மேஜையில் கையைத் தட்டி சிரிக்கும் போது அவனது கைகள் அவன் எதிரே அமர்ந்திருந்த இனியாவின் கைகளைத் தொட இனியாவின் ஸ்பரிசம் மாறனுக்குள்ளும் அறிவின் ஸ்பரிசம் இனியாவிற்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரம் இனியாவும் மாறனும் அமைதியாகி விட அறிவோ,
“நாங்க சும்ம மாத்தி மாத்தி கலாய்ச்சுட்டு தான் இருந்தோம்.. உங்க ரெண்டு பேர் கவனம் எங்க இருந்துச்சாம்” என்று மதுரனையும் மதுரிகாவையும் பார்த்து கேட்க அவர்களிருவரும் அசடு வழிந்தனர். பிறகு அனைவரும் மைதானத்திற்கு சென்று நடிப்பு பயிற்சி எடுக்கலாம் என்று சென்று அமர்ந்தனர். அப்பொழுது மாறனும் இனியாவும்,
“நான் ஒன்னு சொல்லணும்” என்று பொதுவாக கூற மற்ற மூவரும் முழிக்க இனியாவும் மாறனும்,
“ஆமா நீ என்ன சொல்ல போற” என்று ஒருவரையொருவர் கேட்க மாறனோ,
“சரி முதல்ல நீ சொல்லு” என்று கூற இனியாவோ,
“இல்ல நீயே சொல்லு” என்று கூற அறிவோ,
“அட யாராச்சும் சொல்லுங்க பா” என்று கூற மாறனே கூற ஆரம்பித்தான்.
“அது வந்து.. நான் யோசிச்சு வச்ச சீன் எனக்கு சரியா வரும்னு தோணல.. வேற ஏதாச்சும் யோசிக்கலாமேன்னு பார்க்குறேன்” என்று கூற இனியாவிற்கோ ஆச்சர்யம்.
“டேய் மாறா.. நானும் இதையே தான் டா சொல்ல வந்தேன்” என்று கூற மாறனோ,
‘அப்போ அவளுக்கும் அந்த மாதிரி தோணிருக்கு தான.. அதனால் தான அவளும் இதையே சொல்ல வந்துருக்கா’ என்று ஒருகணம் மகிழ மதுரனோ,
“என்ன இனியா சொல்ற.. நீயும் அதே தான் சொல்ல வந்தியா” என்று கேட்க,
“ஆமா இது தான்.. ஆனா ஒரு சின்ன சேஞ்ச்.. நான் எனக்கும் அறிவுக்கும் யோசிச்ச வச்ச சீன மாத்தலாம்னு சொல்ல வந்தேன்.. என்னமோ சரியா இருக்கும்னு தோணல” என்று கூற மாறனின் முகம் வாடியது. மதுரிகாவோ,
“என்ன சொல்ரீங்க ரெண்டு பேரும்.. எதுக்கு உங்க ரெண்டு சீனையும் மாத்தணும்னு சொல்றீங்க.. ஏதாவது காரணம் இருக்கா” என்று கேட்க மாறன் மற்றும் இனியா இருவரும் அவரவர் மனதில்,
‘நாம யோசிச்ச காரணத்தை கண்டிப்பா வெளியில சொல்ல முடியாது’ என்று நினைத்தனர்.
“பெருசா ஏதும் காரணம் இல்ல.. சீன் கொஞ்சம் மொக்கையா இருந்த மாதிரி இருந்துச்சு” என்று மாறன் கூற இனியாவோ,
“ஆமா அதே தான் எனக்கும்.. அதுமட்டும்மில்ல நான் யோசிச்ச சீன்ல அறிவோட கேரக்டரான ஜெய்க்கு பெருசா எந்த டயலாகும் இருந்த மாதிரி தெரியல” என்று கூற மாறனும்,
“ஆமா அதுவும் ஒரு காரணம்.. நான் யோசிச்ச சீன்லயும் இனியாவோட கேரக்டரான மேக்னாக்கு ஏதும் பெருசா டயலாக் இருக்குற மாதிரி தெரியல” என்று கூற மற்ற மூவரும் புரியாமல் முழித்தனர். அறிவோ இனியாவிடம்,
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அன்பு.. டயலாக் விட பாடி லேங்குவேஜ் தான முக்கியம்.. எனக்கு ஜெய்யோட பாடி லேங்குவேஜ் நல்ல சூட் ஆகும்” என்று கூற இனியாவோ,
‘அட தத்தி.. உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு நான் என்ன செய்ய’ என்று மனதில் அவனை அர்ச்சித்தவள்,
“அதெல்லாம் இல்ல.. என்னவோ எனக்கு அந்த சீன்ஸ் கம்ஃபோர்ட்டா இல்ல” என்று கூற மதுரனோ,
“விடு டா அறிவு.. அவ தான் வேணாம்னு சொல்றால” என்று கூற இனியாவிற்கு வசதியாகி போனது. மாறனிடம் யாரும் பெரிதாக காரணங்கள் கேட்கவில்லை.
அதற்கு முன் எதனால் இனியாவும் மாறனும் அவரவர் யோசித்த வைத்த காட்சிகளை வேண்டாமென்று சொன்னார்கள் என்று தெரிய வேண்டும் தானே..
நேற்று மதுரனின் அறிவுரைப் படி அனைவரும் அவரவர்கள் முடிவு செய்த காட்சிகளின் முழு படத்தைப் பார்க்கலாம் என்று இனியா “எங்கேயும் எப்போதும்” என்ற திரைப்படத்தையும், மாறன் “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தையும் பார்க்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் ஆர்வமாய் பார்த்தவர்கள் அவரவர்களின் காட்சிகள் வரவும் மிகவும் ரசித்து பார்த்தனர்.
அதாவது ஜெய்யாக அறிவையும் அஞ்சலியாக தன்னையும் கற்பனை செய்தபடியே இனியா அக்காட்சிகளைப் பார்க்க அங்கு மாறனோ சூர்யாவாக தன்னையும் சமீரா ரெட்டியாக இனியாவும் கற்பனை செய்து பார்த்தான். இவ்வாறு அவர்கள் ரசித்து பார்த்துக் கொண்டிருக்க எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய் வாகன விபத்தில் இறந்துவிடும் காட்சியும் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டி தீவிபத்தில் இறந்துவிடும் காட்சியும் வர இருவரின் கண்களும் கலங்கியது. இருவராலும் அதற்குமேல் தொடர்ந்து பார்க்க இயலாமல் அலைபேசியை அணைத்து விட்டனர்.
ரகசியம் – 25
அதன்பிறகு தான் இக்காட்சிகள் வேண்டாம் என்று இருவருமே முடிவு செய்தனர். ஆனால் இனியா ஏன் வேண்டாமென்று சொன்னாள் என்று மாறனும்.. மாறன் ஏன் வேண்டாம் என்று சொன்னான் என்று இனியாவும் ஒரு கணம் யோசித்திருந்தால் பின்னால் வர போகும் சில சிக்கல்களை தடுத்திருக்கலாம். ஆனால் அவர்களிருவரையும் யோசிக்கவிடாமல் செய்தது விதியின் சதியோ..?
“சரி விடுங்க.. இப்போ என்ன மாறன் இனியா சீன்ஸும்.. இனியா அறிவு சீன்ஸும் வேற மாத்தணும் அவ்ளோதான” என்று கேட்க மாறனும் இனியாவும் ஆமென்று தலையை ஆட்டினர்.
“சரி ஓகே.. வேணாம்னு தோணுன அப்புறம் அது எதுக்கு கட்டாயப்படுத்தி நடிச்சுக்கிட்டு.. வேற யோசிங்க அப்போ” என்று மதுரன் கூற அறிவோ,
“அப்போ என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு..” என்று கூற அனைவரும் என்ன என்றபடி பார்த்தனர்.
இனியாவும் மாறனும் அவரவர்களின் காட்சியை மாற்ற வேண்டி கேட்க அறிவோ,
“சரி அப்போ.. என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. அது வொர்கவுட் ஆகுதான்னு பார்க்கலாம்..” என்று கூற ஐவரும் அவனை ஆவலாய் நோக்கினர்.
‘நம்மாளு என்ன யோசிச்சுருப்பான் அப்படி’ என்றபடி இனியா அவனைப் பார்த்துக் கொண்டிருக்க அறிவோ கூற ஆரம்பித்தான்.
“அதாவது காய்ஸ்.. இப்போ மாறனுக்கும் அன்புக்கும் ஒரு சீன்.. எனக்கும் அன்புக்கும் ஒரு சீன்னு எதுக்கு ரெண்டு சீன் எடுக்கணும்.. அதனால டைமும் வேஸ்ட் அன்புக்கும் ரெண்டு வேலை.. நாம ஏதாவது ட்ரையாங்கில் லவ் மூவியா சூஸ் பண்ணி மாறன் அன்பு நான் மூணு பேரும் ஏன் ஓரே சீன்ல நடிக்கக் கூடாது..” என்று கூற அனைவரும் அவனது யோசனையை நினைத்து ஆச்சரியப்பட்டனர்.
“மச்சான் செம டா.. இது கண்டிப்பா வொர்க் ஆகும்.. நமக்கு நேரமும் மிச்சம் ஆகும் நீ சொன்ன மாதிரி” என்று மதுரனும்,
“ஆமா டா அறிவு.. எங்களுக்கு இந்த மாதிரி கொஞ்சம் கூட தோணல டா.. ரெண்டு சீனா யோசிச்சுருந்தா நீ சொன்ன மாதிரி இனியாக்கு தான் ரெண்டு வேலை.. இப்போ அவளுக்கும் ஈஸி” என்று மாறனும்,
“டேய் திருட்டுப்பயலே.. உன்ன தத்தின்னு தான் நெனச்சேன்.. ஆனா உன் மூளை கத்தி மாதிரி ஷார்ப்புன்னு ப்ரூவ் பண்ணிட்ட டா” என்று இனியாவும்,
“பரவாயில்லையே உன் பெயருக்கேத்த மாதிரியே யோசிச்சுருக்க” என்று மதுரிகாவும் பாராட்டினர்.
“அயோ போதும் பா.. புகழாதிங்க.. வெக்கமா இருக்கா இல்லையா” என்று அறிவு அழகாக வெட்கப்பட அதனைக் கண்ட இனியாவின் மனதில்,
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
எனும் வரிகள் ஓட,
‘வெட்கப்பட்டா க்யூட்டா இருக்கடா செல்லக்குட்டி’ என்று மனதினுள் அவளவனைக் கொஞ்சிக் கொண்டாள். மீண்டும் தொடர்ந்த அறிவு,
“எனக்கு இந்த ஐடியா எப்படி வந்துச்சுன்னா.. நேத்து ஒரு செம்ம படம் பார்த்தேன்.. அதைவச்சு தான் தோணுச்சு.. எனக்கு தெரிஞ்சு அந்த படத்தையே நாம நடிச்சா செமயா இருக்கும்..” என்று கூற மாறனோ,
“என்ன படம் டா.. கேட்க ரொம்ப ஆவலா இருக்கு.. நல்லா இருந்து எல்லாருக்கும் ஓகேன்னா அதையே ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.. என்ன காய்ஸ் சொல்றீங்க” என்று கேட்க மற்ற அனைவரும் ஆமோதித்தனர். அறிவோ,
“ஷ்யாம், அருண்விஜய், குட்டி ராதிகா நடிச்ச ‘இயற்கை’. இந்த படம் உங்களுக்கு தெரியுமா என்னன்னு தெரியல.. ‘காதல் வந்தால் சொல்லியனுப்பு’ பாட்டு கூட இந்த படத்துல தான் வரும்” என்று கூற,
“வாவ் செம படம்..” என்று மதுரிகா கூற மற்றவர்களும் அதே தான் கூறினர்.
“எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. அதுவும் க்ளைமேக்ஸ் இருக்கே.. அப்பப்பா எப்படி இருக்கும் தெரியுமா.. மருது (ஷ்யாம்) கேரக்டர் தான் எனக்கு பிடிக்கும்” என்று இனியா ரசித்து கூற மாறனும்,
“ஆமா நானும் பார்த்திருக்கேன்.. கேப்டன் (அருண் விஜய்) திரும்ப நான்சியைத் தேடி ஏன் வந்தாருன்னு கூட நெனச்சுருக்கேன்” என்று கூற மதுரனும்,
“குட் செலெக்ஷன் டா அறிவு.. அப்போ கேப்டன் நான்சி லவ் சீன்ஸ் கொஞ்சம்.. மருது நான்சிகிட்ட லவ் கன்வே பண்ற சீன்ஸ் கொஞ்சம்.. அப்புறம் கிளைமாக்ஸ் டயலாக்ஸ் அண்ட் சீன்ஸ் கொஞ்சம் எடுத்து பண்ணுனா கரெக்ட்டா இருக்கும்” என்று கூற அறிவும்,
“ஆமா டா.. அதே தான் நானும் நெனச்சுருந்தேன்.. அப்போ இதையே ஃபிக்ஸ் பண்ணிக்கலாமா” என்று கேட்க அனைவரும் ஒருசேர,
“டபுள் ஓகே” என்றனர். பின் மதுரிகாவோ,
“படம் ஓகே சீன்ஸ் ஓகே.. நான்சி ரோல் கண்டிப்பா இனியா தான் நடிச்சாகனும்.. பட் மருது ரோல் யாருக்கு..? கேப்டன் ரோல் யாருக்கு..?” என்று கேட்க அப்பொழுது மாறனும் அறிவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள அவர்களிருவரின் இடையில் இனியாவை நிற்க வைத்திருந்தது இயற்கை விதி. மதுரனோ,
“மிஸ் பண்டாரம்.. உனக்கும் அறிவு இருக்குன்னு அப்பப்போ இப்படி கரெக்ட்டான நேரத்துல கரெக்டான கேள்வி கேட்டு ப்ரூவ் பண்ற.. ஐ அப்ரிசியேட் யூ” என்று நக்கலாக கூறி பாராட்ட அவளோ,
“யூ ஷட் அப்.. ஓகே” என்று சிலுப்பிக் கொள்ள மாறனோ,
“பார்ரா.. சச்சின் மூவி ஷாலினியாவே மாறிட்டா” என்று மதுவைக் கலாய்க்க,
“அதான் பாரேன்.. மதுரனும்.. சச்சின் ஷாலினியை அப்பப்போ இரிடேட் பண்ற மாதிரியே மதுவை இரிட்டேட் பண்ணிட்டு இருக்கான்..” என்று அறிவு அவன் பங்குக்கு ஆரம்பித்தான்.
“இதுங்க ரெண்டும் இந்த மைண்ட் செட்லயே காம்பெட்டிஷன் முடியுற வரைக்கும் இருந்துச்சுங்கன்னா இவங்க ரெண்டு பேரையும் தான் கண்டிப்பா செலக்ட் பண்ணுவாங்க போல..” என்று இனியாவும் கூற அவர்கள் கூற்றில் மதுரிகாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அதனை ரசித்த மதுரன்,
“காய்ஸ் எங்களைக் கலாய்ச்சது போதும்.. இப்போ உங்க ரெண்டு பேருக்கும் லாட் போட்டு பார்ப்போம்.. யாரு மருது யாரு கேப்டன்னு இது மூலமா டிசைட் பண்ணிப்போம்.. ” என்று கூற இனியாவோ,
“சூப்பர்.. நான் தான் சீட்டு குலுக்கி போடுவேன்” என்று கூறி காகிதத்தைக் கிழித்து ஒன்றில் மருது என்றும் மற்றொன்றில் கேப்டன் என்றும் எழுதி சீட்டை மடித்தாள். இனியாவின் இடதுபக்கம் அறிவும் வலதுபக்கம் மாறனும் நிற்க இருவரின் இடையில் இனியா நின்று சீட்டினை குலுக்கி கைகளை நீட்ட ஆளுக்கொரு சீட்டு எடுத்தனர் அறிவமுதனும் இளமாறனும். இந்த சீட்டு இவர்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்குமா..?
‘கடவுளே.. கேப்டன் கேரக்டர் அமுதுக்கு வந்தா அந்த படம் மாதிரியே நிஜ வாழ்க்கையிலையும் என்னோட காதல் நிரைவேறும்னு நான் நம்புறேன்.. ப்ளீஸ் நான் நெனச்ச மாதிரியே கொடுத்துருங்க” என்று வேண்டிக்கொள்ள மாறனும் அறிவும் ஒருவரையொருவர் மாறிமாறி, “நீ முதல்ல சொல்லு” என்று போக்குக் காட்டிக் கொண்டிருக்க பொறுமையிழந்த இனியாவோ மாறன் அசந்த நேரம் அவன் கையில் இருந்து சீட்டைப் பிடிங்கிப் பார்க்க அவள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.
மாறன் எடுத்த சீட்டில் மருது என்று எழுதியிருக்க அதனைக் கண்ட இனியா,
‘அப்போ அமுதுக்கு நான் நெனச்ச மாதிரியே கேப்டன் கேரக்டர்.. தேங்க்ஸ் கடவுளே’ என்று மனதினுள் நினைத்து மகிழ அந்த மகிழ்ச்சி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பாக எரிய சீட்டைப் பிரித்ததும் இனியாவின் முகம் மலரக் கண்ட மாறனோ,
‘என்னோட சீட்டைப் பார்த்து இவ்ளோ சந்தோஷம் படுறா.. ‘ என்று நினைத்தவன் வேகமாக அவள் கையில் இருந்து சீட்டினை வாங்கி பார்க்க மாறனின் முகமும் மலர்ந்தது.
‘மருது கேரக்டர் அவளுக்கு பிடிக்கும்னு சொன்னாளே.. ஒருவேளை அவளுக்கு பிடிச்ச கேரக்டர் எனக்கு வந்துருச்சுன்னு தான் இவ்ளோ சந்தொஷம் படுறாளா.. அப்போ அவளுக்கும் என்னைப் பிடிக்குமா’ என்று அவள் நினைத்து மகிழ்ந்த உண்மைக் காரணம் புரியாமல் அவனாகவே ஒரு அர்த்தம் புரிந்துக் கொண்டு மகிழ்ந்தான் மாறன். தன் சீட்டினைப் பிரித்து பார்த்த அறிவோ,
“ச்ச எனக்கு மருது கேரக்டர் வந்தா நல்லா இருக்கும்னு நெனச்சேன்.. சரி பரவாயில்ல கேப்டன் கேரக்டரும் ஓகே தான்” என்று கூற இனியாவோ,
‘எனக்கு எதிரி வேற எங்கயும் வேணாம்.. நீயே போதும்.. ஏன்டா ஒவ்வொரு விஷயத்துலயும் எனக்கு ஆப்போசிட்டா நெனைக்குறதே உனக்கு வேலையா போச்சு.. இரு உன்ன கவனிச்சுக்குறேன்’ என்று மனதில் அர்ச்சித்துக் கொண்டாள் அவளின் அமுதுவை. மாறனோ,
“ஒருவழியா செலெக்ட் பண்ணியாச்சு.. ஆமா நீங்க உங்களுக்கு சச்சின் மூவில எந்த எந்த சீன்ஸ் எல்லாம் நடிக்கணும்னு முடிவு பண்ணிடீங்களா” என்று கேட்க மதுரனோ,
“ஸ்டார்டிங்க்ல சச்சின் ஷாலினியைக் கலாய்க்குற சீன்ஸ் கொஞ்சம்.. அப்புறம் சச்சின் ஷாலினி கிட்ட முப்பது நாள்ல லவ் சொல்ல வைக்குறேன்னு சவால் விடுற சீன்.. அப்புறம் முப்பதாவது நாள் சச்சின் ஷாலினி கிட்ட இவ்ளோ நாள்ல ஒரு செகண்ட் கூட என்மேல உனக்கு லவ் வரலயான்னு கேக்குற சீன்.. அப்புறம் கடைசியா அந்த ஏர்போர்ட் சீன்ஸ்.. இவ்ளோ தான் நான் யோசிச்சு வச்சுருக்கேன்.. ” என்று மதுரன் கூற மதுரிகாவிற்கோ ஒரே ஆச்சர்யம். இவள் எதெல்லாம் யோசித்து வைத்திருந்தாளோ அதையெல்லாம் அப்படியே மதுரன் கூறினான். மாறனோ,
“ஹே மது.. நேத்து உங்கிட்ட நான் கேட்கும் போது நீயும் இதே சீன்ஸ் தான சொன்ன… எப்படி இப்படி சிங்க் ஆகுது உங்களுக்குள்ள” என்று கேட்டவன் மதுவின் காதில்,
“ஹே பிசாசு.. என்னடி வேவ்லெந்த்தா” என்று கலாய்க்க அவளோ,
“சும்மா இரு நாயே..” என்று சிரித்தபடி கூறி திரும்பிக் கொள்ள அங்கு அறிவும்,
“மச்சான்.. இதெல்லாம் கோயின்சிடென்ட் மாதிரி தெரியலடா.. கண்டிப்பா பிளானிங் தான்” என்று கூற மதுரன் காதில் ஓத அவனோ,
“டேய் நான் அவளுக்கு நேத்து ஒரே ஒரு சீன் தான் அனுப்புனேன்.. மத்த எதுமே பேசலாடா.. பிளானிங் எல்லாம் இல்ல” என்று கூற அறிவோ,
“டேய் பிளானிங்னு சொன்னது நீங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணீங்கன்னு சொல்லல.. இது இப்படி தான் நடக்கணும்னு கடவுள் எப்போவோ பிளான் போட்டுட்டாரு” என்று கூற மதுரனோ,
“ஆஹான்.. அப்போ அதே பிளானிங்ல தான் உனக்கு கேப்டன் கேரக்டர் வந்துருக்கு போல” என்று பதிலுக்கு கலாய்க்க அறிவோ,
“டேய் மச்சான்.. மறுபடியும் சொல்றேன்.. எனக்கு அன்ப பிடிக்கும் தான்.. ஆனா வேற எந்த எண்ணமும் இல்ல டா.. நீயே இப்படி கலாய்ச்சு கலாய்ச்சு ஏதாச்சும் கிளப்பிவிடாத” என்று கூற அதற்குமேல் மதுரன் ஏதும் கூறவில்லை.
