
ரகசியம் – 17
மறுநாள் பொழுது உற்சாகமாக விடிய கல்லூரிக்கு மாணவர்கள் மிகவும் உற்சாகமாக வந்தனர். சாதாரணமான கல்லூரியாக இருந்திருந்தால் இந்த அளவிற்கு உற்சாகம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. மாணவர்கள் அனைவரும் அவரது விருப்பமான இந்த துறையில் அதுவும் சுவாரசியமான போட்டியைப் பற்றி அறிவித்த பின்பு உற்சாகம் குறையுமா என்ன.. அனைத்து குழுக்களும் அவரவர் குழு நண்பர்களுடன் காரசாரமாக ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.
நம் பாண்டவாஸ் அணியைப் பற்றி கூறவா வேண்டும்.. ஐவரும் தாங்கள் தேர்ந்தெடுத்த காட்சிகளைக் கூறவும் மற்றவர்கள் தேர்ந்தெடுத்த காட்சியைத் தெரிந்துகொள்ளவும் மிகவும் ஆவலாக இருந்தனர். இனியாவின் கண்கள் எப்போது அவளின் அமுதுவைக் காணலாம் என்று நேற்றிலிருந்து ஆவலாய் இருக்க வந்ததும் அவனது தரிசனத்தை தான் கண்டாள்.
அப்பொழுது வகுப்புக்குள் நுழைந்த வேம்பு மாணவர்களை இன்னும் உற்சாகம் படுத்தும்படியாக ஒரு விஷயத்தைக் கூறினார்.
“குட் மார்னிங் காய்ஸ்.. உங்க எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ் சொல்ல வந்துருக்கேன்.. அதாவது நேத்து உங்களுக்கு சொன்ன போட்டிக்கு நீங்க உங்கள தயார் படுத்திக்கிறதுக்காக போட்டி முடியுற வர நோ தியரி க்ளாஸஸ்..” என்று கூற மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
“லிசென் காய்ஸ்.. ஆனா ஒரு மாசம் உங்கள ஃபிரீயா விடுறோம்.. அதனால் போட்டியோட செலக்ஷன் ப்ராசஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா தான் இருக்கும்.. யாரும் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. காலேஜ் கேம்பஸ்க்குள்ள நீங்க எங்க வேணாலும் போய் பிராக்டீஸ் பண்ணிக்கலாம்.. இல்ல காலேஜ் என்விரான்மெண்ட் எங்களுக்கு சூட் ஆகல வெளிய நாங்க போய் பிராக்டீஸ் பண்றோம்னு நீங்க நெனச்சா.. ஆபீஸ் ரூம்ல சொல்லிட்டு பெர்மிஷன் வாங்கிட்டு போகலாம்.. மொத்தத்துல உங்க விடியோஸ்ல உங்க ஆக்டிங் பக்காவா இருக்கணும்.. எங்கயும் தப்பு நடக்காத மாதிரி பார்த்துக்கோங்க.. யாருக்காச்சு ஏதாச்சும் சஜஷன் வேணும்னா என்கிட்ட தாராளமா கேட்கலாம்.. ஓகேவா.. என்ஜாய் காய்ஸ்.. சீ யு லேட்டர்” என்றவர் வெளியில் சென்றுவிட மாணவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மதுரனோ,
“சரி ஓகே வாங்க.. நாம டிஸ்கஸ் பண்ணலாம்” என்று அழைக்க இனியாவோ,
“இங்கேயா” என்று கேட்க,
“பின்ன வேறெங்க” என்று கேட்டான் மதுரன்.
“அதான் எங்கனாலும் போலாம்னு சொல்லிட்டாங்களே.. நாம ஏன் கேன்டீன் போய்ட்டு ஆளுக்கு ஒரு பப்ஸ் சாப்பிட்டுட்டு மங்களகரமா நம்ம டிஸ்கஷன ஸ்டார்ட் பண்ணக்கூடாது” என்று இனியா கேட்க மதுரிகாவோ,
“இட்ஸ் சௌண்ட்ஸ் குட் இனியா” என்று கூற ஆடவர்கள் மூவரும் பெண்கள் இருவரையும் முறைத்தனர். மாறனோ,
“எப்போ பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடு சாப்பாடு” என்று தலையிலடிக்க மதுவோ,
“அப்போ எனக்கு பசிக்கும்ல சாப்பிடனும்ல” என்று பாவமாக முகத்தை வைத்துக்கூற அதில் மதுரனுக்கு சிரிப்பு வந்தது.
“சரி வாங்க போவோம்” என்று கூற பிறகு அனைவரும் கேன்டீனில் ஆஜராகினர். வந்ததும் சாப்பிட வேண்டியதை சாப்பிட்டு முடிக்க,
“சரி இப்போவாச்சு டிஸ்கஷன ஸ்டார்ட் பண்ணலாமா” என்று அறிவு கேட்க மதுரனோ,
“சரி முதல்ல யார் சொல்லுறாங்க.. மிஸ் பண்டாரம்.. நீ ஸ்டார்ட் பண்ணு” என்று கூற அவளோ,
“ஹெலோ என்ன நீ.. எப்போ பார்த்தாலும் மத்தவங்களயே ஆரம்பிக்க சொல்ற.. நீ ஆரம்பிச்சா குறைஞ்சு போயிருவியாக்கும்..” என்று அவன் யோசனையைக் கேட்கும் ஆர்வத்தில் வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க அவனோ,
“பார்ரா.. இவ்ளோ வாய் கிழிய பேசுறல அப்போ அன்னைக்கு க்ரூப் நேம் செலெக்ட் பண்ணும்போது அம்மையார் எதுக்கு கடைசி தான் சொல்லுவேன்னு அடம்பிடிச்சீங்க..” என்று அவளை வாரிவிட,
‘அயோ பயபுள்ள பாயிண்ட்டா பேசுதே.. அவசரப்பட்டு வாயை விட்டோமோ’ என்று நினைத்தவள்,
“அது.. அது..” என்று கூற காரணமில்லாமல் முழிக்க அறிவோ,
“சரிடா.. இப்போ நீ சொல்ல வேண்டியது தான இதுல என்ன இருக்கு.. அவளே பாவம்” என்று கூற மதுரனோ,
“நீ என்ன அவளுக்கு சப்போர்ட்டா.. சாதாரணமா மதுரன் முதல்ல நீ சொல்லுன்னு சொல்லிருந்தா தாராளமா சொல்லிருப்பேன்.. அதென்ன குறைஞ்சு போயிருவியான்னு கேட்குறா.. இப்போ சொல்றேன்.. இந்த பண்டாரம் அவளோட ஐடியாவை முதல்ல சொல்லட்டும்.. அவ சொன்னதும் நான் சொல்லிடுறேன்.. அவ திமிரா பேசுனதுக்கு இதான் அவளுக்கு பனிஷ்மென்ட்” என்று வேண்டுமென்றே அவளை கோபப்படுத்தி பார்க்கும் ஆசையிலும் அவளது யோசனையைக் கேட்கும் ஆவலிலும் கூற அவளோ,
“டேய் போர்க்யூபைன் மண்ட.. யாரைப் பார்த்து திமிரா பேசுறன்னு சொல்ற.. அதெல்லாம் முடியாது நீ தான் முதல்ல சொல்லணும்..” என்று முறைத்தபடி கூற அவனும்,
“நீ சொல்லு டி முதல்ல” என்று கூற மதுவுக்கோ நிஜமாகவே கோபம் வந்தது.
“நான் போறேன் போங்க” என்று மது எழுந்து செல்லப் போக அவளின் கைப்பிடித்து அமரவைத்த மாறன்,
“என்ன நீங்க எப்போ பார்த்தாலும் முட்டிகிட்டு இருக்கீங்க.. மிடில்ல கொஞ்ச நாள் நல்லா தான இருந்தீங்க..” என்று சலித்தபடி கூற இவர்கள் சலசலப்பில் கடுப்பான இனியா,
‘ச்சீ மனுஷங்களா இதுங்க.. நிம்மதியா நம்மாள சைட் அடிக்க விட மாட்டுதுங்க’ என்று மனதினுள் புலம்பியவள்,
“அடச்சீ நிறுத்துங்க பக்கிங்களா.. எல்கேஜி பசங்க கூட இந்த மாதிரி சண்டை போடாதுங்க.. இப்போ என்ன உங்க ரெண்டு பேருல யார் முதல்ல சொல்றதுங்குறது தான பிரச்சனை.. நான் ஒன் டூ த்ரீ எண்ணுவேன்.. ரெண்டு பெரும் அட் அ டைம்ல நீங்க எந்த மூவி சீன யோசிச்சு வச்சுருக்கீங்களோ அந்த மூவியோட நேம சொல்லணும் ஓகே” என்று கூற வேறு வழியின்றி கூற ஆயத்தமாயினர். மதுரிகா மதுரனை முறைத்தபடி பார்க்க அவளின் முறைப்பை ரசித்தபடி பார்த்தான் மதுரன். இனியா,
“ரெடி.. ஸ்டார்ட்.. ஒன் டூ த்ரீ” என்று கூறி முடிக்க மதுரன் மற்றும் மதுரிகாவின் உதடுகள் ஒரே போன்று,
“சச்சின்” என்ற படப்பெயரை உதிர்க்க அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல சுற்றி இருந்த மத்த மூவருக்கும் ஆச்சர்யமே..
“ஹே எப்புர்ரா..” என்ற வாக்கியம் அனைவரின் மூளைக்குள்ளும் ஓட அறிவோ,
“என்ன மச்சான் வேவ்லெந்த் வொர்கவுட் ஆகுது போல” என்று மதுரனின் காதைக் கடிக்க,
“மச்சான் சாத்தியமா எதிர்பாக்கல டா” என்று மது கூற அறிவோ,
“நீ நடத்து நடத்து..” என்று கலாய்த்தான். மாறனோ,
“எப்படி டா ரெண்டு பெரும் ஒரே மாதிரி யோசிச்சீங்க” என்று ஆச்சர்யமாய் கேட்க இனியாவோ,
“அதானே.. நம்ம தமிழ் படங்கள் எவ்ளோவோ இருக்கு.. ஆனா ஒரே மாதிரி இந்த பக்கிங்க எப்படி யோசிச்சுதுங்க” என்று கேட்க,
“நேத்து டிவில இந்த படம் பார்த்தேன்” என்று மறுபடியும் ஒன்றாக கூற சற்றுமுன் இருந்த முறைப்புகள் சண்டைகள் எல்லாம் காற்றில் பறந்து இருவரது உதட்டிலும் புன்னகை அரும்பியது. அப்பொழுது அறிவோ,
“டிவில படம் பார்த்தீங்க சரி.. ஆனா என்ன ரீசன்காக இந்த படம் சூஸ் பண்ணீங்க” என்று கேட்க மதுரிகாவோ,
“இல்ல ஆரம்பத்துல இருந்தே எங்க ரெண்டு பேருக்குள்ளையும் முட்டிக்கிது” என்று மது கூற,
“சோ இந்த மூவிய ஆக்ட் பண்ணா ஈஸியா எமோஷன்ஸ் டெலிவரி பண்ணலாம்னு தோணுச்சு” என்று மதுவின் கூற்றை மதுரன் முடித்து வைத்தான். மீணடும் இருவரும் சிரித்துக் கொண்டனர். அப்பொழுது மாறனோ,
“இனியா.. கொஞ்ச நேரம் முன்னாடி ரெண்டு பேர் சண்டை போட்டுட்டு இருந்தாங்களே.. அவங்கள நீ பார்த்த..” என்று கிண்டலாக கேட்க அவளோ,
“நானும் அதுங்கள தான் டா தேடுறேன்..” என்றவள் அறிவிடம்,
“டேய் திருட்டுப்பயலே.. நீ பார்த்தியா” என்று கேட்க அவனோ,
“அதுங்க இப்போ மாறிமாறி சிரிச்சுட்டு இருக்குதுங்க அன்பு” என்று கூற மதுரிகாவிற்கு ஏனோ வெட்கம் வந்து தலைகுனிந்து கொண்டாள். மதுரனோ,
“டேய் டேய் போதும் நிறுத்துங்கடா.. சரி உங்க சீன்ஸ் எல்லாம் சொல்லுங்க” என்று கேட்டவன் அறிவிடம்,
“டேய் நீ சொல்லு” என்று கூற அவனோ,
“இல்ல மச்சி.. நேத்துல இருந்து நான் பார்ட் டைம் ஒர்க் போயிட்டு இருக்கேன்ல.. அதனால் அன்புவை தான் யோசிக்க சொன்னேன்.. அவ என்ன சீன் சொல்றாளோ எனக்கு ஓகே தான்” என்று கூற மாறனோ,
“அப்போ நீ சொல்லு டி” என்றான் இனியாவிடம். அவள் அறிவின் மேல் பார்வையைப் பதித்தபடியே,
“எங்கேயும் எப்போதும் மூவில ஜெய் அண்ட் அஞ்சலி வர சீன்ஸ் யோசிச்சுருக்கேன்” என்று கூற மதுரனோ,
“ஹே சூப்பர் இனியா.. ஜெய் கேரக்டர் அறிவுக்கு ரொம்பவே சூட் ஆகும்” என்று கூற மதுரிகாவோ,
“ஹே ஆமாடி.. அஞ்சலி கேரக்டரும் நல்ல போல்ட் அண்ட் ரக்கட் கேரக்டர்.. உனக்கு அது நல்ல சூட் ஆகும்” என்று கூற மாறனோ,
“பெண் தானே.. சாஃப்டா இருப்பான்னு நினைக்காதீங்க.. இனியா கொஞ்சம் ரக்கட் ஆன ஆளு” என்று குரலை மாற்றி கூறி அவளைக் கலாய்க்க அவன் அருகில் அமர்ந்திருந்த இனியாவிற்கு அவன் தலையில் கொட்டுவது சுலபமாக இருந்தது. ஆனால் அறிவோ எதுவும் சொல்லாமல் இருக்க,
“என்னாச்சு டா.. உனக்கு இந்த சீன்ஸ் பிடிக்கலையா” என்று கேட்க அவனோ,
“பிடிக்கலையாவா.. நீ வேற.. எப்படி நீ இவ்ளோ அறிவாளியா யோசிச்சன்னு தான் திங்க் பண்ணிட்டு இருக்கேன் அன்பு..” என்று கூற இனியாவோ,
“உன்னையே நெனச்சுட்டு இருக்கேன்ல.. அதான் உன் பேருல இருக்குற அறிவு எனக்கு வந்துருச்சு போல” என்று அவனைக் கலாய்க்குறேன் என்ற பேர்வழி இவள் மனதில் இருந்த வார்த்தைகளை உளறிவிட அதனைக் கவனித்த மதுரிகா,
“ஹே இப்போ நீ என்ன சொன்ன அவனையே நெனச்சுட்டு இருக்கியா” என்று கேட்க சட்டென தூக்கிவாரி போட்டது இனியாவிற்கு. அறிவும் அதே கேள்வியோடு தான் அவளை நோக்கினான்.
‘கடவுளே நம்ம வாய்க்கு கண்ட்ரோலே வர மாட்டிக்குதே’ என்று தன்னைத்தானே நொந்தவள் பிறகு,
“இல்ல.. நேத்து எந்த சீன் எங்களுக்கு சூட் ஆகும்னு அவனை நெனச்சுட்டே யோசிச்சேன்ல அதை சொன்னேன்” என்று கூற ஏனோ மாறனுக்கு இனியாவின் பேச்சு லேசாக கடுப்பைக் கிளப்பியது.
“டேய் மாறா.. நீ சொல்லு இப்போ.. நேத்துல இருந்து கேட்டுட்டு இருக்கேன்.. இப்போ சொல்லு” என்று கேட்க அவனோ,
“வாரணம் ஆயிரம் மூவில சூர்யா மேக்னா ரெண்டு பேரும் வர சீன்ஸ்” என்றான். இனியாவோ,
“பரவாயில்லையேடா.. உன் டேஸ்ட் கூட நல்லா தான் இருக்கு..” என்று கூற அதற்கேதும் பதில் கூறாதவன்,
“நான் ரெஸ்ட்ரூம் போயிடு வரேன்” என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டான். மாறனின் செய்கை மதுரிகாவிற்கு வித்தியாசமாக தோன்றியது.
ரகசியம் – 18
செல்லும் அவனையே யோசனையாக மது பார்க்க மதுரனோ,
“என்ன பண்டாரம்.. ஏதோ யோசனையா இருக்க..” என்று கேட்க அவளோ,
“அதெல்லாம் ஒன்னும்மில்ல.. சரி சச்சின்ல எந்த எந்த சீன்ஸ் எல்லாம் யோசிச்சு வச்சுருக்க” என்று கூற அவ்வாறே சில நேரம் அவர்களுக்குள் ஆலோசனை ஓட அறிவும் அன்பும் ஒருபுறம் ஆலோசனை செய்து கொண்டிருக்க வெளியில் சென்று திரும்பி வந்த மாறன் அக்காட்சியைக் கண்டு ஏதோ தனிமையாக உணர்ந்தான். மீண்டும் வந்து அவர்களோடு அமர மனமில்லாமல் செல்ல போக அவனைக் கவனித்த மதுரிகா எழுந்து சென்று,
“டேய் மறுபடியும் எங்க போற.. ஏன் ஒருமாதிரி இருக்க.. நாம வீட்டுக்கு போகும் போது பேசுவோம்.. அப்போ என்னன்னு சொல்லு.. இப்போ ஒழுங்கா வந்து உக்காரு வா” என்று கைப்பிடித்து அழைத்து செல்ல அவளை நினைத்து பெருமைப்பட்டான் மாறன்.
“என்னை மத்த யாருமே கவனிக்கல.. நீ மட்டும் எப்படி டி கவனிச்ச” என்று கேட்க மதுவோ,
“டேய் நீ என் மாறன் டா.. மதுவுக்கு மாறன் மேல இல்லாத அக்கறையா.. உன்னோட சின்ன சின்ன பிகேவியர் கூட என்னால புரிஞ்சுக்க முடியும்..” என்று கூற அவனோ,
‘இப்படி ஒருத்தி என்மேல அக்கறைப்படும் போது நான் ஏன் வருத்தப்படணும்’ என்று நினைத்தவன் சிரித்தபடி அவளோடு சென்று அமர்ந்தான்.
பிறகு ஐவரும் மீண்டும் ஆலோசனையில் இறங்க அவர்களது ஆலோசனைகளை கேட்டுக்கொண்டிருந்த வேறு இரு செவிகள் அவர்களை வன்மமாய் நோக்கியபடி கேன்டீனை விட்டு வெளியில் சென்றது.
வகுப்பு வாசலில் நின்று மாதவ் மற்றும் கிருஷ்ணா அலைபேசியில் விளையாடி கொண்டிருக்க அங்கு வந்த ரீனா,
“டேய்.. நீங்க இங்க நல்ல உக்காந்து மொபைல்ல கேம் விளையாடிட்டு இருங்க.. அங்க அந்த பாண்டவாஸ் க்ரூப் காம்பெட்டிஷனுக்காக தீவிரமா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க..” என்று கூற மாதவோ,
“ஹே ரீனா.. எதுக்கு இவ்ளோ டென்சன்.. அவனுங்களுக்கு ஆல்ரெடி நான் பிளான் போட்டுட்டேன்.. டோன்ட் வொரி” என்று கூற அவளோ,
“சரி டா.. அவங்களுக்கு பிளான் போட்டுட்டு நம்ம விஷயத்தைக் கோட்டை விட்டுறாத.. அவங்கள தோற்கடிக்கணும்னு பிளான் போட்டா மட்டும் போதாது.. நம்ம ஜெயிக்குறதுக்கு ஹார்ட் வோர்க்கும் போடணும்” என்று கூற கிருஷ்ணாவோ,
“இப்போ என்ன.. நாமளும் டிஸ்கஸ் பண்ணனும் அவ்ளோ தான.. நீ போயிட்டு கீர்த்தனாவையும் ஸ்டெஃப்பியையும் கூட்டிட்டு வா.. நாம பிளான் போடுவோம்” என்றிட அவளும் சென்று அழைத்து வர அவர்களின் ஆலோசனை ஆரம்பமானது. அப்பொழுது ரீனாவோ,
“காய்ஸ் அந்த பாண்டவாஸ் க்ரூப் என்ன சீன்ஸ் நடிக்க போறாங்கன்னு எனக்கு தெரியும்.. அவங்கள தோற்கடிக்க இது எதுவும் யூஸ் ஆகுமா” என்று கேட்க கீர்த்தனாவோ,
“ஹே அவங்க சீன்ஸ் நமக்கு எதுக்கு டி.. நாம நமக்கான வேலைய மட்டும் பாப்போம்.. ஆக்சுவலி அவங்க என்ன செஞ்சாங்க.. நம்ம ரெண்டு க்ரூப்பும் ஒரே நேம் சூஸ் பண்ணோம்.. அப்போகூட நமக்கு விட்டு கொடுத்து அவங்க தான நேம் மாத்திக்கிட்டாங்க..” என்று கூற மாதவோ,
“என்ன கீர்த்து.. காத்து அந்த க்ரூப் பக்கம் பலமா வீசுது போல..” என்று நக்கலாக கேட்க,
“ஹே அப்படி இல்ல டா.. எதுக்கு வீணா வம்புன்னு தான் கேட்குறேன்” என்று கூற கிருஷ்ணாவோ,
“என்ன பேசுற நீ.. அவங்க நம்மள எப்படி எல்லாம் பேசுனாங்க.. அந்த மதுரன் நம்மள நாய்னு சொல்றான்.. அதுக்காகவாச்சு அவனுங்கள ஏதாச்சும் பண்ணனும்” என்று கூற ஸ்டெப்பியோ,
“எனக்கென்னமோ அவன் அந்த அர்த்தத்துல சொன்ன மாதிரி தெரியல.. நாம தான் அவங்கள பார்த்து காப்பி அடிச்சீங்கன்னு சொல்லிருக்கோம்.. கீர்த்து சொன்ன மாதிரி இதை இதோட விடுறது தான் பெட்டர்” என்று கூற ரீனா,
“ஹே என்னங்கடி.. நீங்க ரெண்டு பேரும் நம்ம க்ரூப்பா இல்ல அவங்க க்ரூப்பா.. ரொம்ப தான் சப்போர்ட் பண்றீங்க.. உங்களுக்கு பயமா இருந்தா நீங்க இந்த விஷயத்துல தலையிடாம இருங்க..” என்று கடுப்பாக கூற மாதவோ,
“ரீனா ரிலாக்ஸ்.. அவங்க ரெண்டு பேரும் அவங்க பாயிண்ட் ஆப் வியூவ சொல்ராங்க.. விடு.. நாம அப்புறமா அந்த க்ரூப்ப கவனிச்சுக்கலாம்.. இப்போ நம்ம டிஸ்கஸ் பண்ணலாம்” என்க அங்கு ஒரு ஆலோசனை அரங்கேறியது.
அடுத்த இரண்டு நாட்கள் சனி ஞாயிறு என்பதால் இனி திங்கள் தான் கல்லூரியில் அனைவரும் சந்திப்பர். அதனால் மதுரனோ,
“ஓகே காய்ஸ்.. ரெண்டு நாள் லீவ்ல அவங்க அவங்க யோசிச்சு வச்ச சீன்ஸ 15 நிமிஷம் வர மாதிரி ரெடி பண்ணி முடிஞ்சா பிராக்டீஸ் பண்ணிட்டு வாங்க” என்று கூற இனியாவோ,
“ஓ பண்ணிடலாமே..” என்றவள் அறிவைப் பார்த்தபடியே,
“ஆனா ஜோடியில்லாம எப்படி பண்றது” என்று கேட்க மதுரிகாவோ,
“உன் டயலாக்ஸ் மட்டும் நீ ப்ராக்டீஸ் பண்ணு.. இதுக்கு எதுக்கு ஜோடி” என்று கேட்க அறிவோ,
“அதானே.. மது சொல்றது சரி தான்.. தனி தனியா பிராக்டீஸ் பண்றது அவ்ளோ ஒன்னும் கஷ்டம் இல்லையே” என்று கூற அவனை மனதினுள்,
‘சரியான தத்தி.. இதை வச்சுட்டு நான் என்ன செய்ய போறேனோ’ என்று புலம்பினாள். அப்பொழுது மாறனோ,
“ஏன் இனியா.. நம்ம சீன்ஸும் நீ பிராக்டீஸ் பண்ணனும்.. நியாபகம் இருக்கும் தானே” என்று சலித்தபடி கேட்க,
‘இவன் இப்படி எல்லாம் பேசுற ஆள் இல்லையே.. என்னாச்சு இவனுக்கு’ என்றபடி மதுரிகா யோசிக்க இனியாவோ,
“என்ன டா நீ.. அதெல்லாம் மறப்பேனா.. பக்காவா பண்ணிடலாம்..” என்று சிநேகமாய் அவனின் தோளில் கைப்போட்டு கூற சிரித்தபடி சரியென்றான் மாறன். ஆனால் மனதினுள்,
‘நிஜமாவே நாம மாறன் கூட நடிக்குறதையே மறந்துட்டோம் நேத்து.. எங்க ரெண்டு பேரு சீன்ஸ் பத்தி நான் யோசிக்கவே இல்லையே’ என்று இனியா நினைக்க அவளின் மனசாட்சியோ,
‘உங்க சீன்ஸ் யோசிக்க மாறன் இருக்கான்.. ஆனா அமுது வேலைக்கு போகுறனால உனக்கும் அமுதுக்கும் நீ தான் யோசிச்சு ஆகணும்.. அதனால தான் நீ மாறனுக்காக யோசிக்கல’ என்று சாக்கு கூற,
‘ஆமால.. அப்போ சரி’ என்றவள் அமுதுவின் நினைவுகள் மாறனைப் பற்றி நினைக்க விடவில்லை என்று அறியாமல் தெளிவடைந்ததாக நினைத்துக்கொண்டாள்.
கல்லூரி முடிந்ததாக மணியடிக்க அனைவரும் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர். செல்லும் வழியில் மதுரிகாவோ,
“டேய் டேய் மாறா.. வண்டியை நிறுத்து டா” என்று கூற வண்டியை நிறுத்தியவன்,
“என்னடி ஆச்சு..” என்று கேட்க,
“வா ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்” என்று கூற,
“அடிப்பாவி.. கொஞ்ச நேரம் முன்னாடி தான டி பப்ஸ முழுங்கிட்டு வந்த.. அதுக்குள்ள ஐஸா” என்று கேட்க,
“கண்ணுவைக்காத நாயே.. இப்போ நீ வர போறியா இல்லையா” என்று கேட்க,
“வரேன்.. வந்து தொலையுறேன்..” என்றவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஐஸ்க்ரீம் கடைக்குள் சென்றான் மதுவை அழைத்துக்கொண்டு. உள்ளே சென்று வெயிட்டரிடம்,
“அண்ணா.. எனக்கு ஒரு வெண்ணிலா.. இவனுக்கு பட்டர்ஸ்காட்ச்” என்று கூற சிறிது நேரத்தில் கொண்டுவரப்பட்டது. ஒரு கரண்டி எடுத்து வாயில் வைத்தவள் அதனை ரசித்தபடியே சுவைத்தாள். அவளின் செயலைப் பார்த்த மாறன்,
‘இவ திருந்த மாட்டா’ என்று நினைத்து சிரித்தபடி தானும் உண்ண ஆரம்பித்தான். அப்பொழுது மது,
“சரி சொல்லு டா.. என்ன பிரச்சனை உனக்கு” என்று கேட்க மாறனுக்கு புரை ஏறியது.
“என்ன டி சொல்லணும்” என்று கேட்க,
“டேய் கேவலமா நடிக்காத.. அப்போ சொன்னது தான் இப்போவும் சொல்றேன்.. உன்னோட சின்ன முக மாறுதலைக் கூட என்னால கண்டுபிடிக்க முடியும்.. சோ ஒண்ணுமில்லன்னு ப்ளேடு போடாம நேரா விஷயத்துக்கு வா” என்று கூற அவனோ,
“இனியா மேல தான் கொஞ்சம் கோவம்.. அது கோவமா வருத்தமா இல்ல வேற எதுவுமான்னு தெரில” என்று கூற மதுவோ,
“டேய் மாங்கா.. இனியாவால தான் நீ இப்படி இருக்கன்னு நீ அங்க பேசுனதை வச்சே தெரிஞ்சுது.. எதனாலன்னு தான் கேட்குறேன்..” என்று கூற அவனோ,
“அது.. அது வந்து அவ அறிவுக்காக மட்டும் ரொம்ப யோசிக்குரான்னு ஒரு ஃபீல்” என்று கூற ஏற்கனவே இதை எதிர்பார்த்தவளாய்,
‘அப்போ நாம நெனச்சது சரி தான் போல’ என்று நினைத்தவள்,
“ஓ அப்போ அறிவு தான் உனக்கு பிரச்சனை அப்படி தான..” என்று கேட்க அவனோ,
“ஹே லூசு.. அவ அவனுக்காக யோசிச்சது எனக்கு பிரச்சனை இல்ல.. எனக்காக கொஞ்சம் கூட யோசிக்காம அவனுக்கு மட்டும் யோசிச்சது தான் எனக்கு பிரச்சனை.. அறிவு மேல எனக்கு எந்த கோபமும் இல்ல” என்று கூற மதுவுக்கோ குழப்பமாக இருந்தது.
‘ஒருவேளை இனியா மேல இவனுக்கு ஏதும் பீலிங்ஸ் இருக்குமோ… ஆனா இனியாக்கு அறிவு மேல கொஞ்சம் பீலிங்ஸ் இருக்குற மாதிரி தான் தோணுது.. ஆஹா ட்ரையாங்கில் ஃபீலிங்சா இருக்குதே.. ஆனா நாம இப்போ இதைப் பத்தி இவன்கிட்ட கேட்க வேண்டாம்.. ஒருவேளை இவனுக்கு அந்த மாதிரி ஏதும் இல்லனா நாமளே அந்த மாதிரி தாட்ஸ் கிரியேட் பண்ணிவிட்ட மாதிரி ஆயிடும்’ என்று நினைத்துக் கொண்டிருக்க மாறனோ,
“அடியே.. என்ன டி ரொம்ப ஏதோ யோசிக்கிற.. என்னாச்சு” என்று கேட்க ஒன்றுமில்லை என்றுவிட்டாள். மீண்டும் மாறனே,
“என் கதை இருக்கட்டும்.. உன் ரூட்டு வேற எங்கேயோ போகுற மாதிரி இருக்கே.. என்ன விஷயம்” என்று கேட்க அவளோ,
“என்ன டா கேக்குற புரியுற மாதிரி கேளு” என்று கேட்க அவனோ,
“உனக்கு புரியல இதை நான் நம்பணுமாக்கும்.. சரி விடு தெளிவாவே கேட்குறேன்.. மதுரனுக்கும் உனக்கும் நடுவுல ஏதோ ஓடுது போல” என்று கேட்க இப்பொழுது புரியேறுவது மதுவின் முறையாயிற்று.
“என்ன டா உளறுற.. நீ நெனைக்குற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்ல.. ” என்று கூற அவனோ,
“ஐ.. இந்த நடிப்பெல்லாம் என்கிட்டே வேண்டாம்.. உங்க சிம்ப்டமஸ் எல்லாம் அப்படி தான் சொல்லுது” என்று கேட்க அவளோ,
“அப்படி என்ன சிம்ப்டம்ஸ கண்டுபிடிச்ச” என்று கேட்டாள்.
ரகசியம் – 19
“பாயிண்ட் நம்பர் ஒன் – உங்களோட முதல் சந்திப்பே மோதல்ல ஆரம்பிச்சிருக்கு.. சோ எதுல முடியும்னு உனக்கே தெரியும்..
பாயிண்ட் நம்பர் டூ – அவன் எப்போதுமே உன்ன தான் பார்குறான்.. நீ என்ன சொன்னாலும் சிரிக்குறான்.. தப்பான அர்த்தத்துல சொல்லல.. பட் பார்குறான்..
பாயிண்ட் நம்பர் த்ரீ – தெரியாம அவன் உன்ன இழுத்ததுக்கு அவனை அன்னைக்கு அப்படி திட்டுனவ.. இப்போ அவன் பார்க்குறது உனக்கும் தெரியும்.. ஆனா நீ அவனைத் திட்டாம உன் பார்வையை வேற பக்கம் திருப்ப முயற்சிக்குற..
பாயிண்ட் நம்பர் ஃபோர் – ரெண்டு பெரும் ஒரே மாதிரி இன்னைக்கு யோசிச்சுருக்கீங்க..” என்று கூறிக் கொண்டிருந்தவனைப் பாதியிலேயே தடுத்தவள்,
“டேய் டேய்.. சேம் போல்ஸ் ரிப்பெல் ஈச் அதர் டா (same poles repel each other) .. இந்த கான்செப்ட் உனக்கு தெரியாதா” என்று கேட்க அவனோ,
“அதெல்லாம் பழைய தியரி.. லேட்டஸ்ட் தியரி என்ன தெரியுமா.. இஃப் டூ சோர்சஸ் ஹேவ் தி சேம் வேவ்லெந்த், தே ஆர் செட் டு பீ கொஹிரென்ட் (If two sources have the same wavelength, they are said to be coherent.). கொஹிரென்ட்னா என்ன தெரியுமா கம்பேட்டபிலிட்டி (compatibility) அதாவது பொருத்தமா இருக்குறது” என்று கூற அவளோ,
“டேய் இங்க என்ன ஃபிசிக்ஸ் க்ளாஸா நடக்குது.. மாறி மாறி தியரி சொல்லிட்டு இருக்க.. இந்த தியரி எல்லாம்.. தியரட்டிக்கலா மட்டும் தான் யூஸ் ஆகும்.. ப்ராக்டிகள்ல சரி வராது.. என் நிலைமை தெரிஞ்சும் நீ பேசுற பாத்தியா.. ஏற்கனவே யோசிச்சுட்டு இருக்குற ஒருத்தனைக் கண்டுபிடிக்க முடியாம போராடிட்டு இருக்கேன்.. இதுல இன்னோருத்தன் வேறயா” என்று கேட்க மாறனோ,
“அங்க தான் எனக்கு டவுட்டு.. எப்போதுமே அவனைப் பத்தி புலம்பிட்டு இருந்தவ.. காலேஜ் வந்த ரெண்டு மூணு நாள் மட்டும் தான் அவனைப் பத்தி புலம்புன.. எப்போ நீயும் மாறனும் சமாதானம் ஆகி சகஜமா பேச ஆரம்பிச்சீங்களோ.. அப்போல இருந்து நீ அந்த ஒருத்தன பத்தி என்கிட்ட புலம்பவே இல்ல.. உனக்கு தெரியுதா” என்று கேட்க மது அவனது கூற்றில் அதிர்ந்தாள்.
‘ஆமா.. இவன் சொல்றதும் சரி தான்.. நான் எப்படி இப்போ கொஞ்ச நாளா அதைப் பத்தி மறந்தேன்’ என்று யோசிக்க மீண்டும் மாறனே தொடர்ந்தான்.
“இது மட்டுமில்ல மது.. அம்மாவை ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் பண்ணிருந்தப்போ மதுரனுக்கு கால் பண்ணி சொல்லிடுன்னு உங்கிட்ட சொல்லிட்டு போனேன்ல அப்போ கரெக்ட்டா நீ பேசி முடிச்சுட்டு கால் கட் பண்ணும்போது நான் வந்தேன் ரூம்குள்ள.. நீ மொபைல்ல அவனை சேவ் பண்ண நேம பார்த்து சிரிச்சுட்டு இருந்த.. இந்த மாதிரி ரெண்டு மூணு இடத்துல உன்னோட பிஹேவியர்ல என்னால் சேஞ்சஸ ஃபீல் பண்ண முடிஞ்சுது.. உன்னால் மட்டும் தான் என்னோட முக மாறுதல கண்டுபிடிக்க முடியுமா.. இத்தனை வருஷம் உன்கூட இருக்கேன்… என்னாலயும் முடியும்” என்று கூறி முடிக்க மதுவுக்கு மாறனை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. தன்னை எந்த அளவுக்கு கவனித்திருக்கிறான் என்று.
“டேய் மாறா.. நீ சொல்றது எல்லாம் எனக்கே ஷாக்கா தான் இருக்கு.. எனக்கு பதில் சொல்ல தெரியல.. ஆனா அந்த விஷயம் பத்தி நான் கொஞ்ச நாள் நினைக்காம இருந்தது உண்மை தான்.. அதுக்காக அதைப்பத்தி நான் மொத்தமா மறக்கல.. அந்த விஷயத்துக்கு எனக்கு பதில் கிடைக்காம என்னால என் லைஃப்ல இன்னொரு டெசிஷன் எடுக்க முடியாது.. மதுரன் மேல எந்த மாதிரி ஃபீல் இருக்குன்னு என்னால சொல்ல முடியல.. ஆனா லவ்வுங்குற அளவுக்கு இது போகல.. அது மட்டும் ஷ்யூர்” என்று கூறினாள்.
“அட லூசு.. நீ அந்த விஷயம் பத்தி மறந்துட்டன்னு நெனச்சு நான் எவ்ளோ சந்தோஷம் பட்டேன் தெரியுமா.. நீ மதுரனை லவ் பண்ணா கூட எனக்கு சந்தோஷம் தான்..” என்று மாறன் கூற,
“அந்த விஷயம் என் மனசுல ஏற்படுத்தின தாக்கம் அப்படி டா.. அதுக்கு பதில் கிடைக்காம லவ்வுங்குற ஒரு விஷயத்துக்குள்ள நான் போவேனான்னு தெரியல.. நடந்தா பார்க்கலாம்.. இப்போ வா கிளம்பலாம்” என்று கூறிவிட்டு எழுந்து செல்ல, “கடவுளே இவளுக்கு நீங்க தான் நல்ல வழி காட்டணும்” என்று சத்தமாக புலம்பியடி அவள்பின்னே சென்றான் மாறன்.
வீட்டிற்கு சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு சற்று நேரம் இளைப்பாற எண்ணிய மதுரன் புத்தகங்கள் வாசித்து பலநாள் ஆனது போன்று தோன்ற தன் அலமாரியில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மெத்தையில் சரிந்தான். ஓரிரு பக்கங்கள் படித்துக் கொண்டிருந்தவனின் புருவங்கள் திடீரென நெரிந்தன. கைகளில் ஏனோ நடுக்கம் தோன்ற புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு தன் கைகளால் கண்களை மூடிக் கொண்டு,
“நான் தெரியாம பண்ணிட்டேன்.. சத்தியமா வேணும்னே பண்ணல.. நான் நல்லது நெனச்சு தான் அப்படி செஞ்சேன்..” என்று கூறியபடி கண்ணீர் விட்டான். அந்த நேரம் எதேர்ச்சியாக அறிவு தன் அன்னை செய்த பிரியாணியை நண்பனுக்கு கொடுக்கலாம் என்று வந்திருக்க மதுரனின் அழுகுரல் கேட்டு பதறியபடி தன்னிடம் இருந்த மற்றொரு சாவியைக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே சென்றான். கட்டிலில் கண்களைமூடி அழுபவனைப் பார்த்தவன்,
“மச்சான் என்னடா ஆச்சு.. டேய் மது..” என்று அவனை உலுக்க பிறகு தன்னிலை அடைந்தவன் சற்று நேரம் பிரம்மைப் பிடித்தது போன்று அமர்ந்திருந்தான். அருகில் புத்தகம் இருக்க அதனை எடுத்து கடைசியாக இருந்த பக்கத்தைப் பார்க்க அதிலிருந்த வரிகள் உணர்த்தியது அவனின் இந்நிலைக்கான காரணத்தை.
“கடவுளே இவனுக்கு இந்த குற்ற உணர்வு எப்ப தான் போகும்னு தெரியல.. தப்புன்னு தெரிஞ்சு பண்றவங்க நெறய பேர் தலைநிமிர்ந்து சுத்துறாங்க.. ஆனா என் மச்சான் தெரியாம தான் செஞ்சான்.. அதுவும் ஒரு நல்ல நோக்கத்தோட.. இதுக்கு எதுக்கு இவனுக்கு இப்படி ஒரு தண்டனை..” என்று வேண்டியவன் தன் நண்பனிடம்,
“மச்சான்.. இது அப்படி ஒன்னும் தப்பில்ல டா.. சொன்ன புரிஞ்சுக்கோ..இப்போ உள்ள பசங்க தெரிஞ்சே இந்த மாதிரி தப்ப பண்றாங்க.. நீ தெரியாம தான செஞ்ச.. இதுக்கு இந்த அளவுக்கு ஃபீல் பண்ணனும்னு அவசியமே இல்லடா..” என்று கூற மதுரனோ,
“இல்ல மச்சான்.. அது எனக்கு புரியுது.. ஆனா நான் அப்படி செஞ்சனால அந்த உயிர் போயிருச்சே டா.. இந்த குற்ற உணர்வு என் வாழ்நாள் முழுக்க எனக்கு தொடரும் டா.. ” என்று கூற அறிவோ,
“கவலைப்படாத டா.. நீ வேணும்னு செய்யலன்னு உனக்கு தெரியும் அந்த கடவுளுக்கு தெரியும்.. விடு.. எனக்கு தெரிஞ்சு நீ அப்படி செய்யாம இருந்திருந்தாலும் அந்த உயிர் போயிருக்க தான செய்யும்” என்று கூற அதுவும் சரி என்று தான் தோன்றியது. பிறகும் அவன் சமாதானம் ஆகாததால் அறிவோ,
“மச்சான்.. நீ இந்த அளவுக்கு ஃபீல் பண்றத பார்த்தா.. எனக்கும் குற்ற உணர்வா இருக்குடா.. நான் கூட உனக்கு அந்த தப்ப செஞ்சுருக்கேன்.. அதுக்காக நீயும் அந்த மாதிரி முடிவை எடுத்துராத” என்று கூற அவன் கூற வந்தது புரிந்த மதுரனுக்கு சிரிப்பு வர,
“டேய் நாதாரி.. நீ செஞ்சதும் நான் செஞ்சதும் ஒண்ணா டா.. பன்னாட.. உன்ன என்ன செய்றேன்னு பாரு” என்று அடிக்க துரத்த தன் நண்பனை சிரிக்க வைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவன் கொடுக்கும் அடிகளை வாங்கி கொண்டான். பிறகு,
“சரி டா இனிமே அந்த இன்சிடென்ட்ட நியாபகம் படுத்துற மாதிரி ஏதாச்சும் படிக்கவோ பார்க்கவோ செஞ்சா.. ஃபீல் பண்ணாத.. இது தப்பு இல்லன்னு மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணு.. அப்படியும் ஏதாச்சும் ஃபீல் இருந்துச்சுன்னா எனக்கு கால் பண்ணு ஓகே” என்று கூற அவனோ,
“இந்த விஷயம்னால பியூச்சர்ல எனக்கு ஏதாச்சும் ப்ராப்லம் வர கூட சான்ஸ் இருக்குல” என்று கூற அறிவோ,
“அதை உனக்கு வர போற பொண்ணுகிட்ட சொல்லி முதல்லயே க்ளாரிஃபை பண்ணிடு..” என்று கூற,
“இதை எப்படி டா சொல்றது.. ஒருவேளை புரிஞ்சுக்காம தப்பா நெனச்சா என்ன டா செய்ய” என்று கேட்டான் மதுரன்.
“நம்ம மதுரிகா அப்படி ஒன்னும் புரிஞ்சுக்காத அளவு மெச்சூரிட்டி இல்லாத பொண்ணு இல்ல டா.. டோன்ட் வொரி” என்று கூறியபடி மதுரனின் முகத்தையே பார்க்க மதுரனோ,
“அப்போ சரி டா” என்று நிம்மதி பெருமூச்சுவிட பிறகு தான் அறிவின் கூற்று அவனுக்கு விளங்கியது.
“ஆமா நீ இப்போ என்ன சொன்ன.. மதுரிகாவா.. அவள எதுக்கு சம்மந்தமில்லாம சொல்ற” என்று கேட்க அறிவோ,
“ஓஹோ சார்.. சம்மந்தமில்லன்னு தெரிஞ்சு தான் நான் அப்படி சொன்னதும் ‘அப்போ சரிடா’ன்னு நிம்மதியா பெருமூச்சு விட்டிங்களோ” என்று கேட்க மதுரனோ,
“இல்லடா அது.. அது வந்து.. நான் கவனிக்கல” என்று கூற வர,
“என்ன மச்சான்.. எப்போதும் துப்பாக்கில இருந்து வர குண்டு மாதிரி டான் டான்னு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவ.. மதுரிகான்னு சொன்னதும் குண்டு காலியா போய்டுச்சா” என்று அறிவு அவனை மடக்க,
“நீ நெனைக்குற மாதிரி எல்லாம் இல்ல டா” என்று கூறவர அவனைத் தடுத்த அறிவு,
“டேய் டேய் தயவு செஞ்சு சமாளிக்காத.. ரெண்டு வருஷமா உன்கூட இருக்கேன்.. இதுவரை எந்த பொண்ணுக்கிட்டயும் சிரிச்சு பேசாதவன் மதுகிட்ட மட்டும் எப்படி சகஜமா சிரிச்சு பேசி கிண்டல் எல்லாம் பண்ற.. அப்போ இது லவ் தான ஜெஸ்ஸி” என்று கேட்க மதுரனோ,
“ஏன்டா சிரிச்சு பேசி சகஜமா இருந்த லவ்வா.. ஏன் ஃபிரண்டா இருக்க கூடாதா” என்று தத்துவம் பேச,
“மாட்டுனியா பம்பரக்கட்டை மண்டையா.. சரி அப்போ அன்புவும் தான் உனக்கு ஃபிரண்ட்.. ஆனா அவகிட்ட லிமிட்டா தான இருக்க.. அவ அமைதியான பொண்ணு அதனால லிமிட்ட இருக்கன்னா கூட ஓகே.. அவ மதுக்கும் மேல அராத்து.. அப்போ அவகிட்ட மட்டும் சகஜமா பேசாம மது கிட்ட மட்டும் அப்படி இருக்க.. ” என்று லாஜிக்காக பேச அதில் முழித்த மதுரன்,
“இல்ல அது வந்து…” என்று இழுக்க,
“இங்க பாரு மச்சான்.. காதலுக்கும் நட்புக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல.. மது மேல உனக்கு இன்னும் காதலுங்குற அளவுக்கு ஃபீல் வரலன்னு வேணா சொல்லு நம்புறேன்.. ஆனா எந்த ஃபீலும் இல்லன்னு சொல்லாத நம்ப மாட்டேன்” என்று கூற இதற்குமேல் இவனிடம் சமாளிக்க முடியாது என்றறிந்தவன்,
“சரி டா ஒத்துக்குறேன்.. மது மேல எனக்கு ஃபீல் இருக்கு.. எந்த மாதிரி ஃபீல்னா உனக்கு இனியா மேல எந்த மாதிரி ஃபீல் இருக்கோ அந்த மாதிரி..” என்று போட்டு வாங்க அறிவோ,
“டேய் அடிவாங்க போற.. அவ மேல எனக்கு ஃபீல் இருக்குன்னு நான் எப்போ சொன்னேன்..” என்று கேட்க மதுரனோ விடாமல்,
“நீ சொல்ல வேற செய்யணுமா.. அதான் அன்பு அன்புன்னு அன்பா கூப்புடுறயே” என்று கேட்க அறிவோ,
“டேய்.. அவளை அன்புன்னு நான் கூப்பிடுறதுனால ஃபீல் இருக்குன்னு ஆயிடுமா.. நான் அவகிட்ட அந்த அளவுக்கு ஒன்னும் அதிகமா பேசிடலையே.. நல்ல யோசிச்சு பாரு” என்று கூற மதுரனும் யோசித்தான். ஆம் அறிவு அவ்வளவாக அவளிடம் பெரிதாக கிண்டல் கூட செய்தது போன்று தோன்றியதில்லை.
ரகசியம் – 20
“டேய் அறிவு நீ சொல்றதும் சரி தான்.. அப்போ உனக்கு இனியா மேல எந்த ஃபீலும் இல்லையா.. ஆனா அவளுக்கு உன்மேல எக்கச்சக்க பீலிங் இருக்குதுன்னு நினைக்குறேன்..” என்று கூறுவர,
“அவ என்கிட்ட பேசுற விதத்துலயே எனக்கும் தோணுச்சுடா.. எனக்கும் அவளை பிடிக்கும் தான்.. ஆனா ஒரு ஃபிரண்டா.. வேற எந்த மாதிரியும் எனக்கு தாட் இல்ல.. நாம எல்லாம் மீட் பண்ணி ஒருவாரம் தான ஆகுது.. அதுக்குள்ள எப்படி ஃபீல் வரும்” என்று கேட்க அவனை முறைத்த மதுரன்,
“ஏன்டா உனக்கு வந்தா ரத்தம்.. எனக்கு வந்தா தக்காளி சட்டினியா.. நான் மட்டும் என்ன மதுவை பலநாள் முன்னாடியேவா பார்த்துருக்கேன்.. பின்ன என்னை மட்டும் கலாய்க்குற” என்று கேட்க,
“டேய் மது” என்று மதுரன் தத்துவம் கூற வரும்போது எப்படி இழுப்பானோ அதே போன்று இழுக்க மதுரனோ,
“என்னடா என்கிட்டயே தத்துவமா” என்று கேட்க,
“ஒரு தடவ என்னையும் பெர்பாமன்ஸ் பண்ண விடுடா..” என்று கெஞ்ச அதில் சிரித்த மதுரன்,
“சொல்லும் சொல்லித் தொலையும்” என்று கூற அவனோ,
“டேய் மது.. பிரியாணியும் தக்காளி சாதமும் பார்க்க ஒரே மாதிரி இருக்குங்குறதுக்காக ரெண்டும் ஒண்ணாயிடுமா.. ஆகாது.. பிரியாணி.. பிரியாணி தான்.. தக்காளி சாதம்.. தக்காளி சாதம் தான்.. அதாவது நீ ஹீரோ உனக்கு ரெண்டே நாள்ல லவ் கூட வரலாம்.. நான் செகண்ட் ஹீரோ தான.. கொஞ்சம் லேட்டா தான் வரும் போல.. வந்தா பார்க்கலாம்.. புரிஞ்சுதா..” என்று கேட்க அதில் கடுப்பான மது கையில் விளக்குமாரை எடுத்து அவனை அடிக்க துரத்த அதற்குள்,
“சரி மச்சான்.. வேலைக்கு போக டைம் ஆயிட்டு.. பாய் டா” என்று கூறிவிட்டு பறந்துவிட்டான்.
———————-
வீடு வந்த இனியா விழியிடம்,
“கோவிலுக்கு போய்ட்டு வரலாமா..” என்று கேட்க இனியா மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே கோவிலுக்கு செல்வாள் என்று அறிந்த காரணத்தினாலும் தனக்கும் தேவையான மற்றுமொரு காரணத்தினாலும் வேறு எதுவும் சொல்லாமல்,
“போலாமே” என்றிட இருவரும் கிளம்பி வழக்கமாக செல்லும் விநாயகர் கோவிலுக்கு சென்றனர். இனியாவின் கண்கள் சுற்றிமுற்றி யாரையோ தேட,
“ஹே யாரையும் வர சொல்லிருக்கியோ கோவிலுக்கு” என்று இனியா கேட்க,
“இல்லையே..” என்று கூறியவள் மனதினுள், ‘வந்தா நல்லாதான் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
“அது சரி.. இரு.. ஸ்கூட்டியைப் பார்க் பண்ணிட்டு வரேன்” என்று கூற,
‘ஒருவேளை பார்க்கிங்ல அவன் பைக் நிக்குதான்னு பாக்கலாம்’ என்று நினைத்தவள்,
“நான் பார்க் பண்றேன்..” என்று கூறிக் கொண்டு ஸ்கூட்டியை எடுத்து செல்ல அங்கே அவள் எதிர்பார்த்த வாகனம் இல்லை.
‘எதிர்பாக்குற நேரம் வராத.. எப்படியும் இன்னைக்கு வர மாட்டன்னு நெனச்சு வந்தா அப்போ கரெக்ட்டா வா.. போடா’ என்று மனதினுள் நினைத்தவள் பிறகு தொங்கிய முகத்துடன் கோவிலுக்குள் சென்றாள். சந்நிதி முன் நின்று இருவரும் வேண்டிக்கொண்டனர்.
‘கடவுளே.. அமுதுகிட்ட என் மனசு என்னையறியாமலே சாஞ்சிருச்சு.. அவனை எனக்கு பிடிக்க கரணம் தெரியல.. ஆனா பிடிச்சுருக்கு அவ்ளோ தான்.. இது காதலான்னு எனக்கு தெரியல.. எது நடந்தாலும் நல்லபடியா நடக்கணும்..’ என்று இனியா ஒருபுறம் மனமுருகி வேண்டிக்கொண்டிருக்க,
‘அப்பனே விநாயகா.. என்னைப் பார்த்தா உனக்கு பாவமா இல்லையா.. நான் பாட்டுக்கு சிவனேன்னு நான் உண்டு என் படிப்பு உண்டுன்னு எவ்ளோ சமத்தா இருந்தேன்.. திடிர்னு ஒருத்தன கண்ணுல காட்டி.. அவன் மேல எனக்கு ஃபீலிங்ஸ் வரவச்சு.. அதோடு நிப்பாட்டுனியா இல்ல.. அப்போ அப்போ நான் எதிர்பாக்காத நேரம் என் கண்ணுல அவனை சிக்க வச்சு.. இப்படி என்னை பாடா படுத்துனா நான் என்ன செய்றது..
சின்ன புள்ள தானே நானு.. கொஞ்சம் கருணைக் காட்டக்கூடாதா.. இங்க பாரு இந்த வயசுல இதெல்லாம் தப்புன்னு எனக்கு தெரியும் தான்.. ஆனா இது எதுக்கும் நான் காரணம் இல்லையே.. எல்லாம் உன் வேலை தான.. ஒன்னு இதுக்கு மேல அவனைக் கண்ணுல காட்டாத.. இல்லனா எனக்கு அவனை பத்தி தெரிஞ்சுக்க ஏதாச்சு ரூட்டு போட்டு கொடு.. ரெண்டுல எது பன்றியோ அது உன் இஷ்டம்..
நான் அவனை இந்த மாதிரி நெனைக்குறது தப்பில்லன்னு உனக்கு தோணுச்சுனா இன்னைக்குள்ள அவனை என் கண்ணுல காட்டு.. அப்படி கட்டலைன்னா இது தப்புன்னு நெனச்சு கொஞ்சம் கொஞ்சமா என் மனச மாத்திக்க ட்ரை பண்றேன்.. அவ்ளோ தான்” என்று மிகவும் உருகி உருகி விநாயகரைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தாள் இமைவிழி.
சகோதரிகள் இருவரது விண்ணப்பங்களைக் கேட்ட விநாயகரோ, ‘இவளுங்க ரெண்டு பெரும்.. என்னைப் பத்தி என்ன நெனச்சுட்டு இருக்காளுங்க.. நானே பொண்ணு கிடைக்காம இத்தனை வருசமா முச்சந்தி உக்காந்து முட்டிகிட்டு இருக்கேன்.. இதுல இவளுங்க வேறயா.. உங்கள இப்படி புலம்ப வச்சது என் தம்பி.. அவன்கிட்ட புலம்புனவாச்சு ஏதாச்சும் புண்ணியம் இருக்கும்.. சரி வந்தது வந்துட்டீங்க.. ஏதாச்சும் பார்த்து பண்றேன்’ என்று மனமிறங்கி அதற்கான திட்டத்தை வகுக்க ஆரம்பித்தாரோ என்னவோ..
சகோதரிகள் வணங்கிவிட்டு வெளியே செல்ல விழி பார்க் செய்த வண்டியை எடுக்க சென்றாள். இனியா அவளுக்காக கோவில் வாயிலில் காத்திருக்க அப்பொழுது அவளின் முன் ஒரு இரு வாகனம் வந்து நிற்க இனியாவின் முகம் மலர்ந்தது.
இனியாவின் முன் வந்து நின்ற இரு சக்கர வானத்தில் இருந்தவர்களைப் பார்த்து முகம் மலர்ந்தவள்,
“ஹே ஹாய்.. நீங்க ரெண்டு பேர் எங்க இங்க” என்று கேட்க மாறனின் பின்னே அமர்ந்திருந்த மது,
“காலேஜ் விட்டதும் ஐஸ் சாப்பிட போனோம்.. சரி வீட்டுக்கு போற வழில கோவிலுக்கு வரலாம்னு வந்தோம்.. அடிக்கடி இங்க வருவோம்..” என்று கூற இனியாவோ,
“அப்படியா.. நான் பார்த்ததே இல்லையே” என பேசிக்கொண்டிருக்க மாறனோ,
“நீங்க பேசிட்டு இருங்க.. நான் போய் பைக் பார்க் பண்ணிட்டு வரேன்” என்று கூறிவிட்டு செல்ல அங்கே விழியோ,
‘அவனைப் பார்க்கலாம் நெனச்ச எனக்கு இன்னைக்கு பல்ப் தான்’ என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டிருக்க அதனைக் கண்ட மாறன்,
‘அட இந்த பச்சைமிளகா இங்க என்ன பண்றா.. அதுவும் தனியா பேசிட்டு இருக்கா’ என்று நினைத்தபடி பைக்கை முன்னரே நிறுத்திவிட்டு அமைதியாக அவளின் பின் நின்று என்ன பேசுகிறாள் என்று கவனிக்க சென்றான். புலம்பியவள் ஸ்கூட்டியை எடுக்க எண்ணி திரும்ப மிக அருகில் மாறானது முகத்தைக் கண்டவளுக்கு சப்த நாடியும் அடங்கி போனது. அதிர்ச்சியில் பின்னே நகர்ந்தவள் கல் தடுக்கி கீழே விழ போக,
“ஹே பச்சைமிளகா.. பார்த்து” என்றவன் இடைத் தாங்கி பிடிக்காமல் கண்ணியமாக கையைப் பிடித்து நிறுத்தினான்.
‘நாம பார்க்குறது நிஜம் தானா.. இல்ல கனவா.. ஒருவேளை இந்த படத்துல எல்லாம் காட்டுற மாதிரி அவங்க நம்ம கண்ணு முன்னாடி நிக்குற மாதிரி நாமளே கற்பனை பண்றோமோ’ என்று நினைத்தவள் தன்னைத் தானே கிள்ளிக் கொண்டு பிறகு வலியில் கத்த அவளது செயலை விசித்திரமாக பார்த்தான் மாறன்.
“ஹேய்.. என்ன ஆச்சு உனக்கு.. தனியா பேசுற.. என்னை ஏதோ பேயே பார்க்குற மாதிரி பார்க்குற.. நீயே உன்னை கிள்ளிக்குற.. ஆர் யு ஓகே” என்று கேட்க அப்பொழுது தான் அவளுக்கு உரைத்தது இது கனவல்ல நினைவு என்று. கண்ணில் காட்ட கூறிய விநாயகர் கண்ணருகில் அவனைக் காட்டியதை எண்ணி பலகோடி நன்றிகளை மனதில் சொல்லியவள்,
“நீங்க.. இங்க எப்படி..” என்று திக்கித் திணறி கேட்க அவனோ,
“ஏன் இது உங்க தாத்தா கட்டுன கோவிலா.. நாங்க எல்லாம் வர கூடாதா என்ன.. சரி அது இருக்கட்டும்.. மறுபடியும் உன் கைல ஸ்கூட்டியை யாரு கொடுத்தாங்க.. ஒரு தடவ என்னைக் கொல்ல பார்த்தது போதாதா..” என்று கேட்க அவளோ,
“இப்போ எல்லாம் நான் நல்ல ஓட்ட பழகிட்டேன்.. இருந்தாலும் அன்னைக்கு உங்களுக்கு அப்படி ஆனதுல இருந்து ரோட்ல ஸ்கூட்டி ஓட்டுறது கிடையாது.. அக்கா கூட வந்தேன்” என்று பாவமாக கூறினாள்.
“நல்லது.. நெறய பேர் உன்னால காப்பாத்த பட்டிருக்காங்க போல அப்போ.. அக்கா எங்க.. அவங்க கிட்ட சொல்லி ஸ்கூட்டி ஓட்ட ஒழுங்கா சொல்லி கொடுங்கன்னு சொல்லுறேன்..” என்று கேட்க அவளோ முறைத்தபடி,
“தைரியம் இருந்தா சொல்லுங்களேன்.. கோவில் வாசல்ல தான் நின்னுட்டு இருக்கா” என்று கூற,
“கோவில் வாசல்லயா..” என்று புருவம் சுருங்கியவன் பின் அவளிடம்,
“ஹே பச்சமிளகா நீ இனியாவோட தங்கச்சியா..” என்று மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யமாக கேட்க விழியோ,
“என் அக்காவை உங்களுக்கு தெரியுமா..” என்று அவனைவிட ஆச்சர்யமாய் கேட்டாள்.
“நல்ல கேட்ட போ.. அவகிட்டயே வந்து கேளு” என்றவன் ஒரு ஆர்வத்தில் அவளின் கையைப் பிடித்து கூட்டி சென்றான். அவனைப் பொறுத்தவரை எந்த ஒரு சலனமும் இல்லை. ஆனால் நம் விழியின் நிலை சொல்லியா தெரிய வேண்டும். ஏற்கனவே அவனை அருகில் பார்த்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாதவள் இப்பொழுது அவன் கைப் பிடித்து அழைத்து செல்வான் என்று கனவில் கூட நினைக்கவில்லை. மனதினுள் பல ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க மகுடிக்கு அடங்கிய பாம்பாய் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள். பிறகு ஏதோ தோன்ற சட்டென அவளின் கையை விட்டவன்,
“சாரி.. அது இனியாவோட தங்கச்சின்னு சொன்னதும் ஒரு எக்ஸைட்மெண்ட்ல கையைப் பிடிச்சு கூட்டிட்டு வந்துட்டேன்.. டோன்ட் மிஸ்டேக் மீபச்சைமிளகா” என்று கூற அவளோ,
‘நல்லா தான போயிட்டு இருந்துச்சு.. திடிர்னு என்னாச்சு’ என்று நினைத்தவள் பிறகு எதுவும் கூறாமல் சென்றாள். பேசிக் கொண்டிருந்த இனியா மற்றும் மதுரிகா மாறனும் விழியும் ஒன்றாக வருவதைப் பார்த்து,
‘இவங்க ரெண்டு பேர் எப்படி ஒண்ணா வராங்க’ என்று இனியாவும்,
‘இது யாரு புதுசா.. ஆனா எங்கேயோ பார்த்துருக்கோமே’ என்று மதுவும் நினைத்தபடி வரும் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். வந்ததும் மது,
“டேய் மாறா.. யாரு டா இது” என்று கேட்க அவனோ,
“ஹே மது.. எனக்கு காலேஜ் முதல் நாள்ல இருந்தே இந்த பஜாரிய எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சு டி.. இப்போ தான் தெரியுது இந்த பச்சைமிளகாவோட அக்கா தான் இந்த பஜாரின்னு” என்று கூற இனியாவோ,
“டேய் மாறன்.. உனக்கு என் தங்கச்சிய முன்னாடியே தெரியுமா..” என்றவள் விழியிடம்,
“என்ன டி நீயும் எதுமே சொல்லல.. இவனை தெரியும்னு” என்று கேட்க விழியோ,
‘ஓஹோ நம்மாளு இனியாவோட காலேஜ்மேட்டா” என்று நினைத்தவள்,
“இவங்கள உனக்கு தெரியும்னு எனக்கு எப்படி தெரியும்.. இவங்க பேரு கூட எனக்கு தெரியாது..” என்று யோசித்தவளுக்கு அப்பொழுது தான் ஒன்று நினைவிற்கு வந்தது.
