Loading

அலெஸ்ஸாண்ட்ரோ வரதராஜனையும் அங்கு எதிர்பார்க்கவில்லை. மகனின் பேச்சையும் எதிர்பார்க்கவில்லை.

அவசரமாக தனது ஆள்களுக்கு கண்ணைக் காட்ட, சங்கிலியால் கட்டி இருந்த கையை ஒரு முறை சுற்றிக்கொண்ட யாஷ் பிரஜிதன், “பாய்ஸ்!” என்று ஒரு சத்தம் கொடுத்ததில் அங்கிருந்த ஆள்கள் எல்லாம் அலெஸ்ஸாண்ட்ரோவைச் சுற்றி வளைத்தனர்.

அதில் திகைத்தவர், “யாஷ் என்னை எதிர்க்க நினைக்காத. அது உனக்கு தான் ஆபத்துல முடியும்” எனக் கர்ஜித்தார்.

“டயலாக் எல்லாம் ஓகே தான். ஆனா அதை யார்கிட்ட யூஸ் பண்ணனும்னு தெரியலையே பப்பா உங்களுக்கு!” என வெகுவாய் பாவப்பட்டுக் கொண்டவன்,

“நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? உங்க ரெண்டு பேரையும் நான் கவனிக்காம விட்டுட்டேன்னா… இத்தாலிக்கு எல்லாரையும் கூட்டிட்டு வரும்போதே எனக்குத் தெரியும், நான் நிதுவை பார்க்கறதுக்கு முன்னாடியே அவளுக்கு ஏதோ அட்டாக் நடந்துருக்குன்னு… வரதராஜன் மேல சந்தேகம் இருந்துச்சு. பட், நிவேதனை கடத்துனதுல உங்களுக்கு டைரக்ட் கனெக்ஷன் இருக்குன்னு தெரிஞ்சதும் கன்ஃபார்ம் பண்ணிட்டேன்.

நிதுவுக்கு ஏதோ ஒரு வைரஸ இஞ்செக்ட் பண்ணிருக்காங்கன்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. அது மட்டும் இல்ல… அவளுக்கு நிறைய டெஸ்ட் செஞ்சதுல நான் ஃபைண்ட் அவுட் பண்ணுன ஒரு விஷயம்… அவளோட பின்னங்கழுத்துல ஒரு ஊசி குத்துன தடயம். நார்மலா இன்ஜெக்ஷன் போடும்போது அது ஈஸியா மறைஞ்சுடும். பட் இட்ஸ் நாட் நார்மல். அதை பத்தி ரிசர்ச் பண்ணும்போது தான், ரோபோடிக் இன்ஜெக்ஷன் என் கண்ணுல மாட்டுச்சு. லாஸ்ட் ரெண்டு நாளா, நீங்க என்னை ட்ராப் பண்ணி பிடிக்கிற மாதிரி செட் அப் பண்ணேன்” என்றான் ஏளனமாக.

“நீ கண்டுபிடிச்சாலும் ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமில்லை. கவர்மெண்ட் இந்த ரிசர்ச் பத்தி தெரிஞ்சு இந்த இடத்தை ரவுண்டப் பண்ணிட்டா, ஆட்டோமேட்டிக்கா இது எல்லாம் வெடிச்சு சிதறிடும். அண்ட், உன் நிதுவுக்கு நான் குடுத்த வைரஸ் கிஃப்ட் லைஃப் லாங் அவள் மூளையை அரிச்சுக்கிட்டே இருக்கும்” அலெஸ்ஸாண்ட்ரோவின் இறுதி வரியில் யாஷின் முகம் பாறையாய் இறுகியது.

அங்கிருந்த ஆள்களை எல்லாம் யாஷ் பிரஜிதன் தன் வசம் ஆக்கி இருந்தான்.

அதனாலேயே ஆதிசக்திடன் சேர்த்து மற்ற மூவரையும் உள்ளே அனுமதித்தனர். அவர்களோ ஆரம்பம் முதல் அலெஸ் பேசியதைக் கேட்டு உச்சபட்ச அதிர்ச்சியில் இருந்தனர்.

நிவேதனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “நிதா… அவங்க உன்னைப் பத்தி தான பேசுறாங்க. என்ன வைரஸ் ஏத்துனாங்க” எனப் பயந்து கேட்டான். ‘வைரஸ், நிது’ என்பதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் புரியவில்லை. அவளுக்கும் ஒரு பயப்பந்து உருண்டது. அவளுக்கு மட்டும் இத்தாலியன் மொழி புரிந்து விடுமா என்ன?

“நானே சப்டைட்டில் இல்லாம திணறி போயிருக்கேன். கம்முன்னு இருடா” எனும்போதே,

ஆதிசக்தி விறுவிறுவென உள்ளே சென்று அலெஸ்ஸாண்ட்ரோவின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.

“பொறுக்கி நாயே! உன் வெறிக்கு எத்தனை பேர பலியாக்கி இருக்க…” எனப் பொருமியவருக்கு நெஞ்சம் தீயாய் தகித்தது.

வரதராஜனையும் திரும்பி சுடுபார்வை வீசியவர், “இந்த மாதிரி ஜென்மமெல்லாம் இந்தத் தீவைத் தாண்டி வெளில வரவே கூடாது யாஷ்!” எனக் கொந்தளிக்க, வரதராஜனுக்கு தொண்டை வற்றியது.

தப்பிக்கும் வழி தெரியாமல் திணறியவர், “இதோ பாரு யாஷ். நம்ம ஒன்னும் சமூக சேவை செய்யல. உலகத்துல நம்பர் ஒன் பிசினஸ் மேனா, நம்ம கம்பெனி மூலமா தான் அரசாங்கமே நடக்கணும்னு நினைச்சோம். ஆனா உன் அப்பனே என் புள்ளையை கொலை பண்ண பார்த்து துரோகம் பண்ணிட்டான். உன் அம்மா பாதில என் கம்பெனியை நட்டாத்துல விட்டுட்டுப் போனா… ஆனா நீ சொல்லு… இத்தனை வருஷம் நீ உழைச்ச உழைப்பு, கண்டுபிடிப்புகள் வீணாப்போகணுமா? சே… சேர்மன் போஸ்ட் என்ன… இந்த ஃபார்மா லேபையும் நீயே நடத்து. எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு உன்கிட்ட இருக்கு… உலகமே அண்ணாந்து பார்க்க போகுது உன்ன… அதை விட்டுட்டுப் பழசை எல்லாம் தோண்டி உன் ஃபியூச்சர நீ கெடுத்துக்காத…” என்று அவனை மூளைச்சலவை செய்ய முயன்றார்.

யாஷ் பிரஜிதன் சிங்கத்தின் தோரணையுடன் அவர் அருகில் நெருங்க, வெலவெலத்து விட்டார்.

எச்சிலை விழுங்கியபடி, “இதோ பாரு யாஷ். ஒரு எமோஷனல்ல நீ எங்களை கொல்லலாம். இப்படி ஒரு முக்கியமான இடத்துல லேப் வச்சுருக்கோம்னா, இந்த நாட்டு அரசும் மத்த நாடுகள்ல இருக்குற முக்கியப்புள்ளிகளும் இதுல இன்வால்வ் ஆகிருக்காங்கன்னு புருஞ்சுக்கோ. இதை நீ ஒன்னும் இல்லாம ஆக்குனா, இதுக்காக கோடிக்கணக்கில இன்வெஸ்ட் பண்ணிருக்குற இன்வெஸ்டர்ஸ் உன்னை சும்மா விட மாட்டாங்க.

உன் மேல இருக்குற பயமும் மரியாதையும் உன் கண்டுபிடிப்பை வச்சு தான். இதை பத்தி உலகத்துக்கு தெரிஞ்சுட்டா, தற்காலிகமா இதை க்ளோஸ் பண்ணிட்டு வேற இடத்துல இதை தொடருவாங்க. வேறு வழியில்லாம எலைட் கம்பெனிக்கும் சீல் வச்சுடுவாங்க. அப்படி சீல் வச்சுட்டா, உன் உழைப்பு எல்லாம் வெறும் மண்ணா தான் போகும். லெட்ஸ் டாக் அபௌட் இட்! நம்ம உக்காந்து பேசலாம். இப்போ என்ன, அந்த நிதர்ஷனாவை என் பொண்ணா ஏத்துக்கணுமா? ஓகே….ஏத்துக்குறேன். அவ அம்மா செத்ததுக்கும் நான் …. நான் அவளுக்கு செட்டில் பண்ணிடுறேன்” என்றவன் அலெஸ்ஸாண்ட்ரோவை ஒரு முறை முறைத்தார்.

தான் சொல்லும்போதே அவளைக் கொன்றிருந்தால், அந்தப் பெண் இந்தப் பைத்தியக்காரனின் வாழ்க்கைக்குள் நுழைந்திருக்க மாட்டாளே! தீட்டிய திட்டங்கள் இலகுவாக முடிந்திருக்கும். பதவி வெறியில் இருந்தவனுக்குள் காதல் அமிலத்தை சுரக்க விட்டது பெரும் தவறு எனப் புரிந்தும் ஒன்றும் செய்ய இயலா நிலை.

அலெஸ்ஸாண்ட்ரோ அருகில் நின்றிருந்த ஆதிசக்தியின் கையை சுற்றி பின்னால் வளைத்து, “லுக் யாஷ்… ஹீ இஸ் கரெக்ட். நீ தேவையில்லாம எல்லாத்தையும் காம்ப்ளிகேட் பண்ற. எங்ககிட்ட இருந்து உங்களை காப்பாத்திக்க நினைச்சு, உலக அரசியல்ல மொத்த குடும்பத்தையும் பலி குடுத்துடாத. எல்லாத்தையும் நீ இழந்துடுவ!” என்றவர் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆதிசக்தியின் நெற்றியில் வைத்தார்.

“அம்மா” கண்மணி பதறி அருகில் வர, அவளை நோக்கி அலெஸ்ஸாண்ட்ரோ சுடும் முன்னே நிவேதன் குறுக்கே வந்து நின்றிருந்தான்.

அலெஸ் சுட்டும் துப்பாக்கியில் இருந்து குண்டு வெளிவராது போனதில் அவர் அதிர, கண்மணி அரண்டு விட்டாள்.

“அறிவிருக்கா உங்களுக்கு. நீங்க ஏன் முன்னாடி வந்து நிக்கிறீங்க. குண்டு பட்டுருந்தா என்ன ஆகியிருக்கும்” என்று நிவேதனைத் திட்டினாள்.

யாஷ் நிவேதனை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி அலெஸ்ஸின் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, “இதுல இருந்த புல்லட்ஸ் எல்லாம் இப்ப என்கிட்ட டேடி… ஸ்மார்ட் மூவ் பண்றேன்னு என் கோபத்தை அதிகப்படுத்தி வைக்காதீங்க” என்றதில் ஆதிசக்தியை விடுவித்தார் கோபத்தில் சிவந்து.

ஆதிசக்திக்கு அப்போது தான் உயிரே வந்தது. சிறிது நேரத்தில் கண்மணியை நோக்கி துப்பாக்கியை நீட்டியதும் அலறி விட்டாரே.

அப்படியும் யாஷ் அமைதியாய் நின்றது அப்போது தான் உறைத்தது.

மிக நேர்த்தியாய் திட்டமிடாமல் நிச்சயம் இங்கு இப்படி ஒரு சந்திப்பை நேர விட மாட்டான் என யாஷ் மீது நம்பிக்கை இருந்ததினாலேயே ஆதிசக்தியின் மீது துப்பாக்கியை வைக்கும் போது நிதர்ஷனா யாஷைப் பார்த்தாள்.

அவன் கண்களில் தெரிந்த அலட்சியம் அவளையும் சற்று இலகுவாக்கியது.

ஆனால், இந்தக் கிறுக்கு நிவே இப்ப எதுக்கு கண்மணிக்கு காக்கா புடிக்கிறான் என்ற புதிர் புரியாது, தற்போது தனக்கு மண்டையில் மூளை இருக்கிறதா அல்லது இந்த வெளிநாட்டு மாமனார் அதை எடுத்து வெறும் களிமண்ணை வைத்து விட்டாரா? மீண்டும் இந்த அரக்கனை மறந்து விடுவோமா? என்று பல்வேறு யோசனைக்குச் சென்று விட்டாள்.

நிவேதன் திருதிருவென விழித்து விட்டு, “துப்பாக்கில குண்டை எடுத்துட்டேன்னு முன்னாடியே சொல்லிருக்கலாம்ல மச்சான்…” என்று பாவமாய் கூறியதில், யாஷும் ஆதிசக்தியும் அவனை ஒரே போலவே முறைத்தனர்.

‘இதேதுடா வம்பா போச்சு. இவங்க பொண்ணை காப்பாத்த நினைச்சதுக்கு எல்லாம் மொறைக்கிறாங்க…’ என விழித்தவன் மறுபுறம் திரும்பி வரதராஜனை வெறுப்புடன் பார்த்தான்.

“யோவ்… நீ என்னைக்கு என்னை பார்க்க வந்தியோ அன்னைல இருந்தே எனக்கு பெரிய தலைவலி. கட்டுன பொண்டாட்டியையும் பெத்த பொண்ணையும் கொலை பண்ண பார்த்தவனுக்கு பையன் மேல மட்டும் பாசம் பொத்துக்கிட்டு வருதோ… இவனை எல்லாம் நாலு துண்டா வெட்டிப் போடணும். செட்டில் பண்றாராமே!” என வார்த்தைகளைத் துப்பினான்.

“ம்ம்” யாஷின் குரலில் நிவேதன் பேச்சை நிறுத்தி விட, கையைக் கட்டிக்கொண்டு இரு பெரியவர்களையும் பார்த்தவன், “யூ போத் ஆர் கரெக்ட். உங்களோட சுயநலத்துக்காக என் உழைப்பை என்னால விட முடியாது. என் இளமைல ஒரு பார்ட் முழுக்க லேப்ல உழைச்சுருக்கேன். ஐ நெவர் கிவ் அப். அண்ட் ஆல்சோ என்னை யாருன்னு கூட மறந்து போனவளுக்கு இனியும் இப்ப நடக்க போறது மறந்து போக சான்ஸ் இருக்கு. சோ…” என்று நிறுத்த நிதர்ஷனா அவனை உணர்வற்று ஏறிட்டாள்.

“அவள் என்னை மறந்த மாதிரி நான் அவளை மறக்கணும். அப்படி மறக்கலைன்னா உங்களை உயிரோட விட மாட்டேன்” நிறுத்தி நிதானமாக கூறியவனை அதிர்வுடன் ஏறிட்டார் ஆதிசக்தி.

நிவேதனோ, “அவள் எப்ப உன்னை மறந்தா?” எனப் புரியாது வினவ, அவன் நிதர்ஷனாவை கூர்மையாய் ஏறிட்ட கணம் பாவையின் விழிகளும் அவனது கலப்படக்கண்களுடன் முட்டி மோதி காயம் கொண்டது.

—–

மருத்துவமனையில் ரித்திகாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டு இருக்க, ஆஹில்யனுக்கு அவளை மீண்டும் பார்க்கும் வரை உயிரே இல்லை.

அவளுக்கு ஆபத்தில்லை என்று கூறி விட்ட பிறகும், மனதின் வலி குறையவில்லை.

அவளைக் கண்டு அவளது கரம் பற்றியபிறகே உயிர் மீண்டது.

“சாரிடி…” மன்னிப்பு வேண்டியவனின் கன்னத்தை கிள்ளியவள், “வேணும்னே சுட வச்ச மாதிரி இதென்ன சாரி? எனக்கு ஒன்னும் இல்லடா. நீ போகலயா அந்தத் தீவுக்கு?” என வினவினாள்.

அவன் விவரம் கூறியதும், “கேர்ஃபுல்டா. இது விளையாட்டு இல்ல!” என்றாள் கண்கலங்கி.

“பாஸ் சொன்னா கேட்க மாட்டுறாரு ரித்தி… எனக்கும் பயமா தான் இருக்கு” என்றவனிடமும் கலக்கம்.

இளவேந்தன் வரும் அரவம் கேட்டு இருவரும் பேச்சை துண்டித்துக் கொள்ள, “இப்ப பரவாயில்லையாம்மா” என்றார் ஆதூரமாக.

“ஓகே தான் அங்கிள்” மெதுவாய் கூறினாள்.

மருத்துவமனை வளாகத்தில் கையை வயிற்றுக்கு அருகே குறுக்கி, நாற்காலியோடு ஒட்டி அமர்ந்திருந்தாள் சிந்தாமணி.

நடந்த கலவரத்தில் துப்பட்டாவுடன் சேர்த்து அவளது சுடிதார் டாப்ஸின் ஒரு பகுதியும் கேட்டின் அருகில் சிக்கி இருந்தது.

துப்பட்டாவை கிழிக்கும்போது கதிரவன் அவளது உடையையும் சேர்த்தே கிழித்து விட்டான்.

முன் பக்கமும் பின்பக்கமும் கிழிந்திருந்த உடையை கையை வைத்தே மறைத்து ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாள்.

ரித்திகாவை பற்றிய எண்ணத்தில் மற்றவர்கள் கவனியாது போக, கதிரவன் அவளைப் பார்த்து விட்டான்.

‘காப்பாத்துறது சரி தான். இப்டியாடா ட்ரெஸ்ஸ கிழிச்சு காப்பாத்துவ’ எனத் தன்னைத் தானே தலையில் அடித்துக் கொண்டான்.

ரித்திகாவிடம் நலம் விசாரித்து விட்டு வெளியில் வந்த இளவேந்தன் அதன்பிறகே மருமகளை கவனித்து, “என்னமா ட்ரெஸ் இப்படி கிழிஞ்சுருக்கு. வேற வாங்கலாம் வா…” என்றிட, “இல்ல மாமா ரொம்ப கிழிஞ்சுருக்கு. பக்கத்துல துணி கடை இருந்தா வாங்கலாம். ஆனா இப்ப வெளில போக வேணாம் மாமா. சேஃப்ட்டி இல்ல” என்றதில், “அட என்னமா நீ” என்று அவர் சட்டையை கழற்றி அவளை அணிந்துகொள்ள சொன்னார்.

அவளும் அதனை வாங்கி அணிந்து எழுந்து நிற்க, “கதிர் எங்க?” எனக் கேட்டார்.

“இங்க தான மாமா இருந்தாரு. தெரியலையே…” எனும்போதே அவளிடம் சிறு கலவரம்.

“காணமா… நான் ரொம்ப நேரமா அவனை பாக்கலையே இரு” என்றவர் மருத்துவமனை முழுக்க தேடி விட்டு வந்தார்.

“கதிர காணோம்மா… கடவுளே என்ன ஆச்சுன்னு தெரியலையே” என்றவர் ஆஹில்யனிடமும் கூறிட, அவனும் பதறினான்.

“சிசிடிவி செக் பண்ணலாம் அங்கிள்… நான் பாக்குறேன்” என்று வேகமாய் வெளியேறியவன், சிசிடிவியையும் அலசி விட்டான்.

மருத்துவமனைக்குப் பின் பக்க வழியாக அவன் செல்வது தெரிந்தது, ஆனால் வழி தெரியாத நாட்டில் எங்கு சென்றான் என்ன ஆனான் எனப் புரியவே இல்லை.

அவனது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆஹில்யன் ஆள்களிடம் அவனைத் தேட சொல்லி உத்தரவிட, சிந்தாமணி அவன் இல்லாத சில நிமிடங்களுக்குள்ளாகவே நொறுங்கி விட்டாள்.

ஏற்கனவே அவன் மீது லேசாய் ஏற்பட்ட சலனம் தற்போது பெரும் காதல் தீயாய் உருமாறியிருக்க, அந்த நேசம் அவளைத் துளி துளியாய் நொறுக்கியது.

சில நேரத்தில் ஆஹில்யனுக்கு அழைப்பு வர, அவன் திகைத்து விட்டான்.

மருத்துவமனைக்குச் சற்று தள்ளி ஒரு விபத்து நேர்ந்திருப்பதாகவும், இந்திய நாட்டைச் சேர்ந்த இளைஞன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் தகவல் வர, “அய்யோ என்னப்பா சொல்ற? அது நம்ம கதிர் தம்பி இல்லைல” என இளவேந்தன் துடித்து விட்டார்.

சில நாள்கள் என்றாலும் தங்களது குடும்பத்தில் ஒருவனாக வலம் வந்தவனாகிற்றே. மற்ற இளைஞர்களைப் போல வீட்டுப் பெண்களை தவறாகப் பார்ப்பதும், அனாவசியமாக சீண்டுவதும் இல்லாமல் வெகுளித்தனம் நிரம்பியவனாக இருப்பவனை யாருக்குத் தான் பிடிக்காமல் போகும்!

சிந்தாமணிக்கோ தனது உயிர் மெல்ல மெல்ல தன்னை விட்டுச் செல்வது போன்றதொரு பிரம்மை.

கண்ணில் நீர் திரையிட, முகம் சிவந்து உடைந்து போனாள்.

ஆஹில்யன் இளவேந்தனிடம் “அங்கிள் நீங்க கொஞ்சம் ரித்தி கூட இருங்க. அது கதிரா இருக்காது. நான் பார்த்துட்டு வந்துடுறேன்” எனப் பரபரக்க, அவரும் மனதினுள் வேதனையை அடக்கிக்கொண்டு அங்கிருந்து நகன்றார்.

இன்னும் அதிர்வில் இருந்து மீளாது கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்க இயலாது நின்றிருந்த சிந்தாமணியிடம் ஆஹில்யன் “என் நம்பர் இருக்குல்ல. ஒருவேளை கதிர் இங்க வந்தா எனக்கு தெரியப்படுத்து சிந்தா…” என்றிட, அவளோ அவனை வலியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“அது கதிரா இருக்காதுல்லண்ணா…” நடுக்கத்துடன் வெளிவந்த வார்த்தைகளை ஊகித்தவனுக்கு, அப்போதைக்கு அதனை ஆராய நேரம் இருக்கவில்லை.

“இருக்காது சிந்தா” எனத் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டவனாக நகர எத்தனிக்கும்போதே நின்று விட்டான்.

கையில் ஒரு கவருடன், அவர்களை இத்தனை நேரம் புலம்ப வைத்தவனே வந்து விட்டான்.

அவனைக் கண்ட பிறகே ஆசுவாசமான ஆஹில்யன், “எங்கடா போன? பயந்தே போய்ட்டோம். சொல்லிட்டு போக மாட்டியா?” என்று திட்டி விட்டான்.

ஆஹில்யனின் முகத்தில் இருந்த பதற்றத்தையும், சிந்தாமணியின் கண்ணீரையும் கண்டு திருதிருவென விழித்தவன், பின் வாய் விட்டு சிரித்தான்.

“ஓஹோ என்னை யாரும் கடத்திட்டாங்கன்னு பயந்துட்டீங்களா? எனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்ல. என்னைக் கடத்தி என் அம்மாட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்குறதுக்கு எங்க ஏரியாலயே எவனுக்கும் தகிரியம் இல்ல தெரியுமா?” எனப் பெருமையாய் கூற,

“போடாங்…” எனக் கெட்ட வார்த்தையில் திட்ட வந்த ஆஹில்யனை வேகமாய் தடுத்தான் கதிரவன்.

“ஆமா இந்த சிந்தா எதுக்கு கண்ணீர் மல்க நின்னுட்டு இருக்கு. ரித்திகாக்கு ஒன்னும் இல்லைல?” என அக்கறையாய் கேட்ட கதிரவனிடம், “லூசுப்பயலே உன்ன நினைச்சு தான்டா அழுதுட்டு இருக்கா” என்றான்.

“என்னை நினச்சா?” என விழி விரித்தவன், “அவ்ளோ சீன் இல்ல ஆஹில். அவ பாக்குற சைனீஸ் சீரிஸ்க்கு ஒரு கம்பெனி போச்சேன்னு ஒப்பாரி வச்சுருப்பா…” எனச் சிரித்து வைக்க, சிந்தாமணி இறுகிய முகத்துடன் அவனையே வெறித்திருந்தாள்.

“டேய்ய்ய்” வெறியான ஆஹில்யன் “எங்க போன நீ?” எனக் கேட்க,

“அதுவா… இவள் ட்ரெஸ் கிழிஞ்சுருந்துச்சு. அதான் வெளில வாங்க போனேன். சுடிதார் எதுவும் கிடைக்கல. எல்லாம் குட்டி ட்ரெஸ்ஸா இருந்துச்சு. அதான் கொஞ்சம் தள்ளி போய் பேண்ட்டு சட்டையாவே வாங்கிட்டு வந்துட்டேன். இத போட்டுப்ப தான சிந்தா?” என்று கவரில் இருந்து ஒரு ஜீன்ஸ் பேண்டையும் கனமான டீ – ஷர்ட்டையும் நீட்டினான்.

“என்கிட்ட சொல்லிருக்கலாம்ல…” என ஆஹில்யன் கடியும்போதே, கதிரையும் அவன் வாங்கி வந்த உடையையும் மாறி மாறி பார்த்த சிந்தாமணி முற்றிலும் உடைந்து அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்.

அவளது அணைப்பில் ஆஹில்யன் மட்டுமின்றி கதிரவனும் அதிர்ந்து அரண்டு விட்டான்.

——-

“யாஷ்… என்ன பண்ணிட்டு இருக்க?” ஆதிசக்தி திகைப்பு மாறாது கேட்க,

“என்ன செய்யணுமோ அதை தான் செய்றேன் மம்மா. உங்களை மாதிரி என்னால என் கேரியர கிவ் அப் பண்ண முடியாது…” என்று உறுதியாக கூறியவனைக் கண்டு அலெஸ் மெலிதான நிம்மதி புன்னகை வீசினார்.

நல்லவேளையாக நாம் பேசியதில் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டான் என்ற கர்வம் வரதராஜனுக்கு.

“அண்ணா வேணாம்ண்ணா” கண்மணி கெஞ்ச, நிவேதனோ தங்கையை தான் பார்த்தான்.

அவள் கண்களில் இதுவரை அவன் உணர்ந்திடாத வலி.

“நிதா நீ சொல்லு உன் புருசன்ட்ட!” நிவேதன் அவளை உலுக்க,

“என்னால யாரும் அவங்களோட கேரியரை விட தேவையில்லை நிவே!” திடமாய் வந்தாலும் அதிலுள்ள அளவு கடந்த வேதனையை சம்பந்தப்பட்டவன் புரிந்து கொள்ள விரும்பாது, அலெஸ்ஸாண்ட்ரோ அழைத்துச் சென்ற மெய்ன் லேபிற்குள் நுழைந்தான். அவன் சம்மதம் தெரிவித்ததோடு அவனது நினைவுகளை மொத்தமாக டெலிட் செய்து விட வேண்டும் என்பதில் மட்டுமே அவரது கவனம் இருந்தது.

ஏகப்பட்ட சோதனைகளைக் கடந்தே உள்ளே செல்ல வேண்டியது இருந்தது.

இங்கோ நிதர்ஷனா தளர்ந்து அமர்ந்து விட்டாள். அவனது முடிவு பிராக்டிகல் தானே!

இவர்கள் அவனைத் தவறாக உபயோகித்ததற்காக, யாஷுடைய மொத்த உழைப்பும் வீணாக வேண்டிய அவசியம் என்ன?

இனி இறந்து போன தனது தாய் திரும்பி வரப்போகிறார்களா? அல்லது தனக்கு ஏற்பட்ட மறதி தான் சரியாகி விடுமா? எதுவும் மீண்டு விடாத பட்சத்தில் அவனது வருங்காலம் மட்டும் ஏன் பட்டுப்போக வேண்டும்?

படபடவென பேசும் உதடுகள் இன்று நடுக்கத்தின் பிடியில்.

குறும்புதனை ஏந்திய விழிகள், இன்று விரக்தியின் விளிம்பில்.

இனி அவன் தன்னவனாக வெறும் நினைவாகக் கூட இருக்கப்போவதில்லையா? தனக்கு அவன் இனி நினைவாய், தான் அவனுக்கு வெறும் நிழலாய்! நெஞ்சே வெடிப்பது போலொரு வலி.

மூச்சிரைத்தது அவளுக்கு. மூச்சு விடவும் சிரமம் கொடுத்தது அவன் மூச்சடைக்கக் கொடுத்த காதல்.

ஏனிந்த காதலும் தந்து, காயமும் தருகிறான். மறந்தே போதே மறைந்து போயிருக்கலாமே! மாறி மாறி பல்வேறு எண்ணங்கள் தோன்றி அலைக்கழிக்க, நிவேதன் தான் தங்கையின் நிலை கண்டு நடுங்கி விட்டான்.

“நிதா… இங்க பாரேன்!” என அவளை நிமிர்த்த முயல, அவனால் இயலவில்லை. ஆதிசக்தி மகனது திடீர் முடிவில் திணறிப் போனார்.

நிதர்ஷனாவிற்கு மங்கலாய் சில நினைவுகள். சில மாதங்களுக்கு முன் அலெஸ்ஸாண்ட்ரோவைக் கண்டது நினைவில் ஆடியது. அவளது கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

அவள் மேடையில் ஒரு பாடல் பாட, அதனைப் பாராட்டியும் இருந்தார்.

அன்று இரவு வரை, கல்லூரி விழா கொண்டாட்டம் இருந்தது. ஆனால் மாலை ஆறு மணியளவிலேயே நிதர்ஷனாவிற்கு தலை சுற்றல் மயக்கம். அதன்பிறகு எதுவும் நினைவில் இல்லை. மறுநாள் மருத்துவமனையில் தான் கண் விழித்தாள்.

அளவுக்கதிகமான தலைவலி அன்று. அதனை நினைவுபடுத்தி நிவேதனிடம் கேட்டாள்.

நிவேதனும் “ஆமா நிதா… அன்னைக்கு நைட்டு நீ ரொம்ப நேரம் வீட்டுக்கே வரல. பயந்து போய் உன் காலேஜுக்கு வந்தேன். அங்க நீ சாயந்திரமே கிளம்பிட்டன்னு சொன்னாங்க. உன்னைத் தேடி அலைஞ்சு, அப்பறம் தான் ஆஸ்பத்திரில இருந்து போன் வந்துச்சு. நீ காலேஜ்ல சாப்பிட்டது சேராம ஃபுட் பாய்சன் ஆகி மயங்கி விழுந்துட்டதா சொன்னாங்க. அப்பறம் ரெண்டு மூணு நாள்ல சரி ஆகிட்ட” என்றதும்,

“அப்போ அன்னைக்கு தான் இந்த அலெஸ்ஸாண்ட்ரோ என்னை சோதனை எலியா யூஸ் பண்ணிருக்கான் போல…” என்றாள் கசந்த முறுவலுடன்.

“இங்க என்ன தான் நடக்குது நிதா. எனக்கு ஒரு எழவும் புரியல. உனக்கு உடம்பு சரி ஆகி, நாலஞ்சு நாள்ல என்னை கடத்திட்டான். அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு. நீ எப்படி யாஷ பார்த்த?” எனக் கேட்ட நொடியில், கண்ணில் இருந்து பொத்தென ஒரு நீர்த்துளி உருள, நடந்த மொத்தத்தையும் கூறினாள்.

திருமணத்தை நிறுத்தி விட்டு யாஷ் திரும்பி வந்தது அவளுக்கே ஆதிசக்தி இளவேந்தன் மூலமாக மேலோட்டமாகத் தான் தெரியும். மறந்தே போனாலும் முறிந்து போகாதே இந்த காதலும்! நித்தமும் அவனை மறந்து விட்டதாக நினைத்து நினைத்தே அவன் மீது தற்போது தீரா நேசத்தை உருவாக்கிச் சென்று விட்டான்.

சில மணித்துளிகள் கரைந்த பின்னே, பூட்ஸ் சத்தம் காதைக் கிழிக்க அங்கு வந்திருந்தான் யாஷ் பிரஜிதன்.

ஷூ சத்தம் மூலமே அவனது வரவை உணர்ந்த நிதர்ஷனா நிமிரவே இல்லை.

அவனைக் கண்டதும் கண்மணி ஆவேசமாக அவனிடம் சென்று “என்ன அண்ணா செஞ்சு வச்சுருக்கீங்க? இதுக்காகவா இவ்ளோ கஷ்டப்பட்டீங்க…” எனக் கண்ணீருடன் வினவ, ஆதிசக்தி கண்மணியை நகர்த்தி விட்டு, மகனை தீயாக முறைத்தார்.

அவனோ கூலாக பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து, “காதை மூடிக்கோங்க” என்க, “வாட்?” என விழித்தார்.

“ஓகே யுவர் சாய்ஸ்” என்றவன், தரையில் அமர்ந்திருந்த நிதர்ஷனாவை ஒரு கையாலேயே தூக்கி அவள் உணரும் முன்னே அவளது முகத்தை நெஞ்சில் புதைத்துக் கொள்ள, அந்நேரம் அவன் சென்று வந்த மெய்ன் லேப் மொத்தமும் வெடித்துச் சிதறியதில் ஆடவனின் இதழ்கள் ஏளனமாய் வளைந்தது.

அன்பு இனிக்கும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 176

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
170
+1
7
+1
8

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment