Loading

முப்பது வயது தொட்ட மாறனுக்கு இன்னும் எந்த வரனும் அமையாத சோகம் கோமதிக்கு நிறைய உண்டு. அவரும் வளர்மதியை வைத்துக்கொண்டு பல திருமண தகவல் மையத்திலும், சொந்தத்திலும் சொல்லி வைத்து விட்டார். 

 

வரன் எதுவும் அவனுக்கு அமையவில்லை..

 

இக்காலத்தில் பெண்களின் பெற்றோர்கள் பலரும் படிப்பையும், வேலையையும் தான் குறிப்பாக பார்க்கிறார்கள். அவன் மெக்கானிக் என்றதுமே கொஞ்சம் யோசிக்கிறார்கள்.  

 

தாயின் சிவந்த நிறத்தை உரித்து பிறந்தாலும் சென்னை வெயிலால் மாநிறத்தில் இருக்கிறான். நல்ல உயரமும் அதற்கேற்ப உடல்வாகும் கொண்ட அழகான தோற்றம். 

 

பார்ப்பவர்களை சட்டென ஈர்ப்பவன்.

சொந்தமாய் தொழில் செய்தாலும் படிப்பை வைத்து அவனை பலரும் நிராகரிக்கிறார்கள்.

 

ஆனால், மாறன் அதைப்பற்றி பெரிதாக கவலை கொள்ளவில்லை. கோமதிக்கு தான் அதில் பெரும் வருத்தம்.

 

மகனை சரியாக படிக்க வைக்க முடியவில்லை என்ற வருத்தம். படிப்பு மகனின் திருமணத்தை பாதிக்கும் என முன்னமே யோசித்து, மகனை படிக்க சொல்லியும் கேட்கலானார்.

 

அவனும் வயதை கடந்தபின் படிக்க சொல்லும் தாயின் கோட்டித்தனத்தை விட, அதில் பிரதிபலிக்கும் அவரது அன்பை மட்டுமே கண்டு சிரித்துக்கொண்டே நகர்ந்து விடுவான். 

 

தனக்கென்று ஒருத்தி பிறந்து இருப்பாள் சீக்கிரம் தன்னை வந்து சேர்வாள் என்று முருகன் மீது  நம்பிக்கை வைத்து தனது திருமணத்தை பற்றிய கவலையை ஓரமாக வைத்தவன், தனது லட்சியத்தின் மீது கவனத்தை செலுத்தினான்.

 

அக்கடவுளும் அவனுக்காக பிறந்தவளை அவனுடன் சேர்க்கும் வழியையும், விதியையும் அமைத்துவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

 

வளர்மதி, திருமண 

புரோக்கரை அழைத்து வருவதாக சொல்லி இருந்தார். நிறைய திருமண தகவல் மையங்கள் வந்தாலும் ஒருசிலர் திருமணப் புரோக்கர்களை அணுக தான் செய்கிறார்கள். 

 

மாறனுக்காக பல தகவல் மையங்களில் பதிவு செய்து வைத்திருந்தாலும் ‘தனக்கு தெரிந்த திருமண புரோக்கரிடம் பேசி பார்க்கலாம்’ என்று வளர்மதி திருமண புரோக்கர் ஒருவரை அழைத்து வந்திருந்தார்.

 

பார்க்க வயதான தோற்றத்தில் இருந்தார். குடிக்க தண்ணீருடன் நிறுத்திக் கொண்டவர் மாறனின் புகைப்படத்தையும், ஜாதகத்தையும் கேட்டார். 

 

கோமதி அவர்களும் எடுத்து வந்து கொடுத்தார். ஜாதகத்தையும் மாறனின் புகைப்படத்தையும் வாங்கிப் பார்த்தார்.  

 

“ம்ம்… அழகான பையன் தான். எதனால வரன் தட்டிப் போச்சி?”

 

“எல்லாம் இருந்தாலும் இந்தப் படிப்பை காரணமா வச்சி வர்ற வரனெல்லாம் தட்டிப்போகுது!”

 

“ம்ம்…” என்று யோசித்தவரின் எண்ணத்தில் வந்து போனது என்னவோ வைத்தியநாதனும் சம்ருதியும்.

 

வைத்தியநாதன் தன் மகளுக்கு வரன் பார்க்க, அவரிடம் தான் சொல்லி வைத்திருந்தார். இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தததால் அவரிடமும் சொல்லி வைத்தார்.

 

வைத்தி எதிர்பார்ப்பது எல்லாம்  ஒழுக்கமான பையன். பெரிய படிப்பு, பெரிய வேலையெல்லாம் வேண்டாம் ஓரளவுக்கு படித்து சம்பாதித்தால் போதும் நல்ல குடும்பமாக இருந்தால் போதும் வேற எதையும் அவரும் சரி சம்ருதியும் சரி எதிர்பார்க்கவில்லை. 

 

ஆடம்பர வாழ்க்கை வாழாமல் அன்றாட சாதாரண வாழ்க்கை வாழும் குடும்பம் போதும் என்று சொல்லி வைத்திருக்கும் வைத்தியாநாதனே நினைவிற்கு வர, இருவரது ஜாதகத்தை மேலோட்டமாக கணித்தார்.

 

“ஒரு வரன் இருக்கு. தூரமாலாம் இல்லை ரொம்ப பக்கத்திலே இருக்கு.  உங்களை போல்  எளிமையான குடும்பம். அவங்களும் பெரிய எதிர்ப்பார்ப்பெல்லாம் வைக்கல குணமான பையனா இருந்தால் போதும் படிப்பு நிறைய இருக்கணும் அவசியம் இல்ல.. 

 

கை நிறைய சம்பாதிக்கணும் கோரிக்கை வைக்கல! எந்த கெட்டப்பழக்கம் இல்லாத பையனா இருந்தா பாருங்க சொல்லி வச்சிருந்தார் பொண்ணோட அப்பா! 

 

எனக்கு நீங்க சொன்னதுமே அவர் தான் நினைவுக்கு வந்தார். அந்த பொண்ணோட ஜாதகம் உங்க புள்ளை ஜாதகத்தோட பொருந்தும் தோணுது. பார்க்கிறீங்களா? பொண்ணு ரொம்ப நல்லப்பொண்ணு!” என வைத்தியையும் சம்ருதியையும் நினைவில் வைத்துக் கொண்டு இன்முகமாய் அவரும் கூற, இருவருக்கும் மகிழச்சி எடுத்த எடுப்பிலேயே வரன் உண்டு  என அவர் சொன்னது..

 

“ரொம்ப சந்தோஷங்க.. எடுத்ததுமே பார்க்கிறேன் சொல்லாம, ஒரு வரன் இருக்குனு சொன்னதுமே  எனக்கு கடவுளே வந்து சொன்னது போல இருக்கு! சொல்லுங்க பொண்ணு பெயர் என்ன? பொண்ணு என்ன பண்றா? பொண்ணு வீட்ல எப்படி?” என ஆர்வம் தாங்காமல் கோமதி  கேட்க அவரும் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

 

“சொல்றேன் மா! பொண்ணு பெயர் சம்ருதி, டாக்டருக்கு படிச்சிருக்கு அவங்க அப்பா பெயரு வைத்தியநாதன் ரிட்டையர்ட் கவர்மென்ட் டீச்சர்! ரொம்ப நல்ல குடும்பம் பலவருஷம் பழக்கம் இருக்கனால சொல்றேன். பொண்ணு உங்க எதிர்த்த வீடு தான்!” என்றதுமே வளர்மதிக்கோ முகம் சட்டென மாறி விட்டது. 

 

கோமதி அவர்களுக்கு பேரதிர்ச்சி!

 

 

“ரெண்டு பேர் ஜாதகத்தை வைச்சு பொருத்தம் பார்த்ததும் ஒரு நல்ல  நாள்ல ரெண்டு குடும்பமும் உட்கார வச்சி பேசி முடிப்போம்!” என்றவர் பேசிக் கொண்டே போனார் அவர்பாட்டிற்கு.

 

கோமதியோ, “இல்லங்க இந்த வரன் வேணாம் வேற வரன் பாருங்க!” என சட்டென சொல்லி விட்டார்.

 

“ஏம்மா?”

 

“அவங்க எதிர்பார்க்கிறது போல என் பையன் இருக்கான்! நான் எதிர்பார்க்கிறது போல அந்தப்பொண்ணு இருக்காளா?” என்ற கேள்வி அவருக்கு விளங்கவில்லை. 

 

“என்ன மா சொல்றீங்க?”

 

“நல்ல பொண்ணு சொன்னீங்களே! நல்ல பொண்ணாவே இருக்கட்டும் அதுக்காக வீட்டு வேலை ஒன்னு செய்ய தெரியாத பொண்ணை கட்டி கூட்டிட்டு வந்து அவளுக்கு சேர்த்து என் பையன் சேகவம் செய்யணுமா? 

 

அந்த பொண்ணுக்கு வீட்டு வேலை எதுவும் செய்ய தெரியாது! இப்போ வரைக்கும் அவங்க அப்பா தான் பார்க்கிறார். அடுத்து என் புள்ளை பார்க்கணுமா? டாக்டருக்கு படிச்சா வீட்டு வேலை பார்க்க கூடாது கத்துக்க கூடாதுனு இருக்கா? 

 

இந்த பொண்ணு வேணாங்க! அவங்க அப்பா வீட்ல இருந்து அவளுக்கு எல்லாம் வேலையும் செஞ்சு கொடுத்துமே அவரை மரியாதை இல்லாம பேசுறதும் கட்டையால அடிக்க வரதுமா இருக்கவ, நாளைக்கு என் புள்ளையையும் அப்படி நடத்த மாட்டான்னு என்ன நிச்சயம்? 

 

அந்த பொண்ண விட என் பையன் படிப்புல கொஞ்சம் கம்மி தான். அதையே ஒரு சாக்கா வச்சி நாளைக்கு என் புள்ளைய மரியாதை இல்லாம நடத்தினா நான் சும்மா இருக்க மாட்டேன்..

 

என் புள்ளை வாழ்க்கை நிம்மதியா போகணும் இந்த பஜாரிய கட்டி வச்சி என் புள்ளையோட நிம்மதிய நான் கெடுக்க முடியாதுங்க. என் மகன் எனக்கு, உடம்பு முடியலனு இருப்பத்திமூணு வயசுல இருந்து வீட்டு வேலை, கடை வேலைனு இரண்டையும் சேர்த்து பார்த்திட்டிருக்கான்.

 

வீட்டுக்கு மருமக வந்தா, அவனுக்கு வேலை சுமை குறையும் நான் நினைக்கிறேன். இந்த பொண்ணை கட்டிக்கிட்டா என் புள்ளை டபுள் மடங்கா வேலை செய்யணும் வேண்டாங்க! 

 

வேற பொண்ண பாருங்க! என் புள்ளைக்காக மட்டும் இதை நான் சொல்லல்ல என் புள்ளைய போல யாரு இந்த பொண்ணை கட்டினாலும் அவன் தான் கஷ்டப்படுவான். 

 

என்னை கேட்டா உங்க கிட்ட வரன் பார்க்க சொல்லி வர்றவங்க கிட்ட தயவு செய்து இப்படி ஒரு பொண்ணு இருக்கிறதா சொல்லாதீங்க! ஒன்னும் தெரியாத பொண்ணை யார் தலையிலும் கட்டி வச்சி அந்த குடும்பத்தை கஷ்டப்படுத்தாதீங்க..” என  வளர்மதி ஏற்றி விட்ட சிறு பொறி,  வன்மம் அவருக்குள் தீயாக கொழுந்து விட்டு நன்றாக எறிந்தது. 

 

வளர்மதிக்கு இப்போது தான்  இதயம் சீராக துடித்தது. தன் மகனுக்கு சம்ருதியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற பேராசை. அதற்கு தான் தன் தமக்கையிடம் சம்ருதியை பற்றி தவறாக பேசி அவர் மனதில் அவளை பற்றிய தவறான பிம்பத்தை  சித்தரித்து விட்டார். 

 

எங்கே சம்ருதியின் நல்ல குணங்களை கண்டு கோமதி மாறனுக்கு கட்டி வைத்து விடுவாரோ என்ற பயத்தில் அவளை பற்றி இல்லாததும் பொல்லாதது சொல்லி வெறுப்பை உண்டாகி வைத்திருக்கிறார். 

 

சொத்து சுகத்துடன் வரும் மகாலட்சுமியை கோமதிக்கு தாரவார்த்துக் கொடுக்கும் நல்ல எண்ணம் அவருக்கு இல்லை!

 

மாறனுக்கு திருமணம் முடித்த கையோடு வைத்தியிடம் பேசி தன் மகன் குமரனுக்கு சம்ருதியை கட்டி வைக்கும் தீர்மானத்தில் இருக்கிறார்.

 

திருமண புரோக்கர் சம்ருதியை சொன்னதுமே வளர்மதிக்கு பேரதிர்ச்சி! 

 

தனது எண்ணம் நடக்காமல் போய்விடுவோமோ என்றெல்லாம் கற்பனை செய்து விட்டார். கோமதி மறுத்ததும் தான் அவருக்கு உயிரே வந்தது. அவரது திட்டம் நன்றாக வேலை செய்திருந்தது. 

 

திருமண புரோக்கருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், கோமதி சம்ருதியை தவறாக புரிந்து வைத்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.  

 

“மன்னிக்கனும்! உங்களுக்கு அந்த பாப்பா வேணாம்ன்னா விடுங்க. ஆனா, பாப்பாவ தப்பா பேசாதீங்க! அந்த பாப்பாவ பத்தி நீங்க தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்க. 

 

உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது எனக்கும் தெரியல! உங்க பையனுக்கு நீங்க சொல்றது போல பொண்ணை கொண்டு வர்றேன்..” என்றவர் அங்கிருந்து விடைபெற்றார்.

 

புரோக்கர் சொன்னதை கேட்டு புருவ முடிச்சுக்களுடன் யோசித்து நிற்பவரின் கவனத்தை திசை திருப்பினார் வளர்மதி. 

 

“நல்ல வேளைக்கா! எங்க நீ அந்த டாக்டர் பொண்ணுக்கு சரினு சொல்லி அந்த வாயாடிய மாறனுக்கு பேசிடுவீயோனு நினைச்சேன்..” என்று வளர்மதி சொல்ல, “டாக்டர் பொண்ணு நல்ல சம்பாத்தியம்னு பார்த்தா குடும்பம் நல்லா இருக்குமா வளரு? 

 

வீட்டுக்கு அடக்கமா இருந்தா போதும்! அவ பெரிய படிப்பு படிச்சி இருக்கணும் இல்லை.. எனக்கு குணமான பொண்ணு தான் பிடிக்கும்! படிச்ச பொண்ணு தேவை இல்லை!” எனக்கூறி உள்ளே செல்ல, இவரும் உள்ளுக்குள் விஷமச்சிரிப்போடு அவருடன் சென்றார். 

 

மாறனின் வீட்டிலிருந்து வெளிய வந்த திருமண புரோக்கரோ வைத்தியின் வீட்டை தாண்டிச் செல்ல, அவரை கண்டு கொண்ட வைத்தியோ அவரை அழைத்தார். சங்கடத்துடன் வைத்தியிடம் வந்தார் திருமண புரோக்கர் சரவணன். 

 

“அப்பா! என்ன இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வர்றாம போன எப்படி உள்ள வாங்க?” 

 

அவரும், “இங்க வரன் பார்க்க கூப்பிட்டாங்க வைத்தி அதான், வந்தேன். நீ வீட்டில இருக்கயோ இல்லையோனு தான் அப்படியே நடந்தேன்..”என்று சமாளிப்பாய் சொல்லிக் கொண்டு அவருடன் உள்ளே வந்தார். 

 

“நான் எங்க போயிட போறேன்! எனக்கு என்ன வேலையா? வெட்டியா? நான் சும்மாதானே இருக்கேன்..” என்று பேசியபடி அவருக்கு பழச்சாறு ஊற்றி கொடுக்க, வாங்கிப் பருகினார்.

 

“யார் வீட்டுக்கு வந்தீங்கப்பா?”

 

“புதுசா குடி வந்திருக்காங்களே அவங்க வீட்டுக்கு தான் வைத்தி வந்தேன். அந்த தம்பிக்கு தான் பொண்ணு இருந்தா பார்க்க சொல்லி இருக்காங்க!” என்றார்.

 

“ஓ.. நம்ம மாறன் தம்பிக்கா! ரொம்ப நல்ல தம்பி ஆச்சே! அந்த தம்பி போல ஒரு பையன் கிடைக்க  பொண்ணு வீட்டுக்காரங்க குடுத்து வச்சிருக்கணும். நல்ல வரனா பாருங்கப்பா!” என்று மாறனை பற்றி நல்ல விதமாக சொல்ல, பெரியவருக்கு சிரிப்பு தான் வந்தது. 

 

“நீ அந்த தம்பிய நல்ல விதமா சொல்ற வைத்தி! ஆனா அந்தப்பையனோட அம்மா நம்ம பாப்பாவ தப்பால பேசுறாங்க!” என்றதுமே அதிர்ந்து போனவர், “என்னப்பா சொல்றீங்க?” என்றார்.

 

அவரும் நடந்ததை சொல்ல, ஒடிந்து போய் அமர்ந்து விட்டார். 

 

“நானும் பாப்பாவ நல்ல விதமா சொன்னாலும் அவங்க நம்பல! பாப்பா வேணாம் சொன்னதோடு, இந்த பொண்ணை தயவு செய்து யார் தலையிலும் கட்டி வைக்காதீங்க சொல்லிட்டாங்க! எனக்கு ரொம்ப அதிர்ச்சி! முதல் முறையா பாப்பாவை பத்தி தப்பா பேசுறத கேக்குறேன்!”

 

வைத்தியோ எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தார்.

 

“இதை வச்சி பாப்பாக்கு வரன் பார்க்காம விட்டிருவேன் நினைக்காத வைத்தி! இந்த பையன விட நல்ல பையனா  நான் கொண்டு வருவேன். நீ கவலைப்படாத! நான் வர்றேன்..” என்று ஆறுதலாக பேசி விட்டு அவர் சென்றுவிட, வைத்தியோ கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.

 

****

 

மருத்துவமனையிலிருந்து தனது பணியை முடித்துக்கொண்டு இரவு ஏழுமணி அளவில் இல்லம் வந்தவளுக்கு வாசலில் வழக்கமாக எரியும் மஞ்சள் விளக்கு எரியாமல் இருக்க, வண்டியை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு விளக்கை போட்டுவிட்டு உள்ளே சென்றாள். 

 

வீடு முழுவதும் இருட்டாக இருந்தது. அவளுக்குள் ஒருவித பயம் சூழ்ந்து கொள்ள பதற்றத்துடனே “வைத்தி” என அழைத்தாள். 

 

அவரிடமிருந்து பதில் வரவில்லை. இருட்டில் தட்டு தடுமாறி விளக்கை போட்டாள். கூடத்தில் நீள்விருக்கையில் அமர்ந்திருப்பதை கண்டு ஒரு நிமிடம் பயந்து போனவள் அவர் அருகே சென்றாள். 

 

அசையாது அமர்ந்திருப்பவரை கண்டு பயத்துடன் அவரது காலுக்கடியில் அமர்ந்தாள். எங்கோ விழிகளை வெறித்து இருந்தவர் விழிகளை கீழிறக்கி இவளை கண்டதும் தான் இவளுக்கு உயிரே வந்தது!

 

வேகமாக துடித்த அவளது இருதயத்தை சீராக்க முயன்றாள். முகமெல்லாம் வியர்த்திருந்தது.

 

“போ பா! பயந்துட்டேன் நான்!” என அவரது தொடையில் அடித்தாள். 

 

“செத்து போயிட்டேன் நினைச்சிட்டீயா பாப்பா?” என்றவர் விரக்தியில் சிரித்தார்.

 

“வைத்தி உன்னை நானே கொன்றுவேன் இப்படி நீ பேசினேனா? என்னப்பா ஆச்சி? ஏன் இப்படி பேசுற?” என கலங்கி போன மகளை கண்ட பின்பு தான், தான் விட்ட வார்த்தைகளின் வீரியம் அவருக்கு புரிந்தது. 

 

“உன் பயந்து போன முகத்தை பார்த்தும் எனக்கு எதுவும் ஆகிடுச்சோ நினைச்சிட்டீயா கேட்டேன் டா?” என்றவர் சிரித்தப்படி சமாளித்தார்.

 

“வெளிய லைட் போடல. வீடு முழுக்க இருட்டா இருக்கு! நீ இப்படி உட்கார்ந்திருக்க.. நான் என்ன நினைக்கிறது? ஒரு நிமிஷம் எனக்கு உயிரே போச்சி! 

 

இப்படி பண்ணாதப்பா! உனக்கு எதுவும்ன்னா எனக்கு தாங்கற சக்தி இல்லை. நானும் உன்னோடவே வந்துடுவேன்..” என்று அவரது மடியில் படுத்து அழுதாள்.

 

பதறியவர், “பாப்பா என்ன டா? இப்போ என்ன ஆச்சினு அழற நீ? எனக்கு என்ன நான் குத்து கல்லாட்டம் இருக்கேனே! எனக்கு என்ன ஆயிடப்போகுது. வீட்ல ஒரு உயிர காப்பாத்துற கடவுள் இருக்கு! எனக்கு என்ன ஆகிட போகுது?” என மகளின் அழுகையை நிறுத்த, அவளை  சமாதானம் செய்தார்.

 

அவளோ நிமிர்ந்து பார்த்து, “அப்பா ஏன் இப்படி உட்கார்ந்து இருந்த? நீ இப்படி இடிஞ்சு போய் உட்கார ஆள் இல்லையே என்ன ஆச்சி உனக்கு?” என்றாள் கேள்வியாக.

 

“ஆ… அது என் மனைவி நியாபகம் வந்துடுச்சி அதான் அவளை நினைச்சிட்டு அப்படியே உட்கார்ந்திட்டேன்!”என்று சமாளித்தார்.

 

அவரை தான் கூர் விழியால் துளைத்தெடுத்தாள். அவளது விழிகளை காண முடியாமல் தாழ்த்தினார். 

 

“உண்மையாவே நீ அம்மாவை நினைச்சி பீல் பண்ணி தான் இப்படி உட்கார்ந்து இருந்தீயா?” 

 

“இல்ல… சில்க் சுமிதாவை நினைச்சிட்டு குத்தாட்டமா போட்டுட்டு இருந்தேன்!”

 

“ம்ம்..”அவரை முறைத்தவள், “எதையாவது சொல்லி சமாளிக்காத உண்மைய சொல்லு!”

 

“உண்மைய தான்டா சொல்றேன்”

 

“நீ பொய் சொல்ற! அம்மாவை நினைச்சி நீ பீல் பண்ணாலும் என் முன்ன நீ பீல் பண்ண மாட்ட! அதேநேரம் இப்படி நீ இருட்டல உட்கார மாட்ட! உண்மைய சொல்லு என்ன நடந்தது? யாரு வீட்டுக்கு வந்தா?”

 

“இல்ல.. டா அது..” என அவர் சொல்ல வரும் முன்னே தன் அலைப்பேசி எடுத்து வாசலில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலமாக பதிவான வீடியோவை பார்த்தாள். 

 

திருமண புரோக்கர் சரவணன் மட்டும் உள்ளே வருவதும் போவதும் இருந்தது அவருக்கும் முன்னும் பின்னும் யாரும் வரவில்லை. 

 

“சரவணன் தாத்தா தானே வந்திருக்கார். வேற யாருமே வந்தது போல தெரியல நீயும் வெளிய போகல! உண்மைய சொல்லுப்பா என்ன நடந்தது? தாத்தா எதுவும் சொன்னாரா?” என கேட்டிட, வைத்தியோ பதில் சொல்லாது அமைதியாக தலைகுனிந்தார். 

 

“ப்பா.. உன் கிட்ட தான் கேக்குறேன் பதில் சொல்லு. தாத்தா என்ன சொன்னார்?”

 

“ஒன்னு இல்ல விடு டா..” என்றார் உடைந்த குரலாய் 

 

“நீ சொல்ல மாட்டா! நான் தாத்தா கிட்ட கேட்டுகிறேன்..” என அலைப்பேசயில் அவரது எண்ணை எடுக்க, “வேணாம் பாப்பா! நானே சொல்றேன்!” என்றார்.

 

அலைபேசியை வைத்து விட்டு அவர் அருகே அமர்ந்தாள். அவரும் சரவணன் சொன்னதையெல்லாம் சொல்லி முடித்தார். 

 

“ஏன் பாப்பா? அவங்களுக்கு உன் மேலே இவ்வளவு வன்மம்? அவங்க பிள்ளைக்கு உன்னை வேணாம் சொன்னது கூட சரினு ஏத்துக்கிறேன் அது அவங்க இஷ்டம்.. ஆனா, எந்த பசங்களுக்கு உன்னை கட்டி வச்சிட கூடாதுனு சொல்லுறதுல என்ன பாப்பா நியாயம்? 

 

ஒரு பொண்ணா இருந்துட்டு ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்கிறது போல பேசிருக்காங்களே!ச்ச.. என்ன பொம்பளை மா அவங்க?

 

நம்ம தாத்தாவா இருக்க போய் உன்னை எதுவும் தப்பா அவர் நினைக்கல வேற யாராவது இருந்தா, அவங்க உன்னை என்ன நினைப்பாங்க? 

 

வீட்டு வேலை செய்ய தெரியாத பொண்ணுங்களுக்கெல்லாம் கல்யாணமே நடக்காதா? இல்ல நடக்ககூடாதா? உன்னை யாருக்கும் கல்யாணம் பண்ணி வைக்ககூடாது சொல்ல அவங்க யாரு மா?” எனக் கண்ணீரோடு கேட்டுப் புலம்பினார்.

 

“என்கிட்ட ஏன் புலம்புற? போய் இதெல்லாம் அந்த அம்மா கிட்ட கேட்க வேண்டியது தானே! உன் பொண்ண ஒருத்தி தப்பா பேசி இருக்கா உட்கார்ந்து கண்ணீர் வடிச்சிட்டு இருக்க! இவ்வளவு தான் நீ ஏன் மேலே வச்ச பாசமா?”

 

“எனக்கு அவங்களை நாக்க புடுங்க மாதிரி கேட்கணும் தோணுச்சி ஆனா மாறன் தம்பிக்காக அமைதியா இருக்கேன் மா! நாளைக்கு அந்த தம்பி முகத்துல முழிக்கணுமே டா!” என பாவம் போல சொன்னவரை முறைத்தாள் நாயகி.

 

“நீ வேணாம் அந்த தொம்பிக்காக யோசிச்சி கேட்காம இருக்கலாம்.  ஆனா, நான் எனக்காக கேட்பேன். எனக்கு எந்த தொம்பி முகத்துல முழிக்கணும் அவசியம் இல்ல! நான் போய் நாக்க புடுங்குற மாதிரி கேட்டு வர்றேன்..” என்றவளை அவர் தடுக்க தடுக்க, காளி அவதாரத்துடன் கோமதி வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி நின்றாள்.

 

திறந்தது என்னவோ வளர்மதி தான். சம்ருதியை வாசலில் கண்டதுமே அதிர்ந்தார். 

 

“நீ.. என்னமா இங்க? உனக்கு என்ன வேணும்?” என திணறியப்படி கேட்டார். 

 

“உங்க அக்காவை பார்க்கனும் வழிய விடுங்க!” என்று அவரை இடித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

 

சம்ருதியை எதிர்பார்க்காத கோமதி  அவள் வந்து நின்ற நிலையை கண்டு ஆடிப்போய் விட்டார்.

 

“எ… என்ன… வே… வேணும் உ… உனக்கு ? எதுக்கு  இங்க வந்திருக்க?” என வார்த்தை தந்தி அடித்தது.

 

சம்ருதியோ, “ஏன் ஆன்ட்டி எங்க அப்பா  வந்து உங்க கால்ல விழுந்து என் பொண்ணுக்கு அம்மாவ இருந்து நீங்க  தான் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கணும் சொன்னாரா?” 

 

“ஏய் என்ன உளற நீ? உன் அப்பா ஏன் அப்படி வந்து சொல்ல போறாரு? L”

 

“அப்போ என் வாழ்க்கையில நீங்க ஏன் முடிவெடுக்கிறீங்க? நான் இப்படி தான் நீங்க எப்படி என்னை ஜட்ஜ் பண்ணலாம்? நான் யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கு என்ன ? 

 

என்னை யார் தலையிலும் கட்டி வச்சிடாதீங்க சரவணன் தாத்தா கிட்ட அட்வைஸ் வேற பண்ணீங்களாமே! ஒரு வயசு பொண்ணோட வாழ்க்கைய அழிக்கிறோமோன்னு உங்களுக்கு தோணலையா ஆன்ட்டி?” என கேட்கவும் எச்சில் விழுங்க நின்றார்.

 

“பதில் சொல்லுங்க ஆன்ட்டி! ஒரு அம்மா இல்லாத பொண்ணுனு உங்களுக்கு கொஞ்சம் கூட கருணை இல்லையா ? அம்மா ஸ்தானத்துல இருந்திட்டு இப்படி நீங்க பேசி இருக்கிறது சரியா? 

 

உங்க பையனுக்கு நான் ஏத்த பொண்ணு இல்ல நீங்க யோசிக்கிறது சரி. அதுக்காக யார் தலையிலும் கட்டி வச்சிடாதீங்க எதுக்கு சொல்றீங்க? ஏன்  வேலை தெரிஞ்ச பொண்ணுங்களுக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகணும் ரூல்ஸ் இருக்கா?

 

இல்ல வேலை தெரிஞ்ச பொண்ணை தான் நீங்க உங்க மகனுக்கு கட்டி வைப்பீங்க! நீங்க உங்க வீட்டுக்கு மருமகளை எடுக்குறீங்களா இல்ல வேலைக்காரிய எடுக்குறீங்களா? ஆங்..

 

சரி நீங்க யாரா வேணாம் எடுங்க  எனக்கு அது பிரச்சனை இல்ல? எதுக்கு எனக்கு கல்யாணம் ஆக கூடாதுன்னு நினைக்கிறீங்க?  என்னை ஏன் பஜாரி சொன்னீங்க? 

 

யார் வீட்டுக்கு முன்னாடி போய் நின்னு நான் சண்டை போட்டதை நீங்க பார்த்தீங்க? ம்… என் அப்பாவை மரியாதை இல்லாம அடிமையா நான் நடத்துறேனா?  நீங்க இங்க குடி வந்து எத்தனை நாள் ஆகுது? வந்த ஒரு மாசத்துல உங்களுக்கு என்னைப்பத்தி தெரிஞ்சிடுச்சா என்ன? 

 

என் அப்பனா எனக்கு உசுரு! அவரு எனக்கு அப்பா மட்டும் இல்ல எல்லாமே அவர் தான். அப்பாவா அம்மாவா ஒரு நண்பனா  எனக்கு எல்லாமுமா அவர் தான் இருக்கார். அவரை நான் ஒருமையில தான் பேசுவேன், கிண்டல் பண்ணுவேன் செல்லமா அடிக்க கூட செய்வேன் !

 

அது எனக்கும் எங்க அப்பாக்குள்ள நடக்கற விஷயம் அதை வெளிய இருந்து பார்க்கிற உங்களுக்கு தப்பா தெரிஞ்சா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? 

 

இப்படி என்னை தப்பா சித்தரிச்சி எனக்கு கல்யாணம் நடக்க கூடாதுனு நினைக்கிறீங்களே! என்னைப்பத்தி தப்பா பேசுறீங்களே எனக்கு கல்யாணமே நடக்காம போனா, என்னோட சாபம் உங்களை சும்மா விடுமா? 

 

உங்க பையனை தானே சேரும்! உங்க பையன் நல்லா வாழனும் நினைக்கிற நீங்க ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சி உங்க பையனுக்கு சேர்த்து பாவத்தை சேர்த்துக்கிறாதீங்க! 

 

நீங்க பேசினதால எங்க அப்பா இடிஞ்சி போய் உட்காந்திருக்கார். அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன பண்றது? எங்க போறது? உங்க வார்த்தை ஒரு குடும்பத்தையே சிதைக்க இருந்தது.

 

உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து தான்  இவ்வளவு தூரம் பேசிட்டு இருந்தேன். இனியும் அப்படி இருக்க மாட்டேன்.. இனி உங்க புள்ளை மேலே மட்டும் அக்கறை படுங்க ஊர்ல இருக்க எல்லா பசங்க மேலயும் அக்கறை படாதீங்க! நான் வர்றேன்..” என்று

ஒரு நிமிடமும் கூட அங்கு நிற்காமல் விறுவிறுவென வெளியேறி விட்டாள். 

 

அவள் மட்டுமே அங்கே பேசிக் கொண்டிருந்தாள். சம்ருதி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. வளர்மதி வாயடைத்து போய் விட்டார். 

 

சம்ருதி சென்றதுமே இருக்கையில் அமர்ந்தவருக்கு தான் பேசின வார்த்தையின் வீரியம் புரிந்தது. அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சாட்டையால் அடித்தது போல இருந்தன. 

 

தன் வாயிலிருந்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்க கூடிய வார்த்தைகளை உபயோகித்து விட்டதை எண்ணி தன்னை தானே கண்டு அருவருத்தார். 

 

தாயில்லாத பெண்ணின் வாழ்க்கையை தனது கொடுக்கான நாக்கை வைத்து விஷவார்த்தைகளை உதிர்த்து அழிக்க இருந்ததை நினைத்து கலங்கி போயிருந்தார். 

 

அக்காவின் முகத்தில் கண்ட கலக்கத்தை கண்டு மனதில் ஓடுவதை கணித்தார். அவர் பேசின வார்த்தைகளுக்காக வருந்துகிறார் என்று புரிய, அவரை வருந்த விட்டார்.

 

சம்ருதி மேல் கனிவு வரும் கனிவு பாசமாக மாறி அவளையே மருமகளாக ஏற்றுக் கொள்ள முடிவெடுத்து விட்டால் அவ்வளவு தான் தனது திட்டத்தை முழுக்கு போட வேண்டியது தான். அது நடக்க கூடாது சம்ருதி மேல் அவளுக்கு இறக்கம் வரக் கூடாது என்று எண்ணியவர் கோமதியின் அருகே வந்தார்.

 

“அக்கா! பார்த்தியா எப்படி பேசிட்டு போறான்னு! ஒரு பெரிய மனுஷினு உன் மேலே ஒரு மரியாதை இருக்கா? எதுக்ககாக அப்படி சொல்றாங்கன்னு யோசிச்சு தன்னை திருத்திக்கணும் நினைக்காம உன்னை எப்படி பேசிட்டு போறானு! 

 

நீ சொன்னது தான் கா நடக்கும் இவளை யார் தான் கட்டுவா? இப்படி வார்த்தைக்கெல்லாம் காரணம் கேட்டு சண்டை போட்டா குடும்பம் வெளங்குமா?” என அவர் மனதில் வெறுப்பை இன்னும் திணிக்க, அவரோ கைநீட்டி தடுத்தார்.

 

“நீயும் ஒரு புள்ளை

 வச்சிருக்க வளரு! அந்த பொண்ணை பத்தி பேசி நீயும் பாவத்தை சேர்த்துக்காத!” என்று உள்ளே சென்று விட, அக்காவின் வார்த்தைகள் அவருக்கு அதிர்ச்சியை தான் தந்தது. 

 

இப்படியே சாதரணமாக விட்டால் ஒரு குடும்பம் சமாதானமாகி கல்யாணத்தில் முடிந்தால் என்ன செய்வது. அப்படி நடக்க கூடாது. இரு குடும்பங்களுக்கு இடையே வெறுப்பு தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவர் மாறனின் வருகைக்காக காத்திருந்தார். 

 

அவனிடம் இல்லாதது பொல்லாதது சொல்லி இரு குடும்பங்களிடையே சண்டை மூட்ட நினைக்கிறார். அவரது நேரம் அன்று மாறன் இன்னும் வந்திருக்கவில்லை. வேலை பழு அதிகம் இருப்பதால் தாமதமாகும் என்று கோமதியிடம் சொல்லியிருக்க, அதை அறியாத வளர்மதி அவனுக்காக காத்திருந்தார்.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்