Loading

பிறை -15

 

 

சரியாக சதாசிவம் கூறியதை போல இரண்டே நாளில் மயிலோடு வீடு வந்து சேர்ந்தார் அகிலாண்டேஸ்வரி.

 

வழக்கம் போல வாசலை பெருக்கி விட்டு வீட்டிற்குள் வந்து டீயை அடுப்பில் வைத்தவர், சாமி படத்திற்கு பூக்களை வைத்து, சூடம் காட்டி முடிக்கவும்.. டீ கொதிக்கவும் சரியாக இருந்தது.

 

வேகமாக வந்து அடுப்பை அணைத்து விட்டு டீயை ஊற்றி கொண்டு வந்து கணவருக்கு கொடுக்க.. வாசலில் கேட்ட சத்தத்தில் டீயை அங்கேயே வைத்து விட்டு வெளியே வந்தார் சிவானந்தம்.. அவரை தொடர்ந்து சிவகாமியும்.

 

மயில் கையில் பையுடன் வாசலில் நிற்க.. அவள் அருகே வீட்டு வாசலில் இடுப்பில் கை வைத்துக் கொண்டு மேற்பார்வை பார்த்துக் கொண்டே நின்றார் அகிலாண்டேஸ்வரி.

 

” வாங்க அத்தை ” சிவகாமி அழைத்ததும்..

 

” ஏதே.. வாங்க அத்தையா.. என் மகனை கட்டிட்டு வரும் போது இந்த வீட்டையும் கையோடவா சீதனமா உங்க அப்பன் கொடுத்து விட்டான்.. இது என் வீடு டி.. நீ என்ன என்னைய வாங்கன்னு கேட்குறது ” நறுக்கென்று கேட்டார் அகிலாண்டம். வந்த கண்ணீரை மறைத்து கொண்டு உள்ளே சென்று விட்டார் சிவகாமி.

 

” இந்தாண்ணே அம்மாவை கூட்டிட்டு வந்துட்டேன்.. நீங்க தான் அம்மாக்கு பொறுப்பு. என் தலையில கட்டிட்டு புருஷனும் பொண்டாட்டியுமா இருக்கலாம்னு பார்க்காதீங்க. என்ன மா நான் சொல்லுறது.. நீதான் இந்த வீட்டோட எஜமானி.. உன்ன யாரும் வெளிய அனுப்ப முடியாது. நீ ராஜியம் பண்ணிட்டு தான் மிச்சம் .. உள்ள போ ” என அகிலாண்டத்தை அனுப்பி விட.. முந்தாங்கியை உதறி இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டார் அகிலாண்டம்.

 

அன்னையை அனுப்பி விட்டு மயில் கிளம்ப எத்தனிக்க.. ” ஏன் வாசலோட போற மயிலு.. உள்ள வந்து காபி தண்ணி குடிச்சுட்டு போ ” மனம் கேட்காமல் சிவானந்தன் அழைத்ததும்..

 

” எங்க அம்மாவை வச்சு கஞ்சி ஊத்துனா போதும்.. துரத்தி விடாதீங்க ” என நடையை கட்டி இருந்தார் மயில்.

 

வீட்டிற்குள் வந்த அகிலாண்டம் பார்வையாலேயே வீட்டை அளந்தார்.

அவர் இங்கிருந்து போகும் பொழுது எப்படி இருந்ததோ அப்படியே தான் வீடு இருந்தது. ஆனால் சிவானந்தம் அப்படி இல்லையே.. மனைவியின் உரிமைக்காக சற்று மாறி இருந்தார்.

 

” அம்மாக்கு காபி கொடு சிவகாமி ” என வைத்து விட்டு சென்ற டீயை எடுத்து குடிக்க..

 

” எனக்கு தேவையானதை நானே அவ கிட்ட கேட்டுப்பேன்.. நீ என்ன புதுசா பேசுற.. எனக்கு சூடா ஒரு காபியும்.. காலையில சாப்பாட்டுக்கு பொங்கல் சாம்பார் உளுந்த வடை பண்ணு.. அப்பறம் பால் பீச்சி கொடுத்துட்டியா.. வேலைய முடிச்சுட்டா சாணியை தட்டி போட்டு வை ” என வந்ததும் வராததுமாக வரிசையாக அவளிடம் வேலையை வாங்க.. அமைதியாக அவரை பார்த்துக் கொண்டிருந்தார் சிவானந்தம்.

 

” சிவகாமி.. அம்மா சொல்லுற மாதிரி அவங்களுக்கு பொங்கலும் சாம்பாரும் வடையும் பண்ணிடு.. ” மகன் கூறியதும் அகிலாண்டத்திற்கு அத்தனை பெருமை.

 

மகன் தான் நினைத்ததை பேசியதில் அளவற்ற மகிழ்ச்சி. சிவானந்தம் செய்து குடு என கூறாமல் இருந்தால் கூட மாமியார் கேட்டதை விட வகை வகையாக அவருக்கு செய்து கொடுப்பார் சிவகாமி.

 

” காது கேட்கலையா.. அதான் என் மகன் சொல்லிட்டான்ல ” என்றதும் தலை அசைத்து உள்ளே சென்று விட்டார் சிவகாமி.

 

வேகமாக அரிசி, பருப்பை ஊற வைத்து விட்டு, வடைக்கும் உளுந்தை ஊற வைத்து விட்டு, பின் சம்பாருக்கு தேவையான காய்கறிகளை வெட்டத் தொடங்கினாள். மளமளவென வேலைகள் நடந்தேறியது.

 

ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் செய்து முடித்திருந்தார் சிவகாமி. தட்டில் அவர் கேட்டதை எல்லாம் வைத்து.. கூடத்தில் அமர்ந்திருப்பவர் முன்னே வைக்க…

 

” எனக்கு என்ன ஊனமா.. கூப்பிட்டா நான் வந்து சாப்பிட மாட்டேனா.. இங்க கொண்டு வந்து வைக்கிற ” அதற்கும் மருமகளை சாடினார்.

 

” மன்னிச்சிடுங்க அத்தை.. அங்க வாங்க சாப்பிடலாம் ” என தட்டை எடுக்கப் போகும் சிவகாமியை தடுத்தவர்.. ” இங்கேயே கொண்டு வா.. ” என அங்கேயே அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார் அகிலாண்டம்.

 

” அதான் காலை சமையல் முடிச்சாச்சுல.. போய் மாட்டு தொழுவதை பாரு.. நான் சொன்ன வேலையை முடி.. பதினொரு மணிக்கு மேலே நான் சொல்லுறத மதியத்துக்கு சமைச்சுக்கலாம்” என கட்டளையிட..

 

” நீங்க நிம்மதியா சாப்பிடுங்க மா.. நீங்க சொன்ன வேலை எல்லாம் எப்பவோ முடிச்சிட்டாங்க ” நிதானமாக பதில் அளித்தார் சிவானந்தம்.

 

” முடிச்சாச்சா.. இப்போதானே உன் பொண்டாட்டி அடுப்பு வேலையையே முடிச்சிருக்கா.. எப்படி அந்த வேலையை முடிச்சா.. ”

 

” அவ செய்யல மா.. தோட்ட வேலைக்கு எல்லாம் ஆள் வச்சுட்டேன். இனிமே வீட்டு வேலையை மட்டும் சிவகாமி பார்த்தா போதும் ”

 

” ஏனாம் உன் பொண்டாட்டி அதை எல்லாம் பார்க்க மட்டாளாமா … ”

 

” அவ ரொம்ப வேலை செய்யுறா மா.. வீட்டு வேலையை மட்டும் பார்க்கட்டும்.. அவனால முடியல அதான் ஆள் வச்சேன் ”

 

” வயசா ஆகிப் போச்சு.. என் வயசு என்ன.. இந்த வயசுல கூட நான் சும்மா உட்காருறது இல்ல.. ”

 

” உங்க தெம்புக்கு நீங்க பாருங்க.. அவ தெம்புக்கு அவ பார்க்கட்டும்.. ”

 

” இப்படியெல்லாம் அவ தான் உன்ன பேசச் சொன்னாளா டா ”

 

” அம்மா தேவையில்லாத பேச்சு எதுக்கு.. நீங்க கேட்குற எல்லாம் அவ பண்ணி கொடுப்பா.. நீங்க நிம்மதியா சாப்பிட்டு படுத்து தூங்குங்க ”  சிவானந்தம் கூறியதும்.. சாப்பிட்ட கையோடு எழுந்தவர்..

 

” இப்போ என்ன சொல்ல வர.. என்னால ஒரு வேலையும் செய்ய முடியாது.. தின்னுட்டு தூங்குங்கன்னு சொல்ல வரியா ”

 

” இப்படி பேசுற பேச்சுக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிச்சா நான் என்ன பண்ணுறது .. அவ வீட்டு வேலையை பார்க்கட்டும்.. தோட்ட வேலையை அவங்க பார்க்கட்டும்.. உங்களுக்கு இஷ்டம் இருந்தா நீங்க போய் மேற்பார்வை பாருங்க.. நான் காட்டுக்கு போறேன் வேலை கிடக்கு ” என சிவானந்தம் கிளம்பி விட.. சிவகாமி வேறு வேலை இல்லாமல் அடுக்களையில் நின்று கொண்டார்.

 

மதியம் சமையல் செய்யலாம் தான். ஆனால் அதற்கும் அவர் செய்ய சொல்லும் சாப்பாட்டை தான் செய்ய வேண்டும். இப்போது கேட்டால் தன் மீதே பாய்ந்து விடுவார் என்ற எண்ணத்தில் அமைதியாக நின்று விட்டார்.

 

சாப்பிட்டு முடித்து தட்டை கொண்டு வந்தவர்.. சிவகாமி சும்மா நிற்பதை பார்த்து.. ” இப்படி வேலை செய்யாம  சும்மா நின்னுட்டு.. தேவையில்லாம தோட்ட வேலைக்கு ஆள் போட்டு என் மகன் காசை காலி பண்ணிட்டு இருக்க .. வீட்ல இருக்குற மருமகள் செல்வத்தை கொண்டு வரனும்.. உன்ன மாதிரி அழிக்க கூடாது ” கைகழுவி சென்று  விட்டார் .

 

பொங்கி வந்த கண்ணீரை உள் இழுத்துக் கொண்டவர்.. அடுக்களையில் இருந்து வெளியேறி அவர்களது அறைக்கு சென்று படுத்துக் கொண்டார்.

 

மனம் ஊமையாக அழுதது. இந்த ஒரு வாரமும் கணவரின் திடீர் மாற்றத்தில் திக்கு முக்காடிப் போனவர்.. மீண்டும் தன் கூட்டுக்குள் புகுந்து கொண்டார்.

 

மகளுக்கு போனை போட்டு பேச வேண்டும் என்ற எண்ணம் வர.. அவள் அலுவலகத்தில் இருப்பாள் என அந்த எண்ணத்தையும் கைவிட்டவர்.. அமைதியாக படுக்க.. அப்படியே கண்ணசந்து போனார்.

 

சரியாக பன்னிரண்டு மணிக்கு எழுந்தவர்.. அவசரமாக அடுக்களைக்கு செல்ல.. அங்கே அகிலாண்டம் சமையலை ஆரம்பித்து இருந்தார். அதை பார்த்தவருக்கு பயத்தில் கரங்கள் நடுங்கியது.

 

***

 

பூஜை வேலைகள் ஜெகஜோதியாக நடந்தேறிக் கொண்டிருந்தது. ” இன்னும் எங்க உங்க பையனை காணோம்.. எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க ” மீனாட்சி புலம்ப.. திவாகரும் அவனது வரவிற்காக வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

” கொஞ்சம் பொறு மீனு.. அவன் தான் சொல்லிருக்கான் தானே.. கண்டிப்பா வருவான்.. ”

 

” மா நான் இந்த டிரெஸ்ல எப்படி இருக்கேன்.. ” பட்டுப் பாவாடை தாவணியில் வந்த மகளை பார்த்ததும் மகிழ்ந்து போனார்கள்.

 

” நாங்க எக்சிபிஷன் போன அப்போ ஒரு பொண்ணை பார்த்தோம் பாரு.. அந்த பொண்ணு அழகா கட்டிருந்தா.. அதை பார்க்கவும் உன் ஞாபகம் தான் வந்துச்சு.. அதான் சட்டுன்னு எடுத்து தைக்க கொடுத்தேன்.. நல்லா இருக்குள்ள ” என மகளை முன்னே பின்னே பார்த்து அனைத்தும் சரியாய் இருப்பதாய் உணர்ந்தார்.

 

” இந்த டிரஸ் உனக்கே செஞ்ச மாதிரி இருக்கு பாரு ” திவாகர் மகளை ரசிக்க.. வெட்கம் வந்து விட்டது அவளுக்கு.

 

” போங்க மா.. நீங்க சொன்னதுக்காக வியர் பண்ணேன்.. ஆனால் நடக்கவே முடியல..”

 

” பழகிடும் பாரு.. அப்போதானே சேலை கட்ட ஈசியா இருக்கும் ”

 

” என்னமோ சொல்லுறீங்க.. நான் போய் வெளிய தோட்டத்துல இருந்து போட்டோ எடுக்க போறேன் ” என ஓடி விட்டாள்.

 

வாசலை நோக்கி ஓடி வந்த தங்கையை பார்த்தவனின் விழிகள் சற்றே அதிசயத்தில் விரிய.. அவனை பார்த்ததும் மெதுவாக நடந்து சென்று தோட்டத்திற்குள் ஓடி விட்டாள் பார்கவி. ஏனோ தாவணியை பார்த்ததும் அவள் ஞாபகம்.

 

அவளது எண்ணத்தை ஒதுக்கி விட்டு உள்ளே சென்றவன்.. அன்னை கொடுத்த உடையை வாங்கிக் கொண்டு அமைதியாக மாடியேற.. பேச்சற்று போனார் மீனாட்சி.

 

” இவன் நிஜமாவே நம்ம பையன் தானா ”

 

” அதுல என்ன உனக்கு சந்தேகம்.. அவன் என்னைய மாதிரியே இருக்கான் பாரு ” கூறும் போதே அத்தனை பெருமை அவருக்கு.

 

” இன்னைக்கு எல்லாம் நல்ல படிய நடந்தா சரி தான் ” என மீனாட்சி வீட்டிற்கு வருகை தந்திருந்தவர்களை வரவேற்ற சென்றுவிட்டார்.

 

” எப்போ பார்த்தாலும் பட்டு பாவாடை தானா ” சுஷ்மிதா சலித்துக் கொண்டாள்.

 

” எனக்கு இதான் பிடிக்கும்..”

 

” இந்த முறை சேலை டிரை பண்ணேன் பிறை.. உன்னோட பாவாடை தாவணியை சுஷ்மிதா டிரை பண்ணட்டும் ” என்றதும் அவள் தோழியை பார்க்க.. சுஷ்மிதா தாவணி கட்டுவதாக ஒப்புக் கொண்டதும்.. பிறைக்கு, அவள் வைத்திருக்கும் ரவிக்கைக்கு நிகரான புடவையை எடுத்து கொடுத்தார் ரஞ்சினி.

 

புடவையை வாங்கியவள்.. அவளே அழகாக அதை உடுத்தியும் கொண்டாள். ” வாவ் பிறை.. இந்த ரோஸ் கலர் சேரில அப்படியே தேவதை மாதிரியே இருக்க டி ” என்றவள்.. அவள் வைத்திருக்கும் அலங்கார பொருளை வைத்து சின்ன சின்ன அலங்காரம் செய்து விட.. பிறையை பார்த்த ரஞ்சினி அசந்து போனார்.

 

பின் இருவருமே சேர்ந்து சுஷ்மிக்கு  தாவணியை கட்டி விட்டு அழகு பார்க்க.. அவளும் அதில் ஒயிலாக தான் இருந்தாள். பிறகு ரஞ்சினியும் ஒரு புடவையை கட்டிக் கொண்டு அலங்காரம் செய்து மூவருமாக இரண்டு தெரு தள்ளி இருக்கு வரலட்சுமி பூஜைக்கு சென்றனர்.

 

” மாமா வரலையா அத்தை ”

 

” அவங்களுக்கு முக்கியமான வேலை இருக்காம்.. இது பொண்ணுங்க கலந்துக்கிற பன்ஷன் வேற.. அதுனால நம்ம போவோம்.. இந்த பூஜையில கலந்துக்கிறது ரொம்ப நல்லது. கோமம் வேற பண்ணுறாங்க ” என ரஞ்சனி பேசிக் கொண்டே இருவரையும் வீடு வரை அழைத்து வந்து விட.. பிறை தயக்கமாகவே அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.

 

ஆதியின் பிறையும் பார்த்துக் கொண்டால் ???

 

சனா💗

 

Click on a star to rate it!

Rating 4.1 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
17
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்