
அத்தியாயம் – 17
பேராசிரியர் சரண்யாவின் அறையின் முன்னால் படபடப்புடன் நின்று, மெதுவாக கதவைத் தட்டினாள்.
“கம் இன்…” என்று பதில் வரவும் உள்ளே சென்றாள்.
“மேம்…”
“ஓ… வா அமுதினி… உட்காரு…” என்று சொல்லவும் அவளும் தயக்கமாக அமர்ந்தாள்.
சரண்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, இவளும் என்னவோ ஏதோவென்று கண்டபடி நினைத்துக் கொண்டிருந்தாள்.
“அமுதினி, ரீசென்டா உன்கிட்ட நிறைய மாற்றம் தெரியுது… என்னாச்சு? என்ன பிரச்சினை உனக்கு?”
அமுதினி எச்சரிக்கையாக, “நான் நல்லா தானே மேம் இருக்கேன்… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லயே… கொஞ்சம் பிஸி… அவ்வளவுதான்…”
ரண்யா அவளை நேராக பார்த்து, “இல்ல அமுதினி, ஏதோ இருக்கு… நீ ரொம்ப டிப்ரஸ்ட்-ஆ இருக்க… ஃபேகல்டி மெம்பர்ஸ் எல்லாரும் நோட்டீஸ் பண்ணியிருக்காங்க… நீ கிளாஸில் ஆரம்பத்தில் கான்சென்ட்ரேஷன் கம்மி ஆகிட்டு… இப்ப என்னன்னா எல்லாத்தையும் ஒன்னும் விடாம பார்ட்டிசிபேட் பண்ணி… உன் ஹெல்த்தை கவனிக்காம ரொம்ப பிஸியாவே வச்சிட்டு இருக்கீயாம்… அதான் கேட்கிறேன்? என்ன பிரச்சினை உனக்கு?” என்று வினவ,
அமுதினி தயங்கினாள்.
அவள் என்ன சொல்வது? சரண்யா-விடம் தன் நிலைமையை என்னவென்று சொல்லி புரிய வைப்பது?
“மேம், எனக்கு… சில பர்சனல் இஸ்யூஸ் இருந்துச்சு… ஆனா நான் இப்ப மேனேஜ் பண்ணிட்டு இருக்கேன்… என் படிப்புல ரொம்ப கவனமா இருக்கேன்…”
“அது நல்லதுதான் அமுதினி… ஆனா, உன் மெண்டல் ஹெல்த்? அதுவும் முக்கியமில்லையா? நீயொரு தெரபிஸ்ட் ஆகப் போற… ஆனா, உனக்குள் இருக்கும் பிரச்சனைகளும் ஒரு சப்போட் தேவை… நீ யாரோ ஒருத்தவங்க கிட்ட மனசுவிட்டு பேசணும்… உனக்கு தேவைன்னா நம்ம கேம்பஸில் கவுன்சிலிங் சர்வீஸ் இருக்கு… அதை யூஸ் பண்ணிக்க…” என்று பரிவுடன் சொன்னார் சரண்யா.
அமுதினி அமைதியாக கேட்டுக் கொண்டபின், மெதுவாக, “மேம், நான் யோசிச்சு பார்கிறேன்… அண்ட் தாங்க் யூ மேம்…”
அவர் மென்னகையுடன், “அப்பறம் அமுதினி உன்கிட்ட இன்னொரு குட் நியூஸ் சொல்லணும்… நம்ம ஆரவ் சார் உன் ஃபீல்ட் ட்ரிப் ரிப்போர்ட் ரொம்ப நல்லா இருந்துச்சு-னு உன்னைப் பற்றி என்கிட்ட மென்ஷன் பண்ணினார்… உனக்கு ட்ராமா கேரில் நல்ல டேலண்ட் இருக்காம்… அவர் உன்னை தன்னோட ரிசர்ச் ப்ராஜெக்ட்ல இன்வால்வ் பண்ண விரும்புறதா அப்போ சொன்னாரு… உனக்கு இதுல விருப்பம் இருக்கா?”
அமுதினி அதிர்ச்சியடைந்தாள். அவள் மனம் சூறாவளியாய் சுழன்று கொண்டிருந்தது.
“ஆரவ் சார்… என்னை? அவருடைய ரிசர்ச்-ல? நானா? நிஜமா தான் சொல்றீங்களா மேம்?” என்று நம்பாமல் மீண்டும் மீண்டும் கேட்டாள் பெண்.
“ம்ம்… ஆமா…”
“மேம்… அவர் மொதல்ல சொல்லி இருக்கலாம்… இப்போ அவர் முடிவுல மாற்றம் இருந்திருக்கலாமே?”
“நோ… நோ… இன்னைக்கு வந்து ரீமைண்ட் பண்ணிட்டு போனதே ஆரவ் தான் அமுதினி…”
“என்ன?”
“ஆமா மா… அவர் எப்பவும் தன்னோட ஆராய்ச்சியில் சில குறிப்பிட்ட, டேலண்ட் இருக்கும் மாணவர்களை மட்டும் தான் சேர்த்துப்பார்… அதான், உன்னோட வொர்க்கை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி கூப்பிட்டு இருக்கார்… உனக்கிது பெரிய வாய்ப்பா இருக்கும் அமுதினி… நீ PhD-க்கு அப்ளை பண்றப்போ, ரொம்ப உதவியா இருக்கும். நீ இதை கன்சிடர் பண்ணி பதில் சொல்லு…” என்று பொறுமையாக சொன்னார்.
அமுதினிக்கு முரண்பாடாக இருந்தது. ஒருபுறம், இது ஒரு அற்புதமான வாய்ப்பு. ஆரவுடன் சேர்ந்து ஆராய்ச்சிப் பணிகளைச் செய்வது, அவளுடைய தொழில்முறை வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவனது வழிகாட்டுதல் விலைமதிப்பற்றது. இந்த அனுபவம் அவளுடைய எதிர்காலத்தை மிகவும் வலுப்படுத்தும்.
ஆனால் மறுபுறம்… ஆரவுடன் பணிபுரிவது? அவன் அவளை வெகுவாக காயப்படுத்தியிருந்தான். அவன் அவளை நிராகரித்தான். ஒவ்வொரு நாளும் அவனைப் பார்ப்பது, அவனுடன் பழகுவது – அவளால் அதைச் சமாளிக்க முடியுமா? அவளால் அதை உணர்ச்சி ரீதியாகக் கையாள முடியுமா?
இதைப்பற்றி யோசிக்கையில், இந்த ஆராய்ச்சி அவளுக்கு தேவையா என்று இருந்தது!
சரண்யா அவளது பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
“மேம், நான்… நான் கொஞ்சம் யோசிச்சு நாளைக்கு சொல்றேன். இது ரொம்ப பெரிய முடிவா இருக்கும்… அதனால, எனக்கு டைம் தேவை…”
“நிச்சயமா அமுதினி…. உனக்கு தேவையான நேரத்தை எடுத்துக்க… ஆனால், இது ஒரு நல்ல வாய்ப்பு… தனிப்பட்ட உணர்வுகள் காரணமா இதைத் தவற விட்டுடாத… சம்டைம்ஸ், புரொபஷனல் க்ரோத்-காக, நாம சங்கடமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும்… பட், அந்த சூழ்நிலைகள் தான் நம்ம மனசை வலிமையாக்குது…”
அதற்கு உடன்பட்டு, “நீ சொல்ல வருவது எனக்கு புரியது மேம்… நான் அதைப் பற்றி பலமுறை யோசிச்சு, நல்ல முடிவா சொல்றேன்…” எனக்கூறி அவரிடமிருந்து பெற்றுக் கொண்டாள் அமுதினி.
அன்று மாலை, அமுதினி கல்லூரியின் வளாகத்தில் உள்ள தோட்டத்திற்கு தனியாக சென்று குழம்பிப் போய் அமர்ந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் பிடித்த இடம் – ஒரு அமைதியான சூழலில், ஒரு பெரிய மரத்தின் கீழேயிருக்கும் ஒரு பெஞ்சில்!
‘ஆரவ் சார் ஏன் என்னை தன் ரிசர்ச்-ல இன்வால்வ் பண்ண விரும்புறார்? அவர் என்னை அவ்வளவு கடுமையா பேசி மூஞ்சியில கூட முழிக்க வேணாம், உன்னை பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்குன்னு அப்படி சொன்னாரு… இப்போ இது என்ன புதுசா? கில்ட்-னால இதெல்லாம் பண்றாரா? இல்ல உண்மையாவே என் வொர்க்கை அப்ரீஷியேட் பண்றாரா?’ என்று அவளது எண்ணங்களில் எங்கேங்கோ பயணித்தது.
அதன் பின்னர், வீட்டிற்கு சென்று அதீத சிந்தனையில் இருந்த அமுதினி தன் நாட்குறிப்பை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.
“எனக்கு இன்னமும் சுத்தமா புரியல.. ஆரவ் சார் என்னை முழுமையாக ஒதுக்கி தள்ளிட்டார்… ‘நீ என்னை புஷ் பண்ணாதே, அதுக்கு நான் தயாரா இல்ல… நீ என் கண்ணு முன்னாடி வந்திடாதே…’ ன்னு அவ்வளவு கடுமையா சொன்னாரு… அவர் ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கார்… அதனாலதான் அப்படி பேசி… என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கார்.. இரண்டு வாரமும், அதுல இருந்து வெளியே வரமுடியாமல போராடிக்கிட்டு இருக்கேன்… ஆனாலும், முடியாம என்னை நானே வகுத்திக்கிட்டு படிப்புல கவனம் செலுத்தினேன்… அவரை முழுசா அவாய்ட் பண்ணினேன்… நான் அதிலிருந்து மூவ் ஆன் ஆக ட்ரை பண்ணினேன்…
ஆனால், இப்போ அவர் என்னை தன்னோட ரிசர்ச்-ல் சேர்க்க விரும்புகிறார்… ஏன்? இவர் என்ன கேம் ப்ளே பண்றார்? இல்ல நான்தான் ஏதோ ரொம்ப ஓவர்-தின்கிங் பண்றேனா?
இது ஒரு மிகப்பெரிய வாய்ப்புனு எனக்கும் தெரியும்… நான் மறுக்கல… ஆரவ் சார் ஒரு ஆசிரியரா அவ்வளவு சின்சிரீயரா, பாடங்களை புரியும்படி எடுப்பார்… ரொம்ப திறமையானவர்… அவரோட வொர்க் பண்றது என் கேரியருக்கு பெரிய பூஸ்ட் தான்… ஆனா, அவரோட வொர்க் பண்ணுவது எமோஷனலி கஷ்டமா இருக்கும்… அவரை தினமும் பார்க்குறது, அவரோட பேசுறது, சில மீட்டிங்ஸ், பல டிஸ்கஷன்ஸ் இதையெல்லாம் என்னால ஹேண்டில் பண்ண முடியுமா?
என்னோட சரண்யா மேம் சொன்னது கூட சரிதான்… நான் என் பர்சனல் ஃபீலிங்-னால் என் எதிர்கால வாய்ப்புகளை இழக்க கூடாது… நான் புரொபஷனலா இருக்க பழகணும்… பவுண்டரிஸ் மெயின்டெய்ன் பண்ண கத்துக்கணும்… பர்சனல் வேற, புரொபஷனல் வேற ன்னு மனசுல பதிய வைக்கணும்… தெரபிஸ்-க்கு இது ஒரு அவசியமான ஸ்கில்…
இது ஒரு சோதனை… என்னை நானே சோதித்துப் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பா இருக்கட்டும்… நான் மனதளவில் ஸ்ட்ராங்-ஆ இருக்க முடியுமா? நான் புரொபஷனலா இருக்க முடியுமா? அவரை ஒரு ஆசிரியராக கூட வேணாம், எந்த ஒரு விகல்பமும் இல்லாம, ஒரு வழிகாட்டியா மட்டுமே பார்க்க முடியுமா?
நான் தெளிவா முடிவெடுத்துட்டேன்… நான் இந்த வாய்ப்பை பயன்படுத்திப்பேன்… ஆனா, நான் எனக்குன்னு ஒரு எல்லையை வகுத்துப்பேன்… பியூர்லி புரொபஷனல்… என் எமோஷன்ஸை கட்டுப்படுத்துவேன்… நான் ஆரவ் சாரை ஒரு மென்டரா மட்டும்தான் பார்ப்பேன்… அவ்வளவுதான்… தனிப்பட்ட பேச்சுகளும் வேணாம்… தனிப்பட்ட விருப்பங்களும் வேணாம்… எங்களுக்குள்ள இந்த ஆராய்ச்சிக்கு சம்மந்தப்பட்ட பேச்சுகள் மட்டுமே இருக்கணும்…
என்னால் இதையெல்லாம் ஒழுங்கா கடைபிடிச்சு இருந்திட முடியும்… நான் வலிமையானவள்… நான் திறமையானவள்…”
என்று மனதில் உள்ளதை காகிதத்தில் எழுதிவிட, ஒருவித நிம்மதியை உணர்ந்தாள் அமுதினி.
******
மறுநாள் காலை, அமுதினி பேராசிரியர் சரண்யாவிடம் போனாள்.
அவரின் முன்நின்று, “மேம், நான் ஆரவ் சாரோட ரிசர்ச் ப்ராஜெக்ட்ல ஜாயின் பண்ற முடிவை எடுத்திருக்கேன்…” என்று சொல்லவும் சரண்யா மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.
“எக்ஸலண்ட் டெசிஷன் அமுதினி! நான் உன்னை பெருமையாக ஃபீல் பண்றேன்… நீ புரொபஷனலா தின்க் பண்ற… நான் ஆரவ்-கிட்ட இன்பார்ம் பண்றேன்… அவர் உன்னை கைட் பண்ணிப்பார்…”
“தேங்க் யூ மேம்,” அமுதினி சொன்னாள், வெளியே அமைதியிருந்தாலும், உள்ளுக்குள் புயலே அடித்துக்கொண்டிருந்தது.
அன்று மதியம், ஆரவ் கிருஷ்ணாவிடமிருந்து அமுதினிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அந்த உள்பெட்டியை பார்த்தபோது, அவனது பெயரைப் பார்த்து அவளது இதயம் நின்று துடித்தது. அதனை நடுக்கத்துடன் திறந்தாள்.
அதில்,
**பொருள்: ஆராய்ச்சி உதவியாளர் – அதிர்ச்சி-தகவல் பராமரிப்பு ஆய்வு**
**அமுதினி,**
**பேராசிரியர் சரண்யா எனது ஆராய்ச்சி திட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக உங்களுக்குத் தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியில் இருந்து தப்பியவர்களுக்கான சிகிச்சை செயல்திறன் குறித்த ஒரு நீண்டகால ஆய்வு.
காலம்: ஆறு மாதங்கள்.
நீங்கள் தரவு சேகரிப்பு, வாடிக்கையாளர் நேர்காணல்கள் மற்றும் தரவு பகுப்பாய்வில் ஈடுபடுவீர்கள்.
வாராந்திர கூட்டங்கள் – ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 3 மணிக்கு.**
**நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு எனது அறைக்கு வாருங்கள். திட்ட விவரங்கள், எதிர்பார்ப்புகள், காலவரிசை மற்றும் நெறிமுறைகளைப் பற்றி விவாதிக்கலாம். தயவுசெய்து, அதற்கு தொடர்புடைய ஆவணங்களை கொண்டு வாருங்கள் – உங்கள் ஆய்வறிக்கை முன்மொழிவு, நடைமுறை அறிக்கைகள், ஆராய்ச்சி முறை குறிப்புகள்.**
**சரியான நேரத்தில் வர வேண்டும். தாமதமாக வர வேண்டாம்.**
**ஆரவ் கிருஷ்ணா**
என்று தூய ஆங்கிலத்தில் வந்திருந்தது.
அமுதினி அணைத்துவிட்டு பெருமூச்சு விட்டாள். அவளது கைகள் சிறிது நடுங்கின. அவனது தொனி – வெறுமையானது, தொழில்முறையானது, அதில் அரவணைப்பு இல்லை, எவ்வித தனிப்பட்ட தொடர்பும் இல்லை. அது ஒரு வணிக மின்னஞ்சல் போல இருந்தது.
‘சரி… அவரும் புரொபஷனலா இருக்கார்… நானும் அப்படித்தான் இருப்பேன்… இருந்திடணும்…’
ஆனால், அவள் இதயம் பதட்டமாக துடித்துக் கொண்டிருந்தது. நாளை அவள் அவனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வாகன நிறுத்துமிட சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக. அவனது அறையில், தனியாக… அவர்கள் இருவரும் மட்டும் சந்தித்துக் கொள்ள போகிறார்கள்.
அவளால் முடியுமா? அவளால் வலிமையாக இருக்க முடியுமா? அல்லது அவளுடைய உணர்ச்சிகள் மீண்டும் பொங்கி எழுமா? அவள் அவனைப் பார்க்கும்போது, அவளுடைய இதயம் மீண்டும் உடைந்து விடுமா?
அவளுக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம் – நாளை, ஆரவ் மற்றும் அமுதினி மீண்டும் தனியாக, ஆராய்ச்சி என்ற பெயரில் ஒரே அறையில் இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கிடையே இருக்கும் தீர்க்கப்படாத பதற்றம், சொல்லப்படாத உணர்வுகள், நீடித்த வலி – இவையெல்லாம் என்ன செய்யும்?
இந்த முறை ஆராய்ச்சி என்று தொழில்முறை ஒத்துழைப்பின் பெயரில் விதி அவர்களை மீண்டும் ஒன்றாக இணைத்துள்ளது. ஆனால் தொழில்முறை எல்லைகளுக்குள், தனிப்பட்ட உணர்வுகளை மறைக்க முடியுமா? அவற்றை அடக்க முடியுமா?
மறுநாள் – வெள்ளி, 3 PM – அந்த சந்திப்பு எல்லாவற்றையும் தீர்மானிக்கும். அவர்கள் இருவரும் முற்றிலும் தொழில்முறை ரீதியாக இருக்க முடியுமா? இல்லை அவர்களுக்குள் நடந்த பிரச்சனைகள், அதனால் விளைந்த மனஸ்தாபங்கள் எல்லாம் சேர்ந்து மீண்டும் இக்கட்டான நிலை உருவாகுமா?
அமுதினி அது பற்றிய எந்த அபிமானமும் இல்லை. ஆனால், ஒன்று உறுதி – நாளை அவள் அவனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவள் வலுவாக இருக்க வேண்டும். அவள் தொழில்முறை ரீதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவனுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும்.
அவளால் முடியுமா?
********
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
+1
