Loading

நிதர்ஷனாவின் கூற்றில் ரித்திகா கடிந்தாள்.

“என்ன தகவல் வந்துருக்கு? இவ்ளோ நேரம் புலம்பிட்டு இருக்கோம்ல சொல்ல வேண்டியது தான?” என நிதர்ஷனாவிடம் சீறிட,

“எனக்கே அவன் இப்ப தான் மெசேஜ் பண்ணுனான். ஒரு இடத்துக்கு வர சொல்லிருக்கான்” என்றாள் நிதானமாக.

“வாட் என்ன இடம்?” எனக் கேட்டதும், நிதர்ஷனா தனது கையடக்க கருவியை எடுத்து காட்டினாள்.

முதன்முறை இத்தாலிக்குச் செல்லும் முன், நிதர்ஷனாவிற்கு எலிசா போன்றே அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ப்ளூட்டுத் போன்ற கருவியில் இருந்த சின்ன ஸ்க்ரீனை காட்டினாள்.

தற்போது இத்தாலிக்கு வரும் முன் மீண்டும் நிதர்ஷனாவிடம் அதனைக் கொடுத்திருந்தான்.

“நீ என்கூட தான இருக்க? அப்பறம் எதுக்கு இது?” நிதர்ஷனா கேட்டதும் “தேவைப்படலாம்” என்றிருந்தான்.

உண்மையில் அதில் தான் தற்போது அவன் செய்தி அனுப்பும்படி ஆகி விட்டது.

அவனிடம் அலைபேசி தற்போது இல்லை எனப் புரிந்துகொண்ட ஆஹில்யன், “பாஸ் ஏதோ டேஞ்சர்ல இருக்காருன்னு நினைக்கிறேன்! மெஸேஜ்ஜ காட்டு” எனக் கேட்டதும் நிதர்ஷனா விழித்தாள்.

“அதெல்லாம் காட்ட முடியாது” அந்த ஏ. ஐ கருவியை அவள் நெஞ்சில் மறைத்துக் கொண்டு கூற, “பாஸ் எங்க இருக்காருன்னு தெரியனும்ல” என்றான் அவன்.

“ஏதோ ‘ஐலேண்ட் ஆப் சைலன்ஸ்’னு அனுப்பி இருக்காரு. அதான் லொகேஷனாம்!” என்றதும் ஆஹில்யனும் அதிர்ந்தான்.

“என்னது அந்த தீவா? ஓ! காட்…” என்று நெற்றியில் கை வைத்தான்.

ஆதிசக்தியோ, “அங்க எதுக்கு இவன் போனான். ஆஹில், அங்க அலெஸ்ஸோட முன்னோர்களுக்கு சொந்தமான ஏதோ ஒரு பில்டிங் இருக்குன்னு அப்பப்போ அலெஸ் அங்க போவான். நிறைய தடவை நான் அவனை தடுத்துருக்கேன் அங்க போக வேணாம்னு” என்றதில், இளவேந்தன் “அங்க என்ன இருக்கு ஆதி” என்றார்.

“சான் ஜூலியோ தீவு. 4 ஆம் நூற்றாண்டுல விஷம் நிறைந்த பாம்புகளாலும் நோயாளிகளாலும் மான்ஸ்டராலும் நிறைஞ்சுருந்த தீவுன்னு சொல்லுவாங்க இளா. அதுக்கு அப்பறம் ஒரு கிருஸ்துவ போதகர் அந்த இடத்தை முழுமையா சுத்தம் செஞ்சதா சொல்வாங்க. இப்பவும் விஷம் நிறைஞ்ச பாம்புகள அங்க ரகசியமா வளர்க்குறதா சில புரளிகள் இருக்கு.

12 ஆம் நூற்றாண்டோட முடிவில்லா சிற்பங்கள் அங்க தான் இருக்கு. அந்த தீவை சுத்தி ஒரு அமைதியான வாக்வே இருக்கும். மெடிடேஷன் பண்ணக்கூடிய அமைதி அந்த இடம் குடுக்கும். அங்க டூரிஸ்ட் வருவாங்க தான். ஆனா ஒரு சில இடங்களை தவிர மீதி இடங்களை உபயோகிக்க யாருக்கும் அனுமதி இல்ல. ஆனா அலெஸ்க்கு இருக்கு. அவனும் அந்த தீவை பராமரிக்கிறதுல முக்கிய பொறுப்புல இருக்கான்.

ஒரு முறை அந்தத் தீவுக்குப் போனப்ப, பிரைவேட்டா மெயின்டெய்ன் பண்ற இடத்துல இருந்து ஒரு பாம்பு வந்துடுச்சு. அதுல நான் ரொம்ப பயந்துட்டேன். நிறைய விசிட்டர்ஸ் பயந்து உடனே கிளம்பிட்டாங்க. அதுக்கு அப்பறம் அந்த இடத்த இன்னும் ரெஸ்ட்ரிக்ஷன் பண்ணுனாங்க. அங்க ஏன் இவன் போனான்… அதான் எனக்குப் புரியல” என்றார் படபடப்பாக.

அனைவருமே ஆழ்ந்த திகைப்பில் மூழ்கிட, நிதர்ஷனா மீண்டும் தன்னிடம் இருந்த ஏ. ஐ கருவியை ஒரு முறை மீளா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

சில மணி துளிகளில் அவளை ஆஹில்யனின் துணையுடன் அங்கு வரச் சொல்லி இருந்தான்.

தற்போது மீண்டும் அவனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. “ஐ வான்ன டேஸ்ட் யுவர் லிப்ஸ்…” என்று. அதைப் பார்த்து விட்டே ஆஹில்யனிடம் அந்தக் கருவியைத் தர மறுத்தாள்.

ஆனால், அடுத்த செய்தி சற்று தாமதமாய் அவளை அடைந்திருந்தது போலும். “ஒன் லாஸ்ட் டைம்!” என இணைக்கப்பட்ட செய்தியைப் படித்ததும் கரங்கள் நடுங்கித் துடித்தது.

அவளது உடல் உதறுவதைக் கண்டு நிவேதன் பதறினான்.

“என்னாச்சு நிதா?”

“யாஷ்… யாஷ்!” எனத் திணற,

ஆஹில்யன் விஷயமறிந்த அவசரமாக அங்கிருந்து கிளம்ப முற்பட்டவன், தங்களது ஆள்கள் சிலரையும் அங்கு அனுப்ப வைத்திருந்தான்.

“நானும் வரேன்…” என்றாள் நிதர்ஷனா.

“விளையாடுறியா? பாஸ் என்னை தீவுல பாம்புக்கு இரையாக்கிடுவாரு.”

“அவரு என்னையும் தான் வர சொல்லிருக்காரு” என்றதும் அவனாலும் மறுக்க இயலவில்லை.

நிவேதனோ “உன்னைத் தனியா அனுப்ப முடியாது நிதா. நானும் தான் வருவேன்” என்றிட, கதிரவன் “டேய் உங்க ரெண்டு பேரையும் அனுப்பிட்டு நான் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்க முடியாது. சேர்ந்தே போவலாம்” என்றான் வேகமாக.

ரித்திகா தான் பல்லைக்கடித்துக்கொண்டு “நீங்க என்ன பிக்னிக் போறீங்களா? எல்லாருமா சேர்ந்து போக…” என்றதும், இளவேந்தன் “எல்லாரும் போறது நல்லதுமா. யாஷ்க்கு உதவி தேவைப்பட்டா என்ன செய்றது?” என்றதில் ஆஹில்யன் நொந்தான்.

———

“ஐ ஹேவ் நோ சாய்ஸ் யாஷ்! வெரி சாரி!” என வெகு தணிவாய் மகனிடம் மன்னிப்பு வேண்டினார் அலெஸ்ஸாண்ட்ரோ.

அவரது குரலில் மிதமிஞ்சிய கேலி மிதந்தது.

யாஷ் பிரஜிதனின் ஒரு கை சங்கிலியால் கட்டப்பட்டிருக்க, அவனது கண்களில் சினம் படர்ந்திருந்தது.

“உன்னை என் வழிக்கு கொண்டு வர்றதுக்கு எனக்கு வேற வழி தெரியல யாஷ். நீ என் பையனா, எலைட் கம்பெனியோட சேர்மனா மட்டுமே இருக்கணும். அந்த இடத்தை யாருக்கும் விட்டுத் தரக்கூடாதுன்னு தான், அந்த நிவேதன் வரதராஜனோட பையன்னு தெரிஞ்சதும் அவனைக் கடத்துனேன்” என்றார் தீப்பிழம்புடன்.

“அவனெல்லாம் எப்பவோ சாக வேண்டியவன்… அந்த நீலகேசி நான் குடுத்த வேலையை ஒழுங்கா முடிச்சுருந்தா இந்தப் ப்ராபளம் அன்னைக்கே முடிஞ்சு இருக்கும்!” என்றதில் யாஷின் புருவ மத்தியில் சுருக்கம்.

“தட் நிதர்ஷனா… அதான் உன் ஸ்வீட்ஹார்ட் பிறந்தப்பவே அவளைக் கொலை பண்ண சொல்லி நீலகேசியை விலை பேசி இருந்தான் வரதா.

அவ மதர் நேம் என்ன…” என நெற்றித் தட்டி சிந்தித்தவர், “ஹான்… அமுதவல்லி. அவளை மேரேஜ் பண்ணிக்கிட்டதுல வரதராஜனோட ஆக்சுவல் வைஃப், வரதா கூட சண்டை போட்டா. அந்த ப்ராபளம் கோர்ட் கேஸ்னு போறதுல வரதாவுக்கு விருப்பம் இல்ல. சோ, மொத்தமா அமுதவல்லி சேப்டரை க்ளோஸ் பண்ண நினைச்சான். அவள் வீட்ல வேலை பார்த்த நீலகேசியை வச்சே அமுதவல்லியையும் அவள் குழந்தையையும் தனியா கூட்டிட்டு வந்து, ஆள் வச்சு கொல்றது தான் பிளான். அதை எக்சிகியூட் செஞ்சதும் நான் தான்” என்றவரின் இதழ்கள் வளைந்தது.

“அது மட்டும் இல்ல. திருச்சி தான் வரதராஜனோட ஆக்சுவல் வைஃப்போட நேட்டிவ். அந்தப் பொண்ணு நிவேதனையும் ரித்திகாவையும் கூட்டிட்டு திருச்சி வந்துருக்கா. அதை நான் யூஸ் பண்ணி நிவேதனை முடிக்க சொன்னேன். உனக்கு அவன் காம்பெடிட்டிவ்வா இருக்க கூடாதுல பியூச்சர்ல!” என்றதும் யாஷ் அவரை வெறுப்பாகப் பார்த்தான்.

“தென், நினைச்சது மாதிரி நீலகேசி ரெண்டு பேரையும் தனியா கூட்டிட்டு வந்தான். பட் தட் புல்ஷிட் எனக்கே தண்ணி காட்டிட்டான்.”

“ரயில்வே டிராக்ல விழுந்து அமுதாவும் அந்த பேபியும் இறந்துட்டதா என்னையும் முட்டாளாக்கிட்டான். நிவேதனையும் கொலை பண்ணிட்டதா சொல்லிட்டு அந்த ரெண்டு பேரையும் தனியா வளர்த்து இப்ப அன்வாண்டட் தலைவலியைக் குடுத்துட்டான் தட் பாஸ்டர்ட்.

சின்ன வயசுல இருந்தே நிவேதன் கடத்தப்பட்டு எங்கயோ உயிரோட இருக்குறதா வரதராஜன் நம்பிட்டு இருந்தான். அதனால அவனைத் தேடி  சில மாசத்துக்கு முன்னாடி தான் கண்டுபிடிச்சான். நிதர்ஷனா உயிரோட இல்லன்னு நினைச்சுட்டு இருந்த வரதராஜன், நிவேதனைக் கண்டுபிடிக்கும்போது தான் நிதர்ஷனா உயிரோட இருக்குறதையும் தெரிஞ்சுக்கிட்டான். டி. என். ஏ டெஸ்ட் எல்லாம் தேவை இல்ல. வரதராஜனோட மதர் நிதர்ஷனா சாயல்ல இருப்பாங்களாம். சோ அவனுக்கு சந்தேகம் வந்து ஆராய்ஞ்சதுல அமுதாவோட குழந்தை அவ தான்னு தெரிஞ்சு ஷாக் ஆகிட்டான்.

போயும் போயும் அவள் கூட இருந்துட்டு நிவேதன் வர மறுத்ததுல கோபமும், அந்த நிதர்ஷனா உண்மை தெரிஞ்சு சொத்துல பங்கு கேட்டு வந்தா, அது ரித்திகாவை பாதிக்கும்னு அப்பவே அவளைக் கொலை பண்ண சொன்னான். பட் நான் தான் அவளை வேற ஒரு விஷயத்துக்கு யூஸ் பண்ணிக்கிட்டேன்…” என்றவரின் முகத்தில் வெற்றிப்புன்னகை மிளிர்ந்தது.

யாஷ் பிரஜிதன் அமைதியாய் அவரை வெறித்தான்.

“இங்க நீங்க செய்ற இல்லீகல் ரிசர்ச்க்கு அவளைப் பலி ஆக்கிருக்கீங்க ரைட்?” அடிக்குரலில் கேட்டவனின் சீறலின் அளவை அவன் மட்டுமே அறிவான்.

“ஹா ஹா எஸ் மை டியர். என் டாடி ஆரம்பிச்சு வச்சது இதெல்லாம். ஆனா அவரால வின் பண்ண முடியல. பட், நான் பண்ணேன். இந்த சான் ஜூலியோ தீவுல ஒரு காலத்துல இருந்த பாய்சனஸ் ஸ்நேக்ஸ்ல இருந்து கொடும் விஷம் நிறைந்த, நேரடியா கொல்லாம கொஞ்ச கொஞ்சமா கொல்ற மாதிரியான மருந்துகளையும், இன்னும் நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கிறது தான் எங்க திட்டம்.

நியூ ஏ. ஐ டெக் யூஸ் பண்ணி, மக்கள் யூஸ் பண்ற ஏ. ஐ ஏர் ப்ரெஷ்னர், மாஸ்டர் செப்னு, இது மூலமா கண்ணுக்கே தெரியாம அந்த மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யணும். உலக அளவுல பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்துனதுக்கு அப்பறம், அதுக்கான மாற்று மருந்தை எலைட் நிறுவனத்துக்கு சொந்தமான ஃபார்மா கம்பெனி மூலமா, உலகுக்கு அறியப்படுத்தனும்.

நார்மல் ஊசி, மருந்து மாதிரி இருக்காது அது. மனுஷங்களால அத இன்னொரு மனுஷனுக்கு செலுத்த முடியாது. நீ தயார் செஞ்ச அட்வான்ஸ்ட் ரோபோ வச்சு தான் அதை மனுஷனுக்குள்ள அனுப்பி கியூர் பண்ண முடியும். சோ நம்ம டெக்னாலஜியும் சேல் ஆகும், பார்மா கம்பெனியும் உலகத் தரத்துல முதல்ல இருக்கும்.

இந்த ஐடியாவை நானும் வரதாவும் நிஜமாக்க உன் பிட்ச் மதர அப்ரோச் பண்ணுனோம். அவளுக்கு இதெல்லாம் புரிய வச்சா, கண்டிப்பா ஒத்துக்க மாட்டான்னு, அவளைக் காதலிக்கிற மாதிரி நடிச்சு அவளோட திறமையை முழுசா எனக்கு சொந்தமாக்கிக்க நினைச்சேன். அதுலயும் எனக்கு வெற்றி தான்.

பட் தட் இடியட், என் கனவை பாதில தகர்த்துட்டு ஆராய்ச்சியை முழுசா முடிக்காம போய்ட்டா. அந்த எக்ஸ்சாட் மருந்துகளைத் தயாரிக்க எனக்கும் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டுச்சு. ஆனா அந்த மருந்தை முழுசா கண்டுபிடிக்கற நேரத்துல, டெக்னாலஜி உச்சத்துக்கு போகணும்னு தான், சின்ன வயசுலயே எக்ஸ்டரா பிரில்லியன்ஸ் இருந்த உன்னை ஆதிகிட்ட இருந்து மிரட்டி வாங்கிட்டு வந்தேன்.

உன்னை ஃபோர்ஸ் பண்ண முடியாது. பட் இன்டைரக்ட்டா ஃபோர்ஸ் பண்ணேன். ஒரே ரூம்ல அடைச்சு வச்சேன். நீ எதை படிக்கணும், எதுல ஆர்வம் காட்டணும்னு நான் தான் டிசைட் பண்ணுனேன். என் முயற்சி வீண்போகல, நான் லேசா ஆரம்பிச்சு வச்சதை நீ புடிச்சுக்கிட்ட. நான் நினைச்ச மாதிரி, உன்னோட ஆர்வத்துக்கும் அறிவுக்கும் தீனி குடுக்க, உனக்கு அட்வான்ஸ்ட் கோச்சிங் குடுக்க வச்சேன். உன்னை லர்ன் பண்ண வச்சேன். நான் நினைச்சதை விட பல மடங்கு ஸ்ட்ராங் ஆன யாஷ். ஐ ஆம் சோ ப்ரௌட் ஆஃப் யூ.

உன் மூலமா ஸ்பேஸ்க்கு அனுப்புற ரோபோஸ் யூஸ் பண்ணி, மொத்த உலகத்தையும் என் கண்ட்ரோல்ல எடுக்கணும். எங்க என்ன நடந்தாலும் அது முதல்ல எனக்கு தெரியணும். எவனும் எனக்கு எதிரா மருந்து கண்டுபிடிக்கவோ, டெக்னாலஜில முன்னேறவோ கூடாது. அப்படி ஆரம்பிச்ச உடனே நான் தெரிஞ்சுக்கணும்.

ஸ்பேஸ் ரோபோஸ் வெறும் ஸ்பேஸ்ல நடக்குற மாற்றத்த தெரிஞ்சுக்க மட்டும் இல்லல… உலகமே என் கண்ட்ரோல் வரணும்! எல்லாம் கை கூட வர்ற நேரத்துல, காதல் நோய் பிடிச்சு ஆட்டிடுச்சு உன்னை… உன் மதர் மாதிரி நீயும் என் கனவை செகண்ட் டைம் நாசமாக்கிட்ட. ஆனா இந்த தடவை நான் விட மாட்டேன். மொத்த குடும்பத்தையும் கொலை பண்ண நினைச்ச எனக்கு நீயே வாய்ப்பு ஏற்படுத்தி குடுத்துட்ட… இத்தாலில வச்சே எல்லாரையும் முடிக்கப் போறேன். இன்க்ளூடிங் மை பிலவ்ட் டாட்டர்!” என விஷமமாய் சிரித்தார்.

கண்மணியைப் பற்றிய உண்மை தெரிந்து விட்டதெனப் புரிந்தது யாஷ் பிரஜிதனுக்கு.

அவனது பார்வையை வைத்தே, “எனக்கு எப்படி தெரியும்னு பாக்குறியா? நிதர்ஷனா ஹாஸ்பிடல்ல இருக்கும்போது நான் வந்தேனே, அப்போ நீ சென்னைல இருக்குறதை வச்சு, உன் ரிசர்ச் பத்தி தெரிஞ்சுக்க தஞ்சாவூர்ல நீ இருந்த வீட்டுக்குப் போனேன்” என்றவர் அன்று நடந்த விஷயத்தை விளக்கினார்.

யாஷ் பிரஜிதனிடம் அடி வாங்கிய முருகன் தனது வாயை சரி செய்து விட்டு, அவனை வீழ்த்த காத்திருந்தான்.

அந்நேரம் தான், அலெஸ்ஸாண்ட்ரோ தஞ்சாவூருக்கு வந்தது. அப்போது முருகன் அலெஸ்ஸாண்ட்ரோவைக் கண்டதும் யாஷின் தந்தை என அறிந்து கொண்டான்.

அவரிடம் “உங்க பொண்ணை பார்க்க வந்தீங்களா சார்?” எனக் கேட்டான் நக்கலாக.

“வாட் ஆர் யூ டாக்கிங்?” அலெஸ்ஸாண்ட்ரோ கேட்ட பிறகே, “அட உங்க பொண்ணை பத்தி உங்களுக்கே தெரியாதா?” எனப் பாவப்பட்டவன், விஷயத்தைக் கூறி “உங்க பையனை விட மாட்டேன். உயிர் மேல பயம் இருந்தா ஓடிப்போய்ட சொல்லுங்க…” என்றார் கோபமாக.

அலெஸ்ஸாண்ட்ரோவிற்கு அதிர்வும் ஆதிசக்தியின் மீது ஆத்திரமும் அதிகரித்தது.

கண்மணியையும் ஆராய்ச்சியில் இறக்கி இருப்பாரே!

“என் இன்வெஸ்ட்மெண்ட்டே யாஷ் தான். அவனைக் கொல்றதா என்கிட்டயே சொல்றான்…” என்று முருகனை மேலும் கீழுமாக ஆராய்ந்தவர் அவனுக்கு விபத்து ஏற்படுத்த வைத்து விட்டே கிளம்பினார்.

—–

இதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, ஆஹில்யனுடன் நிதர்ஷனா நிவேதன் கதிரவன் ஆதிசக்தி இளவேந்தன் அனைவருமே கிளம்பினர்.

ரித்திகா தானும் உடன் வருவதாகக் கூறியதில், நிதர்ஷனா மறுத்தாள்.

“இங்க எல்லாமே ஆட்டோமேட்டிக்கா இருக்கு. வயசானவங்களும் இருக்காங்க. உனக்கு தான் இதெல்லாம் ஆக்சஸ் பண்ண தெரியும். நீ இங்க இரு…” என்று விட, அவள் எதிர்த்துப் பேசவில்லை.

மகேந்திரனுக்குத் துணையாக கிருஷ்ணவேணியும் அழகேசனும் அவருடன் அறையில் இருந்து கொள்ள, கண்மணியும் சிந்தாமணியும் பதற்றம் நிறைந்த வதனத்துடன் வாசலுக்கு வந்தனர். சரியாக கேட்டின் அருகில் வரும் நேரம் ஆஹில்யன் “நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க” என்றான்.

“கேட் ரொம்ப நேரம் திறந்து இருக்குறது சரி இல்ல கண்மணி உள்ள போகலாம்” என்று கேட்டை லாக் செய்ய எத்தனித்தாள் ரித்திகா.

“அம்மா பத்திரம்” கண்மணி ஆதிசக்தியிடம் கூறும்போதே, புயல் வேகத்தில் சாலையில் வழுக்கிக் கொண்டு வந்த கார்களில் இருந்து துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

கண்மணியும் சிந்தாமணியும் காதை மூடிக்கொண்டு அப்படியே காரின் அருகில் அமர்ந்து விட, இவர்களை மீண்டும் வீட்டினுள் அழைத்துச் செல்ல முயலும்போதே ஒரு துப்பாக்கி குண்டு ரித்திகாவின் தோள்பட்டையைப் பதம் பார்த்தது.

“ரித்தி…” ஆஹில்யன் வேகமாய் இறங்கி வந்து அவளைத் தாங்க, அதற்குள் யாஷுடைய ஆள்களும் அவர்களை சுற்றி வளைத்தனர்.

ஆனால் எதிராளிகள் சற்றும் பிசிராமல் கண்மணியின் மீதும் நிவேதனின் மீதும் குறி வைக்க, நிவேதன் கார் கதவை விருட்டெனத் திறந்து அதிலிருந்து உருண்டு வந்து கண்மணியை அடைகாத்தான்.

ஜன்னலோரம் அமர்ந்திருந்த நிதர்ஷனா கதவைத் திறந்து “வேகமா உள்ள வாங்க” என்று குனிந்தபடி அழைக்க, நிவேதன் தலையைக் குனிந்து கொண்டே கண்மணியை காரில் அமர வைத்து விட்டு, சிந்தாமணியை பிடித்தான்.

ரித்திகா தாக்கப்பட்ட போது அவள் கொடுத்த அழுத்தத்தில் தானாய் மூடிக்கொண்ட கேட்டில் சிந்தாமணியில் துப்பட்டா மாட்டிக்கொண்டது.

கடவுச் சொல் தெரியாததால் அவளால் திறக்கவும் இயலவில்லை. அதற்கு நேரமும் இருக்கவில்லை.

“சிந்தா வா!” நிவேதன் அழைக்கும்போதே அவனை நோக்கியும் குண்டு வந்ததில் அவள் பயந்து அரண்டாள்.

முன்னே அமர்ந்திருந்த கதிரவனும் தற்போது குனிந்தபடி இறங்கி, “நிவே உன்னை தான் டார்கெட் பண்றானுங்க.  நீ காருக்குப் போ!” என்று விட்டு வலியில் துடித்த ரித்திகாவை கண்ணீருடன் பார்த்திருந்த ஆஹில்யனை உலுக்கினான்.

“சீக்கிரம் அவளை உள்ள ஏத்து” என்றான் வேகமாக.

அதன்பிறகே நிகழ்வு உணர்ந்தவனாக, “ரித்தி ஒன்னும் இல்ல… கொஞ்சம் ஹோல்டு பண்ணு” என நடுங்கிய கரங்களுடன் அவளைத் தூக்கி உள்ளே அமர வைத்தான் ஆஹில்யன்.

யாஷின் ஆள்கள் எதிராளிகளை சுட்டு வீழ்த்தியும் இன்னும் ஆள்கள் வந்தபாடாக இருக்க, கதிரவன் துப்பட்டாவை கிழித்து விட்டு அவளையும் காரில் ஏற்றிய நொடி கார் சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றது.

நிதர்ஷனா ரித்திகாவைக் கண்டு வருந்தி, “அண்ணா பக்கத்துல ஹாஸ்பிடல் இருக்கா?” எனக் கேட்க,

“ம்ம் இன்னும் ரெண்டு நிமிஷத்துல வந்துடும்…” என்றவன் ரித்திகாவைத் தோளில் சாய்த்திருந்தான்.

சொன்னது போன்றே இரண்டு நிமிடத்தில் மருத்துவமனை வந்திருந்தது.

உள்ளே அவளை அனுமதித்தபோதும் ரித்திகா “நீ போ ஆஹி. நான் பாத்துக்குறேன்” என்றாள்.

“நீ எப்படிமா தனியா?” நிவேதனுக்கும் கண் கலங்கி விட்டது. ஆனாலும் அவர்களை ஆள்கள் தொடர்வது போல இருக்க, கண்மணியையும் அங்கேயே விட்டுச் செல்வது நல்லதென்று தோன்றவில்லை நிதர்ஷனாவிற்கு.

“ஆஹில் அண்ணா நீங்க ரித்தியோட இருங்க நாங்க தீவுக்குப் போறோம்” என்றிருந்தாள்.

மொழி தெரியாத நாட்டில் இவர்களைத் தனியே அனுப்பவும் மனம் வரவில்லை. அதே நேரம் ரித்திகாவைத் தனியே விடவும் மனம் வரவில்லை.

வேகமாக யோசித்த ஆதிசக்தி, “இளா, கதிர், சிந்தா நீங்க மூணு பேரும் இங்க துணைக்கு இருங்க. எனக்கு அந்த தீவு தெரியும். நான் இவங்களை கூட்டிட்டுப் போறேன்” என்றவர் ஆஹில்யனின் புறம் திரும்பி, “அவளுக்கு இந்த நேரத்துல நீ கூட இருக்கிறது ரொம்ப முக்கியம் ஆஹில்” எனத் துரிதமாய் முடிவெடுத்து நிதர்ஷனா, நிவேதன் கண்மணியை அழைத்துச் சென்றார்.

மீண்டும் வீட்டிற்குத் திரும்ப இயலவில்லை. அவர்களை மருத்துவமனையிலும் விட இயலவில்லை. இவர்களை கொலை செய்ய வந்து, மற்றவர்களுக்கும் அது தீங்காகி விட கூடாது என்ற எண்ணத்தில் தான் இளவேந்தன் மறுத்தும் வம்படியாக விட்டு வந்தார்.

தனக்கு எதுவாகினும் ஆகிவிட்டுப் போகட்டும். இளவேந்தனுக்கு ஒன்றென்றால் மடிந்தே விடுவார்.

ஆஹில்யன் தளர்ந்து அமர்ந்து விட்டான். கையில் ரித்திகாவின் குருதி வேறு நிறைந்திருந்தது.

‘இன்னும் கவனமா இருந்துருக்கணும்!’ தன்னையே நிந்தித்துக் கொண்டான்.

“கவனம் ஆஹில்… நான் இல்லாத நேரத்துல… யாரையும் வீட்டு வாசலைத் தாண்டி வர வைக்காத” என்று அறிவுறுத்தி இருந்தான் யாஷ் பிரஜிதன். தன்னால் இத்தனை சொதப்பல் நிகழ்ந்தது தெரிந்தால், தன்னைக் கொன்றே விடுவானே என்ற பயம் வேறு அவனுக்கு. செத்தாலும் ரித்திகா மட்டும் மீண்டு வந்து விட வேண்டுமென்ற வேண்டுதலில் உறைந்திருந்தான்.

நிதர்ஷனா யாஷ் பிரஜிதனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியபடி இருக்க, எதற்கும் பதில் வரவில்லை. நேரம் செல்ல செல்ல இதயம் அதிகமாய் துடித்தது.

அடுத்த சில நேரத்தில் கதிரவனிடம் இருந்து தான் குறுஞ்செய்தி வந்தது. ரித்திகாவிற்கு குண்டை எடுத்து விட்டாகிற்று. இனி பயப்பட எதுவும் இல்லையென. அதன்பிறகே அங்கு சின்னதான நிம்மதி பரவியது.

கண்மணிக்கு உள்ளமெல்லாம் ஒரு வித பதற்ற நிலை. தன்னைக் காக்க இவன் ஏன் வரவேண்டும்? ஏற்கனவே கலங்கி இருக்கும் மனதில் மேலும் கலக்கத்தை உண்டு செய்யவா?

இதயம் அமைதியின்றி தவித்தது. அதிகம் பேசியதில்லை, பழகியதில்லை, அடிக்கடி சந்தித்துக் கொண்டதும் இல்லை. ஆனாலும் இந்தக் காதல் உணர்வு மட்டும் எப்படி பூர்வ ஜென்மத்து பந்தம் போல உள்ளதை அரிக்கிறதோ! பதில் விளங்காமல் மருகினாள்.

சில நேரத்தில் தீவை அடைந்தார்கள்.

காரை எப்போதும் தயாராக இருக்க ஓட்டுனருக்குப் பணித்த ஆதிசக்தி, போட்டில் மற்ற மூவரையும் அழைத்துச் சென்றார்.

நிதர்ஷனாவிற்கு அந்த தீவைப் பார்த்தாலே அச்சம் பிறந்தது. கடலுக்கு நடுவில் சிறிய ஊர்போல காட்சிளித்தாலும் அதன் அமைதி ஒரு வித நடுக்கத்தைக் கொடுத்தது அனைவருக்குமே!

“நிதா ஒரே ஒரு டவுட்டு!” நிவேதன் ஆரம்பிக்க, நிதர்ஷனா என்னவென பார்த்தாள்.

“கடலுக்கு நடுவில எப்படி பேஸ்மெண்ட் போட்டுருப்பாங்க?”

நிதர்ஷனா நெற்றிக்கண்ணைத் திறந்தாள்.

கண்மணியோ அதை விட கடியாகி, “உங்களை வேணா உள்ள தள்ளி விடுறேன். போய் ஆராய்ச்சி பண்ணிட்டு வாங்க” என்றாள் கடுப்பாக.

“குண்டடி படட்டும்னு விட்டுருக்கணும்” நிவேதன் அவளை முறைத்தபடி முணுமுணுக்க, “என்ன சொன்னீங்க?” என புருவம் சுருக்கினாள்.

“ஒன்னும் இல்லையே” என சமாளித்தவன், “உள்ளயும் ஆளுங்க துப்பாக்கி வச்சிருந்தா என்ன செய்றது?” என்றான்.

நிதர்ஷனாவோ, “அது தெரியல. உள்ள யாஷ் இருப்பாரு கண்டிப்பா. அவர் போதும் எதுக்கு துப்பாக்கியெல்லாம்…” என்றவளுக்கு அவனின் மீது அசைக்க இயலா நம்பிக்கை இருப்பதை உணர்ந்தவன், “என் மச்சான் என்ன ரோபோவா. விரலை நீட்டுனா துப்பாக்கி வர்றதுக்கு. அவனும் மனுசன் தான…” என்றான்.

“இப்ப அவன் மனுசனா இல்லையான்னு பட்டிமன்றம் நடத்த தான் வந்தியா. மூடிட்டு வாடா பரதேசி!” நிதர்ஷனா திட்டிவிட,

“அடியேய்… நான் சொல்றது புரியுதா இல்லையா ஒனக்கு. உள்ள போனதும் உன் ஆளு காப்பாத்துவான் சரி. உள்ள போறதுக்குள்ள ஆளுங்க போட்டு தள்ளிட்டா, இவள் சொன்னது மாதிரி எல்லாரும் கடலுக்குள்ளாற போய் பேஸ்மெண்ட்டோட தான் அடக்கமாகனும்” எனக் கடிந்ததில் ஆதிசக்தியும் அப்போது தான் அதை யோசித்தார்.

“நீங்க மூணு வர வேணாம். நான் மட்டும் போறேன். நிதா மேலயும் உன் மேலயும் அந்த அலெஸ் கோபமா இருப்பான். பார்த்ததும் பைத்தியக்காரன் மாதிரி எதுவும் செஞ்சுட கூடாது. ப்ச், உங்களை கூட்டிட்டே வந்துருக்க கூடாது” என்று நொந்தார்.

“அப்படி ஆபத்து இருக்குற இடம்னா யாஷ் என்னையும் வர சொல்லிருக்க மாட்டாரு அத்த…” என்று எப்போதும் போல தீர்க்கமாக நிதர்ஷனா கூறியதில், ஆதிசக்திக்கு அவளை முறைப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

அவனது ஆராய்ச்சியிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி அவனை அணு அணுவாய் படித்திருக்கிறாள். ஆனால், அவையெல்லாம் வெறும் நினைவுத்தடமாகவே இருக்கிறதென்பதே அவருக்கு பெரும் வருத்தம்.

—-

யாஷ் பிரஜிதன், சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த தனது கையை விடுவிக்க முயன்றபடி, “உங்க ஓன் பசங்களையே கொல்ற அளவு அப்படி என்ன வெறி? எல்லாரோட லைஃப்லையும் நீயும் தட் வரதராஜனும் குழப்பம் பண்ணிருக்கீங்க… நிது? அவளுக்கு ஏன் இப்படி?” என்றான் சினம் மின்ன.

“கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி, நான் ஒரு மருந்தை கண்டுபிடிச்சேன் யாஷ். அது மூளைல சில சைட் எஃபக்ட் ஏற்படுத்தும். அதாவது, நம்மளோட நினைவுகளை அழிச்சு மூளையை கட்டுப்படுத்தும். சில நேரம் தற்கொலைக்கு கூட தூண்டும். நீ அவளை பார்க்கிறதுக்கு முன்னாடியே, அவளுக்கே தெரியாம இதை நான் இஞ்செக்ட் பண்ணேன்.

பட் அவளுக்கு எந்த சைட் எஃபக்டும் ஆகல. அவள் ரொம்ப ஆக்டிவா எப்பவும் போல இருந்தா. நான் அனுப்புன வைரஸ் அவளை தாக்கவே இல்லை. என் ஆராய்ச்சி படுதோல்வின்னு புருஞ்சு, அவளைக் கொலை செய்ய நினைக்கிறப்ப, நீ வந்துட்ட. அவளைக் கடத்திட்ட. உன் பாதுகாப்புல இருந்தவளை என்னால தொட முடியல. டாமன் இட். வரதா அப்படியும் அமைதியா இல்ல. உனக்கு முழு உண்மை தெரியிறதுக்கு முன்னாடி, தஞ்சாவூர்ல அவளைக் கொன்னுடனும்னு என்னன்னவோ செஞ்சான். பட் வேலைக்கு ஆகல.

ஆனா என் ஆராய்ச்சி அவள்கிட்டே வின் ஆகியிருக்கு வேற விதமா. ரொம்ப மாசம் கழிச்சி லேட்டா ஒர்க் ஆகியிருக்கு. வைரஸ் கொஞ்ச கொஞ்சமா அவளோட நினைவுகளை தின்னுருக்கு. இட்ஸ் சோ ஆஸம்ல. அதுவும் நான் நினைச்சே பாக்காத மாதிரி, அவள் உன்னையே மறந்துட்டா… வாவ்! நான் எதிர்பார்க்காத டிவிஸ்ட் அது. அண்ட் ஐ என்ஜாய்ட் அ லாட்!” என்றவரின் முகத்தில் பரவசம் மின்னியது.

“என்ஜாய் பண்ணிக்கோங்க பப்பா. என்ஜாய் செஞ்சு தான ஆகணும்…” யாஷிடம் இத்தனை நேரம் இருந்த இறுக்கமின்றி நக்கல் வழிந்தோடியது.

“வாட் டூ யூ மீன்!” எனும்போதே யாஷ் பிரஜிதன் விசில் அடிக்க, அங்கு இரு கையையும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் வரதராஜன் அங்கு கொண்டு வரப்பட்டார்.

அவரது முகத்தில் நண்பன் தந்த துரோகத்தின் சினம் அப்பட்டமாய் தெறித்தது.

“துரோகி… உன்னை நம்புனேன்லடா. என் பையனையே கொலை பண்ண பாத்துருக்க. ச்சை!” முகம் சுளித்த வரதராஜனிடம் யாஷ் சன்ன சிரிப்புடன் பேசினான்.

“ஹலோ மிஸ்டர் ஃபாதர் இன் லா. இந்த டயலாக் எல்லாம் பேசுனா உங்களை டீல்ல விட்டுடுவேன்னு ட்ரீம் எதுவும் காணாதீங்க…” என்றனின் நிதானப்பேச்சில் அச்சம் துளிர் விட்டது.

அலெஸ்ஸாண்ட்ரோ தான் மகனை ஒரு மாதிரியாகப் பார்த்து, “நீ என் கஸ்டடில இருக்க யாஷ். உன்னால இங்க இருந்து பழைய மெமரியோட போக முடியாது. நான் விட மாட்டேன்…” என்றதில் யாஷ் பிரஜிதனின் முகம் சிவந்து போகும் அளவு வெடித்துச் சிரித்தான்.

“ஓ! நோ டேடி… என் லேப் ஃபயர் ஆகிடுச்சுன்னு ஃபால்ஸ் இன்பர்மேஷன் குடுத்தப்பவே எனக்குத் தெரிஞ்சுடுச்சு. நீங்க என்னை ட்ராப் பண்றீங்கன்னு. சோ, நான் உங்களை ட்ராப் பண்ணேன், என்னை இங்க வர வைக்க… எனக்குத் தேவையான விளக்கத்தை இவ்ளோ நேரம் பொறுமையா சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றவன் ஒரே இழுவையில் அந்தச் சங்கிலியை இழுக்க அது அறுந்து வந்ததில், இருவருமே அதிர்ந்து நின்றனர்.

அன்பு இனிக்கும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 133

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
137
+1
5
+1
5

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment