Loading

தேவா அவள் விழிகளை நோக்கிக் கொண்டிருக்க, அருணும் நிஷாந்தும் இவனை கூப்பிடறதா வேணாமா? என முழித்திட, விஷ்வா தான், “கண்ணும் கண்ணும் நோக்கியா! கடத்தும்போது இதெல்லாம் தேவையா?” என நக்கலடித்தான்.
அதில் தேவா தன்னிலை பெற்று, ஆராதனாவிடம் “கத்தக்கூடாது புரிஞ்சுதா” என்றிட, அவளும் தலையை உருட்டினாள். மெல்ல அவள் இதழ்களில் இருந்து கையை எடுத்ததும், “காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று கத்தியவளின் மூக்கில் வேகமாக மயக்க மருந்து கர்சீப்பை அழுத்தினான்.
அதில் அவள் மயக்க நிலைக்கு சென்றிட, மற்ற மூவரும் தான் திகிலாக பார்த்திருந்தனர். அவள் மயங்கவும் அவளின் பொருட்களையும் எடுத்து காரினுள் போட்டவன், காரை அதிவேகத்தில் செலுத்த, அது நேராக காட்டினுள் அவர்களின் அந்த மரக்குடிலின் முன் தான் நின்றது.

தேவா ஆராதனாவை கையில் அள்ளிக்கொண்டு வீட்டினுள் நுழைய, விஷ்வா சும்மா இல்லாமல் “எனி ஹெல்ப் மச்சான்” என கேட்டவன், அவன் பார்த்த பார்வையில், அடங்கி விட்டான். அவனோ ‘அதானே பொண்ணை தூக்கணும்னா மட்டும் ஃப்ரெண்ட்ஸ கண்டுக்கமாட்டீங்களே’ என முணுமுணுக்க, தேவா அவளை ஒரு அறையில் சேரில் அமர வைத்து கட்டிப்போட்டு விட்டு வெளியில் வந்தான்.
அங்கு, அருணோ தண்ணீர் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி அவனை அவனே ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “சப்பா…! எதுக்கு டா இந்த ப்ராஜக்ட்டை எடுத்த? கை கால்லாம் நடுங்கிடுச்சு” என மிரள, விஷ்வா “ஆமா, இவன் கடத்துனதும் இல்லாம அவளையே சைட் அடிச்சுகிட்டு” என்று சத்தமாக ஆரம்பித்து தேவா முறைத்ததும்,
“இல்ல சும்மா அவளை பார்த்துக்கிட்டு இருந்தீல அதான்…” என்று சமாளிக்க, தேவா அந்த நீரோடை அருகில் மண்ணில் அமர்ந்து, அங்கிருந்த மரக்குச்சியில் இலக்கில்லாமல் கோடு போட்டுக்கொண்டிருந்த நிஷாந்தை கண்டவன், அவன் அருகில் சென்றான்.
“நிஷாந்த்” என அவனை அழைக்க, அவன் அந்த மணலை கலைத்து விட்டு, “அந்த பொண்ணு கண்ணு முழிச்சு கத்தலைல டா? நம்ம கிளம்பலாமா…?” எனக் கேட்டிட, அவன் முகத்தில் இருந்த வேதனையை கண்ட தேவா, அவன் தலைமுடியை ஆதரவாக கோதி விட்டான்.

அதில் நிஷாந்திற்கு அழுகை வேறு முட்டிக்கொண்டு வர, உதட்டைக்கடித்து தன்னை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான். அருண், “இப்போ அழுது…? எல்லாம் பண்ணும் போது யோசிச்சுருக்கணும்.” என முணுமுணுக்க, விஷ்வா “ப்ச் டேய்” என்று அதட்டினான்.
அருண், “சீக்கிரம் கிளம்பலாமா? அப்பறம் இவள் வேற முழிச்சுடுவா…” என்று விட்டு, கோபமாக பொருட்களை எடுத்துவைக்கச் செல்ல, நிஷாந்திற்கு இழைத்த பெரும் தவறின் வீரியத்தில் கண் கலங்கியது. தேவா, விஷ்வாவிடம் அருணை பார்க்க சொல்லி கண்ணைக்காட்ட, அவனும் ‘நான் பாத்துக்குறேன்.’ என சைகையில் சொல்லிவிட்டு, உள்ளே சென்றான்.
அருண் திருடுவதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்க, விஷ்வா, “டேய் அருண், ஏன்டா அவன்கிட்ட அப்படி பேசுன?” என்றதற்கு பதில் சொல்லாமல் அவன் வேலையை பார்த்திட,
“ப்ச் உன்னை தான் கேட்குறேன். எத்தனை தடவை சொல்றது அவன் ஃபீல் பண்ணும்போது இப்படி ஹர்ட் பண்ற மாதிரி பேசாதன்னு!” என முறைக்க அவன் அப்போதும், அவனை பாராமல் இருக்கவும் விஷ்வா கடுப்பாகி, “நான் பேசிக்கிட்டே இருக்கேன்… நீ என்னடா” என்று அவன் சட்டையை பிடித்து இழுக்க, அவன் கண்ணெல்லாம் கலங்கி இருந்தது.

விஷ்வா பெருமூச்சு விட்டு, “அவனை ஏதாவது கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டு, நீ வந்து ஃபீல் பண்ணிட்டு இருக்க. அதுக்கு ஏன்டா அவன்கிட்ட அப்படி பேசணும்?” என்றிட, அருண், “வேற என்னடா பண்ண சொல்ற? அவன் கிட்ட போய் நடந்ததை எல்லாம் கனவா நினைச்சு மறந்துட்டு, புதுசா லைஃப் ஸ்டார்ட் பண்ணுன்னு சொன்னா, உடனே கேட்ருவானா? தினமும், பழசை நினைச்சு ஃபீல் பண்றதும், அதுக்கு அவன் வேற தினமும் ஆறுதல் சொல்றதும், இன்னும் எத்தனை நாளைக்கு டா? அவன் கஷ்டப்படுறதை பார்க்கவே முடியல…” என்று வருத்தத்துடன் கூறியதில், இதனை எப்படி கையாள்வது என்று கூட புரியாமல் நின்றிருந்தான் விஷ்வா.
இங்கு தேவா, நிஷாந்தின் தலையை வருடி, “விடுடா, யாரு தான் தப்பு பண்ணல? தப்பு பண்ணுனதை உணர்ந்துட்டா, திரும்ப அந்த தப்பை பண்ணக்கூடாதுன்னு புரிஞ்சுக்கிட்டா போதும். தினமும், பண்ணுன தப்பை நினைச்சு கலங்க தேவையே இல்ல… நீ இப்போ பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் மச்சான்.” என அவனை சமன்படுத்த,
நிஷாந்த், “அவ அவள் என்னை விட்டு போய்ட்டால மச்சான்…” என்று கலங்கிய குரலில் கேட்டதும், தேவா முகம் இறுகி, “உன் அன்புக்கு தகுதி இல்லாதவளை பத்தி எதுக்கு டா பேசிகிட்டு இருக்க…? இன்னொரு தடவை அவளை பத்தி பேசுன, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.” என பல்லைக்கடித்து மிரட்டியவன், “டைம் ஆச்சு வா போலாம்.” என அதட்டி அங்கிருந்து கிளம்பினான்.

பின், ஏதோ யோசித்தவன் விஷ்வாவிடம், “நீ இங்கயே இரு. அவள் கண்ணு முழிச்சு தப்பிக்க ட்ரை பண்ணா, இந்த மயக்க மருந்தை குடு.” என்றான்.
அதில் விஷ்வா மிரண்டு, “என்ன விளையாடுறியா? ஒரு சின்ன பையனை நடுக்காட்டுல தனியா விட்டுட்டு போறீங்க. அதுவும் கூட ஒரு பொண்ணு வேற. எனக்கு பயமா இருக்கு. நானும் தான் வருவேன்” என அடம்பிடித்தான். தேவா, அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் கதற கதற அங்கேயே அவனை வைத்து விட்டு போக, விஷ்வாதான் நடுங்கி விட்டான்.
காலையில் சாவகாசமாக எழுந்து, ஜன்னல் திரையை விலக்கிய அம்மு, அப்போது தான் மணியை பார்க்க அது 9 எனக் காட்டியது. உடனே போனை எடுத்து பார்த்தவள், அதில் ஆராதனாவிடம் இருந்து 5 மிஸ்ட் கால் இருக்கவும், ‘இவ அப்போவே கால் பண்ணிருக்கா, வந்தாளா இல்லையான்னு தெரியலையே?’ என நினைத்து, ட்ரைவர்க்கு போன் செய்ய,
அவர் “அந்த ட்ரெயின் வந்துட்டு, கிளம்பி ரொம்ப நேரம் ஆச்சும்மா. ஆனால் ஆராதனா மேடம் வரவே இல்லை.” என்றதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.
“ஐயையோ…! அவள் வரலையா? அந்த லூசு கிறுக்கச்சி வேற எங்கயாவது இறங்கி தொலைச்சாளான்னு தெரியலையே!” என நொந்து போனவள், காலையிலேயே அவளை அழைக்க தான் ஸ்டேஷன் செல்லப் போனாள். அப்போதென பார்த்து,

வைஷ்ணவி உறக்கத்தில் எதையோ நினைத்து நடுங்கி கொண்டிருப்பதை கண்டு “என்ன ஆச்சுடி” என பதட்டத்துடன் கேட்டதும், அவள் சட்டென விழித்து, “ஒன்றும் இல்ல” என்றாள். தமயந்தி தான் “வைஷு நீயும் அம்மு கமிட் ஆகுற மாதிரி கனவு கண்டியா?” என விழி விரித்து கேட்க, அம்மு முறைத்தாள்.
வைஷு “இல்ல ஏதோ கெட்ட கனவு” என முணுமுணுக்க, தமி, “அதான் வைஷு, அந்த கெட்ட கனவு தான் அம்மு கமிட் ஆகுறது” என்று மீண்டும் அங்கேயே வர, “மூடிட்டு போய் தூங்குடி” என கடுப்படித்த அம்மு, வைஷுவை தூங்க சொல்லிட, ஏனோ அவளை விட்டு விட்டு செல்ல மனமில்லை.
அதனாலேயே ட்ரைவரை மட்டும் அனுப்பி விட்டு, ஆராதனாவிற்கு ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பி இருந்தாள். இப்போது பதறிக்கொண்டு, அவளுக்கு போன் செய்ய அவளின் போன் எடுக்கப்படவே இல்லை.
‘கிர் கிர்’ என போன் வைப்ரேட் ஆகும் சத்தம் கேட்க, விஷ்வா ‘என்ன சத்தம்’ என எண்ணிக்கொண்டு, அவளை அடைத்து வைத்திருந்த அறைக்குள் செல்ல, அங்கு அவளின் கைப்பையில் இருந்து நழுவிய, அவளின் போன் ஒலித்துக்கொண்டிருந்தது.
அவளை ஒரு முறை பார்த்து விட்டு, மெல்ல அதன் அருகில் சென்று, போனை எடுக்கப் போக, ஆராதனா அவனை ஓங்கி எத்தினாள். அதில் அவன் “ஐயோ அம்மா” என்று தூரமாக சென்று விழ, அவள் அவசர அவசரமாக கட்டியிருந்த கயிறை அவிழ்க்க முயன்றாள்.

விஷ்வா ‘இந்த படுபாவி, பொம்பளை பிள்ளைக்கிட்ட எல்லாம் அடி வாங்க விட்டுட்டானே’ என நொந்து கொண்டு, மயக்க மருந்து கர்சீப்பை எடுத்து அவள் மூக்கில் வைக்கப் போக, அவள் அதனை அவனிற்கு திருப்பி விட்டதில் அவன் மயங்கி விழுந்துவிட்டான். அவள் வேக வேகமாக கட்டை அவிழ்க்க அந்தக் கலவரத்தில் அவள் போனும் ஆன் ஆகி விட்டது. அம்மு, “ஹலோ ஹலோ ஆரு நான் பேசுறது கேட்குதா” என கத்த, ஆரு அதனை கவனியாமல், விஷ்வாவை அந்த சேரில் அமரவைத்து கயிற்றில் கட்டி விட்டு,
“யாரைடா கடத்த பார்க்கறீங்க…? அந்த மினிஸ்டர் போட்ட பிளானா இதெல்லாம். அந்த ஆளை ஒரு வழி பண்ணிட்டு அப்பறம் பார்த்துகுறேண்டா உங்களை!” என மயக்கத்தில் இருந்த விஷ்வாவை திட்டிக்கொண்டிருக்க, அம்மு அவள் கடத்தப்பட்டது அறிந்து அதிர்ந்து விட்டாள்.
ஆராதனாவிற்கு, அவளை கடத்தியவனின் முகமும் பார்வையும் கண்ணில் வந்து போக, “எங்க அந்த ஆக்ஷன் கிங்? பெரிய தெலுங்கு பட ஹீரோன்னு நினைப்பு அவனுக்கு. நாக்கை துண்டா நறுக்கிடுவாரோ…?” என்று மேலும் விஷ்வாவை பார்த்து திட்ட, அவன் பாவம்… அவள் கொடுத்த மயக்க மருந்தின் விழைவில் மயங்கி இருந்தான். முதலில் அங்கிருந்து தப்புவது தான் முக்கியம் என உணர்ந்தவள், அவசர அவசரமாக வெளியில் செல்ல, அங்கும் யாரும் இல்லாது இருப்பதை பார்த்து, ஹப்பாடா என ஓட ஆரம்பித்தாள். எங்கு ஓடுகிறோம் எனக்கூட அவளுக்கு தெரியவில்லை. எங்கு திரும்பினாலும் வானளவு உயர்ந்த மரத்தைத் தவிர அவளுக்கு வேறு எதுவும் தெரியவில்லை.

‘சே தப்பிக்கிற அவசரத்துல போனை கூட எடுக்காம வந்துட்டோமே’ என தன்னையே நொந்தவள் ‘அட்லீஸ்ட் ஒரு முறுக்கு பாக்கெட் ஆவது எடுத்துட்டு வந்துருக்கலாம்…!’ என்று சலித்துக்கொண்டாள்.
வெகு நேரம் ஒரே திசையில் ஓடியவளுக்கு, தூரத்தில் சாலை ஒன்று தெரிவது போல் இருக்க, “வாவ், நம்ம தப்பிச்சுட்டோம்.” என சற்று வேகமாக ஓடியவள் அப்படியே நின்று விட்டாள். அங்கு ஒரு மரத்தின் மேல் சாய்ந்து, கையை கட்டிக்கொண்டு, அவள் வரவை எதிர்ப்பார்த்தது போல் நின்றிருந்தான் தேவா.
அவனை பார்த்து “டேய் எதுக்குடா என்னை கடத்துன? உன்னை!!” என அவனை அடிக்க போக, அவன் அவள் கையை பிடித்து அவளின் முதுகின் புறம் வைத்து அழுத்த, அவள் “டேய் வலிக்குதுடா விடுடா? விடுடா என்னை ஆஆஆ” என வலியில் அலறியதில் அவளின் சத்தம் காட்டில் எதிரொலித்தது.
அவன் அப்போதும் விடாமல், “உன்னை எல்லாம் கடத்தக்கூடாது… இங்கயே ஒரு மரத்துக்கு கீழ கொன்னு புதைச்சுடனும்” என கோபமாக சொல்ல, அவள் “உன்னை மாதிரி ஆளுங்களே தைரியமா வெளிய சுத்தும்போது, நான் ஏண்டா இங்க சாகனும்…? உங்களை எல்லாம் சும்மாவே விடக்கூடாது” என்க, “உன்னை எதுவும் பண்ணவேண்டாம்னு ஆர்டர் வந்தனால தான், நான் அமைதியா இருக்கேன். இல்லைன்னா உன்ன மாதிரி பொண்ணை இப்படி உயிரோட வச்சு பேச்சு வார்த்தை நடத்த மாட்டேன்” என பல்லைக் கடித்தவனிடம், “டேய்… என்னை கொன்னு தான் பாரேன்… ஆவியா வந்தாவது உன்னை பழிவாங்குவேன்.

உன்னை மட்டும் இல்ல உனக்கு இந்த வேலையை குடுத்த அவனையும் நார் நாரா கிழிச்சுடுவேன்.” என இருவருமே நான் சிங்க்காகப் பேச, பாவம் இருவருக்குமே ஒருவர் பேசுவது மற்றவர்க்குப் புரியவே இல்லை. ஆனாலும், விடாமல் வசனம் பேசிக்கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் கடுப்பானவன், “நீ ரொம்ப பேசுற” என அவளை தூக்கிக்கொண்டு, சாலையோரம் நிறுத்தி இருந்த காரை நோக்கி சென்றான். அவள், அவன் முதுகை அடித்து “டேய் விடுடா என்னை விடுடா” என கத்த, அவன் கண்டுகொள்ளவே இல்லை.
“ஒரு நிமிஷம் என்னை விடுடா! நானே நடந்து வரேன். என்னை தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத!” என்று கத்த, ஒரு நொடி யோசித்தவன், அவளை இறக்கி விட்டான். ஆனால் அவள் துப்பாட்டவை எடுத்து, அவள் கையையும் அவன் கையையும் சேர்த்து கட்டி அவளை இழுத்துக்கொண்டு போக, அவள் தீயாக முறைத்தாள். அவன் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவளை காரினுள் தள்ள, அவள் அவனை முறைத்துக்கொண்டு அமர்ந்தாள்.
சிறிது நேரத்திற்கு முன்பு, திருடிய சரக்குகளுடன் அந்த காட்டிற்கு வந்தடைந்த நண்பர்கள் மூவரும் விஷ்வா கட்டிப்போட்டிருப்பதை கண்டு அவனை எழுப்ப, அவன் கண்ணையே திறக்கவில்லை. கண்ணை திறந்தால், தேவா தன்னை சட்னி ஆக்கி விடுவான் என உணர்ந்தவன், மயக்கத்தில் இருப்பதை போல் நடிக்க, தேவா சப்பென்று அவன் கன்னத்தில் அறைந்தான்.

அதில் திடுக்கிட்டு முழித்தவன், “நான் யாரு? நான் எங்க இருக்கேன்? ஆமா நீங்கல்லாம் யாரு?” என பேந்த பேந்த முழிக்க, அருண் பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டு, “இவன் தான் உன் பாஸ் தேவா… நீ எங்க லேபர் விஷ்வா” என கலாய்க்க, “லேபர் லேபர்…” என யோசித்தவன், “எஸ் ஐ காட் இட்… ஆமா இது யாரு உங்க வைஃப் ஆ” என நிஷாந்தை காட்டி கேட்க, இருவரும் வாயைப்பொத்தி கொண்டு சிரித்தனர்.
தேவாவோ கோபத்தின் உச்சியில் இருந்தான். “முட்டாள் அவளை தப்பிக்க விட்டுட்டு, சினிமா வசனம் பேசி கலாய்ச்சுட்டு இருக்கியா? எங்கடா அவ?” என்று கோபமாக கேட்க, அவன் “மச்சான் அவன் என்னடா ஜாக்கி சான்க்கு ஒன்னு விட்ட அத்தை பொண்ணா இருப்பா போல. என்னா அடி அடிக்கிறா! அவள் போன் அடிச்சுச்சேன்னு இங்க வந்தேன். ஆனா…” என சொல்லும்போதே,
தேவா “வாட்? போனா? அதை நான் அப்போவே எடுத்து ஆஃப் பண்ணேன்ல” என்று அருணை பார்க்க, அவன் திருதிருவென விழித்து, “அது மச்சான், நான் போனை தேடுனேன். அது இல்லை. நான் போன் இல்லைன்னு நினைச்சு…” என ஏதேதோ உளற, தேவா தலையில் அடித்து, “உங்களை எல்லாம் வச்சுக்கிட்டு, கடத்த பிளான் பண்ணுனேன் என்னை சொல்லணும்…?” என்று கடுப்பாகி, அவள் ஓடும் திசையை கணித்து, எப்படியும் அந்த சாலைக்கு தான் வருவாள் என எண்ணி அங்கு வந்து நின்றிருந்தான்.

மீண்டும் அவளை அந்த மரக்குடிலுக்கு கூட்டி வந்தவன், அவளை இழுத்துக்கொண்டு போக, அவள் “ப்ச் எனக்கு நடந்து வர தெரியும்.” என அவனை முறைத்துக்கொண்டு விறுவிறுவென அந்த குடிலுக்குள் செல்ல, அங்கு சில பல கம்பியூட்டர்கள், லாப்டாப்கள் இருப்பதை பார்த்தவள்,
‘நம்ம இங்க இருந்து கிளம்பும்போது இதெல்லாம் இங்க இல்லையே! ஒரு வேலை எல்லாரும் தீவிரவாதியா இருப்பானுங்களோ?’ என சற்று திகிலுடன் எண்ணிக்கொண்டு, அந்த மரப்படிக்கட்டில் ஏறி மேலே செல்ல, அங்கு மற்ற மூவரும் இருப்பதை கண்டு முறைத்தாள்.
தேவா, அவளை பிடித்து கட்டிப்போடப் போக, அவள் “அதான் நான் தப்பிச்சு போனாலும் பின்னாடியே வந்துடுறியே! அப்பறம் எதுக்கு, இது வேற? சட்டு புட்டுன்னு என்னை கடத்த சொன்னவனை வரச்சொல்லு… நான் டைரக்ட் ஆ அவன்கிட்டயே பேசிக்கிறேன்.” என கால் மேல் கால் போட்டு பேச, அவனோ ‘திமிரெடுத்தவ, கொஞ்சமாவது பயம் இருக்கா மனசுல…?’ என மனதினுள் திட்டிக்கொண்டான்.
அம்மு, அவரச அவரசமாக தன் தோழிகளிடம் “ஆருவை கடத்திட்டானுங்க… அந்த மினிஸ்டர் வேலையா தான் இருக்கும்…, நம்ம உடனே போய் அவளை காப்பாத்தணும்.” என்று பதற மற்ற இருவரும் திகைத்து விட்டனர். அவளின் போன் கடைசியாக அணைத்து வைக்க பட்ட இடத்தினை ட்ராக் செய்த வைஷு அதிர்ச்சியாகி, “அம்மு இது நம்ம போய் ஆராய்ச்சி பண்ண வேண்டிய ‘கன்னி வனக்காடு’.
அங்க தான் அவளை கடத்தி வச்சுருக்காங்க” என்றதும், அம்முவும் தமியும் “வாட்” என உறைந்து விட்டனர்.
ஆராதனாவை முறைத்துப் பார்த்தவன், அவள் கையை இறுக்கமாக கயிறு கொண்டு கட்ட, அவள் “டேய் நான் தான் கட்டாதனு சொன்னேன்ல ஏன்டா கட்டுற” என கத்தியதில் அவள் வாயையும் துணியை வைத்து கட்டினான்.
ஆரு “ம்ம் ம்ம்ம் ம்ம்ம்” என்று எதையோ கண்ணைக்காட்ட தேவா “ப்ச் பேசாம வாயை மூடிக்கிட்டு இருக்கல… உன் கழுத்தை சீவி காக்காய்க்கு போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்.” என்று அவள் கழுத்தில் கத்தியை வைக்க, அவள் அதற்கும் பயப்படாமல், மீண்டும் ஒரு இடத்தை கண்ணைக்காட்டியதில், விஷ்வா ‘என்னத்தை காட்டுறா’ என எண்ணி, ஒரு ஓரத்தில் கிடந்த அந்த மூட்டையை பிரிக்க, அதில் அவள் கொண்டு வந்த தின்பண்டம் இருந்தது.
அதனை கண்ட நால்வரும் ‘பே’ வென பார்க்க, தேவா தான், அவளை ‘அட சோத்துக்கு செத்தவளே, இவ்ளோ கஷ்டப்பட்டு கடத்தி கழுத்துல கத்தி வச்சும், கொஞ்சம் கூட பயப்படாம ஸ்னேக்ஸ் கேக்குறாளே!!!’ என்று கடுப்பானான்.

நாணம் தொடரும் 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்