Loading

திமிர் 3

மறுநாள், எதுவும் நடக்காதது போல் மருத்துவமனை சென்றாள் மதுணிகா. அங்குப் பணிபுரியும் அனைவரும் அவளை விசித்திரமாகப் பார்த்தார்கள். எதைப் பற்றியும் கவலை கொள்ளாது தன் இருக்கையில் வந்தமர்ந்தவள், “இன்சூரன்ஸ் என்ன ஆச்சு?” தன் உதவியாளரிடம் விசாரித்தாள்.

“பிராசஸ் போயிட்டு இருக்கு மேடம். ஆனா, கஷ்டம்னு பேசின வரைக்கும் சொன்னாங்க.”

“என்னவாம்?”

“குடோன் ஃபுளோர் மட்டும் எரிஞ்சிருக்கு. இது திட்டமிட்டுப் பண்ண மாதிரி இருக்கு, கிளைம் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க.”

“என்னவா வேணா இருக்கட்டும். கிளைம் பண்ண முடியும்னு சொன்னதால தான் இன்சூரன்ஸ் போட்டோம்.”

“எஸ் மேடம்! நான் திரும்ப அவங்ககிட்டப் பேசிப் பார்க்கிறேன்.”

“ம்ம்… நேத்துப் பிரச்சினை பண்ணவன் திரும்ப இங்க வந்தா, உள்ள விடக் கூடாதுன்னு செக்யூரிட்டிகிட்ட இன்பார்ம் பண்ணிடுங்க.” எனும் பொழுதே மருத்துவமனை அலறியது.

அதிகாரத் தோரணையில், காரை விட்டு இறங்கியவனைக் கண்ட காவலாளி பயந்து நடுங்கி வழிவிட, சின்னப் புன்முறுவலோடு ஒவ்வொரு தளமாகக் கடந்து அவள் இருக்கும் நான்காம் தளத்திற்கு வந்தவன், உத்தரவு கேட்காமல் உள்ளே நுழைந்து மேஜை மீது இரு கைகளை ஊன்றி வைத்தான்.

மதுவின் உதவியாளர் அங்கு நின்றிருக்க, வெளியே செல்லும்படி கண்ணைக் காட்டினான். அதைக் கவனித்தவர் மதுவைப் பார்க்க, “இங்கயே இருங்க.” என்றாள்‌.

“ஹூம்!” என்றவன் ஆரவாரம் இன்றி அவள் பக்கம் சென்று மேஜையில் ஏறி அமர்ந்து கால் மீது கால் போட, அது அவள் மீது பட்டது.

பளபளத்துக் கொண்டிருந்த கருப்பு நிற ஷூவைக் கண்களால் எரித்துக் கொண்டிருந்தாள். லெதர் ஷூவின் கூர்மையான முனையை அவளது கீழ்த்தாடை மீது வைத்து முகத்தை உயர்த்தியவன்,

“அவனப் போகச் சொல்லுடி!” என்றான்.

வெடுக்கென்று ஷூவைத் தட்டிவிட்டுத் தன் வேலைகளைக் கவனித்தாள். பார்த்துக் கொண்டிருந்த பைலைப் பிடுங்கித் தூக்கி எறிந்தவன், “போகச் சொல்லு.” லேசாகப் பற்களை நரநரத்தான்.

“ப்ச்! என்னடா உன்னோட பிரச்சினை? எந்த உரிமையில என் ஹாஸ்பிடல்ல உட்கார்ந்து இருக்க. நேத்து நீ பண்ணதுக்கே உன்னை சும்மா விட்டு இருக்கக் கூடாது. தேவை இல்லாம பிரச்சினை பண்ணாம மரியாதையா போயிடு.”

“போகச் சொல்லு!”

“ஏய்! அவர் எதுக்காகப் போகணும்? இது என்னோட ஹாஸ்பிடல். நான் என்ன சொல்றனோ அதைத்தான் அவங்க செய்வாங்க.” எனும் பொழுது அவள் கன்னத்தைப் பற்றித் தன் பக்கம் இழுத்தவன், “நான் சொன்னா கேட்கணும்.” என வார்த்தையை உதட்டருகே உமிழ, நின்று கொண்டிருந்த உதவியாளர் அங்கிருந்து நகர்ந்தார்.

சொடக்கிட்டு அவரை நிறுத்தியவன், “அவ சொல்லித்தான் நீ போகணும்.” என்றிடச் செய்வதறியாது நின்றார்.

“இங்கப் பாரு அகா…” அவன் பெயரை அழைக்க வந்தவளை மூர்க்கத்தனமாக எழ வைத்தவன், அவள் அமர்ந்து கொண்டிருந்த இருக்கையை எட்டி உதைத்தான். அது அங்கிருந்த சுவரில் பட்டுக் குப்புற விழுந்தது.

“அப்படியே குரல் வளையக் கடிச்சு ரத்தத்தைக் குடிச்சிடுவேன். அவன் முன்னாடி என்னை அசிங்கப்படுத்தறியா? உன்னை ஊரே பார்க்க அசிங்கப்படுத்துறேன்… வாடி!” எனத் தரதரவென்று இழுத்துச் செல்ல, “அகா, விடு என்னை…” எனப் போராடிக் கொண்டு வந்தாள்‌.

வலுவான கைகள் அவள் போராட்டத்தை வீணாக்கியது. மீட்டிங் ஹாலுக்கு வரும் வரை மூர்க்கத்தனத்தைக் கைவிடாதவன் கதவைத் திறந்து தள்ளிவிட, திட்ட வந்தவள் அங்கு இருப்பவர்களைப் பார்த்துப் புருவம் நெளித்தாள்.

ஜிஎன் மருத்துவமனையின் ஷேர் ஹோல்டர்கள் கூடியிருந்தார்கள். முதலாளி தரையில் விழுவதைக் கண்டு அனைவரும் அதிர, அதிகாரமாக உள்ளே நுழைந்தான் அகம்பன் திவஜ்.

“வெல்… வந்த வேலைய ஆரம்பிக்குறீங்களா…” என மதுணிகா அமர வேண்டிய இருக்கையில் அமர்ந்தவன், “உன் அப்பா எங்கடி?” கேள்வி எழுப்பினான்.

“மது…” என்றவாறு முரளி உள்ளே நுழைய, “இதோ வந்துட்டான் மானஸ்தன்!” கேலியோடு வரவேற்றான்.

“உன்னை யாருடா உள்ள விட்டது? எவ்ளோ தைரியம் இருந்தா எங்க ஹாஸ்பிடல எரிச்சிருப்ப… உன்னைச் சும்மா விடமாட்டேன்.”

துள்ளிக் கொண்டு சட்டையைப் பிடித்த கிஷோரின் கைகளைச் சிரித்துக் கொண்டே பிடித்தவன், “ஊதுனா பறக்கற துரும்பு மாதிரி இருந்துட்டு, என் மேலயே கைய வைக்கிற.” என அவன் கைகளைக் கண்ணிமைக்கும் நொடியில் முறுக்கினான்.

துள்ளிக் கொண்டு வந்தவன் பெரும் அலறலோடு தரையில் விழ, ஓடிச் சென்று மகனைத் தாங்கினார் முரளி. வலி பொறுக்க முடியாது துடியாகத் துடிப்பவனை அள்ளிக்கொண்டு சென்றது ஸ்ட்ரெச்சர். உடன் பிறந்தவனின் அலறலில் அதிர்ந்து, பின்னால் ஓடியவளின் கைப்பிடித்துத் தன்னோடு வைத்துக் கொண்டவன் கண்ணைக் காட்டினான்.

“இனி இந்த ஹாஸ்பிடல் ஷேர் ஹோல்டரா இருக்க எங்களுக்கு விருப்பம் இல்ல. நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு முக்கியமான முடிவெடுத்து இருக்கோம்.”

குற்றவாளியாக அவர்கள் முன்பு நின்றவள் அதற்கு இடமே தராதவனை முறைக்க, கமல் உள்ளே வந்தான். வந்தவன் அகம்பனிடம் காகிதக் கட்டைக் கொடுக்க, பக்கத்தில் இருப்பவளிடம் கொடுக்கக் கண்ணைக் காட்டினான். அவள் பக்கம் நீட்ட, அவள் பார்வை அகம்பனை மொய்த்தது. வாங்குமாறு கண்ணைக் காட்டினான். மறுத்து அடம் பிடித்தாள் மதுணிகா. பிடித்துக் கொண்டிருந்த கையை இறுக்கினான். தசைகள் கிழிந்து உள்ளிருக்கும் எலும்புகள் உடையும் அளவிற்கு நொந்து போனாள்.

மணிக்கட்டுச் சிவந்து கன்னிப் போனது. அதற்கு மேல் வலி தாங்க முடியாமல், கமல் கொடுத்த காகிதத்தைக் கையில் வாங்கினாள். சத்தமிட்டுப் படிக்கும்படி கூறியவன், அதிகாரமாக அவளுக்கு முன் அமர்ந்து கால் மீது கால் போட்டான். காகிதத்தில் உள்ள எழுத்துக்கள் அவள் உயிர் வரை சென்று ஊசி குத்தியது. அதிர்ச்சியில் கண்களை விரிக்கும் மதுணியை ஆணவத்தோடு பார்த்தவன், “அதுல என்ன இருக்குன்னு நீயே சொல்லு கமல்.” என்றான்‌.

“இங்க இருக்க ஷேர் ஹோல்டர் எல்லாரும் அவங்க ஷேரை உங்ககிட்ட விக்கிறாங்க சார். இந்த மொத்த ஷேருக்கும் இனி நீங்கதான் ஓனர். அறுபது பர்சன்டேஜ் ஷேர் இப்போ உங்க கையில. வெறும் நாற்பது பர்சன்டேஜ் ஷேர் மட்டும் தான் மேடம்க்கு. சோ, நீங்க என்ன டிசைட் பண்றீங்களோ, அதுதான் இனி இந்த ஹாஸ்பிடல்ல நடக்கும்.”

பரமபதம் ஆட அழைத்து வந்து, முதல் பெட்டகத்தில் நிற்க வைத்து மனிதனாக இருந்தவன் பாம்பாக மாறி “சர்” என அவள் காலைக் கொத்தியது போன்று இருந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்து நின்றிருந்தாள்.

“இந்த ஹாஸ்பிடலோட புது சிஇஓ மிஸ்டர் அகம்பன் திவஜ்னு இங்க இருக்க எல்லார் காதுலயும் விழுற மாதிரிச் சத்தமா சொல்லு கமல்.” என்றதும் அதிர்ந்து அவன் மீது திருப்பினாள் பார்வையை.

அத்தனை எகத்தாளம் அவன் முகத்தில். சிறிதும் இரக்கமில்லாமல் பார்வையால் குத்திக் கிழித்தான். சிறு காயமில்லாமல், இரத்தம் வடியும் வலியை அனுபவித்தாள். வந்திருந்த அனைவரையும் சொடக்கிட்டு வெளியில் செல்ல வைத்தவன், “இது ஆரம்பம்தான்! முடிவு வரைக்கும் தாக்குப் பிடிக்கணும்னு கடவுளை வேண்டிக்க. நீயும், உன் அப்பனும், இந்த ஹாஸ்பிடல்ல விட்டு எண்ணிப் பத்து நாள்ல வெளிய போயிடுவீங்க. இந்த அம்பது வருஷ சாம்ராஜ்யம் இனி எனக்கு மட்டும் சொந்தம்.” கை இரண்டையும் அகல விரித்துக் கண்மூடிச் சிலாகித்தான்.

“நீ பண்றது உனக்கே நல்லா இருக்கா? என் மேல தான கோபம், அதை என்கிட்டக் காட்டு. எதுக்கு நடுவுல இந்த ஹாஸ்பிடல கூட்டிட்டு வர‌… இந்த ஹாஸ்பிடல் எங்க குடும்பத்தோட கௌரவம்!”

“மினிஸ்டர் நவரத்தினத்தோட கௌரவம் என்னன்னு தெரியுமாடி? அடிமட்டத் தொண்டனா இருந்து நாயா பேயா அலைஞ்சி, பார்க்குறவன் கால்ல விழுந்து சம்பாதிச்ச சொத்து அது… எங்க அப்பாக்குப் பின்னாடி நான் எவ்ளோ உழைச்சிருக்கேன் தெரியுமா? அப்படி உழைச்சு அதிகாரத்தோட உட்கார்ந்தவனை, ஒரு மாசம் ஓடி ஒளிய வச்சுட்ட. எங்க அப்பாவை ஆளாளுக்குக் கேள்வி கேக்குற மாதிரி ஆக்கிட்ட. அத்தனைக்கும் இந்த ஹாஸ்பிடல காரணமா வச்சுக்கிட்டு, கேள்வி கேக்குறியே உனக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும்.”

“நீ நினைக்கிற மாதிரி இந்த ஹாஸ்பிடல்ல சொந்தமாக்கிக்க முடியாது. அதுக்கு ஒரு காலமும் நான் சம்மதிக்க மாட்டேன். இவ்ளோ ஆணவமா ஆடுற உன்னையே அடக்கி ஆண்டவ நான்… எங்கிட்ட மோதித் திரும்பவும் அடிபடாத. பத்து நிமிஷம் டைம் தரேன், அதுக்குள்ள உன் கையில இருக்க ஷேரை என் கையில குடுத்துட்டுப் போயிடு.” என மதுணிகா அந்த அறையை விட்டு வெளியேறக் கதவைத் திறந்தாள்.

இடது கையைத் தாவிப் பிடித்தவன், ஒரே சுழற்றில் கதவோடு கதவாக மோதி நிற்க வைத்து, “என்னடி குரல் உயர்த்துற… மரியாதையா போயிடனுமா? இந்த ஆணவத்துக்குத் தான்டி உன்னைத் துடிக்க வைக்கணும்னு வெறி வருது!” என்றவன் கையைத் தட்டி விட்டாள்.

தட்டிய கையைப் பிடித்து முதுகுக்குப் பின்னால் வளைத்தவன் அவள் மீது மோதி நிற்க, முகத்தோடு முகம் உரசுவது பிடிக்காமல் தலையைத் திருப்பிக் கொண்டாள். கன்னத்தைப் பற்றித் தன் விழிகளைப் பார்க்க வைத்தவன், “அம்மு எங்க?” கேட்க, அவளுக்குள் இருந்த ஆத்திரம் அடங்கிப் பயம் பிறந்தது.

“அப்படிப் பார்க்காத!” எனக் கழுத்தை நெறித்து மூச்சுக்காற்றை அவள் முகத்தில் மோத விட்டவன், “ஒரே ஒரு தடவை நான் அவளைப் பார்க்கணும். அந்த அழகான நடிப்புக்காரிய இதே மாதிரி கழுத்தைப் புடிச்சு வெறி அடங்குற வரைக்கும் நசுக்கணும்.” என அவள் மீது உள்ள கோபத்தையும், இவள் மீது உள்ள கோபத்தையும் ஒரு சேரக் காட்ட, கண் சுருங்கியது மூச்சு விட முடியாமல்.

திணறலோடு, விட்டு விடும்படி கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தவள் மீது இரக்கம் வரவில்லை. இன்னும் பலத்தைக் கூட்டினான் கைகளில். கொடுத்த அழுத்தத்தில் ஒரு சதவீதம் கூடினால் கூட உயிர் பிரிந்து விடும் என்ற நிலையில், தள்ளாடிக் கொண்டிருந்தவள் உதட்டோடு உதடு வைத்து உரசிய அகம்பன்,

“என்னடி சொன்ன, என்னை அடக்கி ஆண்டயா? எவ்ளோ அதப்பு இருந்தா இந்த வார்த்தையைச் சொல்லுவ. உன்னைச் சாதாரணமா நினைச்சது தான்டி நான் பண்ண தப்பு. இந்த அகம்பனை அடக்க அந்தக் கடவுளே பிறந்து வந்தாலும் முடியாது. என் காலைப் புடிச்சு ஐயோ என்னை விட்டிடுன்னு கதற வைக்கல, மினிஸ்டர் நவரத்தினத்தோட பையன் இல்லடி நான்!” என இறுக்கி வைத்த கையைப் பட்டென்று விட, கிழிந்த காகிதம் போல் தரையில் விழுந்தாள்‌.

மூச்சுக்காற்றுக்கு ஏங்கும் மதுணிகாவின் தாடையில் ஷூவை வைத்து, “இதான் உன் நிலைமை!” என்றுவிட்டு நகர்ந்தவன் கைப்பிடித்தாள்.

தீப்பிழம்பு மேல் பட்டது போல் உதறித் தள்ளியவன் கையை மீண்டும் பிடித்தாள். அடங்காத ஆத்திரத்தோடு ஏறிட்டவனிடம், “த…தண்ணி தண்ணி வேணும்.” மூச்சு வாங்க வறண்டு போன தொண்டைக்கு உயிர் கொடுக்க மன்றாடினாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்கோபம் உதவி செய்ய மறுத்தது. பரிதாபம் பார்க்காமல் நகர்ந்தவன் காலை எட்டிப் பிடித்தவள், “ப்ளீஸ்!” கண்களால் இறைஞ்சினாள்.

கண்மூடித் தன்னை நிதானித்துப் பலத்த பெருமூச்சோடு அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து அவள் முன்பு அமர்ந்தான். தண்ணீர் பாட்டிலைப் பார்த்ததும், உயிர் கிடைக்கப் போகும் மகிழ்வில் எழுந்தமர்ந்தவளிடம் அதை நீட்டினான். கை நடுக்கத்தோடு வாங்கியவள், ஒரு மிடறு பருகும் முன் மனசாட்சியே இல்லாமல் தட்டி விட்டான். தொண்டைக் குழிக்குள் இறங்கி அவளை ஆசுவாசப்படுத்த வேண்டிய தண்ணீர், தரையில் விழுந்து வழிந்து ஓடியது.

அடிபட்ட பார்வையோடு அகம்பனை நோக்க, “என் அகராதியில உனக்கு மட்டும் இரக்கமே கிடைக்காது!” என்று விட்டு வெளியேறினான்.

சிதறிய தண்ணீர் போல் ஆன வாழ்வை எண்ணிக் கலங்கித் துடித்தவள் முன் முரளி. தந்தையைப் பார்த்ததும் நம்பிக்கையோடு எழ, “இப்போ உனக்குச் சந்தோஷமா? கிஷோர் அப்பவே சொன்னான். நான்தான் எதையுமே கேட்கல. என் ஹாஸ்பிடலை அவன் கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்துட்டியே. எனக்கு வர கோவத்துக்கு…” என வெறிபிடித்தவர் போல் கத்திட, தன் தந்தையா இது! என்ற பெரும் அதிர்வில் சிலையாகிப் போனாள்.

“அப்பா…”

“பேசாத மது. ஒரு நாலு பேரை அனுப்பி அவனை அடிச்சுப் போட்டுட்டு, அந்த ரிப்போர்ட்ட எடுத்துட்டு வரலாம்னு சொன்னேன். தேவை இல்லாம, பண்ணக் கூடாத எல்லாத்தையும் பண்ணி, என்னோட கௌரவத்தையே கெடுத்துட்ட. ஏற்கெனவே அவன்கிட்ட ஒரு தடவை தோற்றுப் போயிட்டேன். இப்ப, அம்பது வருஷமாய் கட்டிக் காப்பாத்துன இந்த ஹாஸ்பிடலைக் கொடுத்துத் திரும்பவும் தோக்கடிச்சுட்ட. என் ஹாஸ்பிடலுக்கு வந்து என் பையன் கையவே உடைச்சுட்டான். இது எல்லாத்துக்கும் நீதான் காரணம்! நீ மட்டும் தான் காரணம்!

கிஷோர் சொன்ன மாதிரி அவன்கிட்ட இந்த ஹாஸ்பிடல் பொறுப்பைக் குடுத்திருந்தா, இது எதுவுமே நடந்திருக்காது. புத்தி கெட்டுப் போய் உன் கையில கொடுத்து என் தலையில நானே மண்ண அள்ளிப் போட்டுக்கிட்டேன். ‌நீ பண்ண தப்பால ஹாஸ்பிடல் கைய விட்டுப் போகப் போகுது.”

“ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்கப்பா.”

“நீ சொன்னதெல்லாம் போதும். எனக்கு உன்னை விட இந்த ஹாஸ்டல் தான் முக்கியம்! நீ அவன் கால்ல விழுவியோ, இல்ல கழுத்தை நெரிப்பியோ… அது உன்னோட பிரச்சினை. எனக்கு இந்த ஹாஸ்பிடல் வேணும் அவ்ளோதான்.” என்று விட்டுக் கதவை அடித்துச் சாத்திவிட்டுச் சென்றவரை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்‌.

***

கிஷோரின் கையில் பலத்த முறிவு. சரியாக, மூன்று மாதத்திற்கும் மேலாகும் என்று விட்டார்கள் மருத்துவர்கள். செய்தி கேட்டுப் பரபரக்க ஓடி வந்தார் அஞ்சலை. அதிர்விலிருந்து வெளிவந்தவள் தன் உடன்பிறப்பைக் காண அறைக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் தந்தையும், தம்பியும் முகத்தைச் சுழித்தார்கள்.

“இப்ப எப்படிடா இருக்கு?” அன்புடன் விசாரித்தவளை, “இதுக்குக் காரணமே நீ தான். ஒண்ணுமே தெரியாத மாதிரி விசாரிக்கிற.” எரிந்து விழுந்தான்.

“நீயும் ஏன்டா அப்பா மாதிரியே பேசுற. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியுமா எனக்கு… நம்ம ஹஸ்பிட்டலுக்காகத் தான அவ்ளோ ரிஸ்க் எடுத்தேன்.”

“யாரு கேட்டா அந்த ரிஸ்க்கை நீ சும்மா இருந்திருந்தா இவ்ளோ பிரச்சினை வந்திருக்காது.”

“எதுக்குடா அவளைத் திட்டிகிட்டு இருக்க.” என்ற மனைவியை, “நீ இதுல தலையிடாத அஞ்சலை. கிஷோர் சொன்ன மாதிரி எல்லாப் பிரச்சினைக்கும் இவள் மட்டும் தான் காரணம். அவனைப் பார்க்கப் பார்க்கப் பத்திகிட்டு எரியுது. அவன் இங்க இருக்கக்கூடாது, அதுக்கு முதல்ல எதையாவது பண்ணச் சொல்லு.” அடக்கினார்.

“நம்ம பொண்ணு என்னங்க பண்ணுவா…” என்றதும் அப்படி ஒரு பார்வை அவரிடம். அதில் அஞ்சலையின் வாய் தன்னால் மூடிக்கொண்டது.

“விடுங்கப்பா, மதுவை ஹாஸ்பிடலுக்குள்ள விட்டால்தான பிரச்சினை வரும். ஒழுங்கா வீட்ல இருக்கச் சொல்லுங்க. அவனை எப்படி அனுப்பனுமோ, அப்படி நான் அனுப்பிக்கிறேன்.”

“கோபத்துல கண்டபடி பேசாத கிஷோர். அவன் என் மேல இருக்கற கோபத்துல தான் இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கான். இப்ப நான் இங்க இல்லனா என்ன பண்ணுவானோ?”

“அதை நான் பார்த்துக்கிறேன்!”

“ரெண்டு பேரும் எதுக்கு அவகிட்ட இப்படிப் பேசுறீங்க? இந்த ஹாஸ்பிடல இத்தன வருஷமா நல்லபடியா பார்த்துக்கிட்டது மது தான. ஏதோ பிரச்சினை ஆயிடுச்சு. அதுக்கு மொத்தமா அவளைக் குத்தம் சொன்னா எப்படி?”

பெற்ற தாயாவது புரிந்து கொண்டதில் சின்ன மகிழ்வு. அந்த மகிழ்வை உடனே, “நல்லாப் பார்த்துக்கிறான்னு தான் எதுலயும் தலையிடாம விலகி இருந்தேன். இப்ப மொத்தமா கைய விட்டுப் போகப்போகுது. எனக்கு இந்த ஹாஸ்பிடலைத் தவிர வேற எதுவுமே முக்கியமில்லை. இந்த ஹாஸ்பிடல் எப்போ என் கைக்கு வருதோ, அப்பதான் இவ என்னோட பொண்ணு. அதுவரைக்கும் இவளுக்கும் எனக்கும் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை.” உடைத்தார் முரளி.

தந்தையின் உதாசீனத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது, “கொஞ்ச நாள் மட்டும் டைம் கொடுங்கப்பா. எல்லாத்தையும் சரி பண்றேன்.” என அவள் மெல்ல அங்கிருந்து நகர, மனம் உடைந்து செல்லும் மகளை மனம் நோகப் பார்த்துக் கொண்டிருந்தார் அஞ்சலை.

***

“அகா…”

அவள் வருகைக்காக ஆர்வமாகக் காத்திருந்தவன், இதழோரம் தவழ்ந்த கேலிப் புன்னகையை மறைக்காமல் காட்டிக் கையில் பிடித்திருந்த தேநீர் கோப்பையைக் கீழே வைத்தான். அதைப் பார்க்க முடியாமல் பார்த்துக் கொண்டு, “இந்த ஹாஸ்பிடலை நீ விடனும்னா, நான் என்ன பண்ணனும்?” நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“செம ஸ்மார்ட்! நேரா என்ன வேணுமோ அதுக்கு வந்துட்ட.”

“அந்த ரிப்போர்ட்டுக்காகத் தான் எல்லாமே நடந்துச்சு. ஆனா, அம்மு…” எனப் பேச்சை ஆரம்பித்தவள் முகத்தில் தேநீரை வீசினான். அரைகுறைச் சூட்டில் இருந்தாலும் அளவற்ற எரிச்சலைக் கொடுத்தது.

தாங்க முடியாமல் விரல் கொண்டு முகத்தை மூடியவளைப் பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கமல். எவ்விதப் பாவமும் இல்லாமல், “அவ என்னோட தனிப்பட்ட ரகசியம்! அவளைப் பத்தி நான் மட்டும் தான் பேசணும்.” கரகரத்த குரலில் கூறினான்.

“ஏய்!” எனக் குரல் கொடுத்து டிஷ்யூ பேப்பரை அவளிடம் வீசினான்.

விழி திறந்தவள் பார்வையில், முதலில் விழுந்தது கமல் தான்‌. அவன் பார்க்கும் பார்வையில் கூனிக்குறுகித் தன் பிறப்பை வெறுத்தவள் குன்றிய குரலில், “நான் என்ன பண்ணனும்?” கேட்டாள்.

“உட்காரு!”

மறுப்பாகத் தலையசைத்தவளைக் கடுமையாக முறைத்தான். அப்பார்வைக்கு அஞ்சித் தலை தாழ்த்திக் கொண்டாள். திரும்பிக் கமலை ஒரு பார்வை பார்க்க, இருக்கையை அவள் பக்கத்தில் போட்டான்.

“இன்னொரு தடவை உட்காருன்னு சொல்ல மாட்டேன்.” என்றதும் அவள் கால்கள் நகர்ந்து இருக்கையைப் பற்றி அமர்ந்தது.

“எனக்கு வேண்டியது எல்லாம் உன்னோட அழுகையும், அவமானமும்! அதை நீ எனக்குக் கொடுப்பேன்னு சொல்லு, இந்த ஹாஸ்பிடலை விட்டுடறேன்.”

“இப்போ அதைத்தான பண்ணிக்கிட்டு இருக்க…”

“எஸ்! பட் ஐ வாண்ட் மோர். நான் விடுற மூச்சுக் காத்து மாதிரி நீ கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கணும். அதுதான் உனக்கான தண்டனை, எனக்கான சந்தோஷம்!”

“சரி, இந்த ஹாஸ்பிடலை விட்டுடு.”

“ஹா‌ஹா… என்னை இன்னும் கிறுக்கன்னு நெனச்சுக்கிட்டு இருக்க பார்த்தியா… என் காரியம் நடந்து முடியுற வரைக்கும் என்னோட கன்ட்ரோல்ல தான் எல்லாமே இருக்கும்.”

“உனக்கும் எனக்கும் தான பிரச்சினை?”

“அதுக்கு இந்த ஹாஸ்பிடல் தான காரணம்!”

“நீ சொல்ற மாதிரி நடந்ததுக்கு அப்புறமும் இந்த ஹாஸ்பிடலைக் கொடுக்க மாட்டேன்னு சொன்னா?”

மெச்சுதலாகப் பார்த்தவன், “கோடி கோடியா சொத்து இருக்கிறவன், இந்த ஹாஸ்பிடல வச்சுத்தான் வாழனும்னு அவசியம் இல்லை. இந்த மாதிரி நூறு ஹாஸ்பிடலைக் கட்ட என்னால முடியும். எனக்கு வேண்டியது நீ மட்டும் தான்…” தீர்க்கமான அவன் வார்த்தையில், தப்பிக்க முடியாது என்பதை அறிந்தவள் முழுச் சம்மதம் தெரிவித்தாள்‌.

“இந்தப் புது சிஇஓ க்கு நீதான் இனி பிஏ. பர்சனலாவும், புரொபஷனலாவும். நான் நில்லுனா நிக்கணும். உட்காருனா உட்காரனும். சிம்பிளா சொல்லனும்னா, நான் ஆட்டி வைக்கிற பொம்மையா இருக்கணும்.”

“ஓகே!”

“குட்! ஆல் தி பெஸ்ட்!” என்றதும், அவள் அந்த அறையை விட்டு நகரத் திரும்ப, “புது பிஏ மேடம் எங்க போறீங்க?” எள்ளலோடு கேட்க, விளங்காது பார்த்தாள் மதுணிகா.

“நான் கண்ணைச் சிமிட்டுற செகண்ட் கூட, நீ என் கண்ணை விட்டு மறையக் கூடாது. இப்படி வந்து ஒரமா நில்லு.” தன் வலது பக்கம் கண்ணைத் திருப்ப அமைதியாக அங்குச் சென்று நின்றாள்.

பேச வேண்டியதைப் பேசி முடித்துவிட்டுத் தன் வேலைகளில் கண்ணும் கருத்துமாக மாறி விட்டான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கமலுக்குத் தான் பாவமாக இருந்தது. முதலாளியின் குணம் தெரியாமல் சிக்கிக்கொண்ட மதுவை, யார் காப்பாற்றுவாரோ என்ற பெரும் கவலையோடு அவனுக்குக் கொடுத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தான்.

மதுணிகா நிற்க ஆரம்பித்து நான்கு மணி நேரம் ஆகிவிட்டது. அவள் பக்கம் சிறு நொடி கூடப் பார்வை திரும்பவில்லை. அடிக்கடி அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் கமலை மட்டும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். கால் வலி தாங்காமல் அசைய ஆரம்பித்தாள். அதைக் கண்ட பின்னும், மனம் மாறாமல் மதியம் வரை நிற்க வைத்தவன், “எனக்கு ரொம்பப் பசிக்குது. போய் சாப்பாடு வாங்கிட்டு வா…” கட்டளையிட்டான்.

“நானா?”

“பின்ன யாரு, உன் அப்பாவா?”

“நான் போய் வாங்கிட்டு வரவா சார்?”

“உன் வேலைய மட்டும் பார்த்தா நல்லா இருக்கும்.” என்றதும் கமல் கமுக்கமாக அமர்ந்து விட, தலையெழுத்தை நொந்து கொண்டு சென்றவள் செவியில்,

“காசு இருக்கா?” கேள்வி விழுந்தது. திரும்பாமல் தலையசைத்தாள். “நீ கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச காசுல சோறு தின்னா ஜீரணம் ஆகாது எனக்கு.” என்றவன் அந்தக் ‘கஷ்டப்பட்டு’ என்ற வார்த்தையை மட்டும் அழுத்தமாகச் சொல்லி நோகடித்தான்.

“இந்தப் பர்ஸ எடுத்துட்டுப் போ…” மேஜையில் இருக்கும் பணப்பையைப் பார்த்தபடி அகம்பன் முன்னால் நின்றவள், “நேத்து நான் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கல சார். அந்தக் பணத்துல சாப்பாடு வாங்கினா, உங்களுக்கு நிச்சயம் ஜீரணம் ஆகும்.” என அவன் எய்த அம்பை அவனுக்கே எய்தாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
18
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்