அத்தியாயம் 46
நெடுநேரம் நீடித்த இதழ் முத்தம், அவளது உயிரை மொத்தமாய் பருகிடத் துடித்தது.
அவளுக்கு அவசர அழுத்த முத்தம் பிடிக்காதென்பதாலேயே நிதானமாய் மெல்லமாய் இதழ் சுவைத்து உவகை கொண்டான் ஆடவன்.
“அரக்கா… ஆஸ்பத்திரில என்ன பண்ற?” எனும்போதே மீண்டும் ஒரு முறை முத்தத்தில் அவளை திணற வைத்தவனை தள்ளி விடும் முன் உள்ளுக்குள் பெரும் போர்க்களமே நடைபெற்றது.
வேண்டுமட்டும் மூச்சிழுத்து உயிர் நிறைத்தவன், “இந்த மேரேஜை எப்படி எடுத்துக்கட்டும்னு கேட்டதுக்கு பதில் இது தான்!” எனச் சிவந்திருந்த பூ முகத்தை ரசித்து விட்டு நிவேதனின் அறைக்குச் சென்றான். இதழ்களில் நிரந்தரமாய் புன்னகை வீற்றிருந்தது.
இங்கோ நிதர்ஷனா இரு கையையும் முகத்தில் புதைத்து வெட்கம் தாளாது தவித்திருந்தாள்.
அறைக்குள் நுழைந்த யாஷ், ஆதிசக்தியின் களையிழந்த முகத்தை பார்த்திட, கதிரவனோ “நிவேதன் அவர்களே… தங்கள் தங்கையான ரித்திகாவிற்கு, தலையில் அடிபட்ட காரணத்தால் மூளை கொழம்பிடுச்சு. உங்களை மறந்துட்டாங்க. நீங்க கொஞ்சம் எல்லாத்தையும் நினைவு படுத்துனா, அவங்க புருஞ்சுப்பாங்க…” என்று இளித்து வைக்க, ரித்திகா கதிரவனை முறைத்தாள்.
“ஹி ஹி… நான் உங்க அண்ணனோட டியரஸ்ட் பிரெண்டு” என்று காலரை தூக்கி விட்டதில், “அவன் உங்களை கேவலமா பாக்கும்போதே தெரியுது” என வாரினாள்.
சிந்தாமணியும் “இது நல்ல ஐடியாவா இருக்கே” என்றெண்ணி, “ஆம்… நானும் மறந்துவிட்டேன். கண்மணிக்கும் கூட உங்களை நினைவில் இல்லையாம். அயல்நாட்டவர் நமது குடும்பத்திற்கு மறதி நோயை பரப்பி விட்டார்கள் போலும்” என்று சாவித்ரியை ஓவர்டேக் செய்யும் அளவு கண்ணீர் சிந்த, நிவேதன் திருதிருவென விழித்தான்.
“என்னவாகிற்று ரித்தி… கண்மணி உனக்கும் என்னை மறந்து விட்டதா?” என நிவேதன் தவிப்பாய் கேட்டான்.
‘உன்னை எப்படா ஞாபகம் வச்சுருந்தேன் மறக்குறதுக்கு’ என நொந்து கொண்டவள் பாவமாக தலையசைத்தாள்.
“நீ என் அத்தை மகள் கண்மணி. சுதந்திர போராட்டத்திற்காக நானும் எம் தந்தையும் பலவாறு போராடினோம். எனது குரு இந்தியாவில் கணினியை பற்றிய பயிற்சி கொடுக்க வந்திருந்தார். புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட கணினி பற்றி பலருக்கும் அறிவு இல்லையென்றாலும், அதனைக் கண்டறிந்த குழுவில் எமது குருவும் இருந்திருக்கிறார்” என்றிட, யாஷ் புருவம் சுருக்கினான்.
“வாட்? நான் கம்பியூட்டரை கண்டுபிடிச்சேனா?”
“முழுமையான டிஜிட்டல் எலெட்ரானிக் கம்பியூட்டரை 1946 – ல தான் கண்டுபிடித்தார்கள் குருவே. அதை இந்தியாவில் பரப்பும் பொருட்டே நீவிர் இங்கு வந்தீர். முதலில் உங்கள் தோற்றத்தைப் பார்த்து என் குடும்பத்தில் அனைவரும் உங்களை கண்டு அச்சம் கொண்டார்கள். எங்களை அடிமைப்படுத்த வந்து விட்டீர்களென! ஆனால் நீங்கள் எங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்டு வருந்தி, எங்களுக்கு சுதந்திரத் தாகத்தை புகட்டுனீர்கள்…”
‘ம்ம்க்கும்!’ யாஷ் கடுப்பாகும்போதே, நிதர்ஷனா உள்ளே நுழைந்தாள்.
அவளது முகத்தில் சிறு யோசனை.
பின் நிவேதனே தொடர்ந்தான். “அந்த நேரத்தில் நானும் கண்மணியும் ஒரே கல்லூரியில் தான் பயின்றோம். கண்மணியுடைய குடும்பம் சுதந்திர போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக கலந்து கொள்ளாமல், அயல்நாட்டினவருக்கு கை கட்டி வேலை பார்த்தார்கள். அந்தக் குடும்பமே எனக்குப் பிடிக்காமல் போயிற்று. இதோ இந்த நிதர்ஷனாவும் கதிரவனும் என் தந்தையை ஏமாற்ற வந்தவர்கள். தவறிழைக்காத என் தந்தை மீது பெரியதொரு குற்றத்தை சுமத்தி அவரது பெண்ணாக எங்கள் வீட்டினுள் நுழைந்தாள்.
குருவே… எம் தங்கையை திருமணம் முடிப்பதாக வாக்கு கொடுத்த உங்களை, அவள் வசம் இழுத்து என் தங்கைக்கும் அநீதி இழைத்து விட்டாள். இதோ இந்தக் கதிரவன், எனது தங்கை முறையான சிந்தாமணியைக் காதலிப்பதாகக் கூறி அவளை அழைத்துக் கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தான்.
உயிர் தமிழ் மண்ணிற்கு அல்லவா? நம்மை அடிமைப்படுத்தும் பிரிட்டிஷினரிடமே அடிமையாக இருக்க விரும்பும் இவர்கள் அனைவரையும் நான் வெறுக்கிறேன். கண்மணி மட்டுமே என் கரம் பிடித்து எனது வெற்றி தோல்வியில் பங்கெடுத்துக் கொள்வதாக என்னுடன் காதலாகி கரைந்திட்டாள். இறுதியில் அவளுக்கும் அவளது குடும்பம் மட்டுமே பிரதானமாகிப்போனது…” சொல்லும்போதே அவனிடம் சிறு வெறுப்பு.
கதிரவன் தான் கன்னத்தில் கை வைத்தான். “ஆத்தாடி…” கதிரவன் கத்தியதில் சிந்தாமணி என்னவென கேட்க,
“உண்மையாவே எனக்கு வெளிநாட்டுக்கு வேலைக்கு போக ஆசை இருக்கு. என்ன நிதா இவன் எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறான்…” எனப் பதறினான்.
நிதர்ஷனாவும் வியந்து விட்டு, “இதெல்லாம் அவனோட ஹாலுசினேஷன் தான கதிரு. லிங்க் பண்ணிருப்பானா இருக்கும்…” என்றதில், யாஷ் பிரஜிதன் “பட் கண்மணி பேர் எல்லாம் எப்படி கரெக்ட்டா சொல்றான்? எல்லாமே ஓவர் ஆல் மேட்ச் ஆகுதே” என்றதில்,
“அடப்பாவி அப்ப எல்லா ஜென்மமும் நீ என்னை ஏமாத்திட்டு தான் இருக்கியா?” என ரித்திகா உதட்டைப் பிதுக்கினாள்.
நிதர்ஷனா அவளை முறைத்து விட்டு, “மத்ததை கூட நான் பொறுத்துப்பேன் அரக்கா. அந்த ஆளு சுதந்திரத்துக்காக போராடுன தியாகின்னு சொன்னான் பாரு. மனசு உடைஞ்சு போச்சு” என்று நெஞ்சைப் பிடிக்க, யாஷ் மெல்லச் சிரித்தான்.
“ஏய் இவன் உனக்கு பார்க்க அரக்கன் மாதிரி இருக்கானா?” ரித்திகா நேரடியாய் நிதர்ஷனாவிடம் சண்டைக்கு வர,
“அரக்கன் தான் எனக்கு” என சிலுப்பியதில், “நிதர்ஷனா வார்த்தையை அளந்து பேசு” என்று கண்டித்தான் நிவேதன்.
“போடா பொடலங்கா!” மீண்டும் திமிராய் பேசியவளை முறைத்தவன்,
“குருவே… தங்களின் தந்தை எந்நிமிடமும் இங்கு வந்து ஆபத்து விளைவிக்க இயலும். தாங்கள் பத்திரமாக அவருடனே சென்று விடுங்கள். எமக்காக இங்கிருந்து உங்களுக்கு ஏதும் நேர்ந்து விட வேண்டாம். எம் தங்கையையும் பாதுகாப்பாய் அழைத்துச் சென்று விடுங்கள் குருவே. மாயாஜாலம் தெரிந்தவர். நம்மையே உருமாற்றி விடுவார்!” என அச்சம் கொண்டான்.
“என் பப்பாவுக்காக ஏன் பயப்படணும்?” கூர்விழிகளால் யாஷ் வினவ,
“அவர் தானே பிரிட்டிஷ் நாட்டு அதிகாரி. இங்கு இந்தியர்களை அடிமைப்படுத்த உத்தரவிட்டதே அலெஸ்ஸாண்ட்ரோ தான்!” என்றதும் யாஷ் பிரஜிதனின் புருவம் ஏறி இறங்கியது.
அதிகம் பேசியதாலோ என்னவோ, தலையைப் பிடித்துக் கொண்டு சோர்வாகி பின் உறங்கி விட்டான்.
ஆதிசக்தியும் இளவேந்தனும் அதிர்ந்து “இவனுக்கு உண்மையாவே போன ஜென்மத்து ஞாபகம் வந்துடுச்சா?” எனத் திகைக்க, பின்னந்தலையைக் கோதி விட்டு “நோப்… இட்ஸ் சம்திங் டிஃபரென்ட்!” என நிவேதனை ஆழ்ந்து பார்த்தான்.
அவனது மனநிலையைக் கணித்து விட்டவன், சில நொடிகள் அமைதிக்குப் பிறகு, “இத்தாலிக்குப் போகணும்!” என்றான் இளவேந்தனிடம்.
“என்னப்பா திடீர்னு?”
“உங்க பிலவ்ட் வைஃப் இன்னுமே எலைட் கம்பெனியோட பார்ட்னர் தான். அங்க சேர்மன் ஆகுற எல்லாத் தகுதியும் அவங்களுக்கு இருக்கு…” என்றிட, ஆதிசக்தி அதிர்ந்தார்.
“யாஷ் என்ன பேசுற? நான் எப்படி மறுபடியும்…”
“நீங்க வரணும் மம்மா. வரதராஜனும் அலெஸ்ஸாண்ட்ரோவும் இனி அங்க இருக்குறது உங்க உழைப்பையும் என் உழைப்பையும் தப்பா காட்டும். வீ ஹேவ் டூ கோ!” என்றான் தீவிரத்துடன்.
“ஆனா யாஷ்!” ஆதிசக்தி தடுமாற,
“அவர் என்னை வச்சு பயம் காட்டுறதுக்கு நான் அஞ்சு வயசு பையன் இல்ல மாம்” என்றதும் அவரது விழிகள் கலங்கிப் போனது.
“சாரி யாஷ்… நான் அவனை நம்பி போயிருக்கவே கூடாது” தவறிழைத்து விட்ட குற்ற உணர்வு இன்னும் அவரை குத்தி எடுத்ததில், யாஷ் “இட்ஸ் ஓகே லீவ் இட்!” என முதன்முறை உரைத்ததில் சிறு நெகிழ்வு அவரிடம்.
நிதர்ஷனா தான், “உண்மைய சொல்லுங்க நெஜமாவே நீங்க சைண்டிஸ்ட்டு தானா?” என ஒரு மாதிரியாகக் கேட்க, ஆதிசக்தி கண்ணைத் துடைத்துக்கொண்டு “ஏனாம்?” என உதட்டைச் சுளித்தார்.
“பின்ன, அரை வேக்காடு ஆபிசரா இருக்கீங்க. உங்க மேல கோபம் இருந்திருந்தா உங்க உழைப்பு தப்பாக கூடாதுனு எதுக்கு உங்களையும் இத்தாலிக்கு கூப்பிட போறாரு உங்க புள்ள” என்றதும் அவர் விழிகள் மின்னியது.
‘என்னை அனலைஸ் பண்றதையே ஃபுல் டைம் ஜாபா வச்சுருப்பா போல’ என முணுமுணுத்து சின்னதாய் புன்னகைக்க, ஆதிசக்தி கையைப் பிசைந்து கொண்டு, “ஆனா” என மீண்டும் ஆரம்பிக்க,
“சப்பா… ஆனா ஆவன்னாவை எல்லாம் அங்க போய் போடுங்க!” எனக் கிண்டல் செய்ததும், “நீயும் தான் வர்ற!” என்றான் கையைக் கட்டிக்கொண்டு.
“நானா?” நிதர்ஷனா திகைக்க,
“யூ ஆர் மை வைஃப்… ரைட்?” புருவம் நெறித்து அவன் கூறிய தோரணையில், கதிரவன் உள்புகுந்தான்.
“அவளா தான தாலி கட்டிக்கிட்டா… இல்ல நிதா?” என நக்கலாய் கேட்டான். அவனுக்கும் கோவிலில் இருவருக்கும் நிகழ்ந்த திருமணம் பற்றித் தெரியும்.
அசடு வழிந்த நிதர்ஷனா, “இவ்ளோ நடந்தும் நீ என்கிட்ட ஒத்த வார்த்தை சொல்லல…” எனக் கோபித்துக்கொள்ள,
“கொன்னுடுவேன் உன்ன. இந்த வெளிநாட்டுக்காரன லவ் பண்ணுனதை நீயும் என்கிட்ட சொல்லவே இல்ல” என முறைத்தான்.
“உங்கிட்ட கூட சொல்லலையா நானு? சோ சேட்” போலியாய் வருத்தப்பட்டுக் கொண்டதில்,
“என்னது கல்யாணம் ஆகிடுச்சா?” என அதிர்ந்தாள் ரித்திகா.
“டேய் உண்மையாவே கல்யாணம் பண்ணிட்டியா?” வாயில் கை வைத்தவளின் தோளில் கை போட்டுக் கொண்டவன், “ஒரே ஒரு டைம் தான். இன்னும் ரெண்டு டைம் பண்ணனும்…” என்று தீவிரத்துடன் உரைக்க, நிதர்ஷனா வாயைப் பிளந்தாள்.
“இன்னும் ரெண்டு தடவையா?” சொல்லும்போதே ரித்திகாவின் மீதிருந்த கையை பார்வையால் சுட, அதில் தானாய் கையை எடுத்துக் கொண்டான்.
“ம்ம்… உன் பிரதர் வந்ததும் ஒரு டைம் மேரேஜ் பண்ணலாம்னு சொன்னியே மின்னல். தென் சர்ச்ல ஒரு டைம்” என அசட்டையாக உரைத்ததில்,
“ம்ம்க்கும்! ஒரு தடவை பண்ணதுக்கே இந்த பாடா இருக்கு” என்று கடுப்பாய் முணுமுணுத்தாள்.
ரித்திகாவோ வம்படியாக யாஷின் கையைப் பிடித்து தனது தோளில் போட்டு விட்டு, “பேப்ஸ்… எல்லா தடவையும் ஒரே பொண்ணையா கல்யாணம் பண்ணிக்க போற?” எனக் கேட்டு நிதர்ஷனாவின் வயிற்றில் ஒரு லாரி தீயை அள்ளிப் போட்டாள்.
அதன்பிறகு, ஒரு வாரமும் மருத்துவமனையில் தான் கழிந்தது. நிவேதன் முக்கால்வாசி நேரம் மருந்தின் விளைவில் உறக்கத்திலேயே தான் இருந்தான். கண் திறந்தாலும் போராட்டத்திற்கு செல்ல போவதாக அடம்பிடிப்பவனைக் கண்டு அனைவரும் தெறித்து ஓடினர்.
இதற்கிடையில், நிதர்ஷனா மற்றும் நிவேதனுக்கும் பாஸ்போர்ட் எடுக்கும் வேலை துரிதப்படுத்தப்பட்டது.
“எல்லாரும் சேர்ந்தா இத்தாலிக்குப் போக போறோம்?” நிதர்ஷனாவின் கேள்வியில் தலையசைத்தான் யாஷ்.
“அங்க போய் என்ன செய்யப்போறோம்?”
“அதை அங்க போயிட்டு சொல்றேன்” என்றதோடு பேச்சைக் கத்தரித்துக் கொண்டவன், வெளியில் செல்வதும் மீண்டும் வருவதுமாக அலைந்து கொண்டிருந்தான்.
நிவேதன் கண் விழிக்கும் சமயம் கண்மணி சரியாக அவன் முன் வந்து அமர்ந்து விடுவாள். ஏனோ நிவேதன் கண் விழித்ததும் தன்னைத் தேடுவதும், தன் முகத்தைக் கண்டதும் தானாய் கண்களில் வந்து போகும் ஒளியும் அவளை ரசிக்க வைத்தது. தினசரி செயலாக யாரும் கவனிக்க வழியற்று எதார்த்தமாய் இதனை தொடர்ந்து கொண்டிருந்தாள்.
ரித்திகாவை தனது வீட்டிலேயே தங்க வைத்திருந்தான் யாஷ் பிரஜிதன். ரித்திகாவும் நிதர்ஷனாவும் நேரடியாகப் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு தோன்றவில்லை.
ரித்திகாவிற்கும் நிவேதன் தன்னிடம் காட்டும் ஆவலும் பாசமும் புதிது. சிறு வயதில் தாய் இறந்திருக்க, தந்தையும் முழுக்க முழுக்க தொழிலில் மட்டுமே மூழ்கிப் போனதில் அவளுக்கும் தனிமை பழக்கமே! அதனாலேயே யாஷுடன் நட்பு பாராட்ட முடிந்தது. கல்லூரி காலத்தில் தன்னுடைய சீனியரான ஆஹில்யன் மீது காதலையும் வரவைத்தது.
நிவேதனுக்காகவே அவளும் தினமும் மருத்துவமனைக்கு வந்து விடுவாள். நிவேதன் உறங்கும் நேரமெல்லாம் அவனுடன் இருக்கும் நிதர்ஷனாவும் கதிரவனும் அவன் விழிக்கும் நேரம் உள்ளேயே நிற்பதில்லை. தனியே வந்து விடுவார்கள். இதில் குருவே! குருவே! என்று யாஷ் பிரஜிதனிடம் பேசியே அவனை எரிச்சல் படுத்துவான்.
ஒருமுறை நிவேதனின் அறையில் அனைவரும் அமர்ந்திருக்கும் நேரம் இளவேந்தன் யாஷிடம், “ஹாஸ்பிடல்ல இருக்குறதே நிவேதனுக்கு ஸ்ட்ரெஸ் குடுக்கும் யாஷ். வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாமா?” எனக் கேட்டதும், அவரை அமைதியாய் பார்த்தவன், “உங்க தங்கச்சியோட இறப்புக்கு காரணமானவானோட பையன் அவன். உங்களுக்கு கோபம் இல்லையா?” என்றான்.
“அவன் செஞ்ச தப்புக்கு பசங்க என்ன செய்வாங்க. நிவேதன் மட்டும் இல்ல ரித்திகாவும் நல்ல பொண்ணா தான் தெரியுறா. அவள் கூட கல்யாணம் நின்னதுல வருத்தமா இருக்குப்பா. என்ன இருந்தாலும் மனசு வேதனைப்படும்ல அந்தப் பொண்ணுக்கு!” என்றதை ஆதிசக்தியும் ஆமோதித்தார்.
பொதுவாய் யாரிடமும் ஒட்டாமல் தனித்து இருந்த ரித்திகா, நிவேதன் கண் விழிக்கும் சமயம் என அறைக்குள் நுழையப்போக இந்த உரையாடலைக் கேட்டு சற்றே திகைத்தாள்.
இங்கு யாருக்கும் தன்னைப் பிடிக்காது என்று தானே அவள் தள்ளி இருந்ததும்!
அந்நேரம் பின்பக்கம் ஆஹில்யன் வர, மெல்லத் திரும்பியவள் அவனைக் கண்டு அதிர்ந்தாள்.
“ஆஹி! என்னடா ஆச்சு உனக்கு?” என அவனது நெற்றியில் இருந்த காயத்தைக் கண்டு பதறிட, அவளது குரல் கேட்டு மற்றவர்களும் வெளியில் வந்தனர்.
“அது… கீழ விழுந்துட்டேன் ரித்தி…” என்றவனை முறைத்தவள், “எங்க விழுந்த? எப்படி விழுந்த?” என ஆயிரம் கேள்வி கேட்டாலும் அவனது காயம் கண்டு மனம் வலித்துப் போனது.
யாஷைக் கண்டதும் பயந்து ரித்திகாவைத் தள்ளி நிறுத்த முற்பட, அவளோ “அமைதியா இருடா. யாஷ் டாக்டரை கூப்டு” என அவசரப்பட்டாள்.
யாஷிற்கு முன்னே கதிரவன் வேகமாகச் சென்று மருத்துவரை அழைத்து வர, அவர் ஆஹில்யனின் காயத்திற்கு மருந்திட்டார்.
அதுவரையில் அவனது கையை அவள் விட்டபாடில்லை.
“இந்தப் பையன் உன் பி. ஏ தான?” ஆதிசக்தி யோசனையாக கேட்டதும், “எஸ் மம்மா. அண்ட் ரித்திகாவோட பியான்ஸ் ஆல்சோ” என்றதில், நிதர்ஷனா “ஓஹோ அவளுக்கு ஆல்ரெடி ஆள் இருக்குன்னு தெரிஞ்சு தான் அவளை கழட்டி விட்டுட்டு வாந்தியாக்கும்…” என்றாள் உதட்டைச் சுளித்து.
“அவளுக்கு ஆள் இருந்தா என்ன இல்லைன்னா என்ன… எனக்கு சேர்மன் போஸ்ட் வேணும்னு அவளைக் கல்யாணம் பண்றதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல!” என்றதில் அவள் தீப்பார்வை வீசினாள்.
அதனை அசட்டை செய்தவாறே, “என்ன ஆச்சு?” எனக் கேட்டான் ஆஹில்யனிடம்.
“ஒன்னும் இல்ல பாஸ்… சும்மா கீழ விழுந்துட்டேன்” மீண்டும் அவன் பொய்யுரைக்க, யாஷ் பிரஜிதனின் அழுத்தப்பார்வையில் எச்சிலை விழுங்கி விட்டு, “கார்ல வரும்போது ஒரு சின்ன ஆக்சிடெண்ட் சார்…” என்றதும், “அய்யயோ என்னடா ஆச்சு?” என்றாள் ரித்திகா.
“ஆக்சிடெண்ட்டா?” ஒற்றைப் புருவம் ஏத்தி இறக்கியதில், “இல்ல இல்ல பாஸ்… இவளோட அப்பா என்னை அடிச்சுட்டாரு” என வேகமாய் உளறினான்.
“அப்பா அடிச்சாரா? ஏன்டா?” ரித்திகா வினவ,
“நிதர்ஷனா மேம கொலை செய்ய ட்ரை பண்ணுனது அவர் தான்னு கன்பார்ம் ஆகிடுச்சு. உனக்குப் பதிலா அவங்களை வைஃபா நடிக்க இங்க கூட்டிட்டு வரும்போதே உன் அப்பாவுக்கு இவங்களை பத்தி தெரியும். இந்தப் பொண்ணு உயிரோட இருக்குறது பிடிக்காம, கொலை செய்ய பாத்துருக்காரு” என்றதில் அவளிடம் அதிர்வு.
நிதர்ஷனாவோ, “அப்போ லைட்டடிச்சு துப்பாக்கியால சுட வந்தது ரித்திகான்னு நினைச்சு இல்லையா? அது உண்மையாவே எனக்கு தானா?” என அரண்டு போக, “இதை தானடி ரொம்ப நாளா நானும் சொல்லிட்டு இருக்கேன்…” யாஷ் அதட்டினான்.
“சரி அதுக்கு எதுக்கு உங்களை அடிச்சாரு?” கதிரவன் வினவ,
“அதுவா… என்ன இருந்தாலும் மாமனாரா போய்ட்டாரேன்னு சாஃப்ட்டா டீல் பண்ணேன். என் பொண்ணை கரெக்ட் பண்ண உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கும்னு ஒரே அப்பு அப்பிட்டாரு. கொஞ்சம் பாடி பில்டர் போலருக்கு. அடிச்ச அடில சுவத்துல முட்டிட்டேன்…” எனப் பரிதாபமாகக் கூற, “அடப்பாவமே” எனக் கண்மணியும் சிந்தாமணியும் பரிதாபப்பட்டனர்.
ரித்திகா வாயைப் பொத்தி சிரித்து வைத்தாள்.
“அடிப்பாவி… உன்னால அடி வாங்கிட்டு வந்துருக்கேன். சிரிக்கிற…” ஆஹில்யன் முறைக்க,
“என் அப்பாவை அடிக்க துப்பில்ல. இதுல உனக்காக நான் பீல் வேற பண்ணனுமா?” எனக் கடிந்தவள், யாஷிடம் திரும்பி “எனக்கு ஒரு விஷயம் தான் புரியல” எனக் குழப்பமாக.
கண்மணியோ “உங்களுக்கு ஒரு விஷயம் தான் புரியலையா? எங்களுக்குல்லாம் ஒண்ணுமே புரியல” எனப் பாவமாய் கூற,
“ஹி ஹி எனக்கும் ஒன்னும் புரியல. அதுல ஒரு விஷயம் ரொம்ப புரியல. அதை தான் கேட்க போறேன். புரிஞ்சுதா?” என்றதில், சிந்தாமணி தலையைச் சொரிந்தாள்.
“இப்ப எனக்கு ஒன்னு புரியல” கதிரவன் ஆஜராக, அவனது தலையில் நறுக்கென கொட்டிய நிதர்ஷனா, “நானே எல்லாத்தையும் மறந்து, மண்டை குழம்பி போய் இருக்கேன். மாறி மாறி கலாய்க்கிறீங்களா!” எனப் பல்லைக் கடித்தாள்.
“ஃப்பூ!” யாஷ் பிரஜிதனுக்கு கோப மூச்சு பெருக்கெடுத்தது.
“ஓ காட் ஸ்டாப் இட்! உங்களுக்கு ஒண்ணுமே புரியலைன்னாலும் பரவாயில்ல. சைலண்ட்டா இருந்து தொலைங்க!” என அறைக்குள் செல்லப் போக, உள்ளிருந்து “குருவே” என நிவேதனின் குரல் கேட்டதில் “ஓ ஷிட்!” எனப் பதறி விறுவிறுவென வெளியில் சென்று விட்டவனைக் கண்டு நிதர்ஷனா சத்தம் வராமல் சிரித்து வைத்தாள்.
அத்தியாயம் 47
நாளும், பொழுதும் மின்னலெனக் கரைந்தது.
மகேந்திரன், கிருஷ்ணவேணி, அழகேசன் மூவருமே அவ்வப்பொழுது மருத்துவமனைக்கு வந்து செல்வர். அழகேசன் தான் ஆதிசக்தியிடம் வருத்தம் கொண்டார்.
“அந்த வீணாப் போனவன் மிரட்டுனா, எங்ககிட்டச் சொல்லிருக்க வேண்டியது தான? நீ ஏன் சக்தி இத்தனை வருஷமா மனசுக்குள்ள புழுங்கிட்டு இருந்த…”
ஆதிசக்தி, அதற்கு மேல் அதனை விளக்கத் தெம்பில்லாது கசந்த முறுவலையே பதிலாய் தந்தார்.
கிருஷ்ணவேணியும், “என்ன இருந்தாலும் புள்ளையைப் பிரிஞ்சுட்டு அவ தான் அதிகமா வருத்தமும் பட்டிருப்பா.” என வருந்த, மகேந்திரனுக்கு இன்னமும் குற்ற உணர்வு ஆட்டிப் படைத்தது.
குழந்தையை வேண்டாமெனத் தந்தையிடம் கொடுக்கும்போதே அதட்ட வேண்டியது அவரின் கடமை அல்லவா! அவரும் மகளின் விருப்பமென விட்டு விட்டாரே.
அந்த அளவு, வரதராஜன் ஒரு புறம் படுத்தி இருந்தார். மீண்டும் அலெஸ்ஸான்ட்ரோ வந்து தங்களது தலையில் இடியைப் போட்டு விடக் கூடாதென்ற பயமே அப்போது அவரைக் கட்டிப்போட்டது.
யாஷ் பிரஜிதன், குடும்பத்தினர் அனைவருக்குமே பாஸ்போர்ட், விசாவை நீட்ட, மகேந்திரன் “என்னதுப்பா இது?” என்றார்.
“எல்லாரும் இத்தாலிக்குப் போறோம் க்ராண்ட்பா!” என்றதும், “நானுமா?” என்றார் அதிர்ந்து.
“ஆமா, நீங்களும் தான். இங்க உங்களை மட்டும் தனியா விடுறது சேஃப் இல்ல. நான் அர்ஜென்டா இத்தாலிக்குப் போயே ஆகணும். உங்க எல்லாரையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போகத்தான் வெயிட்டிங்.” என்றதும் அவரும் மறுக்கவில்லை.
நிவேதன், இப்போதெல்லாம் சற்று நிறுத்தி நிதர்ஷனாவை உற்றுப் பார்ப்பதும், பின் சிந்திப்பதுமாக இருந்தான். மெல்ல மெல்லப் போதை மருந்து அவனது இரத்தத்தில் இருந்து பிரிவதும், அவன் மெல்லத் தேறுவதும் கண்கூடாய் தெரிய, முழுதாய் அவன் சுயநினைவுக்கு வரும் நாளுக்காகக் காத்திருந்தான் யாஷ்.
அன்று நிவேதன் உறக்கத்தில் இருந்து விழிக்கும் நேரம், ரித்திகாவும் கண்மணியும் அவனருகில் அமர்ந்திருந்தனர். சற்றுத் தள்ளி நிதர்ஷனா அமர்ந்திருந்தாள்.
“கண்மணி, உன் ஹாலுசினேஷன் ஆளு கண்ணு முழிக்கப் போறாருப்பா…” ரித்தி கூறியதும், “சும்மா இருங்க ரித்திகா… அம்மா, அப்பா கேட்டா அவ்ளோ தான்…” என மிரண்டாள்.
“நானும், கனவுல லவ் பண்ணிப் பார்த்துருக்கேன். பார்க்காம லவ் பண்ணிப் பார்த்துருக்கேன். பட் பார் தி பர்ஸ்ட் டைம், ஹாலுசினேஷன்ல லவ் பண்ற ஒரே ஆளு இவன் தான். இவனை இந்த ஒரு விஷயத்துல என் பிரதர்னு ஒத்துக்குவேன்…” என்றவளைக் கண்டு நகைத்தாள் கண்மணி.
“நீங்க ரொம்ப ஸ்வீட் ரித்தி. நீங்களும் கிட்டத்தட்ட நிதா அண்ணி மாதிரித் தான் இருக்கீங்க. அதுசரி, நீங்க கல்கத்தால தான இருந்தீங்க. வேலையும் இத்தாலில தான். அப்புறம் எப்படித் தமிழ் நல்லாப் பேசுறீங்க, அண்ணா மாதிரி…” எனக் கேட்டதும், நிதர்ஷனா காதில் வாங்காதது போலத் துப்பட்டாவில் கவனத்தைப் பதித்தாள்.
நிதர்ஷனாவின் பேச்சைக் கத்தரித்த ரித்திகா, “நான் காலேஜ் படிச்சது எல்லாம் சென்னை தான். ஆஹில்ட்ட இருந்து கத்துக்கிட்டேன்.” செம்மை பரவக் கூறிட, “புரிஞ்சுடுச்சு! ஒரே லவ்ஸ் தான்…” என்றாள் கிண்டலாக.
“ஹ்ம்ம்… பட், அப்பாவுக்குத் தெரிஞ்சா நான் செத்தேன். அவருக்கு அப்போ இருந்தே நான் யாஷைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் ஆசை. எனக்கும் கூட யாஷ் தான் டியரஸ்ட்…” என்று விட்டு ஓரக்கண்ணில் நிதர்ஷனாவைப் பார்க்க, “அதான் தெரியுமே. அப்புறம் எதுக்கு, வார்த்தைக்கு வார்த்தை பேப்ஸ், டியர்னு உருட்டுதுங்க!” என்று பல்லைக் கடித்தாள்.
அவளைக் கடுப்பாக்குவதில் ஒரு பரம திருப்தி எழ, ரித்திகாவே தொடர்ந்தாள்.
“எனக்கும் யாஷை மேரேஜ் பண்றதுல எந்த அப்ஜெக்ஷனும் இல்ல. இடைல இந்த ஆஹில் வந்து தொலைஞ்சுட்டான். அதுலதான் மனசை மாத்திக்க வேண்டியதா போச்சு…” என வேண்டா வெறுப்பாகக் கூறுவது போலப் பேசியவளை நிமிர்ந்து முறைத்தாள் நிதர்ஷனா.
கண்மணி சிரித்தபடி, “இதெல்லாம் டூ மச் ரித்தி. ஆஹில் அண்ணாவும் நல்ல டைப்பா தான் இருக்காங்க…” எனச் சான்றிதழ் வழங்க,
“ஆமா ஆமா, ஆனா என் அப்பா பேரைச் சொன்னா வாய் தான் டைப் அடிக்கும் அவனுக்கு. சரியான பயந்தாங்கொள்ளி! அவனை யாஷ்க்கு பி.ஏவா சேர்க்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும்…” என்றதில் கண்மணி ஆர்வமானாள்.
“அவரை ஏன் பி.ஏவா அனுப்புனீங்க?” எனக் கேட்கும்போதே, “பாஸ்…” என்றபடி யாஷைத் தேடிக்கொண்டு வந்து சேர்ந்தான் ஆஹில்யன்.
“அடடே, அவரே வந்துட்டாரே!” நிதர்ஷனா ஆஹில்யனை வலுக்கட்டாயமாகத் தன்னருகில் அமர வைத்து, “உங்க கதை தான் ஓடிட்டு இருக்கு மாம்ஸ். நீங்க ஏன் அந்த அரக்கன்கிட்டப் போய் வேலைக்குச் சேர்ந்தீங்க.” எனப் பாவமாகக் கேட்டதும், ஆஹில்யன் அரண்டு விட்டான்.
“மேம்!”
“அட, நீ வேற ஏன்யா ஆடு மாதிரி மே மேன்னு கத்திட்டு இருக்க… அந்த சுதந்திரப் போராட்டத் தியாகி கண்ணு முழிக்கிறக்குள்ள கதையைச் சொல்லு…” என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டாள்.
ரித்திகா, நிதர்ஷனாவைத் தீயாய் முறைத்து வைத்தாள். மாம்ஸ் என அழைத்தது அவளுள் பொறாமைத் தீயை ஏற்றி இருந்தது.
‘கொய்யால! என் செல்லத்தை பேப்ஸ்னு கூப்பிடுவ இனி…’ எனக் கறுவிக் கொண்ட நிதர்ஷனா, உதட்டைச் சுளித்தாள்.
கண்மணியின் வற்புறுத்தலின் பேரில், நிதர்ஷனாவை முறைப்படி ரித்திகா பழைய நினைவிற்குச் சென்றாள்.
கல்லூரி படித்துக் கொண்டிருந்த நேரம் அது. ஆஹில்யன் அவளுக்கு இரு வயதுப் பெரியவன். கல்லூரி முடித்த கையோடு பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் வேலை கிடைக்குமென ஆசை கொண்டவனுக்கு அது நிராசையாகிப் போனது.
சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவன் ஆஹில்யன். திறமை இருந்தும் வேலை கிடைக்காது அல்லாடினான்.
ரித்திகாவோ, “சீக்கிரமே நல்ல வேலைக்குச் சேர்ந்துப் பெரிய பணக்காரனாகிடு ஆஹி…” என நச்சரிக்க,
“அடிப்பாவி, இப்ப இருக்குற விலைவாசிக்கு நட்சத்திர ஜன்னலில் பாட்டை பத்தாயிரம் தடவை போட்டாலும் சம்பளம் கூடாதுடி. இதுக்கு மேல நான் உடனே பணக்காரன் ஆகணும்னா கொள்ளை தான் அடிக்கணும்.” என்றான் சோகமாக.
“இதோ பாரு ஆஹி. பீ பிராக்டிகல். என் அப்பா ரொம்ப டேஞ்சரான ஆளு. அவர்கிட்ட அவருக்கு ஏத்த மாதிரி இருக்குறவரை தான் நம்ம தப்பிப்போம். கொஞ்சம் பிசிறு தட்டுச்சு, பொண்ணு பன்னுனுலாம் பார்க்க மாட்டாரு. முடிச்சு விட்டிருவாரு. என்னை யாஷுக்காக நேர்ந்து விட்டிருக்காருடா. அவன் வேற ஏதோ ரிசர்ச்ல இறங்கிருக்கான். அதுல நானும் ஜாயின் பண்ணப் போறேன்னு என் அப்பாட்ட உருட்டி வச்சுருக்கேன். சோ, காலேஜ் முடிச்சதும், நான் இத்தாலிக்குப் போயிடுவேன். இந்தியால இருந்தா, கண்டிப்பா நம்ம லவ் மேட்டர் அவருக்குத் தெரிஞ்சுடும். அது தெரியறது பத்தி ப்ராப்ளம் இல்ல.
யாஷ் அளவுக்கு இல்லைன்னாலும், ஸ்டேட்டஸ் வச்சுனாவது நான் உனக்காக ஆர்கியூ பண்ணலாம். அதுக்காகவாவது அவர் உன்னைச் சும்மா விட்டு வச்சுருப்பாரு. இல்லன்னா கொன்னுடுவாருடா. நீ எனக்கு உயிரோட வேணும் பேபி…” என ஆஹில்யனை மிரள வைத்தாள்.
“என்னடி, இப்படிக் கோர்த்து விடுற? பேசாம நீ அந்த யாஷைக் கல்யாணம் பண்ணிக்கோயேன்.”
சற்றே முகம் மாறிய ரித்திகா, “சரி விடு, இது நடக்காதுன்னு எனக்குப் புரியுது. நானும் ஒன்னும் ஸ்டேட்டஸ் பார்த்து லவ் பண்ணல. உங்கிட்ட உண்மையான அன்பை பீல் பண்ணுனேன். அது கடைசி வரை வேணும்னு நினைக்கிறேன், அவ்ளோ தான். பட், அதுக்காக உன்னை ப்ரெஷர் பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல. இதை நான் முன்னாடியே யோசிச்சு இருக்கணும். நம்ம பிரேக் அப் பண்ணிக்கலாம்…” என்றாள். சொல்லும்போதே கண் கலங்கி விட்டது.
“கழற்றி விடுறியா?” ஆஹில்யன் கோபத்துடன் கேட்டதும், சிவந்த கண்களால் அவனை உறுத்து விழித்தாள்.
அதிலேயே அவளது வலி புரிந்திட, அவளை இறுக்கி அணைத்துக் கொண்ட ஆஹில்யன், “நீ வேணும் ரித்தி. அதுக்கு என்ன செய்யணும்னு சொல்லு. நான் செய்யறேன். கொலை, கொள்ளையைத் தவிர மத்த எல்லாமே செய்யறேன். சொல்லு, இப்பச் சட்டுன்னு பணக்காரன் ஆக நான் என்ன செய்யணும்?” என்று சரணடைந்தான்.
எதுவாகினும் அவளை விடக்கூடாது என்ற உறுதி அவனிடம்.
பின் அவனே, “நான் வேணும்னா உன் அப்பாகிட்டயே வேலைக்குச் சேர்ந்துடவா? எப்படியும் எனக்குச் சம்பளம் நிறையக் கொடுப்பாருல?”
சில நொடிகள் சிந்தித்த ரித்திகா, “இல்ல வேணாம். நீ யாஷ்கிட்ட வேலைக்குச் சேரு.” என்றாள்.
“என்னது? விளையாடுறியா? இத்தாலில வேலை கிடைக்குறது ஈஸியா என்ன? அதுவும் இல்லாம, யாஷ் நம்ம லவ்வைக் கண்டுபிடிச்சு உன் அப்பாட்டச் சொல்லிட்டா, இல்ல அவனே என்னைப் போட்டுத் தள்ளிட்டா…” என மிரண்டான்.
“ப்ச், இல்லடா. யாஷ் என் பெஸ்ட் ப்ரெண்ட் தான். நம்மளை மாதிரி ஜோவியல் தான் அவனும். ஆனா அதை அவன் வெளில காட்டிக்க மாட்டான். ஒர்க்கஹாலிக். என்கிட்ட மட்டும் தான் அவன் நாலு வார்த்தை எக்ஸ்ட்ரா பேசுறதே.”
“அதுசரி தான். ஆனா இது எப்படி ஒர்க் அவுட் ஆகும்? எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் எதுவும் இல்லையே.”
“அதுலாம் பிரச்சினை இல்ல. யாஷ்க்கு நீ ஹார்ட் ஒர்க் பண்றதும், அவனுக்கு உண்மையா இருக்குறதும் தான் முக்கியம். ரொம்பச் சின்ன வயசுலயே கம்பெனிக்கு சி. ஈ. ஓவா பொறுப்பெடுத்துக்கிட்டான். உன்னை விட ரெண்டு வயசு கூட இருப்பான், அவ்ளோ தான். ஆனா அவன்கிட்ட ரெண்டு மாசத்துக்கு மேல எந்த பி.ஏவும் ஒர்க் பண்ணது இல்ல. அந்த அளவு பிழிஞ்சு எடுப்பான். இப்போ அவன் இந்தியன்ஸ் தான் தேடிட்டு இருக்கான். இதான் கரெக்ட் சான்ஸ். அவன் இன்டர்வியூ எப்படி இருக்கும்னு நான் புல்லா உன்னை கைட் பண்றேன். அவனுக்கு மட்டும் உன்னைப் பிடிச்சுப் போச்சுன்னா, அப்புறம் நீ அங்கேயே செட்டில் ஆகிடலாம்…”
“ம்ம்ம்ம்… ரைட்டு தான்! பட் அதுக்கு உன் அப்பாட்ட வேலை பார்த்தா அவர் மனசுல இடம் பிடிக்கலாம்ல.”
“டேஷைப் பிடிப்ப!” ரித்திகா கெட்ட வார்த்தையில் திட்டியதும், “என்னடி?” என்றான் பரிதாபமாய்.
“பின்ன என்னடா… என் அப்பாட்ட வேலைக்குச் சேர்ந்தா, என்ன மிஞ்சிப் போனா அம்பதாயிரம் தருவாரா? யாஷோட வீட்டு மெய்டுக்குக் கூட மாசம் அஞ்சு லட்சம் சம்பளம்டா… வித் புட் அண்ட் அக்கமடேஷன்.”
“என்னது?” நெஞ்சைப் பிடித்த ஆஹில்யன், “அப்போ நான் குக்கிங் கத்துக்கிட்டு, யாஷ் வீட்டுக்கு வேலைக்காரனா சேர்ந்துடவா?” என்றவனை மூச்சிரைக்கப் பார்த்தாள்.
“ஓகே ஓகே, கூல்டவுன்!” அவளைச் சமாதானம் செய்ததும்,
“பைத்தியமே… அவன்கிட்ட பி.ஏவா ஒர்க் பண்ணவங்களுக்கு மாசம் 12 லட்சம் சம்பளம் குடுத்தான். ஒரு வருஷம் நீ அவன்கிட்ட வேலை பார்த்தா, சென்னைல அபார்ட்மெண்ட் வாங்கிடலாம். அவன்கிட்டச் சம்பளம் வாங்கிச் சேர்த்து வச்சு நீ பணக்காரன் ஆகிடு. என் அப்பாவும் ஓகே சொல்ல வழி இருக்கும்ல. லாஸ்ட் ஆப்ஷனா, யாஷை எனக்கு ஹெல்ப்புக்குக் கூப்பிட்டுக்குறேன். அவன் என் சைட் தான் எப்பவும்…” என்றாள் தீர்மானமாய்.
சொன்னது போன்றே, யாஷ் பிரஜிதனிடம் வேலைக்குச் சேர்ந்து விட்டான். அவனுக்கு வலது கையாகவே மாறி விட்டான்.
“செம்ம பிளான்!” கண்மணி சிலாகிக்க, ஆஹில்யன் பொங்கினான்.
“அட, நீ வேற ஏன்மா… இவள் ஈஸியா சொல்லிட்டா. சம்பளத்துக்கு ஆசைப்பட்டு, பாஸ்கிட்ட வேலைக்குச் சேர்ந்ததுக்குப் பதிலா, ஏதாவது கொள்ளைக் கூட்டத்துல சேர்ந்திருக்கலாம். ரெண்டும் ஒன்னு தான். பி.ஏ வேலைன்னா ஏதோ ஏசி ரூம்ல ஹாயா செய்யறதுன்னு நினைச்சேன். ஆனா, எவனையாவது கடத்துறதும், இவரை அட்டாக் பண்ண வந்தவன் கையை உடைக்கிறதும், காலை உடைக்கிறதும்னு கூலிப்படைல சேர்ந்த மாதிரியே எனக்கு ஒரு பீலிங் ஆகி, இப்ப அது பழகியே போச்சு.”
அவனது கூற்றில் மூன்று பெண்களுமே சிரித்து விட்டனர்.
நிதர்ஷனா, “எப்படினாலும் நீங்க அவர்கிட்ட வேலை பார்த்துக் காசு சேர்த்துருப்பீங்க தான. அப்போ அந்த ஆளு ஒத்துக்கலையா?” எனக் கேட்க,
“ம்ம்ஹும்… இங்கக் காசு மட்டும் தேவை இல்லமா, பதவியும் தேவை தான்! என்ன இருந்தாலும், அவர் கம்பெனில ஒர்க் பண்ற எம்ப்ளாயி தான் நான். சில நேரம் பாஸ்க்குத் தெரியாம, அவரை நோட்டம் விட்டு அவர்கிட்டச் சொல்லச் சொல்லுவாரு, பட் எனக்கு சொல்ல மனசு வராது. ரித்தியோட பெஸ்ட் பிரென்ட்னு அடிக்கடி சொல்லுவா, அதுவும் ஒரு ரீசன் தான். பாஸும், தேவையில்லாம வரதராஜன் சார் எனக்கு வேலை குடுத்தா அதைச் செய்ய வைக்க மாட்டாரு. நீ எனக்கு ஒர்க் பண்றன்னா, அது எதிக்ஸ். அவருக்கும் சேர்த்து ஒர்க் பண்ணுனா, நீ இங்க ஸ்லேவ் ஆகிடுவன்னு சொல்லுவாரு. சுயமரியாதையைக் குடுக்குறவருக்குத் துரோகம் பண்ணத் தோணாது. அதுனாலயே, வரதராஜன் சார்க்கும் எனக்கும் முட்டிக்கும். அதுல காதல் காத்தோட போச்சு…” என்றான்.
‘சுயமரியாதையை மீட்டுக் குடுக்குறதுல அவன் பி. எச்டி பண்ணிருக்கான் தான்…’ தனக்குள் சிரித்துக் கொண்ட நிதர்ஷனா, தன்னுள் ஆழப்பதிந்த அக்கனவின் நினைவுகளை மீண்டுமொரு முறை வருடிக் கொண்டாள்.
ஏனோ அது எல்லாம் மனத்தைத் தீண்டாமல், எட்டி நின்று வேடிக்கை காட்டி அவளை அதிகம் காயப்படுத்தியது. முணுக்கெனக் குளம் கட்டிய கண்களைச் சிமிட்டிடக் கண்மணி கேட்டாள்.
“சூப்பர் லவ்வுங்க. அப்புறம் உங்க லவ் மேட்டர் தெரிஞ்சு கல்யாணத்தை நிறுத்துனாரோ அண்ணா…” எனக் கேட்டாள்.
“அந்தக் கேடிக்கு, இவனை நான் பி.ஏ வேலைக்கு ரெகமண்ட் பண்ணும்போதே தெரியுமாம். லவ் பண்றேன்னு.” என்ற ரித்திகாவின் கூற்றில் புரியாது, “அப்புறம் எப்படி ரித்தி மேரேஜ்?”
“ப்ச்! அதை ஏன் கேக்குற கண்மணி. என் அப்பா நான் யாஷைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒத்தக் கால்ல நின்னுட்டாரு. என்னைக் கல்யாணம் பண்ணுனா தான் அவனுக்கும் சேர்மன் போஸ்ட் கிடைக்கும். அந்தப் போஸ்ட் கிடைச்சா தான், அவன் கண்டுபிடிச்சதுக்கு முழு மதிப்பும் அவனுக்குக் கிடைக்கும். இல்லன்னா சும்மா பேருக்கு அவன் பேரை ஓரமாய் போட்டுட்டு, என் அப்பா ஆட்டையப் போட்டுடுவாரு.
அதுக்காக அவன் உழைச்சதைப் பக்கத்துல இருந்து பார்த்துருக்கேனே. அதுவும் இல்லாம, அவனைத் தவிர இன்னொருத்தனை லவ் பண்றேன்னு என் அப்பா முன்னாடி நிறுத்தினா, கண்டிப்பா உயிரோட விட மாட்டாரு. எனக்கு வேற வழி தெரியல. அவனை மேரேஜ் பண்ணிட்டு டிவோர்ஸ் பண்ணலாம்னு நினைச்சேன். அவனும் அதே பிளான்ல தான் இருந்துருக்கான்… கடைசியா காதல் அவன் கண்ணை மறைச்சுடுச்சு…” என்றதில் ஆஹில்யனின் முகம் சுருங்கிப் போனது.
என்ன ஆனாலும், அவள் யாஷைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டது மனத்தைக் காயம் செய்தது உண்மையே!
அதனைப் புரிந்து கொண்ட நிதர்ஷனா, “உடம்புல உயிர் முக்கியம் தான். உங்க ஆளு உங்க மூச்சை நிறுத்திட்டு, உயிரோட இருன்னு சொல்ல வந்துருக்காங்க மாம்ஸ். சில விஷயத்துல பிராக்டிகலா யோசிக்க வேண்டியது தான். அதுக்காகக் கல்யாண விஷயத்துல ஓவர் பிராக்டிகல் தேவை இல்ல…” என்றதும் ரித்திகாவிற்குக் கோபம் வந்தது.
“இதோ பாரு ஆஹி, அதை வைஃப் மாதிரி நடிக்க வந்தவங்க சொல்லத் தேவை இல்ல.”
அதில் நிதர்ஷனா வெடுக்கென எழுந்து விட, “என்னை கார்னர் பண்ணுனதுனால, போகப் போக்கிடம் இல்லாததுனால நான் ஒத்துக்கிட்டேன். இங்க அப்படி இல்லையே. யாஷ்கிட்டச் சொல்லிருந்தா பெட்டர் பிளான் சொல்லிருப்பாரு. அந்த வீணாப் போனவனுக்குப் பயந்து, கல்யாணம் பண்ணிக்கிறது ஓகே. அப்புறம் டைவர்ஸ் பண்றது எல்லாம் என்ன நியாயம்? ஒருவேளை, யாஷ் உன்னை உண்மையா கல்யாணம் பண்ணிருந்தா… உன் சுயநலத்துக்காக ரெண்டு பேரையும் ஹர்ட் பண்றது சரி இல்ல.”
ரித்திகாவிற்குச் சட்டெனக் கண்ணில் நீர் தேங்கி விட்டது. ஆகினும், கோபம் விட்டபாடில்லை.
“நான் செய்யறது எது சரி, தப்புன்னு நீ சொல்ல வேண்டியது இல்ல. யூ டோன்ட் ஹேவ் எனி ரைட்ஸ் ஆன் மீ!”
“தோ பாரு. உன்னாண்ட பேசுறது உனக்காக இல்ல. என் யாஷ்க்காகவும், என் மாம்ஸ்க்காகவும் தான்…”
“முதல்ல அவன் எனக்கு ப்ரெண்ட், இவன் எனக்கு லவ்வர், அப்பறம் தான் உனக்கு… பிளா பிளா எல்லாம்!”
இருவரும் மாறி மாறிச் சத்தம் போட்டதில், “ஸ்டாப் இட்!” என்று வாயில்புறம் இருந்து யாஷ் சத்தமிட்டான்.
“வாட் நான்சன்ஸ்? ஹாஸ்பிடல்ல இப்படித்தான் இன்டீசண்டா கத்திட்டு இருப்பீங்களா?” அடிக்குரலில் இருவரையும் கடிய, இரு பெண்களும் அவனைக் கண்டதும் விழிகளைத் தாழ்த்தினர்.
“அவள்தான் ஓவராப் பேசுறா யாஷ்” ரித்திகா கூறியதும்,
“அவள் மட்டும்… நடிக்க வந்தவள்லாம் பேசத் தேவை இல்லைன்னு சொல்றா…” என்ற நிதர்ஷனாவிற்கு இன்னும் இந்த உறவுச் சிக்கல் தீரவில்லை தானே. அதில் குரலும் கம்மியது.
“என்ன ரித்தி இது?” யாஷ் கண்டித்ததும், “யாஷ்… நான் என்ன நிலைமைல உன்னை மேரேஜ் பண்ணிக்கப் போனேன்னு உனக்கே தெரியும். யாரையும் கழற்றி விட்டுட்டுப் போகணும்னு என் எண்ணம் இல்ல. உன்னை ஏமாத்தணும்ன்ற எண்ணமும் எனக்கு இல்ல.” அவளுக்கும் அழுகை வரும் போல இருந்தது.
“ரெண்டு பேருக்கும் பைத்தியமா?” என்றபடி உள்ளே நுழைந்தவன், ஆஹில்யனை முறைத்தான்.
அவனோ பதறி, “ஐயோ பாஸ்… இந்தக் கண்மணியும், இவளும் தான் என்னை உக்கார வச்சு லவ் கதை கேட்டாங்க. கதையைச் சொல்லி முடிச்சதும் சண்டை போடுறாங்க…” என்றதும் கண்மணி, “ஐயோ அண்ணா… ஏதோ லவ் கதை கேட்டு டைம் பாஸ் பண்ணலாம்னு பார்த்தேன். சண்டை வரும்னு தெரிஞ்சுருந்தா கேட்டிருக்கவே மாட்டேன்.” என அவளும் மிரண்டாள்.
“இப்ப உங்க காவியத்தைக் கேக்குறது ரொம்ப முக்கியமா? நான் சொன்னது என்ன ஆச்சு?” ஆஹில்யனிடம் உறுமினான் யாஷ்.
“ப்ராசஸ் எல்லாம் ஓவர் பாஸ். நாளைக்கு நைட்டு இத்தாலிக்கு பிளைட்!” என்றான் வேகமாக.
நிதர்ஷனாவோ, “யோவ் மாம்ஸ். உனக்காக மூச்சுப் பிடிக்கச் சண்டை போட்டா, நீ என்ன என்னை மட்டும் கோர்த்து விடுற?” என முறைக்க,
“ம்ம்க்கும்… வேற என்னை என்ன பண்ணச் சொல்ற நிதா… எங்களுக்குள்ள பர்ஸ்ட் லவ் சொன்னதும் அவ தான். என்னை நாடு கடத்துனதும் அவ தான். நல்ல நிலைமைல இருக்க வச்சதும் அவ தான். என்னை விட்டுட்டு இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணப் போறேன்னு சொன்னதும் அவ தான். எப்படியும் என்கிட்டத் திரும்பி வருவான்னு நம்பிக்கை மட்டும் இருந்துச்சு. வேற எதுவும் நான் கேட்டுக்கல அவகிட்ட. அவளும் டைவர்ஸ் வாங்கிட்டு வருவேன்னு என்கிட்டச் சொல்லல. அவள் நினைச்சுருந்தா என்கிட்ட ஒன்னும் இல்லாதப்பவே விட்டுட்டுப் போயிருக்கலாம். எல்லாம் இருந்தும் விட்டுட்டுப் போறான்னா, என் உயிர் மேல இருக்குற பயம் தான்னு புரிஞ்சுது. ஆனாலும் அந்த வலி… அது நிறையவே இருந்துச்சு. இப்பவும் இருக்கு!” என்று உணர்ச்சிவசப்பட, ரித்திகாவிற்கும் உள்ளூர வலி கனன்றது.
நிதர்ஷனாவிற்கும் அவன் நிலை புரிந்தது.
யாஷ் பிரஜிதனோ, இங்கு இப்படி ஒரு உரையாடலே நிகழாதது போல, “உருகி முடிச்சுட்டா, அடுத்தடுத்த வேலையைப் போய் பார்க்குறியா?” என்றிட,
“கல்நெஞ்சக்காரன்! ஒருத்தன் ஒப்பாரி வச்சும் கரையிறானா பாரு.” என நிதர்ஷனா முணுமுணுத்துவிட்டு, “அவள் லவ் பண்றான்னு தெரிஞ்சும், நீ கல்யாணம் பண்ணப் போயிருக்க, அவ என்னனா டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு அலட்சியமா கல்யாணம் பண்ணிக்கப் போயிருக்கா. என்ன ஷோ காட்டுறீங்களா?” என்று எகிறிட, அவளது கையைப் பிடித்துப் பின்னால் வளைத்தவன், “ஏய் ஆலம்பனா… எதுக்குடி பொங்கிட்டு இருக்க, முடிஞ்சு போன விஷயத்துக்கு.” என்று அதட்டினான்.
அவனிடம் இருந்து விடுபட முயன்றபடி, “தெரியல… நீ தப்புப் பண்றன்னா அது எனக்குக் கஷ்டமா இருக்கு. கோபமா வருது. அவள் மேல லவ் இல்லாமல் கல்யாணம் பண்றன்னு தெரியும். ஆனா அவள் இன்னொருத்தனை லவ் பண்றான்னு தெரிஞ்சும், எப்படி நீ உன் சுயநலத்துக்காகக் கல்யாணம் பண்ணிக்கப் போன யாஷ்?” குற்றம் சாட்டும் பார்வையுடன் கேட்டவளின் விழி வீச்சில் மீண்டுமொரு முறை தன்னை இழந்தவனிடம் இருந்து கையை உதறினாள்.
அந்நேரம் நிவேதன் கண் விழித்திட, “இதோ, உன் சிஷ்யன் கண்ணு முழிச்சுட்டான். ஆளுக்கு ஒரு தாலியோட அவன்கூடச் சேர்ந்து தண்டியாத்திரை போங்க…” என்று எரிச்சலுடன் கூறி விட்டு விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தவளைத் தடுத்தது நிவேதனின் குரல்.
“நிதா…”
தமையன் தனது பெயரைச் சொன்னதுமே, தவிப்புடன் அவனருகில் அமர்ந்து விட்டவள், “நிவே… என்னை… என்னைத் தெரியுதாடா?” என விழி கலங்கிக் கேவலுடன் கேட்க, “ஏன், எனக்கு கண்ணு ஆபரேசனா பண்ணிருக்கு? நல்லாத் தெரியிறியே.” அவளது கண்ணீர் தாளாமல் இயல்பாகப் பேச முயன்றவனை வலிக்காதவாறு கன்னத்தில் அடித்தாள்.
“உன்னைக் காணோம்னு எவ்ளோ தவிச்சுட்டேன் தெரியுமா, எருமை மாடு…”
“நீ என்ன செய்வியோன்னு தான் எனக்குப் பயமாவே இருந்துச்சு. நீ நல்லாருக்க தான?” என்று அவளது கையைப் பற்றிக்கொள்ள, “ம்ம்” எனத் தலையை உருட்டியவள், “யாருடா உன்னைக் கடத்துனா? வரதராஜனா?” என்றாள்.
“வரதராஜனை உனக்குத் தெரியுமா?” அவனிடம் சிறு வியப்பு.
“ம்ம்… அந்த ஆளு உன் அப்பான்னு முன்னாடியே தெரியும் தான, ஏன் சொல்லல என்கிட்ட?”
“தொழில்ல நஷ்டமான நேரத்தில அவர் வந்து நீ என் பையன், என் கூட வான்னு சொன்னாரு நிதா. எனக்கும் நமக்குன்னு ஒரு குடும்பம் இருக்கப் போகுதுன்னு ரொம்பச் சந்தோசமாகிடுச்சு…” என்றதும் கண்ணீரைத் துடைத்தபடி, “அப்புறம் என்ன, அவரோட போயிருக்க வேண்டியது தான?” என்றாள் மெல்லிய குரலில்.
அவனை நிதானமாய் ஏறிட்டவன், “அவர் என்னை மட்டும் தான் பையன்னு சொன்னாரு. நீ அவர் பொண்ணு இல்லைன்னு சொன்னாரு. அது எப்படி நிதா… நீ என் தங்கச்சியா இல்லாமல் போனா, அவரு எப்படி என் அப்பாவாக முடியும்? அதுனால நீங்க வேற யாரோன்னு நினைச்சு என்கிட்டப் பேசுறீங்கன்னு திட்டி அனுப்பி விட்டேன்.” என வெகுளியாய் கூறியவனை அதிர்ந்து பார்த்தாள்.
மறுநொடியே தமையனை வாரி அணைத்துத் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.
இருவருக்குள்ளும் இருக்கும் அன்பின் ஆழமும், பிணைப்பும் அனைவருக்கும் புரிந்தது தான்… ஆகினும், ரித்திகாவிற்குச் சட்டென எதையோ இழந்த நிலை. தன்னிடம் ஆர்வமாய் அன்பு காட்டும் ஓர் உறவு இனி இல்லையென்ற நிலை. அதில் அங்கிருக்கத் தேவையின்றி வெளியேறி விட்டாள் சின்னதொரு வலியுடன்.
கண்மணிக்கும், அவளுடனே சென்று விட ஆசை தான். இனி நிவேதனுக்கு ஹாலுசினேஷன் காதலியாகத் தான் இருக்க இயலாது என்ற எண்ணமே வாழ்வின் ஒட்டு மொத்தச் சுவாரஸ்யத்தையும் அஸ்தமனமாக்கி அவளை என்னவோ செய்தது.
யாஷ் பிரஜிதன், அழுத்த நடையுடன் நிதர்ஷனாவின் முன் நின்று, “எனஃப் நிது!” என்றிட, அவளோ நிவேதனிடம் இருந்து விலகினாலும் அழுகையை நிறுத்தாமல் போனதில், “ஸ்டாப் க்ரையிங் ஐ செட்!” என்று குரலை உயர்த்திக் கடுமையாய் உரைத்ததில், பட்டென அழுகையை நிறுத்தி விட்டாள்.
இருவரையும் திருதிருவெனப் பார்த்த நிவேதன், “இது யாரு நிதா?” எனக் கேட்க, “இது… இது…” எனத் திணறியவளுக்குத் திடுதிப்பென என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்து மறுகியதில், யாஷ் பிரஜிதனின் தாடை இறுகியது.
தனது விழி வழியே அவள் மீது நெருப்பைப் பரவ வைக்க, “என் அரக்கன்… கலப்படக் கண்ணுக்காரன்…” என்று அறிமுகம் செய்ததில் அவன் இரு கையையும் இடுப்பில் வைத்துக் கொண்டான்.
நிவேதன் குழம்பி, “என்ன ஒளறுற?” எனக் கேட்டதும், யாஷ் பிரஜிதன் அவள் மீதிருந்த சலனமற்ற பார்வையைத் திருப்பாது, “ஐ ஆம் யாஷ் பிரஜிதன், யுவர் சிஸ்டர் நிதர்ஷனா யாஷ் பிரஜிதனோட ஹஸ்பண்ட்!” என்று பற்களை நறநறவெனக் கடித்து உரிமை ததும்பக் கூற, நிவேதன் விழி தெறிக்க அதிர்ந்தான்.
அன்பு இனிக்கும்
மேகா
சூப்பர் அக்கா ❤️😍😍
Wowwwww…. semaya iruk