அத்தியாயம் 27
அஷ்வினியின் நிச்சயதார்த்தம் இன்று. காலை எழுந்தது முதல் அத்தனை முறை அழைத்தும் கணவன் எடுக்காததில் பயந்து தான் போனாள் தேவதர்ஷினி.
முந்தைய நாளே வர சொல்லியும் வேலை இருப்பதாய் சொல்லி வர முடியாது என்றுவிட்டவன் இரவு தான் பெங்களூரில் இருந்து கிளம்பவே செய்தான்.
இடையில் மனைவியுடன் சண்டை வேறு என அவன் நேற்றைய தினமே நல்ல மனநிலையில் இல்லை என்பதில் அத்தனை வருத்தம் தேவாவிற்கு.
‘ஒண்ணு சொன்னா புரிஞ்சிக்கிறாங்களா? இதென்ன பிடிவாதமோ!” என கோபம் இருந்த போதும் அவனைப் பார்த்துவிட்டால் போதும் என்ற தவிப்பும் இருந்தது.
ஒரு வாரம் கழித்து வருபவன் இப்படியா தன்னிடம் கோபம் கொண்டு வர வேண்டும் எனும் ஆற்றாமையும் தான்.
இதில் சுந்தரி வேறு அன்று அவன் சொல்லியதை போல அஷ்வினி திருமணம் முடிந்த பின் தான் தேவாவை ஊருக்கு அனுப்ப வேண்டும் என அவளிடமும் லீலாவிடமும் சொல்லி இருக்க, அதற்கும் இன்னும் பயம் தான்.
இந்த விஷயம் தெரியாமலே அவன் முகத்தை தூக்கி வைத்திருக்கிறான் என்பதோடு அவளுக்குமே அவனுடன் இப்பொழுது சென்றுவிட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.
இதில் தன் காரணத்தை கூறினால் நிச்சயம் இங்கே தான் தங்க வைத்துவிடுவார்கள் என புரிந்தவள் யாரிடமும் வாயை திறக்கவில்லை. கணவனிடமும் தான்.
மணி எட்டாகி இருக்க ஆறு மணிக்கெல்லாம் வர வேண்டியவன் இன்னும் அழைக்கவும் இல்லை வரவும் இல்லையே எனும் பதட்டம் சேர கண்ணகியிடம் சொல்லி விடுவது என்ற எண்ணத்தில் தன் அறைக் கதவை திறக்கவும் கார்த்தி அறை கதவில் கை வைக்கவும் சரியாய் இருந்தது.
அவனைப் பார்த்த பின் தான் முழு நிம்மதி தேவதர்ஷினிக்கு.
“எத்தனை போன் பண்ணினேன் த்தான்? ஏன் இப்படி பண்றீங்க? பயந்துட்டேன் தெரியுமா?” என சொல்ல,
“வேணும்! அதுக்காக தான் அட்டன் பண்ணல!” என சொல்லி அவளை தாண்டிக் கொண்டு அறைக்குள் சென்றவனை கோபமாய் முறைத்தாள்.
“வர வர ரொம்ப பண்றீங்க த்தான். நான் எவ்ளோ பயந்து போய் இருக்கேன்தெரியுமா? உங்களுக்கு விளையாட்டா போச்சா?” என்றவளும் அவனோடு உள்ளே வர,
“பின்ன! நான் உண்டு என் வேலை உண்டுன்னு ஒரு வாரத்தை சத்தமில்லாம ஓட்டிட்டு வரலாம்னு அமைதியா இருந்தா நேத்து போன் பண்ணி அவ்ளோ பேசுற” என்றவனை தூரம் நின்றே அவள் முறைக்க,
“வெளில போயிடாத! டூ மினிட்ஸ்!” என்றவன் குளியலறை சென்று வந்தான்.
வந்தவன் “ஹ்ம்!” என கைவிரித்து அவளை அழைக்க,
அந்த கைகளுக்குள் அடங்கிட தான் அவ்வளவு ஆசை கொண்டவளும் வேண்டி விரும்பி சென்று அடங்கி நின்று கொள்ள, அத்தனை அத்தனை ஆசுவாசம் கணவனுக்கு.
ஒரு வாரம் என்னவோ ஒரு வருடம் கடந்ததை போன்று அத்தனை மெதுவாய் சென்றதாய் தான் தோன்றியது அவனுக்கு.
தினமும் அலைபேசியில் பேசி வீடியோ காலில் பேசி என எவ்வளவு தான் பேசினாலும் அவளின் அண்மையை அவ்வளவு தேடினான்.
தன் வீடே தனக்கு தூரமான நாட்களை கடக்க பெரும்பாடு கொண்டான்.
இப்படி இருக்க நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து வீடு வந்து ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் தேவாவின் அழைப்பை ஏற்ற கார்த்திகைசெல்வன்,
“கிளம்பிட்டே இருக்கேன் பொண்டாட்டி!” என்றவன் குரல் அத்தனை உற்சாகமாய் வந்தது.
“நேத்தே கிளம்பி வந்திருக்கலாம் த்தான். ஏன் தான் இவ்வளவு பிடிவாதமோ!” என்றவள்,
“உங்ககிட்ட பேசணும். நிறைய சொல்லணும். சீக்கிரம் வாங்க!” என்றவள்,
“ஆனா ஊருக்கு போகும் போது கண்டிப்பா என்னை கூட்டிட்டு போகணும் சரியா?” என கேட்க,
“அதை நான் தான் உன்கிட்ட கேட்கணும். நான் சொன்னது தான். யாராவது சொல்லி நீ வரலைனு சொல்லு அப்ப இருக்கு!” என்றான் அவனுமே.
“ம்ம்ஹும்! சொல்ல மாட்டேன். ஆனா நீங்க விட்டுட்டு போக கூடாது!” என்றவள் குரலில் முழுதும் பயமே.
“லூசா தேவா நீ? என்ன பேசுற?”
“ம்ம்ஹும்! நான் சொன்ன அப்புறம் விட்டுட்டு போக கூடாது!” என சொன்னதையே அவள் சொல்ல,
“என்னனு சொல்லு டி!” என்றான்.
“நீங்க வாங்க. சொல்றேன்!” என்றவள் பிடிவாதத்தில்,
“அங்க எதுவும் பிரச்சனையா தேவா?” என்றான் புருவங்கள் சுருங்க யோசித்தபடி.
இத்தனை பிடிவாதம் பிடிப்பவள் இல்லை. அத்தோடு இத்தனை முறை விட்டு சென்று விடுவேனோ என பயந்து கேட்பவளும் இல்லை என அவனும் மாற்றி மாற்றி கேட்க, வாயை திறக்கவே இல்லை அவள்.
“எதுவோ இருக்கு. எதுவும் இல்லாம இப்படி பேச மாட்ட நீ. என்னனு சொல்ல போறியா இல்ல அம்மாகிட்ட கேட்கவா?” என்றும் கேட்க,
“அத்தைக்கு எதுவும் தெரியாது. நீங்க வாங்களேன் நான் சொல்றேன்!” என்றவள் மீண்டும் அழைத்து சென்றுவிடு என சொல்ல கடுப்பாகியவன்,
“என்னை பைத்தியமாக்குற தேவா! இனி ஊருக்கு தனியா போ அப்ப இருக்கு உனக்கு!” என்றும் சொல்லியவன் தான் இப்பொழுது வந்து வந்த வேகத்தில் அவளை கைக்குள்ளும் வைத்துக் கொண்டான்.
“தேவா! என்ன இது?” என்றவன் சத்தத்தில் அவனில் இருந்து முகத்தை மட்டும் திருப்பிப் பார்க்க,
“ஒரு வாரத்துல கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி இருக்கியே!” என்றவன் சொல்லில் அவன் நெஞ்சில் தட்டியவள் மீண்டும் அதிலேயே சாய,
“எப்போ கிளம்புறோம்?” என்றாள் முதல் கேள்வியாய்.
“நேத்துல இருந்து இதையே வேற வேற மாதிரி கேட்டுட்டு இருக்க நீ. என்ன விஷயம்? சொல்லு!” என்று கேட்க, அத்தனை யோசனையோடு அதீத ஆசையும் அவனிடம் கூறிட.
ஆனாலும் முடியவில்லை. எப்படி சொல்ல? அவனுமே மற்றவர்களை போல தனக்காகவே எனினும் இங்கேயே இரு என சொல்லிவிட்டாள் என்றவளுக்கு அவனோடு சென்றிட தான் முழு ஆசையும்.
“தேவா! உன்கிட்ட தான்!” என கேட்டும்,
“அப்புறம் பேசிக்கலாம் த்தான். நேரமாச்சு. நான் நீங்க கூப்பிடலையேனு பயந்து அத்தைகிட்ட சொல்ல தான் வெளில வந்தேன். நீங்க வந்திட்டீங்க. வாங்க போவோம்!” என்றவளை,
“என்னவோ மறைக்குற நீ! எதுக்கு இவ்வளவு பிடிவாதம் இப்போ? யார் என்ன சொன்னாங்க சொல்லு!” என எப்படி எப்படியோ கேட்டும் பதில் சொல்லாதவள் பேச்சோடு அதனை மறக்கவும் வைத்துவிட்டாள்.
நிச்சயத்துக்கான வேலைகள் எல்லாம் அத்தனை அழகாய் நடந்து கொண்டிருக்க, விழாக் கோலம் பூண்டது மொத்த குடும்பமும்.
எங்கும் ஒதுங்கி நிற்காமல் மற்றவர்களோடு இணைந்து மனைவியையும் அவ்வபோது கவனித்து கண்காணித்து என கார்த்திகைசெல்வனும் ஓரிடத்தில் நிற்காமல் வேலையில் ஈடுபட்டிருந்தான்.
மாலை மாப்பிள்ளை வீட்டினர் வரும் முன் அனைத்து வேலைகளையும் மற்றவர்களோடு கலந்து முடித்துக் கொண்டு தான் கிளம்பி வருவதாய் சொல்லி தன் வீட்டிற்கு வந்துவிட்டாள் தேவதர்ஷினி.
ஏற்கனவே முந்தைய நாளே எடுத்து வைத்திருந்த பட்டுபுடவையும் நகைகளும் என மாற்றி வர எண்ணி வீட்டிற்கு வந்தவளை அறையின் சோஃபாவில் வரவேற்றது என்னவோ புது புடவையும் புது நகையும் தான்.
பார்த்ததுமே புரிந்து கொண்டவளுக்கு உள்ளுக்குள் அத்தனை பூரிப்பு தான் என்றாலும் “இப்படி செய்கிறானே!” என்றும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்தவள் கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தயாராக ஆரம்பிக்க, அதன் பாதியில் அவளோடு இணைந்து கொண்டான் கணவன்.
அறைக் கதவை “தேவா!” என்று அழைத்து தட்டியவன் சத்தத்தில், “வாங்க த்தான்!” என தேவதர்ஷினி அழைக்க, உள்ளே வந்தவன் முகத்தில் பாராட்டுதலும் மெச்சுதலுமாய் ஒரு புன்னகை.
“எப்ப கடைக்கு போய் வாங்குனீங்க? மேட்சிங் ப்ளௌஸ் கூட!” என கேட்டவள் அவன் முன் நிற்க,
“பிடிச்சிருக்கா?” என்றான்.
“பிடிச்சிருக்கு. ஆனாலும் கிண்டல் பண்ண போறாங்க. நானும் கயலும் ஒரே மாதிரி சேரினு நேத்தே பிளான் பண்ணிருந்தோம். இப்ப இது. அதுவும் புதுசா.. நேத்திக்கு கூட சொல்லலையேனு எல்லாரும் கேட்க போறாங்க!” என்றவள் அந்த நீள பெண்டண்ட் கொண்ட தங்க சங்கிலியை கையில் எடுக்க,
“வெயிட்!” என்றவன் தானே வாங்கி அவள் கழுத்தில் அணிவித்தான்.
தங்களுடைய வரவேற்பு அன்றே அவன் முடிவு செய்தது தான். தன் மனைவிக்கு என வாங்கி தர வேண்டிய நேரத்தில் எதையும் செய்யாமல் விட்டது ஒரு ஓரமாய் உறுத்திக் கொண்டிருக்க, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இதை தான் அவன் பின்பற்றுகிறான்.
பெரிய விழாக்கள் என்றில்லாமல் தோன்றும் பொழுதெல்லாம் அவன் இதை செய்ய, அதில் பெரிதாய் நெகிழ்ந்தாள் தேவா.
இப்பொழுதும் கழுத்தில் அணிவித்து தன்முன் அவளை திருப்பி நிற்க வைத்து அவன் மனைவியை ரசித்துப் பார்க்கும் நேரம் தான் சரியான நேரமாய் தோன்றியது தேவதர்ஷினிக்கு.
“த்தான்!” என்றவள் கண்கள் கலங்கி வர, என்னவோ என அவன் பார்க்கும் பொழுதே சற்று தள்ளி சென்று அதை உள்ளிருந்து எடுத்து வந்தவள் அவன் கைகளில் தர, பேச்சச்சு மூச்சச்சு நின்றுவிட்டான் கார்த்திகைசெல்வன்.
“தேவா!” என கைகளில் தான் வாங்கியதை கண்டவன் கைகள் நடுக்கம் காட்ட, சில நொடிகள் அசையாமல் நின்றுவிட்டான்.
“கார்த்தி அப்பா!” என்ற மனைவி சொல்லில் அவளிடம் கண்களை கொண்டு வந்தவன் பார்வை அவளிடம் நிலையாய் நிற்க,
“த்தான்!” என அவளே சென்று அவனை அணைத்து அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் முகம் பார்த்து என அவளும் அமைதியாய் நிற்க,
“தேவா!” என்றதற்கு மேல் பேசவே முடியாத அளவில் உணர்ச்சிவசப்பட்டிருந்தான் கார்த்திகைசெல்வன்.
“என்ன நீ? எப்ப தெரியும்? ஏன் சொல்லல? அதுவும் இப்போ?” என்றவனுக்கு முழுதாய் பேசவும் முடியவில்லை.
“நேத்து தான்! இப்ப சொல்லுங்க. விட்டுட்டு போக மாட்டிங்க தானே?” என்றவள் தவிப்பின் காரணம் புரியாமல் அவன் பார்க்க,
“நம்ம கார் தானே? பார்த்து பத்திரமா போகலாம். சேஃபா நின்னு நின்னு ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து போகலாம். விட்டுட்டு போக மாட்டிங்க தானே?” என்று கேட்டபின் தான் அதன் அர்த்தமும் புரிந்தது அவனுக்கு.
“ஹே! என்ன டி நீ?” என்றவனுக்கு இன்னும் பேச முடியவில்லை. எத்தனை யோசித்திருக்கிறாள் என்று புரிய, பார்வையையும் அவளிடம் இருந்து விலக்க முடியவில்லை.
“யாருக்கும் இன்னும் தெரியாது!” என்றவளை அவன் கேள்வியாய் பார்க்க,
“உங்ககிட்ட தான் சொல்லணும்னு வெயிட் பண்ணினேன்!” என்று சொல்லும் முன் முகமெல்லாம் சிவந்து மின்னியது.
“ஆனா ஊருக்கு போய் தான் சொல்லலாம் நினைச்சேன். ஆனாலும் முடியல” என்றும் சொல்ல, அவளை மொத்தமாய் தன் அணைப்பில் கொண்டு வந்தான் கார்த்தி.
விடாமல் அழைத்த அலைபேசி அழைப்பில் தான் இருவருமே கலைந்து நகர்ந்து நிற்க, நிரஞ்சன் தான் அழைத்திருந்தான்.
“ண்ணா! இன்னும் வரலையேன்னு அம்மா கேட்குறாங்க!” என்ற நிரஞ்சனுக்கு பதில் சொல்லி வைத்துவிட்டு மனைவியைப் பார்த்தான்.
“மாப்பிள்ளை வீட்டில வந்துடுவாங்க. அதான் தேடுறாங்க போல!” என்றவள் கணவன் கைகளை பற்றிக் கொண்டு அங்கே வர, சரியாய் மாப்பிள்ளை வீட்டினரும் வந்திருந்தனர்.
சிறப்பாய் ஆரம்பித்த அஷ்வினியின் நிச்சயதார்த்தம் மகிழ்வாய் மன நிறைவாய் நடந்தேற, கார்த்திகைசெல்வன் உள்ளம் நிறைந்த மகிழ்வாய் கண்களோடு உதடுகளும் புன்னகைக்க என விழா முடியும் வரை வாய் திறக்காமல் தான் நின்றான்.
“தேவாக்கா!” என அழைத்த அஷ்வினி தன்னையும் தனக்கு நிச்சயித்தவனையும் என சைகையால் காட்டி “எப்படி?” என கண்ணசைக்க,
கார்த்தியின் அருகே நின்ற தேவா, “அழகு!” என்றவள் வாயசைத்து சைகையிலும் காட்ட, கார்த்தியினையும் பார்த்துவிட்டு புன்னகைத்தாள் அஷ்வினி.
“சரி வா!” என கார்த்தி தேவாவின் கைபிடித்து அழைக்க,
“எங்க த்தான்?” என்றாள் புரியாமல்.
“அதான் நிச்சயம் முடிஞ்சதே! அம்மாகிட்ட அத்தைகிட்ட சொல்லலாம்!” என மீண்டும் கைபிடித்து இழுக்க,
“இல்ல இல்ல! முதல்ல உங்ககிட்ட நான் பேசணும்!” என்றவள்,
“இப்படி உக்காருங்க!” என்றதும் கார்த்தி இடுப்பில் கைவைத்து அவளை முறைக்க,
“ப்ளீஸ் த்தான்!” என்ற கெஞ்சலில் அமர்ந்தான்.
“அத்தான்! தேவா பாவம். சின்ன பொண்ணு. அவளுக்கு விவரம் பத்தாது! அங்க என்னனு தனியா இருப்பா? அதனால இங்கேயே இருக்கட்டும். அப்படினு உங்க அம்மா, எங்கம்மா, பெரியம்மான்னு எல்லாரும் சொல்லுவாங்க. நீங்க என்ன சொல்லுவீங்க?” என தேவதர்ஷினி கேட்கவும் முறைத்துப் பார்த்தவன்,
“என்ன சொல்லணும்?” என்றான்.
“என் பொண்டாட்டியை நான் பத்திரமா பார்த்துப்பேன். முடிஞ்சா லீவ் போட்டு வீட்டுல இருந்து பார்த்துப்பேன். இல்லைனா வீட்டுல இருந்தே வேலை பாக்குற மாதிரி வாங்கி வேலையோட அவளையும் பார்த்துப்பேன். விட்டுட்டு எல்லாம் போக முடியாது. அவ இல்லாம இருக்க முடியாதுன்னு உங்களுக்கு என்னலாம் தோணுதோ அதையெல்லாம் சொல்லணும். சரியா?” என பாவனையோடு சொல்லியவளிடம்,
“ஆனா அப்படி எதுவும் தோணலையே எனக்கு!” என்று சொல்லி அவள் முறைப்பிற்கு ஆளானான்.
“ஏன்? உனக்கும் என்கூட வரணும்னு தானே இருக்கு. அப்போ நீ சொல்ல வேண்டியது தானே நான் இல்லாம உன்னால இருக்க முடியாதுன்னு” என நியாயமாய் அவன் கேட்க, பதில் சொல்ல முடியாதவள் பச்சை பிள்ளையாய் பார்த்து வைத்தாள்.
“அப்போ என்னை விட்டுட்டு போயிடுவீங்கல்ல?” என்றவள் எண்ணம் முழுதும் இரண்டு நாட்களாய் கர்ப்பம் உறுதியானதில் இருந்து அதில் தான் இருந்தது.
“ப்ச்! தேவா!” என தலை கோதியவன்,
“எனக்கு நிஜமா நீ இல்லாம அங்க இருக்க முடியலை தான். ஆனா இப்போ எனக்கே தோணுது நீ எப்படி அங்க தனியா இருப்பன்னு!” என்று கார்த்தியே சொல்லவும் இன்னும் பயந்து விழி விரித்தவள்,
“பார்த்திங்களா பார்த்திங்களா? இதுக்கு தான் உங்ககிட்ட கூட சொல்ல வேண்டாம் நினைச்சேன்!” என்றவளை,
“என்கிட்டயே சொல்ல வேண்டாம்னா அப்போ யார்கிட்ட தான் டி சொல்லுவ?” என வலிக்காமல் ஒரு கொட்டு வைத்தவனை தாண்டி செல்ல இருந்த கண்ணகி,
“என்ன டா அடிக்குற?” என நின்றுவிட்டார்.
“ம்மா!” என்றவன் பேசும் முன் எதையும் சொல்லிவிடுவானோ என பயந்து,
“சும்மா தான் தட்டினாங்க த்தை!” என பரிந்து வந்தாள் தேவதர்ஷினி.
“அது சரி!” என புரிந்தது போல அவரும் முறைப்பும் சிரிப்புமாய் நகர்ந்துவிட்டார்.
“ப்ளீஸ் த்தான். நானும் வர்றேன். எதாவது சொல்லி கூட்டிட்டு போங்க!” என்றவள் கெஞ்சலில் அத்தனை சிரிப்பும் வந்தது கார்த்திகைசெல்வனுக்கு.
தங்கள் வாழ்க்கை பயணத்தின் ஆரம்பம் எப்படியும் இருக்கட்டுமே! இந்த நேரம் இந்த நொடி என நினைக்கையில் வாழ்க்கை பயணத்தின் மேல் ஒரு சுவாரஸ்யமும் தோன்றியது.
இத்தனை தன்னோடு வர ஆசையாய் இருப்பவளை விட்டு செல்ல அவனுக்கு மட்டும் முடிந்திடுமா? ஆனாலும் இந்த நிலையிலா என்று தான் மனம் நினைத்து நின்றது.
“சரி வா பேசி பார்ப்போம்!” என்றவன் நிச்சயம் முடிந்து அனைவரும் ஆற அமர அமர்ந்திருக்கும் நேரம் பொதுவாய் சென்று நிற்க,
“சொல்லு!” என்றான் மனைவியிடம்.
தயங்கியே தான் லீலாவோடு கண்ணகி என அமர்ந்திருந்தவர்கள் பக்கம் சென்று மெதுவாய் விஷயத்தை சொல்ல, தலைகால் புரியாத மகிழ்ச்சி தான் அவர்களுக்கு.
“எவ்வளவு சாதாரணமா சொல்ற நீ? அண்ணி! இவளை பாருங்களேன்!” என்ற லீலாவிற்கு கண்ணீர் நிற்கவே இல்லை.
“இவ ஒருத்தி எல்லாத்துக்கும் அழுதுகிட்டு!” என லீலாவை சொல்லிய கண்ணகி மருமகளை கன்னம் வழித்து கொஞ்ச, விஷயம் அனைவரிடமும் சென்று சேர்ந்து அத்தனை வாழ்த்துக்கள் குவிந்தது கார்த்தி தேவாவிற்கு.
அடுத்ததாய் கார்த்தி தான் நாளை தேவதர்ஷினியை அழைத்து செல்ல இருப்பதாய் சொல்ல, நினைத்ததை போல அத்தனை எதிர்ப்புகள்.
முற்றிலும் எதிர்பாராமல் அவர்களுக்கு துணையாய் நின்றது என்னவோ கார்த்தி தேவாவின் கல்யாணத்தில் அப்பொழுது உறுதியாய் நின்ற அதே கண்ணகி தான்.
“என்ன அண்ணி! நீங்களே இப்படி சொல்றிங்க?” என சுந்தரியும் கேட்க,
“வேற என்ன பண்ண சொல்ற? நாலு மாசம் முன்னாடி வரை இவங்க எப்படி சேர்ந்து வாழப் போறாங்களோன்னு பயந்து உசுரை கையில பிடிச்சது மறந்து போச்சோ? இப்போ பாரு ரெண்டு பேர் முகத்தையும்! எங்க விட மாட்டாங்களோனு பயந்து போய் நிக்குதுங்க சின்ன பசங்க மாதிரி!” என்று சிரித்த கண்ணகியை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் தேவதர்ஷினி.
நெற்றியை நீவிக் கொண்ட கார்த்திகை செல்வனுக்கும் அன்னையின் கணிப்பில் அத்தனை புன்னகை பூவாய்.
“இங்க பாரு லீலா! பசங்க சந்தோசமா இருந்தா போதாதா? இப்ப என்ன! போய்ட்டு அவளுக்கு முடியலைன்னா ஆளுக்கு ஒரு மாசம்னு நீயும் நானுமா போய் இருந்து பார்த்துக்குவோம்” என்ற கண்ணகி,
“ஆனா ஒண்ணு. பிரசவம் நம்ம ஊர்ல தான்!” என சொல்ல, கண்ணீரும் சிரிப்புமாய் தலையசைத்தாள் தேவதர்ஷினி.
“அதான் சரி! அஷ்வினி கல்யாணத்துக்கு கூட முடிஞ்சா வந்துட்டு போகட்டும். முடியலைன்னா என்ன? கல்யாணம் முடிஞ்ச கையோட மாப்பிள்ளையும் பொண்ணுமா போய் அஷ்வினியும் அவ வீட்டுக்காரரும் பெங்களூருக்கு போய் அவங்களை பார்த்துட்டு வரட்டும்!” என்ற சுந்தரி,
“அப்புறம் அண்ணி! பேச்சுவாக்குல நீங்களும் லீலாவும் மட்டும் மாசம் மாசம் மாறி போய் தேவாவை பாத்துக்குறதா சொல்றிங்க. அப்போ நான் யாராம் தேவாவுக்கு. நானும் ஒரு மாசம் போய் இருந்துட்டு தான் வருவேன். கயலை வேனா அப்போ நீங்க பார்த்துக்கோங்க!” என சொல்ல, அனைவருக்குமே புன்னகை அவர் சொல்லிய விதத்தில்.
“ஆக மொத்தம் ஒன்பது மாசத்துக்கு நான் மாசத்துக்கு ஒரு வீடுன்னு தான் சாப்பிடனும் இல்ல!” என கயல்விழி சொல்ல, இன்னுமே புன்னகை அதிகமானது சொந்தங்களுக்கு.
அடுத்தநாள் காலை எட்டு மணி! கார்த்திகைசெல்வனோடு தேவதர்ஷினியும் கிளம்பி தயாராய் வெளிவர, மொத்த குடும்பமும் அவர்களுக்கு வழியனுப்பி வைக்க காத்து நின்றது.
“கார்த்தி! பார்த்து பத்திரமா கூட்டிட்டு போனும்!” என கண்ணகி மீண்டுமாய் சொல்ல,
“அதான் நேத்து டாக்டரை பார்த்துட்டு வந்துட்டாங்க இல்ல. டாக்டர் கூட போகலாம் சொல்லிட்டாங்களே! பார்த்துப்பாங்க கண்ணகி!” என்றார் பரமேஸ்வரன்.
உறவுகள் சேர்ந்து வழிஅனுப்பி வைக்க, கையசைத்து அவர்களிடம் இருந்து விடைபெற்று கிளம்பினர் கார்த்தியும் தேவாவும்.
“என்ன மேடம்! இப்ப ஹாப்பியா?” வழியில் கவனம் வைத்து மனைவியிடம் கார்த்தி கேட்க,
“ஹ்ம் ஆமா! ஆனா அவங்களோடவும் இருந்தா நல்லாருக்குமேன்னு இருக்கு!” என்றவளை, அடிப்பாவி என முறைத்தவன்,
“உன்னை!” என அவள் காதைப் பிடித்து இழுக்க, “த்தான்!” என தோள் சாய்ந்து பின் விலகினாள் சிரிப்புடன்.
“தேவாம்மால்ல நீ!” என சொல்லிப் பார்த்தவன் முகத்தில் ஆயிரம் வண்ண ஜாலப் பூக்கள் என்றால் கேட்டவள் முகத்தில் அத்தனை ஆசைகள் தன் குழந்தையின் நினைவில்.
இனி ஒவ்வொரு நாளும் வசந்த காலமே கார்த்தி தேவா வாழ்வில்…!
சுபம்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
+1
1