Loading

அத்தியாயம் 17

 

வெள்ளிக்கிழமையும் வந்து சேர, நிரஞ்சனா தன் தாய் தந்தையின் புகைப்படத்தின் முன் நின்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

 

“அம்மா.. அப்பா.. இன்னைக்கு இன்டெர்வியூ அட்டென்ட் பண்ண போறேன். எனக்கு இந்த வேலை கெடச்சிரனும். அதுக்கு உங்க ஆசீர்வாதம் எனக்கு கண்டிப்பா வேணும். ” என்று வேண்டிக் கொண்டவளின் கைகள் தானாக தன் கழுத்தில் செல்ல, அவளது கைகளோ வெறும் கழுத்தை தான் தடவிக் கொடுத்தது.

 

அவளது முகம் லேசாக சோகத்தை அப்பிக் கொள்ள, “எப்படியும் அந்த செயினை கண்டு பிடிச்சி ஆகணும். அன்னைக்குக் கூட, ஏதோ காஸ்மெடிக்ஸ் கம்பெனி கார்டு வச்சி இருந்தாரே.. கம்பெனி நேம் என்னனு  நியாபகம் வர மாட்டேங்குது. ஒரு வேலை அங்க ஒர்க் பண்ணுவாரோ.. முதல்ல என்ன நேம்னு சர்ச் பண்ணி கண்டு பிடிக்கணும். ” என்று சிந்தித்தவளின்  முகம் சட்டென்று பிரகாசிக்க, “ஒரு வேலை இன்னைக்கு போற கம்பெனி கூட காஸ்மெடிக்ஸ் கம்பெனி தானே.. இதுவா இருக்குமோ..” என்று சந்தோசம் அடைந்தவள், அந்த மகிழ்ச்சியுடன் கிளம்பியும் சென்றாள்

 

அதே நேரத்தில், பரிதியோ நிரஞ்சனாவின் சங்கிலியை கையில் வைத்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

“உன்ன எப்போ பக்கம் போறேன்னு தெரியல.. என் முகம் கூட உனக்கு அடையாளம் தெரியுமான்னும் தெரியல.. என்னோட உடல் நிலை கிட்ட தட்ட சரி ஆகிருச்சு. நல்லாவே நடக்க ஆரம்பிக்கிறேன். நீ இல்லனா இப்போ நான் இல்லை. சீக்கிரம் உன்னை என்கிட்ட கொண்டு வரேன். ” என்று அதைப் பார்த்து பேசியவன், அந்த டாலரை பிரித்துப் பார்த்து அதில் இருந்த அவளது அம்மா மற்றும் அப்பாவின் போட்டோவைப் பார்த்தான்.

 

அவளது அப்பாவின் புகைப்படத்தை உன்னிப்பாகக் கவனித்தவன், “இவங்கள நான் எங்கயோ பார்த்து இருக்கேன். ஆனால் எங்கனு தான் நியாபகம் வரல.” என்று யோசித்தவன், அதை மூடி வைத்து அந்த சங்கிலியை கைக்குள் இறுக்கமாக அணைத்துக் கொண்டு, தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டான்.

 

பின் என்ன தோன்றியதோ, அதை அப்படியே தன் கழுத்தில் அணிந்து கொண்டான். 

 

இங்கு நிரஞ்சனாவோ, அவள் வீட்டில் இருந்து நகரத்தின் முக்கிய இடத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு வந்து சேர, ஒரு மணி நேரம் கடந்து இருந்தது.

 

அங்கு வந்து சேர்ந்தவள், ஒவ்வொருவரையும் மேலோட்டமாக பார்த்தாள். 

 

அன்று பரிதியை மருத்துவமனையில் சேர்த்த அன்று, அவனது பாதி முகம் குருதியால் மூடி இருந்தது.

 

முகத்தின் மீதி பகுதி கூட , அவள் சரிவர கவனிக்க வில்லை.

 

நேர்காணலுக்கு பல பேர் வந்து இருக்க, அவர்களுடன் சேர்ந்து இவளும் அமர்ந்து கொண்டாள்.

 

ஒவ்வொருவராக அழைக்க, இவள் பெயர் வந்ததும் இவளை உள்ளே அழைத்தனர்.

 

அறையின் உள்ளே மேனேஜர் தான் அமர்ந்து இருந்தார்.

 

அவளிடம் கேள்விகள் கேட்கப்பட, அவள் அனைத்திற்கும் சரியாகவே பதில் கூறி இருந்தாள்.

 

“வெளிய வெயிட் பண்ணுங்க. பைனலா ரிசல்ட் சொல்றோம்.” என்று அனுப்பி வைத்து விட்டு, மீதம் உள்ள ஆட்களை நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்தார் மேனேஜர்.

 

அனைவரையும் முடித்த பிறகு, அனைவரது கல்விதகுதிகள் அடங்கிய  ரெசுயும் மற்றும் ஒவ்வொருவரின் செயல் திறன் ஆகியவற்றை அடங்கிய கோப்பையை சஞ்சயிடம் தான் நேராக கொண்டு சென்றான்.

 

அவனும் ஒரு முறை பார்வையிட்டு, அதில் மூன்று பேரை தெரிவு செய்தான்.

 

அதில் நிரஞ்சனாவும் ஒன்று.

 

அவளுடன் சேர்த்து மற்ற இருவரையும் வரச் சொல்லி,  மேனேஜர், “உங்க மூணு பேரையும் நாங்க செலக்ட் பண்ணி இருக்கோம். அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் கொடுக்க கொஞ்ச நேரத்துல MD சார் கூப்புடுவாரு. ரெடியா இருங்க.” என்று கூறி விட்டு அவர்களை அனுப்பி வைத்தான்.

 

நிரஞ்சனாவுக்கோ உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்தாள். 

 

அவர்கள் மூவருக்கும் நியமன உத்தரவு தயார் ஆகிக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து, “நீங்க மூணு பேரும் MD சார் ரூம்க்கு போங்க..” என்று சொல்லி விட்டு கிளம்பியவள், ஒரு நிமிடம் நின்று நிரஞ்சனாவைப் பார்த்து, ” ஹேய்.. நிரு.. எப்படி டி இருக்க.. ” என்று அந்தப் பெண் வெகு நாள் கழித்து, பார்த்த சந்தோஷத்தில் பேச,

 

நிரஞ்சனாவுக்கோ சட்டென்று அடையாளம் தெரியவில்லை.

 

“சரி நீ போய்ட்டு வா.. அப்புறம் பேசிக்கலாம்.” என்று சஞ்சயின் அறைக்கு அனுப்பி வைத்தாள்.

 

சஞ்சயின் அறைக்குச் சென்றவள், அவனைப் பார்த்ததும் யோசனையுடனே பார்த்தாள்.

 

அவனும், “கங்கிராஜிலேஷன் கைஸ்.. நீங்க மண்டேல இருந்து இங்க ஜாயின் பண்ணிக்கோங்க. ” என்றவன், மற்ற இருவரிடமும் கொடுத்து விட்டு இறுதியாக, நிரஞ்சனாவிடம் நீட்ட, அவளோ வாங்காமல் ஏதோ யோசனையிலேயே இருந்தாள்.

 

“ஹலோ.. மிஸ்..” என்று அழைக்க,

 

அப்பொழுது தான் நிதானம் வந்தவள் போல, அவன் நீட்டிக் கொண்டிருந்த அப்பாய்ன்மெண்ட் ஆர்டரைப் பார்த்து, “சாரி சார்..” என்று வாங்கினாள்.

 

அவளை புருவம் சுருக்கிப் பார்த்தவன், “ஆல் தி பெஸ்ட் ” என்று மூவருக்கும் சேர்த்து கூறி அனுப்பி வைaத்தான்.

 

வெளியே வந்த பிறகும் அவளது குழப்பம் தீர்ந்த பாடில்லை..

 

“இவரைப் பார்த்தா அவரு போலவே இருக்கே..” என்று குழம்பியவள், பின் அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஓரம் தள்ளி விட்டு, தன்னுடன் பேசிய அந்த பெண்ணைத் தேடினாள்.

 

சிறிது நேர தேடலுக்கு பிறகு, அவளை கண்டு கொண்டவள், அவளின் அருகே செல்ல, அந்தப் பெண்ணும் இவளைப் பார்த்து இவளின் அருகே புன்னகையுடனே வந்தாள்.

 

“என்ன டி.. அப்பொய்ன்மெண்ட் ஆர்டர் வாங்கியாச்சா..” என்று சிரித்தபடிக் கேட்க,

 

அவளும் பதிலுக்கு “ம்ம்ம்.” என்றவள், “எனக்கு உங்கள யாருனு தெரியலையே..” என்று யோசித்தபடி சொல்ல,

 

“அடிப்பாவி..” என்று அவளை திட்டியவள், பின் “ஸ்கூல் கிரௌண்ட்.. புளிய மரம்.. குளத்துக் கட்டை.. முத்து தியேட்டர்..” என்று வரிசையாக சில வார்த்தைகளை கூற, அவளின் முகமோ யோசனையை தத்து எடுத்தது.

 

சில நொடிகளில் எதையோ பிடித்து விட்ட மகிழ்ச்சியில், “ஹே.. காயு..நீதானா.. ஆளே அடையாளம் தெரியல… எவ்ளோ மாறிப் போய்ட்ட..” என்று நிரஞ்சனா கேட்க,

 

“ஹா ஹா…” என்று சிரித்தவள், “வா.. கேன்டீன் போய் பேசலாம்..” என்று மூன்றாவது மாடியில் இருக்கும் அலுவலகத்தின் உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள்.

 

இதை அறையின் உள்ளே இருந்து கண்ணாடி தடுப்பின் வழியே பார்த்த சஞ்சய், “காய்த்ரிக்கு தெரிஞ்ச பொண்ணு போல..” என்று நினைத்துக் கொண்டான். 

 

அங்கு காலியாக இருந்த ஒரு மேசையின் மீது அமர்ந்தவர்கள் பேசத் தொடங்கினர்.

 

“எத்தனை வருஷம் ஆச்சு பார்த்து. எப்படி டி இருக்க..” என்று நிரஞ்சனா) கேட்க,

 

“இதோ பாக்குறள.. நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு அடையாளம் தெரியாம ஆகிட்டேன். அதான் என்னை உனக்கு அடையாளம் தெரியல. ஆனால் நான் உன்ன ஈஸியா கண்டு பிடிச்சிட்டேன்..” என்றாள் காயத்ரி.

 

அதற்குப் புன்னகையை பதிலாக தந்தவள், இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்.

 

“அப்புறம்டி.. சொல்லு.. அம்மா அப்பா என்ன பண்றாங்க. உனக்கு ஒரு தம்பி இருந்தான்ல.. அவன் என்ன பண்றான்..” என்று காயத்ரி,  நிரஞ்சனாவிடம் கேட்க,

 

அவளோ ஒரு பெருமூச்சுடன், “அவங்க ரெண்டு பேரும் இல்லடி இப்போ. நானும் தம்பியும் மட்டும் தான். தம்பிக்கு கூட இப்போதான் ரீசென்ட்டா கண் ஆபரேஷன் பண்ணோம். இப்போ பாதில விட்ட படிப்பை கன்டினியூ பண்றான். ” என்றாள்.

 

“அச்சோ.. சாரி டி.. அப்போ இத்தனை நாள் எப்படி மேனேஜ் பண்ணிட்டு இருந்த..” என்று கேட்க,

 

“அம்மா இருக்குற வரைக்கும் டீச்சரா ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் தம்பினால வீட்டுல தனியா இருக்க முடியாதுனு வீட்டோட இருந்து சின்ன சின்ன பார்ட் டைம் ஜாப் , அப்புறம் டியூஷன் எடுத்துட்டு அதை வச்சி எப்படியோ மேனேஜ் பண்ணியாச்சு. இனி அப்படி இருக்க முடியாது. தம்பிக்கு காலேஜ் பீஸ் கட்டணும். அப்புறம் குடும்ப செலவு. அதுனால ஜாப்க்கு அப்ளை பண்ணிட்டேன். இப்போ கெடச்சிருச்சு. போகும் போது ஸ்வீட் வாங்கிட்டு போகணும் விக்ரமுக்கு..” என்றாள் மகிழ்ச்சியுடன்.

 

இருவரும் மேலும் சில விஷயங்களை பேசிக் கொண்டவர்கள், “ஆமா..நீ என்னை விட ரெண்டு வருஷம் சீனியர் ஆச்சே.. ரெண்டு வருஷம் ஃபெயில் ஆகி என்கூட சேர்ந்துட்ட.. இன்னுமா உனக்கு கல்யாணம் பண்ணாம வச்சி இருக்காங்க..” என்று நிரஞ்சனா தன் சந்தேகத்தை முன் வைக்க,

 

“பார்த்துட்டு தான் இருக்குறாங்க.. எப்படியும் கூடிய சீக்கிரம் அமைஞ்சிரும்..” என்றாள் சிரித்தபடி காயத்ரி.

 

“பாரேன்.. சூப்பரு. அப்போ கூடிய சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடப் போறேன்னு சொல்லு..” என்று நிரஞ்சனா கேட்டதற்கு,

 

“ம்ம். வாய்ப்பு அமையலாம்.. சரிடி நான் கிளம்புறேன். ரொம்ப நேரம் ஆச்சு வந்து.. இனி இங்கதானே வரப் போற.. ஆற அமர எல்லாக் கதையும் பேசிக்கலாம்..” என்று நிரஞ்சனாவை ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தாள் காயத்ரி.

 

வீட்டிற்கு வந்து சேர்ந்தவள், கையோடு தம்பிக்கு இனிப்பையும் வாங்கி வந்து இருந்தாள்.

 

நேராக, தாய் தந்தையின் படத்திற்கு முன்னாள் சென்றவள், வாங்கி வந்த இனிப்பை வைத்து விட்டு, “எனக்கு இன்னைக்கு இன்டெர்வியூ போனதுல நான் செலக்ட் ஆகிட்டேன். எனக்கு வேலை கெடச்சிருச்சு. திங்கள் கிழமைல இருந்து வரச் சொல்லி இருக்காங்க.. இதே போல எப்பவும் நீங்க என்கூட இருந்து எங்க ரெண்டு பேருக்கும் துணையாவும் பக்க பலமாவும் இருக்கனும்..” என்று தெய்வமாகிய தன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டாள்.

 

அதற்கிடையில் இனியனும் வைஷுவும் எப்பொழுதும் போல அலுவலகம் கிளம்பி இருந்தனர்.

 

அலுவலகத்தில் இருக்கும் போது வைஷுக்கு அவளது தோழிகள் அழைத்து வரச் சொல்லி அழைக்க, அவளும் அதற்கு ஏற்ற போல தான் ரெடி ஆகி வந்து இருந்தாள்.

 

முன்கூட்டியே தோழிகள் கூறி இருந்ததால், அதனை இனியனிடமும் கூறி இருந்தாள்.

 

இதோ அவளை அலைபேசியில் அழைக்க, அவளும் “ம்ம். வரேன் ” என்றவள், இனியனிடம் “இனியா.. கால் பண்ணிட்டாங்க வரச் சொல்லி. நான் கிளம்புறேன்..” என்று கூறியவளிடம்,

 

“ஹே.. எப்படி போவ.. ” என்று கேட்டான்.

 

“கார் புக் பண்ணி போய்கிறேன்..” என்றாள்.

 

“சரி.. சீக்கிரம் வந்துரு..” என்று அனுப்பி வைத்தான். 

 

அதே நேரத்தில், “நான் ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன். அந்த போட்டோல இருக்குற பொண்ணைத் தான் தூக்கணும்..” என்று வைஷ்ணவி புகைப்படத்தை ஒருவனிடம் அனுப்பி வைத்து விட்டு பேசிக் கொண்டிருந்தாள் ஷில்பா..

 

“ம்ம். பொண்ணு நல்லா சோக்காத் தான் இருக்குது.. தூக்குனா மட்டும் போதுமா.. இல்லை வேற எதுவும்…” என்று இளித்தப்படி அவன் கேட்க,

 

அவளோ சத்தம் போட்டு சிரித்துக்கொண்டே ” நீ என்ன நினைக்கிறியோ.. அதான் பண்ணனும்.. ” என்றாள் வஞ்சத்துடன்.

 

“எப்போ மேடம் தூக்கணும்.. நம்ம பசங்க ரெடியா இருப்பாங்க..” என்று அவன் ஆர்வத்துடன் கேட்க,

 

“இன்னைக்கே..” என்றாள் ஷில்பா.

 

“இன்னைக்கே வா..” என்றான் அவன் யோசனையாக..

 

“ஆமா.. அவ இப்போ தனியாத் தான் அவ ஃப்ரண்ட்ஸ் கூட இருக்கா.  நான் லொகேஷன் அனுப்புறேன். அவ கிளம்பும் போது தூக்கிரு..” என்று அவனிடம் கூறி விட்டு, அந்த இடத்தையும் பகிரினாள் அவனுக்கு.

 

அனுப்பி வைத்து விட்டு, ” என்னையா டி அடிச்ச.. எப்படி நீ கலங்கப் போறேன்னு பாரு.. ” என்று அவளின் போட்டோவைப் பார்த்து வன்மத்துடன் பேசினாள்.

 

 

நித்தமும் வருவாள். 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்