Loading

அத்தியாயம் – 4

 

“அமுது, இன்னைக்கு நம்ம கேஸ் ஸ்டடி ப்ரெசென்டேஷன் இருக்கே… நீ ரெடி பண்ணிட்டியா?”

 

லைப்ரரியின் மூலையில், புத்தகங்களுக்கு நடுவே அமர்ந்திருந்த அமுதினி, சுருதியின் குரலைக் கேட்டு திடுக்கிட்டாள். 

 

அவள் கடந்த இரண்டு மணி நேரமாக Complex PTSD பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை படித்துக் கொண்டே இருந்தாள். ஆனால், அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது வேறு.

 

ஆரவ் கிருஷ்ணா.

 

அவனது நெருப்பு ஜூவாலை போன்ற கண்கள், கடுமையான வார்த்தைகள், உணர்ச்சியற்ற தொனி… எல்லாம் கோபத்தை வரவழைத்தாலும், அந்த காரிடாரில் அவன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட தருணத்தை எண்ணி வேதனை அடைந்தது.

 

“அமுது!” சுருதி மீண்டும் சத்தமாக கூப்பிட்டாள்.

 

“என்னடி…” என்றாள் சலிப்பாக!

 

“நீ எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டியான்னு கேட்டேன்?”

 

“ஆமா சுருதி, பண்ணிட்டேன்… ஏதோ பரவாயில்ல…” என்று அமுதினி தன் குறிப்புகளை சரிபார்த்தாள்.

 

“நீ கொஞ்சம் வேற மாதிரி இருக்க இந்த ஒரு வாரமா… எல்லாம் ஓகேயா?” என்று வருத்தத்துடன் கேட்டாள் சுருதி.

 

அமுதினி புன்னகைக்க முயன்றாள். “எல்லாம் ஓகேதான்… ஜஸ்ட் கொஞ்சம் டென்ஷன், அவ்ளோதான்…”

 

உண்மையில், அவளால் ஆரவைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. 

 

அவர் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்துக் கொள்கிறார்? அவருக்குள் என்ன வலி இருக்கிறது? அவர் ஏன் யாரையும் நெருங்க விடுவதில்லை? இப்படியான பல கேள்விகள் அவளது மண்டையை குடைந்து கொண்டிருந்தது.

 

***

 

மதியம் இரண்டு மணி.

 

அமுதினி வகுப்பறையில் அமர்ந்திருந்தாள். அவளது விளக்கக்காட்சி கோப்புகள் சிறப்பாய் தயாராகி உள்ளன. இன்றைக்கு ஒவ்வொரு மாணவனும் தங்கள் வழக்கு ஆய்வு பற்றி பேச வேண்டும். 

 

அமுதினி எடுத்திருந்த தலைப்பு: “Complex PTSD and Defense Mechanisms” (சிக்கலான PTSD மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்) பற்றி தேர்ந்தெடுத்திருந்தாள்.

 

வகுப்பறையின் கதவுகள் திறந்தன.

 

ஆரவ் கிருஷ்ணா உள்ளே நுழைந்தான். இன்றைக்கு அவன் டார்க் கிரே ஷர்ட் அணிந்திருக்க, முகத்தில் வழக்கம்போல் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. அவன் உள்ளே வந்ததும், மொத்த வகுப்பறையும் நிசப்தமாக மாறியது.

 

அவன் மேஜையில் தன் லேப்டாப்பை வைத்து, மாணவர்களை ஸ்கேன் செய்தான். அவனது பார்வை அமுதினியின் மீது ஒரு நொடி தங்கியது. ஆனால், உடனே அவன் பார்வையை திருப்பிக்கொண்டான். அதில் எந்த ஒப்புதலும் இல்லை.

 

“குட் ஆஃப்டர்நூன்…” என்று மகிழ்வின்றி சொன்னான் ஆரவ்.

 

அதற்கு, “குட் ஆஃப்டர்நூன் சார்,” என்று மாணவர்களும் மெதுவாக பதிலளித்தனர்.

 

“இன்னைக்கு நீங்க உங்களோட கேஸ் ஸ்டடி ப்ரெசென்டேஷன்ஸ் பண்ணப் போறீங்க… நான் ரொம்ப கிளியரா இப்பவே சொல்லிடறேன்…

 

நீங்க கான்ஃபிடென்ட்-ஆ, தெளிவா பேசணும்… உங்க ஆய்வு ஆழமா இருக்கணும்… நீங்க விக்கிபீடியாவிலிருந்து காப்பி பண்ணினதா தெரிஞ்சா, ஆன் தி ஸ்பாட் ஃபெயில்… புரிஞ்சுதா?”

 

அவன் வார்த்தைகளில் இருந்த கடுமை, மாணவர்களை பதட்டப்படுத்தியது.

 

“ஹூ இஸ் ஃபர்ஸ்ட்?”

 

ஒரு மாணவன் தயக்கத்துடன் எழுந்தான். “சார், நான்…”

 

“முன்னாடி வாங்க…”

 

அந்த மாணவன் முன்னால் வந்து, தன் பிரசென்ட்டேஷனை ஆரம்பித்தான். 

 

அந்த மாணவனின் பகுதி : “Schizophrenia – Symptoms and Treatment.” (ஸ்கிசோஃப்ரினியா – அறிகுறிகள் மற்றும் சிகிச்சை)

 

அவன் மிகவும் பதட்டத்துடன் இருந்தான். அவன் பேசும்போது, அவன் குரல் லேசாக நடுங்கியது. ஆரவ் அவனை உற்றுப் பார்க்க, அதில் எவ்வித மாறுதலுமின்றி கல் சிலை போலவே இருந்தான்.

 

அந்த மாணவனது விளக்கக்காட்சியை முடித்து, நம்பிக்கையுடன் ஆரவைப் பார்த்தான்.

 

ஆரவ் எழுந்து மெதுவாக அந்த மாணவனை நெருங்கினான்.

 

“நீ எத்தனை நாள் இந்த ப்ரெசென்டேஷன் ப்ரிபேர் பண்ணின?” அவன் கேட்கவும்,

 

“சார்… ஒரு வாரம்…”

 

“ஒரு வாரமா?” ஆரவின் குரலில் நையாண்டி தெரிந்தது. 

 

“ஆனா நீ என்ன பண்ணின? DSM-5 க்ரைட்டிரியால இருக்கிற சிம்டம்ஸை நேரா காப்பி பண்ணி, இங்க படிச்சு காட்டியிருக்க… இதுல உன்னோட அனலைசஸ் எங்க? உன்னோட கிரிட்டிக்கல் தின்ங்கிங் எங்க?”

 

அந்த மாணவனின் முகம் வெளிறிப் போய், “சார், நான்—” என்று தடுமாற,

 

“நீ என்ன?” ஆரவ் குறுக்கிட்டு,

 

“நீ ஒரு கிளி மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்காத… நீயொரு தெரபிஸ்ட் ஆகப் போறியா? அப்போ உனக்கு வெறும் டெக்ஸ்ட்புக் அறிவோட இருந்தா மட்டும் போதாது… உனக்கு அதோட ஆழம் வரை தெரிஞ்சிருக்கணும்… ரீடூ யுவர் ப்ரெசென்டேஷன் இன் நெக்ஸ்ட் கிளாஸ்…” என்று இரக்கமின்றி சொல்லிவிட்டான்.

 

அந்த மாணவன் தலை கவிழ்ந்து நின்றான். அவன் கண்களில் அவமானம் தெரிந்தது. ஆனால், ஆரவ் எந்த பரிவும் காட்டவில்லை. அவன் அடுத்த மாணவரை அழைத்தான்.

 

இப்படியே ஒவ்வொரு விளக்கக்காட்சியும் நடந்தது. ஆரவ் யாருக்கும் இளக்கம் காட்டவில்லை. 

 

அவன் மாணவர்களின் ஒவ்வொரு தவறையும் கண்டுப்பிடித்து, கடுமையாக விமர்சித்தார். சில மாணவர்கள் அழும் நிலையில் இருந்தனர். ஆனால், அவன் கொஞ்சமும் உருகவில்லை.

 

அடுத்ததாக, சுருதியின் பெயர் அழைக்கப்பட்டது. அவள் சிறு அச்சத்துடன் முன்னால் வந்தாள். 

 

அவளது தலைப்பு: “Depression in Adolescents.” (இளம் பருவத்தினரிடையே மனச்சோர்வு)

 

அவள் தன் விளக்கக்காட்சியை நன்கு தயார் செய்திருந்தாள். அதேபோல் நன்றாகவும் பேசினாள். 

 

ஆரவ் அவளது விளக்கக்காட்சி முடியும் வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

 

ஆரவ் எழுந்து, “யோர் கன்டென்ட் இஸ் குட். பட், டெலிவரி ரொம்ப வீக்கா இருக்கு… உங்க ரீடிங் எல்லாம் நோட்ஸ் பார்த்தே இருக்கு… ஒரு தெரபிஸ்ட் பேப்பர் பார்த்து பேசாம க்ளையன்ட்டை பார்த்து பேசவது ரொம்ப அவசியம்… சோ, இம்ப்ரூவ் யுவர் ஐ கான்டாக்ட் ஸ்கில்ஸ்…” என்று மட்டும் சொல்ல,

 

சுருதியும் மனதிற்குள் பெருமூச்சு விட்டு வெளியே சரியென்று தலையசைத்தாள். 

 

குறைந்தபட்சம் அவர் அவளை முழுவதுமாக நிராகரிக்கவில்லை. ஆனால், அவரது தொனி… அதில் எந்த பாராட்டும் இல்லை.

 

இறுதியாக, அமுதினியின் பெயர் அழைக்கப்பட்டது.

 

அவள் ஆழமாக மூச்சு விட்டு, எழுந்து முன்னால் வந்தாள். அவளது கைகள் லேசாக நடுங்கின. ஆரவ் அவளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது முகத்தில் எந்த மாறுபாடுமில்லை.

 

அமுதினி தன் பிரசென்டேஷனை ஆரம்பித்தாள்.

 

“Complex PTSD அப்படின்னா, தொடர்ச்சியான அதிர்ச்சியால் உருவாகும் ஒரு கடுமையான உளவியல் நிலை… இதில் பாதிக்கப்பட்டவங்க, வெறும் நினைவுகள் மட்டுமல்ல, அவங்களோட அடையாளம், உறவுகள் மற்றும் உணர்ச்சி கட்டுப்பாடு எல்லாத்திலும் பாதிப்பை சந்திக்கிறாங்க…” என்று ஆரம்பித்து,

 

மேலும், 

 

“இந்த மாதிரியான அதிர்ச்சியை கடந்து வந்தவங்க பொதுவாக பாதுகாப்பு வழிமுறைகளை உபயோகிக்கிறாங்க… குறிப்பாக சொல்லணும்னா கணிப்பு (ப்ரோஜக்சன்) மற்றும் இடப்பெயர்ச்சி (டிஸ்ப்ளேஸ்மெண்ட்)…”

 

ஆரவின் முகத்தில் ஒரு லேசான மாற்றம் தெரிந்தது. அவன் அதனை கவனமாக கேட்க ஆரம்பித்தான்.

 

அமுதினியும் அவனுடைய பார்வையை பொருட்படுத்தாமல், “கணிப்பு, நாம நம்மோட ஒத்துக்க முடியாத உணர்வுகளை மற்றவங்க மேல போட்டுடுறது… எடுத்துகாட்டா, ஒருத்தர் உள்ளுக்குள்ள தனக்குத்தானே கோபமா இருக்காங்க… பட், அவங்க அந்த கோபத்தை ஒப்புக்கொள்ள முடியாது… சோ, அவங்க மற்றவங்க தங்கள் மேல கோபமா இருக்காங்கன்னு நினைப்பாங்க…”

 

அவள் ஆரவை நேராகப் பார்த்தாள். “இடப்பெயர்ச்சியில், ஒருத்தர் தங்களோட விரக்தி இல்லன்னா கோபத்தை உண்மையான காரணத்துக்காக வெளிப்படுத்த முடியாம, இன்னொரு பாதுகாப்பான விஷயத்துக்கு திருப்பி விடுறாங்க… உதாரணமாக, ஒருத்தர் தன் முதலாளியிடம் கோபமா இருக்காங்க, ஆனா, அதை முதலாளி கிட்ட சொல்ல முடியாது… அதனால வீட்டுக்கு போயி அவங்ககிட்ட கோபத்தை கொட்டிடுவாங்க…”

 

“இந்த பாதுகாப்பு வழிமுறைகள் நார்மல்தான்… எல்லாருமே யூஸ் பண்றோம்… ஆனா, அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த நபருக்கு இது ஒரு தற்காத்து வாழக்கூடிய புதுவழி… அவங்க மீண்டும் காயப்படாமல் இருக்க, அவங்க எமோஷனல் வால்ஸ் பில்ட் பண்றாங்க… அதனால, அவங்க யாரையும் நெருங்க விடுறதில்ல.. அவங்க எல்லார்கிட்டயும் கொடூரமா நடந்துக்கலாம்… ஆனா, உண்மையில், அவங்க தன்னைத்தானே ப்ரோட்டெக்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க…”

 

அமுதினி பேசும்போது, அவளது குரல் நிலையாக இருந்தது. ஆனால் அவள் வார்த்தைகள், ஒருவரை குறிவைப்பதாக இருந்தன. அவள் ஆரவை நேராகப் பார்த்துப் பேசினாள்.

 

அதில் ஆரவின் முகம் கடினமாகி, கைகள் முஷ்டிகள் இறுகின. அவள் என்ன சொல்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவள் அவனை பற்றியே மறைமுகமாக பேசிக் கொண்டிருந்தாள்.

 

“எனவே, ஒருத்தர் தற்காத்து நடந்துக்கிட்டா, அது அவங்க சாய்ஸ் இல்ல‌.. அது அவங்களோட கடந்துவந்த காயங்களின் அறிகுறி… அவங்களுக்கு பரிவும் பாசமும் தான் தேவையே தவிர தீர்ப்பு இல்ல…” எனக்கூறி விளக்கக்காட்சியை முடித்து வைத்தாள் அமுதினி.

 

அறை முழுவதும் நிசப்த அமைதி.

 

ஆரவ் மெதுவாக எழுந்து அமுதினியை நெருங்கினான். அவனது முகம் எப்போதும் போல உணர்ச்சிகளற்று இருந்தன. ஆனால், அவனது கண்களில் ஒரு புயலே ஓடிக்கொண்டிருந்தது.

 

“யுவர் ப்ரெசென்டேஷன் இஸ் தியரட்டிகலி கரெக்ட்… பட், யூ மேட் ஏ மிஸ்டேக்” என்றவனின் குரலில் ஆத்திரம்.

 

அவன் சரி தவறு என்று சொன்னதில் குழம்பிய அமுதினி நிமிர்ந்து பார்த்து, “என்ன மிஸ்டேக், சார்?”

 

“நீ அஸ்யூம் பண்ணின தற்காப்பு வழிமுறைகளை யூஸ் பண்றவங்க எல்லாரும் பாதிக்கப்பட்டவர்கள்… ஆனா, அது தப்பு… சிலர் கொடூரமானவங்க… சிலர் சாதாரணமானவங்க… அதுக்கு ட்ராமா ஒரு சாக்குபோக்கு இல்ல.”

 

அமுதினியோ விடாமல், “சார், ப்ளீஸ் கரெக்ட் மீ, இஃப் ஐ ஆம் ராங்… பட், எல்லா ஆய்வுகளும் சொல்லுது, ட்ராமா ஒரு பர்சன்ஸ் பிஹேவியர்-ஐ அடிப்படையில் மாற்றும்… அவங்க கொடூரமா இருக்காங்களா? அதுக்குப் பின்னாடி கண்டிப்பா ரீசன் இருக்கும்.”

 

ஆரவின் முகம் இன்னும் கடினமானது. 

 

“அப்போ நீ சொல்ற மாதிரி, யாரையும் ஜட்ஜ் பண்ணக் கூடாதா? எவனாவது உன்னை ஹர்ட் பண்ணா, அவன் ட்ராமாடைஸ்ட் அப்படிங்கிற காரணத்தால, நீ அவனை உடனே மன்னிக்கணுமா? 

 

“இல்ல சார்… நான் அது சொல்ல வரல… ஆனா, நாம அவங்கள புரிஞ்சிக்கலாம்… எம்பதி காட்டலாம்… அவ்ளோதான்…”

 

“எம்பதி,” ஆரவ் அந்த வார்த்தையை ஏளனமாக சொன்னான். 

 

“எவ்ரிவன் டாக்ஸ் அபவுட் எம்பதி… பட், எம்பதி டஸ்ன்ட் ஃபிக்ஸ் எனிதிங்… எம்பதி டஸ்ன்ட் சேஞ்ச் வாட் ஹேப்பன்ட்!” (எல்லோரும் பச்சாதாபம் பற்றிப் பேசறாங்க… ஆனால், பச்சாதாபத்தால் எதையும் சரிசெய்ய முடியாது… நடந்ததை இல்லன்னு மாற்ற முடியாது!)

 

“பட், அது பாதிக்கப்பட்டவங்களோட தனிமையை குறைக்குது சார்.”

 

ஆரவ் ஒரு நிமிடம் அமைதியாக நின்றார். அவனது கண்கள் அமுதினியின் மீது பதிந்தன. அவன் எதோ சொல்ல நினைப்பது போல் இருந்தது. ஆனால், தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

 

“யுவர் ப்ரெசென்டேஷன் இஸ் பாஸ், சிட் டவுன்…” என்று வலுக்கட்டாயமாக சொன்னான் ஆரவ் கிருஷ்ணா.

 

அமுதினியோ நகராமல், “சார், ஒன்னு கேக்கலாமா?”

 

“என்ன?”

 

“நீங்க தற்காப்பு வழிமுறைகளை நம்புறீங்களா?”

 

ஆரவின் முகம் கல்லானது. 

 

“நான் என்ன நம்பறேங்கிறது உனக்கு தேவையில்லாத விஷயம்… சிட் டவுன்…” என்று முகத்தில் அடித்ததை போல சொல்லி விட்டான்.

 

அதில் அமுதினியின் மனம் வெகுவாய் காயப்பட மற்ற மாணவர்களை பார்க்காமல் தன் இடத்துக்குத் திரும்பினாள். 

 

ஆரவ்விற்கு தெரியும், அவள் என்ன சொல்ல முயல்கிறாள் என்று! அவனுடைய அகந்தை எதற்கும் செவிசாய்க்கவில்லை.

 

அவனுடைய நேரம் முடிந்தது.

 

ஆரவ் கிளம்பும் முன், மீண்டும் அமுதினியைப் பார்த்தான். அவனது பார்வையில் கோபம், குழப்பம், மற்றும் ஏதோ ஒரு அடக்கப்பட்ட உணர்வும் கலந்திருந்தது.

 

அவன் எதுவும் சொல்லாமல் வெளியேறிவிட்டான்.

 

***

 

கிளாஸ் முடிந்ததும், சுருதி அமுதினியை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள். 

 

“அமுது! நீ என்ன பண்றன்னு தெரியுதா? ஆரவ் சார் கிட்ட மறைமுகமாக வாக்குவாதம் பண்ணிட்டு இருக்க! அவர் உன்னை பார்க்கும் விதத்தை பார்த்தியா? உன்ன கொன்னு போட்டுடுவார் போல இருந்துச்சு!”

 

அமுதினியோ, “சுருதி, அவர் ஏதோ ஹர்ட்டாகி உள்ளுக்குள்ள போராடிட்டு இருக்காரு… நான் அதை அவருக்கு சொல்ல விரும்பினேன்!”‌ என்று கவலையுடன் பேசினாள்.

 

“ஏன்டி? அது உன் வேலையா? அவரு எப்படியாவது போறாரு உனக்கென்ன வந்துச்சு?” என்று சினத்துடன் கேட்க,

 

“எனக்குத் தெரியாது சுருதி… ஆனா, யாராவது அவருக்கு சொல்லணும். அவர் தன்னைத்தானே பனீஷ் பண்ணிக்கிட்டு இருக்காரு… அதனாலதான் எல்லாரையும் தள்ளி வைக்கறாரு… அதுக்கு பின்னாடி ஏதோவொரு காரணம் இருக்கு…”

 

சுருதி கவலையாகப் பார்த்தாள். “அமுது, உனக்கு திரும்ப திரும்ப சொல்றேன்… அந்த ஆளு பேச்சுக்கு போகாத… அவர் ஒரு ஆன்டி ஹீரோ மாதிரி பண்ணிட்டு இருக்காரு… நீ இப்படியே இருந்ததின்னா, அவர் உன்னை நிறைய ஹர்ட் பண்ணுவார்..” என்று தோழிக்கு அக்கறையுடன் சொன்னாள் சுருதி.

 

அமுதினியோ அதனை ஏற்கமுடியாமல், “புரியுது… விடுடி… நான் பார்க்கிறேன் சுருதி…” என்று மட்டும் சொல்லிச் சென்றாள்.

 

***

 

அன்று மாலை, ஆரவ் தனது கேபினில் தனியாக அமர்ந்திருந்தான். மேஜையின் மீது அமுதினியின் அசைன்மென்ட் பேப்பர்கள் இருந்தது. அவற்றை எடுத்து மீண்டும் மீண்டும் படித்தான்

 

“அதிர்ச்சியில இருந்து வெளிவந்தவங்க உணர்ச்சிப்பூர்வமான சுவர்களைக் கட்டிக்கறாங்க… அவங்க மற்றவங்களை தள்ளி வைக்கிறாங்க… அவங்க மத்தவங்களுக்கு கொடூரமானவங்களா தோணலாம்… ஆனால், உண்மையில அவங்க தன்னைத்தானே பாதுகாக்க நினைக்கிறாங்க…”

 

அமுதினியின் இந்த வார்த்தைகள் மனதை துளைத்தெடுத்தன. 

 

அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத கோபத்தில் கைகள் முஷ்டிகள் இறுகிற. 

 

“அவளுக்கு என்ன தெரியும்? அவளுக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது!அவள் என் வாழ்க்கையில இருந்ததில்ல! அவள் என் வலிகளை பார்த்ததில்ல!”

 

ஆனால் அதே சமயம், அவனது மனதில் ஒரு குரல் கேட்டது. 

 

“அன்னைக்கு காரிடாரில் அவள் தான் உன் பெயினை பார்த்தாளே… உன்னை அழும்போது பார்த்தாளே… அதனால்தான், அவள் இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணியிருக்கா…”

 

ஆரவ் எழுந்து ஜன்னலுக்கு அருகே சென்று வெளியே பார்த்தான் 

 

“நான் யாரையும் என் கிட்ட வர விடக்கூடாது… நான் மறுபடியும் காயப்பட விரும்பல… யாரையும் நம்பி ஏமாற விரும்பல…”

 

ஆனால், அமுதினியின் கண்கள்… அதில் இருந்த நேர்மை, கவலை, உண்மை எல்லாம் அவனை தொந்தரவு செய்துக் கொண்டேயிருந்தது.

 

“அவள் என்ன நினைக்கிறாள்? ஏன் என்னை புரிந்துகொள்ள முயல்கிறாள்? என்னைப் பற்றி என்ன ஆராய்ச்சி பண்றாள்?”

 

இப்படியான கேள்விகளால் ஆரவ் கோபமாகவே இருந்தான். ஆனால், அதே சமயம், ஏதோ ஒரு சிறிய பகுதி… அமுதினியின் வார்த்தைகளால் மனதினை தொட்டுவிட்டது உண்மை!

 

அவன் அந்த உணர்வை அடக்கி, “இல்ல… நான் அவளை என் கிட்ட வர விடக்கூடாது… எல்லாரையும் போல அவளையும் தள்ளி வச்சிடுவேன்…” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

 

அவன் திரும்பி தன் மேஜையில் அமர்ந்தவன், அந்தப் பழைய புகைப்படத்தை எடுத்து நீண்ட நேரம் பார்த்தான்.

 

பின்னர், அவன் மனமோ சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க, அதில் கொஞ்சம் தெளிவை பெற்றிருந்தான்.

 

ஆனால், அவனது இதயத்தில், அமுதினியின் வார்த்தைகள் எதிரொலியாக கேட்டுக்கொண்டே இருந்தன என்பதும் நிதர்சனம்!

 

“அவங்களுக்கு

பரிவும் பாசமும் தான் தேவையே தவிர தீர்ப்பு இல்ல…”

 

ஆரவ் அதை மறக்க முயல, அவனால் முடியவில்லை.

 

அன்று முதல், அவனது மனதில், அமுதினி என்ற பெயர், ஒரு எரிச்சலாக, ஒரு கேள்விக்குறியாக, ஒரு அமைதியற்ற நினைவாக நிலைத்துவிட்டது.

 

******

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்